பயத்தால் நடுங்கும் பிள்ளைகளுக்குத் தாமும் நடுங்கியபடி ஆறுதல் கூறும் தாய்மார்களை வன்னியில் கண்டேன் தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர் கண்ணீருடன் பி.பி.ஸிக்கு அளித்துள்ள பேட்டி இது

ஆக்கம்: சிபெரு (தமிழில்)
சிறுவர்கள் பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அதேபோல் பயத்தினால் நடுங்கியபடியே தாய்மார்கள் தம் குழந்தைகளை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதை என் இருகண்களினாலும் கண்டேன்.

இவ்வாறு மனமுருகி தெரிவித்திருக்கிறார் வன்னியிலிருந்து வெளியேறியுள்ள தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர். அங்குள்ள நிலைமை குறித்து பி.பி.ஸி. தென் ஆஸியசேவை அவரது பேட்டியை வெளியிட்டுள்ளது.

தொண்டுநிறுவன பணியாளர் கூறியிருப்பது வருமாறு;

புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்காக இலங்கை இராணுவத்தினர் தமது வலிந்ததாக்குதல்களை தீவிரப்படுத்திவரும் நிலையில் அப்பகுதியில் மாபெரும் மனித அவலப் பிரச்சினையொன்று உருவாகிவருகின்றது. ஒரு வாரத்துக்குமுன் ஐ.நா.மற்றும் தொண்டர் முகவர் அமைப்புகள் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறியுள்ளன. அங்கு நடக்கும் சண்டை காராணமாக 200, 000 இற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

நான் கடைசியாக அங்கு சென்றிருந்தபோது தென்மேற்குத் திசையில் அரசுப் படைகள் முன்னேறி வருவதாக ஓர் உணர்வு அலை வேகமாக வீசிக்கொண்டிருந்தது. இருதரப்பு அடிபாடுகள் நகரை அண்மித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. எனவே மக்கள் பெரும் எடுப்பில் வெளியேறத் தொடங்கியிருந்தார்கள். துப்பாக்கிச் சண்டைகளையோ, அருகில் சண்டை நடப்பதையோ நான் உணரவில்லை. ஆனால் இரவு பகலாக பல்குழல், பீரங்கிகளால் எறியப்படும் குண்டுகள் வீச்சாக வந்து விழும். தடும் திடும் என்ற சத்தங்கள் தூரத்தில் கேட்டவண்ணமிருந்தன. நகருக்குள் தொடர்ச்சியாக பெரும் எடுப்பில் ஆட்டிலறிக் குண்டுகள் வந்து விழுவது அருகருகே கேட்கத் தொடங்கியது. இரவு பகலாக 24 மணிநேரமும் ஷெல் குண்டுகள் வந்து விழுவதின் காரணமாக எனது அலுவலகம், படுக்கையறை, குசினி, பதுங்கு குழியெல்லாம் கடகட என ஆடிக்கொண்டிருந்தன. இம்மாதிரியான போர் முனைப்பானது வரப்போகிற அவலத்தை முன்கூட்டியே எடுத்தியப்புவதாக இருந்தது.

தொண்டு நிறுவன ஊழியன் என்ற முறையில் போர்க் கெடுபிடிகளால் எப்போதுமே வந்து நிரம்பிக் கொண்டிருக்கும் மக்களுக்கு எம்மால் கூடிய உதவிகளை வழங்குவதில் நான் ஈடுபட்டிருந்தேன்.

ஆட்டிலறிக் குண்டுகள் வந்து விழுவதைக் கண்டும் சத்தங்களைக் கேட்டும் பயத்தினால் இந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கியிருந்தார்கள். ஆரம்பத்தில் தென்.மேற்குப் பகுதியில்தான் இந்த நிலைமை இருந்தது. ஒரு சில வாகனங்களே கிடைக்கக் கூடியதாய் இருந்தமையால் அதிக தூரங்களுக்கு அவர்களால் போகமுடியவில்லை. பத்து பதினைந்து கிலோமீற்றர் தூரம் சென்று மரங்களுக்கடியில் தங்கத் தொடங்கினார்கள். இராணுவம் முன்னேறியதால் ஷெல் வீச்சும் நெருங்கிவந்தது.

அதனால் மக்கள் ஓரிரு நாள்களில் மீண்டும் நகர்ந்து சென்றார்கள். வன்னியின் தென் மேற்கிலுள்ள இந்தப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களுக்கு தொண்டுப் பணியாளர்களாகிய எங்களால் பெரும் ஆபத்துக்காரணமாகப் போக முடியவில்லை. ஆனால் இராணுவம் மேலும் முன்னேறியபோது அவர்களுக்கு முன்னதாக நகர்ந்து சென்று கொண்டிருந்த மக்கள் கிளிநொச்சியை அண்டிய பகுதிக்கு வந்து விட்டார்கள். இந்நிலையில் அவர்களை நாங்கள் சந்திக்கத் தொடங்கினோம். அவர்கள் பல தடவைகள் இடம்பெயர நேர்ந்த துன்பக் கதைகளையும் கேட்டறிந்தோம். அவர்கள் பசியுற்றும், களைத்துப் போயும், அதிர்ச்சியுற்றும் காணப்பட்டார்கள். சிறுவர்கள் பலமாதங்களாக பள்ளிக்கூடங்களைப் பார்த்ததில்லை. ஆண்களுக்கு வேலையில்லை. மீன்பிடிப் படகுகள், வலைகள், யந்திரங்கள் போன்றவற்றை அவர்கள் இழந்திருந்தார்கள். தமது பிள்ளைகளை ஒழுங்காக பராமரிக்க முடியாமலும் உணவளிக்க முடியாமலும், படிப்பிக்க முடியாமலும் தாய்மார்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

தொண்டு நிறுவனம் மேற்கொண்ட உதவிகள்

தொண்டுப் பணியாளர்கள் என்ற முறையில் அவர்களுக்கு இருப்பிட வசதிகளையும் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளையும் செய்து கொடுக்க நாம் முயன்று கொண்டிருந்தோம். மக்கள் ஒன்றாக சேரக்கூடிய பாதுகாப்பான இடங்கள் என்று நாம் கருதிய இடங்களில் நாங்கள் அவசரகால முகாங்களை அமைத்தோம். ஆனால் நாள்கள் செல்ல தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்த குண்டுத் தாக்கங்கள் அருகாமைக்கு வந்தன. ஷெல் குண்டுகள் நகரிலும் அப்பகுதிகளை சுற்றியும் விழத்தொடங்கின.

எமது சொந்த பாதுபாப்பே சிக்கலாய் அமைந்துவிட்டது. அதனால் மேற்கொண்டு உதவிகளை முன்னெடுப்பது கஷ்டமாகப் போய்விட்டது. பாதுகாப்பு நிலைமை அவசரகால கட்டத்துக்கு வந்துவிட்டது. கிளிநொச்சி மீதான ஆட்டிலறி மற்றும் விமானத்தாக்குதல்கள் இடைவிடாத நிலைக்கு வந்துவிட்டது. மேற்கொண்டும் எமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரமுடியாது என்று கூறி எம்மை வெளியேறும்படியாக அரசாங்கம் வற்புறுத்தத் தொடங்கியது. அந்தச் சமயத்தில் நாங்கள் சர்வதேச தொண்டர் அமைப்புகளின் 10 அலுவலர்கள் இருந்தோம். இந்த நிலையில் எமது அலுவலகங்களை மனவேதனையுடன் மூடிக் கொண்டு அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாங்கள் வரவேண்டியதாயிற்று.

அந்த நாள்களில் நாங்கள் மிகுந்த மன உளைச்சல்களுக்குள்ளாக நேர்ந்தது. மனிதநேய உதவிகள் மிக அவசரமாகத் தேவைப்பட்ட வேளையில் அந்த மக்களை கைவிட்டு வரவேண்டியேற்பட்டமை குறித்து எமக்கு குற்ற உணர்வு மேலிட்டது. தொழில் முறையில் எமது பணிகளைக் கைவிடுவதானது மிகக் கடினமாகவிருந்தது. எமது அலுவலர்கள் மிக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

புலிகளின் பாஸ் முறை

அரசாங்கப் பகுதிக்குள் போக விரும்பியவர்களுக்கு புலிகள் ஒரு பாஸ் முறையைக் கையாண்டார்கள். பெரும்பாலான எமது அலுவலர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்துக்காக பாஸ் மறுக்கப்பட்டது.

தனிப்பட்டவர்களுக்குத்தான் பாஸ்கள் வழங்கப்பட்டன. குடும்பங்களுக்கு அல்ல, எனவே பாஸ் கிடைக்காதவர்கள் தமது மனைவி மக்களை சதா குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் பகுதியில் விட்டுவிட்டு வெளியேறி செல்வதா இல்லையா என்று முடிவெடுக்க வேண்டிய மனவேதனைக்குரிய நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

எங்களோடு வந்து உழைத்துபணம் தேடுவதா இல்லை அங்கேயே இருந்து புலிப்படைகளில் சேர்ந்து போராடுவதற்கான நிர்ப்பந்தத்துக்குள்ளாவதா என்ற நிலையில் அலுவலர்கள் இருந்தார்கள். அவர்களை நிர்வகிப்பது, அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, ஆறுதல் கூறுவதெல்லாம் மிகக் கடினமான உணர்ச்சி மயமான பணிகளாக இருந்தன எனக்கு. குண்டுச் சத்தங்கள் அதிகரித்தன முடிவுகளை எடுக்க வேண்டிய அவசரமும் அதிகரித்தது. இந்த நிலையில் அலுவர்கள் தமது அன்புக்குரியவர்களை அங்கேயே விட்டுவிட்டு எங்களுடன் வந்தார்கள்.

மயிரிழையில் உயிர் தப்பினேன்

ஒருதினம் விமானக் குண்டுவீச்சின் போது நான் மயிரிழையில் உயிர் தப்பினேன். எனக்கருகில் குண்டுவீச்சு இடம்பெற்றது. நான் மிகத் துரிதமாகச் செயல்பட்டு பதுங்கு குழியில் புகுந்து காயமெதுவுமின்றித் தப்பினேன். அந்த ஜெற் விமானம் பதிவாகப் பறந்தபோது ஏற்பட்ட சத்தம் மற்றும் எனக்கருகில் குண்டுவிழுந்து வெடித்த சத்தம் போன்றவற்றை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஆனால் என் மனதில் ஒருபோதும் அழியாத சோகத்துக்குரிய ஓவியமாக அமைந்து விட்டது. அன்று நான் வெளியில் வந்தபோது கண்ட மக்களின் பீதி தழுவிய பதற்றத்துக்குள்ளாகித் தவித்துக் கொண்டிருந்த மக்களின் நிலைமையாகும்.

தொண்டு நிறுவனங்கள் என்ற முறையில் எங்களுக்கு கொங்க்றீட் சுவர்கள் கொண்ட பாதுகாப்பான பதுங்கு குழிகள் இருந்தன. பொதுமக்களுக்கோ வெளியில் நிலத்தில் சேறு நிரம்பிய குழிகளாகும். சிறுவர்கள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பதையும் அவர்களைப் போலவே பயத்தில் நடுங்கிக் கொண்டு பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிக்கும் தாய்மார்களையும் நான் கண்டேன்.

செப்டெம்பர் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை அப்பகுதியை விட்டு நாங்கள் வெளியேறுவதாகவிருந்தது. எமது வளாகத்துக்கு வெளியில் பெருமெடுப்பில் தடைப் போராட்டம் நடந்தது.

கோபம் கொண்டிருக்கவில்லை

போகாதீர்கள் போகாதீர்கள் என்று மக்கள் கோஷமிட்டார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் எங்களுக்கு மிக மரியாதையளிப்பவர்களாக கண்ணியமாக நடந்து கொண்டார்கள். அவர்கள் கோபம் கொண்டிருக்கவில்லை விரக்தியுற்றவர்களாகக் காணப்பட்டார்கள். எமது பணிகளை நிறுத்த வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருந்தோம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். தண்ணீர் மற்றும் இருப்பிடம் தொடர்பான தேவைகளைத் தாங்களே சமாளித்துக் கொள்வார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர். நாங்கள் ஸ்தாபன ரீதியில் அங்கிருந்து வெளியேறுவதுதான் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

சர்வதேச அமைப்புகள் எதுவும் பிரசன்னமாய் இல்லாநிலையில் மோதல்களுக்கு கண்கண்ட காட்சிகள் இல்லாத நிலையில் பல்வேறு அடாவடித்தனங்கள் இடம்பெறக்கூடும் எவருமே கண்டு கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் நம்பினார்கள்.

மூன்று நாள்கள் எதிர்போராட்டம் நீடித்தது. அவர்களின் அச்சம் எங்களுக்குப் புரிந்தது. ஆனால் எங்கள் கைகள் கட்டப்பட்டிருந்தன. நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. சில சர்வதேச நிறுவனங்களின் தொண்டர்கள் தமது வளவுகளை விடுத்து பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். ஆட்டிலறி ஷெல்கள் எமது வளவுகளுக்கு அருகிலேயே வந்து விழத் தொடங்கியிருந்தன.

கிளிநொச்சியில் இருந்த இறுதி இரண்டு நாள்களும் பெரும்பாலான எமது நேரத்தை பதுங்கு குழிகளிலேயே கழித்தோம். இந்த நாள்களில் சத்தங்கள் மிகமோசமாக இருந்தது. எல்லாமே ஆடிக்கொண்டிருந்தன. குண்டுகள் விழுந்து வெடித்ததில் வான் பரப்பும் எதிரொலித்தது. மிக அருகாமையில் ஹெலிகொப்டர்கள் பயங்கரச் சத்தத்துடன் ஏவுகணைகளை வீசித் தாக்குவதும் கேட்டது.

கிளிநொச்சி நகர மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள். ஆட்டிலறிக் குண்டுகள் எட்டாத இடங்களை நோக்கி நகர்ந்தார்கள். நாங்களும் அடுத்நாள் கிளம்பியாக வேண்டும் என்று தோன்றியது. இல்லையெனில் அங்கேயே நாங்கள் சிக்கிவிட நேரலாம்.

கண்ணீரைப் பகிர்ந்து கொண்டோம்

அடுத்த நாள் 16ஆம் திகதி பயங்கர ஷெல் மற்றும் விமானத்தாக்குதல்களுக்கு மத்தியில் நாங்கள் எமது வாகனங்களை வளவுக்கு வெளியில் வரிசையாக நிறுத்தி, குண்டு துளைக்காத மார்பு சட்டைகளும் தலைக்கவசங்களும் அணிந்து கொண்டு கிளிநொச்சி நகரிலிருந்து புறப்பட்டு அரச படைகளின் பகுதிக்குச் சென்றோம். குற்ற உணர்வுடன் எமது அலுவலர்களில் பலரை அங்கே விட்டு வந்தோம். அவர்களுடன் கண்ணீரைப் பகிர்ந்து கொண்டோம். பயங்கர உணர்வுகளை பகிர்ந்து கொண்டு குற்றஉணர்வுடன் அங்கிருந்து புறப்பட்டோம்.

வெட்க உணர்வுடன் மக்களைக் கடந்தோம்

வீதிகளின் ஓரங்களில் நின்று மக்கள் என்னைப் பார்ப்பதைக் கண்டு வெட்க உணர்வோடு அவர்களைக் கடந்து வாகனத்தைச் செலுத்தி வந்தேன். நான் எனது குண்டு துளைக்காத மார்பு அங்கியுடன் பாதுகாப்புத் தேடி விரையும் வேளையில் அந்த மக்கள் வீதி ஓரங்களில் கால்சட்டைகளோடும் சேர்ட்டுகள், சாரிகளோடும் நிற்பதைக்காண எனக்கு வெட்கம் மேலிட்டது. நாங்கள் ஏ9 வீதியில் விமானத்தாக்குதல்கள் நடைபெற்றிருந்த பகுதிகளின் வழியாக வாகனங்களைச் செலுத்தி வந்தோம். அங்கே இடம்பெற்றிருந்த அழிவுகளைப் பார்த்தபோது கிளிநொச்சியில் இனி என்ன நடக்கும், அந்த மக்கள் என்ன ஆவார்கள் என்று விளங்கிக் கொண்டோம்.

தொண்டு நிறுவன ஊழியர்களை உள்ளடக்கும் சட்ட விதிகளை நான் மதிக்கின்றேன் நாங்கள் வெளியேறவேண்டியிருந்தமையையும் விளங்க்கிக் கொள்கின்றேன். ஆனால் அந்த மக்களைக் கைவிட்டு வரவேண்டியிருந்தமைக்காக பெரிதும் உணர்ச்சிமயப்படுகின்றேன். அந்த மக்களுக்கு பிரியாவிடை கூறியபோதும் எனது அலுவலர்களுக்கு நல்வாழ்த்துக் கூறியபோதும் பெரும் மனவேதனையோடு, குற்ற உணர்வோடுமே அதைச் செய்தேன். நன்றி:உதயன்

Please Click here to login / register to post your comments.