சினிமாவை வாழவைக்கும் ஈழத் தமிழரின் பணம்! - பாரதிராஜா

தமிழ் சினிமாவை வாழவைக்க ஈழத் தமிழன் கஷ்டப்பட்டு பணம் தருகிறான். அவனது தயர் துடைக்க குரல் கொடுக்க ராமேஸ்வரம் வரைக்கும் நடிகர்-நடிகைகளால் வர முடியாதா? என உணர்ச்சிவசப்பட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

ராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் நடைபெற இருக்கும் போராட்டத்தையொட்டி, திரையுலக தமிழ் இன உணர்வு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், டைரக்டர் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகிய மூவரும் தலைவர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு சார்பில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தரையிலும், கடலிலும், மலையிலும், பள்ளத்தாக்கிலும், பாலைவனத்திலும், பொட்டல் காட்டிலும், அரங்கம் அமைத்து காட்சிகளை படமாக்கும் நமக்கு, ராமேஸ்வரம் கடற்கரையில் மேடை அமைத்து ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் முடியாதது அல்ல.

ஆனால் கடமைக்காக என்று நினைக்காமல், உணர்வுக்காக என்று நினைத்தால், கடினமே இல்லை. நாம் குரல் கொடுப்பது நன்றியுணர்வு மட்டுமல்ல... நட்புணர்வு மட்டுமல்ல... ரத்த உணர்வு என்பதை நாம் அறிவோம்.

ஈழத் தமிழன் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கொடுக்கும் காசுதான் இன்றைக்கு வெளிநாட்டு உரிமை வடிவில் தமிழ்த் திரையுலகை வாழவைக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்த ஆதரவு குரல் கொடுக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலமும், நேரிலும், வந்து ஆதரவுகளை தெரிவித்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Please Click here to login / register to post your comments.