ஈழத் தமிழரின் துயரத்திற்கு காங்கிரஸே காரணம்

“எந்த வகையிலும் தமிழர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு எப்போதும் இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது என்பது தேவையற்ற வாதம்” என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க ராஜபக்ச அரசு மேற்கொண்ட இனப் படுகொலைக்கு இராடாரை அளித்தும், அதனை இயக்க இந்திய இராணுவத்தின் பொறியாளர்களை அனுப்பியும், மறைமுகமாக ஆயுத உதவி, பயிற்சி, ஆலோசனைகளை வழங்கியும் சிறிலங்க இராணுவத்திற்கு முழுமையாக உதவியது மத்திய காங்கிரஸ் அரசு என்பதை ஒரு முறைக்குப் பலமுறை சிறிலங்க அமைச்சர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே உறுதிபட கூறியுள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, வன்னி மக்கள் மீது முப்படைகளையும் ஏவிவிட்டுத் தாக்குதல் நடத்தியபோது, புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் காயமுற்ற சிறிலங்க இராணுவத்தினருக்கு சிகிச்சையளிக்க போதுமான மருந்துப் பொருட்கள் இல்லை என்று கூறப்படுகிறதே என்று சிறிலங்க நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெரமுணா கட்சியின் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிறிலங்க அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் நிமல சிறீபால டி சில்வா, காயம்பட்ட இராணுவத்தினருக்கு சிகிச்சையளிக்கத் தேவையான அனஸ்தீசியா உள்ளிட்ட முக்கிய மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அது விரைவில் வந்துவிடும் என்று பதிலளித்தார்.

மருந்துப் பொருட்கள் இந்தியாவில் இருந்துதான் பெற வேண்டுமா என்று அந்த உறுப்பினர் கேட்டதற்கு, “இந்தியா நமக்கு செய்துவரும் உதவிக்கு இந்த அவையின் உறுப்பினர்கள் நன்றி காட்ட வேண்டு்ம். அவர்களின் உதவி இல்லாவிட்டால் நம்மால் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்க முடியாது” என்று சிறீபால டி சில்வா கூறினார்.

சிறிலங்க அமைச்சர் இவ்வளவு ‘நன்றி’யுணர்வுடன் பேசிய அந்த நேரத்தில்தான், மக்கள் பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட மிகக் குறுகிய நிலப்பரப்பில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிறிலங்க இராணுவத்தின் கொடூரத் தாக்குதலிற்கு ஆளாகி, ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். அந்த மக்களின் துயரம் மத்திய காங்கிரஸ் அரசிற்கு தெரியவில்லை, ஆனால் அவர்களை கொன்று குவித்த சிறிலங்க சிப்பாய்களின் காயங்களை ஆற்ற மருந்து அனுப்பி வைத்ததது. இதற்குத்தான் ‘நன்றி’யைக் காட்டுமாறுக் கூறினார் சிறிலங்க அமைச்சர்.

இன்று, “எந்த நிலையிலும் தமிழர்களை தனிமைபடுத்தி, அவர்களுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்பட்டதில்லை” என்று அறிக்கை விடும் சுதர்சனம் நாச்சியப்பன், மத்திய காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு இழைத்த இந்த துரோகச் செயலை தமிழர்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்திருக்கலாம்.

நீடித்த அரசியல் தீர்வு என்ன ஆனது?

“இராணுவத் தீர்வுகளின் மூலம் தமிழர் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் சாத்தியக்கூறு பிறந்துள்ளது” என்று கூறி தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டு 2007ஆம் ஆண்டின் துவக்கத்தில் தமிழர்களுக்கு எதிரான போரை சிறிலங்க அதிபர் ராஜபக்ச தீவிரப்படுத்தியபோது அதனைக் கண்டித்தது இந்திய அரசு. “இலங்கை இனப் பிரச்சனைக்கு அந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நீடித்த அரசியல் தீர்வை பேச்சுவார்த்தையின் மூலம் எட்ட வேண்டு்ம்” என்ற தனது நிலைப்பாட்டைக் கூறி, ராஜபக்ச மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு காட்டியது.

வெளிப்படையாக இவ்வாறு அறிவித்துவிட்டு, இரகசியமாக அது சிறிலங்க இராணுவத்திற்கு உதவி வருவது, அனுராதபுரத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அங்கிருந்த இராடார் தளம் சேதமுற்று, அதனை இயக்கிய இரண்டு இந்திய பொறியாளர்கள் காயமுற்றப் பின்னர்தான் தெரியவந்தது.

தனது குட்டு வெளிப்பட்டதும் குரலை மாற்றிப் பேசியது மத்திய காங்கிரஸ் அரசு! சிறிலங்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத்தான் தாங்கள் உதவுவதாகவும் தமிழர்களை கொல்வதற்கு உதவவில்லை என்றும் கதை விட்டது.

தமிழக முதலமைச்சர் தலைமையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று கூடி (கடந்த ஆண்டு அக்டோபரில்), இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இரண்டு வார காலத்தில் போர் நிறுத்தம் செய்யவில்லையெனில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று தமிழக கட்சிகள் விடுத்த மிரட்டலையடுத்து, சென்னைக்கு பறந்துவந்து தமிழக முதல்வரைச் சந்தித்த (அன்றைய) அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சிறிலங்க அரசின் பாதுகாப்பிற்குத்தான் இந்தியா உதவுவதாகத் தெரிவித்தார்.

தமிழர்களின் பாதுகாப்பிற்காக போர் நிறுத்தம் ஏன் கோரவில்லை என்று கேட்டதற்கு, அதனை ஒருதலைப்பட்சமாக சிறிலங்க அரசிடம் வலியுறுத்த முடியாது என்று சாக்குக் கூறிவிட்டு (தமிழக முதல்வரும் அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டதால்), ஆட்சிக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை உறுதி செய்துக் கொண்டு டெல்லிக்குப் பறந்தார்.

போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் பலத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி கொழும்புவிற்குப் பறந்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, போர் நிறுத்தம் குறித்து ஏதும் பேசாதது மட்டுமின்றி, சிறிலங்க இராணுவ நடவடிக்கையில் அப்பாவித் தமிழர்கள் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் (!) போர் நடத்திவருவதாக ராஜபக்ச கூறியதைக் கேட்டுக் கொண்டு, அந்த பதில் ‘திருப்தியளிக்கிறது’ என்றும் அறிக்கை விட்டார்.

அன்று இரவே டெல்லி திரும்பிய பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், போரைத் தீவிரப்படுத்தும்போது ராஜபக்ச என்ன கூறினாரோ அதையே தனது அறிக்கையில் பிரணாப் முகர்ஜியும் கூறினார்!

“23 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போரில் பெற்ற வெற்றியின் விளைவாக வடக்கில் அமைதி ஏற்பட்டு, இயல்பு நிலை திரும்புவதற்கான சாத்தியம் தோன்றியுள்ளதாக” பிரணாப் முகர்ஜி அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். என்னே ஒத்த சிந்தனை!

சிறிலங்க அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை வடக்கில் (ஈழத்தில்) இயல்பு வாழ்க்கை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளதாம்! இப்போது போர் முடிக்கப்பட்ட நிலையில் அங்கு உருவாகியிருப்பது இந்த காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரை இயல்பு நிலை!

இந்தப் பயணத்திற்குப் பின் தமிழர்களிடமிருந்து எழுந்த எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் (கருணாநிதியும் பொருட்படுத்தவில்லை) சிறிலங்க இராணுவத்திற்கு எல்லா வகையிலும் உதவியது மத்திய காங்கிரஸ் அரசு.

பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை மே 17 அன்று கொன்று குவித்து, போரை வெற்றியுடன் முடித்துவிட்டதாக சிறிலங்க இராணுவம் அறிவித்த பின்னர், சிறிலங்க நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அந்நாட்டு பாதுகாப்புத் துறையின் செயலரும், போரை நடத்தியவருமான கோத்தபய ராஜபக்ச, போர் நடைபெற்றபோது ஒவ்வொரு நாளும் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவுடன் கலந்தோலோசித்த பின்னரே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

தானும், சிறிலங்க அதிபரின் ஆலோசகரான பசில் ராஜபக்சவும், அதிபரின் செயலர் லலித் விக்ரமதுங்காவும், இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அயலுறவுச் செயலர் சிங் சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோருடன் ஒவ்வொரு நாளும் கலந்துபேசியே போரை நடத்தியதாகவும் தெரிவித்தார். இதனை மத்திய காங்கிரஸ் அரசு ஒரு தடவை கூட மறுக்கவில்லையே?

“தமிழர்கள் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நீடித்த அரசியல் தீர்வு காணப்பட வேண்டு்ம்” என்று ஈழப் பிரச்சனை துவங்கிய காலம் முதல் பாடி வந்த பாட்டை இன்று ராஜபக்சவிடம் வலியுறுத்திப் பாட மத்திய காங்கிரஸ் அரசு தயாரா?

சொந்த நாட்டு மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்த சிறிலங்க அரசிற்கு எதிராக போர்க் குற்றம் செய்ததா இல்லையா என்று விசாரிக்க வேண்டு்ம என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது அந்த தீர்மானத்தை தோற்கடித்தது மட்டுமின்றி, சிறிலங்க அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட தற்புகழ்ச்சி தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவியது மத்திய காங்கிரஸ் அரசு.

உதவி நிதி யாருக்குப் போகிறது?

இந்தியா செய்த உதவியால் தமிழர்களையும், அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்த விடுதலைப் புலிகளையும் கொன்றொழித்த சிறிலங்க அரசு, இன்றைக்கு முள் வேலிக்குள் மூன்று இலட்சம் தமிழர்களை முடக்கி வைத்து பட்டினி போட்டு சாகடித்துக் கொண்டிருக்கிறதே. ஏன் என்று கேட்டதா மத்திய காங்கிரஸ் அரசு? ஏன் கேட்கவில்லை? இது தமிழனுக்கு எதிரான எண்ணமில்லாமல் வேறென்ன?

வன்னித் தமிழர்களின் மறுவாழ்விற்கென்று ரூ.500 கோடி அளித்தது மத்திய காங்கிரஸ் அரசு. அது யாருக்கு சென்று சேர்ந்தது? எந்த விதத்தில் அது தமிழர்களுக்கு செலவு செய்யப்பட்டது? சொல்ல முடியுமா மத்திய காங்கிரஸ் அரசால்?

தமிழர்களின் மறுவாழ்விற்காகவே உலக நாடுகள் பலவும் நிதியளிக்கின்றன. அவையனைத்தும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கென்று கூறி, போரில் உயிர் நீத்த சிறிலங்க இராணுவத்தினரின் குடும்பங்களுக்கும், காயம்பட்ட இராணுவத்தினரின் மறுவாழ்விற்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது என்பது இந்திய அரசிற்குத் தெரியாதா? எல்லோரும் சிறிலங்க மக்களே என்று கூறிக்கொண்டு சிங்களவர்களை தமிழர் பகுதிகளில் குடியேற்றம் செய்வதை சற்றும் கண்டு கொள்ளாமல் மத்திய காங்கிரஸ் அரசு உள்ளதே என்ன காரணம்? இதையும் தாண்டி மேலும் ரூ.500 கோடி அளிக்க முன்வந்துள்ளதே, ஏன்?

ஏனென்றால் அதற்குத் தேவை, தமிழர்களின் நலன் அல்ல, சிங்கள சிறிலங்க நாட்டுடனான உறவு. இது தமிழருக்கு விரோதமான நடவடிக்கை இல்லையா?

வன்னியில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்ற 500 இந்திய இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனரே, இந்த வன்னிப் பகுதியை கடந்து சென்றுதானே சிங்கள சிறிலங்க இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால், வட்டுவாகலுக்குள் நுழைந்து பல பத்தாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தனர். அப்போதெல்லாம் அந்த கண்ணி வெடிகள் மெளனம் காத்தனவா? போகும் போது வெடிக்காமல் திரும்பி வரும்போதும் வெடிக்காமல், மக்களை குடியேற்றம் செய்யும் போது மட்டுமே கண்ணி வெடிகள் வெடிக்குமா?

மீனவர்களை காப்பாற்றாத காங்கிரஸ்

ஈழத் தமிழர்களை காப்பாற்றுவது இருக்கட்டும். தமிழக மீனவர்களைக் காப்பாற்றியதா மத்திய காங்கிரஸ் அரசு? எல்லைகளை மதித்து நடக்க நமது மீனவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினாரே! கடலில் எப்படி எல்லையைக் காண்பது என்று அங்கிருந்த தமிழ்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர் எவராவது கேட்டனரா? பன்னெடுங்காலமாக தமிழர்கள் மீன் பிடித்தனரே, இன்று எப்படி அந்த உரிமை பறிக்கப்படலாம் என்று எந்த காங்கிரஸ் உறுப்பினராவது கேட்டனரா? இரு நாட்டு கப்பல்களும் சென்றுவரும் பாரம்பரிய உரிமை மட்டும் ஒப்புக் கொள்ளப்பட்டதே, மீனவர்களின் பாரம்பரிய உரிமை எப்படி விட்டுத் தரப்படலாம் என்று கேட்டனரா காங்கிரஸ் உறுப்பினர்கள்?

ஈழப் பிரச்சனை உருவான காலத்திற்கு முன்னரே தமிழர்களின் நலனை உதாசீனப்படுத்தியதுதான் காங்கிரஸ் அரசுகள். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, 150 ஆண்டுக்காலம் அந்நாட்டின் தேயிலைத் தோட்டங்களில் உழைத்து, அந்நாட்டின் தேயிலைக்கு உலக அளவில் சந்தையைத் தந்து, உள்நாட்டுப் பொருளாதாரத்தை வளப்படுத்திய மலையகத் தமிழர்களின் குடியுரிமையை சிறிலங்க அரசு பறிக்க ஒத்துழைத்தது மத்திய காங்கிரஸ் அரசு. இந்த புண்ணியத்தை செய்தவர் இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்த்திரி.

தமிழனுடைய - அது ஈழத் தமிழன் ஆனாலும், மலையகத் தமிழன் ஆனாலும், தமிழ்நாட்டின் மீனவன் ஆனாலும், தமிழ்நாட்டின் நலமே ஆனாலும் - நலனை முன்னின்று பறித்து அவனுக்கு துரோகம் செய்ததுவரும் கட்சி காங்கிரஸ். துரோகமிழைக்கும் அரசு மத்திய காங்கிரஸ் அரசு.

மத்திய காங்கிரஸ் அரசினையும், காங்கிரஸ் கட்சியையும் தமிழக மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளனர். இந்திய நலன் வேறு, தமிழனின் நலன் வேற்றுமைப்படுத்தி, ஆட்சியைப் பிடிக்க மட்டும் தமிழன் தேவை என்பதற்காக, ஏதாவது ஒரு திராவிட கட்சியைத் தொற்றிக் கொண்டு அரசியல் நடத்தி வருகிறது காங்கிரஸ் கட்சி. தமிழ்நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் இக்கட்சியை தூக்கி நிறுத்த காங்கிரஸார் நினைத்தால் முதலி்ல் தமிழக மக்களின் எண்ணங்களையும், உணர்வையும் புரிந்துகொண்டு, நேர்மையான அரசியல் நடத்த முன்வர வேண்டு்ம். அதை விட்டுவிட்டு இராஜ தந்திர வித்தையெல்லாம் செய்து தமிழர்களை ஏமாற்ற முயற்சிக்கக் கூடாது.

அரசியல் என்பது தூய்மையான நல்லாட்சியே. அதைதான் பெருந்தலைவர் காமராசர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக 9 ஆண்டுக் காலம் இருந்து சாதித்துக் காட்டினார். அவரிடம் இருந்த அந்த நேர்மை இன்றைய காங்கிரஸாரிடம்...

Please Click here to login / register to post your comments.