சர்வதேச அக்கறை: வேறுபடும் அழுத்தங்களும் மாறும் நிலைப்பாடுகளும்

ஆக்கம்: பீஷ்மர்
மாவிலாறு முதல் யாழ்ப்பாணத்து நிகழ்ச்சிகள் வரை காணப்படும் சர்வதேச நோக்குகள் பற்றிய ஒரு குறிப்பு

சனிக்கிழமை காலை ஒலிபரப்பான ஆங்கில, பி.பி.சி. செய்தி மடல் ஒன்றில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் இன்னல்களுக்கு வேண்டிய உதவிகளை கொண்டு செல்ல இயலவில்லை என்று ஐ.நா. நிறுவனங்கள் முதல் வேறும் சில சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்கள் அக்கறையை தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. வெள்ளியன்று ஜனாதிபதி அவர்கள் ஐ.நா.செயலாளர் கொபி அனானுடன் நேரடித் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி தனது அரசாங்கம் கஷ்டப்படும் மக்களுக்கு வேண்டியனவற்றை செய்வதாகவும் விடுதலைப் புலிகளே பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர் என்ற செய்தியும் கூறப்பட்டது.

உண்மையில் இது இலங்கையின் சர்வதேச சிரத்தை பற்றிய அண்மைக் கால வரலாற்றில் மிகவும் வேறுபடுகின்ற ஒரு அழுத்த தொனியை காட்டுவதாக அமைகின்றது.

இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் தென்னாசிய பகுதியின் பிரதித் தலைவர் ஸ்ரீபன் மான் என்பவர் இங்கு வந்ததும் ஜனாதிபதியுடன் 2 மணிநேரம் பேசியதும் அதன் பின்னர் வெளியிட்ட அறிக்கையும் இந்த மாறுதல்களின் பின் சில நியாயப்பாடுகள் இருப்பதனை காட்டுகின்றன.

ஸ்ரீபன் மான் செய்தியாளர் மகாநாட்டில் பேசும் போது, விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டு பேச்சுக்கு வரவேண்டுமென்று கூறிய அதேவேளையில், மேலும் இரண்டு முக்கிய விடயங்களைச் சற்று அழுத்தமாகவே கூறினார்.

முதலாவது, வடகிழக்குப் பகுதியில் இராணுவத்தினர் நடந்துகொள்ளும் முறைமையாகும். அம் மக்களின் அடிப்படை மனிதவுரிமைகளை இராணுவத்தினர் மதித்து நடக்க வேண்டும் என்பதை அவர் பெரிதும் வற்புறுத்தினார்.

இரண்டாவதாக யுத்தத்தினால் இப்பிரச்சினையினை தீர்க்க முடியாதென்பதனை இரண்டு பகுதியினரும் என்று கூறிவிட்டு மேலே சென்று தமிழ் மக்கள் இந்நாட்டினுள் இயைந்து வாழ்வதற்கு ஏற்ற முறையில் அரசியல் தீர்வு ஒன்றினை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென்று கூறினார்.

இவை நிச்சயமான மாற்றங்களே. முன்னரெல்லாம் அரசாங்கம் தன் நிலைபாட்டை முதலில் சொல்ல அதற்கு ஆதரவாகவே சர்வதேச சமூகம் கருத்துகளை கூறுமொரு நிலைமையிருந்தது. மேலே கூறிய சம்பவங்கள் அந்த செல்நெறி மாறியுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது.

சற்று நிதானித்து நோக்குகையில் இந்நிலைவரம் மாவிலாறு பிரச்சினை முதலே காணப்படுவதை அவதானிக்கலாம். சேருவிலவுக்கு தண்ணீரைக் கொண்டு செல்கின்ற வாய்க்காலுக்கு அருகேயுள்ள பிரதேசங்களுக்கு தண்ணீர் கொடுபடவில்லை என்பதைப் பற்றிப் பேசாது, சேருவிலவுக்கு தண்ணீர் போகாததை மிகப் பெரிய "மிலேச்சத்தனமான" மனிதவுரிமை மீறல் என அரசாங்கம் சொல்லியும் அதற்கான, அரசாங்கம் எதிர்பார்த்த பதிற்குறிகள் சர்வதேச சமூகத்திடமிருந்து வரவில்லை. மூதூர் பிரச்சினையின் போது கூட அந்நிலைமை மாறவில்லை.

காரணம், மூதூரில் பிரஞ்சு அரச சார்பற்ற நிறுவனத்தின் 17 ஊழியர்களின் மரணமாகும்.

அதன் பின்னர் நடத்தப்பெற்ற செஞ்சோலைத் தாக்குதலும் அத் தாக்குதல்களுக்கு சொல்லப்பட்ட நியாயப்பாடுகளும் சர்வதேச மனக்கிளர்வை பாரதூரமாக ஏற்படுத்தியுள்ளது. தமிழகமும் இந்தியாவும் காட்டிய பதிற்குறியிலும் பார்க்க மேலை நாட்டு நிறுவனங்கள் காட்டியுள்ள அக்கறையே மிகப் பிரதானமாகும். இவையாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் அமைந்துள்ளது மூதூர் கிழக்குப் பகுதியிலிருந்த தமிழ் மக்களின் வாகரை நோக்கிய பெயர்வாகும். விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலேயே தாங்கள் தாக்குதல் பற்றிய பயங்கள் இல்லாமல் இருக்கலாமென்ற எண்ணத்துடன் சென்றது மாத்திரமல்லாமல், அங்கு அவர்கள் பட்ட இன்னல் மிக முக்கியமான ஒரு விடயமாயிற்று. ஏறத்தாழ 57 ஆயிரம் மக்கள் வாகரைக்குச் சென்றனர். அவர்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இராணுவம் தடுக்கின்றது என்ற விடயம் மிகப் பெரியதொன்றாகிற்று. ஒரு புறத்தில் உணவு இல்லாமை மறுபுறத்தில் இருக்க இடமில்லாமை.

இவை யாவும் ஒன்று திரண்ட நிலையிலேதான் சர்வதேச சமூகம் தனது பதிற்குறிகளை வெளிக்காட்டத் தொடங்கிற்று. இது மாத்திரமல்ல, ஏற்கனவே கூறியபடி தென்னிலங்கையின் அரசியல் விமர்சகர்கள் இராணுவத்தின் நடவடிக்கைகள் அரசாங்கத்தை பொறிக்குள் மாட்டுகின்றன என்பதை எச்சரிக்க தொடங்கி விட்டனர்.

செஞ்சோலை கொலைபற்றி என்னதான் கூறினாலும் அடுத்தநாளே இலங்கையின் எல்லாப் பாடசாலைகளையும் இரண்டு வாரங்களுக்கு மூடிய நடவடிக்கை சிங்கள மக்களை பெரிதும் அதிரவைத்துள்ளது. தென்னாசிய விளையாட்டுப் போட்டிகளை சொன்னாலும் அது ஒரு உண்மையான காரணமல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.

தென்னிலங்கையில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் கொள்ளுப்பிட்டி - லிபேட்டி சுற்றுவட்டத்துக்கருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு அமைந்தது.

இந்த வேளையில் அரசாங்கம் ஜே.வி.பி., ஹெல உறுமயவின் யுத்தக் கொள்கை காரணமாகவே முன்தள்ளப்படுகின்றது என்ற அபிப்பிராயம் அரசாங்கத்தை ஆதரிக்கும் சிலரிடையே ஏற்பட்டது மாத்திரமல்லாமல், அவர்கள் அதனை பகிரங்கமாகவும் சொல்ல முற்பட்டுவிட்டார்கள். விக்டோரியா பூங்காவில் போர் எதிர்ப்புக் கூட்டத்தை குழப்ப முயன்ற `எக்சத் பிக்கு பெரமுன' வைச் சார்ந்த பிக்குகளுக்கு ஏற்பட்ட அனுபவம் முன்னர் நடைபெறாதது.

இந்தியாவிலும் செஞ்சோலை சம்பவங்கள் நிலைமையை பெரிதும் மாற்றிவிட்டிருந்தன. இந்த நேரத்தில் தமிழ் - முஸ்லிம் மோதுகையை தூண்டிவிட எடுக்கப்பட்ட முயற்சிகளும் மூதூரில் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த பின்புலத்திலே தான் யாழ்ப்பாணத்தில் தாக்குதல்கள் ஆரம்பமாகின. உண்மையில் யாழ்ப்பாணத்து தாக்குதல்கள் பற்றிய ஒரு தெளிவான கருத்தினை கூறமுடியாதிருப்பினும் அங்கு ஷெல் வீச்சுகளினால் பெரும் தொகையான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் அதற்கு மேலாக ஊரடங்குச் சட்டம் பெருத்த இன்னல்களை ஏற்படுத்தியுள்ளதென்பதும், இவற்றுக்கு மேலாக உணவுத் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி விட்டதென்பதும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்த பின்புலத்திலேயே ஸ்‌ரீபன் மானின் வருகையையும் கொபி அனானுடனான தொலைத் தொடர்பு உரையாடலையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த மாற்றங்களினூடே ஒரு முக்கியமான அரசியல் பாடம் உணர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அபிப்பிராயமென்பது சில நியமங்களுக்கு கட்டுப்பட்டே உருவாகிறது என்பதை இச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

இலங்கை தமிழ் மக்களின் நியாயபூர்வமான குறைபாடுகள் பற்றி இப்பொழுது சர்வதேச சமூகம் சிரத்தையுடன் பார்க்க தொடங்கியுள்ளது. இந்த சர்வதேச சிரத்தையை மதித்தும் பயன்படுத்தியும் தமிழர் பிரச்சினைகளை முனைப்புறுத்துவது அவசிய கடமையாகிறது. கடந்த இரண்டொரு மாதங்களில் புலம் பெயர் தமிழர் காட்டிவரும் அக்கறை மிக முக்கியமானது.

நன்றி: தினக்குரல், Aug 20, 2006

Please Click here to login / register to post your comments.