தென்னாசியாவில் இந்தியாவின் ஒரே நட்புநாடு தமிழீழமே

இன்று தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தினம், தினம் துன்பத்தில் மிதக்கும் தமிழீழ மக்களுக்கு மிகப்பெரும் ஆறுதல் அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கட்சி பேதமின்றி எல்லோரும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவு நல்கிக்கொண்டு இருப்பது போற்றத்தக்கது. 1980களில் எமக்கும் தமிழ்நாட்டிற்கும் இருந்தது போன்ற உறவு மீண்டும் தழைத்துள்ளது. இது இந்தியாவின் - மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளை அசைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழ் மகனினதும் அவா. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை எப்போதுமே இந்தியாவை எதிர்த்ததும் இல்லை அங்கு கட்சி பேதம் பார்த்து உதவி கேட்டதும் இல்லை. 1987-இல் ஏற்பட்ட மனக்கசப்புக்குக் கூட சிங்கள அரசினால் தவறாக வழிநடத்தப்பட்ட இந்திய மத்திய அரசும் அதன் தவறான கொள்கை வகுப்பாளர்களும்தான் காரணம்.

இந்தியப்படைகள் வெளியேறிய பின்னர் இரண்டாவது ஈழப்போர் ஆரம்பமாகியபோது கூட சிங்கள அரசின் கொலைவெறியில் இருந்து தப்பிக்க தமிழ் மக்கள் பாகிஸ்தானுக்கு ஓடவில்லை. தமிழ்நாட்டிற்கே ஓடினார்கள், அங்கு கெடுபிடிகள் அதிகம் என்றாலும் சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள். ஏன்? நாங்கள் எல்லோரும் ஒரு உறவுகள் என்பதும், தமிழ்நாட்டு மக்களை எப்போதும் ஈழத்தமிழர்கள் வெறுத்ததில்லை என்பதும்தான்.

இப்போது மீண்டும் சிங்கள அரசின் போர் வெறி உக்கிரமடைந்துள்ளது. பெரியோரும், குழந்தைகளும், புத்திஜீவிகளும், மாணவர்களும், ஊடகவியலாளர்களும் என ஒவ்வொரு நாளும் படுகொலை செய்யப்படுகிறார்கள். சிங்கள அரசின் கொலைவெறியில் இருந்து தப்பிக்க போர் நிறுத்தக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு ஓடிய மக்கள் தொகையும் 10,000-ஐத் தாண்டிவிட்டது. 23 வருடங்களாக போர்க்களத்திலும், 58 வருடங்களாக இன ஒடுக்குமுறைக்குள்ளும் சிக்குண்டு சீரழிந்து போன தமிழ் மக்களுக்கு இது இறுதிப்போருக்கான காலம்.

ஏறத்தாழ 23 வருடங்கள் பேசினோம், போரிட்டோம், போரிட்டோம், பேசினோம் என 3 ஈழப்போர்களும் 5 சுற்றுப்பேச்சுக்களும் (1985, 1987, 1990, 1994, 2002) நடந்துவிட்டன.

அதாவது போர்களைவிட பேச்சுக்கள்தான் அதிகம். ஆனால் எந்த சிறு உரிமைகளும் சிங்கள இனவாத அரசுகளிடமிருந்து பெறமுடியவில்லை என்பதுடன் இந்தியாவினாலோ அல்லது வேறு சர்வதேச நாடுகளினாலோ ஜனநாயக வழிகளில் கூட பெற்றுக் கொடுக்கவும் முடியவில்லை. மாறாக ஒவ்வொரு தடவையும் தமது ஆயுதப்போரை வலுப்படுத்தவே தமிழ் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இறுதியாக நார்வேயின் மத்தியஸ்தம் ஊடாக 4 வருடங்கள் பேசியாகிவிட்டது. ஆனால் நடந்தது என்ன? அமைதியையும் சமாதானத்தையும் பயன்படுத்தி புலிகளையும் தமிழ் மக்களையும் உலகில் இருந்து தனிமைப்படுத்த முயன்றது அரசு அதில் சிறிதளவேனும் வெற்றியும் பெற்றுவிட்டது. அந்த உற்சாகத்தில் போர்நிறுத்தத்தைக் கேடயமாக்கி போரை ஆரம்பித்துள்ளது அரசு. 1987இல் ஆயுதத்தை வாங்கிவிட்டு அடித்தார்கள். இன்று போர்நிறுத்தம் என்ற சொல்லைக் கொண்டு கையைக் கட்டிவிட்டு அடிக்கிறார்கள் இது எதுவரை சாத்தியம்?

பலம்தான் எமது வாழ்வை தீர்மானிக்கும் என்று-எனவே தான் தரைப்படை, கடற்படை, காவல்படை, விசேட படை என வளர்ந்து தற்போது மக்கள்படை, விமானப்படை என வளர்ச்சி கண்டு உள்ளது தமிழர் சேனை.

எனவே புலிகளைத் தனித்து எதிர்கொள்ளத் திராணியற்ற அரசு சர்வதேசத்தில் தடைகளை ஏற்படுத்திவிட்டு அயல்நாட்டு இராணுவ உதவியுடன் தமிழ் மக்களை நசுக்க முனைகிறது. இந்த அயல்நாடு என்பது இந்தியா அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம்.

தற்போதைய நிலையில் பாகிஸ்தானின் பங்களிப்புத்தான் அதிகமாக உள்ளது. இராணுவத் தளவாட விநியோகம் தொடக்கம் இராணுவப் பயிற்சி, விமானக் குண்டுவீச்சுக்களை வழிநடத்துதல், புலனாய்வுத் தகவல்களை வழங்குதல் என தலையீடுகள் மிக அதிகம். இதற்கு ஒருவகையில் இந்தியாவே காரணம் எனில் தவறாகாது.

ஏனெனில் 2000இல் சிங்கள இராணுவத்தின் மூன்றில் ஒரு பகுதி யாழ். குடாவில் பேரழிவை எதிர்நோக்கி இருந்த வேளை பாகிஸ்தானிடம் ஆயுதங்களை வாங்கும்படி கைகாட்டிவிட்டது இந்தியா தான். இப்போது பாகிஸ்தான் தூதுவருக்கு குண்டுத்தாக்குதல் நடத்தி வெளியேற்ற வேண்டிய அளவிற்கு இந்தியாவிற்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

வடக்குப் புறமாக காஷ்மீரில் அடிப்பதைவிட தெற்குப்புறமாக தமிழ்நாட்டில் அடிவிழுந்தால் இந்தியாவிற்கு பாதிப்புக்கள் மிக அதிகம்.

ஏனெனில் ஆவடியில் டி-72 ரக டாங்கிகள் பொருத்தும் மையம், அணுமின் உலைகள், கப்பல் கட்டும் இடம் என இந்தியாவின் பெரும்பாலான இராணுவ மையங்கள் அதன் தென்பகுதியில்தான் உள்ளன.

எனவேதான் பாகிஸ்தானும் வடபகுதியை மையமாகக் கொண்டு தனது வேவுவிமானம் போன்ற நவீன ஆயுதங்களை வழங்கிக்கொண்டு உள்ளதுடன் அதன் ஐ.எஸ்.ஐ. புலனாய்வுப்பிரிவையும் முடுக்கிவிட்டுள்ளது. அதற்கு எல்லாம் காரணம் என்ன? எதிரி யார் நண்பன் யார் என்ற இந்தியாவின் தெளிவற்ற தன்மை தான். அதாவது சிங்கள அரசு தான் இந்தியாவின் பரம எதிரி. சொல்வது தவறு எனில் வரலாற்றைத் திரும்பிப்பாருங்கள்.

1950களில் மலையக மக்களின் குடியுரிமையைத் தடுத்தது. இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானை ஆதரித்தது. இந்திரா காந்தி இறந்தபோது துக்கம் கொண்டாடிய தமிழ் மக்களை திருமலையில் சுட்டுக்கொன்றது. ராஜீவ் காந்தியைத் தாக்கியது. பல தடவைகள் சிங்களக் காடையரை கொண்டு இந்தியத் தூதரகத்தைத் தாக்கியது. வகை தொகையின்றி இந்திய மீனவரைக் கொன்று குவித்தது - என அதன் பட்டியல் நீளம்.

ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியாவில் கட்சி பேதம் கிடையாது. எம்.ஜி.ஆரையும், கலைஞரையும் மிகவும் நேசித்தார்கள். ஜெயலலிதாவையும் அப்படித்தான், வைகோ, நெடுமாறன், திரையுலகக் கலைஞர்கள், தமிழக புத்திஜீவிகள், தமிழக மக்கள் என எல்லோரின் மீதும் அளவு கடந்த மதிப்பு உண்டு. ஆனால் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும் தாண்டி தலைவர்களின் சிலைகளின் மீதும் தனது காடைத்தனத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது சிங்கள இராணுவம்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகளைக் கூட விட்டு வைக்கவில்லை. மக்ககள் திலகம் தமிழக மக்கள் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்கள் போற்றும் தலைவர், சிங்கள அரசு 6 கோடி தமிழக மக்களை மட்டுமல்லாது உலகு எங்கும் வாழும் தமிழ் மக்களை எல்லாம் இழிவுபடுத்தவே இதைச் செய்துள்ளது என்பது கண்கூடு. முன்னை நாள் இந்தியப் புலனாய்வு அதிகாரி இராமன் கூறுவது போல இந்தியா ஆயுதம் கொடுக்கவில்லை பாகிஸ்தான் கொடுக்கிறது. எனவே சிங்கள அரசு பாகிஸ்தானை ஆதரிக்கிறது என்பது மிகவும் நகைப்புக்கிடமானது.

1983-இல் தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்திற்கு இந்தியா ஆதரவளித்து தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்கும்போது சிறிலங்கை அரசை தனது பிடிக்குள் கொண்டுவர தான் அப்படிச் செய்கிறது என்ற ஒரு கருத்து இருந்தது. அப்படியானால் தமிழ் மக்களின் ஆயுதப்போர் முளைவிடும் முன்னரே சிங்கள அரசு இந்தியாவிற்கு எதிரான போக்கைக் கொண்டிருந்ததாகத் தானே அர்த்தம். சரியான புலனாய்வாளர்களும், ஆய்வாளர்களும் ஒரு நாட்டின் முதுகு எலும்பு போன்றவர்கள். ஆனால் தவறான புலனாய்வாளர்களும், ஆய்வாளர்களும் ஒரு நாட்டிற்கு சாபக்கேடானவர்கள் என்பது இதுதான்.

மீண்டும் மீண்டும் செய்த தவறையே இந்தியா செய்வதில் அர்த்தமில்லை. இவ்வளவு காலமும் சிங்கள அரசின் வழியிலேயே இந்தியா சென்றுள்ளது. இனிமேல் இந்தியாவின் வழியில் சிங்கள அரசைப் பணியவைப்பதுதான் இந்தியாவின் நலனுக்கு உகந்தது. இவை ஒன்றும் நடக்காத விடயங்கள் அல்ல.

1987ல் கப்பல் மூலம் உணவு கொண்டுவந்த இந்தியப் படையை சிங்கள கடற்படை தடுத்தபோது விமானம் மூலம் போடவில்லையா? 1.8 கோடி மக்களையும் 20 போர் விமானங்களையும் கொண்ட ஒரு தேசம் 100 கோடி மக்களையும் பல நூறு போர் விமானங்களையும் கொண்ட தேசத்தை மிரட்டலாமா?

1980களில் இருந்தது போல பெரும்பான்மை ஆட்சி தற்போது இந்திய மத்திய அரசில் கிடையாது. இந்திய அரசியல் சட்டம் 356 ஆவது சரத்தைப் பயன்படுத்தி இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 46 தடவைகள் மாநில அரசுகளைக் கலைத்தது போல அடிக்கடியான ஆட்சிக் கலைப்புகளும் மத்திய அரசால் தற்போது செய்ய முடியாது. கூட்டணிகளின் தயவால் ஆட்சி நடத்தும் மத்திய அரசிலும் அதன் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாநில அரசுகள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

எனவே, முல்லைத்தீவில் உயிர்நீத்த குழந்தைகளுக்காக ஒன்றிணைந்த எமது குரல்கள் தொடர வேண்டும். தமிழீழ மண்ணில் படுகொலைகள் ஓயும்வரை, ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும்வரை சோர்ந்து போகலாகாது. ஒரு மில்லியன் மக்களை இழந்த வியட்நாமும் 58 ஆயிரம் வீரர்களை இழந்த அமெரிக்காவும் உறவாடவில்லையா?

முன்பு சோவியத்துடன் இருந்த பால்கன் குடியரசுகள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒன்றாகவில்லையா? இந்தியாவின் நிலப்பரப்பை ஆக்கிரமித்த சீனாவுடன் இந்தியா வர்த்தக உடன்பாடு செய்யவில்லையா? அயர்லாந்துடன் பிரிட்டன் கைகோர்க்கவில்லையா? இந்த ஆண்டு மொன்ரோநீக்குரோ என்ற சின்னஞ்சிறிய தேசத்தை தனது பிராந்திய நலன்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் முன்னின்று உருவாக்கவில்லையா? எனவே தனிப்பட்ட நபர்களின் வயிற்று எரிச்சலையும், தவறான தகவல்களையும் ஒதுக்கிவிட்டு யதார்த்தத்தைக் கையில் எடுக்க வேண்டிய நேரமிது. இறுதியாக ஒன்றைக்கூறி முடித்துக்கொள்கிறேன். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் நாடுகள் இரு அணிகளாகப் பிரிந்து நின்றன. அரபு உலகமும் சோவியத்துடன் அள்ளப்பட்டுவிடுமோ என்றபோதுதான் 1948இல் இஸ்ரேலை உருவாக்கியது அமெரிக்கா. உண்மையுள்ள தோழன், வலிமைமிக்க நண்பன் என இன்று அமெரிக்கா உலகில் முதன்மை நாடாக விளங்குவதற்கு இஸ்ரேலும் ஒரு காரணம் என்றால் மறுக்கமுடியாது. அதன் வலிமை, உயர் தொழில்நுட்பம், நுட்பமான அறிவு, நம்பகத்தன்மைதான் வளைகுடாவில் அமெரிக்காவின் பிடியை இன்றும் இறுக்கமாக வைத்துள்ளது.

இந்தியாவைச் சுற்றி அதற்கு விசுவாசமான நாடுகளே கிடையாது. 58 வருடங்களாக இல்லாத சிங்கள அரசு இனி ஒரு நட்பு நாடாகவும் மாறப்போவதில்லை. சரி அப்படி மாற நினைத்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தமிழன் இருக்கும் வரை இது சாத்தியமில்லை.

ஏனெனில் சிங்கள அரசுகள் ஈழத்தமிழர்களை மட்டுமல்லாது உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களையும் ஜென்ம விரோதிகளாகவே பார்ப்பதுண்டு. இது இன்று, நேற்றல்ல துட்டகைமுனு காலத்தில் இருந்து தொடர்கிறது. எனவே, இந்தியா தனது பிராந்திய நலனைக் காக்க வேண்டுமாயின், ஒரு உலக வல்லரசாக உயர வேண்டுமெனில் அமெரிக்காவிற்கு ஒரு இஸ்ரேல் போல இந்தியாவிற்கு ஒரு தமிழீழம் நிச்சயமாகத் தேவை. அதுதான் காலத்தின் நியதியும் கூட.

Please Click here to login / register to post your comments.