இலங்கைத் தமிழர் பிரச்சினையும் இந்திய தேர்தலும்

ஆக்கம்: வ.திருநாவுக்கரசு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சென்ற 8ஆம் திகதிய வெசாக் பண்டிகையின் நிமித்தம் விடுத்த செய்தியில், புத்த பெருமானின் போதனைகள் இன்றைய ஆட்சியின் கீழ் உச்சநிலையில் வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். துர்ப்பாக்கியமாக அதன் மை காயுமுன்னரே வன்னியில் சூடு தவிர்ப்பு அல்லது பாதுகாப்பு வலயத்தில் அரச படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்கள் காரணமாக 100 சிறுவர்கள் உட்பட 378 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஐ.நா.தரப்பில் இலங்கை வதிவிடப்பிரதிநிதி கோடன் வயிஸ் சார்பில் ?இரத்தக்களரி' (ஆடூணிணிஞீ ஞச்tட) என தெரிவிக்கப்பட்டதை சீ.என்.என். தொலைக்காட்சி சேவையிலும் பிரதான செய்திகளில் ஒன்றாக வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக அரசாங்கம் கடுமையாக விசனமடைந்துள்ளது.

உண்மைகள் கசப்பாயிருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல

ஆட்சியிலிருக்கும் போது வெளியாகி வரும் உண்மைகள், ஆட்சியாளர்களுக்கு கடுமையான கசப்பாயிருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்காலத்திலும் அப்படித்தான். உதாரணமாக, 1995 ஜூலையில் நவாலி தேவாலயம் தாக்கப்பட்டு 150 பேர்வரை கொல்லப்பட்டு, 1500 வரை காயப்பட்ட சம்பவம் தொடர்பாக நேரடியாக சென்று பார்த்து, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த முன்னாள் யாழ்.அரசாங்க அதிபர் மீது சந்திரிகா அம்மையார் இது விடுதலைப்புலிகளின் உத்தரவின் பிரகாரம் எழுதப்பட்ட அறிக்கையெனக் கூறி எரிந்து விழுந்ததை முன்பு ஒரு தடவை சுட்டிக்காட்டியிருந்தேன். மற்றும், 1983இல் தமிழர் மீது மிகப்பாரிய இனக்கலவரத்தினை (அணtடிகூச்ட்டிடூ ணீணிஞ்ணூணிட்ண்) ஏவி விட்ட ஐ.தே.க. அரசாங்கம், அதற்காக நவசமசமாஜ கட்சி மற்றும் வேறு சில அரசியல் கட்சிகள் மீதும் பழி போட்டது.

வெளிநாட்டு இராஜ தந்திரிகள் மத்தியில் ஜனாதிபதி உரை

அண்மையில் ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிநாட்டு தூதுவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து அவர்கள் முன்னிலையில் இலங்கை நிலைவரம் தொடர்பாக ஆற்றிய உரையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பொது மக்களை விடுவிப்பதுடன், ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடைவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். பொதுமக்களைப் பாதுகாப்பது தான் தனது கண்ணும் கருத்துமான கரிசனையென அவர் கூறிவைத்ததோடு, விடுதலைப்புலிகள் பிடியிலிருந்த 1,80,000 பேர் வரையிலான மக்கள் "எமது பாதுகாப்பு படையினர் வழங்கியுள்ள பாதுகாப்பு மீது நம்பிக்கை வைத்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர்' என எடுத்துரைத்துள்ளார்.

வன்னி சனத்தொகை

வன்னியில் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தனர் என முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் குறிப்பாக மருத்துவ அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கைகளை ஏற்க மறுத்த அரச தரப்பினர். அங்கே 70,000 ஆயிரம் மக்கள் மட்டுமே உள்ளனரென பட்டவர்த்தனமாக அடம்பிடித்துக்கூறி வந்துள்ளனர். ஆனால், உண்மை தானாகவே வெளிவந்துள்ளது. 1,80,000 வரையிலான அண்மையில் வெளியேறிய மக்களை விட இன்னும் 1,00,000த்திற்கும் அதிகமான, அல்லது ஆகக்குறைந்தது 50,000 மக்கள் அங்கே தங்கியிருக்கின்றனர் என்ற கணிப்பு காணப்படுகிறது.

எனவே, பல மாதங்களாக உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளை மிகக்குறைந்த அளவிலேயே அரசாங்கம் அனுப்பிவந்துள்ளது புலனாகிறது. அதாவது, ஆகக் கூடியது 70,000 ஆயிரம் மக்களுக்குத் தேவையான தொகையே அனுப்பப்பட்டிருக்கும் எனலாம், அதுவே ஏறத்தாழ 3 இலட்சம் மக்களுக்குக் கிள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் எனலாம். ஆக, பலத்த தட்டுப்பாடுகளையும் தாங்கொணா அவலங்களையும் அம்மக்கள் சந்தித்து வந்துள்ளனர் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மக்களைப் பட்டினிபோட்டுப் பணியச் செய்யும் இவ்வாறான செயற்பாடுகள் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக, ஏன் இனக் கொலையின் ஒரு அங்கமாகக் கூட கருதப்படலாம். குறிப்பாக சிறார்களின் எதிர்காலம் சூனியமாயுள்ளது, அதிலும் போசாக்கின்மை காரணமாக எலும்பும் தோலுமாகக் காணப்படும் பச்சிளம் குழுந்தைகளின் கதை முடிந்துவிட்டதென்றே கூற வேண்டும். அது மனித நேயம் படைத்த எவரினதும் நெஞ்சை உருக்கும் காட்சி என்பதில் ஐயமில்லை. உண்மையில் எல்லா வன்னி மக்களுமே வெகுவாக நலிவுற்று இருள் சூழ்ந்த எதிர்காலத்திற்கே முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தேர்தல்களில் வெற்றியீட்டுவதற்காக, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் வாக்கு வங்கியைக் கவர்ந்தெடுப்பதற்காக இலங்கை தமிழர் பிரச்சினையை முதன்மைப்படுத்தியே சூறாவளிப்பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு புறத்தில் சோனியா காந்தி தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சியும் மறுபுறத்தில் எல்.கே.அத்வானி தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியாகிய பாரதீய ஜனதா கட்சியும்(பா.ஜ.க.) ஏட்டிக்குப்போட்டியாக தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தன.

சென்னை சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் கருணாநிதியின் படுக்கைக்குச் சென்று சுகநலம் விசாரித்ததோடு இலங்கைத் தமிழர் கௌரவமாக வாழ வேண்டும், தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வே உகந்ததாகும் என்றெல்லாம் கூறியுள்ளார். அடுத்து பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சென்னைக்கு வருகை தந்திருந்த சோனியா காந்தி ஆற்றிய தேர்தல் பிரசார உரையில், இலங்கை இனப்பிரச்சினைக்கு 1987 இலங்கை இந்திய (ராஜிவ்ஜயவர்தன) ஒப்பந்தத்தின் கீழ் தீர்வுகாண உழைப்பதற்கு தாம் உறுதி பூண்டிருப்பதாகக் கூறியதோடு பேரவலத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழ்மக்கள் படும் துன்ப துயரம் கண்டு தான் கடுமையான வேதனையடைவதாகக் கூறியுள்ளார். மேலும், போர்ப்பகுதியிலுள்ள அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை உறுதியாக கூறிச் கொள்வதாகவும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக தாம் உறுதிபடச் செயற்பட்டு வருவதாகவும் கூறிவைத்தார். இவையெல்லாம் புளித்துப்போன ஏமாற்று வித்தைகள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆக, இலங்கைத் தமிழர் மீது அக்கறை காட்டுவது போல் நடித்து "40ம் நமதே, வெற்றி நமதே' எனத் தமிழில் கூறிவைத்த சோனியா, டில்லியில் தமது ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக தமிழகத்திலிருந்து 40 ஆசனங்கள் தேவை என்பதே சோனியாவின் இலக்கு ஆகும். குறிப்பாக, இன்று வன்னி மக்களை வரலாறு காணாத பேரவலங்களுக்கு ஆளாக்கியுள்ள யுத்தத்தை நடத்துவதற்காக காங்கிரஸ் ஆட்சியாளர் இலங்கை அரசாங்கத்திற்கு தாராளமாக ஆயுத உதவிகளை மட்டுமல்லாமல் ஆளணி உதவிகளையும் செய்து வந்துள்ளது உலகறிந்த விடயமாகும். இதன்பொருட்டு இலங்கை அரச தரப்பினர், குறிப்பாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்திருந்துள்ளதை யாரும் அறிவர்.

பா.ஜ.க.வின் நாடகம்

மறுபுறத்தில், பா.ஜ.க.தலைவர் அத்வானி தமது கட்சி டில்லியில் ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு தாம் உறுதியாக உழைக்கப்போவதாகத் கூறியுள்ளார். மேலும், சில வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் மக்களுக்கெதிராக பலத்த வன்முறைகளைச் கட்டவிழ்த்து விட்டவராகிய குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி சென்னையில் சென்ற வாரம் தேர்தல் பிரசார உரை நிகழ்த்தியபோது,"இலங்கைத் தமிழர் நிலை கண்டு முழு இந்தியாவும் கண்ணீர் வடிக்கிறது' என்று கூறியுள்ளார். மிக சுவாரஸ்யமாயிருக்கிறது. இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டுமாயின் டில்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதற்கு தமிழகம் ஆதரவு தர வேண்டுமென மோடி வேண்டியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வடித்து வருவது நீலிக் கண்ணீர் என்பதை தமிழக மக்கள் சரியாக இனம் கண்டு கொள்ளவேண்டும்.

மாறாக, இந்திய இடதுசாரிகள் இலங்கைத் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு அவசியமானது அரசியல் தீர்வே ஒழிய இராணுவ நடவடிக்கை அல்ல என்றவாறாக அதிக கரிசனை கொண்டு செயற்பட்டுவந்துள்ளனர். தமிழகத்தில் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்ததே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் தா.பாண்டியன் என்பதை மீண்டும் குறிப்பிடலாம். அகில இந்திய மட்டத்திலும் பிரகாஸ் கராத் (இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) மற்றும் டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்கட்சி) ஆகியோர் அரசியல் தீர்வின் அவசியத்தினை வலியுறுத்தி காத்திரமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி வந்துள்ளனர். எனவே தமிழகம் இடதுசாரிக் கட்சிகளுக்கு முன்னரையும் விட கூடுதலான ஆதரவு வழங்குவதன் மூலம் காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் தக்க பாடம் புகட்டுவதற்கு தற்போதைய தேர்தல் நல்லதொரு சந்தர்ப்பமாகும்.

இதனிடையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயராம் ஜெயலலிதாவும் இந்நாள் முதல்வர் கருணாநிதியும் இலங்கைத் தமிழருக்கு தமிழீழம் பெற்றுத்தரப் போவதாக ஏட்டிக்குப்போட்டியாக கோமாளித்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அன்று பங்களாதேஷ் தனிநாடாக அமைக்கப்பட்ட பாணியில் இலங்கைக்கு இந்திய இராணுவத்தினை அனுப்பி தமிழீழம் அமைத்துக் கொடுப்பதற்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுத்து ஈடேற்றுவதற்கு தன்னால் முடியுமென ஜெயலலிதா கூறியுள்ளார். திரைப்படத்துறையில் முன்பு நீண்ட காலமாக ஈடுபட்டிருந்தவர்களாகிய கருணாநிதியும் ஜெயலலிதாவும் இலங்கைத் தமிழர் பிரச்சினையையும் சினிமாக் கண்ணோட்டத்தில் பார்க்கின்ற நகைச்சுவையையே இதில் காண முடிகிறது.

ரணில் விக்கிரமசிங்க இந்திய இராணுவ உதவி பற்றி என்ன கூறுகின்றார்?

சென்றவாரம் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க "ரைம்ஸ் நௌ' (கூடிட்ஞுண் Nணிதீ) தொலைக்காட்சிச் செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில், விடுதலைப்புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளில் இந்தியா இலங்கைக்கு பெரிதும் உதவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நாம் நன்கு அறிந்திருந்த விடயத்தினை விக்கிரமசிங்க சற்று சாமர்த்தியமாக உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது, தான் இலங்கைப் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் இந்தியா ஆயுத உதவிகளை வழங்கியதுடன், விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பலை கடலில் வைத்து முறியடிப்பதற்கும் அவர்களின் உலக வலைப்பின்னலை உடைப்பதற்கும் புலனாய்வுப் பரிமாற்றத்திற்கும் இந்தியா கை கொடுத்ததாக விக்கிரமசிங்க பெருமிதப்பட்டுள்ளார்.

அதாவது, விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பதற்கான விடயத்தில் தான் முன்னணியில் நின்றுள்ளாதாகவே அவரின் செவ்வி அமைந்துள்ளது. விக்கிரமசிங்க பிரதமராகவிருந்த 20032004 காலப்பகுதியில் பா.ஜ.க.அரசாங்கமே இந்தியாவில் பதவியிலிருந்தது. எனவே, பா.ஜ.க.அரசாங்கம் பதவிக்கு வந்தால் இலங்கைத் தமிழருக்கு சாதகமாயிருக்கும் என்று யாரும் மனப்பால் குடிக்க வேண்டியதில்லை. இலங்கையில் எந்த வகையான போராட்டங்களையும் அடக்கி ஒடுக்கப்படும் எந்த மக்கட் பிரிவினர் தான் நடத்தும் போராட்டங்களையும் முறியடிப்பதற்கு இலங்கையிலோ இந்தியாவிலோ எந்த அரசாங்கம் பதவியிலிருந்தாலும் இந்திய அரசின் உதவி இலங்கை அரசுக்கு என்றும் உண்டு என்பதை அனைத்து இலங்கை மக்களும் மனதில் வைத்திருக்க வேண்டும். இது தொடர்பாக தென்னிலங்கை தொழிலாளி வர்க்கம் விரைந்து விழித்தெழ வேண்டும்.

Please Click here to login / register to post your comments.