மாதகல் தந்த தவப்புதல்வர் எல்.ஏ.மாஸ்டர்

ஆக்கம்: கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம்
மாதகல் கிராமம் தந்த தவப்புதல்வர்களுள் ஒருவர் நல்லாசான் எல்.ஏ.யோசப்பின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று 25 ஆம் திகதியாகும்.

"எல்.ஏ.மாஸ்டர்' என மக்களாலும் "இரா சர்' எனக் குடும்பத்தவர்களாலும் அழைக்கப்பட்ட லோப்புப்பிள்ளை அமிர்தநாதர் யோசப் "வரகவி' அமிர்தநாதர்செல்வம் தம்பதிகளின் இளைய புதல்வராக 1917 ஆம் வருடம் ஆடித்திங்கள் 9 ஆம் நாள் பிறந்தார்.

நல்லாசான் எல்.ஏ.யோசப் ஆங்கில மொழியையும் விளையாட்டுத் துறைசார் நுட்பங்களையும் மிகுந்த ஈடுபாட்டோடும் கட்டுப்பாட்டுடனும் மாணவர் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும் கற்பித்த நல்லாசான் என்பதை அவரது பழைய மாணவர்கள் என்றென்றும் நினைவுகூர்வர்.

தனது ஆரம்பக்கல்வியை மாதகல் புனித சூசையப்பர் ஆங்கிலப் பாடசாலையிலும் பின்னர் புலமைப்பரிசில் பெற்று யாழ்.புனித சம்பத்திரிசியார் கல்லூரியிலும் பயின்றார்.

பின்னர் தனது கல்வியை இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரியில் தொடர்ந்ததுடன், கல்லூரியின் துடுப்பாட்ட, உதைபந்தாட்ட, கரப்பந்தாட்ட அணிகளுக்கு தலைமை தாங்கி சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதினையும் பெற்றார்.

இரண்டாவது உலக மகா யுத்த காலத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் கூட்டுறவு இயக்கத்தை அப்பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தி அரும்பணியாற்றிய பெருமையும் இவருக்குண்டு.

இவர் 1950 இல் தனது ஆசிரிய பணியை இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரியில் ஆரம்பித்து மஹரகம ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று முதலாம் தர ஆங்கில ஆசிரியரானார். மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை, மாதகல் புனித சூசையப்பர் மகா வித்தியாலயம், அளவெட்டி அருணோதயா கல்லூரி என்பவற்றில் ஆங்கில ஆசிரியராகவும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத்துறை ஆசிரியராகவும் அரும்பணியாற்றினார்.

இவரால் பயிற்றுவிக்கப்பட்ட இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி உதைபந்தாட்டக்குழு 1950 ஆம் வருட கல்லூரிகளுக்கிடையிலான வெற்றிக் கிண்ணத்தையும் மானிப்பாய் மெமோறியல் பாடசாலையின் பெண்கள் உடற்பயிற்சிக்குழு 1956,1957 ஆம் வருடங்களுக்கான "லங்காதீப' வெற்றிக் கிண்ணங்களையும் அளவெட்டி அருணோதயா கல்லூரி, இரண்டாம் பிரிவு உதைபந்தாட்டக்குழு 1971 ஆம் ஆண்டு யாழ். பாடசாலைகள் விளையாட்டுச் சங்கங்களின் வெற்றிக் கிண்ணத்தையும் சுவீகரித்துக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஆங்கிலப் பேச்சாளராகத் திகழ்ந்த இவர் நாடக நடிகராகவும் ஓவியராகவும் திகழ்ந்ததுடன், சிறந்த சமூக சேவையாளராகவும் பொது நீதிக்குப் போராடியவராகவும் திகழ்ந்தார்.

ஆசிரியராகவும் பின் அதிபராகவும் மாதகல் புனித சூசையப்பர் ஆங்கிலப் பாடசாலையை மகா வித்தியாலயமாக ஆண்களுடன் பெண்களும் கல்வி பயில்வதற்கான ஓர் மதிக்கப்பெற்ற கல்வி ஸ்தாபனமாக மாற்றிய பெருமையும் இவரையேசாரும்.

தனது ஆசிரியப் பணியிலிருந்து 1975 ஆம் வருடத்தில் இளைப்பாறிக்கொண்ட "எல்.ஏ.மாஸ்டர்' தமது குடும்ப வாசஸ்தலமான மாதகல் அமிர்தவில்லாவிலும் பின்னர் 1988 ஆம் வருடம் முதல் கொழும்பு நகரிலும் வாழ்ந்து இறையன்புடன் சமூக நீதிக்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டார்.

அவர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவர் நற்பணியாளராகவும் நல்லாசிரியராகவும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்.

மாதகல் தனது தவப்புதல்வர்களில் ஒருவரான "எல்.ஏ.மாஸ்டரை' என்றும் நினைவுகூரவே செய்யும்!

Please Click here to login / register to post your comments.