கலைஞரைத் திட்டாதீர்கள் என்றார் பிரபாகரன்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் ஈழத்துக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் ஆதரவான நிலை வகிப்பது, தமிழகத்தில் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மத்தியிலும் கொந்தளிப்பைக் கிளப்பி இருக்கிறது.

லண்டனில் உள்ள தமிழ் நண்பர்கள் சிலர் நம்மிடம், ''பிரிட்டன்வாழ் 'பொங்கிடு தீவு நண்பர்கள்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினர்களாக திருமாவளவனும், தமிழருவி மணியனும் லண்டனுக்கு வந்தார்கள். தமிழ் ஈழத்துக்காக உயிர்நீத்த திலீபன், சங்கர் ஆகியோருக்கு வீர வணக்கம் செலுத்துவதும் விழாவின் திட்டம். சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அதேசமயம், 'ஈழத்தை அழிக்க உதவிய கருணாநிதியுடன் ஏன் கூட்டு வைத்தீர்கள்? ஒரு எம்.பி. ஸீட்டுக்காக ஏமாந்துபோன உங்களை எப்படி நாங்கள் ஈழத்துக்கு ஆதரவான தலைவராக ஏற்றுக்கொள்ள முடியும்? காங்கிரஸின் களவாணித்தனத்தைப் பட்டியல் போட்டுப் பேசிய நீங்கள், சோனியா காந்தியுடன் எப்படி ஒரே மேடையில் நின்றீர்கள்?' என்றெல்லாம் திருமாவளவனிடம் பலரும் கேள்வி கேட்டார்கள்.

அதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட திருமாவளவன், 'யாருடன்

கூட்டணி அமைத்தாலும் ஈழ விவகாரத்தில் எனது நிலைப்பாட்டை மாற்ற முடியாது. என் நிஜமான உணர்வுகளை தயவுபண்ணி சிறுமைப்படுத்தாதீர்கள்' எனச் சொன்னார். அடுத்து குளோபல் டி.வி. என்கிறலோக்கல் சேனலின் லைவ் ஒளிபரப்பிலும் திருமாவுக்கு எதிராகப் பலமான கண்டனக் குரல் கொடுத்தார்கள் நேயர்கள்.

அப்போது, 'ஈழத்துக்காக இருபது வருடங்களுக்கும் மேலாக போராடி வரும் என்னை சந்தேகப்படுகின்றீர்கள்... ஆனால், தேர்தல் கூத்துக்காக ஒருநாள் உண்ணாவிரதம் உட்கார்ந்த ஜெயலலிதா உங்களுக்கு நல்லவராகத் தெரிகிறாரா?' என திருமா எதிர்க்கேள்வி கேட்டார். நேயர்களின் எதிர்ப்புக் கேள்வி அதன்பிறகும் வலுத்ததைத் தொடர்ந்து, அந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி அரைகுறையாகவே முடிந்தது..!'' என்றார்கள் லண்டன் தமிழ் நண்பர்கள்.

இதுகுறித்து நாக்பூரில் தீட்சாபூமி விழாவில் இருந்த திருமாவளவனிடமே கேட்டோம்.''லண்டன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நான் பேசிய கருத்துகளை, பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே உண்மை. 'முதல்வர் கலைஞர் நினைத்திருந்தால் ஈழப் போரை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கலாம்' எனக் கிளம்பும் அபவாதத்தை நம்பித்தான் உலகத் தமிழர்கள் சிலர் தி.மு.க-வுக்கு எதிராகக் கொந்தளிக்கிறார்கள். உலக நாடுகள்அத்தனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் மட்டுமே தலையிட்டு எப்படி ஈழப் போரைத் தடுத்துவிட முடியும்? ஈழத்தின் விடிவுக்காக சிறுத்தைகள் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால், எங்களின் நிஜமான உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி விட்டார்கள்!'' என்றார் திருமா. கூடவே,

''ஈழப் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த மே மாதம் 8-ம் தேதி வாக்கில் முள்ளிவாய்க்காலில் இருந்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பா.நடேசனும், ஊடகப் பிரிவைச் சேர்ந்த சேரலாதனும் போனில் பேசி, 'உங்களோடு தலைவர் பத்து நிமிடம் பேச விரும்புகிறார்' என்றார்கள். 'கலைஞரையோ சோனியாவையோ தயவுபண்ணி திட்டாதீர்கள். இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருபோதும் ஈழத்தை வென்றெடுக்க முடியாது. ஈழத்துக்கான போராட்டத்துக்குக் கைகொடுக்கும் விதமாகக் குரல் கொடுங்கள். யாரையும் வசைபாடி, எங்களின் பின்னடைவுக்கு வழிகோலாதீர்கள்' என்பதுதான் தலைவர் பிரபாகரன் எனக்கு சொன்ன தகவல்... அந்த கனத்த கணங்களை நினைக்கும்போதே என் நெஞ்சறுந்து போகிறது. அத்தனை விமர்சனங்களுக்கும் என் அழுத்தமான பதில் இது ஒன்றுதான்!'' - கொந்தளித்து அடங்குகிறது திருமாவின் குரல்!

Please Click here to login / register to post your comments.