விடுதலைப்புலிகளாக மாறுவோம் -திருமா சபதம்!

ஆக்கம்: இளையசெல்வன்
ஜெர்மனியின் ரெயின் நகரத்தில் ஈழத் தமிழர்களுக்கான வாழ்வுரிமை சிறப்பு மாநாட்டை சமீபத்தில் நடத்தியது "உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்.' பிரமாண்டமாக நடந்த இந்த மாநாட்டில் புலம் பெயர்ந்த தமிழர்களும் புலிகளின் செயற்பாட்டாளர்களும் ஏராளமாக திரண்டிருந்தனர். இலங்கை அரசால் தற்போது "கைது' செய்யப் பட்டுள்ள கே.பி.யுடன் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கும் முயற்சியில் உள்ள ருத்ரகுமாரன், இலங்கை தமிழ் எம்.பி. மாவை சேனாதிராஜா விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் எம்.பி. ஆகிய மூவர் மட்டும் சிறப்பு அழைப்பாளர்களாக மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த மாநாட்டில், இந்தியாவிற்கு எதிராக பேசியிருக்கிறார் திருமாவளவன். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தபோது...

* ஜெர்மனியில் நடந்த ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் இந்தியாவிற்கு எதிராக கர்ஜித்திருக்கிறீர்களே?

திருமாவளவன்: ஈழத்தமிழினத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க, ராஜபக்சேவை முன்னிறுத்தி தமிழர்களுக்கு எதிரான கொடூரமான போரை நடத்தியது இந்திய அரசுதான் என்பது வெளிப்படையான உண்மை. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல...தமிழக தமிழர்களுக்கும்,உலகத் தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாட்டில்தான் இருக்கிறது இந்தியா. கடந்த 5 ஆண்டுகால துவக்கத்திலிருந்தே சிங்கள அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர்களும் காங்கிரஸ் அரசு அதிகாரிகளும் எடுத்தனர். இதற்காகவே இந்திய அரசின் உயர் பொறுப்பு களுக்கு தமிழினத்திற்கு எதிரான அதிகாரிகள் கொண்டுவரப்பட்டனர். புலிகளை அழிக்கிறோம் என்கிற பெயரில் ஈழத்தமிழினத்தை முழுமையாக அழிக்கவேண்டுமென்பதுதான் இந்திய அரசின் கொள்கையாக இருந்தது. இருந்தும் வருகிறது என்பதை தெளிவாக எடுத்துச்சொல்லி, "இனியும் இந்தியாவை நம்பக்கூடாது. நம்புவதால் பலன் இல்லை' என்றும் மாநாட்டில் வலியுறுத்தினேன்.

சீனா, மிகப் பெரிய விலை கொடுத்து இலங்கையை வளைத்துள்ளது. சீனாவின் இந்த ஆதிக்கத்தை தகர்க்க, இலங்கையின் நட்பை பலப்படுத்திக்கொள்ள தமிழினத்தையே அழிக்க முன் வந்து ராஜபக்சேவிற்காக அனைத்தையும் செய்தது இந்தியா. அதனால் தமிழினத்திற்கு இந்தியா நட்பு நாடல்ல, தமிழினத்திற்கு துரோகத்தை தவிர காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டினேன். அதேபோல அமெரிக்கா என்ன சொல்கிறதோ அதை மட்டுமே நிறைவேற்ற வேண்டுமென்கிற கொள்கை முடிவில்தான் இருக்கிறது இந்திய அரசு.

இப்படிப்பட்ட சர்வதேச சூழலில் புலம் பெயர்ந்த தமிழ்ச்சமூகம், புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வலிமையான போராட்டத்தை முன்னெடுப்பதுதான் முதல் கடமையாக இருக்கவேண்டும். புலிகள் இயக்கம் மக்களுக்கான இயக்கம். பயங்கரவாத இயக்கம் இல்லை. தமிழீழம் மட்டுமே தமிழினத்தை பாதுகாக்கும். தமிழீழம் மட்டுமே நமக்கான உரிமைகளைப் பெற்றுத்தரும் என்பதை உரத்த முழக்கங்களாகச் சொல்லி போராடவேண்டும். சர்வதேச சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்குகள் விரிவடைந்து வருகின்றன. அதனை முறியடிக்க நாம் விழிப்புடன் போராட வேண்டும். அல்-கொய்தா இயக்கத்தையும் புலிகள் இயக்கத்தையும் ஒரே நேர்கோட்டில் வைத்து அயோக்கியத்தனமான அரசியலை செய்துகொண்டிருக்கிறது அமெரிக்கா. அதனை அடியொற்றி இந்தியாவும் நடந்து கொள்கிறது. அதனால் எந்த சூழலிலும் இந்தியா மீது நம்பிக்கை வைக்காதீர்கள். பிரபாகரன் தலைமையில் ஐந்தாம்கட்ட ஈழப்போர் உயிர்த் தெழும், வெடிக்கும் என்று பேசினேன்.

எனது பேச்சிலும் எனது கருத்திலும் உடன் பாடு இருந்ததால் புலம் பெயர்ந்த தமிழ்ச்சமூகம் ஆர்ப்பரித்தது. அதாவது இந்தியாவை நாங்கள் நம்பவில்லை, நம்பமாட்டோம் என்கிற உணர்வுகளை வெளிப்படுத்துவதுபோல இருந்தது தமிழர்களின் ஆர்ப்பரிப்பு. ஆக நான் இந்தியாவிற்கு எதிராக பேசியது உண்மைதான். இதற்காக நான் பயப்படமாட்டேன்.

* பிரபாகரன் உயிருடன் இருக் கிறாரா? இல்லையா? என்பது பற்றி புலம் பெயர்ந்த தமிழர்களின் மன நிலை எப்படி இருக்கிறது?

திருமாவளவன்: தங்களின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப் படவில்லை என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்தியா விற்கும் ராஜபக்சேவிற்கும் பிரபாகரன் என்பவர் முக்கியமான எதிரி. உலகமே வியந்து பார்க்கும் ஒரு விடுதலைப்போராட்ட இயக்கத்தின் மாபெரும் தலைவர். அப்படி யிருக்கையில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று சொன்ன சிங்கள ராணுவத் தினர், அவரது உடலை அவசரம் அவசரமாக எரித்தது ஏன்? முள்ளிவாய்க்காலின் நந்திக் கடல் ஓரத்தில் அவரது உடலை கண் டெடுத்ததாக சொன்ன இலங்கை அரசு , உடலை கொழும்பிற்கு கொண்டு வந்து சர்வதேச பத்திரிகையாளர்கள் முன்பும் இந்திய அரசு அதிகாரிகளை வரவழைத்தும் பகிரங்கமாக காட்டி ராஜபக்சே மார்தட்டிக் கொண்டிருக்கலாமே? கொல்லப்பட்டது உண்மையென்றால், அதுதான் பிரபாகரனின் உடல் என்றால் எந்த ஒரு அதிபரும் அதனை சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிப்பார்கள். அதனை ராஜபக்சே செய்தாரா? இன்னும் சொல்லப்போனால் பிரபாகரனின் இறப்பு சான்றிதழை கேட்டு இந்திய அரசு அதிகாரிகள் இலங்கைக்கு ஓடினார்களே.. அவர்களிடம் சான்றிதழை கொடுத்தாரா ராஜபக்சே? இல்லையே. இன்றுவரைக்கும் அந்த சான்றிதழை இலங்கையால் கொடுக்க முடியவில்லை. இதனையெல்லாம் விவாதிக் கிறார்கள் ஈழத்தமிழர்கள். தேசியத் தலைவர் விரைவில் அதிரடியாக தோன்றுவார் என்கிற நம்பிக்கை அதிகமாக இருக்கிறது.

* புலிகளுக்கு மிகப் பெரிய பலமாக இருந்த மக்கள், தற்போது முள்கம்பி களுக்கு இடையே ராஜபக் சேவால் சிறைவைக்கப்பட்டிருக் கிறார்கள். புலிகளின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள் ளனர். புலிகளின் ஆயுதங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. நிலப்பரப்புகளில் ஒரு அங்கு லம்கூட புலிகளிடம் இல் லை..... இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் ஈழப்போர் வெடிக்கும் என்று எப்படி உங்களால் நம்ப முடிகிறது?

திருமாவளவன்: ஈழ விடுதலைக்கு தற்போது சற்று பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் விடுதலை வேட்கை சிதைந்து விடவில்லை. முன்பைவிட இப்போதுதான் தமிழீழ கோரிக்கை வலிமையாக உயிர்ப்பித்திருக்கிறது. ஈழவிடுதலைப் போராட்டம்... நிலப்பரப்புகளை கையில் வைத்துக்கொண்டு தொடங்கப்படவில்லை. சுழியிலிருந்துதான் துவக்கப்பட்டது. ஆயுத பலத்தை பெருக்கி கொண்டு இயக்கத்தை கட்டியெழுப்பவில்லை பிரபாகரன். ஒரே ஒரு துப்பாக்கியில் உருவானது இயக்கம். இயக்கம் உருவானபோது ஒருபிடி மண்கூட நமக்கு கிடையாது. ஆனால் இயக்கத்தை கட்டியெழுப்பிய பிரபாகரன், வன்னி பெரு நிலப்பரப்பினை உருவாக்கவில்லையா? வடக்கு-கிழக்கு என்கிற தமிழீழ தாயகப் பிரதேசத்தை உருவாக்கினாரே? உலகத்தில் எந்த ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கும் இல்லாத முப்படைகளை உருவாக்கி, மிகபெரிய ஜனநாயக அரசை நிறுவினாரே? இதனையெல்லாம் சிந்தித்தால் மீண்டும் ஈழப்போர் சாத்தியமே.

இன்னும் சொல்லப்போனால்...பயிற்றுவிக்கப்பட்ட போராளி கள், பாதுகாக்கப்பட்ட ஆயுதங்கள், தமிழர்களிடம் வளர்த் தெடுக்கப்பட்ட உணர்வுகள் எல்லாம் இன்னும் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆக போராளிகளும் போராட்டங்களும் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்களே தவிர சிதைக்கப் படவில்லை. வேறு வடிவத்தில் வேறு அவதாரத்தில் மீண்டும் புலிகள் வீரமாக வந்துகொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் தலைமையில் தமிழீழம் அமைந்தே தீரும். அதற்கு முன்பாக குழப்பத்தில் உள்ள தமிழக இளைஞர்களை தட்டி எழுப்பும் முயற்சிகளை எடுத்து வருகிறேன். அதன் முதல்கட்டமாக தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடிவரும் என் பிறந்த நாளை (ஆகஸ்ட் 17) இன விடுதலைக்கான எழுச்சி நாளாக கொண்டாட விடுதலை சிறுத்தைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். வருகிற ஆகஸ்ட் 17-ல் இதற்காக "எழும் தமிழ் ஈழம்' என்கிற மாநாட்டை நடத்துகிறோம். இனி, "ஆயுதம் ஏந்தாத விடுதலைப் புலிகளாக விடுதலை சிறுத்தைகள் போராடும்'. அந்த போராட்டம் இதுவரை நடந்த போராட்டங்களை காட்டிலும் வலிமையானதாக இருக்கும்படி திட்டமிட்டு வருகிறோம்.

* பிரபாகரன் உயிருடன் இல்லை என்கிற கருத்துக் கொண்ட ருத்திர குமாரன், வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். பிரபாகரன் பற்றி அவர் என்ன சொல்கிறார்?

திருமாவளவன்: பிரபாகரன் உயி ருடன் இருக்கிறார் என்பதுதான் ருத்திர குமாரனின் கருத்தும். அவரிடம் இதைப்பற்றி நான் வெளிப்படையாக பேசியபோது, "பிரபாகரன் இல்லை என்று எப்போதும் எந்த இடத்திலும் நான் சொன்னதே இல்லை' என்று என்னிடம் கூறியவர், "தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்பதே தனது கருத்தும்' என்பதையும் என்னிடம் வெளிப் படுத்தினார். ஆனால் அவரது கருத்து தவறாக பரப்பப்பட்டு வருகிறது.

,b>* நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கப்போவதாக கூறி அதற்கான முயற்சியில் இருந்த கே.பி.என்கிற செல்வராஜாபத்மநாதன் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளாரே?

திருமாவளவன்: சிங்கள அரசின் எல்லை தாண்டிய பயங்கரவாததிற்கு இது ஒரு உதாரணம். சிங்கள அரசின் ஆக்டோபஸ் கரங் கள் சர்வதேச அளவில் விரியத் துவங்கி யிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. பத்மநாதன் கைது செய்யப்பட்டிருந்தால் எந்த நாட்டில் கைது செய்யப்பட்டாரோ அந்த நாட்டின் நீதிமன்றத்தில் அவர் விசாரிக்கப்பட வேண்டும் அல்லது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கவேண்டும். அதனை விடுத்து அவர் இலங்கைக்கு கடத்தப்பட்டிருப்பது ராஜ பக்சேவின் கொலைவெறியை காட்டுகிறது. கே.பி.யை நாங்கள் கைது செய்ய விரும்ப வில்லை, பார்த்த நாட்டிலேயே சுட்டுக் கொல்லத்தான் உத்தரவு போட்டிருந்தோம். ஆனால் வெளிநாட்டில் அதற்கு சரியான இடம் அமையவில்லை என்பதால் இலங்கைக்கு கொண்டுவர வேண்டியதாயிற்று என்று இலங்கை அமைச்சர் பகிரங்கமாக பேட்டி தருகிறார். ஆனால் இறையாண்மையை பேசுகிற சர்வதேச நாடுகள் இதனை கண்டிக்காமல் வாய் மூடிக்கொண்டி ருக்கின்றன. நெஞ்சம் பதறுகிறது. இதற்கெல்லாம் கூடியவிரைவில் ஒரு முடிவு வரும் என நான் நினைக்கிறேன்.

Please Click here to login / register to post your comments.