ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - சட்ட வடிவிலான அடக்குமுறைகள் (91-122)

ஆக்கம்: தினமணி

91: பிரபாகரனின் தளபதிகள்!

கிட்டு - மாத்தையா - கே.பி. கரிகாலன் - பொட்டு அம்மான் - சுப.தமிழ்ச்செல்வன் - காசி ஆனந்தன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீச்சும் பிரபாகரனின் சாதனைகளும் ஒப்பிட முடியாதவை. இயக்கமும், பிரபாகரனும் வெற்றியடைய பலர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். போராளிகளாக பல்லாயிரம் இளைஞர்கள் சேர்ந்து, பயிற்சி பெற்று பல்வேறு பகுதிகளில் செயலாற்றியும் வந்திருக்கிறார்கள்.

தமிழீழம் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிக்கென தளபதிகளும் நியமிக்கப்பட்டார்கள்.

இந்தத் தளபதிகளில் குறிப்பிடத் தகுந்தவர்கள் மாத்தையா, கிட்டு, விக்டர், புலேந்திரன், குமரப்பா ஆகியோராவர். இவர்கள் அனைவரும் பிரபாகரனின் பால்ய கால நண்பர்கள் ஆவர்.

இயக்கத்தில் பெரும்பாலும் வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்களே முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவதாக ஒரு பிரசாரம் எழுந்தது.

இதுகுறித்து யாழ்த் தளபதியாக இருந்த கிட்டு ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது:

வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று கூறியதோடல்லாமல், அதற்கு மேலும் சென்று ஒரு குறிப்பிட்ட சாதியினரே அதிகம் உள்ளனர் என்றும் பிரசாரம் செய்கிறார்கள். இந்தப் பிரசாரத்தின் நோக்கம் என்னவென்றால், தமிழ்ச் சமுதாயம் முழுவதும் எங்கள் இயக்கத்தில் இணைந்து விடக் கூடாது என்பதுதான்.

உண்மையான செய்தி என்னவென்றால், பிரபாகரன் இந்த இயக்கத்தை முதலில் ஆரம்பித்தபோது, அவரோடு இணைந்தவர்கள் அவரது நண்பர்கள், பள்ளியில் படித்தவர்கள், உறவினர்கள் மற்றும் ஊரார்தான்.

அதுமட்டுமல்ல; இயக்கமும் வல்வெட்டித் துறையிலேயே ஆரம்பமானது. நாங்கள் வளர்ந்தோம் - பின்னர் தமிழீழத்தைச் சேர்ந்த பலர் இயக்கத்தில் இணைந்தனர். எங்கள் இயக்கத்தில் "சீனியாரிட்டிபடி' முதலில் இணைந்தவர்களுக்கு முன்னுரிமைகள் அதாவது பதவிப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இது இயல்பான ஒன்று.

முதலாவது படையணியிலுள்ளவர்கள் பயிற்சி பெற்று தளபதிகளாக இருக்கிறார்கள். ஏனைய பகுதிகளிலிருந்து வந்து சேர்ந்தவர்களுக்கு "சீனியாரிட்டிபடி' பதவிப் பொறுப்புகள் நாளடைவில் கிடைக்கும். சாதி அடிப்படையில் இயக்கம் இயங்குவதாகச் சொல்வது சுத்தப் பொய்.

பிரபாகரனுக்கும் இயக்கத்துக்கும் உறுதுணையாக பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரை மட்டும் இங்கே பார்க்கலாம்.

பேபி சுப்ரமணியம்: கிருபாகரன் என்பது இவரின் முழுப்பெயராகும். இளங்குமரன் என்றும் பிற்காலத்தில் அறியப்பட்டார். காங்கேசன் துறையைச் சேர்ந்தவர். குடும்பமே கோயில் பணியில் ஈடுபட்டிருந்தது. அம்மா, பார்வையற்ற அண்ணன், இரு சகோதரிகள் கொண்ட ஏழ்மையான குடும்பம். ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியில் பங்கு பெற்று அதன் தலைவர் செல்வநாயகத்தின் கூடவே இருந்தவர். பின்னர் பிரபாகரனுடன் இணைந்தார். விடுதலைப் புலிகளின் பிரசாரப் பணியில் இருந்தார். சாதாரணமாக இவரைப் பார்க்கும்போது "போராளி' என நினைக்கவே முடியாது. அவ்வளவு சாதுவாக இருப்பார்.

கிட்டு என்கிற கிருஷ்ணகுமார்: யாழ்ப்பாணம் தளபதியாக இருந்தவர். இவரின் தாயார் ராஜலட்சுமி தமிழரசுக் கட்சியின் மாதர் பிரிவில் தலைவராக இருந்தவர். கிட்டுவுக்கு ஒரு வயது நடக்கையில், அறப்போராட்டத்தில் அம்மாவுடன் சிறை சென்றவர் (1961இல்), பின்னர் 1987-இல் யாழ் நகரை சிங்கள ராணுவப் பிடியில் இருந்து மீட்டவர். சிங்கள ராணுவத்தை யாழ் கோட்டைக்குள்ளேயே சுருண்டு கிடக்கச் செய்தவர். ஒரு சமரில் தனது காலை இழந்தார். 1993-இல் இந்தியக் கடற்படையினரிடம் சிக்கி, மரணத்தைத் தழுவினார்.

மாத்தையா என்கிற மகேந்திர ராஜா: வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர். வெளிநாடு போக இருந்தவர் பிரபாகரனால் ஈர்க்கப்பட்டார். மென்மையாகப் பேசுவார். பிரபாகரனுடன் நீண்டநேரம் உரையாடும் உரிமை பெற்றவர்களில் ஒருவர். பிரேமதாசா-விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்கிற அரசியல் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். வவுனியா தளபதியாக இருந்தார். கிட்டுவுக்குப் பிறகு யாழ்ப்பாணப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

சங்கர்: பிரபாகரனின் பால்யகால நண்பர். மெய்க்காப்பாளர்களில் ஒருவர். வல்வெட்டித் துறையில் 1982-இல் சங்கர் தங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றி வளைத்ததும், அந்த வீட்டில் இருந்து தப்பிக்கும்போது, வயிற்றில் குண்டு பாய்ந்தது. மதுரையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பிரபாகரன் சங்கரின் கையை எடுத்து, தன் கையில் வைத்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்கையிலேயே, அந்த இருபத்திரண்டு வயது இளைஞனின் உயிர் பிரிந்தது. அவர் உயிர்த் துறந்த நவம்பர் 27-ஆம் தேதி, மாவீரர் தினமாக அறிவிக்கப்பட்டது.

கேபி (எ) பத்மநாதன்: குமரன் பத்தன், கேபி, குட்டி என்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் பத்மநாதன் மயிலிட்டியைச் சேர்ந்தவர். சர்வதேச நடவடிக்கைகளுக்காக இவர் பணிக்கப்பட்டார். ஆயுதங்கள் பற்றிய விவரம் இவரது விரல் நுனியில்; கொள்முதல் பொறுப்பாளர்.

கரிகாலன்: திருகோணமலையைச் சேர்ந்தவர். பள்ளியில் இருந்து நேரே பிரபாகரனிடம் வந்தவர். பிரேமதாசாவுடன் அமைதி உடன்பாடு ஏற்பட்டபோது எதிர்த்தவர். பிரபாகரனுடன் நேரடியாக வாதிக்கும் உரிமை பெற்றவர்.

அன்டன் பாலசிங்கம்: வடமராட்சியைச் சேர்ந்தவர். வீரகேசரி, பிரிட்டிஷ் தூதரகம் முதலியவற்றில் பணிபுரிந்தவர். அந்த வேலையை விட்டுவிட்டு லண்டன் சென்றார். அங்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். லண்டனில் மாணவர் பேரவைக் கிளையில் பங்காற்றினார். பிரபாகரன் தொடர்பு கிடைத்ததும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கை வகுப்பாளராக, அரசியல் ஆலோசகராக மாறினார். ஆங்கில வெளியீடுகள் அனைத்திலும் இவரது பார்வை இருக்கும். சமரசப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர்.

பொட்டுஅம்மான் (எ) சிவசங்கரன் சிவலிங்கம்: அரியாலையைச் சேர்ந்தவர். பதினெட்டு வயதில் இருந்தே மாணவர் பேரவையில் பங்கு பற்றினார். தெற்காசியா மட்டுமல்ல வட, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், கீழைத் தேசங்களின் அரசியலும் அத்துப்படி. புலனாய்வில் புலி. இவர் கணிப்பு என்பது இயக்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கும். பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவர், இவருக்கும் பிரபாகரன்தான் நம்பிக்கை.

சுப. தமிழ்ச்செல்வன்: தென்மராட்சியைச் சேர்ந்தவர். பின்தங்கிய சமூகத்தவர். பொதுவுடைமைவாதி. கிட்டுவுக்குப் பிறகு அதிகார பூர்வ யாழ் பொறுப்பாளர் ஆனார். அரசியல் பிரிவுக்குப் பொறுப்பாளர் ஆகி, அன்டன் பாலசிங்கத்துடன் இணைந்து பணியாற்றி பேச்சுவார்த்தைகளிலும் பங்கு பெற்றார். ஸ்ரீலங்கா ராணுவத் தாக்குதலில் மரணமடைந்தார்.

காசி ஆனந்தன்: மட்டக்களப்பைச் சேர்ந்தவர். 7 ஆண்டுகள் கண்டியிலும் கொழும்பிலும் இலங்கை அரசின் சிறைகளில் வாடியவர். தமிழீழம் என்ற சொல், தமிழ் விடுதலைப்புலிகள் என்ற இயக்கப்பெயர் யாவும் இவர் தந்தவை. பிரபாகரனின் நெருங்கிய சகா. "மாமனிதர்' என்ற பட்டம் பிரபாகரன் இவருக்கு வழங்கியது.

92: சகோதர இயக்கங்களிடையே மோதல்!

சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும் சான்று கூறும். அதேபோன்று சேர, சோழ, பாண்டிய மன்னர் வரலாற்றிலும் நாம் அறிந்திருக்கிறோம். குறுநில மன்னர்கள் காலத்திலும் இவ்விதமான யுத்தம் தொடர்ந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது மேலதிகாரம்தான் என்பதையும் காணக்கூடும். இவ்வகையான பின்னணியை மனதில் நிறுத்தி சில செய்திகளைப் பார்க்கலாம்:

""தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் வகுப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் எனப் பகிரங்கமாகக் கூறப்பட்டது. இதே கொள்கை டெலோவிடமும் இருந்தது. ஈபிஆர்எல்எப்-ஐப் பொறுத்தவரையில் மற்றைய இயக்கங்களை அழிக்கும் திட்டம் எப்போதும் இருந்திருக்கவில்லை. ஆயினும் இந்திய ராணுவத்தின் (அமைதிப்படை) வருகைக்குப் பின் அவர்கள் நடந்து கொண்டவிதம், "எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பதை உறுதி செய்தது'' என லண்டனில் இருந்து வெளிவந்த "ஈழ பூமி' என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சண் எனப்படும் சண்முகலிங்கம் கூறினார்.

""ஓர் உண்மையை நாங்கள் மறந்துவிடக் கூடாது. எமது இயக்கங்கள் மாற்று இயக்கத்துக்குப் பலியாகிப் போன சம்பவத்தில், இந்திய உளவுப் படையினரின் ("ரா' அமைப்பு) பங்கு கணிசமான அளவு இருந்திருக்கிறது. இதைப் பல இயக்கத்தவர்கள் புரிந்து கொண்டிருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் அதற்குப் பலியாகிப் போனார்கள்''

""டெலோ இயக்கத்துக்குள் தாஸýக்கும், பொபிக்குமிடையே ஏற்பட்டப் பிரச்னையில், இயக்கத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீசபாரத்தினம் விரும்பினாலும் அவரின் பரிவு பொபி மீதே இருந்தது''

""பேச்சுவார்த்தைக்கென யாழ்ப்பாணம் வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டது. 1986 மார்ச் 11-ஆம் தேதி அங்கு ஐந்து மெய்க்காவலர்களுடன் தாஸ் வந்தபோது பொபி குழுவினரால் அழிக்கப்பட்டனர்''

""(திம்புப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்) இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மூவருள் இருவராகிய சத்தியேந்திராவும், சந்திரகாசனும் டெலோ இயக்கத்தவர் ஆவர். இவர்களின் வெளியேற்றத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் காரணம் என டெலோ இயக்கத்தினர் சந்தேகப்பட்டனர்''

""இந்தக் காலகட்டத்தில் வடபகுதியில் தங்கியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரத்தினம், ராஜலிங்கம், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியவர்களைக் கொல்லும்படி ஸ்ரீசபாரத்தினம் தனது தளபதிகளுக்கு தொலைத் தொடர்பு சாதனம் மூலம் உத்தரவிட்டார்''

""வடமராட்சிக்குப் பொறுப்பானவர், துரைரத்தினத்தையும் ராஜலிங்கத்தையும் கொல்ல மறுத்துவிட்டார். ஆனால் வி.தர்மலிங்கமும், ஆலாலசுந்தரமும் வகையாக மாட்டிக் கொண்டனர் (1985 செப். 2) - என்று "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலில் புஷ்பராஜா குறிப்பிட்டுள்ளார். இவர் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும் இந்தக் குறிப்புகளை அளித்துள்ளார்.

தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் இருவரின் மரணம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக் கொலைகளைச் செய்தது யார் என்று பெரிய ஆராய்ச்சியே நடைபெற்றது. இந்தக் கொலைகளுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணமாக இருப்பர் என்றே பெரும்பாலானோர் கருதினர்.

இதுகுறித்து பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனிடம் பேசும்போது, அவர் திட்டவட்டமாக மறுத்ததாகக் கூறியுள்ளார். பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற நூலில்,

""நாங்கள் ஏன் இந்தக் கொலைகளைச் செய்ய வேண்டும். அதற்கான அவசியம் என்ன? அதிலும் தர்மலிங்கம் எங்களால் நன்கு மதிக்கப்பட்டவர். யாருக்கும் மனதாலும் தீங்கு நினைக்காதவர். எங்கள்பால் அன்பு கொண்டவர். காரணமில்லாமல் எதற்காக நாங்கள் அவரைக் கொலை செய்ய வேண்டும். இந்தக் கொலைகளை யார் செய்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் உண்மைக் குற்றவாளி பிடிபடுவார்'' என்று பிரபாகரன் கூறியதையும் எடுத்தாண்டுள்ளார்.

பின்னர் 1986-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் நடந்த மோதலில் டெலோ உறுப்பினர் பழனிவேல்-தங்கராசா என்னும் பேராளி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அவர், "தலைமையின் உத்தரவு. இது ஓர் அரசியல் தந்திரம்; விளக்கம் தேவையில்லை' என்று பொபி கூறினார்.

விசாரணையில் பழனிவேல் தங்கராசா மேலும் கூறியதாவது:

""எங்களுக்குப் பழுப்புநிற மோரிஸ் ஆக்ஸ்போர்டு கார் வழங்கப்பட்டது. நான், சிட்டிபாபு, ரஞ்சித் ஆகியோர் வலண்டையன் தலைமையில் இயங்கினோம். ஆலாலசுந்தரம் வீட்டுக்குச் சென்றோம். அவரைப் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு தர்மலிங்கத்தின் இருப்பிடத்துக்குச் சென்றோம். ஆலாலசுந்தரம் உங்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறார் என்று சொல்லி அவரையும் காரில் ஏற்றிக்கொண்டு "கோண்டாவில்' என்ற ஊருக்குப் போனோம். தர்மலிங்கத்தை சிட்டிபாபுவுடன் இறக்கிவிட்டுவிட்டு, ஆலாலசுந்தரத்தை நல்லூர் கூட்டிச் சென்றோம். அவரை நானும் வலண்டையனும் கொன்றோம். பின்னர் தர்மலிங்கத்தைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், தாவடி ரோட்டில் வைத்து அவரை சிட்டிபாபு கொன்றார்''

இந்த உண்மை வெளிவந்ததும் விமர்சனம் வேறு வகையாகத் திரும்பியது.

மதுரையில் 1986 மே 5-ஆம் தேதியன்று நடைபெற்ற டெசோ மாநாட்டின்போது, விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் ஏற்பட்ட செய்தி அறிந்து, அம்மாநாட்டின் தலைவர்கள், அங்கே இருந்த இலங்கைத் தமிழர் தலைவர்களை, ""ஒற்றுமையுடன் இருப்போம். எங்களுக்குள் மோதலில் ஈடுபட மாட்டோம்'' என்று உறுதி கேட்டார்கள். அவர்களும் அவ்வாறே உறுதி அளித்தனர். வாக்குறுதி அளித்தவர்கள் அனைவரும் மதுரையில் இருக்க, இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் உச்சகட்டத்தில் இருந்தது.

இதன் பின்னணி என்ன?

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மேஜர் அருணா 1986 ஏப்ரல் 27-ஆம் தேதி சிங்களக் கடற்படையினருடன், கடலில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார். இதையொட்டி யாழ்குடாப் பகுதியில் ஏப்ரல் 28-ஆம் தேதியன்று அஞ்சலி செலுத்தும் வகையில் வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது.

அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் சிங்களக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் 11 பேரை டெலோ இயக்கம் இழந்திருந்தது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல், விடுதலைப் புலிகள் இயக்க வீரருக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவதா எனக் கேட்டு மறுநாள் 29-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய டெலோ இயக்கம் அறிவுறுத்தியது.

இதற்கு மறுத்த கல்வியங்காட்டுப் பகுதி மீது டெலோ தாக்குதலைத் தொடுத்ததும் இதைத் தடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகள் மேஜர் பஷீர்காக்கா, லெப்டினன்ட் முரளி ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீசபாரத்தினத்தின் பழைய நண்பர் என்ற முறையில் விடுதலைப் புலிகளின் தளபதி கேப்டன் லிங்கம் பிரச்னையைப் பேசித் தீர்க்கும் நோக்கத்துடன் டெலோ முகாமுக்குச் சென்றார். ஆனால் அங்கே லிங்கம் கொல்லப்பட்டார் (தகவல்: பழ.நெடுமாறன்-பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்).

இதன் பின்னர் டெலோ இயக்கத்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல் மூண்டது. இரு இயக்கங்களுக்குமிடையே நடந்த ஒருவார மோதலில் டெலோ இயக்கத் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் உயிரிழந்தார். (6.5.1986).

இந்த மரணத்துக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட டெசோ தலைவர்கள் வருத்தமும் வேதனையும் தெரிவித்தனர். இனி டெசோ அமைப்பு இயங்காது என்று மு.கருணாநிதி அறிவித்தார். முரசொலி நாளிதழ் அவர் எழுதிய இரங்கற்கவிதையை வெளியிட்டது. ஈபிஆர்எல்எஃப் இயக்கம் மட்டும் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டதற்கு, யாழ்ப்பாணத்தில் இரங்கல் ஊர்வலம் ஒன்றை நடத்தியது.

பலத்த விமர்சனங்களுக்கான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அப்போது தமிழ்நாட்டில்தான் இருந்தார். இது குறித்து பிரபாகரன் கூறுகையில், "லிங்கத்தின் சாவுச் செய்தி வந்தபோது நானே கொதிப்படைந்தேன். களத்திலிருந்த எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவுமில்லை. லிங்கம் படுகொலை மற்றும் எங்களது முக்கியத் தோழர்கள் கைது என்பது தற்செயலாக நடந்ததாகத் தெரியவில்லை. ஆழமான சதியின் விளைவாகவே இவை நிகழ்ந்துள்ளன.

இந்திய உளவு அமைப்புகளின் தூண்டுதல் பேரிலேயே சென்னையிலிருந்த ஸ்ரீசபாரத்தினம் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருக்கிறார் என்பதும், எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. எனவே எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.

ஸ்ரீசபாரத்தினத்தையோ, டெலோ இயக்கத்தையோ திட்டமிட்டு நாங்கள் அழிக்கவில்லை. நாங்கள் முந்திக் கொள்ளாவிட்டால் எங்களை அழித்துவிட டெலோ இயக்கத்தினர் முயன்றிருப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார். (பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்- பழ.நெடுமாறன் -பக்.51).

93: பிரபாகரன் விடுத்த வேண்டுகோள்!

இப் பிரச்னைகளுக்கு நடுவே, 25-9-1987 அன்று பிரபாகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பிற இயக்கங்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்று இணைய வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுத்தார். அதன் முக்கியப் பகுதி வருமாறு:

""அன்றும் சரி, இன்றும் சரி இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்தச் சக்தி பின்னணியில் இயங்குகிறது என்பதை நான் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன்.

தமிழீழ லட்சியத்தைக் கைவிட்டு, தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அந்நிய அரசுச் சக்தி ஒன்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் துரோகத் தலைமைகளைத் தூக்கியெறிந்துவிட்டு புலிகளோடு வந்து சேருங்கள்; புலிகளாக மாறுங்கள்; புலிகளின் லட்சியப் போராட்டத்தில் அணி திரளுங்கள். நீங்கள் எந்த லட்சியத்துக்காக இந்த அமைப்புகளிடம் சேர்ந்தீர்களோ அந்த லட்சியப்பாதையில் எமது விடுதலை இயக்கமே வீறுநடை போடுகிறது. ஆகவே, தமிழீழ லட்சியப்பற்றுடைய போராளிகள் யாவரையும் நாம் அரவணைத்துக் கொள்ளத்தயார். உங்களை எமது அணியில் சேர்த்துப் போராளிகளாக கெüரவிக்கத் தயார். எமது தோழர்களாகப் பராமரிக்கத் தயார்'' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

பிரபாகரனின் வேண்டுகோள் பிற இயக்க உறுப்பினர்களைச் சிந்திக்க வைத்தது. சிலர் துணிந்து இயக்கத்தில் சேர்ந்தனர். பலர் இயக்கத் தலைமை என்ன செய்யுமோ என்று பயந்து புலிகளுடனும் சேராமல், தாங்கள் இருந்த இயக்கத்திலும் இருக்க முடியாமல் வெளியேறினார்கள்.

இந்நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்துடனான ஒரு மோதலில் சுரேஷ் என்பவர் விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டம் ஒன்று அவ்வியக்கத்துக்கு இருப்பதாகத் தெரியவந்ததையொட்டி, அந்த இயக்கத்தையும், "பிளாட்' இயக்கத்தையும், தமிழீழ ராணுவத்தையும் தடை செய்வதாக 14-12-1987 அன்று புலிகள் இயக்கம் அறிவித்தது. இந்த அறிவிப்பையொட்டி, "பிளாட்' இயக்கமும் தமிழீழ ராணுவமும் தனது இயக்க வேலைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.

ஈ.பி.ஆர்.எல்.எஃப்.க்கும் புலிகளுக்கும் அவ்வப்போது மோதல்கள் எழுந்து கொண்டே இருந்தன. ஆக, ஈ.என்.எல்.எஃப். என்கிற அமைப்பு திம்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரே ஆண்டில் சிதைந்துவிட்டது.

பிரபாகரனின் தலைமையில் இயங்கும் விடுதலைப் புலிகள் எப்போதும் சிங்களவர்களிடம் விரோதம் பாராட்டியதில்லை. அப்பாவி சிங்கள மக்களைத் தாக்குவதில்லை என்கிற கொள்கையை அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். தமிழர் பகுதிகளில் அமைந்திருந்த ராணுவ முகாம்களில் சிங்களச் சிப்பாய்கள் பலமாதம் அடைபட்டுக்கிடந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்டான குடிநீர்த் தேவைகள், உணவு சமைக்க விறகு முதலியவற்றை அவ்வீரர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அளித்து உதவியிருக்கிறார்கள்.

இலங்கை மக்கள் கட்சித் தலைவரான விஜயகுமாரணதுங்கா யாழ்ப்பாணத்துக்கு இருமுறை வந்தார். முதல் தடவை யாழ் கோட்டையில் அடைபட்டுக்கிடந்த சிங்கள ராணுவக் கைதிகளைப் பார்க்க வந்தார். யாழ் தளபதியாக இருந்த கிட்டு அவரை அனுமதித்தார். சிங்களக் கைதிகளுடன் தாராளமாகப் பேச அவர் அனுமதிக்கப்பட்டார்.

அதேபோன்று இரண்டாவது முறையும் சில புத்தபிக்குகள், பத்திரிகையாளர்கள் சகிதம் அவர் வர விரும்பினார். சிங்கள அரசு அவர்கள் யாழ்ப்பாணம் செல்லத் தடை விதித்ததே தவிர, விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை வரவேற்றது.

அவர்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தின் தளபதி கிட்டு பேசும்போது, ""நாங்கள் எங்களது உரிமைக்காகவே போராடுகிறோம். எந்த சிங்களப் பகுதியையும் நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை. எங்களது இயக்க வீரர்கள் தாமாக முன்வந்து உயிரைத் தியாகம் செய்கிறார்கள். ஆனால் ராணுவத்தினர் தங்கள் உழைப்புக்காகச் சம்பளம் பெறுகிறார்கள். அதற்காகவே ராணுவத்தில் அவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். போர் நடவடிக்கைகளில் வீரர்கள் கைது செய்யப்படுவது நடக்கக்கூடியதுதான். யாழில், மன்னாரில் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களை நிபந்தனை எதுவுமின்றி நாங்கள் விடுவித்தோம். ஆனால் எமது உறுப்பினர்கள் 19 பேரும், ஆயிரக்கணக்கான தமிழர்களும் இன்று சிறையில் வாடுகிறார்கள். அவர்களில் இரு வீரர்களை விடுவிக்கும்படி கேட்கிறோம். யுத்தக் கைதிகளைப் பரிமாற்றம் செய்வது நடைமுறையில் உள்ளது. ராணுவத்தில் ஒவ்வொரு சிப்பாயும் மரியாதை இழக்கின்றனர். முன்பு விஜயகுமாரணதுங்கா இங்கு வந்த பின்னர்தான் தெற்கில் உள்ள மக்களுக்கும் உலகுக்கும் இந்தப் பிரச்னை தெரியவந்தது. நாங்கள் குருமாரையும் உங்களையும் கேட்பது என்னவென்றால், நீங்கள் அரசை நிர்ப்பந்தித்து வீரர்களை விடுவிக்கச் செய்யுங்கள்'' என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த விஜயகுமாரணதுங்கா, ""தமிழ்ப் போராளிகளின் மீது நம்பிக்கை வைத்து, வடக்கிலும் தெற்கிலும் இருக்கக்கூடிய உரிமை மறுக்கப்பட்ட மக்களின் பொதுப்போராட்டத்தில் வடக்கு-தெற்கு பாலம் ஒன்றை அமைப்பதே எமது பிரதான நோக்கம்'' என்றார்.

இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இரு சிங்களக் கைதிகளான லெப்டினன்ட் சந்திரஸ்ரீ, பாந்தரா ஆகிய இருவரையும் டிசம்பர் 19, 1986, காலை 8-10 மணிக்கு சிங்கள கேப்டன் கொத்லவாலாவிடம் ஒப்படைத்தனர். பதிலுக்கு சிங்களத் தரப்பில் மேஜர் அருணா மற்றும் ஒரு போராளி ஆகிய இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சி யாழ் கோட்டைக்கு வெளியே நடைபெற்றது. இதில் கையளிக்கப்பட்ட மேஜர் அருணா, கடற்படைத்தாக்குதலில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அவரது மரணத்துக்கு இரங்கல் மற்றும் வேலைநிறுத்தம் எல்லாம் நடைபெற்று முடிந்த நிலையில் அவர் உயிருடன் இருந்தது தெரியவந்தது. அவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவரது முகமும் தீக்காயங்கள் ஏற்பட்டு கருகிய நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில் அவர் கடற்படையினரால் பிடிக்கப்பட்டபோது, அவர் தன்னைப் படகோட்டி என்று கூறியதுடன், தனது பெயர் செல்வசாமி செல்வகுமார் என்றும் தெரிவித்திருந்தார். இவ்வகையாகப் பிடிபட்ட அனைவரும் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பல வாரங்கள் கழித்து அருணா இறக்கவில்லை என்று தெரியவந்ததும், கைதிகள் பரிமாற்றத்தில் எந்தக் கைதியை விடுவிக்க வேண்டும் என்று பேசப்பட்டபோது "செல்வகுமார்' என்று தெரிவிக்கப்பட்டார். அருணா உயிருடன் இருக்கிறார்; அவர் பெயர்தான் செல்வகுமார் எனத் தெரியவந்தால் சிங்களப்படை மறுக்கும் என்று தெரிந்தே இந்தப் பரிவர்த்தனை நடைபெற்றது.

அதே போன்று விடுதலைப் புலிகள் தரப்பில் கையளிக்கப்பட்ட லெப்டினன்ட் சந்திரஸ்ரீயும் மன்னாரில் நடைபெற்ற தாக்குதலில் இறந்துபோனதாக முன்பே அறிவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்களக் கைதிகளை அழைத்துச் செல்ல பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலியே வந்திருந்தார். (ஆதாரம்: பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்).

சிங்களவர்களின் போக்கு எப்போதும் தமிழருக்கு எதிராகவே இருந்தது. இதுகுறித்து பிரபாகரன் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த காலத்தில் எல்லாம் எங்கள் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அக்கறை காட்டவில்லை.

எங்களின் ஆயுதப் போராட்டம் விரிவடைந்ததே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக்காலமான 1972-ஆம் ஆண்டில்தான். அப்போது அவர் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினார். அந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஏற்கெனவே தமிழர்கள் அனுபவித்த கொஞ்சநஞ்ச உரிமைகளும் பறிக்கப்பட்டன.

இடதுசாரிகளை நாங்கள் நம்பலாம் என்றால் அதற்கும் சாத்தியமில்லாது போயிற்று. 1972-ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கு அவர்கள் முட்டுக் கொடுத்தனர். லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பீட்டர் கெனமன் இருவரும் ஸ்ரீமாவோ ஆட்சியில், கூட்டணி அரசின் அங்கமாக இருந்தபோதுதான் இந்த அநியாயம் நடந்தது. இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவரே பழம்பெரும் இடதுசாரியான கொல்வின் ஆர்.டி.சில்வாதான். இந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் தரமாட்டோம் என்று தமிழர் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தார்கள். இதற்கு ஒத்துழைத்த ஒரு சில தமிழ்த் துரோகிகளும் இருக்கத்தான் செய்தார்கள்.

தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர் மத்தியில் ஒரு சிங்களவர் அல்லது ஒரு கட்சி ஆதரவு நிலை எடுத்தால், அங்கே அந்தக் கட்சியும் அவரும் இயங்க முடியாது என்று காட்டினார்கள். இதற்கு விஜயகுமாரணதுங்காவின் கட்சியே சாட்சியாக இருக்கிறது. அவர்கள் மேடையிட்டுப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. விஜயகுமாரணதுங்காவே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் இதர சிங்கள அரசியல் கட்சிகளை நாம் மட்டும் எப்படி நம்பமுடியும்' என்றார். (இந்து நாளிதழ் பேட்டி, 4,5 செப்டம்பர் 1986).

கேள்வி : எதிர்காலத் தமிழீழத்தில், "ஒரு கட்சி ஆட்சிதான் இருக்கும். சர்வாதிகாரம் தலைதூக்கும்' என்றெல்லாம் கூறி உங்களது இயக்கத்தை ஆதரிக்கலாமா என்று ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பிரபாகரன் :"எமது மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்து எமது அரசு அமையும். மக்களுக்கு விருப்பமான கட்சியை அவர்கள் தேர்வு செய்வார்கள். இந்தியாவில் மிக நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சிதானே ஆட்சி செய்தது. போராட்டத்தில் பங்குகொள்ளாதவர்களே இதுபோன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பங்களிப்பு எதுவும் செய்யாது, அதே நேரத்தில் களத்தில் விலகி நின்றுகொண்டு, தலைமைப் பதவியை அடையக் கனவு காணும் சிலரின் மனதிலேயே இந்த அச்ச உணர்வு தலைதூக்கியுள்ளன.'

கேள்வி : தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் சித்தாந்தம் என்ன?

பிரபாகரன் : சோசலிசமும் - தமிழீழமும். இவை குறிக்கோள், அடிப்படைக் கோட்பாடு.

கேள்வி : தமிழீழ விடுதலைப் புலிகள், டெலோ இரண்டும் தேசியவாதக் கோட்பாட்டில் இயங்கும் கட்சிகள் என்றும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் இரண்டும்தான் சோசலிச சித்தாந்தத்தில் பிறந்தவை என்றும் வேறுபாடு உள்ளதே?

பிரபாகரன் : சித்தாந்த ரீதியில் எல்லா இயக்கங்களும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஆனால், நடைமுறையில்தான் அதன் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். சோசலிசம் என்பது இன்று பல ரகங்களைக் கொண்டதாக இருக்கிறது. சோசலிசத்திற்கு ஒருவர் அளிக்கும் விளக்கத்திலிருந்தும் அதை நடைமுறைப்படுத்தும் தன்மையிலிருந்தும் அதன் வேறுபாடுகள் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

இன்று எல்லோரும் தம்மை ஒரு சோசலிசவாதி என்றே கூறிக்கொள்கிறார்கள். ஜெயவர்த்தனா கூட ஒரு காலத்தில் அப்படிக் கூறிக்கொண்டு, இடதுசாரி நூல்களை விற்று வாழ்க்கையை நடத்தியவர்தான். ஆக, சோசலிசம் பேசுகிற ஒருவர் அதை நடைமுறைப்படுத்தும்போதுதான், தன்மை வெளியாகும்.

எமது மக்களின் விருப்பங்களையும், நலன்களையும் முழுமையாகப் பேணும் ஓர் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைக் கட்டியமைப்பதே எமது லட்சியம். எமது கலாசாரம், எமது பாரம்பரியம், எமது வரலாறு ஆகியவற்றுக்கு உகந்ததாக அந்தச் சமுதாய அமைப்பு அமைய வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு ஒரு கனவு உண்டு. அதனைச் செயல்படுத்தவே சிந்திக்கிறோம்; போராடுகிறோம். எங்கள் சமுதாயத்திட்டத்தில் பெருமுதலாளிகள் இருக்கமாட்டார்கள்; நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பர்.

மலையகத் தமிழர் பற்றியும் கிழக்கு மாகாணம் குறித்தும் பிரபாகரன் குறிப்பிடுகையில், "தமிழ்த் தேசியம் என்று நாம் குறிப்பிடும்போது வடக்கு-கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி, தென்னிலங்கையில், குறிப்பாக மலையகப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்துவரும் பாட்டாளி மக்களையும் நாங்கள் குறிக்கிறோம். எங்களது தமிழ்த் தேசிய அமைப்பில் மலையகத் தமிழர், இஸ்லாமிய, கிறிஸ்தவ, சைவ மதங்களைச் சார்ந்தவர்களும் மதச்சார்பு அற்றோருமான தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அடங்குவர். தமிழீழம் எனும்போது, தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான அமைப்பையே குறிக்கிறோம்' (வே.பிரபாகரன்-சோசலிச தமிழீழத்தை நோக்கி - பக்.28-29/ ஆதாரம்"" பழ.நெடுமாறன்).

கேள்வி : "உங்களது இயக்க ஆட்கள் சயனைட் குப்பியைக் கழுத்தில் அணிந்திருப்பதாகக் கூறுகிறார்களே?'

பிரபாகரன் : "உண்மைதான். இயக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்தே இதை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதுவே எங்களின் பலம். இதுவே எங்கள் உயிருமாகும். இந்தக் குப்பி எங்கள் கழுத்தில் இருக்கும்வரை எங்களுக்கு வெற்றி ஒன்றே குறி. அதை அடையவே தீவிரம் காட்டுவோம். அதை அடைய முடியாத நிலை வரும்போது, அந்தப் போராளி மற்றவரைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்கிற நிலையில் - அந்தக் கட்டம் வரும்போதுதான் சயனைட் குப்பியைக் கடிப்பார். இல்லையென்றால் எமக்கு உறுதுணையாக இருந்த பலரும் அவர்களது குடும்பமும் சிங்களச் சிறைகளில் சிக்க வேண்டியிருக்கும். எங்கள் தோழர்கள் பலர் இவ்வகையில் தியாகிகளாய் உயிர்விட்டிருக்கிறார்கள். எங்களது இயக்க ஆட்களை நீங்கள் சிறைகளில் அதிகம் பார்க்க முடியாது. எதிரிகளிடையே ஊடறுத்து முன்னேறிக்கொண்டே இருப்பவன்தான் சயனைட் போராளி' என்றார்.

94 : பாதகத்தை சாதகமாக்கிய ஜெயவர்த்தனா!

"ஆபரேஷன் லிபரேஷன்' வெற்றியானது சிங்களவர்களைச் சந்தேக மனநிலையிலிருந்து விலக்கி, புளகாங்கித நிலைக்கு ஆளாக்கியது. செஞ்சிலுவைச் சங்கத்தினரை ஏற்றி வந்த இந்திய மீன்பிடிக் கப்பல்கள் சாதுவாகத் திரும்பிச் சென்றபோது சிங்களவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தையே அடைந்தனர். மூத்த அரசியல்வாதிகளால் விடப்பட்ட வீரதீர அறிக்கைகளும், பத்திரிகைப் பத்தி, எழுத்தாளரின் புகழ்ச்சிகளும் அன்றைய நாள்களை ஆட்சி கொண்டிருந்தன.

இந்தியா விமானத்திலிருந்து நிவாரணப் பொட்டலங்களைப் போட்டதுடன், சிங்கள மக்களின் புத்துணர்ச்சி பெற்ற சந்தோஷம் மிக வெறுப்புக் கலந்த கடுங்கோபமாக மாறியது. (முறிந்த பனை-பக்.158). சிங்கள மக்களும் செய்வதறியாது திகைத்தனர். உலகத்தின் பார்வையில் இலங்கைக்கு எவ்வளவு கீழிறக்கம் ஏற்பட்டிருக்கிறது எனக் கண்டு அதிர்ந்தனர்.

இந்நிலையில், 1987 ஜூலை 19-ஆம் தேதியிட்ட, இலங்கை அரசின் ஆதரவு மற்றும் யதார்த்த நிலையைத் துணிந்து எழுதும் பத்திரிகை எனப் பெயரெடுத்த "வீக்எண்ட்' சில மனப் பதிவுகளை வெளியிட்டது. அதுபோன்ற ஒரு கட்டுரையில் குமுதினி ஹெட்டியாராட்சி என்பவர் எழுதிய ஒரு கட்டுரை சிங்களவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைக்குத் தலைப்பு "நான்காண்டுகளுக்குப் பின்னும் அதே நிலையா?' என்பதாகும். கட்டுரையின் முக்கிய பகுதிகளைப் பார்க்கலாம்:

""நான், பிரிட்டன் சென்றபோது, பலரைச் சந்தித்து, எமது இனப்பிரச்னை குறித்து கலந்துரையாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றேன். என் முன்னே இருந்த பலர், பல்வேறு தேசிய இனப் பிரச்னைகள் பற்றிய தெளிவான கருத்துக்கொண்டவர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் சொன்னார், நாம் ராணுவத் தீர்வுக்கும் அரசியல் தீர்வுக்குமிடையே ஊசலாடுகிறோம் என்று. அவர்களது பொதுவான கருத்து அதுவே ஆகும்.

ஸ்ரீலங்கா, இனப்பிரச்னையை நிரந்தரமாகத் தீர்ப்பதில் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதா என அவர்கள் என்னிடம் பல சந்தர்ப்பங்களில் வினவினார்கள். விடாப்பிடியான போக்கு இலங்கையில் இனப் பிரச்னையை ஒருபோதும் தீர்க்காது என்றும், இனப் பிரச்னைக்குத் தீர்வு அரசியல் தீர்வே என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.

இன்றைய நிலையில், "ஆபரேஷன் லிபரேஷன்' பிழையான அறிவுறுத்தலால் நடத்தப்பட்ட முயற்சியென அவர்களால் கருதப்பட்டது. பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எல்லோரும் விரும்பும் சமாதான முறைகளைக் கையாண்டு இழந்துபோன சில கெüரவங்களை மீட்டுப் பெறுவதில் ஸ்ரீலங்கா அரசு அக்கறை கொள்ளவேண்டும். இந்த அரசியல் தீர்வு என்கிற முடிவு உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆக்ஸ்போர்டு நகரில் எனக்குத் தெரிந்த குடும்பம், பிபிசியிலே வெளிவந்த போர்க்காட்சிகளைப் பார்த்த பாதிப்பில், "எவ்வாறு சிங்கள அரசு இவ்வளவு மிருகத்தனமாக நடந்துகொள்ளமுடியும்?' என்று என்னைக் கேட்டது. அந்த வீட்டுத்தலைவர் வடக்கிலே குண்டுமழை பொழிவதாகக் கூறினார். பிபிசி செய்தியாளர், "தீக்காயங்களுடன் காட்டப்பட்ட குழந்தைகள் பற்றி என்ன கூறுகிறீர்?' எனக் கேட்டார்.

உங்கள் நாட்டிலே வியத்நாம் பாணி போர் உத்திகளைக் கையாளுமாறு உத்தரவிட்டவர் யார்? இதற்கு யார் பொறுப்பு? இரவு உணவுக்காக பல நாட்டுப் பத்திரிகையாளர்களுடன் உணவருந்த என்னையும் அழைத்திருந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் என்னைக் குடைந்து எடுத்தார்.

இது கேட்ட ஒரு பத்திரிகையாளர், "இலங்கை ஒரு பூலோக சொர்க்கம். மற்ற எல்லாம் நல்லவையாக இருக்க, மனிதன் மட்டுமே கெட்டவனாக இருக்கிறான் என்பதற்கு ஸ்ரீலங்கா ராணுவம் நடந்துகொள்ளும் விதமே சான்றாக உள்ளது' என்றார்.

நாம் விரைவான-அமைதியான நல்ல தீர்வுக்கு வருவது அவசியமானாதும் முக்கியமானதும் ஆகும்; இதற்குத் தேவைப்படுவது நேர்மையும் நம்பிக்கையும்தான்'' என்ற குமுதினியின் விருப்பம், ஸ்ரீலங்கா அரசுத் தரப்பில் பல தாக்கத்தை ஏற்படுத்தியது.

விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்களை யாழ் பகுதிகளில் போட்டது முதல், இந்தியா, இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கிற முக்கிய நாடாயிற்று. இந்த விஷயத்தை ஜெயவர்த்தனா விரும்பினார் இல்லை. ஆனால், இந்தப்போக்கை அவரால் தடுக்கமுடியவில்லை.

காரணம், ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஸ்ரீமாவோ காலத்தில் பணியமர்த்தப்பட்டனர் என்ற காரணத்தால், அவர்கள் ஜெயவர்த்தனா மீது எப்போதுமே கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், யாழில் இந்தியா உணவுப் பொட்டலங்களைப் போட்டதை இலங்கை கடுமையாகக் கண்டிக்கவேண்டும் என்றும், ஏதேனும் ஒரு தாக்குதலை நடத்தவேண்டும் என்று அவர்கள் குமுறினார்கள். அந்தப் பிரிவினர் ராணுவத் தலைமைக்குக் கட்டுப்படாமல் புரட்சியில் இறங்கிவிடுவார்களோ என்றும் ஜெயவர்த்தனா பயந்தார்.

புத்த பிக்குகளும், ஜேவிபியினரும் கையாலாகாத அரசு என்று விமர்சனம் செய்தனர். இதற்கு முன்பே அங்கு வன்முறை தீவிரமான நிலையில், இந்தியாவின் நடவடிக்கையும் சேர்ந்தது. இலங்கையின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. எதிர்க்கட்சிகளோ அரசைக் கலைத்து உடனே தேர்தலை நடத்த வலியுறுத்தின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்னும் நிலையைப் பெறவேண்டிய நெருக்கடியும் அவருக்கு ஏற்பட்டது.

இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவுடன் ஜெயவர்த்தனாவால் முரண்பட முடியவில்லை. காரணம், இந்திய உணவுப் பொட்டலங்கள் போட்டதை "அத்துமீறல்' என்று குரல்கொடுத்தும் நட்பு நாடுகள்கூட வாய்திறக்காததால் மிகுந்த வேதனைக்கும் வெறுப்புக்கும் அவர் ஆளானார்.

அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் தப்பிக்கவேண்டுமானால், இந்தியாவின் பங்கை ஏற்கவேண்டும் என்று முடிவு எடுத்ததுடன், எது பாதகமானதோ, அதைப் பற்றிக்கொண்டு அதிலிருந்து சாதகம் பெறத் திட்டம் தீட்டினார்.

"ராணுவத்தின் மூலமே தீர்வு என்றும், ஒன்று புலிகள் வெற்றிபெறவேண்டும் இல்லையென்றால் அரசாங்கம் வெற்றிபெற வேண்டும். இறுதிவரை போர்தான் - சமாதானம் இல்லை' என்று அடம்பிடித்த ஜெயவர்த்தனா ஏதேனும் ஓர் ஒப்பந்தத்துக்காகத் துடித்தார். "இறுதிவரைப் போர்' என்கிற வார்த்தைப் பிரயோகம் இலங்கையின் இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் எழுதிய, "அசைன்மெண்ட் கொழும்பு' நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகமாகும்.

இந்தக் குழப்பமான நிலையில் யாழ்த்தளபதி கிட்டு வாகனத்தின் மீது குண்டுவீசப்பட்டது. இதில் படுகாயமுற்ற கிட்டு, இறுதியில் தனது கால்களில் ஒன்றை இழந்தார். மருத்துவத்துக்காக அவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.

ஜெயவர்த்தனா தனக்குப் பிடிக்காத வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பை ஏற்றுக்கொண்டார். இந்தியா-இலங்கை என இரு அரசுகள் மட்டத்தில் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதிகாரிகள் கொழும்புவுக்கும் தில்லிக்குமாகப் பறந்தனர். இந்தப் பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட தமிழர்களின் பிரதிநிதியான விடுதலைப் புலிகள் அமைப்பை எந்தவிதத்திலும் கலந்து ஆலோசிக்கவில்லை.

இந்த நிலையில், அன்டன் பாலசிங்கத்தை தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சந்திக்க விரும்புவதாகக் கூறி அவரைக் காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

அங்கே முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இருந்தார். புன்முறுவலுடன் எம்.ஜி.ஆர். வரவேற்று பாலசிங்கத்தை அமரச் சொன்னார். அவர் உட்கார்ந்ததுமே ப.சிதம்பரம் கடுமையாகப் பேசினார் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நன்றியுள்ளவர்கள்தானா என்றும், இந்தியா மற்றும் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் குறித்தும், இலங்கை இனப்பிரச்னைத் தீர இந்தியா எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் குறிப்பிட்ட அவர், "இப்பொழுது பிரபாகரன் எங்கே? திடீரென மாயமாக மறைந்துவிட்டார். யாருக்கும் தெரிவிக்காமல் யாழ்ப்பாணம் சென்றுவிட்டாராமே? எங்களுக்குத்தான் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டு அரசுக்காவது, முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்காவது தெரிவித்திருக்கலாமே?' என்று கேட்டதாகவும் பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாலசிங்கம் மேலும் குறிப்பிடுவதாவது:

""எண்பத்துமூன்றாம் ஆண்டின் இறுதியிலிருந்து பல ஆண்டுகள் பிரபாகரன் இந்தியாவில் கழித்துவிட்டார். அவர் இங்கு தஞ்சம் கேட்டு வரவில்லை. ராணுவப் பயிற்சித்திட்டம் சம்பந்தமாக இந்திய அரசின் அழைப்பின் பேரில் அவர் இங்கு வந்தார். வந்த இடத்தில் பல கசப்பான அனுபவங்களையும் பெற்றார். இப்பொழுது போராட்டக்களத்துக்குச் செல்லவேண்டிய காலமும் வரலாற்றுத் தேவையும் அவருக்கு ஏற்பட்டுவிட்டது.

தமிழீழக் களத்திலிருந்துதான் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தை அவர் முன்னெடுக்க விரும்புகிறார். அதனால்தான் அவர் தாயகம் செல்லவேண்டியதாயிற்று.

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்வது மிகவும் ஆபத்தான பயணம். தரைப் பாதை மட்டுமன்றி, கடல் கடந்தும் செல்லவேண்டும். பிரபாகரனுக்குப் பல எதிரிகள் இருக்கிறார்கள். அவருக்கு விரோதமாகப் பல சக்திகள் செயல்படுகின்றன. ஏனைய போராளி அமைப்புகளும் அவரைப் பழிதீர்க்க வெறிகொண்டு அலைகின்றன. இப்படியான சூழ்நிலையில் பிரபாகரனின் பாதுகாப்பு கருதியே அவரது பயணத்தை ரகசியமாக வைத்திருக்க எமது இயக்கம் முடிவெடுத்தது'' இப்படியான ஒரு விளக்கம் கொடுத்தேன்.

அமைச்சர் சிதம்பரம் என்னை விட்டபாடில்லை. ""சரி, பிரபாகரன்தான் பாதுகாப்புக் கருதி அவசரமாக, ரகசியமாக யாழ்ப்பாணம் போய்விட்டார். நீங்களாவது முதலமைச்சருக்கு அத்தகவலைத் தெரிவித்திருக்கலாம் அல்லவா?'' என்று கூறி என்னை மடக்க முயன்றார்.

முதலமைச்சரும் என்னைக் கேள்விக்குறியுடன் நோக்கினார்.

முதலமைச்சரைப் பார்த்து சொன்னேன், "சார்! பிரபாகரன் யாழ்ப்பாணம் சென்றது உண்மையில் எனக்கும் தெரியாது. அவர் எனக்கும்கூடத் தெரியப்படுத்தவில்லை. மிகவும் ரகசியமான காரியங்களை ரகசியமாகச் செய்து முடிப்பதுதான் எமது இயக்கத்தின் மரபு. நேற்றுதான் எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தகவல் அனுப்பியிருந்தார், பிரபாகரன். உங்களுக்கு அறிவிப்பதற்கு முன்னதாக நீங்கள் என்னை இங்கு அழைத்துவந்துவிட்டீர்கள்' என்றேன்.

முதலமைச்சருக்கு நிலைமை புரிந்தது. பிரபாகரன் தாயகம் திரும்பியதன் அவசியத்தை அவர் உணர்ந்துகொண்டார். அந்தப் பயணம் குறித்து ரகசியம் பேணப்பட்டதையும் அவர் புரிந்துகொண்டார்.

""பிரபாகரன் செüக்கியமாக இருக்கிறாரா?'' என்று கேட்டார். தொடர்ந்து, "அவரைப் பாதுகாப்பாக இருக்கச்சொல்லுங்கள்; நான் விசாரித்ததாகவும் சொல்லுங்கள்' என்றார்.

95: பாதுகாப்பு வளையத்தில் பிரபாகரன்!

திடீர் திருப்பமாக இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் ஹர்தீப் பூரி, யாழ்ப்பாணத்துக்கு ஜூலை 19, 1987 அன்று வருகை தந்தார். அவருடன் வேறு சிலரும் வந்து விடுதலைப் புலிகள் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பிரபாகரனைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மிகவும் அவசரமான சந்திப்பு எனவும் தெரிவித்தனர். உடனே பிரபாகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடு நடைபெற்றது.

சந்திப்பின்போது பிரபாகரனுடன் யோகி (எ) யோகரத்தினமும் இருந்தார். பூரி, அவர்களிருவரிடமும், இந்தியா-இலங்கைக்கு இடையே ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கையெழுத்திடும் முன்பாக பிரபாகரனைச் சந்திக்க பிரதமர் ராஜீவ் காந்தி விரும்புகிறார் என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிரபாகரன் மேலும் கேட்டதற்கு, அதுபற்றிய விவரங்களை பிரதமர் தெரிவிப்பார் என்றும், விவரம் குறித்து அவரிடம் விவாதிக்கலாமென்பதையும் பூரி தெரிவித்தார்.

பிரபாகரனும் யோகியும் இதுகுறித்து தங்களுக்குள்ளே யோசிக்கவும், "இதுபற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். மிக முக்கியமான விஷயம். இதைத் தவறவிட வேண்டாம்' என்று பூரி அவர்களைச் சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார்.

பிரபாகரன் தில்லிக்குச் செல்ல ஒத்துக்கொண்டார். அதே வேளையில் அன்டன் பாலசிங்கமும் எங்களுடன் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். பூரி தில்லிக்குத் தொடர்புகொண்டு பாலசிங்கம் உடன் இருப்பதற்கான உறுதியைப் பெற்றார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் கலந்தாலோசனை நடத்துவதற்காக பாலசிங்கத்தை, காவலர்கள் குழு ஒன்று அழைத்துச் சென்றது. அங்கே அவருக்கு யாழ்ப்பாணத்திலிருந்து பிரபாகரனும் மற்றவர்களும் சென்னை வருகிறார்கள் என்றும் அவர்களுடன் விமானநிலையத்தில் சேர்ந்துகொண்டு டெல்லி செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. (சுதந்திர வேட்கை நூலில் அடேல் பாலசிங்கம்-பக்.170)

அடுத்த நான்கு நாட்கள் கழிந்த பின்னர் ஜூலை 23-ம் தேதி, யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோயில் திடலில் இரு ஹெலிகாப்டர்கள் வந்து தரையிறங்கின. ஹெலிகாப்டரில் ஏறும் முன்பாக விடுதலைப் புலிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எழுந்துள்ள ஒப்பந்தத்தை முன்னிட்டு இந்தியா செல்கிறேன். அது ஒப்பந்தமோ அல்லது வேறு எதுவுமோ, எதுவாக இருந்தாலும் தமிழீழ மக்களின் நலன் காக்கப்படும் விதத்தில் அமைந்தால் மட்டுமே ஏற்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அங்கு வந்திருந்த பூரியிடம், "எந்த நிலையில் எங்களது தலைவரையும் தளபதிகளையும் உங்களிடம் ஒப்படைக்கிறோமோ அதே நிலையில், அவர்களை இங்கே கொண்டுவந்து சேர்க்கவேண்டும்' என்று வலியுறுத்திக் கூறினார்கள்.

அவரும் அவ்வாறே இந்தியா நடந்துகொள்ளும் என்று உறுதியளித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், யோகி (எ) யோகரத்தினம், யாழ்ப்பாணம் அரசியல் செயலாளர் திலீபன் ஆகியோரையும் மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் நோக்கிப் பறந்தது.

விமானநிலையத்தில் இவர்கள் வருவதற்கு முன்பாகவே அன்டன் பாலசிங்கம் வந்திருந்தார். அங்கு பாலசிங்கத்தைச் சந்தித்ததும், "இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்படுத்தவிருக்கும் ஒப்பந்தம் குறித்துத் தெரிவிக்கவும், ஆலோசிக்கவும் என்று வரச்சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயம் எதுவும் தெரியவில்லை. பூரியிடம் கேட்டால் அதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார். அவர் திரும்பத் திரும்பச் சொல்வது தில்லியில் இந்தியத் தூதர் உங்களுக்கு விளக்குவார் என்பதுதான்' என்று பிரபாகரன் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் விமானத்தில் தில்லி கிளம்பினர். சில மணி நேரங்களில் தில்லி வந்ததும், அவர்கள் தங்குவதற்காக ஒரு தளமே நட்சத்திர ஓட்டலான "ஓட்டல் அசோகா'வில் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் 513 எண் கொண்ட அறைக்கு பிரபாகரன் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஓட்டலின் வெளியே கருப்புப்பூனைப் படை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட பிரபாகரன் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே, "உங்களது பாதுகாப்புக்காகத்தான்' என்றார்கள். இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை இருந்த தளத்திலும் கருப்புப்பூனை அதிரடிப்படையினர் காவல் காத்தனர். அவர்கள் கைகளில் உயர்ரக ஆயுதங்கள். ஓட்டலின் அறையில் காலடி எடுத்துவைக்கும்போது, "உச்சகட்ட பாதுகாப்பில் இந்த அறையில் தங்குகிறீர்கள். அனுமதியின்றி இங்கிருந்து நீங்கள் வெளியேற முடியாது. யாரையும் சந்திக்கவும் முடியாது. அறையிலுள்ள டெலிபோன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன' என்று உடன் வந்த அதிகாரி தெரிவித்தார்.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அடுத்தடுத்த சம்பவங்களை எதிர்கொள்ளும் நிலைக்குப் பிரபாகரனும் மற்றவர்களும் ஆளானார்கள்.

"பாலா அண்ணே, இந்த தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு என்பது நமக்கு வைக்கப்பட்ட பொறி' என்று பிரபாகரன் சொன்னார்.

சற்று நேரத்தில் இலங்கையின் இந்தியத் தூதராக இருந்த ஜே.என்.தீட்சித் அவர்களின் அறைக்குள் நுழைந்தார். அவரது முகம் இறுகின நிலையில் இருந்தது. சோபாவில் அமர்ந்தார். தனது பாக்கெட்டிலிருந்து "பைப்'பை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு புகையிலைத் துகள்போட்டு பற்றவைத்துக்கொண்டார். இரண்டு மூன்று தடவை புகையை இழுத்து வெளியேவிட்டார்.

பிரபாகரன் உள்ளிட்டோர் இவரது செயலையே பார்த்துக்கொண்டிருந்தனர். எதுவும் பேசவில்லை. அவர் சொல்லப்போகும் செய்தியை அறிந்துகொள்வதில் அவர்களிடையே ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் அவர் வாய்திறந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்படப்போவதாகவும், விரைவில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பு செல்லவிருப்பதாகவும், அவ்வொப்பந்தம் தமிழர்களுக்கு நியாயமான தீர்வாக இருக்கும் என்றும், தெரிவித்துக்கொண்டே வந்தவர், ""நீங்கள் இந்த ஒப்பந்தத்தை கட்டாயம் ஆதரிக்கவேண்டும்'' என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, ""இதோ அவ்வொப்பந்தத்தின் ஆங்கிலப் பிரதி'' என்று பாலசிங்கத்திடம் நீட்டி, ""இதனைப் பிரபாகரனுக்குத் தமிழ்ப்படுத்திச் சொல்லுங்கள். நான் இன்னும் இரண்டுமணி நேரத்தில் திரும்பி வருவேன். வரும்போது நீங்கள் இதன்மீது சாதகமான முடிவொன்றைத் தெரிவிக்கவேண்டும்'' என்று கூறிவிட்டு, அவர் அந்த அறையைவிட்டு வெளியேறினார்.

1. ஒப்பந்தத்தில் இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஒருமைப்பாடு வலியுறுத்தலும்,

2. தமிழ் பேசும் மக்களுக்கான மாகாண சுயாட்சி

3. இந்தியாவின் பாதுகாப்பு அக்கறைகள்

4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்

5. வடக்கு-கிழக்குப் பகுதிகள் இணைப்புக்கு மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு.

போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டிருந்தது அந்த ஒப்பந்தம். சாதகமான அம்சம் என்னவென்றால் வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பு ஏற்றுக்கொண்டமைதான். மற்றொன்று போராளி இயக்கங்களை அங்கீகரித்ததும் அதன் உறுப்பினர்களைப் "போராளிகள்' என்றழைத்தது ஆகும். மத்திய அரசின் அதிகாரங்களை வலியுறுத்தும்போது வெளிப்படையாகவும், வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பு -விஷயத்தில் பூடகமாகவும் செய்திகள் உள்புகுந்திருந்தன. மொழி விஷயத்தில் சிங்களம் மட்டும்- ஆனால் தமிழும் ஆங்கிலமும் கூட இருக்கும் என்று கூறப்பட்டிருப்பதன் மூலம் சிங்களமும் தமிழும் சம அந்தஸ்தைப் பெற்றிருக்கும் என்று உறுதியாகக் கூறப்படவில்லை.

"எஞ்சிய விஷயங்கள்' பேசித் தீர்க்கப்படும் என்பதிலும் பல உட்பொருள்கள் இருந்தன. இவையெல்லாவற்றையும்விட ஒப்பந்தம் கையொப்பமான 72 மணிநேரத்தில் போராளி அமைப்புகள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்ததைக் கண்ட பிரபாகரனின் கண்கள் சிவந்தன.

அவர், "இல்லை-முடியாது-இந்த ஒப்பந்தத்தை ஏற்கவே முடியாது' என்று கொதித்தெழுந்து சொன்னார்.

தீட்சித் இரண்டுமணி நேரம் அவகாசம் கொடுத்தார். அந்த அளவுக்கு நேரம் தேவைப்படவில்லை. மேற்கொண்டு படிக்கத் தேவையில்லாத ஒப்பந்த வரைவாக அது அமைந்துவிட்டது.

இரண்டு மணிநேரம் கழித்து, அந்த அறைக்கு தீட்சித் வந்தார். வந்ததுமே, "தீர்மானத்துக்கு வந்தாகிவிட்டதா?' என்ற கேள்வியை எழுப்பினார்.

பாலசிங்கம், "நாங்கள் இந்த வரைவு ஒப்பந்தத்தை ஏற்பதற்கில்லை' என்றார்.

"ஏன், என்ன காரணம்?' கேட்டார் தீட்சித்.

"சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களின் விருப்பத்தை ஒப்பந்தம் பூர்த்தி செய்வதாக அமையவில்லை. மேலும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஆயுதம் ஒப்படைப்பு என்பதை ஏற்பதாக இல்லை. உறுதியான தீர்வும், தமிழ்மக்களுக்கு உரிய பாதுகாப்பும் ஏற்படும்வரை நாங்கள் ஆயுதத்தை ஒப்படைப்பது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. எங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இந்தியா எவ்வாறு கேட்கக்கூடும். இந்த ஆயுதங்களை நாங்கள் எந்த அரச பயங்கரவாதிகளிடம் இருந்து கடந்த 15 ஆண்டுகளாகப் பறித்தோமோ, அதே அமைப்பிடம் இவை திரும்பப் போய்ச்சேரும். நாங்கள் ஆயுதங்களைக் கையளிப்பது என்பது நடக்கவே நடக்காது' என்று சொன்னார்.

தீட்சித் இந்த வாதத்தை ஏற்கவில்லை. "இது ஒரு அருமையான திட்டம். இதை நிறைவேற்றியே தீருவோம். இந்திய அமைதிப்படை இங்கே இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஆயுதம் எதற்கு? எங்களை நம்புங்கள். யோசியுங்கள்' என்றார்.

பிரபாகரன் தரப்பினர் பதிலளிக்காமல் இருக்கவும், "நீங்கள் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி. இது இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தம்' என்றார்.

பிறகு மறுபடியும் தீட்சித்தே பேசினார், "நீங்கள் இதை ஏற்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும்.'

"அப்படியா, என்னமாதிரியான விளைவு?' என்று யோகி கேட்டார்.

"நீங்கள் இந்த அறையிலேயே சிறை வைக்கப்படுவீர்கள்-ஒப்பந்தத்தை ஏற்கும்வரை' என்றார் தீட்சித்.

96: எம்.ஜி.ஆருடனான கடைசி சந்திப்பு

உங்களுடைய ஒத்துழைப்போ, ஆதரவோ இல்லாவிட்டாலும் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி என்கிற வெளியுறவுச் செயலர் தீட்சித்தின் பேச்சிலேயே வெறுப்படைந்து விட்டிருந்த பிரபாகரன், அந்தமானில் சிறை வைக்கப்படுவீர்கள் என்று அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தார்.

பொறுமை இழந்த நிலையில் பிரபாகரன், "அப்படியென்றால் நீங்கள் இந்தப் பாதுகாவலை நீண்டநாள்கள் மேற்கொள்ளவேண்டியிருக்கும்; ஆண்டுகள் கூட ஆகலாம். நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க இயலாது - அதுவும் ஆயுதத்தை ஒப்படைப்பது என்பதை ஏற்கவே முடியாது' என்று ஆத்திரத்துடன் கூறினார்.

"நீங்கள் ஆயுதத்தை ஒப்படைக்காவிட்டால் நாங்கள் பறிமுதல் செய்வோம். எங்கள் ராணுவத்தினை ஈடுபடுத்தி அதைச் செய்வோம். எங்கள் ராணுவத்தின் முன் நீங்கள் ஒரு தூசு. எனது பைப்பில் உள்ள புகையிலைத் தூளைப் புகைத்து முடிப்பதற்குள் - ராணுவம் அந்த வேலையைச் செய்து முடித்துவிடும்' என்று அவர் குரலை உயர்த்தினார்.

பிரபாகரன், "உங்கள் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம். எங்களுக்கு எது நடைபெற்றாலும் சரி' என்றார்.

தீட்சித் கோபத்தின் உச்சத்துக்குச் சென்று, "பிரபாகரன் - இதுவரை நான்கு தடவை இந்தியாவை ஏமாற்றி விட்டீர்கள்' என்றார்.

"அப்படியா, நல்லது. எங்கள் மக்களுக்கு நான்கு தடவை நல்லது செய்திருக்கிறேன் என்று அதற்குப் பொருள்.'

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த உயர் அதிகாரியான தீட்சித், அந்த அறையில் இருந்து வெளியேறினார்.

கடுமையான முறை பயன்தராததைக் கண்ட அதிகார அமைப்பு, இலகுத் தன்மையுடன் கூடிய அணுகுமுறையைக் கையாளும் எண்ணத்துடன் மீண்டும் பிரபாகரனிடம் வந்தனர். இம்முறை அதிகாரிகள் குழுவில் இந்திய உளவு அமைப்பு இயக்குநர் எம்.கே.நாராயணன் (தற்போது பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசகர்), வெளிநாட்டு உறவு இணைச் செயலாளர் சகாதேவ், வெளிவிவகார அமைச்சகத்தைச் சேர்ந்த நிகல் சேத், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த ஹர்தீப் பூரி ஆகியோர் தொடர்ச்சியாகத் தனித்தனி சந்திப்புகளை மேற்கொண்டு, சம்மதிக்க வைக்க முயன்றனர். ஆனாலும் பிரபாகரனும் மற்றவர்களும் ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதே நேரம், பழ.நெடுமாறன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். அங்குள்ள பத்திரிகைகள் "பிரபாகரனுக்கு ராஜீவ் திடீர் அழைப்பு' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு, அதன் விவரத்தையும் பிரசுரித்திருந்தன. இந்த ஒப்பந்தத்தைப் படித்ததும், நெடுமாறன், சென்னையிலுள்ள திராவிடர் கழகச் செயலாளர் கி.வீரமணியைத் தொடர்பு கொண்டார்.

""ஆமாம், பிரபாகரனை தில்லிக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒப்பந்தத்தை ஏற்கும்படி வற்புறுத்தப்படுகிறார் என்று தெரிய வருகிறது'' என்றார் வீரமணி. "பிரபாகரன் எங்கிருக்கிறார்' என்று பழ.நெடுமாறன் கேட்கவும், அசோகா ஓட்டலில் இருப்பதாக கி.வீரமணி தெரிவித்தார். நெடுமாறன் அசோகா ஹோட்டலுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து, பிரபாகரனுக்கு போன் என்றதும், விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை அறியாத டெலிபோன் ஆபரேட்டர், பிரபாகரன் அறைக்கு இணைப்பை அளித்தார். இதுகுறித்து பழ.நெடுமாறன் கூறியதாவது:

""நான் போன் போட்டதும், மறுமுனையில் தம்பி பிரபாகரனே எடுத்தார். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தம்பி - நான் கேள்விப்படுகிற செய்தி உண்மையா?'' என்றேன். அவர், "ஆமாம் அண்ணா! எங்களைச் சிறைவைப்பது போன்று அடைத்து வைத்திருக்கிறார்கள். யாரையும் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. வை.கோபால்சாமி உள்ளே வந்தபோது அவரையும் சந்திக்கவிடவில்லை. உடன்பாட்டை ஏற்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். தீட்சித் மிரட்டுகிறார். இந்திய ராணுவத்தின் மூலம் ஆயுதங்களை எங்களிடமிருந்து பறிப்போம் என்கிறார். நான் எல்லாவற்றுக்கும் மறுத்து வருகிறேன்' என்றார்.

தம்பி கூறியதைக் கேட்டதும் எனக்குப் பதைபதைப்பு அதிகமானது. ""அப்படியானால் எனது சுற்றுப்பயணத்தை ரத்துசெய்துவிட்டு உடனடியாகத் திரும்புகிறேன்'' என்றேன். அவர் ""ஆமாம் அண்ணா! உடனடியாகத் திரும்பினால் நல்லது'' என்றார். எனது பயண ஏற்பாடுகளை ஆஸ்திரேலியாவில் செய்த சோமசுந்தரமும் தம்பியுடன் அப்போது பேசினார். உடனடியாகத் தாயகம் திரும்பினேன். (நேர்காணல் - பழ.நெடுமாறன் - 29-8-2009)

இதனிடையே பிற இயக்கங்கள் அனைத்தின் பிரதிநிதிகளும் தில்லிக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது. இவர்கள் அனைவரும் தங்களது சொந்தச் செலவில் சென்னையிலிருந்து தில்லிக்கு ரயிலில் வந்து தங்கிச் சென்றனர்.

"விடுதலைப்புலிகள் விஷயம் என்னவாயிற்று' என்று ராஜீவ் கேட்டதும் "பிரபாகரன் ஏற்க மறுக்கிறார்' என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவரின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழக முதலமைச்சருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு விமானம் மூலம், அவர் தில்லி வரவழைக்கப்பட்டார்.

தமிழக முதலமைச்சர் தில்லி வந்ததும், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அன்றைய இரவே, அசோகா ஹோட்டலில் இருந்த பிரபாகரன் குழுவினரைத் தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்கள். இது தொடர்பான விவரங்களை அன்டன் பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பகுதி வருமாறு:

""தலைவர் பிரபாகரனும் நானும் யோகி என்கிற யோகரத்தினமும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். முதலமைச்சருடன் தீட்சித்தும் இருந்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத் திட்டம் பற்றியும் இம் மாகாண சபைத்திட்டம் மூலம் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் தீட்சித் சொன்னதை நாடியில் கையூன்றியவாறு பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.''

""தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால் இவர்கள் மட்டும் இதனை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இந்திய அரசு தனியரசு அமைவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. இவர்கள் இந்தியாவை விரோதித்தால், பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என்றார் இந்தியத் தூதுவர்.

""இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் அபிலாஷையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க, இத்திட்டத்தை நாம் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்?'' என்றார் யோகி என்கிற யோகரத்தினம். இதைத் தொடர்ந்து யோகிக்கும் தீட்சித்துக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது.

""சென்றவாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் மாகாணசபைத் திட்டம் பற்றியும் உமக்கு விவரமாக விளக்கினாராம். அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்போது எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?'' என்று தீட்சித் கேட்க, ""யாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை'' என்றார் யோகி.

""என்னை ஒரு பொய்யன் என்று சொல்கின்றீர்களா?'' என்று கேட்டார் தீட்சித். ""நீங்கள் உண்மை பேசவில்லை'' என்றார் யோகி.

வாக்குவாதம் சூடுபிடித்தது. முதலமைச்சரைப் பார்த்து, ""பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்'' என்றார் தீட்சித்.

இந்தியத் தூதுவர் தீட்சித் உணர்ச்சிவசப்படுகிறார் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., ""நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா? நான் இவர்களுடன் பேச வேண்டும்'' என தீட்சித்தை வேண்டிக்கொண்டார். சிறிது தயக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்தியத் தூதுவர்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றியும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் மறுப்பதன் காரணங்கள் பற்றியும் எம்.ஜி.ஆர். எம்மிடம் வினவினார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினோம். ஈழத்து அரசியல் கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் இந்திய அரசின் நெருக்குதலுக்கும், மிரட்டலுக்கும் பணிந்துவிட்டார்கள் என்றும், இந்திய அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னோம்.

தமிழரின் இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சூழ்நிலையில், எமது ஆயுதங்களைக் கையளித்து, எமது போராளிகளைச் சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும் எடுத்து விளக்கினோம்.

எமது விளக்கங்களை முதலமைச்சர் பொறுமையுடன் செவிமடுத்தார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாடுகளையும் அவர் புரிந்து கொண்டார். இந்திய - இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர - புவியியல் நலனைப் பேணுவதற்காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்திய - இலங்கை ஒப்பந்த விவகாரத்தில் பிரபாகரன் என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது குறித்து பிரபாகரனை அவர் பாராட்டவும் தவறவில்லை. முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே தீட்சித்தும் ஓர் இந்தியப் புலனாய்வு அதிகாரியும் நின்று கொண்டிருந்தனர். எம்மை வழிமறித்த இந்தியத் தூதுவர், ""ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத்தினார் அல்லவா?'' என்று கேட்டார். நாம் பதிலளிக்காது மௌனமாக நின்றோம். ""முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்'' என்றார். ""அப்படியே செய்வோம்'' என்று கூறிவிட்டுச் சென்றோம்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுடனான விடுதலைப் புலிகளின் கடைசிச் சந்திப்பு அதுதான்.

97: ராஜீவ்-பிரபாகரன் சந்திப்பு!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை, இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு சம்மதிக்க வைக்கும் முயற்சியில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை ஈடுபடுத்தியும், அவர் விடுதலைப்புலிகள் பக்கம் சார்ந்து கருத்து தெரிவித்ததும், பிரதமர் ராஜீவ் காந்தி தானே நேரடியாக முயற்சி செய்வது என்று முடிவெடுத்தார்.

ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முந்தின நாள், அதாவது ஜூலை 28-ஆம் தேதி, நள்ளிரவு அசோகா ஹோட்டலில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தூங்கிக்கொண்டிருந்த பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் இந்தியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் எழுப்பினர்.

அவர்களிடம், "பிரதமர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். உடனே புறப்படுங்கள்' என்று கூறினர்.

இதன் நோக்கம் அறிய பல கேள்விகளை எழுப்பியும், "பிரதமர் உங்களிடம் ஒப்பந்தம் குறித்தக் கருத்துகளை விவாதிக்க விரும்புகிறார்' என்பதைத்தவிர வேறு எந்த விவரத்தையும் அவர்கள் சொல்ல விரும்பவில்லை.

கருப்புப்பூனை அதிரடிப்படையினர் பாதுகாப்புடன் பிரபாகரனும் பாலசிங்கமும் பிரதமர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இல்லத்தின் வாயிலருகே நின்று, பிரதமரும் புலனாய்வுத்துறை இயக்குநர் எம்.கே.நாராயணனும் இவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பிரபாகரனைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பதாகவும், நேரில் சந்திப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறி, அவரது கைகளைப் பற்றி குலுக்கிய ராஜீவ் காந்தி, ஒப்பந்தம் குறித்து அவர்களுக்கு இருந்த மாற்றுக்கருத்துகளை விவரிக்கும்படி கேட்டார்.

பிரபாகரன், பாலசிங்கத்திடம் அவருக்கு ஆங்கிலத்தில் எடுத்துக்கூறும்படி சொன்னதும் அவர் சுருக்கமாகவும் கூறவேண்டியவற்றை விட்டுவிடாமலும் விவரித்தார்.

""வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் ஆதிபத்திய உரிமை கொண்ட பூமி. அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் பகுதியைத் துண்டாடுவதற்கு ஒருபோதும் ஒப்பமாட்டார்கள்.

இந்தப் பகுதியின் ஒருமைப்பாட்டை வாக்கெடுப்பு மூலம் அறிவது ஏற்கத்தக்கதல்ல.

மாகாணசபைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இறுதி அதிகாரம் ஜெயவர்த்தனாவிடமே இருக்கும். அவரை நம்பமுடியாது. காரணம் அவர் சிங்கள வெறியர். தமிழர் நலன் பெறும் எந்தத் திட்டத்துக்கும் அவர் உடன்பட மாட்டார்.

ஆயுதக் கையளிப்பு என்பது 72 மணி நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதை ஏற்கமுடியாது. இந்த ஆயுதங்கள் பல ஆண்டுகள் ரத்தம் சிந்தி பெற்ற ஆயுதங்கள். தமிழர்களின் பிரச்னைக்குரிய இறுதித்தீர்வு எட்டப்படாத நிலையில் ஆயுதங்களை ஒப்படைக்க வற்புறுத்துவது நியாயமாகாது'' என்று ஒவ்வொரு பிரச்னையாக ராஜீவிடம் விளக்கியதாகவும், ராஜீவ் அனைத்து அம்சங்கள் குறித்தும், தனது குறிப்பேட்டில் குறித்துக்கொண்டதாக, பாலசிங்கம் "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றைக் குறித்துக்கொண்ட ராஜீவ் காந்தி, அவர்களிடம் தொடர்ந்து பேசும்போது, ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருந்தாலும், ஒரு நீதியான தீர்வு காணவேண்டும் என்பதிலும், குறைபாடுகளைப் பின்னர் ஜெயவர்த்தனாவிடம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் கருத்து வாக்கெடுப்பு நடத்தாமல் ஒத்திவைத்து விடலாமென்றும் தெரிவித்ததுடன், இதனை ஜெயவர்த்தனாவிடம் சொல்லுவேன் என்றும் இந்திய அரசை நம்பவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழர்களின் பாதுகாப்பை ஒப்பந்தம் உறுதிப்படுத்தும் என்றும் எடுத்துச் சொன்னார்.

ராஜீவ் காந்தி சொன்னதை பண்ருட்டி ராமச்சந்திரன் தமிழில் விளக்கினார். ஆனாலும் பிரபாகரன் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

ராஜீவ் காந்தி, அவர்களிடம் மேலும் பேசுகையில், விடுதலைப் புலிகளின் எந்த முடிவுகளையும் கொள்கைகளையும் மாற்றிக்கொள்ளச் சொல்லவில்லை என்றும், இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் போதும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உடனிருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், "பிரதமரே உங்களது வழிக்கு வந்துவிட்டார். இந்தச் சிறிய ஒத்துழைப்பையாவது இந்திய அரசுக்குச் செய்யக்கூடாதா?' என்று வலியுறுத்த ஆரம்பித்துவிட்டார்.

இது குறித்து "விடுதலை' நூலில் பாலசிங்கம் குறிப்பிட்டிருப்பது வருமாறு:

"ஒரு விஷயத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை நாம் எதிர்ப்பதாகத்தானே அர்த்தம்' என்று எனது காதோடு கிசுகிசுத்தார் பிரபாகரன்'

தொடர்ந்து ராஜீவ், "உங்களது இயக்கத்துக்கும் பொதுவாக தமிழ் மக்களுக்கும் ஜெயவர்த்தனாவின் பேரில் நம்பிக்கையில்லை என்பது எனக்குத் தெரியும். எனக்கும் கூட அவர்மீது நம்பிக்கையில்லைதான். என்றாலும் அவர்மீது கடும் அழுத்தம் கொடுத்து, இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்கிறோம். மாகாணசபைத் திட்டத்தை உடனடியாக

நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. அதற்குக் காலம் பிடிக்கும். அதற்கு முன்னதாக, வடகிழக்கில் ஓர் இடைக்கால அரசை நிறுவி, அதில் உங்களது அமைப்புக்குப் பிரதான பங்கு வழங்கலாம். இந்த இடைக்கால அரசு சம்பந்தமாக நான் உங்களுடன் ஒரு ரகசிய உடன்பாடு செய்துகொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன்' என்றார்.

"தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாக ஆட்சியை நிறுவுவதற்கு இது அருமையான சந்தர்ப்பம். இந்தியப் பிரதமருடன் ஒரு ரகசிய உடன்பாடு. இந்த யோசனையை நிராகரிக்கவேண்டாம். இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டாம். அதற்கு முன்னதாக ராஜீவ்-பிரபா ஒப்பந்தம் வரப்போகிறது. இதனைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை. ரகசியமாகவே வைத்துக்கொள்ளலாம்' என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

இதெல்லாம் முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் போல எனக்குத் தோன்றியது. பிரபாகரனுக்கு எதிலுமே நம்பிக்கையில்லை. எதிலும் ஆர்வமும் காட்டவில்லை. ஆனால் பண்ருட்டி ராமச்சந்திரன் மிகவும் ஆர்வத்துடன், ராஜீவ்-பிரபா ஒப்பந்தத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க முயன்று கொண்டிருந்தார்'.

இவ்வாறு குறிப்பிட்டுள்ள பாலசிங்கம், சந்திப்பு விடியற்காலை மூணரை மணியளவில் முடிவுற்றதாகவும் நூலில் தெரிவித்திருக்கிறார்.

98:ஒப்பந்தம் கையெழுத்தானது!

ஒப்பந்தங்கள் போடுவது என்பது ஒரு நாட்டினது இயல்பு. இந்த ஒப்பந்தங்கள் மக்கள் நலன், நாட்டின் நலன் சார்ந்ததாக இருக்கும். மக்கள் நலன் சார்ந்த ஒப்பந்தங்கள் பிற இன குழுக்களின் மேலாதிக்கத்தால் முறியடிக்கப்படவும், நாட்டின் நலன் சார்ந்ததென்றால், ஏதேனும் ஒரு விதியைக் காரணம் காட்டி, அந்நாட்டின் ஆன்ம பலம் சிதறடிக்கப்படவுமான முயற்சிகளை இன்றுவரை உலகம் கண்டு வருகிறது.

இலங்கையில் 1915, 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981-ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது கட்டற்ற வன்முறைகள் ஏவிவிடப்பட்டதற்கு சிங்கள மேலாதிக்கமே காரணம். இதன் உச்சம் 1983-இல் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள். இதனை உலகமே கண்டித்தது. இலங்கையில் சிறுபான்மையினராக, பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி செலுத்தியவராக, பிறிதொரு காலங்களில் சிங்கள ஆட்சிகளில் தலைமை நிர்வாகிகளாக இருந்தவர் தமிழர்கள் என்பதாலும்,

இலங்கையின் அண்டை நாடான இந்தியாவில் ஒரு மாநிலம் தமிழகம் என்பதாலும், இலங்கையில் தமிழர்கள் இன்னலுக்கு ஆளாகும்போது அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்தது. இதனைக் காரணமாகக் கொண்டு இந்தியா இவ்வினப் பிரச்னையில் தலையிட வேண்டியிருந்தது.

1983-இல் இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்த பி.வி.நரசிம்மராவ் இலங்கை வந்தார்; பேசினார். பின்னர் அரசியல் ஆலோசகரான ஜி.பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் இலங்கையுடன் பேசினர். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. இலங்கையின் ஆளும் வர்க்கம் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது நாளையே பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பது போலத் தோற்றம் காட்டி, பின்னர் அதை நிராகரித்துவிடும். ஏமாற்றப்பட்டவர்களாக எப்போதும் தமிழர்களே இருந்தனர். வெளிச்சமும் இருட்டும் அவர்களது வாழ்வில் தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இருந்தன.

இலங்கையிலும் ஒப்பந்தங்கள் என்பது புதிதல்ல. பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தம் (1957), டட்லி-செல்வநாயகம் ஒப்பந்தம் (1965) ஆகியவை ஏராளமான விளம்பர வெளிச்சங்களுடன் போடப்பட்டு பின்னர் அவை பொசுங்கிவிட்டன. ஒப்பந்தத்தில் ஈடுபடுகிற அரசாங்கங்கள் அதனை நடைமுறைக்குக் கொண்டுவராதபடி காரியமாற்றும். இதற்குப் பேச்சுகளும், வன்முறைகளும், குடியேற்றங்களும், சட்டவடிவுகளும், சட்டங்கள் இயற்றுவதும் காரணமாக அமைந்துவிடும். தமிழர்களைக் கீழ்மைப்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகள் காலாகாலமாகத் தொடர்ந்துகொண்டே வருகின்றன.

இந்நிலையில், இலங்கையின் இனப்பிரச்னை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களையோ, அவர்களின் பிரதிநிதிகளையோ சம்பந்தப்படுத்தாமல், அவர்களின் விருப்பங்களையும் உரிமைகளையும் கண்டுகொள்ளாமல், போடப்படுகிற ஒப்பந்தமாக (ரோஹனா குணவர்த்தனா - இண்டியன் இண்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா - நூலில் கூறியவாறு) இந்திய-இலங்கை ஒப்பந்தம்-1987, அமைந்தது.

ஜூலை 29-ஆம் நாள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆரும் வரவேண்டும் என்று ராஜீவ் காந்தி விரும்பினார். வற்புறுத்தவும் செய்தார். ஆனால் எம்.ஜி.ஆரோ தனது உடல்நிலையைக் காரணம் காட்டித் தவிர்த்து விட்டார். ராஜீவ் காந்தியின் கட்டாயத்தின்பேரில் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என்று முடிவாயிற்று.

இதே நேரம், கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கொதிப்பின் உச்சத்தில் இருந்தார். புத்தபிக்குகளின் கூட்டத்தைக் கூட்டி, அவர்களை உசுப்பிவிட்டார். அவர்களும் தங்களது முழு எதிர்ப்பையும் காட்டுவது என்று தீர்மானித்தார்கள். மற்ற எதிர்க்கட்சிகள் இந்தப் போக்கை உற்று கவனித்துக்கொண்டிருந்தன.

நகரெங்கும் வன்முறை தலைவிரித்தாடியது. உச்சகட்ட வன்முறை ஜூலை 27-ஆம் தேதியன்று தலைதூக்கியது. வன்முறையைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளில் 19 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் காரணமாக கொழும்பில் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், நகர் முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமலானது. இதற்கிடையே, தீட்சித் பறந்து வந்து, ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான இறுதிக்கட்ட வேலைகளைப் பார்வையிட்டார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்வரை பிரபாகரன் உள்ளிட்டோர் அசோகா ஹோட்டலில் சிறைவைக்கப்பட்ட நிலையில், பிரதமர் ராஜீவ் காந்தி ஜூலை 29-ஆம் தேதி அதிகாலை கொழும்பு புறப்பட்டார்.

கொழும்பு விமானநிலையத்தில் அவருக்கு, அளிக்கப்பட்ட வரவேற்பு சம்பிரதாய ரீதியில் அமையவில்லை. குண்டு துளைக்காத காரில் அவரும் சோனியாவும் ஏறி வெளியே வந்தபோது, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தபிக்குகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஊரடங்கு அமலில் இருக்கும்போது, பெருமளவில் மக்கள் கூடினால், அது பெரும் வன்முறையில் முடியும் என அரசுகளும் நடவடிக்கை எடுக்கும். எனவே, இந்த எதிர்ப்பைத் தெரிவிக்க புத்தபிக்குகளைத் தயார்படுத்தி அனுப்பியிருந்தார் ஸ்ரீமாவோ. புத்தபிக்குகள் மீது நடவடிக்கை எடுத்தால் அது மதப் பிரச்னை ஆகிவிடும் என்று கருதப்பட்டு, அவர்களது ஆர்ப்பாட்டம் கலைக்கப்படவில்லை.

பிரதமர் ராஜீவ் காந்தி ஆளரவமற்ற சாலையில் பயணித்து, நிகழ்ச்சி நடைபெற இருந்த பதினேழாம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட அதிபர் மாளிகையைச் சென்றடைந்தார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியை ஜெயவர்த்தனாவின் சொந்தக் கட்சியினரே புறக்கணித்தனர். பிரதமர் ஆர்.பிரேமதாசா, பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலி, விவசாய அமைச்சர் காமினி ஜெயசூரியா, விமல கன்னங்கர முதலியோர் அங்கு தலைகாட்டவே இல்லை.

முரண்பாடுகள் நிறைந்த, பிரச்னைகளின் வடிவிலான இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தப் பிரதிகளை பரஸ்பரம் மாற்றிக்கொண்டனர்.

99: இந்திய - இலங்கை ஒப்பந்தம்!

இந்தியக் குடியரசின் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் 1987-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதி கொழும்பு நகரில் சந்தித்துக்கொண்டனர். இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் தொன்றுதொட்ட நட்புறவைப் பலப்படுத்தவும், அதனை வளர்த்து, பராமரிக்கும் உயர்மிகு முக்கியத்துவத்தை இணைத்து, இலங்கையின் இனப்பிரச்னையைத் தீர்க்கும் உடனடித் தேவைக்கு ஏற்ப, இலங்கையில் வசிக்கும் அனைத்து இன மக்களின் பாதுகாப்பு வளமை, மேம்பாடு ஆகியவற்றுக்காகவும், வன்முறையைத் தவிர்ப்பதற்காகவும். இந்த இலக்கினை நிறைவேற்றும் வகையில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் இந்த நாளில் கையெழுத்திடப்படுகிறது. இதன் தொடர்பாக,

1.1) இலங்கையின் ஒற்றுமை, இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பராமரிப்பதில் ஆர்வம் கொண்டு,

1.2) இலங்கை பல இன, பல மொழி பேசும் மக்களை அதாவது சிங்களர், தமிழர், முஸ்லீம்கள் (மூர்ஸ்), பறங்கிகள் ஆகியோரைக் கொண்டது என்பதையும் அங்கீகரிக்கிறது.

1.3) ஒவ்வொரு இனமும் கவனமாகப் போற்றப்பட்டவேண்டிய, தனி கலாசார, மொழியை, தனித்துவத்தைக் கொண்டது; அவற்றை வளர்ப்பது அவசியம் என்பதை ஏற்று,

1.4) இலங்கைத் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாக, வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இருந்து வந்திருக்கின்றன. இங்கு மற்ற இனத்தவருடன் தமிழர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதையும் அங்கீகரிக்கிறது.

1.5) இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றை பலப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து, இலங்கையின் பல இன, பல மொழி மதங்கள் கொண்ட சமூகத்தின் தன்மையையும் பாதுகாக்கும் தேவையையும் மனதில் கொண்டு அதன் அனைத்துக் குடிமக்களும் உரிமைகளுடனும், மகிழ்ச்சியோடும் வாழ கீழ்க்கண்டவாறு முடிவு செய்யப்படுகிறது.

2.1) கீழ்க்கண்டவாறு வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த நிர்வாகப் பகுதியாக இணையவும் இதனை வாக்கெடுப்பு மூலம் தனியாகப் பிரிக்கவும், அனுமதிக்க இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது.

2.2) மாகாணக் கவுன்சிலுக்கான தேர்தல் தேதி பத்தி 2.8-இல் குறிப்பிட்டுள்ளபடியும் நிர்வாகப் பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணக் கவுன்சிலுடன் இயங்கும். இந்த ஒன்றிணைந்த நிர்வாகப் பகுதிக்கு ஓர் ஆளுநரும், ஒரு முதல்வரும், ஓர் அமைச்சரவையும் இருக்கும்.

2.3) 1988-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியோ அதற்கு முன்னரோ ஒரு பொதுமக்கள் வாக்கெடுப்பு நடைபெறும். இந்த வாக்கெடுப்பு,

அ) வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் ஒரே நிர்வாகப் பகுதியாக இணைந்து இருப்பதா? தொடர்ந்து 2.2-இல் கண்டுள்ளபடி ஆளப்படுவதா அல்லது

ஆ) கிழக்கு மாகாணம் தனி நிர்வாகப் பகுதியாக தனக்கென தனி மாகாணக் கவுன்சில், தனி ஆளுநர், தனி முதல்வர், தனி அமைச்சரவையுடன் இயங்குவதா என்பதைத் தீர்மானிக்கும். இலங்கை ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அத்தகைய பொதுமக்கள் வாக்கெடுப்பை ஒத்தி வைக்கவும் உரிமை உண்டு.

2.4) இன வன்முறை அல்லது மற்ற காரணங்களுக்காக அல்லது வேறு காரணங்களுக்காகவும் இடம் பெயர்ந்தவர்களும் அத்தகைய பொதுமக்கள் வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை உண்டு. அவர்கள் எந்த இடத்திலிருந்து வெளியேறினார்களோ அந்த இடங்களுக்குத் திரும்பத் தேவையான சூழ்நிலைகள் உருவாக்கப்படும்.

2.5) அத்தகைய பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, இலங்கைத் தலைமை நீதிபதி தலைமையில் இலங்கை அரசால் குறிப்பிடப்பட்டு, இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒருவர், கிழக்கு மாகாணத் தமிழர்களின் பிரதிநிதிகளினால் குறிப்பிடப்பட்டு, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஓர் உறுப்பினர், ஆகியோரைக் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும்.

2.6) பொதுமக்கள் வாக்கெடுப்பு முடிவு சாதாரண பெரும்பான்மை அடிப்படையில் அமையும்.

2.7) பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு முன்னதாக இலங்கை சட்டங்கள் அனுமதிக்கும் வகையில் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படும்.

2.8) மாகாண கவுன்சிலர்களுக்கான தேர்தல் அடுத்த 3 மாதங்களுக்குள் 1987 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னதாக நடைபெறும். வடக்கு - கிழக்கு மாகாண தேர்தல்களின்போது இந்தியப் பார்வையாளர்கள் அழைக்கப்படுவர்.

2.9) 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வாக்கில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அவசர நிலை நீக்கப்படும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்திற்குள் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். போராளிகள் தங்களது ஆயுதங்களை இலங்கை அரசு குறிப்பிடும் அதிகாரிகளிடம், ஒத்துக்கொள்ளப்பட்ட நடைமுறைப்படி ஒப்படைப்பார்கள். போர் நிறுத்தம், ஆயுத ஒப்படைப்பு ஆகியவைகளின் விளைவாக இலங்கை ராணுவமும் மற்ற பாதுகாப்புப் படைகளும் 1987-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி நிலைப்படி தங்களது முகாம்களுக்குத் திரும்ப வேண்டும். ஆயுத ஒப்படைப்பு, இலங்கை பாதுகாப்புப் படைகள் முகாம்களுக்குத் திரும்புவது ஆகியவை போர் நிறுத்தம் ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் நடைபெறும்.

2.10) வடக்கு-கிழக்கு மாகாணங்களின் சட்ட அமல், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளது போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படும்.

2.11) எல்லா அரசியல் கைதிகளுக்கும், பயங்கரவாதச் சட்டம், மற்ற அவசரநிலைச் சட்டங்களின் கீழ் சிறையிலுள்ள, வழக்கு விசாரணையில் உள்ளவர்களுக்கும் மற்றும் போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும். தேசிய வாழ்க்கை நீரோட்டத்திற்கு போராளி இளைஞர்களைக் கொண்டுவர விசேஷ முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொள்ளும். இந்த முயற்சிகளுக்கு இந்திய ஒத்துழைப்பு வழங்கும்.

2.12) மேலே கண்ட ஷரத்துகள் அனைத்தையும் இலங்கை அரசு ஏற்று அமல் செய்யும். மற்றவர்களும் அவ்வாறே செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2.13) இந்தத் தீர்மானங்களுக்கான சட்டவரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டதும் சம்பந்தப்பட்ட முன்மொழிவுகளை இலங்கை அரசு உடனடியாக அமல் செய்யும்.

2.14) இந்தத் தீர்மானங்களுக்கு இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கும். இந்தத் திட்டங்களை அமல்படுத்துவதில் ஒத்துழைக்கும்.

2.15) இந்தத் திட்டங்கள் 4-5-1986-ஆம் தேதிக்கும் 19-12-1986-ஆம் தேதிக்கும் இடைக்காலத்தில் விவாதிக்கப்பட்ட தீர்வாலோசனைகளை ஏற்பது என்னும் நிபந்தனையையே தீர்வாலோசனைகள் கொண்டுள்ளன. மேற்கண்ட காலத்தில் இறுதியாக்கப்படாத விவரங்கள் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் தேதியிலிருந்து ஆறு வார காலத்திற்குள் இந்திய - இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவேண்டும். மேலும் இலங்கை அரசோடு, இந்திய அரசு நேரடியாக இந்தத் திட்டங்களை அமல் செய்ய ஒத்துழைப்பதையும் நிபந்தனைகளாகக் கொண்டுள்ளன.

2.16) மேலும் இந்த ஒப்பந்தத் திட்டங்களை இலங்கையில் செயல்படும் எந்த ஒரு போராளிகளின் குழுவாவது ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் இந்தத் திட்டங்கள் நிபந்தனைகளாகக் கொண்டுள்ளன. இதன்படி,

அ) இலங்கை ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு இந்தியப் பகுதி பயன்படுத்தப்படாமல் பார்த்துக்கொள்ள இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆ) தமிழ்ப் போராளிகள் நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கைக் கடற்படையுடன் இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை ஒத்துழைப்பு தரும்.

இ) இந்தத் திட்டங்களை அமல் செய்ய ராணுவ உதவி வழங்கும்படி இலங்கை அரசு கோரினால், அந்த உதவியை இந்தியா வழங்கும்.

ஈ) இலங்கையில் உள்ள இந்தியக் குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு துரிதப்படுத்தும். அதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அகதிகள் இலங்கை திரும்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உ) வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வாழும் அனைத்து இனத்தவரின் உயிருக்கும் உடலுக்கும் ஊறு விளை ஏற்படாமல் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய-இலங்கை அரசுகள் ஒத்துழைக்கும்.

2.17) இந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள வடக்கு - கிழக்கு மாகாணத் தேர்தல்களில் அனைத்து இனத்தவரும் சுதந்திரமாக, முழுமையாக, நேர்மையாகப் பங்கு பெறுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும். 2.18) இலங்கையின் அரசு அலுவல் மொழி சிங்களமாக இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் கூட அலுவல் மொழியாக இருக்கும்.

3. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும் அமலுக்கு வரும். அதிகாரப்பூர்வமான அசல் நகல் உள்ளிட்ட இரண்டு பிரதானப் பகுதிகளையும் 1987-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் நாள் அன்று இலங்கை கொழும்புவில் நம் இருவரின் சாட்சிப்படி இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம்.

ஒப்பந்தத்தின் முடிவில் இந்தியக் குடியரசின் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர்.

100: ராஜீவ் காந்தி தாக்கப்பட்டார்!

1987 ஜூலை 29 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் இணைப்பாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

1. இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் உடன்பாட்டின் இரண்டாவது பத்தி மற்றும் அதன் துணை பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை கவனிக்க, இந்தியத் தேர்தல் கமிஷனின் பிரதிநிதி ஒருவரை மேதகு இலங்கை அதிபர் அழைப்பார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.

2. அதேபோன்று இருநாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தத்தின் பத்தி 2.8-இல் குறிப்பிட்டுள்ள மாகாணசபைத் தேர்தல்களின்போது அதனை மேற்பார்வையிட இந்திய அரசின் பிரதிநிதி ஒருவரை இலங்கை அதிபர் அழைக்கவும் ஏற்றுக்கொண்டனர்.

3. மாகாணசபைத் தேர்தல் நடைபெற உகந்த நிலையை உருவாக்க, கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் இருந்து ஊர்க்காவல் படையினரும் துணை ராணுவப்படையினரும் திருப்பி அழைக்கப்படுவர். இதனைச் செய்ய ஜனாதிபதி உடன்படுகிறார்.

இன வன்முறையின்போது கொண்டு நிறுத்தப்பட்ட துணை ராணுவத் துருப்புகளை இலங்கையின் நிரந்தரப் பாதுகாப்புப் படையாக ஏற்றுக்கொள்வது அதிபரின் அதிகாரத்திற்கு உரியது.

4. தமிழ்ப் போராளிகள் தங்கள் வசமுள்ள ஆயுதங்களை ஒப்படைப்பார்கள் என்பதை இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் ஏற்றுக் கொள்கின்றனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய இரு அமைப்புகளின் மூத்த பிரதிநிதி ஒருவரின் முன் இந்த ஆயுத ஒப்படைப்பு நடைபெறும்.

5. இந்திய அரசு மற்றும் இலங்கை அரசைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பிரதிநிதிகள் அடங்கிய இந்திய - இலங்கை கூட்டு கண்காணிப்புக் குழு ஒன்று அமைப்பதையும், 1987 ஜூலை மாதம் 31-ஆம் தேதி முதல் ஏற்படும் போர்நிறுத்தத்தைக் கண்காணிக்கவும் இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் ஏற்கின்றனர்.

6. ஒப்பந்தத்தில் பத்தி எண் 2.14, 2.16 (இ)யில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி போர் நிறுத்தம் நடவடிக்கையை உறுதிப்படுத்த, இந்திய அமைதி காக்கும் படை ஒன்றை, தேவைப்பட்டால் இலங்கை அதிபர் அழைக்கக்கூடும். ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு ராஜீவ் காந்தி ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த சில கவலைகளும், உணர்வுகளும் இன்றைக்கும் கூடப் பொருத்தமானதாகவே இருப்பது மட்டுமல்லாமல், இலங்கை அரசு இந்தியாவைப் பல விஷயங்களில் வஞ்சித்து வருகிறது என்பதை உறுதியும் படுத்துகிறது.

ராஜீவ் எழுதிய கடிதத்தில் காணப்பட்ட முக்கியமான அம்சங்கள் வருமாறு:

1. மிகுந்த அக்கறையுடன் இரு நாடுகளுக்குமிடையே நூற்றாண்டுகளாய் பேணி பாதுகாக்கப்பட்டுத் தொடர்ந்து வரும் நம் நட்புறவு... இந்த வேளையில் அது இன்னும் வலுப்பெற்று அதை மீண்டும் இருநாடுகளும் நிரூபிக்கும் வகையில் நம் இரு நாடுகளின் அதன் எல்லைப் பகுதிக்குள் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்புக்கு எதிராக, சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் சக்திகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

2. இதே உத்வேகமும் எண்ணமும் கொண்டுள்ளதை நம் பேச்சுவார்த்தையில் வெளிப்படுத்திய நீங்கள்... இந்தியாவின் சில எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவேண்டும்.

அ.) நீங்களும் நானும் முன்பு பேசி ஒத்துக்கொண்டது போல இலங்கைக்காக மற்ற நாடுகளின் ராணுவத்தினரையோ அல்லது வல்லுநர்களையோ இந்தியாவைப் அனுமதித்ததுபோன்று, அனுமதிக்காமலிருப்பதே இந்திய இலங்கை உறவுக்குப் பாலமாகும்.

இ.) திருகோணமலை அல்லது ஏனைய மற்ற பகுதிகளில், மற்ற நாடுகளின் ராணுவ பயன்பாட்டிற்கு அனுமதிக்காமலிருப்பது இந்தியாவின் எண்ணத்திற்கு ஒத்துப்போவதாகும்.

உ.) மீண்டும் திருகோணமலை ஆயில் நிறுவனக் கிடங்குப் பணி இருநாட்டு கூட்டு முயற்சியுடன் தொடரும். இலங்கை அரசு வெளிநாட்டு தகவல் மற்றும் ஒலிபரப்பு நிறுவனங்களை அனுமதித்து, அவர்கள் அங்கு செயல்பட்டு வருவதை மறுபரிசீலனை செய்து இந்தத் தகவல் ஒலிபரப்பு பொதுவான துறையாக மட்டும் செயல்படவேண்டும். ராணுவ மற்றும் வல்லுநர் தன்மைக்காகப் பயன்படுத்தக்கூடாது.

3. அதே உத்வேகத்துடன் இந்தியாவும் செயல்படும். அ.) தீவிரவாதச் செயல்கள், தனி நாடுவேண்டி போராடுபவர்கள், குழுக்களைச் சேர்ப்பவர்கள் இந்த மாதிரி செயல்களைச் செய்பவர்கள் என கண்டுபிடிக்கப்படும் இலங்கைப் பிரஜைகள் நாடு கடத்தப்படுவர். இ.) இலங்கைக்குத் தேவையான ராணுவ உதவி மற்றும் ராணுவப் பயிற்சிகள் வழங்கப்படும்.

4. இந்தியாவும் இலங்கையும் தொடர்ந்து பொதுவான விஷயங்களில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில்கொண்டு இருவரும் கலந்துபேசி இருதரப்பைப் பலப்படுத்தியும் மேலும் இந்தக் கடிதத்தில் கண்டுள்ள மற்ற விஷயங்களைப் பற்றியும் கவனிக்கவேண்டும்.

5. நம் இருவருக்குமிடையே உருவான ஒப்பந்தப்படி மேலே குறிப்பிட்டவைகள் சரியானபடி இருப்பதாக தயவுகூர்ந்து பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். எனது மிக, மிக உயர்வான சலுகைகளின்படியான வாக்குறுதிகளை மனதில் கொண்டு தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

(ஒப்பந்த நகல் உதவி : ஏன் எரிகிறது ஈழம்-கே.கே.ரமேஷ்) இந்தியா திரும்ப இருந்த ராஜீவ் காந்திக்கு கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட இருந்தது. பல்வேறு ஒத்திகைக்குப் பின்னர் அந்த நேரமும் வந்தது. ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரிகள் அணிவகுப்பு குறித்து ஆய்வு செய்து ஒப்புதலும் அளித்தனர்.

அவர்கள் ஆய்வு செய்த முக்கிய விஷயம் என்னவென்றால், அணிவகுப்பு மரியாதையில் வீரர்கள் பிடித்திருக்கும் துப்பாக்கிகளில் குண்டுகள் உள்ளதா என்பதைக் கண்டறிவதுதான்! இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டிய அவசியம் எகிப்து அதிபர் அன்வர் சதாத் சுட்டுக்கொல்லப்பட்டதையொட்டி நடைமுறைக்கு வந்தது.

1978-இல் எகிப்து அதிபர் அன்வர் சதாத் இஸ்ரேலியப் பிரதமர் பெனகம் பெகினுடன், அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் முன்னிலையில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். "காம்ப் டேவிட் ஒப்பந்தம்' என்று அழைக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அரபுநாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதன் காரணமாக எகிப்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், 1981-ஆம் ஆண்டில் எகிப்து அதிபர் அன்வர் சதாத், தனது நாட்டின் அணிவகுப்பில், தனது வீரனாலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பின் உலகநாடுகள் அணிவகுப்பு துப்பாக்கிகளில் குண்டு நிரப்புவதைத் தடைசெய்தனர்.

இதே நடைமுறைப்படிதான் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புப் பிரிவினரும் சோதனை மேற்கொண்டனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அணிவகுப்பு மரியாதைக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டவர் ஜெயவர்த்தனாவின் மகன் ரவி ஜெயவர்த்தனா.

அவர் ராணுவத்தினருக்கு அணிவகுப்பில் பயன்படுத்தும் துப்பாக்கிகளில் குண்டுகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டபோது சிங்கள ராணுவத் தலைமை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ராணுவ வீரர்களின்மீது அவநம்பிக்கை கொண்டதாக இச்செயல் அமையும் என வாதிட்டனர். ஆனால், ராஜீவ் காந்தி அணிவகுப்பில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று ரவி ஜெயவர்த்தனா, குண்டுகளை அகற்றும்படி உத்தரவிட்டிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், ராஜீவ் காந்தி அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு வருகையில், கடற்படையைச் சேர்ந்த விஜயமுனி விஜிதா ரோகண டி சில்வா என்கிற சிப்பாய் தான் பிடித்திருந்த துப்பாக்கியின் அடிக்கட்டையால், ராஜீவ் காந்தியின் பின்தலையில் வேகமாகத் தாக்க முயன்றார். பின்தலையில் தாக்கினால் ஒரு மனிதன் செயலிழப்பான் என்பது ராணுவப் பயிற்சியில் சொல்லிக்கொடுக்கப்படும் சூத்திரங்களில் ஒன்று. இவ்வாறு சிங்களச் சிப்பாய் தாக்குவதை உணர்ந்த ராஜீவ் காந்தி தலையைக் குனிந்துகொண்டு அப்பால் நகர்ந்தார். துப்பாக்கியின் அடிக்கட்டை அவரது தோளில் பட்டது.

ராணுவ உயர் அதிகாரிகள், ஜெயவர்த்தனாவின் சகாக்கள் முன்னிலையில்தான் இச்சம்பவம் நடைபெற்றது. ஆனால் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரிதான் ஓடோடிச்சென்று அந்தச் சிங்களச் சிப்பாயை இயங்கவிடாமல் பிடித்து அமுக்கினார்.

சிங்களப் படையினர் எத்தகைய கொடூரமான மனநிலையினர் என்பதையும் கொலைவெறி மிகுந்தவர்கள் என்பதையும் இச்சம்பவம் உலகத்திற்கு அடையாளம் காட்டியது.

இந்நிலையில், இந்த சம்பவங்களின் பின்குறிப்பாக கீழ்க்கண்டவை கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை ஆகும்:

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகும் சமயத்தில், இதில் கலந்துகொள்ளவிரும்பாத அந்நாட்டின் பிரதமர் பிரேமதாச தாய்லாந்து சென்றுவிடுகிறார். ஒரு நாட்டின் பிரதமர், தனது நாட்டுக்கு வேறொரு நாட்டின் பிரதமர் வரும்போது, வெளிநாட்டுக்குச் செல்வது என்பது, உலகில் வேறெங்கும் நடைபெறாத சம்பவமாகும்.

அதுமட்டுமன்றி அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி மற்றும் முக்கிய அமைச்சர்களும் இந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததும் புதுமையானதுதான். இச்செயல் அனைத்தும் இந்தியாவை அவமானப்படுத்தவேண்டும் என்பதே ஆகும்.

ராஜீவ் காந்தியை அணிவகுப்பின்போது தாக்கிய விஜயமுனி பிரேமதாசவின் ஆதரவாளர் என்றும் அப்போது பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அவரது தூண்டுதலின்பேரிலேயே மேற்கண்ட தாக்குதல் சம்பவம் நடைபெற்றது என்றும் விமர்சித்தவர்களும் உண்டு. அதை மெய்ப்பிப்பது போன்றே, பிற்காலத்தில் பிரேமதாசா அந்நாட்டின் அதிபராக வந்ததும் ராஜீவ் காந்தியைத் தாக்கிய விஜயமுனியை நிபந்தனை ஏதுமின்று விடுதலை செய்த நிகழ்ச்சி அமைந்தது.

"ராணுவ அணிவகுப்பில் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி, பதவி விலக வேண்டும்' என்றார் இலங்கை நிதியமைச்சர் ரோனி டிமெல். ரோனி டிமெல்லின் கருத்துக்கு அதலத் முதலி சூடாகப் பதிலளித்தார். "இலங்கைக் கடற்படை, அதிபர் ஜெயவர்த்தனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ரோனி டிமெல் இப்படியெல்லாம் கோரிக்கை வைத்து அதிபரைச் சிறுமைப்படுத்துகிறார்.'

ஆனால் அதுலத் முதலியின் பாதுகாப்பு இலாகா பறிக்கப்படவும் இல்லை, இந்தியாவும் அந்த சம்பவத்தைப் பெரிது படுத்தவில்லை.

ராணுவ அணிவகுப்பில் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டு அதனால் மரணமடைந்திருந்தால்! இந்த விஷயத்தில் இந்திய அரசின் மௌனமும், ஜெயவர்த்தனா அரசின் கண்டும் காணாமலும் இருந்த போக்கும் விடையில்லாத புதிர்களாக இன்றுவரை தொடர்கின்றன...

101: பகடைக்காயாக எம்.ஜி.ஆர்?

போராளிகள் இந்தியாவின் ஆதரவை ஆரம்பக் காலத்திலிருந்தே, அதாவது 1983-ஆம் ஆண்டிலிருந்தே விரும்பினார்கள். அதன்படியே இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் பயிற்சியும், தொடர்ந்து ஆயுத உதவிகளையும் அவர்கள் பெற்றனர். தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் இலங்கை மீது இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியபோதுகூட விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் தங்களுக்கு ஆயுத உதவி செய்தால் போதும் என்றுதான் கூறி வந்தார்கள்.

இந்தச் சமயத்தில் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 27.10.1983-ஆம் நாளன்று சட்டமன்றப் பேரவையில் கூறியதை இங்கே குறிப்பிடலாம்:

""விடுதலைப் புலிகள் கூட இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று கேட்கவில்லை. மாறாக, எங்களுக்கு உதவி செய்யுங்கள்; முடிந்தால் ஆயுதம் கொடுங்கள் என்றுதான் கேட்டு வருகிறார்கள். தாங்களே அந்த இயக்கத்தை நடத்தத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தனி ஈழம் வேண்டும் என்று முடிவு செய்வதோ, கேட்பதோ அங்கு வாழும் தமிழ் மக்களே தவிர நாம் அதை முடிவு செய்துவிட முடியாது. ஈழத் தமிழர்களோ விடுதலைப் புலிகளோ மற்ற இலங்கைத் தமிழர் தலைவர்களோ படை அனுப்புங்கள் என்று கேட்கவில்லை (தினமணி 28.10.1983).

அப்போது, இலங்கை மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கூறியதையொட்டி எம்.ஜி.ஆர். அளித்த விளக்கம் இது:

இந்நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமானது இலங்கைத் தமிழர்கள் மீதும், போராளி அமைப்புகள் மீதும் திணிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், பின் நாளில் இதனைத் தமிழ் மக்களும் - அமைப்புகளும் ஏற்கிற சூழ்நிலையே உருவாயிற்று.

இந்நிலைக்கு மாறாக, இலங்கையின் தென் பகுதியில் இந்திய எதிர்ப்பு என்பது மிக வேகமாகத் தலைதூக்கிற்று. இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் தொடங்கிய போராட்டம் பின்னர் வன்முறையில் முடிந்தது. சிங்களத் தீவிரவாத கட்சியான ஜே.வி.பி. வெகு உக்கிரமாக இயங்கியது.

ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளில் தங்காலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.வி.பி.யால் கொல்லப்பட்டார். கலவரங்களை அடக்க வடக்கில் இருந்து ராணுவத்தினரை தெற்குப் பகுதிக்கு அனுப்பிய அதே நேரத்தில், இந்தியாவில் இருந்து "அமைதிப் படை' பலாலி விமான நிலையத்தில் வந்து (ஜூலை 30, 1987) இறங்கியது.

சிங்கள ராணுவத்தினரின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்ற நிலையில் இருந்த யாழ் மக்கள், இந்திய ராணுவத்துக்கு மாலை சூட்டி, பூர்ணகும்பம் எடுத்து வரவேற்றனர்.

இந்திய ராணுவ வருகை என்பது அவர்களின் "மீட்பர்' போன்று கருதப்பட்டது, உண்மை. அவர்களுக்கு இந்நிகழ்வு மகிழ்ச்சியை அளித்த அதேநேரத்தில், பிரபாகரனை, தில்லி அசோகா ஹோட்டலிலேயே அடைத்து வைத்திருப்பது சங்கடத்தையும் அளித்தது. பலாலியில் இந்திய ராணுவம் தங்கியிருந்த பகுதிகளை நோக்கிச் செல்லும் சாலையில் மக்கள் அமர்ந்து, தடையை ஏற்படுத்தி, பிரபாகரனை உடனே விடுவித்து இலங்கைக்கு அனுப்பும்படி குரல் கொடுத்தனர். இதற்கு என்ன பதில் சொல்வது என்ற உத்தரவை ராணுவத்தினர் மேலிடத்திலிருந்து பெறவில்லை. எனவே சாலைகளில் அமர்ந்திருந்த மக்களைப் பார்த்தார்கள். அவர்களது நோக்கம் என்னவென்று கேட்டுச் சென்றார்கள்.

அமைதிப் படையாக இலங்கைக்கு வந்த ராணுவம், போராளி இயக்கங்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதில் இறங்கியது. விடுதலைப் புலிகள் அமைப்போ ஒப்பந்தப்படி ஆயுதம் கையளிக்க வேண்டுமானால் பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பியாக வேண்டும் என்றும் அவரது அனுமதி இல்லாமல் ஆயுதங்களைத் திருப்பிக் கொடுப்பதில்லை என்றும் தீர்மானமாக மறுத்துவிட்டன.

1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி இன்னொரு முக்கிய நாளாகும். அன்றைய தினம் இந்திய-இலங்கை ஒப்பந்தப் பிரதிகளை மதுரையில் பழ.நெடுமாறனும், சென்னையில் கி.வீரமணியும் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தி பெருவாரியான தொண்டர்களுடன் கைதானார்கள். அன்றைய தினமே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஒப்பந்தம் நிறைவேற்றிய ராஜீவ் காந்திக்குப் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. சென்னை கடற்கரையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ராஜீவ் விருப்பப்படியே அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் பாராட்டு விழா கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரும் கலந்துகொள்ள வேண்டும் என்று ராஜீவ் விரும்பினார். ஆனால் அவர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி தவிர்த்து விட்டார்.

அந்த நாளில் அவர் அமெரிக்காவில் இருக்கும்படியாகத் திட்டமிருந்தபடியால், ஜூலை 31-இல் அவர் பயணப்பட்டு, அமைச்சர்களும் அவரது இல்லத்துக்கு வழியனுப்ப வந்துவிட்டார்கள். தொண்டர்களோ சென்னை விமான நிலையத்தில் கூடியிருக்க, விமானம் புறப்பட வேண்டிய நேரம் கடந்தும் எம்.ஜி.ஆர். வராததால் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் அமெரிக்கப் பயணம் ரத்தானதாக அங்கிருந்து ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

பாராட்டு விழாவுக்கு முன்தினம் எம்.ஜி.ஆர். புறப்பட்டுச் சென்றால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அவருக்கு விருப்பமில்லை என்று தற்போது நிலவிவரும் தகவல் உண்மையாகிவிடும். எனவே, அவரின் அமெரிக்கப் பயணத்தை ஒத்திவைத்து, ஒருநாள் தள்ளிப் போகச் செய்ய வேண்டும் என்று புலனாய்வு அதிகாரிகள் ராஜீவ் காந்தியை வற்புறுத்தி, அவரைச் செயல்பட வைத்தார்கள் என்ற தகவல் கூடவே வெளியாயிற்று. இதுகுறித்து 1999-இல் பதிப்பிக்கப்பட்ட "எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்' என்கிற நூலில் புலவர் புலமைப்பித்தன் கூறியதாகத் தகவல் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், புலமைப்பித்தன் கூறுவதாவது,

""தமிழீழம் விடுதலை பெற்று விடும் என்கிற ஒரு முழுமையான நம்பிக்கை உருவாகிற சூழ்நிலையில், தமிழீழம் விடுதலை பெறுவது, தங்களுக்கு மிகவும் கெடுதலான காரியமாக அமைந்துவிடும் என்று நம்பினார்கள், இந்திய அரசுத் தரப்பினர்.

""இலங்கை அமைச்சரவையில் ஜெயவர்த்தனாவிடத்தில் அதுலத் முதலி உள்ளிட்டோர் ஆரம்பத்தில் தமிழர் பிரச்னைக்கு முடிவு கட்டும்படி வற்புறுத்தியபோது கேட்டனர். ஜெயவர்த்தனா சொன்ன பதில் என்ன தெரியுமா? "என்னை பிரபாகரன் காலில் விழச் சொல்கிறீர்களா?' என்றார். அப்படியென்றால் என்ன பொருள் என்றால், இந்திய அமைதிப் படை வராமல் இருந்தால் பிரபாகரன் காலில் விழ வேண்டிய நிலை ஜெயவர்த்தனாவுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதாகும்.

ஜெயவர்த்தனா அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் ரோனி டி மெல். என்பவரும், அதே அமைச்சரவைக் கூட்டத்திலேயே சொன்னார். ""இலங்கை-இந்திய ஒப்பந்தம் மட்டும் கையெழுத்து ஆகாமல் இருந்திருக்குமானால் ஆறு மாதத்தில் தமிழீழம் விடுதலை பெற்று போயிருக்கும். இந்தியாவுடனான ஒப்பந்தம் நாட்டைப் பாதுகாப்பதற்கான ராஜதந்திர முயற்சி. அதைக் குறை சொல்லக்கூடாது.

""எம்.ஜி.ஆரின் ஆதரவுடன் தமிழீழம் மிகப்பெரிய அளவில் முன்னேறி வந்துவிடும்'' என்கிற காரணத்தினாலேயேதான் இந்தியத் துணை கண்டத்திலிருந்து அந்த ஒப்பந்தத்தைப் போட்டார்கள். அப்போது அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர். ஆதரிக்கவில்லை. மைய அமைச்சராக இருந்த நட்வர்சிங் ஒருமுறை ராமாவரம் தோட்டத்திற்கு இந்த ஒப்பந்தச் செய்தியைப் பற்றிப் பேச வந்தபோது, இதை என்னிடத்தில் பேசவே கூடாது எனக் கடுமையாகவும், கோபமாகவும் சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்.

""இந்தத் தவறான ஒப்பந்தத்திற்கு நானும் உடந்தையாக இருந்துவிடக் கூடாது'' என்கிற எச்சரிக்கை உணர்வில், சென்னை கடற்கரையில் ""ராஜீவ் காந்தி பாராட்டு விழாவில் பங்கேற்கக் கூடாது என்றும், விடுதலைப் புலிகள் கையெழுத்திடாத ஒப்பந்தத்திற்கு நடக்கும் பாராட்டு விழா இங்கு நடக்கிறது. இதில் நான் கலந்து கொள்ளக் கூடாது'' என்றும் எம்.ஜி.ஆர். நினைத்தார்.

""31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அமெரிக்கா புறப்படத் தயாரானபோது, தில்லியிலே இருந்து ஹாட்லைனிலே எம்.ஜி.ஆருடன் தொடர்பு கொண்ட ராஜீவ் காந்தி, "நீங்கப் போகக் கூடாது' என்றார். அவர் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆரையும் ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்பினார்கள்''

""அதோடு அந்த விழாவில் ராஜீவ் காந்தி, அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களின் கையை வலுக்கட்டாயமாகத் தூக்குகிறார்- அந்தப் படம் தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஏடுகளில் வந்திருக்கிறது. அப்போது எம்.ஜி.ஆர். அவர்களின் முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். ஒப்பந்த உடன்பாட்டை அவர் ஏற்கவில்லை என்பதை (பக்.133-136) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதே கருத்தையே பழ.நெடுமாறனும் தனது நூலொன்றில் பதிவு செய்கையில், "வேண்டா வெறுப்பாகவும் வேறு வழியில்லாமலும் எம்.ஜி.ஆர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

103: இந்தியாவை நேசிக்கிறேன்!

ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அன்று மாலையே விடுதலை செய்யப்பட்டனர். பழ.நெடுமாறன் சென்னை வந்ததும் அவரிடமும், கி.வீரமணியிடமும், விடுதலைப் புலிகள் ஆலோசகர் ஏ.எஸ்.பாலசிங்கம், நடேசன், பேபி சுப்ரமணியம் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அனுமதித்ததன் பேரில், ஆகஸ்ட் 4-இல் அவரைச் சந்தித்தனர். எம்.ஜி.ஆரின் உடல்நிலையைப் பார்த்ததும் பதறிப் போனார்கள். அவர் என்ன விஷயம் என்று கேட்டதும், இருவரும் உடன்பாடு பற்றிய தங்களதும், விடுதலைப் புலிகளினதுமான சந்தேகங்களை விவரித்தனர்.

பிரதமர் ராஜீவ் கூறியதைப் போன்று சொந்தப் பாதுகாப்பு கருதி விடுதலைப் புலிகள் இவ்வொப்பந்தத்தைச் சந்தேகப்படவில்லை என்றும் விளக்கினார்கள். ஆனால் எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் ஜெயவர்த்தனா மதித்து நடைமுறைப்படுத்த மாட்டார் என்பதையும் அவர்கள் கூறினர்.

இதுகுறித்து பழ.நெடுமாறன் கூறியதாவது:

""திரைப்படத் துறையில் நீங்கள் கொடிகட்டிப் பறந்தீர்கள். உங்களுக்குப் பின்னும் அந்தத் துறையில் பலர் வரலாம். அரசியல் துறையிலும் தமிழகத்திற்கு பல முதலமைச்சர்கள் உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் வரலாம். ஆனால் அந்த முதலமைச்சர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உங்கள் காலத்தில் ஈழத் தமிழர்கள் விடுதலை பெறப் போராடினார்கள். நீங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, தமிழீழம் அமையக் காரணமாக இருந்தீர்கள் என்பதுதான் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தை உங்களுக்குப் பெற்றுத் தரும். இதைச் சொல்லவே வந்தேன்'' என்று கூறினேன்.

""நான் பேசப் பேச அவர் உணர்ச்சிவசப்பட்டார். ஏதோ பதில் கூற முயன்றார். அவரால் முடியவில்லை. எனது கைகளை எடுத்து தனது நெஞ்சில் வைத்துக் கொண்டு, தன் கைகளால் நெஞ்சில் தட்டிக் காட்டினார். இவ்வாறு அவர் செய்யும்போது அவர் கண்களில் இருந்து நீர் கசிந்தது. எனக்கும் வீரமணிக்கும் கூடக் கண்கள் பனித்தன.

அவர் என்ன சொல்ல விரும்பினார் என்பது முழுமையாக விளங்காவிட்டாலும், ஓரளவு புரிந்தது.

பின்னர் சிற்றுண்டி வரவழைத்தார். எங்களுடன் அவரும் அமர்ந்து உண்டார். நிலைமைகளைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார் என்ற நிம்மதியில் நாங்கள் திரும்பினோம். இந்த சம்பவத்தை எனது "தமிழீழம் சிவக்கிறது' என்ற நூலிலும் பதிவு செய்திருக்கிறேன்'' என்றார் நெடுமாறன்(நேர்காணல்: 29.8.1987).

ஆகஸ்டு அதே 4-ஆம் தேதியன்று, ராஜீவ் காந்தி அழைப்பினை ஏற்று, சுதுமலை அம்மன் கோயில் திடலில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில்,

""யாழ்ப்பாணக் குடா நாட்டில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் பிரவேசித்து இந்தியப் பிரதமரின் அழைப்பின் மீதே என்னை ஏற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

நான் நாட்டைக் கடந்து மட்டும் செல்லவில்லை. தம் மண்ணிற்காகத் தமது உயிரை அர்ப்பணித்த 615 தியாகிகளின் உடல்களையும் கடந்தே செல்வதாக நினைக்கிறேன்...

என் மனச்சாட்சியை நான் விற்க விரும்பவில்லை. பெங்களூர்மகாநாட்டில் கலந்துகொண்டபோது நான் யாழ் மாவட்ட முதலமைச்சராக ஆகியிருக்கலாம். நான் தனி மனிதன். போராட்டத்தில் எத்தனையோ தியாகிகளை இழந்துவிட்டோம். நான் இறப்பது சாதாரண விஷயம். சயனைட்டை நான் கட்டியபின்பே மற்றவர்களும் கட்டியுள்ளனர். மனச்சாட்சிக்கு விரோதமாக நான் ஒருபோதும் நடக்கப் போவதில்லை.

இந்திய அரசு எனக்கு மட்டும் அழைப்பு விடுத்திருப்பது மக்களின் பிரதிநிதியாக என்னைக் கருத்தில் கொண்டபடியால்தான். நாம் மக்களுக்குள்ளேயே இணைந்து போராட்டம் நடத்தியதனால்தான் போராட்டம் இந்த நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. மக்கள் வேறு நான் வேறு அல்ல. முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்லன். நிம்மதியான வாழ்வு மக்களுக்கு அமையவேண்டும் என்பதே என் ஆசை.

இன்று கிடைத்த கெüரவம் தமிழ் மக்களுக்குக் கிடைத்த கெüரவமே தவிர, சாதாரண எனக்குக் (பிரபாகரனுக்கு) கிடைத்ததல்ல. இதுவரையில் நான் இந்தியாவினால் இப்படிக் கெüரவமாக அழைக்கப்படவில்லை. இக்கெüரவத்தை தமிழீழ மக்களுக்கும், மற்றைய தியாகிகளுக்கும், இன்னும் களத்தில் உள்ள சக போராளிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன். தீர்வு சரியில்லை என்றால் நாம் மக்களை எச்சந்தர்ப்பங்களிலும் கைவிடப்போவதில்லை. எமது போராட்டம் தொடரும்'' என்று பிரபாகரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தில்லியில் நடைபெற்றது என்னவென்பதை ஈழ மக்களுக்குத் தெரிவிப்பது வரலாற்றுக் கடமை என்று பிரபாகரன் உணர்ந்தார். தற்போதுள்ள நிலையை விளக்க கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, அதில் தெரிவிக்க அவர் விரும்பினார்.

இந்தக் கூட்டமே அவர் தனது வாழ்நாளில் மேடை ஏறிய முதல் கூட்டமாகும். "இந்தியாவை நேசிக்கிறேன்' என்ற பிரபாகரனின் புகழ்வாய்ந்த அந்தப் பேச்சை சென்னைத் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய உரை வருமாறு:

""இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டதுபோல, இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவுகள் எமக்குச் சாதகமாக அமையுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல், இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அவசர அவசரமாக அமலாக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் தில்லி செல்லும்வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.

பாரதப் பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி என்னை தில்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. பல கேள்விக்குறிகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பது பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது. ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்கு தெள்ளத் தெளிவாக விளக்கினோம்'' என்றார், பிரபாகரன்.

இரு நாடுகளுக்கிடையே இந்த ஒப்பந்தம் உருவானதால் இரு நாடுகளின் நலன்களும் இதில் அடங்கியிருக்கிறது என்பதையும் தனது உரையில் விளக்கினார்.

அவர் மேலும் பேசுகையில், ""ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாது போனாலும் இந்த ஒப்பந்தத்தை அமலாக்கியே தீருவோமென இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது. இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்னையை மட்டும் தொட்டு நிற்கவில்லை.

இது பிரதானமாக இந்திய-இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க வியூகத்தின் கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகார சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழி வகுக்கிறது. ஆகவேதான் இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதில் அதிக அக்கறை காட்டியது.

ஆனால் அதே சமயம், ஈழத் தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது. ஆகவேதான், எமது மக்களைக் கலந்தாலோசிக்காது, எமது கருத்துகளைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக ஆட்சேபித்தோம்.

ஆனால் நாம் ஆட்சேபித்ததில் அர்த்தமில்லை. எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும்பொழுது நாம் என்ன செய்வது?'' என்றார்.

ஒப்பந்தம் தங்களைப் பாதிப்பது எவ்வாறு என்பது குறித்து அவர் விளக்குகையில்,

""இந்த ஒப்பந்தம் நேரடியாக எமது இயக்கத்தைப் பாதிக்கிறது; எமது அரசியல் லட்சியத்தைப் பாதிக்கிறது; எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது; எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது.

பதினைந்து வருடங்களாக, ரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனைகள் கட்டி எழுப்பப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. திடீரென கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமின்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணிகளாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம்.

இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி என்னை அழைத்துப் பேசினார். அவரிடம் எமது பிரச்னைகளை மனம் திறந்து பேசினேன். சிங்கள இனவாத அரசில் எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லையென்பதையும் இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்னை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் அவரிடம் பேசினேன்.

பாரதப் பிரதமர் எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார். எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்திய சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம்'' என்றார்.

ஆயுத ஒப்படைப்பால் ஏற்படப் போகும் ஆபத்து குறித்து அவர் விளக்குகையில்,

""நாம் எமது மக்களின் பாதுகாப்பிற்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை. எமது லட்சியப் பற்றும், தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.

உங்களது பாதுகாப்பிற்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விமோசனத்திற்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்.

ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை. இந்திய அரசு எம்மிடமிருந்து பெற்றுக்கொள்வதிலிருந்து எமது மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைத்தான் குறிக்கிறது'' என்றார்.

அவர் தனது உரையில், இந்தியாவுக்குத் தாங்கள் எதிரிகளல்ல என்றும் விளக்கினார்,

""நாம் ஆயுதங்களைக் கையளிக்காது போனால் இந்திய ராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய மக்களை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடமிருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய ராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவரது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு இடித்துக் கூற விரும்புகிறேன்'' என்றார்.

தொடர்ந்து பேசுகையில், ""இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள இனவாதப் பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரபாகரன் தொடர்ந்து பேசுகையில்,

""தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ லட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் நான் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எனது போராட்ட லட்சியம் மாறப் போவதில்லை. எமது லட்சியம் வெற்றி பெறுவதானால் எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்''.

""தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்குபெற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்''

""புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'' என்று பிரபாகரன் கூறித் தனது உரையை அவர் முடித்தார்.

உரையாற்றும்போது, பிரபாகரன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார். பேச்சும் அவ்வாறே இருந்தது. மக்களும் அதே மனநிலையில் இருந்தனர். லட்சக்கணக்கில் திரண்ட மக்களிடையே இந்திய-இலங்கை ராணுவ அதிகாரிகள், உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினரும் கலந்துகொண்டனர்.

104: அமைதிப்படையும் ஆயுதக் கையளிப்பும்!

அமைதிப்படை வான் வழியாகவும், கடல் வழியாகவும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது. அதன் முகாம்கள் யாழ்குடாவில் பலாலி, வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம் பகுதிகளில் நிலைகொண்டன. மட்டக்களப்பில் அதிக அளவு ராணுவப்படை தேவையில்லை என்ற உத்தரவே முதலில் இடப்பட்டிருந்தது. ஆனாலும் அங்கும் முழு அளவில் அமைதிப்படை ஈடுபடுத்தப்பட்டது. அம்பாறை பட்டியலில் இல்லை; பின்னர் அதுவும் சேர்க்கப்பட்டது.

ஐ.பி.கே.எஃப் - என்று அழைக்கப்பட்ட அமைதிப்படையின் பிரிவுகளுக்கு "ஆபரேஷன் பவான்' என்று பெயரிடப்பட்டிருந்தது. "பவான்' என்றால் "சுத்தமான காற்று' என்று அர்த்தப்படுத்தலாம். அனுமனையும் சம்பந்தப்படுத்தலாம். அனுமனுக்கு "பவன்புத்ரா' என்றுதான் பெயர். அதாவது வாயுபுத்ரா-காற்றின் மைந்தன் எனப் பொருளாகும்.

அமைதிப்படைக்கு இடப்பட்ட பணிகளை லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்சிங் கூற்றுப்படி இவ்வாறு பிரிக்கலாம்:

1. இலங்கை - விடுதலைப்புலிகளிடையே நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வந்து, போர்நிறுத்தம் ஏற்படுத்துவது-கண்காணிப்பது.

2. விடுதலைப்புலிகள் மற்றும் இதரப் போராளிக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவது.

3. இலங்கை அரசப்படைகள் 1987 மே மாதத்தில் இருந்த நிலைகளுக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துவது-வற்புறுத்துவது-கண்காணிப்பது.

4. போரினால் வெளியேறிய மக்களை அவர்களின் வாழ்விடங்களில், திரும்ப வந்து வசிக்கச் செய்வது.

இதுதவிர, வடக்கு கிழக்குப் பகுதிகளில் காவல் நிலையங்கள் செயல்படாத நிலை. எனவே, சட்டம்-ஒழுங்குப் பணிகளையும் மேற்கொள்ள நேர்ந்தது.

லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்சிங், பலாலி விமானதளத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதும், அவரை இந்திய அமைதிப்படையின் (பொறுப்பு) மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங் (54-வது பிரிவு தரைப்படை), இலங்கை அரசுப்படையின் கமாண்டர், பிரிகேடியர் ஜெர்ரி.டி. சில்வா சந்தித்தனர்.

தீபிந்தர்சிங், யாழ் பகுதிகளைத் தரைவழியாகச் சென்று பார்க்க விரும்பினார். அதற்கு ஹர்கிரத்சிங், சாலை முழுவதும் நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக, சாலைக்காவலில் ஈடுபட்ட அமைதிப்படை சிப்பாயிடம், விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். சிப்பாய் நிலக்கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும்படி கேட்டதும், பிரபாகரன்தான் தங்களுக்கு இதுகுறித்து உத்தரவிடவேண்டும் என்றும், அவர் தில்லி ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் வந்தால்தான் உண்டு என்று தெரிவித்திருக்கிறார்கள்' என்றார்.

இதுகேட்டு தீபிந்தர்சிங், இது உண்மையா இல்லையா என்கிற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பவேண்டிய அவசியத்தைத் தலைமைக்கு வலியுறுத்தினார்.

பிரபாகரன் யாழ் திரும்புவதற்கு பல்வேறு வகையான நெருக்குதல்கள் இருந்தபோதிலும், இந்தக் காரணமும் அதில் ஒன்றாகச் சேரக்கூடும் என்பதும் உண்மையே.

தீபிந்தர்சிங்கும், இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் சிரில் ரணதுங்கேயும் பலாலி விமானதளத்தில் உள்ள பார்வைக்கோபுரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, உலக அளவிலான பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர், இலங்கையில் இந்திய அமைதிப்படை எத்தனை காலம் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில் அதிக அக்கறை காட்டினார்கள்.

தர்மசங்கடமான இந்தக் கேள்விக்கு தீபிந்தர்சிங் "இந்தப் பணி முடியும் வரை' என்று பதிலளித்தார்.

பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பியதை அடுத்து, ஆயுதம் கையளிப்பது தொடர்பான ஆலோசனையை அவரிடம் செய்யவேண்டிய அவசியம் தீபிந்தர்சிங்குக்கு ஏற்பட்டது. இதற்கான ஏற்பாடு அவர் தங்கியிருந்த இடத்தினருகே உள்ள விருந்தினர் இல்லத்தில் செய்யப்பட்டிருந்தது. பிரபாகரன், யோகரத்தினம் யோகியுடன் வந்தார். இது தவிர, மேலும் இரு விடுதலைப் புலிகளும் உடன் வந்தனர்.

இதுகுறித்து தீபிந்தர்சிங் தனது நூலில், ""அறைக்குள் நுழைவதற்கு முன்பாக பிரபாகரன் தனது காலணிகளை வாசலுக்கு வெளியே கழற்றிவிட்டு உள்ளே வந்தார். அவர் "புஷ்' சர்ட் அணிந்திருந்தார். உயரம் அதிகமில்லை. நல்ல கட்டுமஸ்தான உடம்பு. பார்க்க அழகானவராக இருந்தார். முகம் இறுகினது போல இருந்தது. அவரைப்பற்றிய வீரப்பிரதாபங்கள் பலவற்றைக் கேள்விப்பட்டிருந்த நிலையில், அதில் சில உண்மையாக இருக்கவும் வாய்ப்புண்டு-என்பது எனது கணிப்பாக இருந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் நூலில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, "டீ சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் இந்தியாவின் வற்புறுத்தலுக்கிணங்க போர்நிறுத்தம் மற்றும் ஆயுதம் கையளிப்புக்கு இணங்கியதாகத் தெரிவித்தபோது, இச்சூழ்நிலை இலங்கை அரசு யாழ்ப்பாணம் மீது ஏற்படுத்திய பொருளாதாரத்தடை மற்றும் ராணுவம் மக்கள் மீது தொடுத்த தாக்குதல்கள் காரணமாகவும், மக்கள் பட்ட துன்பம் காரணமாகவும் எழுந்தது என்று விளக்கினேன். தில்லியில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த பேச்சு எழவில்லை. ஆனால் அவரது பேச்சுகளில் இருந்து இந்திய வெளிவிவகாரத்துறை மற்றும் "ரா' அமைப்பில் உள்ளவர்களின் செயல்பாடுகளால் கோபம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும், இனி அவர்களது பேச்சை எந்தக் காலத்திலும் நம்பமாட்டார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்தும் அவரிடம் எதுவும் விவாதிக்கவில்லை. ஆயுதம் கையளிப்பது தொடர்பாகத் தனது தளபதிகளிடம் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று கூறியது தொடர்பாக, ஞாபகப்படுத்திக் கேட்டபோது அடுத்தடுத்த நாளில் நடைபெறும் என்றார். இலங்கை அரசு ஆயுதம் கையளிப்பதை விரிவான அளவில் விளம்பரம் செய்வதாக இருந்ததை அவர் விரும்பவில்லை. மேலும் எந்த ஓர் ஆயுதத்தையும் இலங்கை அரசிடம் நேரடியாகக் கையளிப்பதையும் அவர் விரும்பவில்லை என்பதும் தெரியவந்தது' என்கிறார் தீபிந்தர்சிங்.

அடுத்தநாள் தீபிந்தர்சிங் யாழ்ப்பாணப் பல்கலைத் திடலில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கவும், அவரை மாத்தையா வரவேற்று, பிரபாகரன் இருக்குமிடத்துக்கு அழைத்துச் சென்றார். ஆயுதம் கையளிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இலங்கை அரசிடம் ஆயுதம் கையளிப்பது நடக்காது என்றே பிரபாகரன் தெரிவித்தார். ஆயுதம் கையளிப்பது இல்லை என்றால், போராளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது என்பது தடைபடும். எனவே, ஆயுதம் கையளிப்பது என்பதை அவரின் பிரதிநிதியாக ஒருவர் ஆயுதம் வழங்க, இந்தியப் பிரதிநிதி முன்னிலையில் ஆயுதத்தை அளித்தால் போதும் என்று தீபிந்தர்சிங் யோசனை கூறினார்.

அதன்படி, பலாலி ராணுவ முகாமில் ஆயுதக் கையளிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரு மேசை போடப்பட்டு, அதன் எதிர்ப்புறத்தில் மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் சேபால அட்டியகாலேவும் நிற்க, இந்தப் பக்கத்தில் நின்ற யோகரத்தினம் யோகி, ஒரு துப்பாக்கியைக் கையளிப்புக்கு அடையாளமாக மேசையில் வைத்தார்.

இந்தக் காட்சியை இலங்கை, இந்தியப் பத்திரிகையாளர்கள் தவிர, உலகநாடுகளின் பத்திரிகையாளர்களுமாக 200 பேர் பதிவு செய்தனர். இதே நேரத்தில், ஜெயவர்த்தனா போராளிகளுக்கு வழங்கிய பொதுமன்னிப்பை அட்டியகாலே வாசித்தபின், அக்கடிதத்தை யோகியிடம் வழங்கினார். ஆயுதக் கையளிப்பு நிகழ்ச்சி முடிவுற்றது.

105: ஒப்பந்தம் மீது சந்தேகம்!

ஆயுதக் கையளிப்பு நிகழ்ச்சிகள் வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ந்து நடைபெற்றன. இந்தக் கையளிப்பில் விடுதலைப் புலிகள் தவிர, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப்., ப்ளாட், டெலோ இயக்கங்களும் பங்குபெற்றன. (முறிந்த பனை பக்-164) இந்த நிகழ்ச்சிகள் ஒரு விழாவினைப்போன்று ஏற்பாடு செய்யப்பட்டு, விரிவான அளவில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாக்கப்பட்டன. இந்தியா, இலங்கை ஆகிய இருநாடுகளின் ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்கு இந்த விளம்பரம் தேவையாக இருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் சில வாகனங்கள் நிறைய ஆயுதங்களைக் கொண்டுவந்து பலாலியில் இறக்கியது. அதில் சிலிண்டர் வடிவ ஆயுதங்களும் இருந்தன. தீபிந்தர்சிங், இந்த சிலிண்டர் வடிவில் இருப்பது என்னவென்று வினவியபோது குண்டுவீசப் பயன்படும் 175எம்.எம். மோர்ட்டார் என்று தெரிவித்தனர். இவை உள்ளூர் தயாரிப்பு என்றதும் அவர் வியந்தார்.

ஆயுதக் கையளிப்பு நிகழ்ச்சிகளில் கையளிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகக்குறைவு என்று ஜெயவர்த்தனா அபிப்பிராயப்பட, கைதிகள் விடுதலையிலும் சுணக்கம் தென்ப்பட்டது.

அதேபோன்று, மக்களும் போராளிகளும் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவே அமைதிப்படை என்று முதலில் நினைத்தனர். ஆனால், நாளடைவில் கனரக ஆயுதங்களும் பீரங்கிகளும் வந்து இறங்கவும், அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அமைதியை நிலைநாட்ட வந்த படைக்கு, இந்த கனரக ஆயுதங்கள் எதற்கு என்பது புரியாத புதிராக இருந்தது.

முதலில் மக்களது கோரிக்கைகளை கவனிப்பது போன்று செயல்பட்ட அமைதிப்படையின் போக்கு நாளடைவில் மாறத் தொடங்கியது. அப்படைக்கு, இந்திய-இலங்கை நலன்களே "குறி' என்பதும் வெளிப்டையானது.

இது குறித்து புஷ்பராஜா தனது நூலில், "இந்திய ராணுவம் இலங்கையில் தன்னைச் சமாதானப்படையாக எண்ணாமல் ஒரு கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் இருக்கும் ராணுவம் போல வலம் வரத்தொடங்கியது. இதற்கு இந்திய ராணுவ அதிகாரிகளின் கற்பனையும் இந்திய ராஜதந்திரிகளின் தவறான கணிப்பீடும் காரணங்கள் எனச் சொல்லலாம்... நாங்கள் சொல்வதற்கு மட்டுமே கட்டுப்படுங்கள் என்ற வாத்தியார்த்தனம் இந்தியாவிடம் இருந்தது. முக்கியமாக இந்திய உளவுப்பிரிவான "ரா' இலங்கைப் பிரச்னையில் தவறான கணிப்பீடுகளைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், ராஜதந்திரிகளையும் தவறான கணிப்பீடு கொள்ளவைத்தது' என்று குறிப்பிடுகிறார்.

அதுவே நாளடைவில் அமைதிப்படையின் செயல்பாடுகளிலும் காணப்பட்டது. ஆயுதங்களைப் பறித்தெடுப்பதில் காட்டப்பட்ட அக்கறை, இடைக்கால அரசு அமைப்பதில் காட்டப்படவில்லை. ஆயுதங்களைக் கையளிக்க 5 நாள்கள் அவகாசமும், இறுதி முடிவு எடுக்கப்படாத விஷயங்களை இந்தியாவும்-இலங்கையும் பேசி முடிவெடுக்க ஆறுவாரம் கெடுவும் அளிக்கப்பட்டது -ஒரு விநோதமான செயல்பாடு ஆகும். இந்தக் குறிப்புப்படி எந்தவிதமானப் பேச்சும் இரு அரசுகளுக்கிடையே நடைபெறவில்லை.

மாறாக 13-வது திருத்தமாக ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேறியது. இந்தச் செயலை அப்போதைய வெளியுறவுச் செயலாளரான ஏ.பி.வெங்கடேஸ்வரன், "அதிகாரப் பகிர்வு செய்யாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டிய செயல்' (இந்து நாளிதழ்-13 ஆகஸ்டு 1987) என்று விமர்சித்தார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் 1.14-இன் ஷரத்துப்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் வரலாற்றுக் குடியிருப்புப் பிரதேசங்கள் என்று குறிப்பிட்ட நிலையில், தமிழர் தாயகம் என்பதை மறுப்பதும் விநோதமான ஒன்றே.

ஜூலை 26 1987-இல் யு.என்.பி.யின் பொதுக்குழுக் கூட்டத்தில் "இணைப்பு என்பதும், வாக்கெடுப்பு என்பதும் நாடகம்தான் என்றும், தமிழர்களின் குழுக்களே இதனை முறியடித்துவிடுவர்' என்றும் ஜெயவர்த்தனா பேசியதின் மூலம் இந்த ஏமாற்று நாடகம் அம்பலத்துக்கு வந்தது. அதுமட்டுமல்ல, ""இவ்வொப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயம் என்னவென்றால், பயங்கரவாத இயக்கத்துக்கு அது ஒரு முடிவைக் காணும்'' என்றும் ஜெயவர்த்தனா குறிப்பிட்டாரே தவிர, இடைக்கால அரசு பற்றி குறிப்பிடவில்லை. ஆனால், இதுபற்றியும் இந்தியா எந்தக் கருத்தும் சொல்லவே இல்லை என்பதுதான் உண்மை.

தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் என்பது, அந்தப் பகுதி தமிழரின் தாயகம் என்பதைத் தவிர்ப்பதற்காகவும், தமிழர்கள் ஒன்றுபட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்காகவும் சொல்லப்பட்ட சதி என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சுதந்திரத்துக்கு முன்பே தரிசு நிலம் மற்றும் உவர்நில மேம்பாட்டுத் திட்டத்தின்பேரில் நிலத்தைக் கையகப்படுத்தி அவை பிரித்தளிக்கப்பட்டது. அதில் தமிழர்களைவிடவும், சிங்களவர்கள் அதிக அளவில் குடியேற்றப்பட்டார்கள் என்பதும், நாளடைவில் கிழக்குப் பகுதியின் நெற்களஞ்சியப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை வன்முறை மூலமும், அரசு திட்டங்கள் மூலமும் வெளியேற்றி, அந்தப் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தினார்கள் என்பதும் முந்தைய பகுதிகளில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்தக் குடியேற்றங்களை முதன்முதலில் சுதந்திர இலங்கையில் ஆரம்பித்துவைத்தவர் சேனநாயக்கா. அவர், அப்போது தன்னை முதலாம் பராக்கிரமபாகு என்று அழைப்பதைப் பெருமையாகக் கருதினார். முதலாம் பராக்கிரமபாகு தமிழர்களை வீழ்த்தி, சிங்கள ராஜ்ஜியத்தை உருவாக்கி, அங்கே பெüத்தத்தை விதைத்தவன் ஆவான்.

சேனநாயக்காவும் வெள்ளைச் சால்வை அணிந்து, பெüத்த சின்னங்கள் முன்பு தரையில் விழுந்து வணங்கியதோடு, அச்சின்னங்கள் அடங்கிய பெட்டியை சுமந்துசென்று சிங்கள-பெüத்த மேலாண்மைக்கு வித்திட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கான தொலைநோக்கில் அவர் தமிழர் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தினார்.

இதன் காரணமாக, கோல்புரூக் காலத்தில் (1833) மூன்று சிங்கள மாகாணங்கள் என்றிருந்த நிலையில், ஏழு மாகாணங்கள் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தமிழர் பிரதேசமாக இரு மாகாணங்களாக, கரையோரமுள்ள பகுதிகளாக மட்டுமே அமைந்தன. ஒட்டுமொத்த இலங்கையில் அமைந்துள்ள ஒன்பது மாகாணங்களில் சிங்கள மாகாணங்கள் போக, மீதமுள்ள இரண்டு தமிழ் மாகாணங்களையும் சிதைக்கும் நோக்கத்துடன் சிங்களக் குடியேற்றம் அவ்வப்போது நடைபெற்றது.

தமிழ் மாகாணங்களில் விவசாய-குடிநீர்ப்பாசனத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அங்கே அதிக அளவில் சிங்களவரைக் குடியேற்றினார்கள். விவசாய நிலப்பகுதி தவிர்த்து வடக்கில் அமைந்துள்ள காட்டுப்பகுதியும், கிழக்கில் உள்ள வேடர் பிரதேசங்களையும் குடியேற்றம் விட்டுவைக்கவில்லை.

1950-களில் அல்லை, காந்தளாய் மற்றும் கல் ஓயா குடியேற்றங்களில் இன விகிதாச்சாரம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. திருகோணமலையில் யான் ஓயா, மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுரு ஓயா, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலி ஓயா ஆகியவற்றிலும் இதே பாகுபாடுதான். சிங்களவர்களுக்கு மட்டும் ஒரு குடும்பத்தில் ஏற்படும் இயற்கை அதிகரிப்பு கணக்கிடப்பட்டு ஒரு குடும்பத்துக்கு மூன்று நான்கு என காணித்துண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இவ்வாறு உருவாக்கப்படும் குடியேற்றத் திட்டங்களில் அந்த ஊரின் தமிழ்ப்பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுவிட்டன. (உ-ம்) நொச்சிகுளம்-நொச்சியாகம, அம்பாறை-திகாமடுல்ல, அம்பலாங்கொடை-அம்பலாங்கொடம்ல, மணல் ஆறுத்திட்டம்-வெளி ஓயா, கோமரங்கடவை-கோமரங்கடவல, முதலிகுளம்-மொரவெவ.

கெண்ட் பண்ணை-டாலர் பண்ணை முதலியவற்றில் தமிழர்களே பெரும்பான்மை. அவர்களை வெளியேற்றிவிட்டு அங்கே சிங்களவர்களைக் குடியமர்த்திவிட்டார்கள்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் கிழக்கு மாகாணம் முன்பு திருகோணமலை, மட்டக்களப்பு என இரு மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். அதிரடியாக மட்டக்களப்பில் சிங்களவரை அதிக அளவில் குடியேற்றி அம்மாவட்டத்தைப் பிரித்து, அம்பாறை மாவட்டம் எனப் புதிதாக, உருவாக்கி சிங்களப் பெயராகவும் அறிவித்துவிட்டார்கள்.

இவையெல்லாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்பாக நடந்த குடியேற்றங்களில் பத்து சதவிகிதக் குறிப்புகள் மட்டுமே. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட 2.4 ஷரத்துப்படி, வன்முறையால் வெளியேறிய அல்லது வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்தவர்களைக் குடியமர்த்தத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கவேண்டும் என்பதாகும்.

ஆனால் கிழக்கு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த தமிழர்களை அங்கே குடியமர்த்த முயற்சி எடுக்காது, சிங்களவர்களைக் குடியமர்த்துவதில் அரசு தீவிரம் காட்டியது. அம்பாறை மாவட்டத்திலும் இதே நிலைமைதான். குடியேற்ற விஷயத்தில் அரசு திட்டமிட்டுத் தமிழர்களுக்குத் துரோகம் செய்தது. இதனால் தமிழர்கள் மத்தியில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மீது சந்தேகம் எழுந்தது.

106: கேள்விக்குறியான புலிகளின் பாதுகாப்பு!

ஒப்பந்தத்தில் இல்லாவிட்டாலும் சட்டம் ஒழுங்கு இந்திய அமைதிப்படையின் பொறுப்பில் விடப்பட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் குறிப்பிட்டுள்ள நிலையில், கிழக்கில் புதிதாக காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கும் ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ரயில்வே பாதையை ஆய்வு செய்ய ஒரு குழு வந்தது. சிலிப்பர் கட்டைகள் நீக்கப்பட்டிருந்த நிலையில் புதிய சிலிப்பர் கட்டைகள் பொருத்தப்பட்டன. குறிப்பிட்ட தூரம் ரயில் ஓட்டியும் காட்டப்பட்டது.

அதேபோன்று வான்சேவை துவங்கிற்று. சென்னையிலிருந்து கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் விமானப் போக்குவரத்தை நடத்த இந்திய அமைதிப்படை நிர்வாகம், ஏற்பாடு செய்திருந்தது. சென்னையில் வசித்த யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைவாழ் தமிழர்கள் தங்களது இல்லம் திரும்பவே இந்த வசதி செய்யப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகள் இயக்கம், ஆயுதங்களைக் கையளித்த நிலையில், அரசியலுக்குத் திரும்ப முடிவு செய்திருந்தது. தங்களது போராளிக் குழுவினருக்கு கவிஞர் காசி ஆனந்தன் அரசியல் வகுப்பு நடத்தப் பணிக்கப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழமுரசு, உதயன் பத்திரிகைகளில் காரசாரமான மரபு சார்ந்த விமர்சனங்கள் இடம்பெற்றன. அப்பத்திரிகைகளின் விமர்சன இலக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி செயல்பாடுகள் குறித்தே அதிக அளவில் இடம்பெற்றன.

வன்னிப் பகுதிகளில் "த்ரீ ஸ்டார்' என்று அழைக்கப்பட்ட ஈஎன்டிஎல்எஃப், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., டெலோ இயக்கத் தவர்கள் விடுதலைப் புலிகள் மீது தாக்குதலைத் தொடுக்கத் தூண்டப்பட்டார்கள். அத்தகையவர்களுள் பிரபலமானவர்கள் பிளாட் இயக்க உறுப்பினரான சங்கிலி(கந்தசாமி)யும், ஈஎன்டிஎல்எஃப் ராஜனும் ஆவார்கள்... (ஆதாரம்: முறிந்தபனை : பக் 168)

விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதம் கையளித்த சூழ்நிலையில், மற்ற இயக்கங்களும் ஆயுதங்களை அமைதிப்படையிடம் ஒப்படைத்துவிட்டதாகச் சொன்ன நிலையில், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆயுதக் குழுக்களிடையே தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் அடுத்தடுத்து வந்தன.

இந்நிலையில் பிரபாகரன், லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கை 15-8-1987அன்று சந்தித்தபோது, சில புகார்களைத் தெரிவித்தார். அதுகுறித்து தனது நூலில் தீபிந்தர் சிங் குறிப்பிடுவதாவது:

""எங்களை ஆயுதங்களைக் கையளிக்கச் சொல்லிவிட்டு, அது நடந்த பின்னர், "ரா' அமைப்பு, பிற ஆயுதக்குழுக்களான டெலோ, ஈபிஆர்எல்எஃப் மற்றும் ஈஎன்டிஎல்எஃப் இணைந்த "த்ரீ ஸ்டார்' என்கிற அமைப்பை எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு மோதல்களை நடத்தி வருகிறது'' என்று தெரிவித்தார். இந்தப் புகார்கள் கடுமையானவை. இதுகுறித்து ராணுவத் தலைமையகத்துக்குத் தெரியப்படுத்தினேன்.

அங்கிருந்து வந்த தகவல்கள் புகாரை உறுதிப்படுத்துவதாக இல்லை. எனவே, பிரபாகரனிடம் இந்தப் புகார் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தபோது, அவரோ புகாரில் உறுதியாக இருந்தார். பிற இயக்கங்களிடையே "ரா' அமைப்புக்கு உறுதியான தொடர்புகள் இருக்கின்றன என்றார். மேலும் தகவல்கள் கிடைக்கும்வரை காத்திருக்கும் நேரத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள போராளிகளைக் காவல் பணியில் ஈடுபடுத்தலாமா என்று யோசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனென்றால் அந்த சமயத்தில் யாழ்ப் பகுதிகளில் காவல் நிலையங்கள் மூடப்பட்டு அந்தப் பணி உள்ளிட்ட சிவில் நிர்வாகத்தை விடுதலைப் புலிகளே செய்து வந்தனர். தற்சமயம் இந்தப் பணியையும் அமைதிப்படையே செய்யவேண்டும் என்றபோது, உள்ளூர்வாசிகளை அதில் ஈடுபடுத்துவது சரியானதாக இருக்க முடியும் என்பதையும்விட, விடுதலைப் புலிகளுக்கு மாற்று வேலை வழங்கினதாகவும் ஆகும் என்று தீபிந்தர்சிங் நினைத்தார். ஆனால், ராணுவத் தலைமை அவரது முதல் பணி ஆயுதங்களைப் பறிப்பதுதான் என்று நாகரிகமாக மறுத்துவிட்டது.

பிற போராளி அமைப்புகளுக்கு "ரா' அமைப்பு திரும்பவும் ஆயுதங்கள் அளித்ததை தீபிந்தர்சிங் நிராகரித்த நிலையில், இதற்கான ஆதாரத்தை மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்கிடம் விடுதலைப் புலிகள் அளித்ததாக அப்போது செய்திகள் வெளியாயின.

இந்தச் சம்பவம் குறித்து ஹர்கிரத் சிங் தான் எழுதிய நூலில், ""விடுதலைப் புலிகள் ஆயுதக்கையளிப்பை ஆகஸ்டு 21-ம் தேதி முடித்தார்கள். இந்த நேரத்தில் பிரதமர் அலுவலக உத்தரவின் பேரில், "ரா' அமைப்பு பிற போராளி அமைப்புகளுக்கு ஆயுதம் வழங்குகிறது என்கிற புகாரையடுத்து, தலைமை அலுவலகத்துக்கும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் மற்றும் அவரது ராணுவ ஆலோசகருக்கும் அறியப்படுத்தப்பட்டது.

விடுதலைப் புலிகள் அளித்த வீடியோ ஆதாரத்தை இந்தியத் தூதருக்குப் போட்டுக் காட்டினேன். அந்த வீடியோ காட்சிகளில் "ரா' அதிகாரிகள் வழங்கியதாகச் சொல்லப்படும் ஆயுதங்களில் இந்தியக் குறியீடுகள் இருந்தன.

இவ்வாறு விடுதலைப் புலிகள் தவிர்த்து, மற்ற குழுக்களுக்கு ஆயுதம் வழங்கப்பட்டதானது, குழுக்களுக்கிடையே மோதல் போக்கை உருவாக்கியது. யாழ்ப்பாணம் அமைதிப்படை முகாமுக்கு விடுதலைப் புலிகள் வந்து, "இவ்வாறு பிற குழுக்களுக்கு ஆயுதம் அளிப்பதால் எங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. ஈ.என்.டி.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்த 150 பேருக்கு கிளிநொச்சியில் பயிற்சி அளிக்கும் பொறுப்பையும் "ரா' ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் எங்களது போராளிகளுக்கு ஆபத்து அதிகரித்துள்ளது' என்று மீண்டும் புகார் தெரிவித்தனர்.

"இந்திய அரசு இதுபோன்ற சூழ்நிலையை ஏன் உருவாக்கவேண்டும் "ரா' அமைப்பு பிரதமர் ராஜீவ் காந்தியின் அறிவுறுத்தல் பேரில் நடந்துகொள்வதாகச் சொல்லப்படுவதை உண்மையில் பிரதமர் அறிவாரா? பிரதமர் ராஜீவ் காந்தியின் குரலாகச் செயல்படும் இலங்கையின் இந்தியத்தூதர் இதைத் தடுக்க ஏன் முன்வரவில்லை? இதன் விளைவுகள் என்னவாகும் என்பது அவர் அறியாததா?' என்றும் ஹர்கிரத் சிங் அடுக்கடுக்காக பல கேள்விகளை தனது நூலில் எழுப்பியுள்ளார்.

107: போராளி இயக்கங்களிடையே மோதல்!

இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு எதிராக மறைமுகமாக ஆயுதங்கள் வழங்குவது அவர்களை அடக்கியொடுக்கத்தான் என்று குற்றச்சாட்டு எழுந்தது. பிற இயக்கங்களுக்கு விடுதலைப் புலிகள் குறித்தும் அமைதிப்படை குறித்தும் ஐயப்பாடுகள் இருந்தன என்பது பல்வேறு செய்திகளில் இருந்து தெரிய வருகிறது.

"முறிந்த பனை' நூலில் இந்த சந்தேகங்களும், அதன் செயல்பாடுகளுமான பதிவில் கூறப்பட்டிருக்கிறது. "விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பிரத்தியேகமாக இந்தியர்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தமையானது, விடுதலைப் புலிகளைக் கணக்கில் எடுத்தாக வேண்டிய வலிமை வாய்ந்த சக்தியாகத் தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதையும், அவர்களைத் தவிர்ப்பது என்பது வீண்வம்பை விலைக்கு வாங்கும் முயற்சியே என்றும் இந்தியர்கள் கருதிக்கொண்டதற்கான அறிகுறியாகும். பின்னர் இடம்பெற்ற நிகழ்ச்சிகளும் இதனை உறுதிப்படுத்துவனவாகவே இருந்தன' என்று கூறப்பட்டிருப்பதில் இருந்து விடுதலைப் புலிகளின் வலிமை வெளிப்படுகிறது.

மேலும் அதே "முறிந்த பனை' நூலில், பிற போராளி இயக்கங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், "தாங்களின் விரக்தியில் அவர்கள் தமிழ்ப்பொதுமக்கள் மீது, குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வருபவர்கள்மீது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற நினைப்பில் பெருங்கசப்பு கொண்டிருந்தனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கசப்பு நிலையே பல்வேறு மோதல்களுக்குக் காரணமாக இருந்தது. பயணிகளுக்கும் அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாயிற்று. திடீர்க் கொலைகளும் ஆங்காங்கே நடந்தன. "இந்தியர்களின் அக்கறையில் பொதுமக்கள் உண்மையாகவே மிகக் கீழான இடத்திலேயே வைக்கப்பட்டிருந்தனர்' என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது.

மன்னாரில் விடுதலைப் புலிகள் மூவர் கொல்லப்பட்டதும் அதன் எதிரொலியாக நடைபெற்ற மோதல்கள் குறித்தும் அமைதிப் படைக்குப் புகார் வந்தபோது, சட்டம் ஒழுங்குப் பிரச்னை மன்னாரைப் பொறுத்து அமைதிப் படையைச் சார்ந்ததல்ல-அங்கு இலங்கை அரசின் காவல் நிலையங்கள் இயங்குகின்றன. அந்த நிலையங்கள் அந்த வேலையைப் பார்த்துக்கொள்ளும் என்று காரணம் கூறிவிட்டது. ஆனால், அடுத்த நாளே அமைதிப்படை தலைமையிடமிருந்து மன்னாரிலும் சட்டம்-ஒழுங்கை அமைதிப்படை பராமரிக்கவேண்டும் என்று உத்தரவு வந்தது. அப்படியென்றால், சி.ஆர்.பி.எஃப். படைப்பிரிவினரையும், கலவரம் நேர்ந்தால் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் உள்ளிட்ட சாதனங்களையும் அனுப்பவேண்டும் என்று அமைதிப்படை கூறியதும், அக்கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

மதச் சிறுபான்மையினர் கடத்தல் மற்றும் கொலைகள் நடத்தப்படுவதாகப் புகார்கள் வந்தன. போராளி இயக்கங்களுக்கிடையே இது குறித்துப் புகாரும், எதிர்ப்புகளும் எழுப்பப்பட்ட நிலையில், தமிழ்ப் பகுதிகளில் மரபு ரீதியான வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன. இந்த வேலை நிறுத்தங்கள் அடுத்தடுத்த நாளில்கூட நடைபெற்றன.

அமைதிப்படை வருகையையொட்டி எல்லாமும் நல்லதாக நடக்கும் என்பதை மெய்ப்பிக்க, சிங்கள ராணுவம் மற்றும் சிங்கள இனவாத அரசுகளால் செயலிழந்தவற்றை, செயல்படவைக்க, பெரியதொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வங்கிகள் இயங்கின. இதற்கென ராணுவ வாகனங்களில் கொழும்பிலிருந்து ரூபாய் நோட்டுகள் வரவழைக்கப்பட்டன. வங்கி ஊழியர்களை அவர்களது இல்லத்திலிருந்தே அழைத்து வந்து வங்கிகளில் அமர வைத்தனர். வங்கிகள் திறக்கப்பட்டன. பணம் இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் வருகை என்பதுதான் இல்லாதிருந்தது.

அதேபோன்று நீதிமன்றம் செயல்படவும், முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிங்கள அரசு நிர்வாக அமைப்பில் உள்ள நீதிமன்றத்தை மக்கள் புறக்கணித்தார்கள். காரணம், விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில்தான் புகார்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட சூழ்நிலை அப்போது யாழ்ப்பாணத்தில் நிலவி வந்தது. அதுமட்டுமல்ல, நிலவரி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைப் பார்த்ததாக லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.சி.சந்தோஷ் பாண்டே தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இடைக்கால நிர்வாக சபை அமைப்பது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ஓர் அம்சம். எட்டு பேரைக்கொண்ட நிர்வாக சபையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 3 இடங்கள், தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணிக்கு 2 இடங்கள், இன்னொரு ஆயுதப் போராட்டக்குழுவுக்கு ஓர் இடம், மீதமுள்ள 2 இடங்களுக்கு அரசுப் பிரதிநிதிகளுக்கென ஒரு திட்டம் முன்வைத்துப் பேசப்பட்டது.

இந்த இடைக்கால சபையின் பணி, இலங்கை அரசினதும் அமைதிப்படையினதுமான உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு, வடக்கு-கிழக்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது, மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் காலம் வரை செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது உறுதியான தகவல் இல்லை. ஆறு மாதத்திலும் நடக்கலாம்; அல்லது ஓராண்டு இடைவெளியிலும்கூட நடக்கலாம் என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் இடம்பெற விடுதலைப் புலிகள் அமைப்பு விருப்பம் காட்டவில்லை. இடைக்கால நிர்வாக சபையில் 3 இடங்களைப் பெற்று, சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. இலங்கை அரசின் வழிகாட்டுதலில், அமைதிப்படையின் உத்தரவின் கீழ், நிர்வாகத்தில் எந்த முடிவினையும்கூட எட்ட முடியாத சூழ்நிலையே உருவாகும் என்பது அவர்களது வாதமாக இருந்தது.

இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்திலேயே இருக்க, இந்திய அமைதிப்படையின் முகாம்கள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டன. பாதுகாப்புக் கோரிய போராளிக்குழுக்களுக்கு, பாதுகாப்பு அளிக்கவும் போராளிக்குழுக்களிடையே ஏற்படும் மோதலைத் தடுக்கவும் புதிய முகாம்கள் அமைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது.

இருப்பினும் விடுதலைப் புலிகளுடனான சுமுக நிலையை அமைதிப்படை குறைத்துக்கொள்ளவேண்டும் என்று மேலிடத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டது.

பிற போராளி இயக்கங்களுக்கு ஆயுதம் அளிப்பது குறித்து விடுதலைப் புலிகள் எழுப்பிய புகாருக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கொழும்பில், அமைதிப்படைத் தளபதி ஹர்கிரத் சிங் உள்ளிட்டோருடன் இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்சித் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ஈ.என்.டி.எல்.எஃப்., பிளாட், டெலோ அமைப்புகளை அமைதிப்படை ஆதரிக்கிறது என்ற செய்தியைப் பரப்பவேண்டும் என்று தூதுவர் கூறவும், அது தேவையில்லை... யாழ் மக்கள் இதை எப்போதோ பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்று தளபதி தெரிவித்தார்.

பிற இயக்கங்களுக்கு ஆயுதம் அளிப்பது பற்றி விவாதம் வந்தபோது, ஆயுதம் அளிப்பது மட்டுமல்ல, ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தைச் சேர்ந்த 150 பேருக்கு, கிளிநொச்சியில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவது குறித்தும் பிரபாகரன் புகார் தெரிவித்திருக்கிறார் என்று தளபதி குறிப்பிட்டார்.

யாழ் மக்கள் ஆதரவைப் பெறாத அமைப்புகளுக்கு ஆயுதம் அளித்தும், பயிற்சி கொடுத்தும் வருவதால் அமைதிப்படையின் பணி சிக்கலைச் சந்திக்கும். விடுதலைப் புலிகள் மீது விமர்சனம் இருந்தபோதிலும், அம்மக்கள் தங்களின் "பாதுகாவலன்' என்ற நிலையில் புலிகளையே நம்புகிறார்கள் என்றும் தளபதி கருத்துத் தெரிவித்தார்.

இக்கருத்தை மாற்றும் பணியை அமைதிப்படை மேற்கொள்ளவேண்டும் என்றும் இதற்கான பிரசாரத்தை முடுக்கிவிடவேண்டும் என்றும் இந்தியத் தூதவர் அறிவுரை வழங்கினார்.

அமைதிப்படைத் தளபதியோ, இந்தப் பிரசாரத்தை மக்கள் நம்பமாட்டார்கள் என்றும், அவர்கள் விடுதலைப் புலிகளோடு இருக்கிறார்கள் என்றும், அமைதிப்படை தங்கியிருக்கும் காலம் குறித்தும் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியாத நிலையில் இப் பிரசாரம் சாத்தியமில்லை என்றும் கருத்துத் தெரிவித்தார்.

ஆனால் அவரின் கருத்து ஏற்கப்படவில்லை. மாறாக, இலங்கை கடற்படையினருடன் சேர்ந்து, இந்தியக் கடற்படையினரும் இரவில் ரோந்துக்குப் போக இருக்கிறார்கள் என்றும், சமீப காலத்தில் இலங்கையின் கடற்பகுதியில் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அவர்கள் மீன்பிடிதொழிலில் ஈடுபடுகிறவர்களாக இருக்க முடியாது என இலங்கை அரசாங்கம் கருதுவதாகவும் சொல்லப்பட்டது.

போராளி இயக்கங்களிடையே மோதல் ஏற்பட இந்திய அரசுதான் காரணம் என்கிற சந்தேகம் பரவலாக எழுந்தவண்ணம் இருந்தது.

108: பிரபாகரனைக் கைது செய்யுங்கள்!

இந்தியாவுக்கு, விடுதலைப் புலிகளின் வெளித் தொடர்புகள் குறித்து ஐயம் எழுந்தது. பிரபாகரனுக்கு இலங்கைப் பிரதமர் பிரேமதாசா, ""இந்தியா இனி உதவாது; அவர்களை நம்புவதைவிடத் தன்னை நம்பலாம்'' என்று செய்தி அனுப்பியுள்ளதாகவும் இந்திய உளவுப் பிரிவு நம்பியது.

அதுமட்டுமல்ல, சென்னையில் இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார் என்றும் நம்பியது.

இவர்கள் இவ்வாறு தொடர்பு கொள்கிற விஷயம் இந்தியாவுக்குத் தெரியும் என்றும், இதனால் விடுதலைப் புலிகளுக்கு விளையும் நன்மைகளைவிட, தீமைகளே அதிகமாகச் சம்பவிக்கும் என்றும், இத் தொடர்புகள் ஒப்பந்தத்தைப் பாதித்தால் அது நன்றாக இருக்காது என்றும் பிரபாகரனிடம் தெரிவிக்குமாறு இந்தியத் தூதுவர், தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்குக்கு அறிவுறுத்தியதாகத் தகவல்கள் உண்டு. (ஆதாரம்: "இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா' - மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்)

இந் நிலையில், பொதுமன்னிப்பு வழங்கப்பட்டும் எந்தவித வழக்குமின்றி இலங்கைச் சிறைகளில் சுமார் 1,300 பேர் அடைபட்டிருப்பது குறித்து விடுதலைப் புலிகள் அமைப்பு கேள்வி எழுப்பியது. இந்தத் தகவலை தீட்சித் கவனத்துக்குக் கொண்டு வந்ததும், அதில் புலிகள் எத்தனை பேர் என்று பட்டியல் கொடுத்தால் உடனடியாக விடுதலை செய்துவிடலாம் என்று ஜெயவர்த்தனா கூறுவதாகத் தெரிவித்தார்.

ஆனால் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்ல விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. அப்படிப் பெயர் கொடுக்கப்பட்டால் அதுவே அவர்களுக்கு மரணவோலை ஆகிவிடும்; அவர்கள் மீது வீணான வழக்குகள் புனையப்படலாம்; வெளியே விட்டுசுடப்படலாம்; மோதலை ஏற்படுத்தி சாகடிக்கவும் செய்ய வாய்ப்புண்டு - என்று பல வகைகளிலும் யோசித்து பெயர் கொடுக்கும் யோசனை புலிகளால் நிராகரிக்கப்பட்டது. எனவே அனைவரையும் விடுவிக்கவேண்டும் என்று பொதுவில் கோரிக்கை வைத்தனர்.

உடனே தீட்சித் சொன்னார், ""விடுதலைப் புலிகள் 8 சிங்கள வீரர்களைக் கைதுசெய்து வைத்திருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யும்படி அரசு கேட்கிறது; அவர்கள் விடுவிக்கப்பட்டால் 1,300 பேரை விடுவிப்பது குறித்துப் பேசலாம்'' என்றார்.

8 சிங்களக் கைதிகளின் விடுதலையும் நடைபெறவில்லை; 1,300 பேர் விடுதலையும் நடைபெறவில்லை.

""பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் பகுதியில் அரசுக்குள் ஓர் அரசு என்ற நிலையில் அந்தப் பகுதியை நிர்வகித்து வந்தார்களாதலால் அவர்களது குரலே எடுபட்டது. மக்கள் தொடர்புத்துறை அவர்களிடம் வலுவாக இருந்தது. அவர்களிடம் குறைந்தது மூன்று தினசரிகள் அச்சக வசதியுடன் இருந்தது என்றே மதிப்பிடுகிறேன். சொந்த வானொலி நிலையம் மற்றும் சொந்தமாகத் தொலைக்காட்சி நிலையம் ("நிதர்சனம்' என்கிற பெயரில்) ஆகியவற்றை இயக்கி வந்தனர். இதன் வீச்சை யாழ்ப்பாணப் பகுதியின் குக்கிராமங்களிலும் காணமுடிந்தது.

இது தவிர, யாழ்ப்பாணத்தின் முன்னாள் தளபதியாக இருந்த கிருஷ்ணகுமார் என்கிற கிட்டு, ஒரு காலை இழந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது தலைமையில் சென்னையில் தொலைத் தொடர்பு வசதி கொண்ட அமைப்பு இயங்கியது. இதன்மூலம் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாடுகளுக்கு உடனுக்குடன் செய்தி பரிமாறிக்கொள்ள அவர்களால் முடிந்தது. தினமும் செய்தி வெளியீடுகளை வெளியிட்டுக்கொண்டே இருந்ததால், உடனுக்குடன் அவர்களது செய்தி உலகம் முழுவதும் வெளியாகிக்கொண்டிருந்தது. ஒரே நாளில் பல செய்தி வெளியீடுகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக அமைதிப்படையின் செயல்பாடுகளும், அதன் ராஜதந்திர நடவடிக்கைகளும் உடனுக்குடன் உலகுக்குத் தெரிந்துவிடுகின்றன'' என்று தீபிந்தர் சிங் தனது நூலில் (பக்.91) குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாள் இரவு (செப்டம்பர் 14/15-1987) தூதுவர் தீட்சித், ஹர்கிரத் சிங்கை போனில் அழைத்து, "நாளை பேச்சுவார்த்தைக்கு வரும் பிரபாகரனைக் கைது செய்யவேண்டும் அல்லது சுட்டுக்கொன்றுவிட வேண்டும்' என்று சொன்னதும், அதிர்ந்துபோன தளபதி ஹர்கிரத் சிங், அமைதிப் படைத்தலைவர் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்துவிட்டு, இதற்கான பதிலைப் பின்னர் சொல்வதாகக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.

மறுநாள் தீட்சித்திடம், ஹர்கிரத் சிங் போனில் தொடர்பு கொண்டு, "இந்திய ராணுவம் பாரம்பரியப் பெருமை கொண்ட அமைப்பு. இப்படிப்பட்ட ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரன், முதுகில் சுடமாட்டான். அதுவும் வெள்ளைக்கொடியுடன் சமாதானப் பேச்சுக்கு வரும் நிலையில் கொல்வது அழகல்ல என்று தளபதி சொல்லச் சொன்னார். எனவே, உங்களது வழிகாட்டுதலின்படி என்னால் நடக்க இயலாது' என்றார்.

மேலும் ஹர்கிரத் சிங் கூறுகையில், "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நாம்தான் பேச்சுவார்த்தைக்கு - அதாவது ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த என்று அழைத்திருக்கிறோம்' என்றும் நினைவுபடுத்தினார்.

உடனே தீட்சித், "அவர்தான் (ராஜீவ் காந்தி) இந்த உத்தரவுகளை எனக்குப் போடுகிறார். ராணுவம் அவரது காலை வாரிவிடக்கூடாது.

நீங்கள் அமைதிப்படையின் தளபதி. நீங்களே இதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும்' என்று கடுமையான குரலில் உத்தரவிட்டார்.

அடுத்த நாள் இந்திய ராணுவத்தின் (பொது) இயக்குநராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் பி.சி.ஜோஷி போனில் தொடர்புகொண்டு, எனது நிலைக்குப் பாராட்டு தெரிவித்தார். ஆனால், அதே நேரம் எனது செயல்பாட்டுக்காக ராணுவத் தளபதி சுந்தர்ஜி கடுமையாகக் கோபித்துக்கொண்டார்.' (இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா - மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங். பக்.57)

இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பதே கேள்விக்குறியான நிலைமை என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

109: திலீபன் உண்ணாவிரதம்!

உண்ணாவிரதமிருந்த திலீபனுடன் பிரபாகரன் தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைக் காப்பாற்றும் வகையில், இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் (15.09.1987) தொடங்கினார்.

அவரது ஐந்து கோரிக்கைகள்தான் என்ன?

1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களவர் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு' என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் போலீஸ் நிலையங்கள் திறப்பதை உடனே நிறுத்தவேண்டும்.

5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற்று, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை உண்ணாவிரத மேடையில் பிரசாத் படிக்க, இதே கோரிக்கைகளை 13-08-1987 அன்று இந்தியத் தூதர் அலுவலகத்திற்கு அனுப்பி 24 மணிநேரம் ஆன நிலையில், தகுந்த தீர்வு கிடைக்காத காரணத்தால், சாகும்வரை உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த விடுதலைப் புலிகள் பிரதேசப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் (13-08-1987) தீர்மானிக்கப்பட்டது. பிரபாகரனும் நிலைமையை விளக்கி தீட்சித்துக்குக் கடிதம் எழுதினார். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலையொட்டி உண்ணாவிரத மேடை அமைக்கப்பட்டிருந்தது. தாயற்ற திலீபனுக்கு நடுங்கும் கரத்துடன் வந்த ஒரு தாய், திருநீற்றைப் பூசினார். மாத்தையா திலீபனை உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். அவர் அருகே மு.வ.யோ.வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்தனர்.

திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்திபன் ஆகும். யாழ் மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் பனைமரங்கள் நிறைந்த கிராமத்தில், ஆசிரியர் இராசையா தம்பதியினருக்கு நாலாவது கடைக்குட்டி மகனாகப் பிறந்தார். மருத்துவ மாணவனாக இருக்கையில் பிரபாகரனைத் தலைவராக ஏற்று இயக்கத்தில் சேர்ந்தார்.

இவரது பணியில் திருப்தியுற்ற தளபதி கிட்டு பல்வேறு உயர்வுகளை அளித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக, கிட்டுவின் பரிந்துரையின்படி பிரபாகரன் நியமித்தார்.

திலீபனின் முயற்சியால் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் துணை அமைப்புகளாக (1) தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கம் (SOLT) , (2) தமிழீழ மகளிர் அமைப்பு, (3) சுதந்திரப் பறவைகள் அமைப்பு. (4) தமிழீழ தேசபக்தர் அமைப்பு, (5) தமிழீழ விழிப்புக் குழுக்கள், (6) தமிழீழக் கிராமிய நீதிமன்றங்கள், (7) சுதேச உற்பத்திக் குழுக்கள், (8) தமிழீழ ஒலி-ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை, (9) தமிழர் கலாசார சபை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றன.

அண்ணல் காந்தி, ஐரிஷ் நாட்டுப் போராட்ட வீரன் பாபி சாண்ட்ஸ், பொட்டி ஸ்ரீராமலு போன்றோர் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரதம் இருந்ததாகப் படித்திருக்கிறோம். ஆனால் திலீபன் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், தகவல் தொடர்பு சாதனங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோது ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தையே மேற்கொண்டார். அவர் வழியில் திலீபன்.

பக்கத்தில் இருந்த மேடையில் பிரசாத் தலைமை ஏற்க, உண்ணாவிரதத்துக்கான காரணங்களை நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் விளக்கினார்கள்.

மேடையில் ஓர் இளைஞன், "திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல - தமிழ்மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை இது. தமிழீழம் தாருங்கள் என்றுகூடக் கேட்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்றுதான் அவர் கேட்கிறார்' என்று பேசினார்.

அன்று இரவு பதினோரு மணியளவில் பிரபாகரன், திலீபனைப் பார்ப்பதற்காக வந்தார். அவருடன், சொர்ணம், இம்ரான், அஜீத், சங்கர், மாத்தையா, ஜானி என்று பலரும் வந்திருந்தனர்.

முதல் நாள்: இரவு நாடித் துடிப்பு 88, சுவாசத் துடிப்பு 20.

இரண்டாம் நாள்: முகம் கழுவிக்கொண்டார்; தலைவாரிக் கொண்டார்; சிறுநீர் கழித்தார்; மலம் போகவில்லை.

மேடையில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்ததைக் கேட்ட திலீபன், "பேசவேண்டும் போலிருக்கிறது. மைக் தாருங்கள்' என்றார்.

இரண்டு நிமிடத்துக்கு மேல் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு மைக் வழங்கப்பட்டது.

""அன்பார்ந்த மக்களே! என்னால் அதிகம் பேசமுடியாது. ஆனாலும் உங்களுடன் பேசவேண்டும் போல் இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் தரும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன். எனது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேறும் மட்டும் ஒரு சொட்டு நீர்கூட அருந்த மாட்டேன். இது உறுதி. இதையே தலைவர் பிரபாகரனிடமும் வலியுறுத்திக் கூறிவிட்டேன். இறக்க நேரிட்டால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். நான் இறந்ததும் விண்ணில் இருந்து அங்கேயுள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்தநாளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். என்னால் அதிகம் பேசமுடியவில்லை. என் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள். வணக்கம்''

அவரது பேச்சைக் கேட்ட மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்று இரவும் பிரபாகரன் வந்தார்.

மூன்றாம் நாள்: "மலம் போகவேணும் போலதான் இருக்கு' என்றார் திலீபன்.

"இறங்கி வாருங்கள்' - உதவுகிறார் டாக்டர் வாஞ்சிநாதன்.

"வேண்டாம் விடுங்க... நானே வருகிறேன்.'

சிறுநீர் கழியவில்லை...சிரமப்படுகிறார்.

"தண்ணீர்-குளுக்கோஸ் ஏதும் குடித்தால்தான் சிறுநீர் வரும்' என்கிறார் டாக்டர்.

"என்ன பகிடியா பண்ணுறீங்க - சொட்டுத் தண்ணீர்கூட குடிக்கமாட்டேன்' என்றார் திலீபன் உறுதியோடு.

ஒலிபெருக்கியில் காசி ஆனந்தன் கவிதைகள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது.

3-ஆம் நாள் நாடித்துடிப்பு 110. சுவாசத் துடிப்பு 24.

நான்காம் நாள்: நாடித்துடிப்பு 120. சுவாசத் துடிப்பு 24.

நாடித்துடிப்பு சாதாரணமாக 72-80-ம், சுவாசத் துடிப்பு 16-22-ம் இருக்கவேண்டும். அதே நாள் இரவில் நாடித்துடிப்பு 114. சுவாசத்துடிப்பு 25.

1986-இல் நடைபெற்ற ஒரு மோதலில் எதிரியின் குண்டை வயிற்றில் தாங்கியதால் திலீபனின் 14 அங்குலக் குடலை அகற்றிவிட்டார்கள். அப்போது மூன்று மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அந்தக் காரணமும் இப்போது சேர்ந்து அவருக்கு வயிற்றில் வலி எழுந்தது.

ஐந்தாம் நாள் - ஆறாம் நாள்: கொழும்பிலிருந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் இருந்து முக்கிய நபர் வரப்போவதாகச் செய்தி கசிந்தது.

கிட்டுவின் தாயார் ராஜலட்சுமி அம்மாள் உண்ணாவிரத மேடைக்கு வந்து, திலீபனை அணைத்து வாழ்த்தும் வேளையில், அவரது அழுகை நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

அன்று மாலை யாழ்க்கோட்டை ராணுவ முகாம் பொறுப்பாளர் ஜெனரல் பாரா, திலீபனைப் பார்க்க வந்தார். பிரிகேடியர் ஃபெர்னான்டோ உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து சிங்களக் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தினார்.

ஆறாம் நாள்: தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜானி ஆகியோர் வந்து திலீபனின் தலையை வருடி கண்கலங்கிச் சென்றனர்.

"கிட்டு அண்ணனைப் பார்க்கவேண்டும்' திலீபன் கோரிக்கை வைத்தார். அவர் அப்போது சென்னையில் இருந்தார்.

மாலை, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்காராவும் அவரது கட்சியினரும் வந்து பார்த்தனர்.

யாழ்ப்பாணம் வந்த இந்திய உதவித் தூதுவர் நிருபம் சென், முகாமில் புலிகளின் பிரதிநிதிகளிடம், "உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப்பந்திக்க முடியாது' என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்.

ஏழாம் நாள்: சென்னையிலிருந்து இந்தியா டுடே பத்திரிகையாளர் மற்றும் சென்னைத் தொலைக்காட்சிக் குழுவினர் வந்தனர்; படம் பிடித்தனர்.

எட்டாம் நாள்: கூட்டம் லட்சக்கணக்கில் சேர்ந்துவிட்டதால் வெயிலைத் தாக்குப்பிடிக்க கொட்டகை போடும் வேலை நடந்தது.

வடக்கு-கிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் திலீபனின் உண்ணாவிரதத்தை ஆதரித்து, அடையாள உண்ணாவிரதங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ரத்த அழுத்தம் 80/50.

நாடித் துடிப்பு 140.

சுவாசம் 24.

இந்திய அமைதிப்படையினர் விடுதலைப் புலிகளைச் சந்தித்தனர். இவர்கள் சிங்களப் போலீசாருக்குப் பதில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையைக் கொண்டு வருவது குறித்து பேசிச் சென்றார்கள். உண்ணாவிரதம் குறித்து எதுவும் பேசவில்லை.

ஒன்பதாம் நாள்: இந்திய அமைதிப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் ஹெலிகாப்டரில் யாழ் பல்கலை மைதானம் வந்தார். பிரபாகரனைச் சந்தித்தார். இருவரும் தனித்தனி வாகனங்களில் புறப்பட்டு யாழ்கோட்டை ராணுவ முகாம் சென்றனர். பேச்சுவார்த்தையில் பலன் எதுவுமில்லை.

தொடர்ந்து அதே நாளில் பிற்பகல் 1.30 மணிக்கு, இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் பிரபாகரன் சந்திப்பு நடந்தது. பேச்சுவார்த்தையில் தீபிந்தர் சிங், ஹர்கிரத் சிங், பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ், கேப்டன் குப்தா மற்றும் புலிகள் தரப்பில் மாத்தையா, செ.கோடீஸ்வரன் (வழக்கறிஞர்), அன்டன் பாலசிங்கம், சிவானந்த சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் தூதர் உறுதிமொழி மட்டுமே அளித்தார். உண்ணாவிரதம் நிறுத்தப்படுவது குறித்து ஏதும் பேசவில்லை.

பத்தாம் நாள்: திலீபனின் கை, கால்கள் அசைவின்றி சோர்ந்து கிடந்தன.

நாடித்துடிப்பு 52.

ரத்த அழுத்தம் 80/50.

சராசரி மனிதனின் அளவுகளைவிட அனைத்தும் குறைந்துவிட்டன. இனி, திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நேரலாம்.

நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து திலீபனைப் பார்த்துச் சென்றார்கள்.

பதினோராம் நாள்: கோமாவுக்கு முந்தைய நிலையில் உடல் அங்குமிங்கும் அசைவது போல திலீபனின் உடல் அவரையறியாமலே புரளத் தொடங்கியது.

யாழ் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்தன. "நிதர்சனம் டிவி' கடந்த பத்து நாட்களாக உண்ணாவிரதச் செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது.

பன்னிரண்டாம் நாளில், திலீபனின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்ற செய்தி யாழ் பகுதி முழுவதும் பரவியது.

265 மணி நேரம், நீரின்றி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி, தனது சுயநினைவு தப்பினாலும் குளுக்கோஸ், நீர் தந்துவிடாதீர்கள் என்று கூடியிருந்தோரிடம் சத்தியவாக்கு வாங்கிக்கொண்டு புழுவாய்த் துடித்த திலீபனின் உயிர் 26-09-1987 காலை 10.48 மணிக்குப் பிரிந்தது.

எங்கும் அழுகை... விம்மல்... இலங்கை இந்தியா எதிர்ப்புக் குரல் எழுந்தது.

எம்பார்ம் செய்ய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடல், பிற்பகல் 4.15 மணியளவில் மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஈரோஸ் தலைவர் பாலகுமார், பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதனர். பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மனிதநேயம் தழைக்கும் இடத்தில்தான் அகிம்சை வெல்லும் என்பது திலீபன் மரணம் மூலம் உலகுக்கு உணர்த்தப்பட்டது.

(ஆதாரம்: தியாகப் பயணத்தில் திலீபனுடன் 12 நாட்கள்: மு.வே.யோ.வாஞ்சிநாதன்).

110: இடைக்கால நிர்வாக சபையை நோக்கி...

திலீபன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது தீட்சித் வந்திருந்து, அவரின் ஐந்து அம்சக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் அவர் பிரபாகரனை 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு "திலீபனின் உயிர் பிரிந்த பிறகு 15 நிமிடம் கழித்து' சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியிருந்தார். கெüரவம் பார்க்காமல் அவர் நேராக வந்திருந்தாலோ, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவோ வாக்குறுதி அளித்திருந்தால் நிலைமையே மாறி இருக்கும்.

திலீபன் உயிர் போன பிறகு ஐந்து அம்சக் கோரிக்கைகளை ஏற்பதாகவும், அதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தபோதிலும், விடுதலைப் புலிகளின் மனதிலிருந்து அமைதிப்படையின் மீதிருந்த மரியாதையும் நம்பிக்கையும் அகன்றுவிட்டிருந்தது; மக்களுக்கும்தான். தீட்சித்தின் பிடிவாதம் மாறாத வடுவை அவர்கள் மனதில் ஏற்படுத்திவிட்டது.

திலீபன் உயிரிழப்பைத் தாங்கமுடியாத மக்கள் கூட்டம் வன்முறையில் இறங்கியது. இரண்டு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதற்கு தண்டவாளங்களில் ஏற்பட்டிருந்த தடையே காரணமானது.

யாழ்ப்பகுதி முழுவதும் திலீபனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. சாலை எங்கும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தன. அவர்களின் மனதில் தாங்க முடியாத சோகம். அரசுகளின் மீது வெறுப்பு. ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் துக்கம் நேர்ந்தால் வீட்டில் வாழை மரம், தென்னங் குருத்துத் தோரணம் கட்டும் பழக்கமுண்டு. மக்கள் சந்துக்குச் சந்து இந்த வாழை மரங்களை, தங்கள் வீட்டில் நடந்த துக்கம் போன்று கட்டியிருந்தார்கள். இறுதி நாள் அஞ்சலிக் கூட்டத்தில் மட்டும் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

"திலீபன் மரணமே தியாகத்தில் தோய்ந்த மரணமாகும். வாழும்போது மட்டுமல்ல; சாவுக்குப் பின்னரும் அவருடைய தியாகம் தொடர்ந்தது. தான் இறந்தால், மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிக்குத் தனது உடலை வழங்க வேண்டும்' என்று சொல்லியிருந்தார். அதன்படி அவரது உடல் அடங்கிய பெட்டி யாழ் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

"வாழ்விலும் சாவிலும் தியாக வரலாறு படைத்தான் திலீபன். மில்லர் புரிந்தது மறத்தியாகம் என்றால் திலீபன் புரிந்தது அறத்தியாகம்' என்கிறார் பழ.நெடுமாறன் தனது "தமிழீழம் சிவக்கிறது' நூலில். இறுதி நாள் ஊர்வலத்தில் அவரும் கலந்துகொண்டு, அஞ்சலிக் கூட்டத்திலும் பேசினார்.

திலீபன் மரணத்தைத் தொடர்ந்து, இடைக்கால நிர்வாக சபை அமைப்பதில் வேகம் பிடித்தது. செப்டம்பர் 26-இல் பேசியதையொட்டி, அடுத்தப் பேச்சு செப்டம்பர் 28-இல் என்று முடிவெடுத்தபடி பிரபாகரன் உள்ளிட்டோர் பலாலி ராணுவ முகாமில் கூடியிருந்தனர். இந்தியத் தூதுவர் வருகை சிறிது நேரம் தடைப்பட்டது.

நிர்வாக சபைத் தலைவர் பதவிக்கு மூன்று பெயர்கள் கொண்ட பட்டியலில் ஜெயவர்த்தனா ஒருவரைத் தேர்ந்தெடுப்பார். ஜெயவர்த்தனா யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்கிற விவரத்துடன் தீட்சித் வருகை எதிர்நோக்கப்பட்டது.

தீட்சித் வந்தார். ஜெயவர்த்தனா, சி.வி.கே.சிவஞானத்தைத் தேர்ந்தெடுத்ததாக அறிவித்தார். பிரபாகரனுக்கு இந்த முடிவு உகந்ததாக இல்லை. என்.பத்மநாதனை அவர் முடிவு செய்திருந்தார்.

தீட்சித், ""பட்டியலில் உள்ளபடிதான் அவர் தேர்வு செய்திருக்கிறார்'' என்றார்.

""இருக்கலாம்...எனது விருப்பம் நான் கொடுத்த வரிசைப்படி முதலாவது பெயராக பத்மநாதனில் ஆரம்பிக்கிறது. பத்மநாதன் முன்னாள் அரசு ஊழியர். தாசில்தார் ரேங்கில் பணிபுரிந்தவர். கிழக்குப் பகுதியில் அவர் பணிபுரிந்ததால், கிழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்று இருக்கும்'' என்றார்.

""ஜெயவர்த்தனா வேறு மாதிரி சிந்தித்தார். "பத்மநாதன் மட்டக்களப்பு சிறை உடைப்பில் ஒரு குற்றவாளி. அதனால் அவர், அவரை விரும்பவில்லை.''

""ஜெயவர்த்தனாவுக்கு நாங்கள் எல்லோருமே குற்றவாளிகள்தான். அவரது நியாயம் எங்களுக்கு ஏற்பில்லை'' என்று பிரபாகரன் தெரிவித்தார்.

பிரபாகரனை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று தீட்சித் பெரிதும் முயன்றார். வாக்குவாதங்கள் - இடையிடையே சிற்றுண்டி எல்லாம் குறுக்கிட்டும் மாலை 5 மணி வரை பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.

முடிவில் பிரபாகரன் சம்மதித்தார் - என்று லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் இந்தச் சம்பவம் பற்றித் தனது நூலில் குறித்து வைத்திருக்க, மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்கின் நூலில் சிறிது மாற்றம் உள்ளது. "சி.வி.கே. சிவஞானம் பெயர், ஜெயவர்த்தனா, தீட்சித் விருப்பம் என்றும், சிவஞானம் தீட்சித்தின் நெருங்கிய சகா மற்றும் அவருக்கு உளவு சொல்கிறவர் தீட்சித்தின் நிதி வழங்கும் பட்டியலில் அவர் உள்ளவர் என்றும், அவரையே அந்தப் பதவியில் அமர்த்துவதில் உறுதியாக ஜெயவர்த்தனா இருந்தார்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து விடுதலைப்புலிகள் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசு தனது முடிவுக்கு எங்களைக் கட்டாயப்படுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் முன்னதாக பேசித் தீர்க்க வேண்டியவற்றை பின்னர் பேசுவதால் ஏற்படும் விளைவுகளில் இதுவும் ஒன்று.

திலீபனின் உயிரிழப்பு விடுதலைப் புலிகளிடத்தும், யாழ் மக்களிடத்தும் மாறாத சோகத்தை ஏற்படுத்தியருந்த நிலையில், இவ்வியக்கம் அடுத்ததொரு சோகத்தையும் சந்திக்க நேர்ந்தது.

கசப்பு மருந்தாக இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் தேர்வு இருந்தாலும், கெட்டதில் நல்லதைத் தேடுவது என்ற அடிப்படையில் விடுதலைப்புலிகள் நிலைப்பாடு இருந்தது.

சென்னையில் இருந்த அவர்களது அலுவலகத்தை முற்றும் முழுதாகக் காலி செய்து கொண்டு யாழ்ப்பாணம் வரும் முடிவுடன் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 பேர் படகில் இலங்கையிலிருந்து கிளம்பினர்.

அவர்களின் பயணம் இந்திய அமைதிப்படைத் தலைவர்களுக்கும் இந்தியத் தூதுவருக்கும் தெரிவிக்கப்பட்டே நடந்தது.

இந்நிலையில், சிங்களக் கடற்படை, குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் சென்ற படகைச் சுற்றி வளைத்தது. அவர்கள் ஆயுதம் கடத்துவதாகக் கூறி கைது செய்ததாகவும் அறிவித்தது.

இந்த செய்தி, விடுதலைப் புலிகள் மத்தியிலும் யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது!

111: புலேந்திரன், குமரப்பா தற்கொலை!

சிங்களக் கடற்படையினரால் ஆயுதம் கடத்துவதாகக் கூறி, படகைச் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அமைதிப்படைத் தலைவருக்கும், இந்திய தூதுவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அவர்கள் சொன்னதை சிங்களக் கடற்படையினர் சட்டை செய்வதாக இல்லை.

அவர்கள் அனைவரும் பலாலி ராணுவ முகாமுக்குக் கொண்டுவரப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு விலங்கு பூட்ட வேண்டும் என்று சிங்களத் தளபதி வலியுறுத்தினார். ஆனால் அம்முடிவை அமைதிப்படை ஏற்கவில்லை.

கைதானவர்களில் புலேந்திரன் இருப்பதை அடையாளம் கண்ட இலங்கை கடற்படை பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்தது. காரணம், ஏப்ரல் 1987-இல் திருகோணமலையில் நடைபெற்ற வாகனத் தகர்ப்பு சம்பவத்தில் சிங்களர்கள் இறந்ததையொட்டி, விடுதலைப்புலிகளின் திருகோணமலை தளபதி புலேந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனவே அவரையும் மற்றவர்களையும் கொழும்புவுக்குக் கொண்டு செல்ல இலங்கை கடற்படை விரும்பியது. பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியும் அவர்களை உடனே கொழும்பு கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.

இதுகுறித்து அறிந்ததும் மாத்தையா, இந்திய அமைதிப்படைத் தளபதிகளிடம் பேசினார். ""அனைத்துப் போராளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் கைது செய்வது - ஒப்பந்த மீறலாகும். அவர்கள் ஆயுதம் எதுவும் கடத்தவில்லை. தங்கள் பாதுகாப்புக்கு என்று துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். இதுவும் கூடத் தளபதிகளுக்கு அனுமதிக்கப்பட்ட சலுகைதான். இந்த நிலையில் அவர்களை விடுவிப்பது அமைதிப்படையின் பொறுப்பாகும்' என்று வாதிட்டார்.

அமைதிப்படையினரும் சிங்களக் கடற்படையினர் செய்தது சரியில்லை என்று கூறி, அவர்களை விடுவிக்க முயற்சி எடுக்கிறோம் என்று உறுதி கூறினர்.

இது குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள நூலில், மாத்தையா தன்னிடம் சொன்ன தகவல்களைப் பதிவு செய்துள்ளார். அதில் மாத்தையா சொல்கிறார்:

""நானும் நடேசனும் ராணுவ முகாமுக்குச் சென்று எங்களது தோழர்களைப் பார்த்தோம். அவர்கள் யாரும் எதைப்பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு எல்லாரையும் வீடியோ படம் எடுத்தோம். அவரவர் தம் குடும்பத்தினருக்குக் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள்.

புலேந்திரன் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "எல்லாச் சோதனைகளிலும் வென்றிருக்கிறேன். இதிலும் நிச்சயமாக வெல்வேன். இல்லாவிட்டால் லட்சியத்திற்காகச் சாவேன்' என்று எழுதியிருந்தார்.

குமரப்பா தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "அவர் எப்போதும் விரும்பிப் படிக்கும் பாடல் ஒன்றை நினைவுப்படுத்தி' எழுதியிருந்தார்.

கரன் என்ற தோழர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "மகனை ஒரு மாலுமியாக' ஆக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களது விருப்பங்களை எழுதிக் கொடுத்தனர்.

இதற்கிடையில், இந்திய அமைதிப்படை இவர்களுக்கு உணவு கொண்டு வந்தது. அவ்வுணவை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே, அவர்களுக்கு வெளியே இருந்து உணவு வரவழைத்துக் கொடுத்தேன்.

பின்னர் மேஜர் ஹர்கிரத் சிங்கைச் சந்தித்தேன். அவர் நியாயங்களை உணர்ந்து பேசினார். ஆனாலும் இந்தியத் தூதுவர் தீட்சித்திடம் இருந்து வந்த செய்தியை அவர் தெரிவித்தார். "இடைக்கால அரசை விடுதலைப்புலிகள் ஒப்புக் கொண்டால், அனைவரையும் விடுதலை செய்வதாக தீட்சித் கூறுகிறார்' என்று அவர் தெரிவித்தார்.

எங்களை நிர்ப்பந்தப்படுத்தி இடைக்கால அரசை ஏற்கவைக்க முயலுகிறார்கள் என்பது புரிந்தது. நிபந்தனை என்றால் அது தேவையில்லை. ஒப்பந்தப்படி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. பொதுமன்னிப்பு வழங்கிய நிலையில் கைது நடவடிக்கை அத்துமீறல் என்று சொல்லவேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்கள் வசமுள்ள சிங்களக் கைதிகள் 8 பேரையும் விடுதலை செய்கிறோம். பதிலுக்கு எங்கள் தோழர்களை விடுதலை செய்யுங்கள்' என்று கேட்டோம்.

இதற்கும் அவர்கள் தரப்பிலிருந்து சரியான பதில் இல்லை. இதன்பின் பிரபாகரன் என் மூலம், ஹர்கிரத் சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

"எமது பிராந்தியத் தளபதிகளையும் மற்றும் முக்கிய உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா ஆயுதப்படையினர் கைது செய்து காவலில் வைத்திருப்பது இந்திய - இலங்கை உடன்படிக்கையின் அடிப்படை அம்சத்தையே மீறுவதாக அமைகிறது.

உடன்படிக்கையின்படி இலங்கைக் குடியரசுத் தலைவர் எமக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருக்கிறார். இந்திய அரசு எமக்குப் பாதுகாப்பு தருவதென உறுதிமொழி அளித்துள்ளது.

இப்பொழுது சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் எமது வீரர்கள் எந்தவொரு குற்றச் செயலையும் செய்யவில்லை. அவர்கள் தென்னிந்தியாவிலுள்ள விடுதலைப் புலிகள் அலுவலகத்திலிருந்த ஆவணங்களையும் புத்தகங்களையும் இங்கு கொண்டு வருவதற்காகச் சென்றனர். ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இது தொடர்பாக இந்தியக் கடற்படையினரிடம் உதவி கோரியிருந்தோம். ஆனால் அவர்கள் இவ்விஷயத்தில் எதுவித முடிவும் எடுக்காத நிலையில், எமது சொந்தப்படகில் ஆவணங்களையும் புத்தகங்களையும் கொண்டுவரத் தீர்மானித்தோம்.

எமது தளபதிகள் சொந்தப் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை மட்டும் வைத்திருந்தனர். இப்பொழுது எமது தளபதிகளும் முக்கிய உறுப்பினர்களும் பலாலி விமான தளத்தில் அமைதிப்படையின் மேற்பார்வையுடன் ஸ்ரீலங்கா ராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அமைதிப்படையினர் இவர்களுடைய பாதுகாப்பிற்கு உறுதியளிக்கவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இவர்களை ஸ்ரீலங்கா ராணுவம் கொழும்பு கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது.

ஸ்ரீலங்கா படையினர் அவர்களை பலாத்காரமாகக் கொழும்புக்குக் கொண்டு செல்ல முயன்றால், அவர்கள் சயனைட் அருந்தி தம்மைத்தாமே அழித்துக் கொள்வார்கள்.

இவ்விதமான துர்ப்பாக்கிய சம்பவம் நிகழுமானால் அதனால் எழக்கூடிய பாரதூரமான விளைவுகளுக்கு இந்திய அமைதிப் படையே பொறுப்பேற்க வேண்டும்.

எமது தளபதிகளும், முக்கிய உறுப்பினர்களும் இறக்க நேரிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் யுத்த நிறுத்தத்தைத் தொடரப்போவதில்லை. தமிழ்ப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்திய அமைதிப்படையினருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். அமைதியையும், இன ஒற்றுமையையும் நிலைநாட்டுவதில் உறுதிகொண்டிருக்கும் இந்திய அரசும், இந்திய அமைதிப் படையினரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறுப்பினர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய ஆவன செய்யவேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் வேண்டுகோள் விடப்பட்டிருந்தது.

இக்கடிதத்தை ஹர்கிரத் சிங்கிடம் சேர்த்தபோது அவருடன் பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பெரியசாமி இருந்தனர்.

நிலைமை அவர்களுக்குக் கவலையளித்தது. இவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஹெலிகாப்டர் ஆயத்த நிலையில் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது, பயிற்சிக்காக அவ்வாறு செய்வதாகக் கூறப்பட்டது.

நான் கோபமுற்று, "எங்கள் தோழர்களை இங்கிருந்து கொழும்பு கொண்டு போனால், அடுத்த முறை அவர்களது உடல்களை எடுத்துச் செல்லவே வருவேன்' என்று கூறினேன்.

தீபிந்தர்சிங் தில்லிக்குச் செய்தி அனுப்பினார். தில்லியில் ஜெயவர்த்தனாவின் செல்வாக்கே கொடிகட்டிப் பறந்தது.

மறுநாள் பகல் இரண்டு மணியளவில் 17 தோழர்களுக்கு இந்திய அமைதிப்படை அளித்த பாதுகாப்பு விலக்கப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா படையினர் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். இது என்ன மாற்றம் என்று வினவியபோது, பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றிருந்த லெப்.கர்னல் பிரார், "இப் பிரச்னையில் நாங்கள் தலையிடக்கூடாதென தில்லியிலிருந்து ஆணை வந்துள்ளது' என்றார்.

அதற்குமேல் ஹர்கிரத் சிங்கால் எதையும் செய்யமுடியவில்லை.

மாலை 5 மணிக்கு சிங்கள வீரர்கள் புலிகள் இருந்த அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைய முயன்றபோது, 17 புலிகளும் சயனைட் குப்பிகளைக் கடித்தனர். சில விநாடிகளில் 12 பேர் உயிர்கள் பிரிந்தன. எஞ்சிய 5 பேரும் எப்படியோ பிழைத்துக் கொண்டனர். மறுநாள் மாலை 4 மணியளவில் 12 பேர் உடல்களும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன' இவ்வாறு மாத்தையா குறிப்பிட்டிருந்தார்.

112: எம்.ஜி.ஆர். வெளியிட்ட அஞ்சலி!

மாத்தையாவிடம் ஒப்படைக்கப்பட்ட தளபதிகள் புலேந்திரன், குமரப்பா மற்றும் முக்கிய உறுப்பினர்களான அப்துல்லா, ரகு, தவக்குமார், நளன், அன்பழகன், பழனி, ஆனந்தகுமார், ரெஜினால்ட், கரன், மிரேஷ் ஆகியோரின் உடல்களில் மிக மோசமான இரத்தக் காயங்களுடன் இருவர் உடல்கள் இருந்தன.

அவை குமரப்பா, புலேந்திரன், உடல்கள்தான். ஏராளமான காயங்கள். அவர்கள் உயிர்போன பின்னும் சிங்கள வெறியர்களின் ஆத்திரம் தீரவில்லை. கொத்திக் குதறிப் போட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து மாத்தையா, பழ. நெடுமாறனிடம் மேலும் கூறியதாவது:

""12 தோழர்களின் உடல்களைப் பார்த்த எங்கள் தலைவர் பிரபாகரன் கலங்கினார். இளம் வயதிலிருந்து அவர்களோடு பழக்கம். துக்கம் மேலோங்க அது வெஞ்சினமாக மாறிற்று. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிதைக்கு எங்கள் தலைவர் தீ வைத்தபோது எங்கள் நெஞ்சங்களும் கனன்று எழுந்தன. இனி எங்களையும், எங்கள் மக்களையும் பாதுகாக்க இந்திய அமைதிப் படையை நம்பிப் பயனில்லை. நாங்கள் ஆயுதம் தூக்கினோம். எங்கள் பாதுகாப்புக்காகத்தான் இவ்வாறு செய்தோம். இரு அரசுகளும் எங்களை அழிப்பது என்று முடிவெடுத்தபோது நாங்கள் மானமுடன் வாழவும் சாகவும் ஒரே வழி போராட்டம்தான். அடிமைகளாகக் கொல்லப்படுவதைவிடப் போராடி இறப்பது எவ்வளவோ மேல் என உறுதி பூண்டோம்'' என்றார் மாத்தையா.

ஜெயவர்த்தனா விரும்பியது இதைத்தான். இந்திரா அம்மையார் பயிற்சி கொடுத்தார். ஆயுதம் கொடுத்தார். எனவே இந்திராவை எதிரியாகக் கருதினார் ஜெயவர்த்தனா. ஆனால் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் மாற்றுக் கருத்துக்கிடையே நட்பு பூண்டார்; ஒப்பந்தம் போட்டார். தான் செய்ய வேண்டிய வேலையை இந்தியப் படையிடம் தள்ளிவிட்டார். இந்திரா காந்தியின் மொழியில் சொல்வது என்றால் ஜெயவர்த்தனா என்கிற கிழட்டுக் குள்ளநரியின் ராஜதந்திரம் வென்றுவிட்டது.

இந்தச் சம்பவம் என்பது தற்செயல் அல்ல. "செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து இலங்கை கடற்படை, இந்தியக் கப்பல் படையுடன் சேர்ந்து ரோந்து சுற்றப் போகிறோம்' என்று தீட்சித், ஹர்கிரத் சிங்கிடம் செப்டம்பர் 11 அன்று கூறியதை இங்கே நினைவில் கொள்வது தகும்.

அதுமட்டுமின்றி 17 புலிகளை, சிங்களக் கடற்படையினர் சுற்றி வளைத்தபோது, அந்தச் செய்தியை ஹர்கிரத் சிங், தீட்சித்திடம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது அவர் சிறிய விடுமுறையில் இந்தியாவில் இருந்தார். இதைக்கேட்டபோது தீட்சித் சொன்னது, "நான் கொழும்பு திரும்பியதும் இதுகுறித்து உயர்ந்த பட்ச நடவடிக்கை எடுக்கிறேன்' என்பதாகும்.

அக்டோபர் 3-ஆம் தேதி லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் சென்னையிலிருந்து கொழும்பு சென்றார். அங்கு அவரும் தூதுவர் தீட்சித்தும் ஜெயவர்த்தனாவைச் சந்தித்து வற்புறுத்தியும் எதுவும் நடக்கவில்லை. மாறாக, ஹர்கிரத் சிங்கை திருகோணமலைக்கு உடனே சென்று அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவிட்டார்.

புலேந்திரன் கைதால் அங்கு பிரச்னை எழும் என்ற கணிப்பில் பிறந்த உத்தரவு அது. மறுநாள் தீபிந்தர் சிங் கொழும்பிலிருந்து திருகோணமலை வந்து ஹர்கிரத் சிங்கிடம், "இலங்கை அரசு 17 பேரையும் விடுவிக்க மறுக்கிறது' என்று கூறியதாக அவர் தனது நூலில் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இதே சம்பவத்தை தீட்சித் தான் எழுதிய நூலில் வேறு விதமாக எழுதியிருப்பதாக ஹர்கிரத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தீட்சித் கூறியிருப்பதாவது, "பலாலி விமான தளத்தில் போராளிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கச் சொன்னதாகவும், அக்டோபர் 2,3-ல் இதுகுறித்து மேஜர் எதுவும் பேசவில்லை என்றும், அன்றாடம் எழுதும் ‘ரஹழ் க்ண்ஹழ்ஹ்’-ல் இதுகுறித்து எழுதவில்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே தீபிந்தர் சிங் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு, போராளிகளை எக்காரணம் கொண்டும் கொழும்புக்கு அனுப்பக் கூடாது என்று சொன்னதாகவும், தான் தில்லியில் இருப்பதாகவும் தெரிவித்ததாக அந்நூலில் எழுதியுள்ளதாக ஹர்கிரத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகார் குறித்து ஹர்கிரத் சிங் தனது நூலில் மேலும் கூறுகையில், "ராஜதந்திர அலுவல் முறையில் ஏற்பட்ட தோல்வியால் இவ்வாறு திசை திருப்பப்படுகிறது. 17 போராளிகளைப் பாதுகாக்கவில்லை என்பது சரியல்ல. நான் எனது மேல் அதிகாரியிடம் போராளிகள் கொழும்பு செல்வதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினேன். அதுமட்டுமின்றி இந்தியத் தூதுவர் உடனே கொழும்பு சென்று, இலங்கை அரசுத் தரப்பில், உயர்மட்டத்தில் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட தகவல்களில் முரண்பாடுகள் உண்டென்றாலும் ஈழத்தமிழர் பிரச்னையில் "இந்திய மேலிடத்தின்' பொதுவான அணுகுமுறை என்னவென்பது இதன்மூலம் புரிய வரும்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழ் மக்களின் போராட்டங்களைப் பற்றிய அக்கறையுடன் இருந்தார் என்பதற்கு ஓர் உதாரணம் திலீபன் மறைவுக்கு அவர், விடுத்த இரங்கல் செய்தியாகும்.

அவரது இரங்கல் செய்தியில், "திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போர் தொடங்கி 12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட குடிக்காமல் 26.9.87-இல் மடிந்து போனார் என்பதை அறிந்து வருந்துகிறேன். எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று புலேந்திரன், குமரப்பா மரணத்துக்கும் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையில், ""தங்களால் கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும் இலங்கைக் கடற்படை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்து இருக்குமானால் அவர்களுள் 12 பேர் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வன்முறைகளும் வெடித்து இருக்காது.

இந்திய-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இடைக்கால அரசு ஒன்று ஏற்பட வேண்டிய நேரத்தில் வன்முறைகள் வெடித்ததும், அதில் இந்திய அமைதிப் படையும் விடுதலைப் புலிகளும் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் கவலைக்குரியது.

இந்தக் கடினமான பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காணத் தொடர்ந்து முயற்சி மேற்கொள்வேன். தமிழக அரசு இதுபற்றி எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்'' (11.10.1987 செய்தித்தாள்கள்) என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கை இந்திய அரசைச் சங்கடத்தில் ஆழ்த்தியது.

113: போர் நிறுத்தம்: எம்.ஜி.ஆர். வலியுறுத்தல்!

ஜெயவர்த்தனாவை இந்தியத் தரப்பினர் சந்தித்தபோது, புலிகள் மீது போர் தொடுக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்தாகும் என்று அவர் மிரட்டினார். இந்தியத் தரப்பினர் திகைத்து, தில்லிக்கு தகவல் அளித்தனர்.

குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோரை விடுவிப்பது குறித்து தீபிந்தர் சிங் தனது நூலில் வெளிப்படுத்தி உள்ளார். அதன் விவரம் வருமாறு:

கொழும்பு சென்று ஜெனரல் ரணதுங்கே, ஜெயவர்த்தனா உள்ளிட்டவர்களைச் சந்தித்து, கைதானவர்களை விடுவிக்கும்படி தீபிந்தர்சிங் கோரினார். ஜெயவர்த்தனா கோபமுற்று, "இந்திய ராணுவ பலம் எவ்வளவு? வலிமை வாய்ந்த ராணுவம் என்று கூறி வருகிறீர்கள். உங்களால் விடுதலைப் புலிகளை ஒடுக்க முடியவில்லையே ஏன்? எங்கள் நாட்டில் எதிர்க்கட்சிகளும்- எங்களது கட்சியினரும் கூட உங்களை இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பும்படி வற்புறுத்துகிறார்கள்' என்று கோபத்துடன் கூறினார்.

""அமைதியாகப் பிரச்னையைத் தீர்ப்பதற்காகத்தான் நாங்கள் வந்துள்ளோம். மேலும் படைப் பிரிவுகள் வந்ததும் எங்கள் பணியை மேற்கொள்வோம்'' என்றார் தீபிந்தர் சிங்.

அக்டோபர் 6-ஆம் தேதி ஜெனரல் சுந்தர்ஜி யாழ்ப்பாணம் வந்தார். "புலிகளுடன் போர் தேவையில்லை. நிலைமை சாதகமாக இல்லை. போர் என்றால் 20 ஆண்டுகள் நீடிக்கும்' என்று அவரிடம் தீபிந்தர் சிங் தெரிவித்தார்.

"தோல்வி மனப்பான்மையால் பேசக் கூடாது' என்று அவர் கூறினார்.

"யதார்த்தமான நிலையைக் கூறுகிறேன்' என்றார் தீபிந்தர் சிங்.

விடுதலைப் புலிகளை ஒடுக்கும்படி கூறிவிட்டு, சுந்தர்ஜி கொழும்பு சென்றார்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்த், இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி சுந்தர்ஜி ஆகிய இருவரும் இருபுறமும் அமர்ந்திருக்க, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜெயவர்த்தனா. சில அறிவிப்புகளை அப்போது அவர் வெளியிட்டார்.

(அ) வடக்கு-கிழக்கு மாநிலத்திற்கு இடைக்கால நிர்வாக சபை (அரசு) இனி மேல் கிடையாது.

(ஆ) விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

(இ) பிரபாகரனை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்.

(ஈ) கிழக்கு மாநிலத்தில் உள்ள சிங்களவர்களுக்கு இந்திய அமைதிப் படை மீது நம்பிக்கை இல்லாததால், அவர்களைப் பாதுகாக்க, இலங்கை ராணுவப் படை அங்கே அனுப்பப்படும்.

(உ) இலங்கையில் உள்ள இந்திய அமைதிப் படை இனி, எனது ஆணைப்படிதான் செயற்படும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பது ஜெயவர்த்தனாவின் புதிய அறிவிப்பால் அடியோடு தகர்க்கப்பட்டது. ஜெயவர்த்தனாவின் இருபுறமும் அமர்ந்திருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்தோ, ஜெனரல் சுந்தர்ஜியோ மாற்றுக் கருத்து எதுவும் கூறாமலும், ஒப்பந்தத்தில் இல்லாத இந்த அறிவிப்புக்கு எதிர்த்துக் குரல் கொடுக்காமலும் இருந்தனர். அவர்களது மௌனம்- ஜெயவர்த்தனாவின் அதிகாரத்திற்குக் கட்டுப்படுவதான சம்மதமாகி விட்டது. இந்தியாவும் கூட இது குறித்து அந்த நாளிலோ, அதற்கடுத்த வாரத்திலோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவே இல்லை.

இந்திய அமைதிப் படையின் நோக்கம், இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதுதான் என்று இருந்த நிலை மாறி, பிற இயக்கங்களுக்கு மீண்டும் ஆயுதங்கள் அளித்து, பயிற்சியும் அளிக்கப்பட்ட பிறகு, அவர்களிடையே மோதல்கள் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாததானது. அமைதிப் படை எல்லாக் குழுவினருக்கும் பொதுவானது என்ற நிலையில் ஏற்பட்ட இம்மாற்றத்தால் வந்த விளைவு இது.

நாளடைவில் விடுதலைப் புலிகளுக்கு மக்களிடையே இருக்கிற நம்பிக்கை மற்றும் செல்வாக்கை முறியடிக்கவும், அதற்கான பிரசாரத்தில் ஈடுபடவும் அமைதிப் படைக்குப் பணிக்கப்பட்டது. இந்த உத்தரவு அமைதிப் படைத் தளபதிகளுக்கு உவப்பாக இல்லை. இருந்தாலும் அவர்களால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை. முடிவு எடுக்கும் அதிகாரம் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரகத்துக்கு மாற்றப்பட்டது.

புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட போராளிகளின் மரணத்தைத் தொடர்ந்து, "பிரபாகரன் கைது' என்ற செய்தி பரப்பப்பட்டு, அவை பத்திரிகைகளிலும் வெளியாயிற்று.

இந்தச் செய்தியை மறுத்து பழ. நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தனர். இந்தத் தகவலை அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கும் ஃபேக்ஸ் மூலம் தெரிவித்தனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். அனுமதியுடன் அ.இ.அ.தி.மு.க.வும் கலந்துகொண்டது.

விடுதலைப் புலிகளுடனான அமைதிப் படையின் போரை நிறுத்தி, அவர்களுடன் மீண்டும் பேச்சு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி- அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் போட்டதுடன், அதனை வலியுறுத்தி 17.10.1987 அன்று கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்வது என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதை வலியுறுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்த நிலையிலேயே மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையில்,

""சிங்கள அரசிடமிருந்து 12 பேர்களை மீட்க வாய்ப்பு இருந்தும் இந்திய அமைதிப் படை முயற்சி எடுக்கவில்லை. மாறாக, ஈழத் தமிழர்களுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. வன்முறையும் பெருமளவில் வெடித்தது.

இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி தமிழகம் முழுவதும் 17.10.1987 அன்று முழு அடைப்புக்கு ஆதரவு அளித்து, தமிழக மக்கள் கடைகளை அடைத்து தமிழக மக்களின் ஒருமித்த உணர்வை உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்- என்றும், எம்.ஜி.ஆர். அதில் கேட்டுக் கொண்டிருந்தார். (16.10.1987 விடுதலை; எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்: வே. தங்கநேயன் நூலில் வந்தவாறு)

114: அமைதிப்படையின் முதல் தாக்குதல்!

ஆளும் கட்சியின் ஆதரவுடன் நடந்த அந்த முழு அடைப்பு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

முழு அடைப்பு நாளன்று கா.காளிமுத்து அளித்த பேட்டியில், ""சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளைக் கைது செய்து சித்திரவதைக்கு ஆளாக்க முற்பட்ட நிலையிலும் அதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்திய ராணுவத்திற்கு, பிரபாகரனை ஆயுதத்தைக் கீழே போடச் சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?'' என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ""பிரபாகரனுக்கு ஏதும் நேர்ந்தால் தமிழகம் தாங்காது என்றும், தமிழ் மாநிலம் ரத்தக் களறியாக மாறும் என்றும் தமிழ்நாட்டு இளைஞர்களை ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அரசியல் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கி விடக் கூடாது; இதை முதல்வரின் கருத்தாகத் தெரிவிக்கிறேன்'' என்றும் அவர் கூறினார். (16.10.1987 விடுதலை; எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்: வே.தங்கநேயன் நூலில் வந்தவாறு).

அ.இ.அ.தி.மு.க. சார்பில், அவ்வியக்கத்தின் 16-வது ஆண்டு விழாக் கூட்டங்களில், ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். எழுதிய கடிதத்துக்கு மதிப்பளித்து போர் நிறுத்த அறிவிப்பு வெளியிடுமாறும் வற்புறுத்தப்பட்டது.

மேலும் அக் கூட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா அழைத்துப் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க.வின் இப்போக்கு இந்தியத் தலைமைக்கு ஒவ்வாத ஒன்றாக ஆனது. மத்திய அமைச்சரவையின் அரசியல் குழு கூட்டப்பட்டு, அதில் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், அந்த யோசனை மறுக்கப்பட்டது என்றும் அறிக்கை வெளியிட்டதும் அசாதாரணமானது.

தொடர்ந்து சென்னையில் வசித்து வரும் கிட்டுவை கைது செய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். இந்த உத்தரவுக்கு இணங்கவில்லை. வேண்டுமானால் அவரை வீட்டுக் காவலில் வைக்கலாம் என்று வீட்டுக் காவலில் வைத்தார்.

வீட்டுக் காவலில் கிட்டு வைக்கப்பட்டாலும், பழ.நெடுமாறன், கி.வீரமணி உள்ளிட்டோர் சந்திக்கவும், தினசரி பத்திரிகையாளர்கள் சந்திக்கவும் தமிழகப் போலீஸôர் எந்தத் தடையையும் விதிக்கவில்லை (பழ.நெடுமாறனிடம் நேர்காணல்).

"இந்த நிலையில் பிரதமர் ராஜீவ் காந்தி அமெரிக்கா சென்றார். அப்போது அவரைச் சந்திக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். அவரிடம் அளிப்பதற்கான ஒரு குறிப்பைத் தயார் செய்து அனுப்பும்படி எம்.ஜி.ஆரிடமிருந்து தகவல் வந்ததாக எனக்குச் செய்தி அனுப்பினார்கள்.

அந்த வேண்டுகோளுக்கிணங்க நானும், கி.வீரமணியும் குறிப்புகள் எழுதி ஃபாக்ஸ் மூலம் அனுப்பினோம். தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் எம்.ஜி.ஆர். வாஷிங்டன் பறந்து சென்றார். அங்கு ராஜீவ் காந்தியைச் சந்தித்து போர் நிறுத்தம் செய்யும்படியும், பிரபாகரனுடன் பேசும்படியும் வேண்டிக்கொண்டார். ஆனால் எம்.ஜி.ஆரின் கோரிக்கையை ராஜீவ் ஏற்கவில்லை.

மனம்நொந்த நிலையில் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பினார்.

இலங்கையிலோ, ஜெயவர்த்தனாவின் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு எல்லாமே தலைகீழாகி விட்டது. இந்தியாவிலிருந்து மேலும் துருப்புகள் வந்து இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் குவிந்தன. இவையெல்லாம் தில்லித் தலைமையின் உத்தரவுக்கிணங்க சுந்தர்ஜி செய்த ஏற்பாடுகள் ஆகும்.

துருப்புகள் வந்து இறங்கிய பின்னர்தான், சென்னைக் கோட்டையிலிருந்த அமைதிப்படை அலுவலகத்துக்கும் யாழ் பலாலியில் உள்ள பிராந்திய அலுவலகத்துக்கும் தெரியவந்தது.

விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் தொடுக்குமாறு சென்னையின் அமைதிப்படை அலுவலகத்துக்குத் தகவல் வந்தது. அதன் பின்னர் தீபிந்தர் சிங் விடுதலைப் புலித் தலைவர்களை ஒருமுறை சந்திப்பது என்று முடிவெடுத்தார். யாழ்ப்பாணம் சென்றார். அதே யாழ் பல்கலை மைதானத்தில் வந்து இறங்கி, அவர்களது அலுவலகத்தில் மாத்தையாவைச் சந்தித்தார்.

போராளிகள் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டனர். நகரங்களில் கூட மக்கள் கூட்டமில்லை. ஓரிருவர் தென்பட்ட போதிலும் அவர்கள் முகமும் இருண்டிருந்ததைக் கண்டார், தீபிந்தர் சிங்.

மாத்தையா வழக்கம்போல வணக்கம் தெரிவித்தார்; அதில் சுரத்தில்லை. தீபிந்தர் சிங் பிரபாகரனைப் பற்றி கேட்டார். அவர் வெளியேறிவிட்டதாக மாத்தையா தெரிவித்தார். தலைமறைவாகிவிட்டார் என்று எடுத்துக் கொள்ளலாமா என்றார். மாத்தையா பதில் பேசவில்லை.

இந்த நிலையைத் தேர்ந்தெடுத்ததால் இழப்புகள் நிச்சயம் இருக்கும் - மற்றவர்களுக்கும் சிரமங்கள் ஏற்படுமே என்றார். மாத்தையா, ""நாங்கள் சாவதற்குத் தயாராகி விட்டோம். எப்போதோ அந்த முடிவு எடுத்தாகிவிட்டது. சுயமரியாதையை இழந்து நாங்கள் வாழ விரும்பவில்லை'' என்றார்.

இங்குள்ள ராணுவப் படைக்கும் - அவர்களது உயிர்களுக்கும் நாங்கள் பொறுப்பானவர்கள். விடுதலைப் புலிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று தீபிந்தர் சிங் கேட்டுக்கொண்டார். மாத்தையா அவரது கையைப் பிடித்து குலுக்கினார். மரபு ரீதியான குலுக்கல்; நட்பு மறைந்துவிட்டது என்பதை தீபிந்தர் சிங் உணர்ந்தார்.

அமைதிப் படையின் முதல் தாக்குதல் விடுதலைப் புலிகளின் ஆதரவுப் பத்திரிகைகளான முரசொலி, ஈழமுரசு ஆகியவற்றின் அலுவலகம் மற்றும் அச்சகங்கள் மீதுதான் நடந்தது. அவை தாக்கி அழிக்கப்பட்டன. அங்கிருந்தோர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று கொக்குவில்லில் இருந்த விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான நிதர்சனம் தாக்கி அழிக்கப்பட்டது. தாவடியில் இருந்த வானொலி நிலையமும் தாக்குதலுக்கு ஆளானது. ஆக, புலிகளின் பிரசார சாதனங்கள் நிர்மூலமாக்கப்பட்டன.

இதுவரை இருந்த தளபதிகளை ஓரம் கட்டும் முயற்சியாக, சில சம்பவங்கள் நடந்தன. ஹர்கிரத் சிங்குக்கு அடுத்த நிலையில் இருந்த ஏ.எஸ். கல்கத், வீரர்களுக்கு "வகுப்பு' நடத்த ஆரம்பித்தார். வவுனியா முகாமுக்குத் தற்செயலாக வந்த ஹர்கிரத் சிங் இந்த அத்துமீறலைக் கண்டு கொதித்தெழுந்து அவரை அங்கிருந்து அகற்றினார். ஆனால் ராணுவத் தலைமையின் பரிவு கல்கத் பக்கமே இருந்தது.

ராணுவத் தளபதி சுந்தர்ஜி, இந்தியத் தூதரின் உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று தளபதிகளுக்கு அறிவுறுத்தினார். தளபதிகளும் இந்த செயல்பாட்டை ஏற்க வேண்டிவந்தது.

யாழ் நகரின் பல இடங்களில் அதிரடியாகப் போராளிகள் மீது தாக்குதல்களும் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

115: எம்.ஜி.ஆர்.மறைவு - புலிகள் அஞ்சலி

தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்து 31-10-1987 அன்று சென்னை திரும்பியதும், அரசுப் பணிகளுக்காகச் சில நாட்களை ஒதுக்கியதுபோக, 4-11-1987 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கினார். அதன்படி கிட்டு, பேபி சுப்ரமணியம், ரகீம் உள்ளிட்டோர் அவரைச் சந்தித்து தமிழீழத்தில் நடப்பது குறித்து விளக்கினார்கள் (விடுதலை 5-11-1987).

9-11-1987 அன்று தமிழக சட்டமன்றம் கூட இருந்த நேரத்தில், தமிழக சட்டமன்றத்தில் இந்திய அமைதிப்படை போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பழ.நெடுமாறனும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணியும் அறிக்கை வெளியிட்டார்கள். கட்சித் தலைவர்களையும் அவர்கள் சந்தித்துப் பேசினார்கள். இதே கோரிக்கையை பல்வேறு கட்சித் தலைவர்களும் அறிக்கை மூலம் அரசை வலியுறுத்தினார்கள்.

இப்படியொரு தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் வந்துவிடக்கூடும் என்ற ஐயத்திலும் அப்படியொரு தீர்மானம் வந்துவிடக்கூடாது என்கிற பதற்றத்துடனும் மத்திய அரசு, வெளிநாட்டு இணையமைச்சர் நட்வர்சிங்கை சென்னைக்கு அனுப்பி வைத்தது. அவரின் இந்த வருகை, சமீபத்தில் நடந்த ராஜீவ்-ஜெயவர்த்தனா சந்திப்பையொட்டிய தகவல்களை முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கவே என்று பின்னர் கூறப்பட்டது.

ஆனால் பழ.நெடுமாறன் தனது நூலில், "சட்டமன்றத்தில் இந்திய அரசுக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தும் தீர்மானம் எதுவும் நிறைவேற்றிடவேண்டாம் என முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வேண்டிக்கொள்வதற்காகவே நட்வர்சிங் வந்தார். பிரதமரின் விருப்பத்தைத் தெரிவித்தார். தமிழக மக்களின் கொதிப்புணர்வை அவரிடம் எம்.ஜி.ஆர். சுட்டிக்காட்டினார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று சட்டமன்றத்தில் தீர்மானம் எதையும் எம்.ஜி.ஆர். நிறைவேற்றாவிட்டாலும் தமிழ் மக்களின் மனநிலையைத் தில்லி உணரும்படி செய்தார். பிரபாகரனுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். மேற்கொண்டுள்ள நிலையில் இருந்து அவரை மாற்ற நட்வர்சிங் மூலம் ராஜீவ் மேற்கொண்ட கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பழ.நெடுமாறன் குறிப்பிடுவதாவது- "இதன் பின் அதிக காலம் எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கவில்லை. பிரபாகரனின் பிரதிநிதிகள் அவ்வப்போது அவரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கி வந்தனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் அவர் செய்து வந்தார். அவர் காலமாவதற்கு முதல்நாள் கூட ஒரு பெருந்தொகையைப் புலிகளுக்கு அளிக்க விரும்பி அவர்களுக்குச் சொல்லியனுப்பினார்.

வழக்கமாகப் பிரபாகரன் சார்பில் அவரைச் சந்திப்பவர் சென்னையில் இல்லாத காரணத்தினால் வேறொருவர் சென்றார். குறிப்பிட்டவரையே அனுப்பும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டார். வெளியூரில் இருந்த அந்த குறிப்பிட்ட தோழர் சென்னைக்கு விரைந்து வந்து எம்.ஜி.ஆரைச் சந்திப்பதற்குள் காலதேவன் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டான்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் வாழும் தமிழர்களை உலுக்கிய எம்.ஜி.ஆரின் மறைவு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் உலுக்கியது. பிரபாகரன் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டார்:

""ஈழத்தில் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணைநின்ற புரட்சித் தலைவரே, தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்த செயல்வீரரே, தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது.

என்மீது கொண்டிருந்த அன்பையும் ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்'' (விடுதலை 25/26-12-1987/ எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும்-வே.தங்கநேயன்).

எம்.ஜி.ஆர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் செய்த உதவிகள் குறித்து சிங்கள எழுத்தாளர் ரோகண குணரத்னவும் தான் எழுதிய "இந்தியன் இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா' (பக்கம்-182-இல்) என்னும் நூலில்,

""தமிழ்நாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த "ரா' அதிகாரி சந்திரசேகரன், ராஜீவ் காந்தி சார்பில் எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர். உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ராஜீவ் சொல்லியனுப்பியவற்றை அவர் வெளியிட்டார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எம்.ஜி.ஆர்., "விடுதலைப் புலிகளை யாழ்ப்பாணத்தில் வீழ்ந்துவிட விட்டுவிடாதீர்கள். விடுதலைப் புலிகள் கண்டிப்பாகக் காப்பாற்றப்படவேண்டும்' என்று கதறினாரென குறிப்பிடுள்ளார்.

"பிள்ளையில்லாத எம்.ஜி.ஆர். பிரபாகரனைத் தன்னுடைய மகனாகவே கருதி வாஞ்சை செலுத்தினார் எனக் கூறுவதில் தவறில்லை' என பழ.நெடுமாறன் குறிப்பிடுகிறார்.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பது இனி அமைதிக்கான நடைமுறை சாத்தியமற்றதான நிலையை ஜெயவர்த்தனாவின் பேட்டி தோற்றுவித்தது. அதற்கு முன்பாக இந்த ஒப்பந்தத்தை அவரது அமைச்சரவையில் வெளிப்படையாக ஆதரித்தவர் இருவர் மட்டுமே. ஒருவர், காமினி திஸ்ஸநாயக்கா; மற்றொருவர் ரோனி டி மெல் ஆவர். பிரதமர் பிரேமதாசா உள்ளிட்ட அமைச்சர்கள் கலகக்கொடியைத் தொடர்ந்து தூக்கியபடியே இருந்தனர். சிங்களப் பேரினவாதத்தைத் தூக்கிப்பிடித்த புத்தபிக்குகள் மற்றும் மதவெறியர்கள் மட்டுமன்றி, மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி.யும் "இந்தியப்படையே வெளியேறு' என்று! வீதிக்கு வந்து போராடியது.

போராளிகளில் விடுதலைப் புலிகள் தவிர்த்து பெரும்பாலான இயக்கங்கள் திம்புவில் குறிப்பிட்ட தங்களது உயிர்க்கொள்கையான 5 அம்சத்தை மறந்து ஒப்பந்தத்தை ஆதரித்தனர். விடுதலைப் புலிகளோ நிர்பந்தம் காரணமாகவும், இந்தியாவுடன் ஒரு யுத்தம் தவிர்க்கும் எண்ணத்திலும் ஒப்பந்தத்தை ஏற்றனர் என்பதையும் முந்தைய பகுதிகளில் பார்த்தோம்.

இந்த ஒப்பந்தம் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்ததற்கு அடிப்படைக் காரணமே, இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு, ஈழத் தமிழர்களின் அடிநாதமான தமிழ்த் தேசியம் என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாததுதான். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதமர் ராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் தங்கள் தங்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழ்த் தேசியம் என்ற அடிநாதத்தை பூமிக்கடியில் புதைக்க முற்பட்டதுதான்!

இந்தத் தமிழ்த் தேசியம் என்பது என்னவென்று கலாநிதி அ.க.மனோகரன் "இலங்கை தேசிய இனமுரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும்' என்னும் தனது ஆய்வு நூலில், ""தமிழ்த் தேசிய வாதம் ஒருபோதும் வெறும் புத்திஜீவிகளின் ஓர் எண்ணக் கருவாக இருந்ததில்லை. அவ்வாறிருக்குமாயின் அதற்கு உயிரோட்டம் இருந்திருக்காது. அது வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடுமல்ல. அவ்வாறிருக்குமாயின் அது நீண்டகாலம் தளராது தொடர்ந்திருக்க முடியாது. மேலும், அது வெறுமனே உணவையும் உடையையும் உறைவிடத்தையும் அவர்கள் உயிர்வாழ்வதற்கான பொருள்சார்ந்த நிலைமைகளையும் ஒரு மக்களுக்கு உறுதிப்படுத்துகின்ற ஒரு விடயமுமில்லை. அவ்வாறு கூறுதல் தமிழ் தேசியவாதத்துக்கு அதன் வளமான கலாசார மரபுரிமையை மறுப்பதற்கு ஒப்பானதாகும். தமிழ் தேசியவாதம் இவை அனைத்தையும் அதிலும் விடக் கூடியனவற்றையும் உள்ளடக்கியது. அது இவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான விகிதாசாரங்களின் கூட்டுத் தொகையைவிட அதிகமான ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமை. எதிர்ப்பு - வேறுபடுத்தல் - கூட்டுழைப்பு என்ற நீடித்த சிக்கலான செயல்முறையின் ஊடாக உருப்பெற்ற ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமை'' என்று குறிப்பிடுகிறார்.

இலங்கைத் தமிழ் தேசியவாதம் என்பதை ஏற்று, அதில் உறுதிப்பாடுடன் நம்பிக்கை கொண்டு, அதனை 13-வது சட்டத் திருத்தத்திலும் சேர்த்து, அதனை நிறைவேற்றுவதில் ராஜீவ் காந்தி முன்னின்று செயல்பட்டிருந்தால், நிலைமை முற்றிலும் வேறுபட்டிருக்கும். ஆனால், ராஜீவ் காந்திக்கே, தமிழ் தேசியம் என்பதில் நம்பிக்கையே இல்லை. அப்படியொரு நம்பிக்கை இருந்திருந்தால் மட்டுமே மேற்கண்ட யாவும் நிகழ்ந்திருக்கக் கூடும்.

இதற்கு முட்டுக்கட்டை போட்டவர்களில் "ரா' அமைப்பினர் முன்னணியில் இருந்தனர். அடுத்த நிலையில் ஒருவகை தந்திர மனிதராக ஜெயவர்த்தனா. இவர்கள் போட்ட தூபம்தான் ராஜீவ் காந்தியைத் தமிழ் தேசியத்துக்கு எதிராகத் திருப்பியது. இலங்கையில் தமிழ் தேசியம் பலம் பெற்றால், அது இந்தியாவில் தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்று பயமுறுத்தினார்கள். அது காரணமாகவே, தேசியத்தை ஆதரிக்கும் ராஜீவ், மொழிவாரி தேசியத்துக்கு எதிரானவராக இருந்தார்.

"நாங்கள் சொல்வதற்கு மட்டுமே கட்டுப்படுங்கள்' என்ற மேலாதிக்கமே இந்தியாவிடம் இருந்தது என்பது புஷ்பராஜாவின் கருத்து. விடுதலைப் புலிகள் உள்பட அனைத்து இயக்கங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தான் விரும்பியதைச் செய்யும் குழுக்களாக, அவ்வியக்கங்களை வைத்திருக்க விரும்பியதே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.

இவை எல்லாவற்றையும்விட, விடுதலைப் புலிகளைச் சம்மதிக்க வைக்க, ஜூலை 28, 29 அதிகாலை அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி, அதாவது எழுதப்படாத ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததும் ஒரு காரணமாயிற்று.

அந்த எழுதப்படாத ஒப்பந்த விவரம் என்ன?

116: எழுதப்படாத ஒப்பந்தத்தின் விளைவுகள்

இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாவதற்கு முந்தின நாள் (28.7.1987) நடைபெற்ற ராஜீவ்-பிரபாகரன் சந்திப்பில் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று உருவானதாக பின்னாளில் பேசப்பட்டது; எழுதப்பட்டது. அதுகுறித்து இங்கு அறிவது அவசியமாகிறது.

வடக்கு, கிழக்கு இடைக்கால அரசொன்றை அமைப்பதுடன், அந்த அரசில் விடுதலைப் புலிகளே பெரும்பான்மை வகிப்பார்கள் என்று ராஜீவ் உறுதியளித்ததுடன், அதில் பிற அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியபோது பிரபாகரன் மறுத்ததாகவும், பின்னர் ஈரோஸ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆகியவற்றிற்கு பிரதிநிதித்துவம் அளிக்க சம்மதித்தார் என்றும் பாலசிங்கம் தனது "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால ஆட்சி, அதன் நிர்வாக அமைப்பு, அதன் அதிகாரம், செயல்பாடு, நிதி ஆதாரம் ஆகியவை தொடர்பாக ஜெயவர்த்தனாவுடன் பேசித் தீர்ப்பது என்றும் அப்போது உறுதியளிக்கப்பட்டதாகவும் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

அதுவரை தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றமோ புதிதாகக் காவல் நிலையமோ அமையக் கூடாது என்றும் பிரபாகரன் வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் அதுநாள் வரை வரிவசூலிப்பில் ஈடுபட்டதாகவும், ஒப்பந்தத்திற்குப் பிறகு அந்தச் செயல் தடை செய்யப்படும் என்று கூறியதுடன், ஆயுதம் கையளிப்பு உள்ளிட்ட இறுதிக்கட்ட பிரச்னைக்கு ராஜீவ் வந்தார்.

அதன் விவரம் பாலசிங்கம் எழுதிய "விடுதலை' நூலில் வெளிவந்தபடி இங்கே தரப்படுகிறது:

""யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடமிருந்து கட்டாய வரி வசூலிப்பு செய்வதாக ஜெயவர்த்தனா அரசு புலிகள் மீது குற்றம் சுமத்துகிறது. வரி வசூலிப்பை நிறுத்த முடியாதா எனக் கேட்டார் ராஜீவ் காந்தி. அந்த வரிப்பணம் எமது இயக்கத்தின் நிர்வாகச் செலவுக்கே பயன்படுத்தப்படுகின்றது. அந்தத் தொகையை இந்திய அரசு எமக்குத் தருவதானால் வரி அறவிடுவதை நிறுத்தலாம் என்றார் பிரபாகரன்.

""மாதம் எவ்வளவு பணத்தை வரியாகப் பெறுகின்றீர்கள்'' என ராஜீவ் கேட்க, ""இலங்கை நாணயப்படி ஒரு கோடி ரூபாய் வரை திரட்டுகிறோம்'' என்றார் பிரபாகரன்.

""அப்படியென்றால் இந்திய நாணயப்படி ஐம்பது லட்சம் ரூபாய் வரை வரும். அந்தப் பணத்தை நான் கொடுக்கிறேன்'' என்றார் ராஜீவ்.

இறுதியாக ஆயுதக் கையளிப்பு விவகாரம் எழுந்தது. ""ஆயுதங்கள் முழுவதையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. நல்லெண்ண சமிக்ஞையாக சிறு தொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும். பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பாக இந்திய அமைதிப் படை வடகிழக்கில் செயல்படும். சிங்கள ஆயுதப் படைகளுடன் போர் நிறுத்தம் தொடர்ந்து இருக்கும். இந்தச் சூழ்நிலையில் உங்களுக்குப் போராயுதங்கள் தேவைப்படாது அல்லவா?'' என்றார் இந்தியப் பிரதமர்.

பிரபாகரன் பதிலளிக்கவில்லை. ஆழமாக சிந்தித்தபடி இருந்தார்.

திடீரெனக் குறுக்கிட்டார் பண்ருட்டியார். ""எதற்காக யோசிக்க வேண்டும்? இந்தியா கொடுத்த ஆயுதங்களில் பழைய, பாவிக்க முடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை கொடுத்தால் போச்சு'' என்றார்.

""இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எல்லாமே அப்படித்தான்'' என்று கிண்டலாக பதிலளித்தார் பிரபாகரன்.

""பரவாயில்லையே, அதில் சிலவற்றைக் கொடுங்கள். தேவை ஏற்படும்பொழுது இந்திய அரசு புதிய ஆயுதங்களை தரும் அல்லவா?'' என்றார் அமைச்சர் பண்ருட்டியார்.

தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராஜீவிடம் சொன்னார். அதை ஆமோதிப்பது போலப் பிரதமரும் தலையசைத்தார்.

அப்பொழுது அதிகாலை (28.7.1987) இரண்டு மணி இருக்கும். அன்று (29.7.1987) காலை ஒன்பது மணியளவில் புது தில்லியிலிருந்து கொழும்பு புறப்பட இருந்தார் ராஜீவ் காந்தி.

பிற்பகல் மூன்று மணிக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாக இருந்தது. புலிகளின் தலைவர் பிரபாகருடன் ஏதோ ஒரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ராஜீவ்.

பிரபாகரனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. அவரது முகத்தில் அது தெளிவாகத் தெரிந்தது. தூக்கமின்மையால் எல்லோருமே சோர்ந்து போய் இருந்தோம். கூட்டம் முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டது.

அப்பொழுது நான் அமைச்சர் பண்ருட்டியிடம் கேட்டேன். ""ராஜீவ்-பிரபா ரகசிய ஒப்பந்தம் எனப் பல விஷயங்களை கதைத்தோம். பிரதம மந்திரியும் பல வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார். இதை எல்லாம் சுருக்கமாக எழுத்தில் இட்டு, அவரிடமிருந்து கைச்சாத்துப் பெற்றால் என்ன?'' என்றேன்.

பண்ருட்டியார் சிறிது நேரம் யோசித்தார். ""இந்த ரகசிய உடன்பாட்டில் சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் இருக்கின்றன அல்லவா? பண விவகாரங்கள் இருக்கின்றன. ஆயுதக் கையளிப்புப் பிரச்னை இருக்கிறது. இதெல்லாம் அம்பலத்திற்கு வந்தால் இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் அரசியல் சூறாவளியே ஏற்படும். உங்களுக்கு பிரதமரிடம் நம்பிக்கையில்லையா? இது ஒரு எங்ய்ற்ப்ங்ம்ங்ய் அஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற் இரு பெரும் மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே?'' என்றார் அமைச்சர். ராஜீவ் காந்திக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.

""நீங்கள் எதற்கும் கவலை கொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றுவேன். அமைச்சர் சொல்வது போன்று இது ஒரு எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டும்'' என்றார் ராஜீவ் காந்தி.

இறுதிக் கட்டத்தில் நான் (பாலசிங்கம்) அவருடன் முரண்பட விரும்பவில்லை. முடிவாக எமது தடுப்புக் காவல் பற்றி முறையிட்டோம். பிரபாகரன் மீதான தடுப்புக் காவலை அகற்றி, அவரைத் தமிழீழம் அனுப்புவதற்கு உடனே ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்தார் ராஜீவ்.

ராஜீவ் காந்தியின் இல்லத்திலிருந்து அசோகா விடுதிக்கு நாம் போய்ச் சேர அதிகாலை மூன்று மணியாகிவிட்டது.

""அண்ணா, இருந்து பாருங்கோ, இந்த ரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஒரு ஏமாற்று வித்தை'' என்று விரக்தியோடு கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தார் பிரபாகரன்.

எனது அறைக்குள் சென்றபோது, விழித்தபடி காத்திருந்த திலீபன் விடியும் வரை என்னைத் தூங்கவிடவில்லை. ராஜீவ்-பிரபா சந்திப்பு பற்றியும், இருவருக்கும் மத்தியில் செய்து கொள்ளப்பட்ட ரகசிய ஒப்பந்தம் பற்றியும் விவரமாக திலீபனுக்குச் சொன்னேன்.

மிகவும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான். ""அண்ணன் என்ன சொல்கிறார்'' என்று கேட்டான்.

""பிரபாவுக்கு திருப்தி இல்லை. நம்பிக்கையுமில்லை. இந்த வாக்குறுதிகள் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்கிறார்'' என்றேன்.

ஆழமாக சிந்தித்தபடியிருந்த திலீபன், ""அண்ணன் சொல்வதுதான் நடக்கும்'' என்றான்.

உண்மையில் அப்படியேதான் நடந்தது. ராஜீவ்-பிரபா ரகசிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால நிர்வாக அரசும் உருவாக்கப்படவில்லை''

இவ்வாறு அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் 2000-ஆம் ஆண்டில் நூலாகும் வரை விடுதலைப் புலிகள் தரப்பில் வெளியிடப்படாத ரகசியமாகவே இது இருந்தது.

இதற்கு முன்பாக லண்டனில் இருந்து வெளிவரும் லண்டன் அப்சர்வர் ஏப்ரல். 30, 1989ல் எழுதப்படாத ஒப்பந்தம் குறித்து வெளியிட்டுள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராஜா- தனது, ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் தெரிவித்திருக்கிறார்.

பின்நாளில் லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் ஈழ மண்ணில் அமைதிப் படைப் பணிக்காக சென்று திரும்பியது குறித்த தனது அனுபவங்களை ‘பட்ங் ஐடஓஊ ஐச நதஐ கஅசஓஅ’ எனும் தலைப்பில் திரிசூல் பப்ளிகேஷன்ஸ் மூலமாக வெளியிட்டார். அந்த நூலின் பக். 66-67-இல் இப்படியொரு எழுதப்படாத ஒப்பந்தம் இருப்பதாக புலிகள் தெரிவித்து அதனை எழுத்துமூலமாக கேட்கிறார்கள் என்றும் மேலிடத்துக்குத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"முறிந்த பனை' என்னும் நூலில் ராஜீவ் காந்தியும், பண்ருட்டி ராமச்சந்திரனும் தங்களது எல்லைகளை மீறி இவ்வாறான வாக்குறுதியை அளித்திருக்கமுடியாது என்று வாதிட்ட நிலையில் அடுத்த பத்தியிலேயே அந்நூலின் வாசகம் முரண்பாட்டைக் கொண்டிருக்கிறது.

எழுதப்படாத ஒப்பந்தம் குறித்த செய்திகள் அடங்கிய அறிக்கை முதன்முதலாக சண்டே லண்டன் அப்சர்வரில் (1988, ஏப்ரல் 3-ஆம் தேதி) வெளிவந்தது. கொழும்பிலிருந்து அதன் சிறப்புச் செய்தியாளரால் எழுதப்பட்ட அக்கட்டுரை, தீட்சித்தையே மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருந்ததாகவும் கூறுகிறது.

இந்தச் செய்திக் கட்டுரையில், பாலசிங்கம் சொன்னதைவிடவும் கூடுதலான தகவல்கள் உண்டு.

இடைக்கால நிர்வாக சபையின் நிதியாதாரத்துக்கு இந்தியா பெருமதிப்பிலான தொகையை வழங்க இருந்ததாகவும் கூட அது கூறியது. இந்தத் தொகை வடக்கு கிழக்குப் பகுதிகளின் மறு சீரமைப்புக்காகப் பயன்படுத்தப்பட இருந்தது என்றும் கூறப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் போராளிகளைப் பயன்படுத்தி, ஒரு தமிழ் போலீஸ் படை உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்ததாகவும் அதில் தகவகள் உண்டு. இவைகளையெல்லாம் கூறிவிட்டு, "முறிந்த பனை' மேலும் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

அந்தக் கேள்விகளுக்கான விடைகளை விடுதலைப் புலிகள் தரப்பில் அளிக்கத் தேவையில்லாத அளவுக்கு, இந்திய அமைதிப் படையின் தளபதிகளாக இருந்த தீபிந்தர் சிங் மற்றும் ஹர்கிரத் சிங் எழுதிய நூல்களில் ஏராளமாக உள்ளன.

இந்த எழுதப்படாத ஒப்பந்தத்தில் கண்டுள்ளவாறு விடுதலைப் புலிகள் விஷயத்தில் எதுவும் நடக்காத காரணத்தால்தான் திலீபன் உண்ணாவிரதமும் அதனைத் தொடர்ந்து அவரது மரணமும் நடைபெற்றது. திலீபனின் 5 அம்சக் கோரிக்கைகளில் கூட இந்த விஷயம் வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

117: அமைதிப்படையின் ஷெல் தாக்குதல்

என்ன பிழை நடந்தது? எல்லாரது வாழ்வின் பெறுமதியை மதிப்பிழக்கச் செய்வதற்கு' - என்று முறிந்தபனையில் ஒரு வாசகம் உள்ளது. வேதனையின் விளிம்பில் எழுந்த வாசகம் இது. இன முரண்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள் தோன்றும்போது உலகெங்கும் இவ்வாறு, குரல் எழுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்திய அமைதிப் படையின் செயல்பாடுகள் இரண்டே மாதங்களில், அதாவது, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் எல்லாமே தலைகீழாகி விட்டது.

காரணம் என்ன?

"பெüத்த சிங்களரும் சிறுபான்மையினரும்' என்னும் ஆய்வு நூலில் சந்தியா பிள்ளை கீதபொன்கலன் இச் சூழ்நிலை குறித்து எழுதியுள்ளார். அவை வருமாறு:

""புனர்வாழ்வுக்கென திட்டமிட்டு செயலாற்ற முற்படும்போது இவ்விதப் போக்குகளின் தன்மைகளை உணர்ந்த நிலையிலேயே நாம் இயங்கத் தயாராக இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமாக இயங்குவதற்கு முன்பாக துன்பத்தின் எல்லைக்கு எம்மைக் கொண்டு சேர்த்த காரணங்களை ஆராய்ந்து அவற்றுக்கு உறுதுணையாக நின்ற அமைப்பு முறைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.

இதனை மறந்த நிலையில் எவ்வித நல்ல நோக்கத்துடனும் ஆரம்பிக்கும் புனர்வாழ்வு செயல்திட்டமும் நன்மைகளை விளைவிக்க மாட்டாது. உறுதியற்ற நிலை மட்டுமே நிலவும். பெறும் நன்மைகளும் தற்காலிகத் தன்மையுடையனவாக மட்டுமே இருக்கும். பூகம்பத்தின் அடிமட்டத்தை ஒத்ததாக இருக்கும். விரைவில் பொங்கியெழுந்து, திட்டமிட்டிருந்தவை எல்லாம் அதன் கொதிப்பிழம்பில் அழிந்து போய்விடும். இயற்கையில் நாம் காணும் அழிவல்ல; மனிதரால் கடைப்பிடித்த கொள்கைகளின் விளைவாகவே அவை ஏற்படுகின்றன'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் யதார்த்தம்.

விடுதலைப் புலிகள் ஆதரவுப் பத்திரிகைகளான ஈழமுரசு, முரசொலி ஆகியவற்றின் அலுவலகங்களைத் தாக்கி, அதன் செய்தியாளர்களை, அச்சக ஊழியர்களைக் கைது செய்தது, அவ்வியக்கத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கை. எனவே, விடுதலைப் புலிகளின் எதிர் நடவடிக்கையை எதிர்நோக்கி, அமைதிப் படை காத்திருந்தது போன்று இருந்தது.

மழைக்காலம் தொடங்கும் நேரம், நவராத்திரி கொண்டாடும் நேரம். இந்திய அமைதிப்படைத் திடீர் தாக்குதலைத் தொடுத்ததற்கு ஜெயவர்த்தனா கொடுத்த நெருக்கடியே முதல் காரணமாகிறது. இத் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதா, இல்லை... ஆயுதங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டு நிபந்தனையற்ற சரணாகதியடைவதா என இவ்விரு கேள்விகளே போராளிகளிடையே இருந்தது.

இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது நூலில் கூறுகையில், ""இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குழம்பினார்கள். மாபெரும் இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிடுவதா? நம்மால் தாக்குப்பிடிக்க முடியுமா என்றும், இப்போது ஆயுதங்களை கொடுத்துவிட்டு, சமரசம் செய்துகொள்வது என்றும், பின்னர் தகுந்த நேரத்தில் போராட்டத்தைத் தொடங்குவது என்றும் சிலர் ஆலோசனை கூறியதுண்டு. ஆனால் போராடுவது என்று "தம்பி' முடிவெடுத்தார். இதற்கான காரணத்தையும் பிரபாகரன் பின்நாளில் பேசும்போது தெரிவித்ததான தகவல் ஒன்றையும் கூறியுள்ளார்.

அதில், "இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க எவ்வளவோ முயன்றேன். ஆனால் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய அரசு உதறித் தள்ளியது. இடைக்கால அரசமைப்பதில் விட்டுக்கொடுத்தேன். ஆனால் ஜெயவர்த்தனாவுடன் சேர்ந்து கொண்டு எங்களை ஏமாற்றவே இந்திய அரசு முயன்றது. இதன் விளைவாக திலீபன், புலேந்திரன், குமரப்பா உள்ளிட்டோரைப் பறிகொடுத்தோம். அவர்கள் நினைத்திருந்தால் இவர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.

காலத்திற்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் நான் செயல்படுகிறேன். எந்தப் பிரச்னையிலும் அர்த்தமற்ற பிடிவாதத்தை ஒருபோதும் கடைபிடித்ததில்லை' என்று பிரபாகரன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், விடுதலைப் போராளிகள் ஆயுதம் தரித்த நிலையில், அமைதிப் படை முகாம்கள் எதிரே திரண்டனர். என்ன நடக்குமோ என்று மக்கள் அஞ்சினர்; பதை பதைத்தனர்.

யாழ் கோட்டையின் பக்கத்தில் முதல் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. தொடர்ந்து யாழ் நகரின் பல பகுதிகளில் "ஷெல்' தாக்குதல்கள் ஆரம்பமாயின. அப்போதும் கூட ஒரு பகுதி மக்கள் இந்த "ஷெல்லை' இந்தியப் படை வீசி இருக்காது என்றும், இலங்கைப் படையே போட்டிருக்கும் என்றும், ஏனென்றால் புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் மரணத்துக்குப் பதிலடியாக 8 சிங்கள வீரர்களும் கொல்லப்பட்டு, காவல் நிலையம் அருகே வீசப்பட்டிருந்ததால், இந்த "ஷெல்' தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்றும் மக்கள் எண்ணினர்.

1987-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பொதுமக்கள் நிறைந்த பகுதிகளில் இலங்கை ராணுவம் குண்டு வீசி தாக்குவதை அப்போது, இந்தியத் தூதரகம் கடுமையாகக் கண்டித்தது. இப்போது, அதே வேலையை இந்திய அமைதிப் படை செய்தபோது, தூதரகம் ஒரு பார்வையாளரைப் போன்றே நடந்து கொண்டது.

அமைதிப் படையையும் அது ஆற்றப்போகிற பணியையும் குறித்து, இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என்றே உலக நாடுகள் நினைத்தன. ஆனால் நடந்ததோ வேறு. மக்கள் நிறைந்த பகுதியில் "ஷெல்' தாக்குதல் குறித்து கண்டனம் எழுந்தபோது, "நகரத்தை - அது எந்த நகரமானாலும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றால் "ஷெல்' தாக்குதல் என்பது நடைபெற்றே ஆக வேண்டும் என்று ராணுவத் தரப்பில் கூறப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி விமானத் தாக்குதலை இலங்கை நடத்தியபோது, அதைக் கண்டித்த ராஜீவ் காந்தியை, "பஞ்சாபில் என்ன நடந்தது; நடக்கிறது என்று இந்தியா திரும்பிப் பார்க்கட்டும்' என்று இலங்கைப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டி, கண்டனம் தெரிவித்தன. அப்போது ராஜீவ் காந்தி, "இலங்கை அரசைப் போன்று இந்திய அரசு தன் சொந்த மக்களின் மீது குண்டுமழை பொழிந்ததில்லை' என்று கூறியிருந்தார். ஆனால் இன்று என்ன நிலை என்று சர்வதேச சமூகம் கேள்வி எழுப்பிற்று.

இவ்வகையான தாக்குதல் செய்தியை ரூபவாகினியை விடவும், இந்தியத் தொலைக்காட்சி மற்றும் சென்னை வானொலி முந்திக் கொண்டு அறிவித்தன. யாழ் கோட்டையிலும், தெல்லிப்பளையிலும் அமைதிப் படையினர் மீது புலிகள் தாக்குதல் தொடுத்ததாகவும், தெல்லிப்பளை தாக்குதலில் தாக்குண்டது மெட்றாஸ் ரெஜிமெண்ட் என்றும், இதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டது.

ஆனால், ஈழமுரசு, முரசொலி அலுவலகங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது குறித்தோ, அதன் செய்தியாளர்கள், அச்சக ஊழியர்கள் கைது செய்யப்பட்டது குறித்தோ, நிதர்சனம் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையம் தாக்கப்பட்டது குறித்தோ, பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்தோ எந்த செய்தியும், இந் நிறுவனச் செய்திகளில் இடம்பெறவில்லை.

118: புலிகளின் எதிர்த் தாக்குதல்!

அக்டோபர் 10-ஆம் தேதி மோதல் தொடங்கப்பட்டதன் நோக்கம், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனை சிறைப்பிடிப்பது அல்லது சுட்டுக் கொல்வது என்பதே! தலைமையைக் குறி வைத்து அழித்துவிட்டால் விடுதலைப் புலிகள் அமைப்பு சிதறிவிடும் என்பது திட்டம்.

இத்திட்டப்படி, தளபதிகளைக் கைது செய்யவும் படைப் பிரிவுகளில் சிலவற்றை இறக்கியது அமைதிப் படை. அடுத்து பிரபாகரன் இருக்குமிடத்தைச் சுற்றிவளைப்பது. இவ்விரு திட்டங்களும் பெரிய அளவில் முடுக்கிவிடப்பட்டன.

யாழ் புறநகரில், கொக்குவில், பிரம்படி பகுதியில் உள்ள தலைமையிடத்தில் பிரபாகரன் இருக்கிறார் என்று இலங்கை உளவுப் படை அளித்த தகவலையடுத்து, இந்திய அமைதிப்படை அப்பகுதியை முற்றுகையிட முடிவு செய்தது.

அக்டோபர் 12-ஆம் தேதியன்று சிறப்பு அதிரடிப் படைப் பிரிவை ஹெலிகாப்டர் மூலம் இரவு ஒரு மணியளவில் இறக்கியது. (சேகர் குப்தா கூற்றுப்படி 70 பேர்) ""அதிரடிப் படை வீரர்களைத் தொடர்ந்து 13-வது சீக்கிய மெதுரகக் காலாட்படையைச் சேர்ந்த 30 வீரர்கள் அடங்கிய இன்னொரு பட்டாளமும் தரையிறங்கியது.

அதிரடிப் படையினர் விடுதலைப்புலித் தலைவரைக் கைது செய்யும் பணியில் இறங்க, சீக்கியப் படையினர் தங்கள் தளத்தைக் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது என்பதுதான் ஏற்பாடு.

அதிரடிப் படை வீரர்களைக் கொண்டு வந்த ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலுக்கு உள்ளானதால், சீக்கிய காலாட் படையினர் கொக்குவில் கிராம சபைக்கு 300 அடி தள்ளி கிழக்கே இருந்த பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அருகில் தரையிறக்கப்பட்டனர். அவர்கள் அசையக் கூட முடியாமல் நாலாப்புறமும் விடுதலைப் புலிகளால் துரிதகதியில் சுற்றி வளைக்கப்பட்டுச் சுடப்பட்டனர்.

மருத்துவ பீடத்தின் பலமான மூன்று மாடிக் கட்டடத்திற்குள் உள்புகுந்து கொண்ட விடுதலைப் புலிகள் அதன் மேல் மாடியில் பாதுகாப்பான - சுடுவதற்கு வசதியான இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அதிகாலையிலேயே இரு தரப்பினருக்கும் துப்பாக்கிச் சூடு ஆரம்பமாகிவிட்டது''- என்று "முறிந்தபனை' மோதலின் ஆரம்பத்தை விவரிக்கிறது.

இதே சம்பவத்தை தீபிந்தர் சிங் தனது நூலில் குறிப்பிடுகையில், ""பலமுறை பறந்து அதிரடிப் படையைச் சேர்ந்த 103 வீரர்களையும் சீக்கியப் படையைச் சேர்ந்த 30 வீரர்களையும் இறக்கினோம். ஆனால் நாலாபுறத்திலிருந்தும் விடுதலைப் புலிகளின் குண்டுகள் சீறிப் பாய்ந்து வந்தன. இதன் விளைவாக 3 ஹெலிகாப்டர்கள் சேதமடைந்தன. எனவே, மேற்கொண்டும் பறக்க இயலாது என விமானிகள் மறுத்துவிட்டனர். எனவே 13-வது சீக்கியப் படையணியில் எஞ்சியிருந்தவர்களை அனுப்பமுடியவில்லை. பிற படையணிகளையும் அனுப்ப முடியவில்லை என்ற செய்தியை ஏற்கெனவே திடலில் இறங்கியவர்களிடம் செய்தி தெரிவிக்கவும் முடியாதவாறு அவர்களின் "வாக்கி-டாக்கி செட்டுகள்' புலிகளால் தாக்கப்பட்டு பழுதாகிவிட்டன.

இதற்குள் விடியும் வேளை நெருங்கி விட்டதால் அதிரடிப் படையினர் பிரபாகரன் இருக்குமிடத்தை வளைத்துக் கொள்ள முன்னேறினார்கள். ஆனால், அவர்கள் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டனர். கடும் போரின் முடிவில் ஒரேயொருவர்தான் மிஞ்சினார் (நெடுமாறனின் தமிழீழம் சிவக்கிறது மற்றும் தீபிந்தர் சிங்கின் ஐடஓஊ ஐச நதஐ கஅசஓஅ).

இந்தச் சண்டையின்போது அந்தப் பகுதியில் இருந்த கவிஞர் காசி ஆனந்தன் கூறியதாக பழ.நெடுமாறன் நூலில் கூறப்பட்டுள்ள தகவல் வருமாறு: ""தம்மைச் சுற்றிவளைத்துப் பிடிக்க இந்தியப் படை முயலும் என பிரபாகரன் உணர்ந்திருந்தார். ஹெலிகாப்டர்கள் மூலம் படைகளைக் கொண்டு வந்து இறக்குவார்கள் என்பதையும் அவர் ஊகித்துணர்ந்திருந்தார்.

இதன் காரணமாக அவர், பல்கலைக்கழக வளாகத்திற்குள் புலிகளை மறைவாக நிறுத்தி வைத்திருந்தார். இவர்கள் இருப்பது தெரியாமலேயே வந்திறங்கிய அமைதிப் படை வீரர்கள் புலிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாயினர். இந்த இடத்துக்கு அருகில்தான் நாங்கள் தங்கியிருந்தோம். தம்பி, தானே தலைமை ஏற்று ஆயுதமேந்தி, களத்தில் நின்று, உத்தரவுகளைப் பிறப்பித்த காட்சி, நிலவொளியில் அவர் நெருப்பாகத் தெரிந்தார்'' என்று கூறியுள்ளார்.

இந்தப் போரில் பிரபாகரன், மாத்தையா, ஜானி, பொட்டு அம்மான், யோகி, நடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் பொட்டு அம்மான் வயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயமுற்றார். கையிலும் பலத்த காயத்துடன் தப்பித்தார்.

இப் போர் குறித்து அடேல் பாலசிங்கம் எழுதிய "சுதந்திர வேட்கையில்' கூறப்பட்டிருப்பதாவது:

""இதேவேளை, பாரசூட் அதிரடிப் படையினர் சீக்கியப் படையணியிலிருந்து பிரபாகரனை அழித்தொழிக்கும் இலக்கை மட்டும் தங்கள் தனி இலக்ககாகக் கொண்டு அவர் இருந்த இடத்தைக் குறி வைத்து நகரத் தொடங்கினர். அந்த இடத்தை நெருங்குவதற்கு முன்னமே அங்கிருந்து அவர் வெளியேறி விட்டதை அவர்கள் அறிந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், ""தமக்கு பரிச்சயமில்லாத சூழலில் தாம் யாரைத் தேடிச் செல்கிறார்களோ, அவரை முன்பின் பார்த்தறியாத நிலையில், தங்களது இலக்குக்குள் அகப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை அமைதிப்படை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றது. யாழ் கோட்டையிலிருந்து புறப்பட்ட கவச வாகனங்கள் மக்கள் மீது ஏறிச் சென்றது''- என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதிப் படையின் இந்நடவடிக்கை "ஆபரேஷன் பவான்' என்றழைக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களைவது என்று ஆரம்பித்து அவ்வியக்கத் தலைமையை அழித்தொழிப்பது என்றானது. "பவான்' என்கிற "சுத்தமான காற்று' விடுதலைப் புலிகளினதும் தமிழ்மக்களினதும் துயர்களுக்கு புயற்காற்றானது. புயலில் சிக்குண்ட மக்களின் நிலைக்கு அவர்கள் ஆளானார்கள்.

பிரபாகரனைப் பிடிப்பது-அழிப்பது என்பது நடைபெறவில்லையென்றாலும் விடுதலைப் புலிகளின் வெளிப்படையான யாழ்ப்பாண நடவடிக்கைகள் மறைந்து போயிற்று.

119: அமைதிப்படையிடம் யாழ்ப்பாணம்!

யாழ் பல்கலை மருத்துவ பீடத்திற்கருகே நடைபெற்ற யுத்தத்தில், சீக்கியப் பிரிவின் காலாட்படையின் கடைசிவீரன், தனது கடைசித் தோட்டா தீரும்வரைப் போராடியதாகக் குறிப்புகள் உண்டு. வாக்கி-டாக்கியைப் பயன்படுத்திய வீரர் கீழே இறங்கிய நிமிடத்திலேயே கொல்லப்பட்டார். பட்டாளத்தின் தலைவர் மேஜர் பீரேந்திரசிங் தான் இறங்கவேண்டிய இடம் என்று தீர்மானித்த இடத்தில் இறங்கினார். எஞ்சியுள்ள அதிரடிப் படையினர் வாக்கி-டாக்கியை எடுத்துக்கொண்டு விரைந்து, தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்திற்கு வரும்படி அவரை அழைத்திருக்கிறார்கள். ஆனால், அவரோ தனது வீரர்கள் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டதை அறியாமல் அங்கேயே நின்று, துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார் (சேகர் குப்தா - முறிந்தபனையில் வந்தவாறு) என்றும் ஒரு குறிப்பு உள்ளது.

விடுதலைப் புலிகளை அழிப்பது என்பதிலிருந்து தடம்புரண்டு, மக்களை அழித்தது குறித்த விமர்சனம் எழுந்தபோது, அமைதிப் படையைச் சேர்ந்த ஒருவருக்கும் பிரம்படி பகுதியைச் சேர்ந்த மக்களுக்குமான உரையாடலை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்:

""உங்களுக்கு இங்கே என்ன வேலை? உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட முகாமில் அல்லவா நீங்கள் தங்கியிருக்க வேண்டும்'' என்று தளபதிகளில் ஒருவர் கேட்டதும்,

பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், ""அந்த அறிவிப்பு - யாழ் நகருக்கு மட்டுமானது. நாங்கள் புறநகர்ப் பகுதியில் வசிக்கிறவர்கள். ஊரடங்கு அமலில் உள்ளதால் வீட்டினுள்ளேயே அடைபட்டிருக்கிறோம்'' என்றார்.

தொடர்ந்து அவர், ""'நீங்கள் யாரை வேட்டையாடுகிறீர்கள்? மக்களையா, புலிகளையா?'' என்று கேட்டார்.

""மக்களின் பின்னே அவர்கள் நின்றால் என்ன செய்வது?''

""இப்படித்தான் சிங்கள அரசும் சொன்னது. இப்போது நீங்களும் அதையே சொல்கிறீர்கள். கொஞ்சம் மாற்றியாவது சொல்லக்கூடாதா?'' என்றார்.

""நீங்கள் யார்?''

""யாராக இருந்தால் பதில் சொல்வீர்கள்? நான் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருக்கிறேன். உங்களது நடவடிக்கைகள் சிங்களவரைவிட உயர்வாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்'' என்றார்.

""அப்படியா! அப்படியிருந்தால் இவ்விடத்தைவிட்டு அகலுகிறேன்'' என்று கூறிவிட்டு ராணுவ நிர்வாக அதிகாரி கிளம்பிச் சென்றார்.

இந்த உரையாடல் மூலம், யாழ் நகரில் வசிப்பவர்கள் அனைவரும் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற வேண்டும் என்று வானொலி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது தெரிய வருகிறது.

அவர்கள் அனைவரும் நல்லூர் கந்தசாமி கோயில், யாழ் இந்துக் கல்லூரி, இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் சென்று தங்குமாறு பணிக்கப்பட்டிருந்தார்கள். இந்த அறிவிப்பைப் பின்பற்றுவது என்பது நடைமுறை சாத்தியமற்றது என்பதை அறிவிப்பு வெளியிட்டவர்கள் உணரவில்லை.

யாழ் நகரில் உள்ள மக்கள்தொகைக்கு இந்த மூன்று இடங்களும் போதுமானதல்ல. அப்படியே சென்று தங்கினாலும் அங்கே கழிப்பிட வசதிகளும் அவ்வளவாக இல்லை. அதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு அகலாத நிலையிலும், வானிலிருந்து வீசப்படும் குண்டுகளுக்குப் பயந்த மக்கள் அந்த இடநெருக்கடி மிகுந்த இடத்தை தஞ்சம் அடையவே செய்தனர். மழைக்காலம், பண்டிகைக்காலம் எல்லாம் சேர்ந்து அமைதிப்படை மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மனதில், போராளிக்குழுவில், பலசாலியான விடுதலைப் புலிகளே தங்கியிருந்தனர்.

படுகாயமுற்ற விடுதலைப் புலிகள் யாழ் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கும் முன்பாக, அங்கே பொதுமக்களும் ஏராளமான அளவில் சேர்ந்திருந்தார்கள். வயிற்றில் குண்டு வாங்கிய பொட்டு அம்மானுக்கு யாழ் மருத்துவமனையில் அவசர அறுவைச்சிகிச்சை செய்த பின்னர், அவர் அங்கே இருப்பது பாதுகாப்பற்றது என இடமாற்றம் செய்யப்பட்டார்.

வடமராட்சியில் உள்ள வல்வெட்டித்துறை கிட்டுவின் வீடு பாதுகாப்பானது என்று, அவரின் தாயார்வசம் பொட்டு அம்மான் ஒப்படைக்கப்பட்டார். பாலசிங்கமும் அடேல் பாலசிங்கமும் பொட்டு அம்மானைப் பார்க்க வந்த இடத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் மிகவும் ஆபத்தானது; உடனிருந்து வேளைதோறும் மருந்திட்டு கவனிக்க வேண்டியது என்று கண்டனர். பொட்டு அம்மானைத் தவிர்த்து வேறு இரு போராளிகளும் காயங்களுடன் அங்கே இருந்தனர். போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை, நர்ஸ் தொழிலில் முன்னர் இருந்த அடேல் ஏற்றுக்கொண்டார். மிகவும் ரகசியமாக அவர்களைப் பருத்தித்துறை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் கட்டுப்போட்டு அழைத்து வரும் வேலையும் அவரைச் சேர்ந்ததாயிற்று. உடன் உள்ளூர் போராளிகளும் ஒத்துழைத்தனர்.

அமைதிப் படையின் அடுத்த இலக்கு சாவகச்சேரி ஆயிற்று. அங்கே புலிகளின் நடமாட்டம் இருப்பதான தகவலை அடுத்து, சாவகச்சேரி சந்தையில் வான் தாக்குதல் நடத்தப்பட்டது. காரணம், அங்கே பிரபாகரன் துப்பாக்கியுடன் நடமாடுவதாகக் கிடைத்த ஒற்றுத் தகவல். எனவே உள்ளூர் சந்தையில் கூடியிருந்தோர் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 30. புலிகள் கொல்லப்பட்டதாக செய்தி அறிவிப்பு வெளியானது. உண்மையில் அவர்கள் பொதுமக்களே ஆவார்கள்.

மக்கள் குடல் சிதறி, உடல் பாகங்கள் பிய்த்தெறியப்பட்டு நாலாபுறமும் வீசப்பட்டனர். இவர்களை, பருத்தித்துறை மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர்.

அம்மருத்துவமனையை விட யாழ் மருத்துவமனை மிகப் பெரியது. ஆனால், அம்மருத்துவமனையைப் புலிகள் பயன்படுத்துவதாகவும், அங்கே நோயாளிகள் போர்வையில் படுத்துக்கிடப்பதாகவும் வந்த ஊர்ஜிதமாகாதத் தகவலையடுத்து, அங்கே குண்டு வீசப்பட்டு, டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள், நோயாளிகள் என்று 21 பேர் கொல்லப்பட்டிருந்தனர் (அக்டோபர் 21-இல்). இதனை அறிந்த மக்கள் யாழ் மருத்துவமனை பக்கம் போகவே பயந்தனர்.

பருத்தித்துறை மாந்திகை மருத்துவமனைக்கு வந்துசேர்ந்த காயம்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டது. அங்கோ இடவசதி குறைவு; ஆள் பற்றாக்குறை. அடேலும் அங்கிருந்த பணியாளர்களுடன் சேர்ந்து சிகிச்சையளித்துவிட்டு "கிட்டுவின் அம்மா' வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

வலிகாமத்தில் அமைதிப் படை குவிக்கப்பட்டது. வடக்கே வடமராட்சி, தெற்கே தென்மராட்சியில் உள்ள சாவகச்சேரியில் தாக்குதல் நடத்த திட்டம். சாவகச்சேரி விடுதலைப் புலிகளை அதிகம் தந்த பகுதியாகும். மக்கள் அனைவரும் புலிகளோ என்ற தோற்றம் கொண்ட ஊர். எனவே புலிகளின் ஆயுதம் களையும் நடவடிக்கை அங்கே பெரிய அளவில் நடைபெற்றது. வழக்கம்போல் புலிகளைவிடவும் மக்களே அதிகம் தாக்குதலுக்கு ஆளானார்கள்; உடைமைகளையும் இழந்தார்கள்.

சாவகச்சேரி அமைதிப்படை வசமாயிற்று. புலிகளோ கொரில்லாத் தாக்குதலுக்குத் தயாரானார்கள். தமிழ்ச்செல்வன் கொரில்லாப் படைக்குத் தலைமை தாங்கி பின் நாளில் அந்த ஊரை மீட்டெடுத்தார். புலிகளின் அரசியல் பிரிவுக்குப் பின் நாளில் பொறுப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.

யாழ்ப்பாணத்தை நான்கு நாள்களில் பிடிப்போம் என்று லெப்.ஜெனரல் தீபிந்தர்சிங் அக்டோபர் 10-ஆம் தேதி குறிப்பிட்டார். ஆனால் 16 நாள்கள் கழித்து அக்டோபர் 25-இல் யாழ்ப்பாணத்தைப் பிடித்ததாக அமைதிப்படையின் செய்திக்குறிப்பு கூறினாலும், இது குறித்து கவிஞர் காசி ஆனந்தன் அளித்த பேட்டியில், "யாழ்ப்பாணத்தைப் பிடிக்க 24 நாள்கள் (நவம்பர்-3) வரை அமைதிப்படைக்குத் தேவைப்பட்டது' என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இரண்டாயிரம் புலிகளை எதிர்த்து 40 ஆயிரம் இந்திய வீரர்கள் களமிறக்கப்பட்டார்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங் இந்தியாவுக்கு மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு லெப்.ஜெனரல் எஸ்.சி.சர்தேஷ் பாண்டே நியமிக்கப்பட்டார்.

ஜனவரி 1988-இல் இதற்கான உத்தரவை ஹர்கிரத்சிங் பெற்றதும், சென்னை சென்று கோட்டையில் இருந்த ஐ.பி.கே.எஃப். அலுவலகத்தில் லெப்.ஜெனரல் தீபிந்தர்சிங்கைச் சந்தித்து ஆலோசனை கலந்தார்.

"ஒரு போர்வீரன் என்று முறையில் உத்தரவுக்குக் கட்டுப்படுவது என்பது பாலபாடம். எனவே உத்தரவுக்குக் கட்டுப்பட்டு இலங்கையுடனான எனது தொடர்பைத் துண்டித்தேன்' என்று ஹர்கிரத்சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் அவர் எழுதியுள்ளார். பிரபாகரனை சுட்டுத்தள்ளவும், இல்லையானால் கைது செய்யவேண்டும் என்று இலங்கையின் இந்தியத் தூதர் தீட்சித் விதித்த கட்டளையை நிறைவேற்றாதது குறித்து, 1987 செப்டம்பரில் அவர் எழுதிய கடிதம், தூசு தட்டப்பட்டு 1988 ஜனவரியில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி, இந்திய அமைதிப்படைக்கு உத்தரவிட இந்திய அரசு மட்டுமே உரித்தானது என்றும் வேறு யாரும் இப்படைக்கு உத்தரவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவருக்குப் பின் பலாலி முகாமில் வந்து இறங்கிய லெப்.ஜெனரல் சர்தேஷ் பாண்டேவும் தனது அனுபவங்களை "அசைன்மெண்ட் ஜாஃப்னா' என்று எழுதியுள்ளார். அந்நூலில், "விடுதலைப்புலிகளின் மீது அமைதிப்படை எடுத்த நடவடிக்கைகளில் போதுமான அளவு திட்டமிடுதல் இல்லை' என்று ஹர்கிரத்சிங் பணிக்காலத்தை விமர்சித்திருந்தார்.

120: பாலசிங்கம் எங்கே?

அமைதிப் படையின் அடுத்த இலக்கு வடமராட்சியானது. வலிகாமம், சாவகச்சேரி ஆகிய இடங்களில் நடத்திய தாக்குதலையும் பார்க்க, ஆயுதங்கள் பற்றாக்குறையாகவும், ஆட்கள் அதிகமில்லாத நிலையிலும் இருந்தன. அமைதிப் படையுடன் மரபுவழித் தாக்குதல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக, வடமராட்சிப் பொறுப்பாளராக இருந்த சூசைக்கு தெளிவாகத் தெரிந்தது. அவரும் பாலசிங்கமும் கூடிப் பேசி அமைதிப் படையுடன் நேரடித் தாக்குதலைத் தவிர்த்தனர். சூசையும் மற்ற போராளிகளும் கொரில்லாத் தாக்குதலைத் தேர்ந்தெடுத்ததால் வடமராட்சிப் பகுதி மக்கள் பீரங்கிக் குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பினர்.

வடமராட்சிக்குள் அவர்கள் நுழைந்தபோது, வல்வெட்டித் துறையில் தங்கியிருந்த பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், பொட்டு அம்மான் உள்ளிட்டோர் வடமராட்சியின் நடுப்பகுதிக்கு வந்தனர். இது சிறுவயதில் பாலசிங்கம் வாழ்ந்த பகுதி. கரவெட்டியில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர், பொறுப்பாளர் சுக்ளா ஏற்பாட்டின்பேரில் வீடு எடுக்கப்பட்டது. வடமராட்சியின் அமைப்பு அமைதிப் படையின் ஊடுருவலுக்கு இலகுவாக இல்லை. நகரப் பகுதிகளில் மட்டுமே அவர்கள் நடமாட்டம் இருந்தது. இதுவே புலிகளுக்கு வசதியாயிற்று.

இந்நிலையில், ஈரோஸ் தலைவர் பாலகுமார், பாலசிங்கத்தைத் தேடி வந்தார். இந்திய அமைதிப் படையிடம் மோதல் போக்கு இல்லாதவராக அவர் இருந்தார். பாலசிங்கம் சென்னையில் இருந்தபோதே நன்கு பழக்கமானவர். புலிகளின் அர்ப்பணிப்பு உணர்வு அடிப்படையில் அவருக்கு விடுதலைப் புலிகளின் தலைமையிடம் அன்பு மிகுந்திருந்தவர் என்று கூறுவது பொருந்தும்.

அவர் வரும்போதெல்லாம் இந்திய அமைதிப் படையின் நோக்கம் - செயல்பாடுகள் பற்றியத் தகவல்கள் பாலசிங்கத்துக்குக் கிடைக்கும். இந்த முறை அவர் இந்திய ராணுவத் தளபதிகளிடமிருந்தே செய்தி கொண்டு வந்திருந்தார். அவர்கள் பாலசிங்கத்தைச் சந்தித்துப் பேச விரும்பினார்கள் என்றும் போரை முடிவுக்குக் கொண்டு வரலாமென்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார்.

ஆனால், பாலசிங்கம் இது ஒரு சூழ்ச்சி வலைப்பின்னலாக இருக்கும் என்று உணர்ந்தார். தானே முடிவு எடுக்காமல் இந்தத் தகவலை வன்னிக்காட்டில் முகாமிட்டிருந்த பிரபாகரனுக்கு அனுப்பினார். உடனடியாகத் தகவல் கிடைக்கவில்லை. சில நாள்களில் இந்த சந்திப்புக்கு இணங்க வேண்டாம் என்று தகவல் அனுப்பினார்.

இதற்கு பிரபாகரன் கூறிய காரணம், இதே முறையைப் பயன்படுத்தி மட்டக்களப்பின் முக்கியப் பொறுப்பாளரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே அவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கினால், அவர்களது பிரசாரமே வெற்றி பெறும். நமது தகவல்களோ வெளி உலகுக்கு வராமல் போய்விடும் என்று கூறியிருந்தார்.

இலங்கை வசம் வீச்சுள்ள அலைவரிசைகள் இருந்ததால், இந்த ஒலிபரப்பு வசதியைப் பயன்படுத்தி புலிகள் கைதானார்கள் என்றும், கொல்லப்பட்டார்கள் என்றும், சரணடைந்தார்கள் என்றும் பொய்ச் செய்திகளைக் கூறி மக்களை திசை திருப்பும் வேலையிலும் அமைதிப்படை ஈடுபட்டது.

இவ்வாறான தகவல்களில் பாலசிங்கமோ, பொட்டு அம்மானோ கைது செய்யப்பட்டார்கள் என்று தகவல் வருமானால் புலிகளுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் என்று தடுக்கப்பட்டது. இந்திய அமைதிப்படை வடமராட்சியில் நிலை கொண்டு - பருத்தித்துறை, நெல்லியடி, பொலிகண்டி, உடுப்பிட்டி, துன்னாலை பகுதிகளில் தனது முகாம்களை நிறுவிக்கொண்டது. இவ்வாறாக ராணுவக் குவிப்பு தீவிரம் ஆனதும் பாலசிங்கம் குழுவினர் கரவெட்டியில் இருந்தும் வேறு இடத்திற்குச் செல்ல நேர்ந்தது.

புலிகளைத் தேடுதல் என்பது அதிகாலை நேரத்தில் அமைதிப் படையால் மேற்கொள்ளப்பட்டது. ஒரு பகுதியை வளைத்துக் கொண்டு யாரும் உள்ளிருந்து வெளியேறுவதோ, வெளியேயிருந்து உள்நுழைவதோ முடியாதபடி செய்து, புலிகளை வேட்டையாடியது அமைதிப்படை.

படையினர் வருகை - அவர்களது செயல்பாடுகள் குறித்து, பெரியவர் முதல் சிறுவர்கள் வரை பல்வேறு நிலைகளில் விடுதலைப் புலிகளுக்கு தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. இதேபோன்று அமைதிப் படைக்கும் ஒற்றுத் தகவல்கள் சென்று கொண்டுதான் இருந்தன.

இன்னொரு நாள் பாலகுமார் வந்து பாலசிங்கத்தையும், அவரது மனைவி மற்றும் பொட்டு அம்மானை கைது செய்ய உத்தரவாகியிருக்கிறது என்றும் "ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பாலசிங்கம் என்று பெயர் உள்ளவர்களைத் தேடுகிறார்கள் என்றும் தெரிவித்தார். ஆனால் அங்கே அப்படியொருவரோ வெள்ளைக்கார மனைவி பெயரோ இல்லையென்றதும்தான் தேடுதல் முற்றுப் பெறுகிறது' என்றும் பாலகுமார் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து, பாலசிங்கம் தங்கியிருந்த பகுதியைக் கடந்து சென்ற ஹெலிகாப்டர் மீண்டும் திரும்பி வட்டமிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு திரும்பிச் சென்றது - பாலகுமார் கொண்டு வந்த தகவலை உறுதி செய்தது.

இவ்வாறாக ஒருநாள் மாலை பாலசிங்கம் தங்கியிருந்த வீட்டின் மீது குண்டுமழை பொழியத் தொடங்கியது. வெளியே ஓடி, கட்டடத்தின் சுவருக்குப் பின்னால் பதுங்கி தப்பித்தனர். இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம், அத்தாக்குதலில் யாருக்கும் காயமோ, இழப்போ ஏற்படவில்லை என்பதுதான்.

வேறு வீடு மாறினார்கள். நோயாளிகளுக்கு ஒரு வீடும், பாலசிங்கத்துக்கு இன்னொரு வீடும் என்று பிடித்துக் கொடுக்கப்பட்டது. இந்தத் தேடுதல் வேட்டைக்கிடையே தமிழேந்தியும், பாலசிங்கத்துடன் வந்து சேர்ந்து கொண்டார்.

தமிழேந்தி, விடுதலைப் புலித் தலைவர் வே.பிரபாகரனின் நெருக்கமான சகா, மூத்த போராளி. நிதிப் பொறுப்பைக் கவனித்தவர். எப்போதும், அவரிடம் ஒரு பை இருக்கும். அது பணப் பை ஆகும். ஏராளமான நகைகளும் அதில் இருக்கும். பணம் செல்லுபடியாகாத இடங்களில் நகைகளே மாற்றுப் பணம்.

பாலசிங்கத்துடன் இருப்பதில் ஆபத்து அதிகமானதால் அவர் வன்னிப் பகுதி சென்று, அங்கிருந்த பிரபாகரனுடன் இணைய முற்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் அமைதிப் படையினரால் கைது செய்யப்பட்டார். காங்கேசன் துறை சிறையிலும் அடைக்கப்பட்டார். கைது செய்வதற்கு சில நிமிடங்கள் முன்பாக, தனது கைப் பையை ஓரிடத்தில் பூமியைத் தோண்டி, புதைத்து விட்டிருந்ததால் அது காப்பாற்றப்பட்டது. பின்னர், விடுதலையானதும் அந்தப் பணப் பையைத் தோண்டி எடுத்துச் சென்றதாக இவரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.

இவ்வாறு தமிழேந்தி கைது செய்யப்படும் முன்பாக, பாலசிங்கம் தம்பதியினர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக, பிரபாகரனுக்குத் தகவல் அனுப்பி வைத்து விட்டுத்தான் அவர் கிளம்பினார்.

இந்நிலையில் கரவெட்டியில் இருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. சில மைல் தொலைவில் இருந்த நவிண்டில் உள்ள பகுதிக்கு பாலசிங்கம் மாறினார். இங்கே பொட்டு அம்மான் இவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொண்டார்.

அவரது கையிலுள்ள காயத்தில் சீழ் பிடித்துக் கொண்டிருந்தது. கட்டுப்போடாத நிலையில் துர்நாற்றம் வீசியது. கையிலோ மருந்து இல்லை. அடேல், பென்சிலின் ஊசி மட்டும் போட்டார். இரவு முழுவதும் அவரின் முனகல் ஒலி கேட்டவாரே இருந்தது. அதுவே அவர்களைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று பயந்த நிலையில் இரவு கழிந்தது.

அவரால் நடக்க முடியாது. அவரைத் தொட்டில் கட்டி முதுகில் ஒருவர் சுமந்து வர வேண்டும். வயிற்று உபத்திரம் வேறு; கொடுமைதான். அடேல் எங்கே வெளியே கிளம்பினாலும் தலை முதல் கால் வரை போர்த்திய துணியுடன் சென்று வந்தார். அவரது வெள்ளைத் தோல் அந்நியப்படுத்திக் கொண்டிருந்தது. நெல்லியடிக்கு அடுத்த ஜாகை.

நெல்லியடியில் அவர்கள் இருந்தபோது இவர்களது வீட்டை நோக்கி, இந்திய அமைதிப்படை ரகசியமாக நகர்ந்து கொண்டிருப்பதாக சிறுவர்கள் ஓடி வந்து தகவல் கொடுத்தனர். அது ஒரு மாலை வேளை. எல்லாரும் கிளம்ப ஆயத்தமானார்கள். அடேல் மருந்துப் பையை கையில் எடுத்துக் கொண்டார். அதில் சிலவகை மருந்துகளுடன் பாலசிங்கத்துக்கு அன்றாடம் போட வேண்டிய இன்சுலின் மருந்தும் இருந்தது. பொட்டு அம்மான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, நொண்டிக் கொண்டே கிளம்பினார். அந்த வீட்டில் இருந்து மறைந்து மறைந்து வெளியேறியவர்களுக்கு உள்ளூர் தோழர் கந்தையா வழிகாட்டி அழைத்துச் சென்றார்.

இவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த வீட்டின் மீது தொடர்ந்து குண்டுத்தாக்குதல். இதுகுறித்து அடேல் பாலசிங்கம் தான் எழுதியுள்ள "சுதந்திர வேட்கை' நூலில், ""ஈபிஆர்எல்எஃப் ஆள் ஒருவரின் வழிகாட்டுதலோடு அந்த இடத்தை இந்தியப் படையினர் மொய்த்துக் கொண்டனர். வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக வெளியே வரவேண்டும் என்று உரக்கக் கூவி அழைத்தார்களாம். வீட்டுக்குள் ஒரே அமைதி. பொறுமை இழந்த அமைதி காப்பாளர்கள் தானியங்கித் துப்பாக்கியால் வெறும் வீட்டின் மீது சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். பிறகு நாங்கள் இல்லாததை அறிந்து, வீட்டுச் சொந்தக்காரர் மார்க்கண்டு என்பவரைப் பிடித்துப் போய், தங்களது காவலில் வைத்து, அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். ""இனி, புலிகளுக்கு வீடு கொடுத்தால் தண்டனை வேறாக இருக்கும்'' என்றும் எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். அவரின் மகன் விஜயன் ஒரு போராளியாவார் என்று கூறியுள்ள அவர், அந்த வீட்டுக்கு திரும்பச் செல்லவில்லை என்று கூறியுள்ளார்.

121: பாலசிங்கம் லண்டன் தப்பினார்!

அமைதிப்படையின் தீவிர தேடுதலில் சிக்கிய பாலசிங்கமும், டேவிட்டும், பொட்டு அம்மானும் ஒவ்வொரு மறைவிடமாக அலைந்தனர். ஒவ்வொரு வீட்டுக்கும் இவர்கள் தப்பிச் செல்லுகையில் பொட்டு அம்மானை முதுகில் தூக்கிக் கொண்டு போராளியொருவர் உடன் வருவது என்பது சாத்தியமற்றதானது. எனவே அவர் மருத்துவ வசதி பெறவும், உயிர் பிழைக்கவும் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டார். காயம்பட்ட இதர போராளிகளுக்குத் தனி ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்தப்பகுதியின் பொறுப்பாளராக இருந்த சுக்ளாவின் நட மாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. அவரை அமைதிப்படைக்குத் தெரியாததால் அவரையும், புலிப்போராளிகளையும் அடையாளம் காட்ட "முகமூடி' தரித்த ஒற்றர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இவர்கள் கண்கள் மட்டும் தெரியும்படி முகத்தைத் துணியால் மறைத்தபடி, கூட்டத்தில் நிற்பார்கள். அவர் புலிகளை அடையாளம் கண்டதும் ராணுவ வீரருக்கு "தலையை ஆட்டி' சைகை செய்வார். உடனே கைது வேட்டை நடக்கும். இதன் காரணமாக சுக்ளாவும் வெளிப்படையாக நடமாட முடியவில்லை.

அடேல், வெள்ளைக்காரப் பெண்ணாக இருப்பதால் இவரையும், இவருடன் சேர்ந்த ஆட்களையும் தேடுவதில் அமைதிப்படை முனைப்பு காட்டியது. எனவே, இவர்களை வேறு வேறு இடங்களில் தங்கவைப்பது என்பது குறித்த ஆலோசனைகளுக்கு அடேல் உடன்படவில்லை.

நவிண்டியில் ரதி என்பவரது வீட்டில், அவரது ஆதரவுடன் பதுங்கியிருக்கையில் இவர்களைத் தேடி, புலிகளுடைய வடமராட்சித் தளபதி சூசை வந்தார். சூழ்நிலையும், கடல்மார்க்கமும் சாதகமாக இருக்கும்போது, அவர்களிருவரையும் தமிழ்நாட்டுக்கு அனுப்ப பிரபாகரன் உத்தரவிட்டிருப்பதாக கூறினார். (ஆதாரம்: சுதந்திரவேட்கை - அடேல் பாலசிங்கம்).

வடமராட்சியில் மாலை ஆறு மணியிலிருந்து காலைவரை ஊரடங்கு சட்டம் அமல் செய்யப்பட்டது. காரணம், புலிகள் இரவு வேளையில் அங்கிருந்து நழுவுகிறார்கள் என்று கிடைத்த தகவலின் எதிரொலியாகும்.

ஆனால், மக்கள் புலிகளாய் இருந்தார்கள். அதனால் அவர்கள் கைதுக்கும், கொடுமைகளுக்கும் ஆட்பட்டதுடன் மரணத்தையும் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனாலும் அவர்களின் உறுதியைக் குலைக்க முடியவில்லை.

உள்ளூர் மனிதர்களைப் பார்த்து நாய் குரைப்பதில்லை. ஆனால் இந்திய அமைதிப் படையினரைப் பார்த்து குரைத்துத் தீர்த்து வீடும். இப்படி நாய் குரைப்பதைக் கேட்டு, அதன் அடிப்படையில் புலிகளின் நடமாட்டம் இருக்கும்.

பல இடங்கள் மாறிய வேளையில், தமிழ்நாட்டுக்குப் புறப்படும் நேரம் வந்தது. அந்நிலையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இறந்த செய்தி வந்திருந்தது. அன்று அமைதிப்படை தனது முகாமைவிட்டு வெளியேறாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வடமராட்சியின் ஒரு மூலையில் இருந்து படகில் புறப்பட ஏற்பாடு ஆகியிருந்தது. அனைவரிடமும் விடைபெற்று, பாலசிங்கமும், அடேலும் படகில் ஏறினர். அவர்களுடன் வேறு சிலரும் ஏறிக்கொண்டனர். கடல் கொந்தளிப்பாக இருந்தது. கரையை விட்டுப் படகு விலகி, கடலுக்குள் செல்லச் செல்ல அடேலுக்கு சோகம் கவ்விக்கொண்டது.

இது குறித்து அவர் தனது நூலில் குறிப்பிடுகையில், "நமது நம்பிக்கைக்குரிய நண்பர்களை ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்துக்குள் கைவிட்டுச் செல்லும் உணர்வே என்னுள் மிதந்து வந்தது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களோடு வாழ எண்ணிய நான், எனக்கு உதவி புரிந்த மக்களை அவர்களது கையறு நிலையில் விட்டுச் செல்வது துயரமாக இருந்தது' என்று கூறியுள்ளார்.

தமிழகம் வந்து, அதுவும் பாதுகாப்பற்றதாகிப் போன நிலையில், பெங்களூர் சென்றனர்.

1988 ஏப்ரலில் பெங்களூரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த ஆன்டன் பாலசிங்கத்துக்கு, திமுக தலைவர் மு.கருணாநிதியிடமிருந்து அவசரச் செய்தி வந்ததாகவும், அந்த அவசரச் செய்தியில் "தன்னை சந்திக்கும்படி' அவர் கூறியிருந்ததையொட்டி, இரவோடு இரவாக பெங்களூரிலிருந்து சேலம் புறப்பட்டதாகவும் தனது "வார் அண்ட் பீஸ்' நூலில் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

அந்நூலில், அச்சந்திப்பைப் பற்றி விவரிக்கின்றார்: ""சேலம் ஓட்டல் ஒன்றில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது முரசொலி மாறனும் உடனிருந்தார். திமுக தலைவர் மு.கருணாநிதி பேசும்போது, "மிகப்பெரிய அமைப்பான இந்திய ராணுவத்துடன் போரிட விடுதலைப் புலிகளால் முடியுமா?' என்று கேள்வியெழுப்பியதுடன், "மோதல் போக்கை தவிர்க்குமாறும்' ஆலோசனை வழங்கினார்.

இதற்குப் பதிலளித்த பாலசிங்கம், "பிரபாகரனும் இதர போராளிகளும் புனிதமான நோக்கம் ஒன்றிற்காக உயிரிழக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் சரணடைவதையும் அதன் பின்னர் ஏற்படும் நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இல்லையென்றும், போராளிகள் கொரில்லா யுத்தத்தில் சாதனை படைப்பார்கள் என்றும் அதற்கான மன உறுதி அவர்களிடம் இருப்பதாகவும்' விளக்கினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ""பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி, தில்லியில் ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பு, எங்களுக்கு அளித்த உறுதிமொழிப்படி, இடைக்கால அரசு என்ற தீர்வு அமைதியான வழியில் ஏற்பட, அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கவும், புலிகள் தயாராக இருக்கிறார்கள்'' என்றார்.

இதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தியை முரசொலி மாறன் சந்தித்து, விடுதலைப் புலிகளின் விருப்பத்தையும் நிபந்தனைகளையும் கூறியபோது, அந்தச் செய்தி ராஜீவ் காந்திக்கு உவப்பாக இல்லை.

""புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுச் சரணடைய வேண்டும் அல்லது இந்திய ராணுவத் தாக்குதலை சந்திக்கவேண்டும்'' என்று ராஜீவ் கூறியதாகப் பின் நாளில் முரசொலி மாறன் தன்னிடம் கூறியதாக பாலசிங்கம் தனது நூலில் (பக்.129-130) குறிப்பிட்டுள்ளார்.

இதே நிகழ்வை பழ.நெடுமாறனும் தனது நூல் ஒன்றில், திருகோணமலையில் சந்தித்தபோது பாலசிங்கம் தன்னிடம் கூறியதாகப் பதிவு செய்திருக்கிறார்.

மேலே குறிப்பிட்ட சந்திப்புக்குப் பிறகுதான் ஆன்டன் பாலசிங்கமும் அடேலும் சென்னை திரும்பி, ஒரு மாற்று ஏற்பாட்டில் லண்டன் சென்றதாக, அடேல், தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

122: ராஜீவுக்கு பிரபாகரன் எழுதிய கடிதங்கள்!

இந்திய அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடிப் போர் ஏற்பட்ட இரண்டாவது நாளில் பிரபாகரன், பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் உள்ள விவரம் வருமாறு:

""மிகவும் அபாயகரமான சூழ்நிலையில் இந்த அவசரக் கடிதத்தை அனுப்புகிறேன். அமைதிப்படை விடுதலைப் புலிகளுடன் போர் தொடுப்பது என்ற நிலை எடுத்த பிறகு இதன்மூலம் எதிர்த் தாக்குதல் நடத்தும்படி நாங்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறோம். விடுதலைப் புலிகளின் இந்த எதிர்த்தாக்குதல் என்பது எங்களையும், எங்களது மக்களையும் தற்காத்துக் கொள்ளவே மேற்கொள்ளப்படுகின்றது.

அமைதிப்படை எங்கள் மீது போர் தொடுப்பது என்பதைக் கண்ட எங்களது மக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். எங்கள் மீது தொடுக்கப்பட்ட போரானது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஷரத்துகளுக்கு முரணானதும், ஓர் அத்துமீறலுமாகும். இது எங்களது கருத்து மட்டுமல்ல; தமிழீழ மக்களின் ஒட்டுமொத்த கருத்துமாகும்.

இந்த யுத்தத்தில் அமைதிப் படையுடன் சிங்களப் படையும் சேர்ந்துகொண்டதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இதனால் மனித இழப்பு என்பது பெருமளவில் இருக்கும். இத்தகைய அழிவுகளுக்கும், விளைவுகளுக்கும் இந்தியாவே பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்நிலையில் எமது தாழ்மையான விண்ணப்பம் என்னவென்றால், அமைதியை நிலைநாட்டவும், நன்நம்பிக்கையை வளர்க்கவும், இந்தியாவுடன் எங்களது உறவுகள் மேம்பாடடையவும், உடனடியாகப் போர் நிறுத்தம் அறிவிக்கும்படி வலியுறுத்துகிறோம்'' என்று 1987, அக்டோபர் 12-ஆம் தேதி, எழுதப்பட்ட கடிதத்தில் வேண்டியிருந்தார்.

இந்தக் கடிதத்துக்கு எந்தவிதமான பதிலோ, அதன் பேரிலான நடவடிக்கைகளோ இல்லாத நிலையில் மீண்டும் ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதம் 14-10-1987 அன்று எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில்,

""நாளுக்கு நாள் தமிழீழத்தில் மக்கள் கொல்லப்படுவதுடன், அழிவுகளும் அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுவதாக'' என்று குறிப்பிட்டுள்ள பிரபாகரன் மேலும் குறிப்பிடுவதாவது:

""இதுநாள்வரை நடந்த போரில் 150 பேருக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 500 பேருக்கும் மேல் காயமடைந்திருக்கிறார்கள். எந்திரத் துப்பாக்கி மூலம் சுடுதல், ராக்கெட் குண்டுவீச்சு, வான் மூலமான குண்டுவீச்சுகளில் இந்த இழப்புகளும் விளைவுகளும் ஏற்பட்டுள்ளன. எங்களது இயக்கத்தின் போராளிகள், தேடுதல் மற்றும் அழித்தல் நடவடிக்கையால் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்சமயம் எங்களால் 18 அமைதிப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு எங்களது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் திடீர்ப் போர் காரணமாக, ஏராளமான மக்கள், அமைதிப்படைக் காலத்தில், முதன்முதலாகத் தங்கள் வாழ்விடத்திலேயே, அகதிகளாக்கப்பட்டுள்ளனர். தொடர் ஊரடங்கு அமலினால் உணவுக்கும் குடிநீருக்கும் மற்றும் தங்கள் தேவைகளுக்கும் அவர்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள்.

இந்திய அமைதிப்படை எங்களது தாயகத்துக்கு அமைதியையும்-சுமுகச்சூழலையும் ஏற்படுத்துவதற்காக வந்திறங்கி, எங்கள் மக்கள் மீது கொடுமைகளை இழைத்து வருகிறது. இது முற்றிலும் மனிதநேயத்துக்கு அப்பாற்பட்ட செயலாகும்.

அக்டோபர் 11-ஆம் தேதி காலையில், யாழ் பல்கலைக்கழக எல்லைக்குள் 40 பொதுமக்கள் இந்திய அதிரடிப்படை வீரர்களால் இறக்க நேர்ந்தது எதனால்? அந்தப் பகுதி கல்விக்கூடங்கள் நிறைந்த பகுதி. அங்கு அதிரடி நடவடிக்கை ஏன் நடத்தப்பட்டது? ஈழமுரசு, முரசொலி பத்திரிகை அலுவலகங்கள் குண்டுவீசித் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன் அங்கிருந்த செய்தியாளர்கள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். யாழ் பொது மருத்துவமனை குண்டுவீச்சுக்கு ஆளாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் இறந்திருக்கிறார்கள். யாழ் பல்கலை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு அங்கிருந்த பெரும்பாலான கட்டடங்கள் நாசமாக்கப்பட்டு விட்டன.

அமைதிப்படை கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் வான்வீதியிலான தாக்குதல் எவ்வாறு நடைபெறுகிறது? உண்மையில் இந்திய, இலங்கைப் படைகள் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி பெரும் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அமைதிப் படையின் வருகையும் அதன் நோக்கமும் மக்களுக்கு இயல்பு வாழ்வைத் தருவது என்பது; ஆனால் நடப்பதோ வேறு. அமைதிப்படையின் அத்துமீறல்களுக்கு சட்டபூர்வ உதவி கோர முடியாத நிலையுள்ளது. எனவே இதுவரை நடைபெற்றுள்ள அத்துமீறலுக்கும், அழிவுகளுக்குமான உண்மை விவரம் அறிய, உண்மை அறியும் குழுவொன்றுக்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.

இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நாங்கள் அழைக்கப்பட்டோம். அதில் பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் எங்களது இயக்கத்தின் வலு உணர்ந்தே அழைக்கப்பட்டோம். இந்தியாவும் இலங்கையும் எங்களுக்கு வாக்களித்தபடி, இடைக்கால அரசமைக்க வேண்டி, ஆயுதங்களைக் கையளிக்கவும் உறுதியளிக்கிறேன்.

ஆனால் துரதிருஷ்டவசமாக எங்கள் மீது யுத்தம் தொடுக்கப்பட்டுவிட்டது; அதுவும் கிழக்கு மாகாணத்தில் ராணுவ வீரர்கள் மீது ஒரு தாக்குதலை நடத்தி, அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்தி இருக்கிறார்கள்! கிழக்கில் நடைபெறும் இன மோதல்களில் எங்களது இயக்கத்துக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால், பழி எங்கள் மீது சுமத்தப்படுகிறது.

தற்சமயம் புலேந்திரன், குமரப்பா மரணத்தினாலும் அங்கு வன்முறைகள் வெடித்துள்ளதற்கு சிங்களப் படையே காரணம். இவ்விரு போராளிகளும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த எங்கள் இயக்கத்தின் தளபதிகள் ஆவர். அவர்களது கைதால், பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென நாங்கள், தூதுவர் ஜே.என். தீட்சித்தை எச்சரித்தோம். அவரும் ஜெயவர்த்தனாவைச் சந்தித்தார். ஆனால் தீர்வு காணப்படவில்லை..

எங்களுக்கென்று சில கோட்பாடுகளை நாங்கள் வைத்திருந்தும், அந்தக் கோட்பாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தோம். ஒத்துழைப்பு கொடுத்தோம். ஆனால் இந்தியா எங்களை ஒதுக்கியது. தனிமைப்படுத்த முயன்றது. நான் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தையில் இறங்குவோம் என்பதுதான்'' என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதத்துக்கும் உரிய நடவடிக்கைகள் இல்லை. எனவே 1988 ஜனவரி 13-இல் இறுதியாக ஒரு கடிதம் எழுதினார். அதில் ஆயுதக் கையளிப்பு மற்றும் ஏற்றுக்கொண்ட இடைக்கால அரசை, எழுதப்படாத ஒப்பந்தப்படி நடைமுறைப்படுத்த முன்வருமாறும் குறிப்பிட்டு எழுதினார். அக்கடிதத்தின் விவரம் வருமாறு:

""நல்லெண்ண நடவடிக்கையாக அமைதிப்படையின் முகாமில் அடைபட்டிருக்கும் எங்களது போராளிகளையும் ஆதரவாளர்களையும் விடுவிக்கும்படி கோருகிறோம். எங்களது போராளிகளுக்கு உண்மையான பொது மன்னிப்பை வழங்கும்படி ஜெயவர்த்தனாவை வலியுறுத்துவதுடன், அதனை அமல்படுத்தவும் தாங்கள் வலியுறுத்த வேண்டுமாயும் கோருகிறோம்.

தாங்கள் தில்லியில் ஒப்பந்தத்துக்கு முன்பாகக் குறிப்பிட்டபடி, இடைக்கால அரசை அமைத்து, அதனை விடுதலைப் புலிகள் கோரியபடி அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். இதற்குத் தடையாக இருக்கும் என்று கருதும்பட்சத்தில் எங்களது ஆயுதங்களைக் கீழே போடவும் தயார் என மீண்டும் - உறுதியளிக்கிறோம். மக்கள் அமைதியுடன் வாழ, எங்களது இயக்கத்தின் ஒத்துழைப்பை நல்கவும் தயாராக இருக்கிறோம்.

இடைக்கால அரசு என்கிற திட்டம் தற்போது பாதியில் உள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தாங்கள் அளித்த வாக்குப்படி, இவ்வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், மாநில அளவிலான உரிமைகளுக்கும் சுயநிர்ணய ஆட்சிக்கும் உரியவற்றையும் திட்டமிட முடியும்.

தமிழீழ மக்களின் துயர்போக்க, அவர்கள் தங்களது வாழ்விடத்தில் வசிக்க, போர் நிறுத்தம் அறிவித்து, பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமாயும், இதற்கான அமைதிச் சூழலை உருவாக்கும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்'' என்றும் கூறியுள்ளார் (கடிதங்கள் ஆதாரம்: அன்டன் பாலசிங்கம் எழுதிய வார் அண்ட் பீஸ்).

இந்தக் கடிதங்களுக்கு எந்த பதிலும் பிரதமர் தரப்பில் இல்லை. அவர் உளவு அமைப்பின் தகவல்களுக்கே முக்கியத்துவம் அளித்தார் என்றே அப்போதைய அமைதிப் படை தளபதிகள் தங்கள் நூல்களில் கூறியுள்ளனர்.

மாறாக விடுதலைப் புலிகளை இயக்கங்களுக்கிடையே தனிமைப்படுத்தவும், மக்களுக்கிடையே அந்நியப்படுத்தும் முயற்சியிலும் இறங்க அமைதிப்படைக்கு உத்தரவிடப்பட்டது.

நாளை: கிட்டு அளித்த பேட்டி!

Please Click here to login / register to post your comments.