குடாநாட்டின் `இதயம்' செயலிழக்கும் ஆபத்து

ஆக்கம்: லோ.துஷிகரன்
இலங்கையின் வடபுலத்தில் இருக்கின்ற ஒரே ஒரு போதனா வைத்தியசாலையான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வடக்கிலுள்ள ஏனைய வைத்தியசாலைகளுடன் ஒப்பிடும் போது, தரத்திலும் வளத்திலும் உயர்ந்ததாகவும் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழும் இருந்து வருகின்றது.

மருத்துவ மாணவர்கள், துணை மருத்துவ, சேவையினர், தாதியர் போன்றோருக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற்றுவரும் இந்த வைத்தியசாலை குடாநாட்டு மக்களுக்கு மாத்திரமன்றி, ஏனைய மாவட்ட மக்களினதும் `உயிர்க்காப்பகமாக' வுள்ளது.

உயர்தரத்தில் இருக்க வேண்டிய யாழ். போதனா வைத்தியசாலை பல பற்றாக்குறைகளுடன் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. தற்போது திடீரென மூண்டுள்ள போர்ச் சூழலினால் மேலும் வலுவிழந்து பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள யாழ். வைத்தியசாலையை எவரும் வேண்டிய அளவில் கருத்தில் எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியதுடன் ஆபத்துமிக்கதுமாகும்.

வைத்தியசாலை எதிர்நோக்கும் பற்றாக்குறை

பொதுவாக வைத்தியசாலைக்கு சில மருத்துவப் பொருட்கள் அதிகூடிய அளவில் பாவனையில் தேவைப்படும். அவற்றில் சத்திரசிகிச்சைக்கான `ஸ்பிறிட்' (Surgerical sprit) மிகுந்த தட்டுப்பாடாகவே உள்ளது. அத்துடன், சத்திரசிகிச்சைக்கு வேண்டிய முக்கிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது. போர்ச்சூழலில் இவை வழமையிலும் பார்க்க அதிகம் தேவைப்படும். ஆனால், பாரிய போர்ச்சூழல் ஏற்பட்டுள்ள இத்தருணத்திலும் குறைந்த அளவே அங்கு காணப்படுகின்றன.

அவசர சிகிச்சைப் பிரிவு (EU), தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), சத்திர சிகிச்சைக் கூடம் போன்றவற்றில் பிராண (ஒட்சிசன்) வாயுவுக்குத் தட்டுப்பாடு பாரியளவில் ஏற்பட்டுள்ளது. இப்பிரிவுகளில் உள்ள பெருமளவு நோயாளர்கள் செயற்கைச் சுவாசம் மூலமே பராமரிக்கப்பட்டு (உயிர் வாழ்ந்து) வருகின்றனர்.

இவ்வாயு இல்லாமல் போவதால் நோயாளர்கள் பலர் பரிதாபமாக கண்முன்னே துடித்து துடித்து மரணிக்க நேரிடும். பொதுவாக இவை கொள்கலன்களிலேயே (Cylinder) பாவனையில் உள்ளது. வெற்றுக் கொள்கலன்களை கொழும்புக்குக் கொடுத்தால் மாத்திரமே தென்னிலங்கையில் இருந்து பிராண வாயு நிரப்பப்பட்ட கொள்கலனை மீளப் பெறலாம். தற்போது இவ்வாறு பரிமாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மட்டுமல்லாது, வைத்தியசாலை உபகரணங்கள், மருந்துகள் கொள்வனவு செய்வதற் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும்.

கொழும்புத் துறைமுகத்தில் இருந்து அண்மையில் யாழ். நோக்கிச் சென்ற நிவாரணக் கப்பலில் பிராணவாயுக் கொள்கலன்கள் செல்கின்றன என்ற செய்தி ஊடகங்களில் வெளியான போதும் பாதுகாப்பு அமைச்சின் உரிய அனுமதியைப் பெறுவதில் ஏற்பட்ட தடைகளால் அவை அனுப்பிவைக்கப்படவில்லை.

இரத்தத்துக்கு தட்டுப்பாடு

யுத்தம் ஆரம்பித்த சில நாட்களில் இரத்த வங்கியில் இரத்தத்திற்கான தட்டுப்பாடு பாரிய அளவில் ஏற்பட்டது. இதனால், காயமுற்றவர்களுக்கு உடனடியாக ஏற்றப்பட வேண்டிய இரத்தத்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் மட்டுமன்றி, யாழ். மாவட்டத்திற்கு வெளியே உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் மேலதிக சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். இவர்களில் தினமும் நூற்றுக்கு அதிகமானோர் பொதுமருத்துவம், சத்திரசிகிச்சை, குழந்தை மருத்துவம், புற்றுநோய், கண், தோல், பல், காது, மூக்கு, தொண்டை, என்பு முறிவு போன்ற கிளினிக்குகளுக்கு வருபவர்கள். அதுமட்டுமன்றி, வெளிநோயாளர் (OPD) பிரிவுக்கும், மருத்துவ ஆய்வுகளுக்காக மருத்துவ ஆய்வு கூடத்திற்கு வருபவர்கள் வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பல நோய்களுக்கு தொடர்ச்சியாக கிளினிக்கிற்கு வந்தாலே வைத்தியத்தை சரியாக செய்ய முடியும். யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரவிராஜைக் கேட்டபோது, அரைப் பங்கினரே தற்போது கிளினிக்கிற்கு வருவதாக கூறினார். இதனால் உரிய மருத்துவம் மக்களை சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்துள்ள நூற்றுக் கணக்கான வெளிமாவட்ட நோயாளர்கள் திருப்பிச் செல்ல முடியாமலுள்ளனர்.

நோய்க்கூற்றியல் வைத்தியர் (Pathologyst) யாழ். போதனா வைத்தியசாலையில் இல்லாததால் நோயாளர்களின் ஆய்விற்கு வேண்டிய மாதிரிப் பொருட்கள் கொழும்பிற்கு அனுப்பப்பட்டே பெறுபேறுகள் பெறப்பட்டு சிகிச்சை நடைபெற்றது. தற்போது போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளதால் ஆய்வு அறிக்கைகள் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புற்றுநோயாளர்களே பெரும் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர். மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்பப்படும் நோயாளர்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதய நோய், நரம்பியல், குழந்தை அறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு வைத்திய நிபுணர்களும் போதனா வைத்தியசாலையில் இல்லாதது வேடிக்கைக்குரியதே. அப்படியிருந்தபோதும் இந்த நோயாளர் முன்னர் கொழும்பு சென்று சிகிச்சை பெற்றனர். தற்போது அவர்கள் வர முடியாத வேதனைக்குள் சிக்குண்டு உள்ளனர்.

ஏறக்குறைய 22 நோயாளர்கள் உடனடியாக கொழும்பு வரவேண்டிய நிலையில் தற்போது யாழில் உள்ளார்கள். அதில் ஒருவர் இதய நோயினாலும் இருவர் நரம்பியல் நோயினாலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவசரமாக மேலதிக சிகிச்சைக்கு கொழும்பிற்கு அனுப்பி அவர்களது உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்கள். இப்படியாக போரால் நேரடியாகப் பாதிக்கப்படாமல் மறைமுகமாக உயிருக்காகப் போராடும் பலர் யாழ்ப்பாணக் குடாநாட்டுள் சிக்கித் தவித்துக் கொண்டு உள்ளார்கள்.

மேலதிக சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் வெளிமாவட்டங்களுக்கு போக முடியாமல் சிக்குண்டும் உள்ளனர்.

நோயாளர் காவு வண்டிக்கு தட்டுப்பாடு; கட்டுப்பாடு

இதேவேளை, செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சில மனித நேய, தொண்டு நிறுவனங்கள் அவசர தேவையின் போது, நோயாளர் காவு வண்டியை (அம்புலன்ஸ்) சேவையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே ஈடுபடுத்துகின்றன. யாழ். போதனா வைத்தியசாலையில் அம்புலன்ஸினது போக்குவரத்திற்கும் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே இராணுவத்தால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இரவு வேளையில் சிறிய வைத்தியசாலைகளில் இருந்தோ வேறு பகுதியில் இருந்தோ, போதனா வைத்தியசாலைக்கு அவசர நிலைமையின் போது கூட நோயாளர்களை மாற்ற முடியா துன்பியல் நிலை ஏற்பட்டுள்ளது. தேவைக்கு வைத்தியசாலை ஊழியர்கள் கூட கடமைக்கு வர முடியாத பயங்கர நிலை ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலை ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

குறுகிய காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவதால் அவ்வேளையிலேயே அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருள் போன்றன வாங்க தொலைதூரம் செல்ல வேண்டி இருப்பதுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவும் நேரிடும். இதனால் குறுகிய நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி தமது குடும்பத்தை காப்பதா? அல்லது கடமைக்குச் செல்வதா என்ற நிலை வைத்தியசாலை ஊழியர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் ஊழியர்கள் பல்வேறுபட்ட பிரதேசங்களில் இருந்தும் வருபவர்கள். எரிபொருள், போக்குவரத்து நெருக்கடியாலும் ஊரடங்குச் சட்டம் வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு நேரங்களில் தளர்த்தப்படுவதாலும் அவர்கள் வைத்தியசாலைக்கு வந்து தமது நோயைத் தீர்ப்பதிலும் உயிரைக் காப்பதிலும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இது இவ்வாறிருக்க, பட்டப்பின் படிப்பு, நேர்முகப் பரீட்சை, தடை தாண்டல் பரீட்சை, மேலதிகப் பயிற்சி, பிரத்தியேகத் தேவை என பல்வேறு தேவைகளுக்கு கொழும்பிற்கு செல்ல முடியாத நிலையும் சென்றவர்கள் திரும்பிவர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும், சிலரது குடும்பங்கள் தென்பகுதியிலும் பெரும்பாலும் கொழும்பிலும் இருப்பதால் அவர்கள் கொழும்பிற்கு வந்து செல்ல வேண்டிய தேவை கட்டாயம் உள்ளது. அப்படி வர முடியாத நிலை ஏற்படுமானால், ஊழியர்கள் நிரந்தரமாக கொழும்பிலேயே தங்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டால் யாழ். போதனா வைத்தியசாலை பொருட்தட்டுப்பாட்டுடன் பெரும் ஆளணித் தட்டுப்பாட்டுக்குள்ளும் சிக்கும் நிலை ஏற்படும்.

தென்பகுதியில் சிக்கி உள்ள ஊழியர்கள்

20 இற்கும் மேற்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் கொழும்பு உட்பட தென்பகுதியில் பல்வேறு காரணங்களுக்காக சென்று திரும்பிவர முடியாது சிக்கி உள்ளனர். மகப்பேற்று பெண் நோயியல் மருத்துவ நிபுணர், பொது வைத்திய நிபுணர், வைத்திய ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர், மருந்தாளர், தாதியர், மருத்துவ ஊழியர்கள், அம்புலன்ஸ் ஓட்டுநர், பரிசாரகர் என பலர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மீண்டும் செல்ல முடியாததால் வைத்தியசாலை தனது பூரண கடமையை செய்ய முடியாது உள்ளது.

சிக்கி உள்ள மகப்பேற்று வைத்திய நிபுணரிடமும் பொதுவைத்தியரிடமும் யாழ். குடாநாட்டில் உள்ள பல நோயாளர்கள் வைத்தியம் பெறுவது குறிப்பிடத்தக்கது. விடுமுறையில் சென்ற வெளிமாவட்ட மருத்துவ மாணவர்கள், உள்ளக பயிற்சி மருந்தாளர்கள் போன்றோரும் சிக்கியுள்ளனர்.

இவர்களை அழைத்து வருவதற்கும் யாழ். போதனா வைத்தியசாலை எதிர்நோக்கும் இன்னல்களை களைவதற்கும் சுகாதார அமைச்சு, UNHCR, ICRS, யாழ். மாவட்ட அரச அதிபர் போன்றவர்களுக்கு தெரியப்படுத்தி விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட போதிலும் சாதகமான பதில்கள் இதுவரையில் வந்ததாக இல்லை.

குடாநாட்டு மக்களின் உயிர்க்காப்பில் பாரிய பங்காற்றும் யாழ். போதனா வைத்தியசாலை மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

Please Click here to login / register to post your comments.