உலகை அதிர வைத்த 'லைவ்' கொலை காட்சிகள்!

ஆக்கம்: இரா.சரவணன்
தொலைக்காட்சிகளில் பார்க்கிறபோதே நெஞ் சைத் துளைத்தெடுக்கின்றன அந்தக் கொடூரக் காட்சிகள்... கைகள் இரண்டும் பின்னால் வளைத்துக் கட்டப்பட்டு, கண்கள் கறுப்புத் துணி யால் மறைக்கப்பட்ட நிலையில், தமிழ் இளைஞர்களை ராணுவ உடையில் இருப்பவர்கள் துப்பாக்கியால் 'க்ளோஸ் ரேஞ்ச்'சில் சுட்டுக் கொல்கிறார்கள்... தமிழர் களின் பிறப்பைப் பற்றி தவறாக சிங்கள மொழியில் பேசி கொக்கரித்துச் சிரிக்கும் ஒலியும் கேட்கிறது. இத்தனை நாள் இலங்கை ராணுவத்தின் அத்துமீறிய சித்ரவதைகளை கண்டும் காணாமலும் இருந்த உலக நாடுகளே, இந்தக் காட்சிகளைக் கண்டு குலுங்கிப் போயிருக்கின்றன. இங்கிலாந்தில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இந்த அதிர்ச்சிக் காட்சிகள் ஐ.நா.வின் மனித உரிமை ஸ்தாபனங்கள் சிங்கள அரசு மீது கோபம் கொள்ளச் செய்திருக்கிறது!

இது குறித்து இலங்கையின் மனித உரிமை அமைப் பாளர்கள் சிலரிடம் பேசியபோது, ''கிளிநொச்சி பிடிபட்டபோது அப்பாவி இளைஞர்களைப் பிடித்து ராணுவம் சுட்டுக் கொன்ற காட்சிதான் அது. போர்க் காலத்தில் ராணுவம் செய்த

படுகொலைகளில் இப்போது வெளியாகி இருப்பது ஒரு துளிதான். புலிகளுக்கு உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு எத்தனையோ இளை ஞர்களை கேள்விமுறையே இல்லாமல் ராணுவம் கொன்றிருக்கிறது. விசாரணை என்கிற பெயரில் இளம் பெண்களை ராணுவம் சூறையாடிய கொடூரங்கள் காலம் காலமாக நடந்துகொண்டே இருக்கிறது. போர் உக்கிர மான நேரங்களில் அனுராதபுரம், பொலநருவ உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப் பகுதிகளிலும் மயானங்களிலும் அவசரமாக எரிக்கப்பட்ட நிலையில் எத்தனையோ சடலங்கள் கிடந்தன. அப்பாவி மக்கள் எனத் தெரிந்தும் இனவெறியோடு அவர்களை சித்ரவதை செய்து ராணுவம் ஆடிய வெறியாட்டம் கொஞ்சநஞ்சமல்ல.

போருக்குப் பிறகு ராணுவ வசம் சிக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான புலிகள் அனுதினமும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகின்றனர். போர் முடிந்த போது பன்னிரண்டாயிரத்துக்கும் மேலான புலிகள் சரணடைந்தார்கள். ஆனால், இப்போது பத்தாயிரம் புலிகள்தான் சரணடைந்ததாக ராணுவத் தரப்பு மீடியாக்களில் அறிவிக்கிறது. இரண்டாயிரத்துக்கும் மேலான புலிகளை கொன்றழித்து விட்டுத்தான் இப்படி அநியாயமாக உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம்'' எனச் சொன்னார்கள்.

இதற்கிடையில் புலிகளுக்கு நெருக்கமான வெளி நாடுவாழ் நண்பர்கள் நம்மிடம், ''அரசு முகாமுக்குள் பாதுகாப்புப் பணிக்காகநிறுத்தப்பட்டிருக்கும் சிங்கள வீரர்கள் சிலரே, மனம் சகிக்காமல் அங்கு நடக்கும் கொடூரங்களை எங்களுக்குப் படமாக அனுப்பிக் கொண்டிருக் கிறார்கள். இப்போது மீடியாக்களில் வந்த ராணுவத்தின் வெறியாட்ட வீடியோவும் மனசாட்சியுள்ள யாரோ ஒரு சிங்கள வீரனால் எடுத்து ரகசியமாக கசியவிடப்பட்டதாகத்தான் இருக்கவேண்டும். இந்த வீரரைப் போல் மனசாட்சியுள்ள வேறு சில சிங்கள ராணுவ அதிகாரிகள், சிங்கள அரசு கொடுத்த வெகுமதிகளைக்கூட மறுத்திருக்கிறார்கள். இன்னும் சில ஈரமுள்ள அதிகாரிகள் 'நீங்கள் உலக நீதிமன்றத்தில் இலங்கை அரசு மீது வழக்குத் தொடுங்கள். நாங்களே வந்து சாட்சி சொல்கிறோம். அப்போதுதான் எங்களால் நிம்மதியாக விழிமூட முடியும்!' என்று தகவல் சொல்லி அழுகிறார்கள். இலங்கை அரசின் வெறித்தனத்துக்கு உலக நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும் என்கிற சிறு நம்பிக்கை ஒளி இப்போதுதான் தெரியத் தொடங்கி இருக்கிறது...'' எனச் சொன்னார்கள்.

ஆனால், ஐ.நா.சபையின் கடும் கண்டனத்துக்கு பதில் சொல்லி இருக்கும் சிங்களத் தரப்போ 'சேனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் சித்திரிக்கப்பட்டவை!'' எனச் சொல்லி, வழக்கம்போல முழுப்பூசணியை சோற் றுக்குள் மறைத்திருக்கிறது.

Please Click here to login / register to post your comments.