காலாவதியாகிப்போன ஒற்றையாட்சித் தத்துவம்

ஆக்கம்: நேதாஜி
இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஒற்றையாட்சித் தத்துவம் நிராகரிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் டி.எஸ். சேனநாயக்கா, பாரன் ஜெயத்திலகா போன்ற சிங்கள முதலாளித்துவவாதிகள் ஒற்றையாட்சி அமைப்பை வலியுறுத்தினார்கள். ஆனால், அக்காலகட்டத்தில் பலமான எதிர்க்கட்சியாகவிருந்த இடது சாரிகளான லங்கா சமசமாசக்கட்சி, கொம்யூனிசக்கட்சி முதலானவர்கள் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்படுவதோடு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

1944ல் கொழும்பு மாநகரசபை மாநாடு

1944ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற நான்கு ஆண்டுகளுக்கு முன்பதாக கொழும்பு மாநகரசபை முன்றலில் இலங்கை கொம்யூனிஸ் கட்சியின் முதலாவது தேசிய மகாநாடு இடம்பெற்றது. இம்மகாநாட்டில் இலங்கைத்தீவு சுதந்திரம் பெறும் போது வடக்குக்கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு மாநில சுயாட்சி பெறும் உரிமை உண்டு என்றும் அதனை இலங்கை காம்யூனிஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இம்மகாநாட்டில் கட்சியின் தலைவர் கலாநிதி எஸ்.ஏ.விக்கிரமசிங்கா, பீட்டர் கனமன், வைத்தியலிங்கம் மாஸ்ரர், காம்யூனிஸ் கார்த்திகேசு மாஸ்ரர் எனப்பலர் அக்கால கொம்யூனிஸ் கட்சிப் பிரமுகர்கள் பங்குபற்றி இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அவர்கள் யாவரும் வடக்குக்கிழக்குத் தமிழ் மக்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள்.

சேர் அன்றூவ் கோல்டி கொட் அறிக்கையும் திரைமறைவுச் சதியும்

இதன் பின்னர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கவும் அதற்குப் பொருத்தமான பாராளுமன்ற அரசில் அமைப்பு ஒன்றை உருவாக்கவும் அக்கால கவனராக இருந்த சேர் அன்றூவ் கோல்டி கொட் அவர்கள் பொருத்தப்பாடான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இக்காலகட்டத்தில் டி.எஸ்.சேனநாயக்கா போன்ற தலைவர்கள் சேர் அன்றூவ் கோல்டிகொட் அவர்களை தமது கைக்குள் போட்டுக்கொண்டு தமது முதலாளித்துவ நலன்களை முதன்மைப்படுத்தி ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒன்றை வேண்டிநின்றனர். சேர் அன்றூவ் கோட்டி கொட் அவர்களின் மிகப் பலவீனமான பக்கங்களை தனது நரித்தனமான தந்திரோபாயங்கள் மூலமாக எஸ்.டி.சேனநாயக்கா பயன்படுத்திக் கொண்டார். இதற்கு எதிராக அக்கால தமிழ்ப் பிரமுகர்களது கையெழுத்தைப் பெற்று தந்தை செல்வா பிரிட்டிஸ் அரசுக்குத் தனது எதிர்ப்பை மகஜர் மூலம் அனுப்பி வைத்தார். தந்தை செல்வா தனது வாழ்நாளில் பங்குபற்றிய முதல் போராட்ட நடவடிக்கை இதுவேயாகும்.

1948 சோல்பரி அரசியல் யாப்பு

1944ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட சோல்பரிப் பிரபு தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு ஒரு வெஸ் மினிஸ்டர் முறையிலான யாப்பை வரைந்தனர். இதற்குப் பலத்த எதிர்ப்பு இருந்தது. இதற்கு எதிராக சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் ஜி.ஜி.பொன்னம்பலம் சோல்பரிப்பிரபு முன் வாதாடினார். இவரது கருத்துக்களே ஐம்பதுக்கு ஐம்பது என இன்று கூறப்படுகின்றது.

ஆனாலும் அவரது கருத்துக்களை சோல்பரிப் பிரபு தலைமையிலான குழுவினர் ஏற்கவில்லை. இனால் அவர் லண்டனுக்குச் சென்று பிரித்தானிய அரசுடன் பேசமுயன்றார். திரு ஜி.ஜி.பொன்னம்பலம் லண்டனில் இருக்கும் போதே இங்குள்ள தமிழின விரோதிகளான இராஜகுலேந்திரன், தியாகராசா, ஜெகநாதன் போன்றோர்களை ஆசைகாட்டி கைக்குள் போட்டுக்கொண்ட டி.எஸ்.சேனநாயக்கா மீண்டும் தந்திரோபாயமாக இலங்கையின் அனைத்து மக்கள் சார்பிலும் சோல்பரித் திட்டத்தை ஏற்க வைத்தார். தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டனர்.

1954 வல்வெட்டித்துறை மகாநாடு

இலங்கை கொம்யூனிஸ் கட்சியின் அடுத்த தேசிய மகாநாடு யாழ்ப்பாணக் குடாநாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகப்பட்டினமான வல்வெட்டித்துறையில் 1954ம் ஆண்டு இடம்பெற்றது. முன்னைய கொழும்பு மாநகரசபை முன்றலில் 1944ம் ஆண்டு முன்வைத்து மொழியப்பட்ட வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகக் கோட்பாடு அங்கும் ஏற்கப்பட்டது. தமிழர்களுக்கு அவர்களது பிரதேசங்களை விருத்திசெய்து கொள்ள சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்பது இந்த தேசிய மகாநாட்டில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும். தமிழர் தாயக்கோட்பாடு ஏற்கப்பட்டது.

1956ம் ஆண்டு பொதுத்தேர்தல்

1956ம் ஆண்டு பொதுத்தேர்தல் இலங்கையின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று கூறப்படுகின்றது. அந்நிய முதலாளித்துவ கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து தேசிய முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய முன்னணியின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது. தமிழ்ப்பகுதிகளிலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிடமிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்குக் கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற அரசியல் தலைமையை பெற்றுக் கொண்டது. இத்தகையதொரு மாற்றம் ஏற்பட்ட அதேவேளையில் மொழிப்பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்தது. இரண்டு பிரதான பேரினவாதக் கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு 'சிங்களம் மட்டும்' கோரிக்கையை முன்வைத்தன. இரு வேறு தேசிய இனங்களுக்கும் ஒரு 'மொழிக்கொள்கை' வெடிமருந்து கிடங்கில் வைக்கப்பட்ட தீப்பொறியாகப் பற்றிப்படர்ந்தது.

வில்மட் பெரேராவின் முன்மாதிரி

1956 பொதுத் தோர்தலைத் தொடர்ந்து இனவாதத் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அது 1956ம் ஆண்டு அம்பாறை இங்கினியாகலையில் 150 தமிழர்களைக் கொன்று குவித்தது. 1958 மே மாதம் இறுதி வாரம் இலங்கை பூராவும் இனக்கலவரமாக வெடித்தமையால் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இக்காலகட்டத்தில் ஒரு சிங்களப் பெரியார் 1956ம் ஆண்டு பொதுத்தேர்தலில் சிறிலங்கா சுதந்தரக் கட்சி சார்பாக களுத்துறை மாவட்டத்தில் உள்ள மத்துகம தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் இந்த இனவாதத் தீயினுள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது விலகிநின்றார். தமிழ் மொழிக்குரிய இடம் வழங்கப்பட வேண்டும், தமிழ்ச் சகோதரர்களை அரவணைக்க வேண்டும், தமிழர்களது பிரதேசத்தில் அவர்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்று இடித்துரைத்தார். இறுதிவரை உறுதியாகவும் இருந்தார். இதிகாசத்தில் வரும் மகாபாரதக்கதையும் துரியோதனன் சபையில் நூற்றியொரு பேர் இருந்தார்களாம். அவர்கள் எல்லோரும் அநியாயம் செய்வதையே இலக்காக் கொண்டிருக்க ~விகர்ணன்| மட்டும் நியாயத்தைச் சொன்னாராம். அதேபோல பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கப் பாராளுமன்றக் குழுவில் விகர்ணனாக வில்மட் பெரேரா விளங்கினார். நியாயத்தின்பால் நின்றார் தமிழர்தாயகக் கோட்பாட்டை முழுமனதுடன் ஆதரித்தார்.

1956 யூன் 5 சிங்களம் மட்டும் சட்டம்

பண்டாரநாயக்கா தான் பதவிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் ~சிங்களம் மட்டும்| சட்டத்தைக் கொண்டுவருவேன் எனக்கூறி ஆதரவு பெற்றே பிரதமரானார். அவர் பதவிக்கு வந்ததும் 1956 யூன் 5ம் திகதி (05.06.2006) சிங்களம் மட்டும் சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார். இடது சாரிக்கட்சிகளும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் பலத்த எதிர்ப்பைக்காட்டின. ஆனாலும் பண்டாரநாயக்கா சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்றினார்.

இடதுசாரிகளின் கருத்துக்கள்.

1956ம் ஆண்டு பொதுத்தேர்தலின் பின்னர் டாக்டர் என்.எம். பெரேரா தலைமையிலான இடது சாரிக்கட்சிகளே இலங்கைப் பாராளுமன்றத்தில்; பலமான கட்சிகளாக அமைந்தன. 1956ம் ஆண்டு யூன் மாதம் 5ம் திகதி பாராளுமன்றத்தில் 'சிங்களம் மட்டும்' சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்துப் பாராளுமன்றத்தில் அப்போது குரல் கொடுத்தவர் கொல்வின் ஆர்.டி.சில்வா. இந்த சட்டத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிச் சுருக்கமாகப் பின்வருமாறு சொன்னார்.

'ஒரு மொழி இருநாடுகள். இருமொழி ஒருநாடு'

அதாவது ஒரு மொழிக்கொள்கை நடைமுறையானால் இலங்கைத் தீவுக்குள் இன்னொரு நாடு உதய மாகும் என்றார். அங்கு கொல்வின் ஆர்.டி.சில்வா உருவாகப்போகும் தமிழீழத்தேசத்தின் தாயகத்தை ஏற்றே கருத்துரைத்தார். கலாநிதி என்.எம்.பெரேரா பேசும்போது பண்டாரநாயக்காவைப் பார்த்து தமிழ் மக்கள் மறந்து போன தாயகத்தை நீ அவர்களுக்கு நினைவூட்டுகின்றீர் என்றார்.

இதே பாராளுமன்றத்தில் சம்ளி குணவர்த்தனா பேசும் போது தமிழ் மக்கள் எதிர்காலத்தில் தமது தாயகத்தை அடையும் போது செல்வாநாயகத்துக்கோ பொன்னம்பலத்துக்கோ சிலை வைக்கமாட்டார்கள். உமக்குத் தான் சிலை வைப்பார்கள்’ என கருத்துரைத்தார். தமிழர் தாயகக் கோட்பாடு இவராலும் ஏற்கப்பட்டது. இப்படியாக கம்யூனிஸ்கட்சி பிரமுகர்களாக கலாநிதி எஸ்.ஏ. விக்கிரமசிங்கா, பீட்டர் கெனமன் போன்றோரும் பண்டாரநாயக்காவுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி எடுத்துரைத்த போது தமிழர்களின் பூர்வீகத் தாயகக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டே உரையாற்றினார்கள்.

பின்னைய காலத்தில் விவியன் குணவர்த்தனா, சரத்முக்தட்டுவேகம போன்றோரும் தமிழர் தாயக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர்.

1958 கலவரமும் கப்பல்ப்பயணமும்

1956ம் ஆண்டு பொதுத்தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை 1958 பெரும் இனக்கலவரமாக வெடித்தது. இதைத் தொடர்ந்து கடல் மார்க்கமாகவே பண்டாரநாயக்கா தமிழர்களை வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்துக்கு அவர்களது உயிர்ப் பாதுகாப்புக்காகவென அனுப்பி வைத்தார்.

அப்போது அவரும் தமிழர் தாயக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டார் இதற்கு முன்னர் 26.02.1957அன்று தந்தை செல்வாவுடன் பண்டாரநாயக்கா செய்து கொண்ட பண்டா - செல்வா ஒப்பந்தத்திலும் தமிழர் தாயகப்பகுதியில் அரச உதவியுடன் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி தமிழர் தாயகப் பகுதியான வட கிழக்கு குடித்தொகைச் சமநிலையில் ஏற்றத் தாழ்வு ஏற்படுத்தமாட்டேன் என்று உறுதி கூறினார். அவரும் தமிழர் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டே தந்தை செல்வாவுடன் உடன்பாடு கண்டார்.

1965ல் டட்லிசெல்வா உடன்படிக்கை

1965ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி தமிழர் தலைவன் தந்தை செல்வாவும் அப்போதைய சிங்களதேச பிரதமருமான டட்லி சேனாநாயக்காவும் செய்து கொண்ட புகழ்பெற்ற டட்லி - செல்வா உடன்படிக்கையின்படி தனது அரசாங்கத்தின் காணிக் கொள்கை தொடர்பில் பின்வரும் மூன்று விடயங்களை டட்லி சேனாநாயக்கா ஏற்றுக்கொண்டார். அவை பின்வருமாறு:-

    அ.) வடக்குக்கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் போது வடக்குக் கிழக்கு மாகாணத்து தமிழ் மக்களுக்கே முன்னுரிமையளிக்கப்படும்.

    ஆ.) அவ்வாறு முடிக்குரிய காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது வடக்குக் கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கு இரண்டாவதாக முன்னுரிமை வழங்கப்படும்.

    இ.) இதன் பின்னர்தான் ஏனைய மாவட்டத் தலைவர்களுக்கு முடிக்குரிய காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்.

இதன்படி பார்த்தால் வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம் என்பதை டட்லி சேனநாயக்காவும் அவரது அரசும் ஏற்றுக் கொண்டனர் என்றே அர்த்தப்படுவதை யாரும் மறுக்கமுடியாது

1983ம் ஆண்டு இனக்கலவரம்

1957ம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிக்குப் பாதயாத்திரை போன கே.ஆர் தான் ஏன் கண்டிக்குப் போனேன் என்பதை விளக்கி 1966ம் ஆண்டு தை மாதம் 8ம் திகதி பாராளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் 1957ம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் தமிழர் தாயகத்தில் வடக்குக்கிழக்கு தமிழர் தாயகம் என்றும் வடக்குக் கிழக்கு ஒரே நிர்வாகப்பகுதியாக மாற்றப்படும் என்றும் பண்டா - செல்வா உடன்படிக்கையில் கூறப்பட்ட படியால்தான் பாதயாத்திரை போனதாக ஒரு கதையை அவிழ்த்து விட்டார்.

ஆனால் இதை கே.ஆர்காலத்தில் 1977,1979,1981,1983, ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கெதிராக மிகமோசமான இனக்கலவரங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போது தென்னிலங்கையில் இருந்த தமிழர்களை எல்லாம் வடக்குக் கிழக்குக்கு ஜே.ஆர் கடல்மார்க்கமாகவே அனுப்பி வைத்தார். இக்கலவரங்களின் போது லங்காராணி, லங்காமுடித்த போன்ற கப்பல்களோடு இந்தியக்கப்பல்களான சிதம்பரமும் சேவையில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

1987 ஜே.ஆர்.ராஜீவ் ஒப்பந்தம்

1983ம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்து தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டம் வீறுபெற்று புத்தெழுச்சியுடன் கூர்மை பெற்று முகப்புடையதாயிற்று. ஜே.ஆர்ஜேவர்த்தனாவின் அரசு இனப்படு கொலையைத் தீவிரப்படுத்தியது. இந்த நிலையில் தான் இந்தியா தலையிட்டது. இதனால் 1987ம் ஆண்டு ஆடி மாதம் 29ம் திகதி (29.07.1987) அப்போதைய சனாதிபதி ஜே.ஆர் முன்னால் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தத்தில் உள்ள ஒருவாசகம் பின்வருமாறு கூறுகின்றது.

~வடக்கும் கிழக்கும் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்கள்| என்பதேயாகும். இதன்படி ஜே.ஆர் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடம் வடக்கும் கிழக்கும்தான் என்பதை ஏற்றுக் கொண்டே 1987 ஆடி 29ம் திகதி இந்தியப் பிரதமருக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டார்.

எட்மன் சமரக்கொடி முதல் இன்றுவரை

தமிழ் மக்களுடைய உரிமைக்காக ஆரம்ப காலத்தில் குரல்கொடுத்த பாரம்பரிய இடதுசாரிகள் இடையில் இனவாதத்துக்குப் பணிந்து கொண்டாலும் ஆரம்பம் முதல் தான் இறக்கும் வரை தலைநிமிர்த்தி தமிழர்களுக்காகவும் அவர்களது சுயாட்சிக்காகவும் குரல்கொடுத்து இன்னுமொரு சிங்களத் தலைவர் எட்மன் சமரக்கொடி ஆவார்.

நன்றி: மட்டு ஈழநாதம், May 01, 2006

Please Click here to login / register to post your comments.