போராட்டத்தின் தேவையை ஏனைய இனங்கள் மத்தியில் கொண்டு செல்வதில் விடுதலை அமைப்புகள் தோல்வி

* ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் பாலகிருஷ்ணன் எஸ்.இரட்ணம்

தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம் விடுதலை அமைப்புகளால் தமிழ் மக்கள் மத்தியில் முன் கொண்டு செல்லப்பட்ட அளவுக்கு அதன் அவசியத்தை ஏனைய இனங்களிடையே கொண்டு செல்வதில் விடுதலை அமைப்புகள் தோல்வி கண்டுள்ளதாக அரச மற்றும் சமூகக் கொள்கைகள் தொடர்பான ஆய்வாளரும் ஆலோசகருமான எஸ். பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இலங்கையின் தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும் ஒரு வரலாற்றுப் பார்வை 19482007 ஆய்வு நூல் வெளியீட்டு விழா கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே பாலகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து செல்வி நிஷா சர்வேஸ்வரனின் தமிழ் வாழ்த்து இடம்பெற்றது.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் வரவேற்புரையைத் தொடர்ந்து தலைமையுரையாற்றிய எஸ்.பாலகிருஷ்ணன், இனப்பிரச்சினையின் பரிமாணங்களை எடுத்துக் கூறுவதில் இந்த நூலின் முக்கியத்துவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

இந்த நூல் காலம் தாழ்த்தி வெளிவந்துள்ளபோதும் எமது தேச விடுதலைக்கான போராட்டத்தின் வரலாற்றுத் தேவையாக இந்நூல் வெளிவந்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

இனப்பிரச்சினையும் அதன் மூலமான முரண்பாடுகளும் விரிந்து செல்கின்ற அதன் தளத்துக்கு ஏற்ப, புதிய அரசியல் கட்டமைப்பு ஒன்றின் தேவையை இப்புத்தகம் வலியுறுத்தி நிற்கின்றது.

தேச விடுதலைப் போராட்டத்தின் போக்கில் அதன் முழுமையைப் புரிந்துகொண்டு விமர்சனம் செய்வது என்பது அவசியமான தேவையாக எப்போதுமே இருந்து வந்திருக்கிறது.

ஆனால், இனப்பிரச்சினையையும் விடுதலைப் போராட்டத்தின் போக்கையும் விமர்சித்தவர்கள், தமது இருப்புக்கு வசதியாக விமர்சனங்களை முன்வைத்தனர். இந்தப் போக்கு, தமக்கு வசதியான முறையில் போராட்டத்தின் போக்கை நகர்த்த முயற்சிப்பதில் போய் முடிந்திருக்கிறது. இது துரதிர்ஷ்டமான நிலைமை.

இந்தப் போராட்டம் நூறு வருடத்துக்கும் மேலான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. தென்னிலங்கை முற்போக்கு சக்திகள் மத்தியில் போராட்டத்தின் அவசியம் முன்கொண்டு செல்லப்பட்ட போதும், பின்னர் அவை பின்னடைவையே கண்டுள்ளன. ஏனைய இனமக்கள் மத்தியில் எமது போராட்டத்தின் அவசியத்தை மனப்பூர்வமாக ஏற்கச் செய்வதில் நாம் தோல்வியை கண்டுள்ளோம் என்றார்.

அடுத்து, ஆசியுரை வழங்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இந்த நூல் 1947 தொடக்கம் 2007 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியிருப்பதை நினைவுகூர்ந்து, 1947 இற்கு முந்திய காலப் பகுதியில் காலனித்துவ ஆட்சிக் காலத்தின்போது, தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

1833 இல் கோல்பு?க் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு, நாட்டின் அனைத்து பகுதிகளையும் மையப்படுத்திய ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட சமயம், தமிழ் சிங்களம் ஆகிய இரு இனங்களுமே பெரும்பான்மை இனங்களாக கருதப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதையும் அவர் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

அன்றைய சூழலில் இலங்கை தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட போது சிங்கள தலைவர்கள் கணிசமான பேர் இருந்தபோதும், சேர். பொன். அருணாசலம் அதன் தலைவராக அன்றைய சிங்களத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் பின்னர் மேல் மாகாணத்தில், தமிழருக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதில் ஏற்பட்ட தோல்வியால் காங்கிரஸில் இருந்து அவர் வெளியேறிய நிலைமைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழருக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதில் பலசந்தர்ப்பங்களில் ஏற்பட்ட தோல்விகளை நாம் கவனத்திற் கொள்ளத் தவறிவிட்டோம் எனவும் சம்பந்தன் கூறினார்.

இதனையடுத்து, நூல் வெளியீடு இடம்பெற்றது.

நூல் வெளியீட்டைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நூலுக்கான வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.

அதனையடுத்து, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தனது கடந்தகால போராட்ட அனுபவங்கள் தொடர்பாக தனது மறக்கமுடியாத சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் என். பாலகிருஷ்ணனின் நூல் மதிப்பீட்டுரையைத் தொடர்ந்து, கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கந்தையா சர்வேஸ்வரனின் நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது.

Please Click here to login / register to post your comments.