ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (123-169)

ஆக்கம்: பாவை சந்திரன்

பிரபாகரன் எழுதிய கடிதங்களின் தொடர்ச்சியாக சென்னையில் தங்கியிருந்த கிட்டு பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது விடுதலைப் புலிகளின் நிலை குறித்து பேட்டியளித்தார்~

"டைம்ஸ் ஆப் இந்தியா'வின் துணை பத்திரிகைகளில் ஒன்றான "இல்லஸ்ட்ரேடட் வீக்லி' என்ற வார இதழின் செய்தியாளர் கே.பி.சுனிலுக்கு அளித்த பேட்டி சில உண்மைகளையும், இந்திய அரசுக்கு நல்லிணக்கச் செய்திகளையும் அளித்தது.

பிரபாகரனிடம் பேட்டியொன்றுக்கு ஏற்பாடு செய்யும்படிதான் கிட்டுவிடம் கூறப்பட்டது. அதன்பேரில் கேள்விகளைக் கேட்டு வாங்கிய கிட்டு, சில நாள்கள் கழித்து பிரபாகரன் பேட்டியாக இல்லாமல் பொதுவான விடுதலைப் புலிகளின் அமைப்பு தருவதான பேட்டியாகப் பதில் அளிக்கப்பட்டிருந்தது. எனவே அந்தப் பதில்களுக்கு கிட்டு பதில் என்றே வெளியிடப்பட்டது. நீண்ட பேட்டியில் ஒரு சில கேள்விகளும் அதற்குப் பெறப்பட்ட பதிலும் வருமாறு:

கேள்வி: ஜூலை 29 மற்றும் செப்டம்பர் 28 பேச்சுவார்த்தைகளின்போது விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அரசுப் பிரதிநிதிகளுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின் விவரங்கள்?

கிட்டு பதில்: ஜூலை 29-இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. சிறீலங்கா - இந்திய அரசுகளுக்கிடையே உடன்பாடு கையெழுத்தானது. பிரதமர் ராஜீவ் சந்திக்க விரும்பியதாலேயே எமது தலைவர் பிரபாகரன் தில்லி சென்றார். ஒப்பந்தத்தின் சாராம்சம் அவசர அவசரமாகக் காட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்கவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் இணைப்பில் அடங்கிய இந்தியாவின் பாதுகாப்பு வெளிநாட்டுக் கொள்கைகள் அடங்கிய விஷயங்களை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். இலங்கையின் இனப்பிரச்னை குறித்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள விஷயங்கள் எங்கள்மீது திணிக்கப்பட்ட ஒன்றாகும்.

நீண்டகால நோக்கில் தந்திரோபாய ரீதியாக இந்தியா தமிழீழத்தின் நண்பன் என்னும் நோக்கிலும், எமக்கு அப்பாற்பட்ட சக்தியாக நிலைமை எம் மீது திணிக்கப்பட்டதாலும் நாம் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படுகிறோம். இது இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாகப் பொருள்படாது. இந்த ஒப்பந்தம் திம்புப் பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட எங்களின் உயிர்க் கொள்கையான நான்கு அம்ச அடிப்படைக் கொள்கைகளை உள்ளடக்கவில்லை. இதனாலேயே இந்த ஒப்பந்தத்தை எம்மால் ஏற்க முடியாதிருக்கிறது. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனாவும் அளித்த பேட்டி, சுதுமலையில் எமது தலைவர் அளித்த உரை, 15-8-87-இல் "இந்தியா டூடே' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி அனைத்தும் சான்று பகர்கின்றன.

ஒப்பந்தத்தின் முழுமையான அமலாக்கத்திற்கு ஆதரவு தருகின்றோம் எனும் நிலையில் பாரதப் பிரதமர் எமக்குச் சில உறுதிமொழிகளை அளித்தார்:

1. தமிழ் மக்கள், போராளிகளின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.

2. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பெரும்பான்மையாக உள்ளடக்கிய இடைக்கால அரசை ஏற்படுத்துதல்.

3. இடைக்கால அரசு

(1) அகதிகளை மீளக் குடியேற்றுதல், (2) யுத்த அழிவுகளினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் புனர்வாழ்வு அளித்தல், (3) தமிழ் போலீஸ் படையை நிர்மாணித்தல் போன்ற பணிகளுக்குப் பொறுப்பாக இருக்கும் என்பனவே அவ்வுறுதிமொழிகளாகும். ஆனால் நாம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தொடங்கியவுடன் நடந்ததோ வேறு. பாரதப் பிரதமர் எமக்கு வாக்குறுதி தந்ததற்கு எதிர்மாறாக விளைவுகள் இடம்பெற்றன.

(அ) வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நான்கு மடங்கு வேகத்தில் நடைபெற்றன. (ஆ) அரசியல் கைதிகள் பெருந்தொகையானோர் விடுவிக்கப்படாதது. (இ) சிறீலங்கா ராணுவம் தனியார் வீடுகள், பொதுக் கட்டடங்கள், பாடசாலைகள் போன்றவைகளில் இருந்து வெளியேறாதது. (ஈ) இடைக்கால அரசு உருவாக்கப்படாமல் காலந்தாழ்த்தப்பட்டது. (உ) அதேவேளை சிங்கள போலீஸ் நிலையங்கள் அவசர அவசரமாக வடக்கு, கிழக்கில் ஸ்தாபிக்கப்பட்டது.

(ஊ) புனர்வாழ்வும், யுத்த அழிவு நிவாரணங்களும் சிங்கள மக்களுக்கே திட்டமிட்டு வழங்கப்பட்டது போன்ற அபாயகரமான சூழ்நிலைகளை உடனடியாகத் தடுக்க வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டது. இந்திய அரசுக்கு 24 மணிநேர முன்னறிவித்தல் அவகாசத்துடன் 5 அம்சக் கோரிக்கைகளைக் கொண்ட திலீபனின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டது.

இறுதியில் தமிழ் மக்களின் எழுச்சிக்கும், திலீபனின் உயிர்த் தியாகத்திற்கும் அடிபணிந்து செப்டம்பர் 28, 1987-இல் எம்முடன் உடன்பாட்டிற்கு வந்தது.

1) தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இவ் ஒப்பந்தத்தின் அமலாக்கத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குதல் வேண்டும்.

2) எஞ்சியிருக்கும் ஆயுதங்களைக் கையளித்தல். (இடைக்கால அரசு ஏற்பட்டவுடன்)

3) இந்திய அரசுக்கு எதிரான எமது பிரசாரத்தை நிறுத்துதல்.

என்ற முன்நிபந்தனைகளோடு திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகளை இந்திய அரசு ஏற்று, விடுதலைப் புலிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட இடைக்கால அரசு ஒன்றை நிறுவ எம்முடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. இவ் ஒப்பந்தத்தில் இந்தியத் தரப்பில் தூதுவர் ஜே.என். தீட்சித்தும், எமது தரப்பில் பிரதித் தலைவர் மாத்தையாவும் கையெழுத்திட்டனர்.

கேள்வி: கடந்த ஐந்து மாதங்களில் நடந்துள்ள விஷயங்களை, நிகழ்ச்சிகளை நீங்கள் கணிப்பது எப்படி? இந்திய ராணுவத்தின் தொகையும், தளவாடங்களும் அங்கு குவிக்கப்பட்டிருப்பது; இந்தியத் தொடர்பு சாதனங்களின் செயற்பாடுகள்?

கிட்டு: கடந்த 5 மாதங்களில் தமிழ் மக்கள் பட்ட துயரம் வேறு எந்தக் காலத்திலும் காணாத ஒன்றாகும்.

ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் கொடுக்கப்பட்டதாக பொய்யைக் கூறி ஏமாற்ற இரு அரசுகளுக்கும் நாம் இடைஞ்சலாக இருக்கிறோம். தமிழ் மக்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் எமக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவும் எம்மை ஜனநாயகப் பாதையால் ஒடுக்க முடியாது என்பதை இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் சில ராஜதந்திரிகளும், ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசும் உணர்ந்து கொண்டன. யுத்தம் ஒன்றின் மூலமே எம்மை அழிக்கலாம் என்றும் அதுவும் ஒரு சில நாட்களில் காரியத்தை முடித்து நியாயப்படுத்தலாம் என்றும் நம்பினர்.

எம்மை வலுவில் ஒரு சண்டைக்கு இழுப்பதற்காகவே பதினேழு பேரைக் கைது செய்து கொழும்புக்கு அனுப்பும் நாடகத்தை ஆடினர். எமது தன்னுரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் நாம் சண்டையிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். உண்மையில் நாம் இந்தியாவிற்கு எதிரான யுத்தத்திற்கு என்றுமே தயாராக இருக்காதது மாத்திரமின்றி அதை விரும்பவுமில்லை.

கனரக பீரங்கிகள், டாங்கிகளை ஏற்கெனவே திட்டமிட்டு குவித்து வைத்திருந்த அமைதிப் படை யாழ்ப்பாணக் குடா நாட்டைக் கைப்பற்ற ஒரு எதிரி நாட்டின் மீது படையெடுப்பதுபோல் முழுப் பலத்துடன் இறங்கினார்கள். தமது ஒரு கை கட்டப்பட்ட நிலையில் தாம் சண்டையிட்டதாக இந்தியத் தளபதிகள் கூறுவது தவறு. போராளிகளின் வீரமும், தியாகமும், எமது யுத்த தந்திரமும், எம் ராணுவ வேவுத் திறனும், மக்களின் எல்லையில்லாத ஆதரவும், ஒடுக்குமுறைக்கு எதிரான உண்மையான எழுச்சியும்தான் போர்முனைகளில் எமக்கு வெற்றியைக் குவித்தன.

பெருந்தொகையான ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததனால்தான் நாம் இந்திய ராணுவத்தை திணறடித்தோம் என்பதை மறுக்கின்றோம். யாழ்குடா நாட்டின் கட்டுப்பாட்டை ஒரு மாதத்தின் பின் நாம் இழந்தாலும் ராணுவ ரீதியில் எமக்கு வெற்றியான சண்டையாகவே நாம் கருதுகின்றோம். தொடர்ந்து எமது பாதுகாப்பிற்காக கொரில்லாப் போராட்டதை தொடரக்கூடிய நிலையிலும் இருக்கின்றோம்.

முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தமிழ் மக்கள் எம்மீது அனுதாபமும், ஆதரவும் கொண்டிருக்கின்றார்கள். அதேநேரம் இந்திய ராணுவம் தமிழ் மக்களைத் தொல்லைப்படுத்தி, பயமுறுத்தி, நிம்மதியற்ற வாழ்க்கையின் எல்லைக்குத் தள்ளிக்கொண்டு போகின்றது. இந்திய ராணுவத்தின் பெருந்தொகையான எண்ணிக்கை எமது நாட்டு மக்களின் அன்றாடக் கலாசார வாழ்க்கையைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ராணுவச் சூழ்நிலைக்குள் வாழாத, வாழ்க்கைப்பட விரும்பாத எமது மக்கள் இந்திய ராணுவத்தை ஓர் ஆக்கிரமிப்பாளனாக உணரத் தலைப்பட்டுள்ளனர். தமது உள்ளக்குமுறல்களை அடக்கி வைத்திருக்கும் எம் மக்கள் வியட்னாமின் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியப் படைகள் தமது எண்ணிக்கைகளைக் குறைத்து பழைய நிலைக்குத் திரும்பும் நடவடிக்கைதான் எதிர்காலத்தில் தமிழ் மக்களுடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்தும் வாய்ப்பாகும்.

இந்தியாவின் மக்கள் தொடர்பு சாதனங்களில் இந்திய அரசுக்கும் ஆளும் கட்சிக்கும் கட்டுப்பட்டவை மிகவும் பாரதூரமாக எம்மீது அபாண்டங்களை அள்ளித் தெளிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் எமது நிலைப்பாடு பற்றிய விஷயத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள். தமிழ் மக்கள் கேட்ட உரிமைகளைவிட அதிகப்படியான உரிமைகளை இவ் ஒப்பந்தம் கொடுத்துள்ளதாகக் கூறுவது தவறு. எமது நாட்டில் இரண்டு தினசரிப் பத்திரிகை அலுவலகங்களை பட்டப் பகலில் வெடி வைத்துத் தகர்க்க இந்திய ராணுவத்திற்கு உத்தரவிட்ட இந்திய அரசின் தொடர்பு சாதனங்களிடமிருந்து நாம் எதனை எதிர்பார்க்க முடியும்?

ஆனால் இந்தியாவின் பெரும்பாலான சுதந்திரமான பத்திரிகைகளுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். நாட்டுப்பற்று எனக் கூறி உண்மையை மறைக்காமல் நேர்மையாக உள்ளதை உள்ளபடி கூற இப்பத்திரிகைகள் முயன்றுள்ளன. இது இந்தியப் பத்திரிகைகளின் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.

124: இந்தியாவின் தயவு வேண்டும்!

கிட்டு தனது பேட்டியில், விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழ் மக்களின் வருங்காலம் பற்றி எல்லாம் விரிவாகவே விளக்க முற்பட்டார். இந்திய அமைதிப் படை வெளியேற வேண்டும் என்று தாங்கள் கூறவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

கேள்வி: பேச்சுவார்த்தை வெற்றிபெறும்போது,

விடுதலைப் புலிகளின் எதிர்கால நடவடிக்கைகள், நோக்குகள் யாவை? பிற போராளிக் குழுக்கள், இந்திய அரசு, ராணுவம், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன பற்றியவை?

கிட்டு பதில்: பேச்சுவார்த்தை ஒன்று வெற்றிகரமாக நிறைவேறும்போது,

அ) யுத்த நிறுத்தம் நிரந்தரமாக்கப்படும்.

ஆ) எமது ஆயுதங்கள் இந்தியப் படையிடம் கையளிக்கப்படும்.

இ) இந்தியப்படைகளின் வடக்கு, கிழக்கில் எதிர்கால நிலைகளில் இணக்கம்.

ஈ) தமிழ் மக்களின் நிரந்தரப் பாதுகாப்பு, யுத்த அழிவு நிவாரணங்கள் போன்ற அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் விடயங்களில் இணக்கம்.

உ) செப்டம்பர் 28-ல் ஏற்பட்ட, தீட்சித்-பிரபாகரன் உடன்பாட்டின் எதிர்கால வடிவங்களின் இணக்கம்.

ஊ) தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை நிறைவு செய்யும் கொள்கைகளை ஒப்பந்தத்தில் திட்டவட்டமாக குறிப்பிட்டு உள்ளடக்கவும், சில மாற்றங்களை இந்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளவும் இணக்கம் காணல்.

எ) ஒப்பந்த விதிகளுக்கமைய தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வைக்கப்படும் அதிகூடிய அதிகாரங்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையை அமைக்க இலங்கை அரசு சட்டமியற்றவும், அதற்கான புதிய அரசியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றச் செய்யவும் இந்திய அரசுடன் இணக்கம் காணல்.

ஏ) இவ்வாறு அமையப்போகும் மாகாண சபைக்கான தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்குத் தேவையான அடிப்படை ஆண்டைத் தீர்மானித்தல்.

இவைபோன்ற விஷயங்களில் இணக்கமும், தீர்வும் கண்டிருப்போம் என்பதைக் குறிப்பிடுகின்றோம்.

நீண்டகாலப் போரின் அழிவுகளால் அவதிப்பட்டிருக்கும் எம் மக்களுக்கு நிம்மதி தேவை. இந்த இடைக்கால அமைப்பில் மக்கள் பயன் அடைய நாம் பாடுபடுவோம். எமது எதிர்கால அரசியலைப் பொறுத்தமட்டில் நாம் வைத்த நான்கு அம்சக் கோரிக்கைகள் ஏற்கப்படும்வரை சகலவிதமான ஜனநாயக வடிவங்களிலும் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம்.

இந்திய மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் இடையில் ஒரு நட்புப் பாலத்தை அமைக்க முயல்வோம். இந்திய அரசு எமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவைக்க, இந்திய மக்களிடம் ஆதரவு திரட்டுவோம்.

ஆயுதங்களைக் கையளித்த நிலையில் சிங்கள ஊர்க்காவல் படையினரிடமிருந்தும், சிறீலங்கா ராணுவத்தினரிடமிருந்தும் எமது மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்திய ராணுவத்திடமே ஒப்படைக்கப்படும். வடக்கு, கிழக்கின் எல்லைப் புறங்களிலுள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க இந்திய ராணுவம் செயல்பட வேண்டி ஏற்படலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளும், ஈரோஸýம் திட்டவட்டமாக இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. அதேசமயம் பிற இயக்கங்கள் எனப்படும் குழுக்களும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் தமது அடிப்படை அரசியற் கொள்கைகளை மண்ணில் புதைத்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. இவர்களை தமிழ் மக்கள் அரசியல் சக்திகளாகக் கணிப்பதை விட்டுவிட்டார்கள். ஒரு பேச்சுவார்த்தையின் வெற்றிக்குப் பிறகு அமையும் தேர்தலில் இவர்கள் மக்களைச் சந்திப்பதில் எமக்கு ஆட்சேபணையில்லை. இவர்களுக்குப் பதில் கொடுக்க தமிழ் மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

கேள்வி: இலங்கையில் இந்திய அரசின் செயற்பாடுகளை, பிடிப்பை மட்டுப்படுத்திக்கொண்டு இந்திய ராணுவம் படிப்படியாக வெளியேற வேண்டியதை கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகள் செயற்படுவார்களா?

கிட்டு: இந்திய ராணுவத்தை வெளியேற்றுவது-வெளியேற்ற முடிவெடுப்பது என்பது ஒரு பிரதான அரசியல் கோட்பாடாகும். அப்படிப்பட்ட ஓர் அரசியல் கொள்கையை இன்னமும் நாம் வகுக்கவில்லை. வகுக்கவும் மாட்டோம் என நம்புகின்றோம். ஆனால் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வசிக்கும் இடங்களில் இந்திய ராணுவத்தின் நடமாட்டமும் முகாம்களும் தேவையில்லை எனக் கருதுகின்றோம். அதே வேளை தமிழ் மக்கள் சிங்களக் குண்டர்களால் தாக்கப்படும் எல்லைப்புறங்களிலும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கும் இடங்களிலும் இந்திய ராணுவம் பாதுகாப்பளிக்க வேண்டிய தேவை உண்டு.

கேள்வி: மக்களின் தினசரி வாழ்க்கையில் ராணுவம் தலையிடாமலிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

கிட்டு: ஆம்! எந்த ஒரு நாட்டில், மக்கள், தினசரி வாழ்க்கையில் ராணுவம் தலையிடுவதை விரும்புவார்கள்? பாதுகாப்பு இல்லை எனக் கருதும் இடங்களில் நிலைமை வேறு.

கேள்வி: இந்தியத் தலையீடு நிற்க வேண்டுமானால், இந்தியா இதை ஒரு கெüரவப் பிரச்னையாகக் கருதாமலிருக்க வேண்டுமானால் அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

கிட்டு: இந்தியத் தலையீடு நிற்க வேண்டுமென்று இன்னமும் நாம் கூறவில்லை. 40 ஆண்டு காலமாக பெüத்த சிங்கள இனவாத அரசாங்கங்களால், தமிழர்கள் ஏமாற்றப்பட்ட காரணத்தால், எமது உரிமைகளை வென்றிட, இந்தியாவின் தயவு எமக்கு வேண்டும். ஆரம்பத்தில் நடுநிலையாளனாக இருந்த இந்தியா இன்று ஒப்பந்தத்தின் பங்காளனாக மாறிவிட்டது. இந்து சமுத்திர வல்லாதிக்கத்தை நிலைநாட்டவும் தமது பாதுகாப்பைத் திடப்படுத்தவும் இந்திய ராஜதந்திரிகளின் அவசர முடிவே இவ்வொப்பந்தம். தமிழ் மக்களின் தேசிய விடுதலை வேட்கையின் ஆழத்தையும், அதன் வரலாற்றுப் பின்னணியையும் ஆழமாக உணரத் தவறிவிட்டதால் ஏற்பட்ட பிழை இந்த அவசர ஒப்பந்தம்!

இதன் பின்னர் அமைதிப்படையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இதற்கு முன்பாக புனே வந்த ராஜீவ் காந்தி, ராணுவ மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த வீரர்களைப் பார்க்காமல் சென்றது குறித்து விமர்சனம் எழுந்தது. அதன்பொருட்டு ராஜீவ் காந்தி இன்னொரு நிகழ்ச்சிக்காக வந்தபொழுது ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இலங்கை வடக்குப் பகுதியின் பிரச்னைகளைத் தீர்க்க ராணுவ நடவடிக்கை சரியாகாது என்று, முன்னர் தெரிவித்ததை தீபிந்தர் சிங் நினைவூட்டினார். விடுதலைப்புலிகளுடன் பேசித் தீர்வு காணுவதே சரியாக இருக்குமென்றும், அப்போது அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

சில வாரங்களில், தீபிந்தர் சிங், திருமணம் ஒன்றுக்காக சண்டிகர் செல்லவிருந்தபோது, ஏ.எஸ். கல்கத்திடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தார். பணி மூப்பு மற்றும் பொறுப்பு வழியாக அவர் அந்த உயர்வைப் பெற இருந்தார். அதுமட்டுமன்றி அந்தப் பணியை அவர் மிகவும் விரும்பினார்.

தீபிந்தர் சிங் சண்டிகரில் இருந்தபோதுதான், சர்தேஷ் பாண்டே நியமனமும், ஹர்கிரத் சிங் வெளியேற்றமும் நடைபெற்றது.

இதுகுறித்து பின்னொரு நாளில் ஜெனரல் சுந்தர்ஜியிடம் பேசிக் கொண்டிருந்தபோது இந்தப் பணிமாற்றம் சரியானதுதானா என்று வினவினார். அதற்கு சுந்தர்ஜி, "அவரது பணி மாற்றம் எனக்குப் பிறகு ஏப்ரலில் தளபதியாக வரவிருக்கும் வி.என். சர்மாவின் விருப்பம்' என்று பதிலளித்தார்.

இந்நிலையில் தீபிந்தர் சிங் பிப்ரவரி 28-இல் பணியிலிருந்து ஓய்வு பெற இருந்தார். 1988-ஆம் ஆண்டு, லீப் ஆண்டு ஆனதால் பிப்ரவரி 29-இல் பணி ஓய்வு பெற்றார். இதனையொட்டி அவருக்குப் பல்வேறு பிரிவு உபசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தெற்குப் பகுதி பிரிவின் தளபதியானதால், இந்தியாவின் மிகப்பெரும் பகுதிக்கு அவர் பொறுப்பானவராக இருந்தார். புனேயிலிருந்து யாழ்ப்பாணம் வரை மிகப் பெரிய பரப்புக்கு தளபதி. எனவே பிரிவு உபசார விருந்தில் காலையில்- ஊட்டி வெல்லிங்டன்- மதிய விருந்து பலாலி (யாழ்ப்பாணம்)- இரவு விருந்து சென்னை. மறுநாள் காலை சென்னையில் காலை உணவு- மதியம் திருகோணமலை- இரவு கொழும்பு என்று நான்கு நாட்கள் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொழும்பில் நடைபெற்ற விருந்தில் ஜெயவர்த்தனாவும் கலந்துகொண்டார். அவர் தீபிந்தர் சிங்கிடம், "ஓய்வு பெற்றதும் என்ன செய்யப் போவதாக' கேட்டார். "பஞ்சாபை ஒட்டியுள்ள பாஞ்ச்குலாவில் தங்கப் போகிறேன்' என்று தீபிந்தர் சிங் தெரிவித்தார். "பஞ்சாப், இந்தியாவில் ஆபத்தான இடமாயிற்றே' என்று கருத்து தெரிவித்தபோது, "அது எனது ஊர்; சொந்த மண்! மேலும் கொழும்பை விட பஞ்சாப் பரவாயில்லை' என்றார். ஜெயவர்த்தனா பதில் பேசவில்லை. (தீபிந்தர் சிங் தனது நூலில்)

தீபிந்தர் சிங்கைத் தொடர்ந்து ஏப்ரலில் ஜெனரல் சுந்தர்ஜியும் ஓய்வுபெற்றார்.

125: அன்னை பூபதியின் உண்ணாவிரதம்

நாவலடியில் உள்ள அன்னை பூபதி நினைவு மண்டபம் கிழக்கு மாவட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு என மாவட்டங்கள் இருந்த நிலையில், சிங்களக் குடியேற்றத்தினால் மேலும் ஒரு மாவட்டமாக அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு, சிங்களப் பெயர் வைத்து, "திகாடுமல்லை' என்ற நாடாளுமன்றத் தொகுதியாக உருப்பெற்றது. இந்த மட்டக்களப்பு மாவட்டம் தமிழீழப் பகுதியின் நெற்களஞ்சியமாகும்.

இம்மாவட்டத்தில் அமைதிப்படை 1988 ஜனவரி 2-இல் பெரியதொரு அளவில் தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டையில் புலிகள் என்று கூறி 2500 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அழைத்துப் போகப்பட்டார்கள். இவர்களில் 800 பேர் காங்கேயன்துறை முகாமில் அடைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ளோர் விவரம் அறியக் கிடைக்கவில்லை.

இவர்களில் விடுதலையானவர்கள் வெகு சிலரே. பெரும்பாலோர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தேடுதல் வேட்டையில் இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் வயது வித்தியாசமே இல்லையென்பது வேதனை தரும் விஷயமாகும்.

இதன் ஆரம்பம், "மட்டக்களப்பு நகரின் வெள்ளைப்பாலத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த இரு இளம்பெண்களை விரட்டிப் பிடித்து, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதுதான். இதுவே முதல் சம்பவம்' என்று பழ.நெடுமாறன் தனது நூலில் கூறியுள்ளார்.

இந்தப் பாலியல் பலாத்காரத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று "முறிந்தபனை' நூல் விரிவாக விளக்கியிருக்கிறது. அதாவது பக்.365-லிருந்து 370 வரையும், 377-லிருந்து 412 வரையும் எழுதப்பட்டுள்ள பக்கங்களில் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என வயதுக்கு வராத மற்றும் பேரிளம் பெண்கள் பேட்டியளித்திருக்கிறார்கள். ரத்தமும், நிணமும், கண்ணீரும், கம்பலையும், கதறலும், பைத்தியமும் பிடித்த நிலையுமான சம்பவங்களின் பதிவுகள் இப்பக்கங்களில் பதியப்பட்டுள்ளன.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்களின் நிலை என்ன?

"நமது சமூகத்தில் தன்னுடைய சுய விருப்பத்துக்கு எதிராக ஓர் இளம்பெண்ணின் கன்னித்தன்மை அழிக்கப்பட்டு விடுமானால், அவள் திருமணம் செய்வதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அப்பெண் திருமணமானவளாக இருந்தால், அவள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. ஆகையால், பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் தங்கள் துன்பங்களையும், மனக்காயங்களையும் மெüனமாகத் தமக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு, குறித்த சம்பவங்களைப் பற்றிப் புகார் செய்ய முன் வருவதில்லை.

""பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் சமூகக் களங்கத்தையும் ராணுவ அச்சுறுத்தலையும் மீறி, புகார் செய்தபோது அவர்கள் போராளிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்ததால்தான் இவ்வாறு புகார் செய்வதற்கு தைரியம் வந்திருக்கிறது.. என்று கூறி அவர்கள் மேலும் காவலுக்குட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்'' - என்று "முறிந்தபனை' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கும் மேலாக, கடுமையான வார்த்தைகள் சி.புஷ்பராஜாவின், "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலில் காணப்படுகின்றன. (நாம் மென்மையான விமர்சனத்தை மட்டும் எடுத்துக்கொண்டுள்ளோம்.) பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவது பெண் புலிகள் என்று சொல்லப்பட்டும், ஆயுதம் தேடுகிறோம் என்று பெண்களைத் தீண்டுகிற செயலும் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது (பக்.459 - 460).

இச்செயல்கள் மட்டக்களப்பில் அதிகரித்த நிலையில், தாய்மார்கள் கொதித்து எழுந்தனர். இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் சுருக்கம் வருமாறு:

"திலீபன் வழியைப் பின்பற்றி அன்னையர் முன்னணி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக "உடனடியாகப் போர் நிறுத்தம் மற்றும் புலிகளுடன் பேச்சு வார்த்தை' மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இக் கோரிக்கை பயனளிக்காது போகவே, மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயில் எதிரே அன்னையர் முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பெண்களும் மாணவிகளும் இதில் பெருமளவில் பங்கேற்றனர்'.

அந்தக் கூட்டம் அதிகரிக்கவே, சிங்களக் காவல்படை, சந்தையில் திரண்டிருந்த பெண்களைச் சுற்றிவளைத்துத் தாக்கத் தொடங்கியது. பெண்களும் குழந்தைகளும் பலத்த காயத்துக்கு ஆளானார்கள். கலைந்தோடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அமைதிப் படையினர் இந்த அடக்குமுறையை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய கட்டுப்படுத்தவில்லை.

இதன் எதிரொலியாக, அன்னையர் முன்னணி - அடையாள உண்ணாவிரதத்தைத் தொடர் உண்ணாவிரதமாக்கியது. இதன் எழுச்சி கண்டதும், பிரதமர் ராஜீவ் காந்தி "அமைதிப்படை தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடவில்லை; புலிகளுக்கு எதிராகவே பேராடுகிறது' என்றார்.

அன்னையர் முன்னணியினரைப் பேச்சு வார்த்தைக்கு அமைதிப்படை அழைத்தது. பிரிகேடியர் சந்தேஷ் கலந்துகொண்டு, "புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் - அதன்பின்னரே பேச்சுவார்த்தை' என்றார்.

அன்னையர் முன்னணியினரோ, ""எங்கள் நகைகளைக் கொடுத்து, எங்களைக் காக்க, எமது பிள்ளைகள் வாங்கிய ஆயுதங்களைக் கேட்பதற்கு நீங்கள் யார்'' என்று கேட்டனர்.

பேச்சுவார்த்தை முறிந்தது; பலனில்லை. பிப்ரவரி 10-ஆம் தேதியன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜே.என்.தீட்சித் நேரடியாகப் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டு, "புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்' என்று மீண்டும் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை.

மாறாக, அந்தப் பகுதியை ராணுவம் சுற்றிவளைத்தது. ராணுவ முகாம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 12,13,14 நாள்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்கள் பயப்படவில்லை. எழுந்தும் செல்லவில்லை. மேலும் மேலும் கூடினர்.

அன்னையர் முன்னணியின் ஆலோசகர் கிங்ஸ்லி இராசநாயகம் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். முகாமுக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தையொட்டி, அன்னையர் முன்னணி முன்னிலும் கடுமையான முடிவுகளை எடுத்தது. சாகும்வரை உண்ணாவிரதம் என்கிற முடிவுக்கு வந்தது. யார் முதலில் உண்ணாவிரதம் இருப்பது என்பது குறித்து கடும்போட்டி நிலவியது. இரு பிள்ளைகளை சிங்கள அடக்குமுறைக் கொடுமைக்கு பறிகொடுத்த அன்னை பூபதி முன்னுரிமை கோரினார். அன்னம்மா டேவிட்டும் உரிமை கோரினார். சீட்டுக்குலுக்கிப்போட்டதில், அன்னமா டேவிட் தேர்வானார்.

1988-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் அன்னம்மா மாமாங்கப் பிள்ளையார் கோயில் முன்பாக சாகும்வரை தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அன்னம்மா டேவிட் இறந்தால், அமைப்பாளர்கள் மீது வழக்குப் போடப்படும் என அமைதிப்படை மிரட்டியது. ஆனாலும் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், அவரின் மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் அரசியல் ஆதாயம் தேட, பலவந்தமாகத் தங்களது தாயாரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தி உள்ளார்கள் என்று எழுதி வாங்கப்பட்டது. இந்தக் கடிதத்தை ஆதாரமாகக் காட்டி அன்னம்மா டேவிட் தூக்கிச் செல்லப்பட்டார்.

இதன் பின்னர், அன்னை பூபதி களத்தில் குதித்தார். அவர் உண்ணாவிரதம் இருக்கும் முன்பாக, தனது சுயவிருப்பம் காரணமாக உண்ணாவிரதம் இருப்பதாகவும், கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும், சுயநினைவு இழந்தால் என் குடும்பத்தார் என்னைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், முக்கியமாகத் தூக்கிச் செல்லக்கூடாது என்றும் மரணசாசனம் எழுதிக்கொடுத்தார்.

13-10-1988 அன்று உண்ணாவிரதம் தொடங்கினார். மாமாங்கத் திடல் மக்கள் கூட்டத்தால் நிறைந்தது. அமைதிப்படையைக் குறித்து எங்கும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மற்ற இயக்கங்கள் துணைகொண்டு பூபதி அம்மாளைத் தூக்கிச்செல்லும் முயற்சியும், துப்பாக்கியால் சுட்டும், பதற்றம் ஏற்படுத்தும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.

மட்டக்களப்பை நோக்கி உலகப் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். பூபதி அம்மாளின் உண்ணாவிரதத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்பட்டு, இலங்கைத் தமிழாசிரியர் வணசிங்கா, கிறிஸ்தவ பாதிரியார் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ ஆகியோருடன் ஏற்கெனவே கைதாதி விடுதலைபெற்ற கிங்ஸ்லி இராசநாயகாவும் கைது செய்யப்பட்டனர்.

அன்னை பூபதியின் கணவர் கணபதிப் பிள்ளையை அழைத்து மிரட்டிப் பார்த்தார்கள். அவர் பணியவில்லை. லட்சியம் ஒன்றுக்காக அவர் விருப்பப்பட்டு இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று பதிலளித்தார். பூபதி அம்மாள் 13-10-1988 அன்று, உண்ணாவிரதத்தின் 31-ஆம் நாளில் மரணமுற்றார்.

அவரது இறுதி ஊர்வலம் தடைசெய்யப்பட்டது. அவரது உடலை எடுத்துச்செல்ல அமைதிப்படை, சிங்களக் காவல்படை இரண்டும் முயன்றன. பூபதி அம்மாளின் உடல், அன்னையர் முன்னணியால் மறைத்து வைக்கப்பட்டு, திடீரென ஊர்வலம் தொடங்கியது. நாவலடி கடற்கரை எங்கும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தது. ஒரு பக்கம் கடல்; மறுபக்கம் மக்கள் கடல்!

"தமிழீழப் பெண்டிரின் எழுச்சியின் வடிவமாக பூபதி அம்மாள் என்றும் திகழ்வார்' என்று பழ.நெடுமாறன் அந்தக் கட்டுரையை முடித்துள்ளார்.

126: வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தல்

இந்திய அமைதிப் படையின் பணி குறித்து உலகப் பத்திரிகையாளர்களும், இந்தியப் பத்திரிகையாளர்களும் தங்கள் விமர்சனங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். ஆசியா வீக், டைம், நியூஸ்வீக் ஆகிய சர்வதேசப் பத்திரிகைகளும், இந்தியாவின் இந்தியா டுடே, சண்டே இதழ்களும் வெளியிட்ட செய்திகள் பெரும்பாலும் அமைதிப் படையின் செயல்பாடுகளைக் கண்டித்தன என்றே சொல்லவேண்டும்.

நல்லூர் கந்தசாமி கோயிலில் 50 ஆயிரம் பேர் அடைபட்டு, உணவுக்கும், படுத்துறங்கவும், இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் மக்கள் படும் துன்பங்கள் படங்களுடன் வெளியாயிற்று. சண்டே இதழ் விடுதலைப் புலிகளின் நிலையை மறைமுகமாக ஆதரித்தும், இந்தியா டுடே, இந்திய ராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் அட்டைப் படத்துடன் செய்திக் கட்டுரைகளை வெளியிட்டன. லண்டனில் இருந்து வெளி வரும் பத்திரிகைகளோ, ராஜதந்திர ரீதியில் தங்களது விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டன.

இவ்வாறான செய்திகளின் மூலம் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் வன்னியின் காட்டுப் பகுதியில் முகாம் அமைத்து கொரில்லாத் தாக்குதலைத் தொடர்கிறார்கள் என்றும், பிரபாகரனின் மனைவி மதிவதனி, குழந்தைகள் உள்ளிட்டவர்கள் நல்லூர் கந்தசாமி கோயிலில் மக்களோடு மக்களாக அடைபட்டிருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது.

சாவகச்சேரி சந்தையில் வீசப்பட்ட குண்டுகளால் ஏற்பட்ட நாசமும், யாழ்ப்பாணம் மருத்துவமனை குண்டுவீச்சு அவலமும் உலகின் கண்களுக்குத் தெரியவந்தது.

டைம் பத்திரிகை, அகதி முகாம் மீது குண்டு வீசித் தாக்கியதை படங்களுடன் வெளியிட்டிருந்தது. இந்தியா டுடே, இந்தியச் சிப்பாய் உயிரிழப்பைப் பெரிதாக்கி தனிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இவையெல்லாமாகச் சேர்ந்து, இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் ரகளையை ஏற்படுத்தியது. இதற்கான அரசு பதிலால் உறுப்பினர்கள் கோபமுற்று அவையைவிட்டு வெளியேறினர்.

இலங்கையின் கனவுக் கதாநாயகன் விஜயகுமாரதுங்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் மகள் சந்திரிகாவின் கணவர். வடக்கின் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண பல முயற்சிகளை மேற்கொண்டவர். அரசே எதிர்த்தும் யாழ்ப்பாணப் பயணம் மேற்கொண்டதன் மூலம் சிங்களக் கைதிகள் விடுவிக்கப்படவும் காரணமாக இருந்தவர். அப்போது கிட்டு, யாழ் தளபதியாக இருந்து விஜயகுமாரதுங்காவையும் புத்த பிக்குகளையும் வரவேற்றார்.

விஜயகுமாரதுங்காவின் அரசியல் மற்றும் வடக்கு-தெற்குக்குப் பாலமாகச் செயல்படும் தன்மைகளால் வெறுப்பு கொண்ட ஜே.வி.பி.யினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். (பிப்ரவரி 16, 1988)

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ராஜீவ் காந்திக்கு அடுத்தடுத்து எழுதிய கடிதங்கள் மற்றும் அவ் இயக்கத்தினர் அளித்த பேட்டிகளின் அடிப்படையில், இந்திய உளவுத்துறை அவர்களை மிகவும் பலவீனம் அடைந்த ஒரு குழுவாகக் கணிக்க முற்பட்டது. இந்தக் கணிப்பின் விளைவாக தில்லித் தலைமையும் விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியதுடன், புலிகளுக்கு எதிரான இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் இறங்கியது. இந்தக் கூட்டமைப்புக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பை தலைமை ஏற்க வைத்தனர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்காக அவசரம் அவசரமாக நாடாளுமன்றத்தில் 13-வது திருத்தத்தைக் கொண்டுவர இலங்கை அரசு முனைப்புக் காட்டியது. இந்த நெருக்கடிக்கு மற்றொரு காரணம், இலங்கையின் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டிய நிலை.

மற்ற பகுதிகளுக்குத் தேர்தல் நடந்து, வடக்கு-கிழக்கில் தேர்தல் நடக்கவில்லையென்றால், அது ஜெயவர்த்தனாவுக்கு மிகப் பெரிய தலைவலி ஆகிவிடும். எனவே, வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி பெறுவதைவிட தேர்தலை நடத்துவது என்பது அவரது கட்சிக்கும் ஆட்சிக்கும் அவசியமான ஒன்றாக இருந்தது. இதன்பின்னர், வரப்போகும் அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இத் தேர்தல் அவசியமாயிற்று.

இதேபோன்ற ஒரு நெருக்கடி இந்தியாவிலும் இருந்தது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இறந்தபின்னர் இலங்கை இனப் பிரச்னையில் தமிழக அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமும், தொடர் ஆளுநர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் தேர்தல் நடத்தவேண்டியிருந்தது.

அதன் அடிப்படையில் அமைதிப் படை, ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரை முன்னிறுத்த முனைந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினருக்குப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தேர்தலில் நிற்க முழுமையான பாதுகாப்புக்கும், தேர்தல் செலவுகளுக்குப் பண உதவியும் செய்வதுடன், பாதுகாப்புக்கு என்று ஆயுதங்களும் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டதாகத் தகவல்கள் உண்டு.

எனவே, ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரும், ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினருடன் உடன்பாடு செய்துகொண்டு தேர்தலில் போட்டியிட முன்வந்தனர்.

இலங்கைத் தேர்தல் விதிப்படி, தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப். தங்களை உடனடியாகப் பதிவு செய்து கொண்டன. ஈரோஸ், விடுதலைப் புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, பிளாட், டெலோ அமைப்புகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. டெலோ பின்னாளில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். கூட்டணியுடன் சேர்ந்துகொண்டது. (ஆதாரம்: அசைன்மெண்ட் ஜாஃப்னா -லெப்டி.ஜெனரல் சர்தேஷ் பாண்டே, பக்.79)

யாழ்ப்பாணவாசிகள் இந்தத் தேர்தலில் பங்கு பெறப்போவதில்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர். அவர்களைச் சம்மதிக்க வைக்க இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் யாழ்ப்பாணத்தில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். கூட்டத்தில் மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றவேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டது.

பொதுமக்களில் சிலர் எழுந்து, ""இந்தத் தேர்தலில் பல்வேறு போராளிக் குழுத் தலைவர்களை அழைத்துப் பேசும்போது, விடுதலைப் புலிகளை மட்டும் ஏன் அழைத்துப் பேசவில்லை'' என்று கேள்வி எழுப்பினர்.

தீட்சித் தரப்பில் பேசியவர், ""தேர்தல் என்று வரும்போது, இலங்கைத் தமிழர்கள் எனக் குறிப்பிடும்போது அது யாழ்ப்பாணத் தமிழர்களை மட்டும் குறிக்காது'' என்று விளக்கினார்.

""அப்படியென்றால் இந்தக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவது ஏன்'' என்று கூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த இந்திய அதிகாரிகள், ""இந்த மேடையிலேயே விடுதலைப் புலிகளுக்கும் அழைப்பு விடுவதாக எடுத்துக் கொள்ளலாம். அவர்களைத் தேர்தலில் பங்கேற்குமாறு கேட்டு வருகிறோம். அவர்கள் சுயேச்சைகளை ஆதரித்தாலும் ஆதரிக்கலாம்'' என்றார்.

இந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக சிவானந்த சுந்தரம், ஈரோஸ் பாலகுமாரி உள்ளிட்டோர், ""இது நம்பிக்கைத் துரோகமாகவும், ஏமாற்றுவித்தையாகவும் கருதப்படும்'' என்று வருத்தம் தெரிவித்தனர். (மேற்கூறிய நூல் பக்.79)

தமிழீழப் பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான அமைதியான சூழ்நிலை இல்லை என்றும், தேர்தலை நடத்துவதற்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டுத் தேர்தலை நடத்தும்படியும் தமிழீழத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் பொதுநல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் இலங்கை-இந்திய அரசுகளுக்குக் கோரிக்கை வைத்தன.

தேர்தலில் கடைசி நேரத்தில் நியமன பத்திரங்களைத் தாக்கல் செய்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்றை நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்றுதான் அறிக்கை வெளியிட்டது.

ஆளும் ஜெயவர்த்தனா கட்சியின் கிழக்கு மாகாண எம்.பி.க்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தேர்தலுக்கான சூழ்நிலை இல்லை என்று ஜெயவர்த்தனாவிடம் நேரடியாகக் கூறினர்.

""அம்பாறை மாவட்டத்தில் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட 24,000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. அவர்களில் 11,000 பேருக்கு மட்டும் உடனடியாக நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.'' (வீரகேசரி-5.11.88)

ஒப்பந்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏராளமான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுவிட்டார்கள். திருகோணமலை புல்மோட்டையில் ஏராளமான தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எல்லையில் உள்ள கெüளியாமடுவில் சிங்களக் குடியேற்றங்கள் பெருமளவில் நடந்துள்ளன. (வீரகேசரி-22.10.88). தினசரி பத்திரிகைகள் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டன.

அது மட்டுமல்ல-

""கிழக்கு இலங்கையில் உள்ள மக்களில் கலவரங்களினால் தம் இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்னும் தமது இடங்களுக்குச் செல்ல முடியாதவாறு இருக்கின்றனர்.

தமிழ் மக்களுக்குத் தர வேண்டிய அதிகாரங்கள் வரையறுக்கப்படாது, வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை இலங்கை அரசியல் சட்டத்தின் கீழ் நிரந்தரமாக்காது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் பொருள் இல்லையென்றும்,

நெருக்கடி நிலையை நீக்கி அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும்,

தேர்தலுக்கு முன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, விடுதலைப் புலிகளை அழைத்துப் பேசவேண்டும் என்றும்,''

தமிழ்மக்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

127: தேர்தல் குளறுபடிகள்!

வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளை அடுத்து, வட மாகாணத்தில் யாரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவில்லை. தேர்தல் பணிபுரிய, அதிகாரிகளாகப் பணியாற்றவும் யாரும் முன்வரவில்லை. கொழும்பிலிருந்து விமானத்தின் மூலம் சிங்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர், அமைதிப்படை பாதுகாப்புடன் கடைசி நிமிடத்தில் மனு செய்தனர் (சஞ்சீவி வார இதழ்-8.10.88).

ஈபிஆர்எல்எஃப் குழுவினர் மனுத் தாக்கல் செய்யும் வரை (வேட்பு மனுத் தாக்கல் செய்ய இறுதிநாள் 10.10.1988) காத்திருந்த அமைதிப்படை, வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்துவிடாதபடிக்கு, அந்தப் பகுதியில் திடீரென ஊரடங்கு அமல்படுத்தி, அரசு அலுவலகத்தருகே நெருங்கவிடாதபடியும் செய்தது பெரும் புதிராக இருந்தது.

யாழ் தவிர்த்து இதரப் பகுதிகளின் நிலை என்ன?

"கடந்த ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை வவுனியா பகுதியில் உத்தியோகப் பற்றற்ற ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருந்தது. நகரின் உட்பிரவேசிக்கவோ, உள்ளிருந்து வெளியேறவோ எவரும் அனுமதிக்கப்படவில்லை, கச்சேரி (கலெக்டர் அலுவலகம்) மற்றும் நகரின் சுற்றுப்புறங்கள் எங்கணும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன' என்று உதயன் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினர் வவுனியா, மன்னார் பகுதிகளில் போட்டியிட முன்வந்த போதிலும் காலதாமதமாக வந்ததாகக் கூறி அவர்களின் மனுக்கள் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன. (வீரகேசரி-12.10.1988)

வவுனியாவில் வேட்புமனுவை ஏற்பதற்கென கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகளிடம், ராணுவ வாகனத்தில் வந்திருந்த ஈஎன்டிஎல்எஃப் நிர்வாகி, 7 பேருக்கான வேட்புமனுக்களைத் தான் ஒருவராகவே தாக்கல் செய்துவிட்டு, அதே ராணுவ வாகனத்தில் திரும்பிச் சென்றார். இதுவும் உதயன் பத்திரிகை செய்திதான்.

மனுத்தாக்கல் செய்யவந்தவர்கள் யாருமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படாதது மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. மனுத்தாக்கல் செய்த நபர் யார் என்றாவது காண்பியுங்கள் என்று பத்திரிகையாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நின்று கோரிக்கை வைத்தனர்; கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இவ்வாறு தேர்தல் நடைமுறைகளைப் பற்றிய உண்மைத் தகவல்களை அறியச் செய்த காரணத்திற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த உதயன் நாளிதழுக்குத் தேர்தல் முடியும் நாள் வரை தடை விதிக்கப்பட்டது.

இதே போன்று கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழுக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பகுதிகளில் தேர்தல் முடியும்வரை விநியோகிக்கத் தடை விதிக்கப்பட்டது. அமைதிப்படையின் தணிக்கைக்கு உட்படாத பத்திரிகை வீரகேசரிதான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. (வீரகேசரி கொழும்பில் அச்சாகி வெளிவரும் தினசரி ஆகும்).

கிழக்குப் பகுதிகளில், தேர்தல் நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. வேட்பாளர்களுக்கான சுவரொட்டிகள் தமிழ்நாட்டில் அச்சடிக்கப்பட்டு, விமானம் மூலம் வடக்கு-கிழக்கு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. கொடிகள், தோரணங்களும் அப்படியே.

இலங்கைத் தேர்தல் சட்டப்படி இதுபோன்ற நடவடிக்கைகள் குற்றமாகும். வேட்பாளர் வண்டியில் மட்டுமே கொடிகட்ட அனுமதியுண்டு. இந்தியாவில் உள்ள நடைமுறையின்படி அமைதிப்படை கடைப்பிடித்ததால் ஏற்பட்ட தவறு இது. கொழும்புப் பத்திரிகைகள் அனைத்துமே கண்டித்தன.

ஈபிஆர்எல்எஃப் அணியினர் இந்திய ஹெலிகாப்டரில் பறந்து சென்று பிரசாரப் பணிகளை மேற்கொண்டதும் விமர்சனத்துக்குள்ளானது.

கிழக்குப் பகுதி மக்கள் வாக்களிப்பதற்காக 576 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், இதில் தேர்தல் பணியாற்ற 5,000 அலுவலர்கள் தேவைப்படுவர் என்றும், இவ்வளவு அலுவலர்களைக் கொழும்பிலிருந்து வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல இயலாது என வாக்குச்சாவடி எண்ணிக்கைகளைத் திடீரெனக் குறைத்தனர். கொழும்பிலிருந்து வந்திருந்த 600 அலுவலர்களுக்கு ஏற்ப 324 வாக்குச் சாவடிகள் மட்டுமே இயங்கும் எனவும் அறிவிப்பு கூறியது.

252 வாக்குச் சாவடிகள் ரத்து செய்யப்பட்டதால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வேண்டிய வாக்காளர்கள் வேறு எந்த வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பது எனத் தெரியாமல் குழம்பினர்.

மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மூலம் அடையாள அட்டை வாக்காளர்களுக்கு உரிய நேரத்தில் விநியோகிக்கப்பட்டிருக்கவேண்டும். மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் பணியாற்ற மறுத்துவிட்ட காரணத்தால் வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டைகள் வழங்கப்படவில்லை. அந்த வாக்காளர் அட்டைகள் தேர்தல் அதிகாரிகளால் ஈபிஆர்எல்எஃப் அணியினரிடமே வழங்கப்பட்டன. அதை அவர்கள் தேர்தல் தினத்தன்றே விநியோகித்தனர். தேர்தல் சட்டத்தை மீறி வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்தனர்.

தேர்தலுக்குச் சில தினங்கள் முன்பாகவே தேர்தல் நாள் வரை பாதுகாப்புக் காரணம் கூறி கிழக்கு மாகாணத்துக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உள்ளூர் போக்குவரத்துச் சேவையும் சீராக இயங்கவில்லை. அசம்பாவித சூழ்நிலையால் இருப்பிடத்தைவிட்டு இடம்பெயர்ந்து வெளியூர்களில் சென்று இருந்தவர்கள் வாக்களிக்கச் செல்ல முடியவில்லை.

தேர்தல் நாளன்று, பெரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் வாகனங்கள் கூட இயங்கவில்லை. போக்குவரத்துச் சேவை முற்றாகச் சீர்குலைந்து இருந்தது. அம்பாறையில் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் வரையில் விற்கப்பட்டது. ஓடிய தனியார் வாகனங்களும் பயணக்கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தின (வீரகேசரி-23.11.88).

பாதுகாப்புக் காரணம் கருதி திருகோணமலையில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் என்பவற்றில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வாக்களிக்க விரும்பியோர், போக்குவரத்து வசதியும் இல்லாமல் எங்கு சென்று வாக்களிப்பது என்றும் தெரியாமல், வாக்காளர் அட்டையும் இல்லாமல் பல மைல் தூரத்திற்கொன்றாக இருக்கும் வாக்குச்சாவடிகளில் எந்த வாக்குச் சாவடியில் தாம் வாக்களிக்கவேண்டும் என்பதைத் தேடியலைந்து கண்டுபிடித்து, அங்கு தமது வாக்கு இருப்பதை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து, உறுதிசெய்துகொண்டுதான் வாக்களிக்க வேண்டியிருந்தது.

இதனால் காலை 7 மணிக்கே வாக்களிப்பு ஆரம்பமானபோதிலும், வாக்களிக்க விரும்பிய வாக்காளர்கள் தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களைத் தேடிக் கண்டுபிடித்து காலை 10 மணிக்கு மேல்தான் வாக்களிப்பு நிலையங்களைச் சென்று அடைந்தனர்.

இதனால் அநேகமாக எல்லா வாக்குச் சாவடிகளிலும் காலை 10 மணி வரை வாக்காளர்கள் ஒரு சிலர்தான் வாக்களித்தனர். அசம்பாவிதம் காரணமாக இடம்பெயர்ந்து இருந்த வாக்காளர்கள், தாம் தங்கியிருக்கும் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க ஜனாதிபதி தேர்தலில் அனுமதிப்பது போன்ற வசதிகள் எதுவும் இத் தேர்தலில் செய்யப்படவில்லை.

ஒப்புக்கு ஒரு கண்துடைப்புத் தேர்தல் நடத்தப்படுகிறது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அதற்கு முன் நடைபெறாத அளவுக்குக் குளறுபடியான ஒரு தேர்தலை அமைதிப் படையின் உதவியுடனும், மேற்பார்வையுடனும் ஜெயவர்த்தனா அரசு நடத்த முற்பட்டது.

128: வரலாறு காணாத தில்லுமுல்லு!

கிராமப்புறங்களில் 35 சதவீத வாக்குகள்தான் போடப்பட்டுள்ளன என்று செய்தி வெளியாயிற்று.

ஆனால், வரலாறு காணாத அளவுக்கு மக்கள் பெருவாரியாகச் சென்று வாக்களித்தனர் என்றும், மட்டக்களப்பில் 80 சதவீதம், திருகோணமலையில் 53 சதவீதம், அம்பாறையில் 55 சதவீதம் மக்கள் வாக்களித்தனர் என்றும் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது.

""தேர்தலில் பெருவாரியாக மக்கள் வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழ் மக்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். விடுதலைப் புலிகளின் வன்முறைப் பாதையை முற்றாக நிராகரித்துவிட்டார்கள்'' என்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்திய அமைதிப்படை பிரசாரம் செய்ய ஆரம்பித்தது.

மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் முடிவுகளின்படி 1,72,536 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 77 வாக்குச் சாவடிகள்தான் அமைக்கப்பட்டிருந்தன. இதன்படி ஒரு வாக்குச் சாவடியில் சராசரி 2,240 வாக்குகள் போடப்பட்டிருக்க வேண்டும்.

தேர்தல் வாக்களிப்பு காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணி வரை (ஒன்பது மணி நேரம்) நடைபெற்றது.

பெரும்பாலான வாக்காளர்கள் காலை 10 மணிக்கு மேல்தான் தாம் வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடி எது என்பதை அறிந்து அங்கு செல்ல முடிந்தது. 2,240 பேர் வாக்களிப்பதற்கு 7 மணியிலிருந்து இடைவிடாது வாக்களிப்பு நடைபெற்று, நிமிடத்துக்கு 4 வாக்காளர்களுக்கு மேல் வாக்களித்திருக்க வேண்டும். எந்த வகையிலும் இது சாத்தியமானதல்ல.

மட்டக்களப்பு மாவட்டத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு மூன்று கட்சிகளின் சின்னங்களையும் நாற்பத்திரண்டு வேட்பாளர்களின் பெயர்களையும் கொண்டிருந்தது. சுமார் ஒன்றரை அடி நீளமானது. அந்த வாக்குச்சீட்டில், வாக்காளர்கள், முதலில் தாம் விரும்பிய கட்சிக்கு, கட்சியின் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதன் பின்னர் 42 பெயர்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலிலிருந்து தாம் விரும்பும் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும்.

பிறகு, இரண்டாவதாக விரும்பும் மாற்று வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். அதன்பின் ஒன்றரை அடி நீளமான அந்த வாக்குச்சீட்டைக் குறைந்த பட்சம் நான்காக மடித்து வாக்குப் பெட்டிக்குள் போடவேண்டும். இவற்றுக்கு மட்டும் குறைந்தபட்சம் 30 வினாடிகளாவது தேவைப்படும்.

அது தவிர, வாக்காளர்களுக்கு முன்கூட்டியே வாக்காளர் அட்டைகள் வழங்கப்படாததால் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று அங்குள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சரிபார்த்துப் பின்னர் வாக்குச் சீட்டை வாங்கிக்கொண்டு, கை விரலுக்கு மை பூசிக்கொண்டு வாக்களிக்கத் தயாராகக் குறைந்தபட்சம் 45 வினாடிகளாவது தேவை.

வாக்காளர் அட்டை கிடைக்காத ஒருவர் தன்னுடைய வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று, தன் பெயரையும் வசிப்பிடத்தையும் கூறினால் வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை வழங்குபவர் தாம் வைத்திருக்கும் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடித்து உறுதி செய்ததன் பின்புதான் வாக்குச் சீட்டை வழங்குவார். சராசரி 2,000 பேர் கொண்ட வாக்காளர் பட்டியலிலிருந்து வாக்காளர் பெயரைக் கண்டுபிடிக்கப் பல நிமிடங்கள் ஆகும்.

""வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கையில் கிடைக்காததால் எந்த வாக்குச் சாவடியில் வாக்களிப்பது என்று தெரியாமல் ஒவ்வொரு வாக்குச் சாவடியாகச் சென்று பார்த்து, அங்குள்ள வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இருக்கிறதா என்று அவர்கள் பார்க்க வேண்டியிருந்தது'' என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் ரீட்டா செபஸ்தியான் தெரிவித்துள்ளார். (20.11.88-இந்தியன் எக்ஸ்பிரஸ்)

எப்படிப் பார்த்தாலும், இயந்திரகதியில் இயங்கினாலும் கூட ஆக, குறைந்தபட்சம் ஒரு வாக்கைப் போடுவதற்கு ஒரு நிமிடத்துக்கும் அதிகமாகத் தேவை.

அப்படி இயந்திரகதியில் வாக்களித்தாலும் கூட மட்டக்களப்பில் உள்ள 77 வாக்குச் சாவடிகளிலும் அதிகபட்சம் 41,580 வாக்குகள்தான் போடப்பட்டிருக்க முடியும் என்பது விடுதலைப் புலிகளின் வாதமாக இருந்தது.

விடுதலைப் புலிகளின் வெளியீட்டில் மேலும் கூறுவதாவது: கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவுகள் தரும் புள்ளி விவரங்களின்படி 15 வினாடிக்கு ஒரு வாக்கு போடப்பட்டிருக்க வேண்டும். ஒரு வாக்குச் சாவடிக்கு 2,240 வாக்காளர் என்பது சராசரிதான். வாக்குச் சாவடிகள் அனைத்திலும் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரே அளவினதாக இல்லை. சில வாக்குச் சாவடிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளும் சில வாக்குச் சாவடிகளில் 3,000-க்கும் அதிகமான வாக்குகளும் இருந்திருக்கின்றன.

எனவே, வாக்காளர்கள் எண்ணிக்கை சராசரிக்கு அதிகமாகவுள்ள வாக்குச் சாவடிகளில், வாக்களிப்பு வேகம் 1 வாக்குக்கு 10 வினாடிகளாவது இருந்திருக்க வேண்டும்.

கை விரலுக்கு மை பூசாமல், வாக்காளர் பட்டியலைப் பார்த்து வாக்குச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளாமல் வாக்குச் சீட்டுகளை டேபிளில் மொத்தமாக அடுக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்து ஒரு ஆள் வேகம் வேகமாக வாக்குச் சீட்டை அடையாளமிட்டு மடித்துப் பெட்டியில் போடுவதானாலும் 10 வினாடிக்கு மேல் தேவை.

தேர்தலைப் பார்வையிட இந்திய அரசு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டு ஏற்கெனவே "செட்டப்' செய்யப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் வாக்கு போடப்பட்ட விகிதத்தையும் வேகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாலும் அங்குகூட நிமிடத்துக்கு 2 வாக்குகள்கூட போடப்படவில்லை.

இந்திய அரசு அதிகாரிகளினால் வாக்களிப்பைப் பார்வையிட கொழும்பிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ரீட்டா செபஸ்தியான் கூற்றுப்படி, திருகோணமலை, ஜமாலியா முஸ்லிம் பாடசாலை வாக்களிப்பு நிலையத்தில் காலை 7 மணி முதல் 11.20 வரை 500 வாக்குகள்தான் போடப்பட்டிருந்தன. அதாவது, ஒரு நிமிடத்துக்கு 2 (260 நிமிடத்துக்கு 500) வாக்குகள்கூடப் போடப்படவில்லை. ஒரு வாக்களிக்க (260/500-.52 நிமிடம்) 30.3 வினாடிகள் எடுத்திருக்கிறது.

மட்டக்களப்பில் கொண்டாவில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சில் மாலை 3.10 மணி வரை 1,100 வாக்குகள் போடப்பட்டிருந்தன. அதாவது 490 நிமிடங்களில் 1,100 வாக்குகள் போடப்பட்டிருந்தன. ஒரு வாக்களிக்க (490/1, 100-.45 நிமிடங்கள்) 27 வினாடிகள் ஆகியிருக்கின்றது.

இந்தியத் தூதரக அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்ட வீரகேசரி பத்திரிகை நிருபர் எஸ்.என்.பிள்ளை எழுதியிருப்பதன்படி, மட்டக்களப்பு உப்போடை வாக்குச் சாவடியில் மாலை 2.30 மணி வரை 860 வாக்குகள் போடப்பட்டிருந்தன. அதாவது 450 நிமிடங்களில் 860 வாக்குகள் போடப்பட்டிருந்தன. ஒரு வாக்களிக்க (450/860-.52 நிமிடங்கள்) 31.2 வினாடிகள் ஆகியிருக்கின்றது.

மட்டக்களப்பு, புத்தூர், விக்னேஸ்வரா வித்யாலய வாக்களிப்பு நிலையத்தில் பகல் 12 மணி வரை 205 வாக்குகள் மட்டும்தான் போடப்பட்டிருந்தன. ஒரு வாக்களிக்க (300/205-1.46 நிமிடங்கள்) 87 வினாடிகள் எடுத்திருக்கின்றது.

மக்கள் ஆர்வமாக பெருவாரியாக வந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக இந்திய அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று காட்டப்பட்ட வாக்குச் சாவடிகளிலேயே ஒரு வாக்களிக்க 87 வினாடி, 31 வினாடி, 30 வினாடி என ஆகியிருக்கிறது என்றுதான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

10 முதல் 15 வினாடிக்குள் ஒவ்வொரு வாக்கும் இடைவிடாது போடப்பட்டிருந்தால்தான் தேர்தல் முடிவுகளில் அறிவிக்கப்பட்ட 1,72,536 வாக்குகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் போடப்பட்டிருக்க முடியும். எந்த விதத்திலும் அது சாத்தியமில்லை.

மேற்படி தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய மக்கள் அளித்துள்ள வாக்குகள் பற்றிய முடிவுகளின்படி-

மட்டக்களப்பு மாவட்டத்தில்....

வெற்றி பெற்ற ஈபிஆர்எல்எஃப்-க்கு கிடைத்த மொத்த வாக்குகள் 2,78,179 (99.7%)

வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 639 (.22%)

73.58 சதவீதம் வாக்குகளைப் பெற்ற ஈபிஆர்எல்எஃப் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்குக் கிடைத்த வாக்குகள் வீதம் -99.7%

24.4 சதவீதம் வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் வீதம் -22%.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் 73.58 சதவீதம் வாக்குகளைப் பெற்ற ஈபிஆர்எல்எஃப்-க்கு வேட்பாளர்களுக்காக அளிக்கப்பட்ட வாக்குகளில் 99.7 சதவீதம் கிடைத்திருக்கும். அதே நேரம், 24.4 சதவீத வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக (0.22) கால் சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

ஈபிஆர்எல்எஃப் வேட்பாளர்களின் வாக்குகள் முழுக்க முழுக்க போடப்பட்டிருக்கிறது. அதே வேளை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் வாக்குகள் போடப்படவில்லை.

129: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு!

நடந்து முடிந்த தேர்தல் குறித்து, விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

""இத் தேர்தல் பற்றி இலங்கையின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவருமான கே.டபிள்யு. தேவநாயகம் விடுத்திருந்த அறிக்கையில்,

* கிழக்கு மாகாணத்தில் கொலை, பயமுறுத்தல் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் மேலோங்கி இருந்தபடியால் தேர்தல் பிரசாரத்தில் எம்மால் ஈடுபட முடியவில்லை. இத்தகையதொரு சந்தர்ப்பத்தில் நடந்து முடிந்துள்ள மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை வைத்து ஜனநாயகம் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது கவலை தரக்கூடியதாக இருக்கிறது.

* கிழக்கின் இன்றைய சூழ்நிலை குறித்து அரசு மேலிடத்தின் கவனத்திற்கு விரிவாக எடுத்துரைப்போம். வேட்பு மனு பெறப்பட்ட முறை பற்றியும், அரசாங்க அதிபர் (மாவட்ட கலெக்டர்) அம் மனுக்களைப் பெறக்கூடிய நிலையில் இல்லை என்பது பற்றியும் மேலிடத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

* ஆனால், இத்தனைக்கும் மத்தியில் தேர்தல் நடத்தப்பட்டது. இத் தேர்தல் முடிவுகளை வைத்தும் கிழக்கின் அரசியல் மற்றும் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்து கொள்ளாமலும் மக்கள் ஜனநாயகத்தை விரும்புகின்றனர் என்று கருத்து வெளியிடுவது பொருத்தமானது அல்ல'' என்று கூறியிருக்கிறார்.

அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் போட்டியிட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். போன்றே 17 இடங்களைக் கைப்பற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஜனாப் எம்.எச்.எம். அஷ்ரப் தேர்தல் பற்றி விடுத்த அறிக்கையில் ""முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை இந்திய-இலங்கை ஒப்பந்தம் உள்ளடக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டுமானால் கிழக்கு மாகாணத்திலிருந்து ஐக்கிய தேசியக்கட்சியை (ஜெயவர்த்தனா கட்சி) தோற்கடிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள மற்றுமொரு அறிக்கையில்,

""கிழக்கில் குறிப்பிட்ட அமைப்பொன்று தனித்துவமாகப் போட்டியின்றித் தெரிவாகும் நிலையைத் தவிர்க்கவே நாம் தேர்தலில் பங்கு கொள்வதென்று தீர்மானித்தோம். இதன் மூலம் புலிகளின் குரலும் ஒலிக்கும். அதேநேரம், முஸ்லிம்களின் உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்'' என்றும் கூறப்பட்டுள்ளது. (18.10.88 வீரகேசரி).

அதுமட்டுமல்ல,

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களின் அபிலாஷைகளைச் சேர்த்துக் கொள்ளாமல் அவர்களைக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக்கிய அரசின் திட்டங்களை முறியடிக்கக் கூடிய எமக்குள்ள ஒரே வழி தேர்தலில் போட்டியிடுவதாகும். இந்த நிலைமைகளிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தைக் காப்பாற்றவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

இந்தியாவின் சொல்லுக்கு தலையாட்டக் கூடிய ஓர் ஆட்சியில் முஸ்லிம்களின் குரல் ஒலித்திருக்க முடியாது. தமிழர் சமூகத்தின் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் விடுதலைப் புலிகளின் நியாயங்களும் கொச்சைப் படுத்தப்பட்டிருக்கும். நாம் போட்டியிடாவிட்டால் வடக்கு கிழக்கு மாகாண சபை ஓரங்க நாடகமாகியிருக்கும்'' என்றும் இன்னொரு அறிக்கையை வெளியிட்டதன் மூலமாகத் தனது நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்திருக்கிறது. (25.10.88 உதயன் நாளிதழ்).

மேற்கண்ட அறிக்கைகளிலிருந்து,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அது கடுமையாக எதிர்க்கிறது என்றும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் முஸ்லிம்களை அடிமையாக்கும் இந்தத் திட்டங்களை முறியடிக்கவே வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட்டது என்பதும் தெளிவாகிறது.

எனவே, கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப்.க்கு நிகராக 17 இடங்களைக் கைப்பற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸýக்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானவை என்பதும், புலிகளின் நடவடிக்கைகளை மதிப்பவை, வரவேற்பவை என்பதும் தெளிவாகின்றது'' என விடுதலைப் புலிகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், வடக்கு மாகாணத்தில் புலிகளின் வேண்டுகோளை ஏற்று எவரும் தேர்தலில் போட்டியிட முன் வரவில்லை. அங்கு தேர்தலை நடத்தவும் இந்திய அரசுக்கு துணிவு இருக்கவில்லை. எனவேதான், வடக்கு மாகாணத்தில் தாங்கள் தயார் செய்து வைத்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரைத் தவிர வேறு யாரையும் தேர்தலுக்கு நியமனப் பத்திரம் தாக்கல் செய்யாதவாறு இந்திய அமைதிப் படை பார்த்துக்கொண்டது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரிடம் மட்டும் நியமனப் பத்திரங்களை ஏற்றுக் கொண்டு தேர்தல் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய குறிப்பிட்ட கால எல்லை வரை நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யும் தேர்தல் அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் உத்தியோகபூர்வமற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேர்தல் அலுவலகத்துக்கு அருகே எவரையும் செல்லவும் இந்தியப் படை அனுமதிக்கவில்லை.

தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர், ஒட்டுமொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 44 வேட்பாளர்களை நிறுத்தினர். அங்கு 34 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கையில், அவர்களுக்கு 4.5 சதவீத இடத்தைதான் ஒதுக்கினர்.

அதாவது, 24 சதவீத மக்களைக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வேட்பாளர்களை நிறுத்திய ஈபிஆர்எல்எஃப் அமைப்பு ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரையே நிறுத்தினர். 29 சதவீத மக்களைக் கொண்ட முஸ்லிம்களுக்குத் திருகோணமலையில் 13 வேட்பாளர்கள் ஈபிஆர்எல்எஃப் சார்பில் நிறுத்தப்பட்டனர். அங்கு முஸ்லிம் வேட்பாளரே நிறுத்தப்படவில்லை. அதேசமயம் 42 சதவீதமுள்ள முஸ்லிம்கள் உள்ள அம்பாறையில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினர் தேர்தலுக்கு முன்னர் வெளியிட்ட பிரசுரமொன்றில் ""வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியை ஆதரிப்பதன் மூலம் விகிதாசார முறையிலான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்'' என்று கூறியிருக்கின்றனர்.

இவர்களது வேண்டுகோளை ஏற்று முஸ்லிம் மக்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.இனருக்கே வாக்களித்திருந்தால் இரண்டே இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகள்தான் மாகாண சபைப் பிரதிநிதிகளாகி இருப்பர். ஆனால் தற்போது அவர்களுக்குக் கிடைத்துள்ள 17 இடங்கள் கிடைத்திருக்காது.

கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றம் தடுக்கப்படவேண்டும் என்பது தமிழர்களின் உயிர்மூச்சான கொள்கையாகும். அதற்கு மாறாக 1976-ல் கிழக்கு மாகாணத்தில் சிங்களர்களுக்கென (குடியேற்றவாசிகளுக்கு) ஒரு தொகுதியை உருவாக்கத் தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை வைத்தது.

இன்று, தேர்தல் வெற்றி வாய்ப்பையும், பதவியையும் பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினர் சிங்கள வேட்பாளர்களை தமது கட்சியில் வேட்பாளராக நிறுத்தியதுடன் சிங்களவர்க்கு, தமிழ்ப் பகுதியில் அமைச்சர் பதவியையும் கொடுத்து மக்களிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது'' என்றும் கூறப்பட்டுள்ளது.

இங்கு குறிப்பிடவேண்டிய முக்கியமான முரண்பாடு என்னவென்றால், வடக்கு-கிழக்குப் பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு முன்பாக, இலங்கையின் இதரப் பகுதிகளில் 1988 ஏப்ரலில் தொடங்கி ஜூன் 28-க்குள் முடிவு பெற்றது என்பதாகும். ஒரு கட்டாயத்தின் பேரிலேயே வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தல் என்பது நடைபெற்றது என்பதை அறிவது இங்கு அவசியமாகும்.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்குபெறும் என்றே இந்திய அமைதிப்படை எதிர்பார்த்தது.

ஆனால் அவ்விருப்பம் வெற்றிபெறாத போதிலும், அமைதிப்படையினரின் வற்புறுத்தலின் பேரில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் விடுத்த அறிக்கையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகத் தமிழ் பேசுகிற மக்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளைத் திடப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒரு வழியாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஜனநாயகச் செயல்முறையைத் தூண்டுவற்கான முயற்சிகளுக்குத் தமது ஆதரவை அளிக்கும்படி மக்களை வேண்டியது. (ஆதாரம்: இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும் -கலாநிதி ஆ.சு.மனோகரன், தமிழ் டைம்ஸ் 15 நவம்பர் 1988- மேற்கோள் காட்டி)

130: இடைக்கால அரசு!

ஈழத்தில் புலிகளுக்கும் இந்திய அமை திப் படையினருக்கும் உக்கிரமாகப் போர் நடந்து கொண்டிருந்த சூழ்நி லையில், சென்னையில் இருந்த கிட்டுவி டம் இந்தியாவின் ராஜதந்திரிகள் சமாதா னப் பேச்சு நடத்திக் கொண்டிருந்தனர் என்பதும் உண்மையே. இவ்வகையான ஒரு பேச்சும், திட்டமும் கிட்டுவிடம் சொல்லப்பட்டு, அந்தத் தகவலை எடுத் துச் சொல்ல, கிட்டுவிடம் இருந்த போராளி ஜானி அனுமதிக்கப்பட்டார்

பிரபாகரன் இருக்குமிடத்தை அறியும் ஒரு முயற்சியாக இந்த ஏற்பாடு அமைந்து விடுமோ என்ற சந்தேகத்தில், பலாலியில் இறங்கி, யாழ்ப்பாணம் சென்று, தாம தித்து, பின்னர் அமைதிப்படை மற்றும் உளவு சொல்லும் இதர அமைப்புகளின் ஆட்களுக்குத் தெரியாமல், வன்னிப் பகு திக் காட்டில் இருந்த பிரபாகரனைச் சந் திக்க, ஜானி சைக்கிளில் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கிட் டுவின் சார்பில் என்ன தகவல் ஜானியால் எடுத்துச் செல்லப்பட்டது என்பது தெரி யாமலே போயிற்று

ஆனால் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சென்னையில் இயங்கி வந்த கிட்டுவுக்கு மேலும் நெருக் கடிகள் கொடுக்கப்பட்டு, இறுதியில் புலி களது அலுவலக இயக்கம் முடக்கப்பட் டது. இவ்வாறு அவர்களின் பத்துக்கு மேற்பட்ட அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. கிட்டுவைச் சுற்றியி ருந்த நூற்றுக்கணக்கான காயம்பட்ட, காயம்படாத புலிகளையும், கிட்டுவையும் போலீஸôர் வளைத்துக் கைது செய்த னர்

இந்நிலையில், புலிகளது ஆதரவு இயக் கங்கள் ஆளுநர் ஆட்சியின் ஆலோசகர்க ளுக்கும், ராஜீவ் காந்திக்கும் எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினர். கிட்டு தன் னுடையதும், தமது இயக்கத்தைச் சார்ந்த வர்களதுமான போராளிகளுக்கு அளிக் கப்பட்ட நெருக்குதல்களைக் கண்டித்து, அவர்களை விடுவிக்கும் வரை உண்ணா விரதம் மேற்கொள்ளப் போவதாக (10 அக்டோபர் 1988) அறிவித்தார்

உண்ணாவிரதம் இருந்ததன் பேரில் திலீபன் மரணம் பற்றிய மிகப் பெரிய விமர்சனத்தை அமைதிப் படை ஏற்க வேண்டியிருந்தது. எனவே, சென்னை யில் கிட்டுவின் உண்ணாவிரதம், எந்த வகையான விளைவுகளை ஏற்படுத் துமோ என்ற எண்ணத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர் சென்னையில் இருந்து இயங்கத் தடை விதிக்கப்பட்டது. எனவே, அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். பின்னாளில் கிட்டு பிரபாகரனுடன் சேர்ந்து கொண்டார்

தேர்தலைத் தொடர்ந்து, ஈ.பி.ஆர்

எல்.எஃப்.பின் மத்தியக் குழு உறுப் பினர் வரதராஜ பெருமாள் முதலமைச்ச ராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரின் தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜபா ளையத்தைச் சேர்ந்தவர். தொழிலுக்காக யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்

ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஆட்சிப் பொறுப் புக்கு வந்ததும் நிர்வாகத் தலைநகரான யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து, திருகோண மலையைத் தேர்ந்தெடுத்தது. இதனால் இருவிதமான வெறுப்புகளை அவர் சந் திக்க நேர்ந்தது. முதலாவது எந்த ஈழத்தை அவர்கள் முதன்மைப்படுத்தினார்களோ, அந்த ஈழப்பகுதியின் அடர்த்தியான மக் கள் வசிக்கிற யாழ்ப்பாணத்தை ஒதுக்கிய தால், அந்தப் பகுதி மக்களின் வெறுப் புக்கு ஆளானார்கள்

அதேசமயம் இலங்கை அதிபர் ஜெய வர்த்தனாவும் யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து திருகோணமலையை, வடக்கு- கிழக்கு மாகாண அரசின் நிர்வாக நகரமா வதைக் கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்புக்குக் கீழ்க்காணும் அம்சங்களும் காரணமாக அமைந்தன

யாழ்ப்பாணத்தைவிட, திருகோணம லையை சிங்கள அரசுகள் எப்போதும் முக்கியக் கேந்திரமாக நினைத்தன. உல கின், ஏன் இந்தியாவின் இலக்கு கூடத் திருகோணமலையாகத்தான் இருந்தது

இயற்கைத் துறைமுக வசதி, எண்ணெய்க் கிடங்குகள் அதிகம் கொண்ட, வெளி நாட்டு முதலீடுகளையும், ஒப்பந்தங்களை யும் அதிகம் ஈர்த்த நகரம். அதுமட்டு மன்றி, அமெரிக்காவின் ஒலிபரப்புத்தள வசதிகள் கொண்டதும் ஆகும்

எனவேதான் தமிழர் தலைவர்களி டையே போடப்படுகிற ஒப்பந்தங்கள் எதுவாக இருந்தாலும், வடக்கு-கிழக்கு மாகாணம் என்று குறிப்பிடப்படும் போது, திருகோணமலை நகரின் துறைமு கப் பகுதியும் அதன் நிர்வாகமும் மத்திய ஆட்சியின் அதாவது சிங்களரின் தனிப் பார்வையில் அமையும்படி பார்த்துக் கொள்ளப்படும். இந்நிலையில் சிங்களர்க ளும் இத்தலைநகர் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்

எனவே, அதிபர் ஜெயவர்த்தனா ஆரம் பத்திலேயே இந்தியாவாலும், புதிய முதல மைச்சரின் நிர்வாகத் தலைநகர அறிவிப் பாலும் எரிச்சலடைந்தார்கள். அதிகாரங் களைக் கையளிக்கவும் மறுத்தார். இதன் காரணமாக, வரதராஜ பெருமாள் இவை ஒவ்வொன்றுக்குமாக திருகோணமலைக் கும் கொழும்புக்குமாக விமானத்தில் பறந்த வண்ணம் இருந்தார் என்ற விமரிச னமும் அப்போது எழுந்தது

ஜெயவர்த்தனா இருந்தவரை, இடைக் கால நிர்வாகக் கவுன்சில் என்று அழைக் கப்பட்ட, வடக்கு-கிழக்கு மாகாண அர சுக்கு எவ்வித அதிகாரப் பொறுப்பையும் மனமுவந்து அளிக்கவில்லை. இதன் கார ணமாக வடக்கு-கிழக்கு மாகாணங்களின் தாற்காலிக அரசின் நிர்வாகங்களுக்குத் தேவைப்படும் நிதியாதாரங்களுக்கு, இந் திய அரசையே அவ்வரசு நம்பியிருந்தது

யாழ்ப்பாணத்தில் அரசு அலுவலகத் தில் அமர்ந்து பணியாற்ற, இடைக்கால அரசை நடத்தியவர்களுக்கு ஓர் இடம் கூட வழங்கப்படவில்லை. அவர்கள் யாழ் மணிக்கூண்டுக்கு அருகே, அசோகா ஓட்டலின் எதிரே இருந்த கட்டடத்தில் இருந்து தங்களது அரசப் பணிகளை ஆற்றி வந்தனர்

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக வந்த ஜெனரல் வி.என். சர்மா, யாழ்ப் பாணத்தில் அமைதிப் படைப் பணிகளை ஆய்வு செய்ய வந்தார். பலாலி ராணுவ முகாமில் தளபதிகளிடம் அவர் உரையா டுகையில், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க என மக்கள் தொண்டர் படை என்னும் அமைப்பை உருவாக்குவதன் அவசி யத்தை வெளியிட்டார். இந்த அமைப்பு அமைதிப் படைக்கு உதவியாக இருக்கும்சுமையையும் குறைக்கும் என்றார்

கூடவே தமிழ்ப் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மையையும் போக்கும் வகையிலும் இது அமையும் என்று கருத் துத் தெரிவித்தார். இவரது கருத்து தில்லி யிலும் ஏற்கப்பட்டது

இடைக்கால அரசு சந்திக்கும் பல்வேறு இன்னல்களுக்கிடையில், இந்த அமைப் புக்கு இலங்கை அரசின் உத்தரவாதம் பெறுவது அவசியம் என்று இந்தியத் தூதுவரிடம் குறிப்பிடப்பட்டதும், இந்த மக்கள் தொண்டர் படை பற்றிய விவரம், டிசம்பர் 1988-இல் இலங்கை அரசிதழில் வெளியிடப்பட்டது

ஆனால் சட்டவடிவான செயல்பாட் டுக்கு இலங்கையின் காவல் துறை இயக்கு நர் அனுமதி அளிக்கவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இந்த அமைப்பு வடக்கு-கிழக்கு மாகாணக் கவுன்சிலின் பொறுப்பில் இருக்கும், அவ் வளவுதான். ஆனால் முடிவுகள் பராம ரிப்பு ஆகியன அமைதிப் படையைச் சார்ந்ததாக இருக்கும். எனவே, செலவும் அமைதிப் படையைச் சேர்ந்ததே. இந்த நிதிச்சுமைக்கு பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஐந்து மாதங்கள் கழித் துத்தான் இதற்காகும் செலவில் ஒரு பகு தியை இலங்கை அரசு ஏற்றது

எனவே, இந்த அமைப்புக்கு ஆள் சேர்ப்பது என்பது கேள்விக்குறியானது

வடக்கில் எந்த இளைஞரும் இதில் சேர ஆர்வம் காட்டவில்லை. கிழக்கில் ஆள் சேர்க்கும் வேலைகளை ஆளும் கூட்ட ணியே செய்தது. கட்டாயமாக மாணவர் களையும், இளைஞர்களையும் இதில் சேர்த்ததாக பெரிய அளவில் குற்றச் சாட்டு எழுந்தது

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரின் செயல்கள் வடக்குப் பகுதியில் கடுமை யான விமரிசனத்துக்கு உள்ளாயிற்று

"அவர்களின் அதிகாரம் நிகழ்ந்த காலத் தில் நடந்த வன்முறைகள், அராஜகங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சிலரின் தவறான போக்கே காரணம். பத்மநாபா என்ற ஒரு வர் மனிதநேயமுள்ளவராக இருந்தால் மட்டும் எல்லாம் நல்லபடியாக நடந்துவி டும் என எதிர்பார்க்க முடியாது. தவறுக ளுக்கு இயக்கத்தின் தலைமை பகிரங்க மாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற என் போன்றவர்களின் கோரிக்கை உதாசீனம் செய்யப்பட்டது' என்று தனது நூலில் (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் பக். 473) அந்த இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சி.புஷ்பராஜா தெரிவித்துள்ளார். (இவ்வாறெல்லாம் அவர் விமர்சித்த காரணத்தால், அந்த அமைப்பிலிருந்தே நீக்கப்பட்டார் என்ப தும் குறிப்பிடத்தக்கது.) இதைவிடவும் அதிகமாக "முறிந்த பனை' நூலிலும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட் டுள்ளன. "இந்தியாவின் கைப்பொம்மை யாக இவ்வியக்கம் இயங்குவதைத் தவிர வேறு ஒரு வழியிலும் முன்னே போக முடியாத நிலைக்கே இவர்களை இட்டுச் சென்றது' என்று குறிப்பிடப்பட்டுள் ளது

இதுதவிர லெப். ஜெனரல் சர்தேஷ் பாண்டேவும் தனது "அசைன்மெண்ட் ஜாஃப்னா' நூலில் இந்திய அமைதிப் படைக்கு இழுக்கு நேர்ந்ததற்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பின் சமூக விரோதச் செயல்பாடே காரணம் என்று கூறியுள்ள அவர், தனது பதிவுகளில் கடும் சொற்க ளைப் பிரயோகித்துள்ளார்.

131: ஆட்சிகள் மாறின; காட்சிகளும்!

தனது ஆட்சிக்காலத்தில் எந்த அளவுக்கு, தமிழர்களின் உரிமைகளை ஒடுக்க முடியுமோ, ராணுவம் மற்றும் காவல்துறைகளைப் பயன்படுத்தி எவ்வளவு கொடுமைகளை இழைக்க முடியுமோ, அந்தளவுக்கு செயலாற்றிய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். (டிசம்பர் 1988)

உடனடியாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணசிங்க பிரேமதாசா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, 1989, ஜனவரி 2-ஆம் தேதி இலங்கையின் அதிபரானார். தனது பதவி ஏற்பை புராதன நகரமான கண்டியில், புத்தரின் பல் இருப்பதாகக் கருதப்படும் "புனிதப் பற்கோயில்' அமைந்துள்ள, தலதா மாளிகையில் நடத்தினார். இதன்மூலம் பெüத்தத்தில் தமக்கிருந்த ஆழ்ந்த பற்றை, சிங்கள தேசியவாதிகளுக்கு உணர்த்தினார்.

அதே வேளையில் விடுதலைப் புலிகள் அமைப்பு, ஜனவரி 1-ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில், "இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஜனநாயகம் என்கிற பெயரில், தமது நலன்களைப் பாதுகாக்க என்னென்ன செய்யும் என்பதற்கு தமிழீழத்தில் நடத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தலும், அதிபர் தேர்தலும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இரண்டு தேர்தல்களிலும் தமிழீழ மக்கள் ஆயுதமுனையில் பலவந்தமாக வாக்களிக்க அழைத்துச் செல்லப்பட்டார்கள். பல இடங்களில் மக்கள் இல்லாமலே வாக்குகள் போடப்பட்டன. அதேபோன்று, ஜனாதிபதி தேர்தலை நடத்த வந்த சிங்கள அதிகாரிகள் நீங்கள் போடாவிட்டால் பரவாயில்லை, நாங்கள் போடுவோம் என்று கூறியுள்ளார்கள். இந்த வகையில் நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றியென்றும் புகழப்படுகிறது. நாம் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை எம்மால் சர்வதேச பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நிரூபிக்க முடியும்.

இன்று தமிழ்மொழி அரச கரும மொழியாக்கப்பட்டுள்ளது; மலையக மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தமே இதைச் சாதித்தது என்கிறது இந்திய அரசு. அரசோடு ஒத்துழைத்தோம் குடியுரிமை பெற்றோம் என்கிறது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ். அப்படியென்றால் 1948-1988 வரை அரசாங்கத்தோடு ஒத்துழைத்தும் மலையக மக்கள் குடியுரிமை பெற 40 ஆண்டுகள் பிடித்தது ஏன்?

மலையக மக்களை அவர்கள் நம்பிய தலைமை, புரட்சிப்பாதையில் வழி நடத்தியிருந்தால் குடியுரிமை பறிக்கப்பட்ட ஒருசில ஆண்டுகளுக்குள்ளேயே, அவர்களது குடியுரிமையை மீளப் பெற்றிருக்க முடியும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியிருக்க முடியும்.

இன்று எமது ஆயுதப் போராட்டமும் அதன்மூலம் மலையகத் தமிழர்களிடையே தோன்றியுள்ள விழிப்புணர்வும், புரட்சித் தன்மையுமே மலையகத் தமிழ் மக்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஒப்பந்தமோ, பிரார்த்தனைகளோ இவற்றைப் பெற்றுத்தரவில்லை என்பதை தமிழ்மக்கள் நன்கு அறிவார்கள்.

இன்று தமிழ் மக்களுக்குத் தரப்பட்டதாகக் கூறப்பட்டவை நடைமுறைப்படுத்தப்படுமா? நிலைக்குமா? ஸ்ரீலங்கா அரசு நினைத்தால் ஒரே நாளில் இவற்றை இல்லாமல் செய்துவிட முடியுமோ?.

இந்தியாவுக்கு நாம் எப்போதும் நேச சக்தியாகவே இருந்திருக்கிறோம். ஆனால் இந்திய அரசு, தாம் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஆயுதமுனையில் நிர்பந்திக்கும்போது நாம் நமது உரிமைக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. தமிழீழ மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை தமிழீழ மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்' என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அறிக்கையின் இறுதியில், "நாம் அடிமைகளாக வாழக்கூடாது என்றால் (1) ஆயுதங்களைக் கீழே போடக்கூடாது (2) உண்மையான ஜனநாயகம் மலரவேண்டுமென்றால் ஆயுதங்களைக் கீழே போடக்கூடாது (3) சுதந்திர சோசலிச தமிழீழத்தில்தான் உண்மையான ஜனநாயகம் மலரும் (4) இன்று ஜனநாயகத்தின் பெயரால் ஆயுதங்களைக் கையளியுங்கள் என்பவர்கள் தமிழீழப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் மட்டுமல்ல; துரோகத்தையும் இழைக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேமதாசா தான் அதிபராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டதும், இந்திய அமைதிப்படையைக் கடுமையாக எதிர்த்த இரு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார். அவர் குறிவைத்த அமைப்புகளில் முதலாவது விடுதலைப் புலிகள் இயக்கம், இரண்டாவதாக ஜனதா விமுக்தி பெரமுன என்னும் சிங்களத் தீவிரவாத இயக்கமாகும்.

பிரேமதாசா தான் பிரதமராக இருந்தபோது, இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தவர். அந்த ஒப்பந்தம் கையொப்பமாகும்போது நாட்டிலேயே இருக்கமாட்டேன் என்று கூறி வெளிநாடு சென்றவர். ஜே.வி.பி. இயக்கம் அமைதிப் படையைக் கடுமையாக எதிர்த்தது. அதேபோன்றுதான் விடுதலைப் புலிகளும். எனவேதான் பிரேமதாசா, பேச்சுவார்த்தை என்கிற சொற்பிரயோகத்தை வெளிப்படுத்தி, இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து பிரேமதாசா நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரம் காட்டினார். தனது கட்சி வெற்றிபெற வேண்டும் என்பது அவருக்கு அவசியமாயிற்று. எனவே கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். விடுதலைப் புலிகளுக்கும் அமைதிப் படைக்கும் இடையே மோதல் நீடித்த நிலையில், இலங்கையில் கடந்த ஆண்டு ஜூன் முதல், தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்தபடியே இருந்தன. இது விசித்திரம் மட்டுமல்ல; ஆச்சரியமும்கூட.

முதலில் வடக்கு-கிழக்கு தவிர்த்து இதரப் பகுதிகளில் மாகாணசபைத் தேர்தல், அடுத்து வடக்கு-கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல், அதனையடுத்து மூன்றாவதாக அதிபர் தேர்தல் என்று நடந்த முடிந்த நிலையில் தற்போது பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல், அதுவும் நீண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற இருக்கிற தேர்தல் என்பதால் பல்வேறு கட்சிகளும் முனைப்பு காட்டின. தமிழர் பகுதிகளிலும் ஈபிஆர்எல்எஃப் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் மேலும் சில கட்சிகளுக்கும் இந்தத் தேர்தலில் ஈடுபட ஆர்வம் ஏற்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்போ இத் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணித்தது. இதுகுறித்து அவ்வியக்கம் 10.1.1988 அன்று வெளியிட்ட அறிக்கையில், "எதிர்வரும் மாசி 15-இல் (பிப்ரவரி 15) நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களும் அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்துக்குத் துரோகம் செய்கிறார்கள்.

இனப் படுகொலைகளுக்கு மறைமுகமாகவும், நேரிடையாகவும் ஆதரவு தந்தவர்கள் இன்று எமது பிரதிநிதிகளாக எமக்காகக் குரலெழுப்புவதற்கான அங்கீகாரம் கேட்கிறார்கள்.

நாடாளுமன்றத்தையும் மாகாணசபையையும் எமது போராட்டத்தை முன்னெடுக்க ஓர் இடைக்காலத் தீர்வாக ஏற்கிறோம் என தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்காக இவர்கள் கூறிவருகிறார்கள். இவர்கள் இடைக்காலத் தீர்வுகளை ஏற்பது போராட்டத்தை முன்னெடுக்க அல்ல.

தமிழீழப் போராட்டத்தை விலைபேசி விற்கும் இத் துரோகிகள் கூட்டம், இடைக்காலத் தீர்வு என்ற பெயரிலும் ஜனநாயகம் என்ற பெயரிலும் தேர்தலில் பங்குபற்றுவது தமது கோழைத்தனத்தையும் இயலாமையையும் மறைத்து அற்ப பதவிகளையும் அற்ப சுகங்களையும் அனுபவிப்பதற்கே என்பதை நாம் அறிவோம்...

"தமிழீழத்தில் சுமுகநிலை இன்னும் வரவில்லை. குடிபெயர்ந்தவர்கள் இன்னும் அவர்களது இடத்தில் குடியமர்த்தப்படவில்லை. இந் நிலையில் தேர்தலா?' என்று கேள்வி எழுப்பியவர்கள்கூட, இப்போது தேர்தலில் போட்டியிட முன்வந்து விட்டார்கள்.

இதில் இன்னொரு முரண், வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா என்று மக்கள் கருத்தை அறிய ஜூலை 25-ம் தேதி சர்வஜன வாக்கெடுப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதையும்கூட ஏற்கிறார்கள்.

நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலே ஒரு மோசடி. அதேபோன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் அளவில் மோசடிகளை நடத்த இருக்கிறார்கள். இவர்கள் நாடாளுமன்றம் சென்று சாதிக்கப் போவதென்ன?

30 ஆண்டுகால நாடாளுமன்ற அரசியல் போராட்டகாலத்தில்தான் மலையக மக்களின் குடியுரிமை மறுக்கப்பட்டது. தமிழ்ப் பிரதேசம் சிங்களக் குடியேற்றத்தால் பறிபோயிற்று. தமிழ்மொழி தன் உரிமையை இழந்து, தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசாரம் சீரழிக்கப்பட்டது' என்று அடுக்கடுக்காகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

தேர்தலில், பிரேமதாசாவின் ஐக்கிய தேசியக் கட்சியே (யுஎன்பி) வென்றது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் தோற்றனர். இவர்களின் சேவையை அங்கீகரிக்க, ஈபிஆர்எல்எஃப் அணியினர் இவர்களை நியமன உறுப்பினர்களாக்க முனைந்தனர்.

இதே நேரத்தில், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஓராண்டு ஆளுநர் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், அதுவரை ஆட்சிபுரிந்து வந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜானகி அணி என்றும், ஜெயலலிதா அணி என்றும் பிளவுபட்டு தனித்தனியே நின்றன. காங்கிரஸ் கட்சி, பிளவுபட்ட எம்.ஜி.ஆரின் கட்சியுடன் உறவு இல்லாமல் தனித்து நின்றது. நான்கு முனைப் போட்டியாக நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. அதன் தலைவர் மு.கருணாநிதி மூன்றாவது முறையாக முதல்வரானார் (1989, ஜனவரி 27). எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பதவி ஜெ.ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது.

132: பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைப்பு!

திம்புப் பேச்சுவார்த்தையின்போது அனைத்து தமிழர் குழுக்களும் வலியுறுத்திய நான்கு அடிப்படை அம்சங்களுக்கு எதிரான செயலாக, ஈபிஆர்எல்எஃப் ஆட்சியில், இலங்கை சுதந்திர தினத்தன்று (4-2-1989) சிங்களக் கொடியை ஏற்றிய செயல் தமிழ் மக்களிடையே கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

இதே திருகோணமலையில் இலங்கை சுதந்திர தினத்தன்று, இலங்கை தேசியக் கொடியான சிங்கக்கொடியை இறக்க முயன்ற தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த திருமலை நடராஜன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்ததுண்டு. இதே திருகோணமலையில்தான் 8-8-1988 அன்று புலிக்கொடியை ஏற்ற முயன்ற தமிழர்களும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இந்த நிலையில் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினரின் சுதந்திரதினக் கொண்டாட்டம் தமிழ்மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் திமுகவைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வை.கோபால்சாமி ரகசியமாக இலங்கை சென்றார். தான் வன்னிப்பகுதிக்குச் சென்றபிறகு கட்சித் தலைமையிடம் தெரிவிக்கச் சொல்லி நண்பர் ஒருவரிடம் கடிதம் ஒன்றையும் அவர் கொடுத்துச் சென்றிருந்தார்.

இந்தத் தகவல் பத்திரிகை மூலம் வெளியானதால், வை.கோபால்சாமியின் நடமாட்டம் அமைதிப் படையால் கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் வன்னிப் பகுதியில், விடுதலைப் புலிகளின் முகாம்களில் 24 நாள்கள் தங்கினார். பிப்ரவரி 15-ஆம் நாள், அவர் பிரபாகரனைச் சந்தித்தார்.

இந்த நாள்களைத் தனது வாழ்க்கையின் பொன்னான நாட்கள் என்று பின்னர் வை.கோபால்சாமி குறிப்பிட்டார். அவர் இலங்கைக்கு எவ்வாறு ரகசியமாகச் சென்றாரோ, அதேபோன்று ரகசியமாக அவர் இந்தியா திரும்பி, தனது பயணம் குறித்து விளக்குவதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது வை.கோபால்சாமி விசா இல்லாமல் இலங்கை சென்றது குறித்த கேள்விக்கு "எதுவும் சொல்ல விரும்பவில்லை' என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் விளக்குகையில், "உயிரே பிரச்னையல்ல என்றுதான் இந்தப் பயணத்தை (பிப்ரவரி 7-இல்) எனது சொந்தப் பொறுப்பில் மேற்கொண்டேன். பயணம் எப்படி நடந்தது. யாரால் சென்றேன்-திரும்பினேன் என்பது பற்றியும் எதுவும் கூற விரும்பவில்லை. முதலமைச்சர் எதுவும் கூறிவிடுவாரோ என்றுதான் அதிகம் பயந்தேன். நல்லவேளை! அப்படி எதுவும் நடக்கவில்லை. இதுபோல "ரிஸ்க்' எடுத்துச் செல்லக்கூடாது. இலங்கைத் தமழர் பிரச்னையில் ஆர்வம் இருக்கலாம். வெறியாகிவிடக்கூடாது என்று முதல்வர் சொன்னதாக' அவர் தெரிவித்தார்.

இன்னொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், "முதல்வருக்குத் தெரிவிக்காமல், அவரிடம் அனுமதியும் பெறாமல்தான் நான் ஈழத்துக்குச் சென்றேன். எனது இந்தப் பயணம் தவறானதல்ல. ஆனால் தி.மு.கழகத்தின் செயல்முறைகளுக்கு இந்தப் பயணம் ஏற்றதல்ல; அந்த வகையில் எனது பயணம் தவறுதான்' என்றார். இலங்கைப் பிரச்னையில் பிரதமருக்கும் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கும் பேச்சு நடந்து கொண்டிருப்பது தனக்குத் தெரியாது என்றார். (நாளிதழ்களில் வந்தவாறு 6-3-1989).

விசா இல்லாமல் வை.கோபால்சாமி இலங்கைக்குச் செல்லலாமா? அவரைக் கைது செய்யவேண்டும் என்ற சர்ச்சை பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தது. பத்திரிகைகளிலும் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில் "தினசரி' பத்திரிகையில் 9-3-1989 அன்று, க.சச்சிதானந்தன் எழுதிய கட்டுரை இந்த விசாப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் "விசா' நடைமுறை என்பது 1948-லிருந்துதான் வந்தது என்றும், 1983-இல் இலங்கைப் படுகொலையையொட்டி ஏராளமான பேர் அகதிகளாக வந்து இந்தியாவில் குடியேறியபோது, "விசா' முறை பின்பற்றப்படவில்லை என்றும், 1987-இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்போது, ஹெலிகாப்டரிலும், மிராஜ் விமானங்களிலும், தமிழகத்திலிருந்து பத்திரிகையாளர்கள் பலரும் "விசா' நடைமுறை இல்லாமல்தான் செல்கிறார்கள் என்றும், எனவே, விசா இன்றி, வை.கோபால்சாமி போகலாமா என்ற வினாவுக்கே இடமில்லை என்றும் ஈழத் தமிழர் நன்மை பேணப்பட வேண்டுமென்றால் அரசியல்வாதிகட்கும், அரசுப் பணியாளர்களுக்கும் அது பொருந்தாது என்றும் இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வை.கோபால்சாமி இந்தியா திரும்பியது குறித்து விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் பின்னாளில் கூறியது வருமாறு:

""வை.கோபால்சாமியைப் பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி தலைவர் என்னிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு இடமாகத் தப்பி வந்தோம். மணலாற்றில் வை.கோபால்சாமி இருப்பதாக அறிந்த அமைதிப் படை அவரை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. அலம்பில் பகுதியில் அவரைப் படகேற்றும்வரை அவரது பயணம் பாதுகாப்பாகவே இருந்தது. ஆனாலும், அங்கிருந்து படகில் அவர், நல்லதண்ணி தொடுவாயைச் சென்றடைந்திருந்தபோது, அங்கு ராணுவத்தினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வை.கோபால்சாமி காப்பாற்றப்பட்டார். ஆனால் அப்போது நடந்த மோதலில் லெப்டினன்ட் சரத் என்ற போராளி உயிரிழந்தார் (ஈழமுரசு கட்டுரை).''

இந்திய அமைதிப் படையின் சோதனைச் சாவடிகளில் ஒரு சுவரொட்டி ஒட்டியிருக்கும். அந்தச் சுவரொட்டியில் "அப்பாவிக் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் நாங்கள் இங்கு தங்கியிருக்கிறோம்' என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருக்கும். இத்தகைய சுவரொட்டிகளால், இந்திய அமைதிப் படை மிக நீண்டகாலம் வடக்கு-கிழக்குப் பகுதியில் நின்று நிலைத்து விடுமோ என்ற அச்ச உணர்வு, பிரேமதாசா உள்ளிட்டவர்களுக்கும், ஜேவிபி போன்ற இனத்தீவிரவாத கட்சிகளுக்கும் எழுந்தது.

தீவிரத் தமிழர் எதிர்ப்பு - தீவிர சிங்களவர் எதிர்ப்பு இரண்டையும் அரவணைத்துச் செல்லும் ஒரு வழிமுறையைக் கண்டாக வேண்டிய நெருக்கடிக்கு பிரேமதாசா தள்ளப்பட்டார். அதுவே, தமிழர்களைக் காத்தருள வந்ததாகக் கூறும், இந்திய அமைதிப் படையை இலங்கைத் தீவினில் இருந்து வெளியேற்ற உதவும் என்றும் அவர் கண்டார். சிவில் அமைப்புகளில் இந்தியாவின் ஈடுபாட்டை மிகக் குறைந்த அளவிலேனும் கட்டுப்படுத்த வேண்டுமானால், விடுதலைப் புலிகளுடன் சமரசம் என்பது அவரின் முடிவாயிற்று.

கிழக்குப் பகுதியில் - கடற்கரையோரமாக ரயில் பாதையை அமைக்கவும் வடக்கிலும் கிழக்கிலும் சில முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாகவும் இந்தியா அறிவித்ததன் தொடர்ச்சியாக இந்தப் பயம் ஆளும் தரப்புக்கு அதிகம் எழுந்தது.

"இன்றுள்ள நிலைமையில் "ஈபிஆர்எல்எஃப் மற்றும் ஈரோஸ் போன்ற இயக்கங்களின் தலைமையில் சில சீர்திருத்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய அறிகுறிகள் இவர்களிடம் தென்பட்டதாயினும் இந்தியாவிற்குக் கீழ்ப்படிந்து செல்லும் இவர்களின் செயல் இப்போதில்லாவிடினும் பின்னர் இந்திய மேலாதிக்கம் தொடர்பான தீவிரமான பிரச்னைகளில் சமரசம் செய்துகொண்டு போகும் நிலைமைக்கே இட்டுச் செல்லும். அப்பாவிப் பொதுமக்களின் மீது அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களை இதுகாலம் வரை இவர்கள் எதிர்க்க முன்வராததிலிருந்து இதனைக் கண்டு கொள்ளலாம். எனவே சாத்தியமான மாற்றுத் தீர்வினை இவர்கள் வழங்கப் போவதில்லை' என்று "முறிந்தபனை' நூலில் குறிப்பிட்டவாறே, இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைப் போக்கும் அமைந்து அவர்களை விடுதலைப் புலிகளின் பக்கம் நெருங்கத் தூண்டிற்று.

பதவி ஏற்ற நாளில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரேமதாசா, ஜேவிபி மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பேசத் தயார் என்றார். இலங்கைத் தீவின் ஒரு பிடி மண்ணையும் இன்னொரு நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தமாட்டோம் என்றார். எமது நாட்டின் உள் விவகாரங்களைப் பேசித் தீர்ப்போம் என்றார். எல்லாமே மயக்கம் தரும் வார்த்தைகளாக இருந்தன.

அந்த அளவுக்கு ஜேவிபி தென் இலங்கையில் சிங்கள மாவட்டங்களின் கிராமப்புறங்களைத் தனது அதீதமான வன்முறைக் கோட்பாட்டின் மூலம் வளைத்துப் பிடித்து அரசு நிர்வாகத்தைச் சீர்குலைத்திருந்தது.

எங்கு நோக்கினும் ரத்தவெள்ளம்-பிணவாடை. ராணுவம், காவல்துறை முற்றிலுமாக செயலிழந்துபோன நிலை. கல்விக்கூடங்கள் மூடப்பட்டன. போக்குவரத்தும் சீர்குலைந்திருந்தது. இத்தனைக்கும் காரணம் என்ன? இந்திய அமைதிப் படை வருகைதான். "சிங்கள பூமியில் இந்தியப் படைகளா? கொண்டுவந்தவர்களை விரட்டுவோம்' என்ற ஒற்றைக் கோஷத்துடன் ஜேவிபி தனது "செம்படை'யுடன் கொழும்பை நோக்கி முன்னேறிற்று.

இதனைத் தடுத்து நிறுத்த, ஜேவிபியின் ஆயுள்கைதிகள் 1800 பேரை பிரேமதாசா விடுதலை செய்தார். பதிலுக்கு ஜேவிபி இரண்டு மாதங்கள் தங்களது கிளர்ச்சிகளை ஒத்திப் போட்டது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொள்ள, முயன்ற பிரேமதாசா, ஈரோஸ் பாலகுமார், ராஜசிங்கம் முதலானவர்களைத் தொடர்பு கொண்டார். அவர்கள் பாலசிங்கத்தின் தொலைபேசி எண்ணைத் தந்தார்கள்.

133: பிரேமதாசாவுடன் சந்திப்பு!

பாலசிங்கத்துடன் பேசிய பிரேமதாசா, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தமது விருப்பத்தை வெளியிட்டார். வன்னியில் உள்ள பிரபாகரனுடன் தொடர்புகொண்டு அவரது விருப்பம் அறிந்ததும் பேசலாம் என பாலசிங்கம் பதிலளித்தார். அப்போது பாலசிங்கம் அமைதிப்படையை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று பிரேமதாசா வெளிப்படையாக அறிவிப்பது பலன் தரும் என்றும் யோசனை கூறினார்.

அதன்படியே, பிரேமதாசாவும் தமிழ்-சிங்களப் புத்தாண்டு தினமான 1989 ஏப்ரல் 12-ஆம் நாள், விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வந்து, போர்நிறுத்தம் அறிவித்தார். இந்திய அமைதிப்படையும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிரேமதாசாவின் அறிவிப்பையொட்டி, இலங்கை அதிபருக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்டது. அக் கடிதத்தில், "இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவ்வமைதிப்படை இம்மண்ணை விட்டு அகலும் வரை போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று அரசு அழைப்பை உடனடியாக நிராகரித்தார்கள். பிரேமதாசா நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது இந்திய அமைதிப்படை இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கான ஏற்பாட்டைச் செய்வதாகக் கூறியிருந்ததையும் அக்கடிதத்தில் நினைவுபடுத்தியிருந்தார்கள் (சுதந்திர வேட்கை: அடேல் பாலசிங்கம்-பக்.281).

இதன் பின்னர் அடுத்த நாளிலேயே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரேமதாசா, "அமைதிப்படையை இன்னும் 3 மாதத்திற்குள் இந்தியா திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்' என்று அறிவித்தார். அதே நாளில் வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னா அமைதிப் பேச்சுக்கு வருமாறு விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, லண்டனில் இருந்த பாலசிங்கம், பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் தயார் என்றும் அதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறும் பிரேமதாசாவுக்குக் கடிதம் எழுதினார். பாலசிங்கம் விடுதலைப் புலிகள் சார்பாகப் பேசுவார் என்பது உறுதியானது. அவரும் அடேலும் கொழும்பு (ஏப்ரல்-26) வந்தனர். இவர்களுக்கென ஹில்டன் ஓட்டலில் அறை எடுக்கப்பட்டிருந்தது. அங்கு பிரேமதாசாவின் செயலர் விஜயதாசா, பாதுகாப்புத்துறைச் செயலாளர் சேப்பால அட்டிகல, வெளியுறவுத்துறை அமைச்சகச் செயலாளர் ஃபீலிக்ஸ் டயஸ் அபேசிங்கா ஆகியோர் வந்து பாலசிங்கத்தையும் அடேலையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.

மறுநாள் சேப்பால அட்டிகல மற்றும் ராணுவத் தளபதி ரணதுங்கா இருவரும் வந்து, விடுதலைப் புலிகளின் இதரப் பிரதிநிதிகளை வன்னியிலிருந்து அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர். 1989 மே 3-இல் பயணம் என்றும், உடன் பத்திரிகையாளர்களும் வன்னிப் பகுதிக்கு இன்னொரு ஹெலிகாப்டரில் வருவார்கள் என்றும் முடிவாகியது.

கொழும்பிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வன்னிப் பகுதிக்கு பாலசிங்கம் மற்றும் அடேல் பாலசிங்கம் கிளம்பினார்கள். விடுதலைப் புலிகளின் சார்பில் பாலசிங்கத்துடன் பங்கேற்க இருக்கும் தளபதிகளை அழைக்கவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது குறித்து பொதுவாக வரவேற்றது இந்தியா.

இந்த நிலையில் வன்னிப் பகுதி நோக்கிச் சென்ற இலங்கைப் படையின் ஹெலிகாப்டர்களை, அமைதிப் படையின் எம்124 ரக ஹெலிகாப்டர்கள் இரண்டு வழிமறித்து, பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பறந்து வந்தன. அமைதிப் படை பராமரிப்புப் பகுதியில் உள்ள வன்னிப் பகுதிக்கு சிங்கள ஹெலிகாப்டர்கள் செல்ல இருக்கின்றன என்ற தகவலைக் கூட அவர்களிடம் தெரிவிக்காமல்தான் புறப்பட்டு இருந்தன. இலங்கையின் வான் எல்லையில், இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் பறக்க அனுமதி கோருவதை, தவிர்க்கவே இவ்வாறு எதுவும் சொல்லாமல் புறப்பட்டனர்.

இதனை அறிவுறுத்தும் நோக்கத்துடன்தான், இந்திய அமைதிப் படையின் ஹெலிகாப்டர்கள் பின்தொடர்ந்து வந்து, பிறகு தங்கள் வழியே சென்றன.

நெடுங்கேணிக் காட்டில் குறிப்பிட்ட அடையாளத்தைப் பார்த்து ஹெலிகாப்டர்களை இறக்க விமானிகள் மிகுந்த சிரமப்பட்டனர். இவர்கள் தேடிய இலக்கு விமானிகளுக்குத் தெரியவில்லை. பிறகு சிலுவை குறியிடப்பட்ட அந்த அடையாளத்தைக் கண்டு ஹெலிகாப்டர் தரையிறங்கியது.

எல்லாம் சரியாக நடைபெறுகிறது என்று உறுதிப்படுத்திய பின்னர்தான் காட்டின் மறைவிலிருந்து, பாதுகாப்புக்கு நின்ற போராளிகள் புடைசூழ யோகரத்தினம் யோகியும், பரமு மூர்த்தியும் இவர்களது மெய்க்காவலர் ஜுட்டும் வெளிவந்தனர்.

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், விமானிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அந்தக் காட்டிலும் பிஸ்கட், கேக், தேநீர் வழங்கப்பட்டது. சிறிது நேர பேச்சுக்குப் பிறகு இவர்களை அழைத்துக் கொண்டு ஹெலிகாப்டர் கொழும்பு சென்றது. விமானப் படை விமானதளத்தில் இறங்கிய விடுதலைப் புலி தளபதிகள் கொழும்பு ஹில்டன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதே ஹெலிகாப்டர்கள், முன்பு தமிழர் பகுதியில் குண்டுகளையும், ராக்கெட்டுகளையும் ஏவியதுண்டு. விடுதலைப் புலிகள், இந்த ஹெலிகாப்டர்களைக் கண்டால் சுடவும் முயற்சி எடுத்ததுண்டு. ஆனால் இன்று தலைகீழ்த் திருப்பமாக, அதே ஹெலிகாப்டரில் பயணம்; நட்சத்திர ஓட்டலில் தங்க ஏற்பாடு. "இது ஒரு புதிய அத்தியாயம்' என்கிறார் அடேல் பாலசிங்கம் தனது "சுதந்திர வேட்கை' நூலில்.

பிரேமதாசாவைச் சந்திக்கும் முன்பாக அவரைப் பற்றிய குறிப்புகளைத் தனது அணியினருக்கு பாலசிங்கம் விளக்கினார். இளவயதில் தான் பத்திரிகையாளராக இருந்த போது பிரேமதாசாவை நன்கு அறிந்தவர் அவர். "பிரேமதாசா தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். எளிமையானவர் -எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பவர். கடும் உழைப்பாளி. கவிஞர். நாவலாசிரியர். பிரதமராக இருந்த காலத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்டவர். ஒரே தேசிய இனம் -ஒரே தாயகம் -ஒரே மக்கள் என்ற லட்சியத்தில் பிடிப்பு கொண்டவர். இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை ஆரம்ப முதலே எதிர்த்தவர். இன்றும் எதிர்க்கிறார். நமது நோக்கமும் அதுதான். இந்தப் பின்னணியில் நமது பேச்சு செயல் எல்லாமே இருக்கும்; இருக்க வேண்டும் -முரண்பாடுகள் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது' என்றும் வலியுறுத்தினார் பாலசிங்கம். (சுதந்திர வேட்கை -அடேல் பாலசிங்கம் -பக். 283-284).

பிரேமதாசா விடுதலைப் புலிகளைச் சந்திக்க மே 4-ஆம் தேதி மாலை 5 மணியளவில் நேரம் ஒதுக்கி இருந்தார். இலங்கை அதிபர் வசிக்கும் மாளிகையான சுக்சித்ராவில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொண்டமைக்கு பரஸ்பரம் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர். தாம் தமிழர்களின் நண்பன் என்றும், அவர்களின் துன்பங்களையும் போராட்டத்தையும் புரிந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். "இனப் பிரச்னை என்பது அண்ணன் -தம்பிக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை. நமக்குள் தீர்க்க வேண்டிய இந்தப் பிரச்னையில் இந்தியாவைக் கொண்டு வந்துவிட்டது ஜே.ஆர். செய்த தவறு' என்று ஜெயவர்த்தனாவைக் குற்றம் சுமத்தினார்.

"இதனாலேயே நாடு பூராவும் வன்செயல் இடம்பெற்று ரத்த ஆறும் கிளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாகவும்' கூறினார்.

பாலசிங்கம் இந்திய அமைதிப் படை, புலிகளின் தற்காப்புப் போர், மக்கள் படும் இன்னல்கள் ஆகியவற்றின் பக்கம் பேச்சைத் திருப்பினார்.

"அமைதிப் படையை எதிர்த்து தெற்கில் போராட்டம் என்ற பெயரில் மக்களைக் கொல்கிறார்கள். விடுதலைப் புலிகளோ அமைதிப் படையை எதிர்த்து அவர்களுடன் போரிடுகிறார்கள். உண்மையில் அவர்களே தேசியவாதிகள்' என்று பாலசிங்கம் சொன்னதை பிரேமதாசா ஏற்றுக்கொண்டு பிரபாகரனையும் அவரது வீரத்தையும் பாராட்டினார். ஜேவிபியினரைக் கோழைகள் என்றும் அமைதிப் படையினரைப் பார்த்து அவர்கள் ஒரு கல்லைக் கூட வீசவில்லை என்றும் கூறினார் பிரேமதாசா.

பாலசிங்கம் பேசுகையில், மக்கள் தொண்டர் படை என்கிற பெயரில் ஒரு படைப் பிரிவு உருவாக்கி, அதில் மாணவர்களைச் சேர்த்து, அந்தப் படையை தமிழ்த் தேசிய ராணுவமாக, தனியார் படையாக, ஈபிஆர்எல்எஃப் கையில் வழங்க இருப்பதாகவும் கூறினார்.

பேச்சுவார்த்தைக்கென ஒரு நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்படும் என்று பாலசிங்கத்தின் கேள்விக்குப் பதிலளித்தார். முதலில் அரசின் பிரதிநிதிகள் குழு, பின்னர் அதிகாரிகள் குழு, அமைச்சர்கள் குழு எனப் பேசப்பட்டு இறுதியில் அதிபருடன் பேச்சு என பட்டியல் தயாரானது.

134: புலிகளுடன் பேச்சுவார்த்தை!

மே 5, 11 என்று தொடங்கி மே 30-ஆம் தேதி வரை எல்லாமாகச் சேர்த்து, 9 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஒவ்வொரு சந்திப்பின்போதும் கூட்டறிக்கை ஒன்றும் தயாராகி வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையைத் தயாரிக்கும்போது மிக மென்மையாக இந்தியா விமர்சிக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்பட்டார் அமைச்சர் எ.சி.எஸ். ஹமீது. இவர் உயர்கல்வி, அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு அமைச்சர் ஆவார்.

பேச்சுவார்த்தைக்கு இறுதியில் வெளியிடப்படும் அறிக்கைகள் உலகெங்கும் எதிரொலித்த காரணத்தால், அமைதிப்படையின் பங்கு, பணி குறித்த பிம்பம் சிறிது சிறிதாகச் சேதமுற்றது.

இலங்கை அரசின் பிரதிநிதிகளுடன் பல்வேறு அமர்வுகளிலும் விடுதலைப் புலிகள் தரப்பில், பாலசிங்கம் வழியாக, எடுத்து வைத்த வாதங்களில் குறிப்பிடத்தகுந்தது என அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது வருமாறு:

""அமைதி காக்கும் நடவடிக்கை என்றால் என்னவென்று, தெளிவான ஐ.நா. கருத்துருவாக்கம் ஒன்று உள்ளது. முரண்பாட்டு மோதல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், அமைதியை முன்னெடுப்பது தொடர்பாகவும், அனைத்துலக மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களும் தரங்களும் உள்ளன. அமைதி காக்கும் ராணுவமானது, முரண்பாடு மோதலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு அல்லது கூடுதலான பிரிவுகளுக்கிடையே, பக்கம் சாராது நிற்பது முக்கியமானது. அமைதி காக்கும் நடவடிக்கையின் முக்கிய பணி என்னவென்றால், மோதல் இடம்பெறும் பகுதிகளில் அமைதியைப் பேண அல்லது மீண்டும் நிறுவ உதவுவது. அமைதி காக்கும் நடவடிக்கை என்பது மோதலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடாகும்.

ஐ.நா. மரபிலே பார்த்தால், அமைதிப்படையானது மோதல் நிலை விரிவடையாது தடுத்து, அமைதிக்கான சுமூகச் சூழலை ஏற்படுத்த ஆணைபெற்று இயங்குவது. அமைதி நடவடிக்கையிலே ஈடுபடும் ராணுவ உறுப்பினர்களுக்கு வலிந்து திணிக்கும் அதிகாரம் எதுவும் வழங்கப்படுவதில்லை. தற்காப்பு தவிர்த்த வேறு எதற்கும் ராணுவ உறுப்பினர்கள் ஆயுத பலத்தைப் பயன்படுத்த அதிகாரம் வழங்கப்படுவதில்லை. அத்துடன் இலகுவான பாதுகாப்பு ஆயுதங்களை மட்டுமே அவர்கள் தரித்திருப்பார்கள்.

போராட்டத்தில் சம்பந்தப்படுத்தப்பட்ட தரப்பினரின் ராணுவச் சமநிலை, பாதிக்கப்படும் வகையில் அமைதிப்படை நடந்து கொள்ளக் கூடாது. இவையே அமைதி காப்புச் செயற்பாட்டை வழிநடத்தும் அடிப்படை வழிமுறைகளும் கோட்பாடுகளுமாகும். அனைத்துலக மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் இவை.

இந்த வழிமுறைகளுக்கும் நியமங்களுக்கும் அமைவாக இந்திய அமைதிப்படை இல்லை. தொடக்கத்தில், இந்திய - இலங்கை ஒப்பந்த நிபந்தனைகளுக்கு அமைவாகவே, இந்திய ராணுவப் பிரிவு ஒன்று இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. ஸ்ரீலங்கா அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நடக்கும் போர் முடிவுக்கு கொண்டு வரப்படுவதை மேற்பார்வை செய்வதும், அமைதியைப் பேணுவதுமே அதன் பணியாக இருந்தது.

ஆனால், விரைவிலேயே அமைதிப்படை முற்றிலும் வேறுபாடான நிலையில் பங்காற்றத் தொடங்கியது; போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு பிரிவினருடன், அதாவது விடுதலைப் புலிகளுடன் ஆயுதபாணியாக விரைவிலேயே மோதத் தொடங்கியது.

ஆயுத மோதல், ஆயுதங்களைக் களையும் முயற்சியாகவே முதலில் கருதப்பட்ட போதிலும், விரைவில் இந்தியப் படைகளுக்கும் புலிகளின் கெரில்லாப் படையினருக்கும் இடையே முழுமையானப் போராக வடிவெடுத்தது.

கடந்த 20 மாதங்களாக போர் நடந்து கொண்டிருப்பதோடு, போரில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்தியப் படையினரும் விடுதலைப் புலிகளுமே.

நடுநிலை நின்று அமைதி காக்க, மத்தியஸ்தம் செய்ய வேண்டியவர்கள் தாமே நேரடியாக ராணுவ மோதலில் ஈடுபட்டிருந்ததால், அமைதி காக்கும் முயற்சியின் தன்மையே கேள்விக்கு உரியதாகிவிட்டது.

தமிழ்ப் பகுதிகளில் செயலாற்றிக் கொண்டிருக்கும் அமைதிப்படையை இனிமேலும் நடுநிலைப்படை என்று கொள்ள முடியாது. அது போரைக் கட்டுப்படுத்தவும் இல்லை; அமைதியைப் பேணவும் இல்லை. போராட்டம் தீவிரமடைவதைத் தடுப்பதற்குப் பதிலாக, வன்செயலையும் போரையும் தீவிரப்படுத்தியிருக்கின்றது. அமைதிப்படை ஆட்சி அதிகாரங்களைச் சுவீகரித்துக் கொண்டு, இந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் நேரடியாகத் தலையிட்டிருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் பிரசன்னமாகி இருக்கும் அமைதி காக்கும் படை, ஓர் ஆக்கிரமிப்பு என்பது விடுதலைப் புலிகளின் தீர்க்கமான முடிவாகும்'' (சுதந்திர வேட்கை -பக். 291-292).

இது போன்ற கருத்துகள் வெளிவரவும் ராஜீவ் காந்தி - பிரேமதாசா இடையே மோதல் போக்கு தலைதூக்கிற்று. தம்மை விமர்சிக்க விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பளித்து அதைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்த முனைவதாகவும் ராஜீவ் கண்டார். இந்திய வெளியுறவு அமைச்சகம் இச் செயலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.

கொழும்பிலுள்ள இந்தியாவுக்கான தூதுவர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ""ஸ்ரீலங்காவில் உள்ள அமைதிப்படையின் பங்கும் பணியும் பற்றி, பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ஓர் அணியின் கருத்தை ஸ்ரீலங்கா அரசின் அறிக்கைகள் வெளிப்படுத்தியிருப்பதை இந்தியத் தூதுவரகம் கருத்தில் கொண்டுள்ளது. அமைதிப்படை இந்த நாட்டுக்கு வந்த சூழ்நிலை பற்றியோ, இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா அரசுகளினால் அதனிடம் கூட்டாக ஒப்படைக்கப்பட்ட கடமைகள் பற்றியோ, அதன் பணியில் உள்ள இடையூறுகள் பற்றியோ, ஸ்ரீலங்காவின் ஐக்கியம் மற்றும் அதன் இறையாண்மையைப் பாதுகாக்கும் முயற்சியில் புரிந்த தியாகங்கள் பற்றியோ அறிக்கைகள் குறிப்பிடவில்லை. தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தையின் நோக்கம் அவதூறுப் பிரசாரமாக இருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அனைவரும் வன்செயலைக் கைவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவதாக அதன் இலக்கு இருக்க வேண்டும் என்றே இந்தியத் தூதரகம் கருதுகிறது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமைச்சர்களது அணியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, விடுதலைப் புலிகள் சார்பில் இந்தியத் தூதுவரக அறிக்கைக்கு பதிலளிக்க விரும்பினர். பலத்த வாக்குவாதங்களுக்குப் பின்னர், ஆயுதங்களை ஒப்படைக்க 72 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டது. இன்று 20 மாதங்கள் ஆன நிலையிலும் அதே போராட்டம் நடைபெறுகிறது. ஏராளமான தமிழ் மக்கள் உயிர் துறந்ததை ஸ்ரீலங்கா அரசு கவனத்தில் கொள்ளவில்லை. தமிழ் தேசிய ராணுவம் என்ற பெயரில் அமையும் ராணுவப்படை எதற்காக என்றும் புலிகள் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

பேச்சுவார்த்தைகளில் அரசின் பிரதிநிதிகளாக அதிபரின் செயலாளர் கே.எச்.ஜே. விஜயதாசா, வெளியுறவுச் செயலாளர் பெர்னார்ட் திலகரட்ன, அதிபரின் ஆலோசகர் பிரட்மன் வீரக்கூன், பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் சிறில் ரணதுங்க, பாதுகாப்புச் செயலாளர் டபிள்யூ.டி. ஜெயசிங்கா, தேர்தல் ஆணையாளர் ஃபீலிக்ஸ் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர்கள் குழுவில் பிரதான வழிநடத்துனராக எ.சி.எஸ். ஹமீதும், இதில் கலந்துகொள்ளும் அமைச்சர்களாக வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னா, கைத்தொழில் அமைச்சர் ரனில் விக்ரமசிங்கா, வீட்டுவசதித் துறை அமைச்சர் சிறீசேன கூரே, முதலில் சேர்க்கப்பட்டனர்.

பின்னர் மே 18-ஆம் நாள் நடந்த கூட்டத்தில் மேலும் இரு அமைச்சர்களாக யூ.பி. விஜேக்கூன் (பொது நிர்வாகம், மாகாண சபை, உள்நாட்டு அலுவல் துறைகள்) பி.தயாதரன் (நிலம், நீர்ப்பாசனம், மகாவலி அபிவிருத்தி துறைகள்) கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் மே 23, 27 தேதிகளில் சிங்களக் குடியேற்றம் குறித்து முடிவுக்கு வருவது குறித்துப் பேசப்பட்ட நிலையில், இறுதியில், நிரந்தரப் போர் நிறுத்தம் குறித்துப் பேசுவதற்கு முன்பு புலிகளின் பேச்சாளர்கள் தாங்கள் பிரபாகரனைச் சந்தித்துப் பேசுவதன் அவசியத்தை வலியுறுத்தினர். இதனையொட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மே 30-ஆம் தேதி, ஹெலிகாப்டரில் வன்னிக் காட்டுப் பகுதிக்குப் புறப்பட்டனர்.

135: பிரபாகரனுடன் சந்திப்பு!

பிரேமதாசாவின் பேச்சுத் தொடர்பாக வே.பிரபாகரனைச் சந்திப்பது என்பது 1987-ஆம் ஆண்டு அமைதிப் படையுடனான போர் ஏற்பட்ட பிறகு ஏற்பட்ட நிலைகளை நேரில் அறிவதே பாலசிங்கம் தம்பதியின் முக்கிய நோக்கமாக இருந்தது. வன்னிப் பகுதி அமைதிப் படையின் முக்கிய இலக்காகும். இந்தக் காட்டுக்குள் இருந்துதான் பிரபாகரன் தனது ஆணைகளைப் பிறப்பித்து வருகிறார். எனவே காட்டுக்குள் இருந்து பிரபாகரனை வெளியே இழுக்கும் நோக்கத்துடன் வான் வழியாக டன் கணக்கில் வெடிமருந்துகள் வீசப்பட்ட பகுதி இது.

சிறப்பு அதிரடிப் படை, காடுகளில் புகுந்து தாக்கும் இன்னொரு சிறப்பு அதிரடிப் படை என காட்டினுள் புகுந்து அமைதிப் படை, தாக்குதலை நடத்தியது. அவர்கள் களைத்துப் போகவும், வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தொடர் தாக்குதல் -இவ்வாறாக கிழக்குக் கரையான முல்லைத் தீவிலிருந்து ஒட்டுசுட்டான் வரையிலும், வடகிழக்கில் கிளிநொச்சி வரையிலும் ஆயிரமாயிரம் துருப்புகள் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு மற்றும் தேடல் முயற்சிகள் அமைதிப் படையால் மேற்கொள்ளப்பட்ட பகுதியாகும் இது.

பிரபாகரனைப் பிடிக்கும் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் அமைதிப் படை தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் பாலசிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஹெலிகாப்டரில் வன்னிக் காட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்த முறை ஹெலிகாப்டர் முல்லைத் தீவில் உள்ள அலம்பில் காடுகளில் தரையிறங்கியது. இதன் அருகேதான் பிரபாகரன் தங்கியிருந்த 1:4 என்கிற குறியிடப்பட்ட தலைமைப் பாசறை இருந்தது. (சுதந்திர வேட்கை, பக். 302).

அமைதிப் படையின் உளவுப் பிரிவு இந்தப் பகுதியை நோட்டமிட்டுக் கொண்டிருந்ததால் எந்தவகைத் தாக்குதலுக்கும் எதிர்கொள்கிற நிலையில் புலிகள் அங்கு ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தனர். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பேச்சுவார்த்தைக் குழுவினரை மகளிர் பிரிவு தளபதி சோதியா தனது குழுவினருடன் நேரில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

இந்தப் பயணம் குறித்து அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிடுகையில் இந்தப் பாதை அவ்வளவு சுலபமாக இல்லையென்றும், தடமில்லா காட்டுப் பகுதி சிற்றாறுகள், முட்செடிகள் நிறைந்திருந்த பகுதி என்றும் எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி நீரிழிவு நோய் காரணமாக பாலசிங்கத்தால் அதிக தூரம் நடக்க முடியவில்லை என்றும், எனவே இரு கழிகளின் இடையே தொட்டில் போல கட்டி, அதில் அவரை அமர வைத்துப் போராளிகள் தோளிலே தூக்கிச் சென்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாலசிங்கம் குழுவினரை அழைத்துச் செல்லும் பொறுப்பு அப்போதைய மூத்த தளபதிகளில் ஒருவரான சங்கருக்கு வழங்கப்பட்டிருந்தது. வழியெங்கும் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்ததால், கவனமாக அவர்கள் நடந்து செல்லவும் பணிக்கப்பட்டிருந்தது.

வழியெங்கும் குண்டுவீச்சுக்கு ஆளான மரங்கள் முறிந்தும், நீர்நிலைகள் கலங்கியும் காட்சியளித்த சூழ்நிலையில், திடீரென விடுதலைப் புலிகள் சீருடையில் காணப்பட்டனர். அருகில்தான் பாசறை என்பது புலப்பட்டது. ஆனால் பாசறை அடையாளமே தெரியவில்லை. ஓரிடத்தில் அவர்கள் நின்றபோது அந்த இடத்தில் எதிரிகள் கண்டுபிடிக்க முடியாத வகையில் உருமறைக்கப்பட்ட வடிவில், பிரபாகரனின் பாசறை அமைந்திருந்தது. சுற்றிலும் புதிய போராளிகளுக்குப் பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு பகுதியில் பெண் போராளிகளுக்கு உயர் பயிற்சியும் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஜெயந்தி அந்தப் பயிற்சியை அளித்தார்.

பாசறையில் கிட்டுவும் இருந்தார். யாழ்ப்பாணத் தடுப்புக் காவலில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டபின் நேரடியாக இங்கு வந்து சேர்ந்து கொண்டதாக அடேல் குறித்துள்ளார். பொட்டு அம்மானும் அப்போது அங்கேதான் இருந்தார். தமது காயங்கள் முற்றாக குணம் அடைந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அவர் தளபதியாக இருந்து கொரில்லாப் போரை அமைதிப்படைக்கு எதிராக நடத்தி வந்தார். இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்க அவரும் அழைக்கப்பட்டிருந்தார். கபில் அம்மான் என்கிற மூத்த போராளியும் இந்தச் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.

கொழும்பில் இதுவரை நடந்த சந்திப்புகளின் விளைவாக உருவான கருத்துகள் குறித்து பாலசிங்கம், பிரபாகரனுக்கு விளக்கினார். இதன் சாதக, பாதகமான அம்சங்களுடன் சேர்த்தே, எதிர்கால நன்மை கருதி பாலசிங்கம் தொடர்ந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கப்பட்டது.

அமைதிப் படையை வெளியேற்றுவது குறித்து இலங்கை, இந்திய அரசுகளுக்கிடைய மேடைப் பேச்சில் வெடித்தது மோதல். பிரேமதாசா, கொழும்பு நகரில் நடைபெற்ற பெüத்த சமய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அமைதிப் படை ஜூலை இறுதிக்குள் இலங்கையை விட்டு வெளியேறுமாறு, இந்தியப் பிரதமரிடம் கேட்க இருப்பதாகவும், நவம்பர் மாதத்தில் இலங்கையில் சார்க் மாநாட்டை நடத்த இருப்பதால், அப்படி மாநாடு நடைபெறும்போது, இந்த நாட்டில் அந்நிய ராணுவம் இருப்பது எந்த வகையிலும் உயர்ந்ததாக இருக்க முடியது என்றும் பேசினார்.

இந்தப் பேச்சு பத்திரிகைகளில் வெளி வந்ததைப் பார்த்து எரிச்சலடைந்தது இந்தியா, இந்தப் பேச்சை வலியுறுத்தி, ஜூன் 2 ஆம் தேதி பிரதமர் ராஜீவ் காந்திக்கு, பிரேமதாசா ஒரு கடிதம் எழுதினார். இந்த கடிதம் ராஜீவ் காந்திக்கு கோபத்தை வரவழைத்தாலும், அவர் இதற்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. மாறாக, வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் "ஆயிரக்கணக்கான வீரர்கள் கொண்ட ஒரு படைப் பிரிவு மற்றும் படைக்கலன்களை இரண்டு மாதத்தில் திரும்பெறுவது இயலாத ஒன்று' என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதேநேரம் பிரதமர் ராஜீவ் காந்தி, பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, "ஈபிஆர்எல்எஃப் அரசுக்கு உரிய அதிகாரங்களை வழங்கி, வடக்கு கிழக்கு மக்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்யப்படும் வரை அமைதிப் படையின் பணி முடிவுற்றதாக ஆகாது' என்றார். மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், "படைகள் திரும்பப் பெறுவது குறித்து இரு அரசுகளும் கலந்து பேச வேண்டியதும் இருக்கும்' எனவும் தெரிவித்தார். (ஜூன் 14, 1989)

இந்த நிலையில்தான், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான இரண்டாம் கட்ட பேச்சு ஜூன் 16 மற்றும் 19 தேதிகளில் நடைபெற்றது. இப் பேச்சுவார்த்தைக்கென பாலசிங்கம் உளளிட்டோர் மீண்டும் கொழும்பு வந்தனர். இம்முறை, இவர்களுடன் மேலும் நான்கு பேர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் லாரன்ஸ் திலகர், எஸ். கரிகாலன், சமன் ஹசன், அபூபக்கர் இப்ரகீம் ஆகியோர்ஆவர். அதேபோன்று அரசுத் தரப்பிலும் மேலும் இரு அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர்.

முதல் கட்ட பேச்சில், பேச்சு நடத்துபவராக இருந்த அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீது, இலங்கையிலிருந்து அமைதிப் படை வெளியே அனுப்புவதில் அதிபர் உறுதியாக இருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் என்ன நோக்கத்திற்காகப் போடப்பட்டதோ அது நிறைவேறவில்லை என்றும், வடக்கிலும் தெற்கிலும் அமைதியற்ற சூழல் நிலவுவதாகவும், காலாவதியாகிவிட்ட ஒப்பந்தமாக இருக்கும் நிலையில் அமைதிப் படையும் வெளியேறத்தான் வேண்டும் என்று அதிபர் கருதுவதாகவும் அவர் தனது முன்னுரையில் வெளிப்படுத்தினார். வடக்கு-கிழக்கு மாகாண அரசுக்கென ஒரு படையமைக்க ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் அதிபர் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

இவையெல்லாவற்றையும் விட இந்திய அமைதிப் படை யாருடன் மோதுகிறதோ அவ்வமைப்பும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைதிப் படை தேவையா என்பது குறித்து அதிபர் வினா எழுப்புகிறார் என்றும் தெரிவித்தார்.

ஹமீது மேலும் பேசுகையில், இந்தியாவின் நிலைமைகள் குறித்து, முந்தின கூட்டத்தில் கலந்துகொண்டபோது பேசியது போலன்றி வெளிப்படையாகத் தெரிவித்தார். இவை யாவும் விமரிசனங்களாகும்.

பேச்சுவார்த்தைகளின் இறுதியில் தமிழ் தேசிய ராணுவம் குறித்து இந்தியாவிடம் பேசும்போது குறிப்பிட வேண்டிய அம்சம் என எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

பேச்சின் இறுதியில், போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள், அரசு இரண்டும் சேர்ந்தே அதாவது கூட்டாக அறிவிப்பது என முடிவெடுத்தனர்.

136: இந்தியா - இலங்கை மோதல் முற்றுகிறது!

அமைதிப் படையைத் திரும்பப் பெறுவது குறித்து பிரேமதாசா எழுதிய கடிதத்துக்கு ஜூன் மத்தியில் பிரதமர் ராஜீவ் காந்தி பதில் எழுதினார். அந்தக் கடிதத்தில், ""இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெறுவது, ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவது ஆக இரு விஷயங்கள் குறித்து, இரு தரப்பாரும் பேசி முடிவுக்கு வரவேண்டிய விஷயமாகும். மேலும், ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதும், அமைதிப் படையைத் திரும்பப் பெறுவதும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும்'' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் பிரேமதாசாவின் விருப்பப்படி, ஜூலை இறுதியில் அமைதிப்படை இந்தியா திரும்ப வாய்ப்பில்லை என்று கண்டதும் அவர் எரிச்சலுற்றார். அதுவும் தவிர, வடக்கு - கிழக்கு மாகாண சபைக்கு பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வலியுறுத்துவதன் மூலம் அதற்கான முயற்சியிலும் இந்தியா தீவிரம் காட்டியது.

இதன் வெளிப்பாடுதான் தமிழ் தேசிய ராணுவத்திற்குக் கட்டாய ஆள் சேர்ப்பு. அதே நேரத்தில், இந்திய அமைதிப் படை இலங்கை மண்ணைவிட்டு அகலக்கூடாது என கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்தப் பணியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான குழுக்கள் தீவிரம் காட்டின. இது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்ட (5 ஜூன் 1989) அறிக்கையில், "நாம் முன்பு இந்திய அரசிடம் (அ) தமிழ், முஸ்லிம் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்றும் (ஆ) இந்திய அமைதிப்படை வெளியேற வேண்டும் என்றும் (இ) சர்வதேச அமைதிப்படை ஒன்று இலங்கை வரவேண்டும் - என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்த கோரிக்கை வைத்தோம். அன்று அதை ஏற்காமல், இன்று கையெழுத்து இயக்கம் நடத்துவது ஏன்? என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதே நிலையில்தான், இலங்கையின் வடக்குப் பகுதி மக்களின் நிலையும் இருந்தது. கட்டாய ஆள்சேர்ப்பு என்பது இளைஞர்களை வீட்டிலேயே முடக்கிப் போட்டது. வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் அரசுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும், நிதி அளிக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்ட நிலையில் பிரேமதாசா அரசு இக்கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை.

இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இணைந்து போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தனர். இதனையொட்டி, விடுதலைப் புலிகள் இயக்கம் மீது போர் நடவடிக்கைக் கூடாது என்றும், போர் தொடர்ந்தால் அது, தங்களின் சமாதானப் பேச்சுக்கு ஊறு விளைவிப்பதாக அமையும் என்றும் தில்லிக்கு இலங்கை அரசு செய்தி அனுப்பியது.

ஆனால் தில்லியோ, இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் அமைதிப்படை வந்த பின்னர் நேரடிப் போர் நடைபெறவில்லை என்றும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் அந்தப் போர், அமைதிப்படை - விடுதலைப் புலிகள் இடையேதான் நடைபெற்று வருவதாகவும் பதில் அளித்தது.

அதுமட்டுமன்றி, "இன்னும் கையளிக்கப்படாத ஆயுதங்களை ஸ்ரீலங்கா அரசிடம் புலிகள் ஒப்படைப்பதுடன், வன்செயல்களை முற்றாகக் கைவிட வேண்டும். அப்படியிருந்தால்தான் போர் நிறுத்தம் அர்த்தமுள்ளதாக இருக்கும்' என்றும் கூறியது.

இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள், அமைச்சர் ஹமீதைத் தொடர்புகொண்டு, "ஆயுதத்தைக் கீழே போடுவது என்ற பிரச்னையைத் தீர்ப்பது ஸ்ரீலங்கா அரசினுடையது என்றும், தமிழ் தேசிய ராணுவம் என்ற பெயரில் வலுவான ராணுவக் கட்டமைப்பை அமைதிப்படை ஏற்படுத்துவதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், புலிகள் ஆயுதக் கையளிப்புக்கு முன்னதாக அமைதிப்படையும், அதன் ஆதரவு பெற்ற குழுக்களும் புலிகளுக்கெதிரான வன்செயலைக் கைவிடுவார்கள் என இந்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு மூலம் இந்தியாவுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.

பிரமேதாசா விடுதலைப் புலிகளின் கருத்துகளை ஏற்று, தனது அடுத்த கடிதத்தில் அவற்றை எதிரொலித்தார். இதற்கு தில்லியில் இருந்து (ஜூலை 11, 1989) வந்த கடிதத்தில், பல்வேறு புகார்களைக் கூறியதுடன் "அமைதிப்படை வெளியேற்றம் குறித்து பேசுவதானால் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஒரு அட்டவணை தயாரிக்கலாம்' என்று தெரிவித்த அக்கடிதம், "அரசுத் தலைவர்களிடையே நம்பிக்கை அடிப்படையில் நடைபெறும் அதிகாரப்பூர்வ கடிதங்கள் ஒழுக்க நடைமுறை விதிகளை மீறி அவை பகிரங்கப்படுத்தும் செயலுக்கும்' பிரேமதாசா மீது நேரடிக் கண்டனம் தெரிவித்தது (சுதந்திர வேட்கை: அடேல் பாலசிங்கம்-பக்.321).

இந்தப் பதிலால் கோபமுற்ற பிரேமதாசா, முப்படைகளின் தலைவர் மட்டுமன்றி, இலங்கையில் உள்ள அமைதிப் படைக்கும் தானே தலைவர் என்ற முறையில் இந்திய அமைதிப்படை ஜூலைக்குள் கட்டாயம் வெளியேற வேண்டும் அல்லது படை முகாமுக்குள் முடங்க வேண்டும் என்ற சட்டபூர்வ உத்தரவை அமைதிப்படைத் தளபதி லெப். ஜெனரல் அமர்ஜித் சிங் கல்கத்துக்கு அனுப்பினார்.

அவரோ, "ஸ்ரீலங்காப் படைகள் தங்களது பாசறையை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட எங்களை நிர்ப்பந்திப்பவர்கள் ஆவார்கள்' என்று எச்சரித்தார் (மேற்கண்ட மேற்கோள்படி).

அமிர்தலிங்கம் முளாயைச் சேர்ந்த இவர், எளிமையானவர். 21 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஆறு ஆண்டுகள் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

கொழும்பில் அமிர்தலிங்கம், மாவை சேனாதிராஜா, யோகேஸ்வரன், சிவசிதம்பரம் ஆகியோர் ஒரே அடுக்குமாடி வீட்டில் கீழும் மேலுமான குடியிருப்புகளில் வசித்து வந்தனர். யோகேஸ்வரனிடமிருந்து அவரது பணியாள் மூலமாக வந்த துண்டுச் சீட்டைப் பார்த்து மேலே குடியிருந்த யோகேஸ்வரன் வீட்டுக்குப் போனார் அமிர்தலிங்கம். அவர் மேலே சென்ற சிறிது நேரத்தில் வெடிச் சத்தம் கேட்டு அமிர்தலிங்கம் மனைவி மங்கையற்கரசி மேலே சென்று பார்க்க யோகேஸ்வரன் மார்பில் குண்டு துளைத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்தார்; அமிர்தலிங்கம் தான் அமர்ந்திருந்த இடத்திலேயே தலையைத் தொங்கவிட்டபடியே சாய்ந்து கிடந்தார். பயந்து போன மங்கையற்கரசி அவரது தலையைத் தூக்கவும் அவர் இறந்ததைக் கண்டார். சுவர் மூலையில் சிவசிதம்பரம் காயங்களுடன் கிடந்தார் (13 ஜூலை 1989) என்று "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூலில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் இறந்த விதம் குறித்து, சி.புஷ்பராஜா குறிப்பிட்டுள்ளார்.

இக்கொலை முயற்சியில் ஈடுபட்ட விசு, அலோசியஸ், சிவகுமார் மூவரும் அந்த வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் மெய்க்காவலர்களின் தாக்குதலில் இறந்து கிடந்தார்கள்.

இந்த மரணத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் சுட வந்தவர்கள் புலிகள் இயக்கத்தில் முன்னாள் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்திய அரசின் ராஜதந்திரியான முக்த் துபேயை, அமிர்தலிங்கம் இந்தியத் தூதுவரகத்தில் ஜூலை 12-இல் சந்தித்ததாகவும், அடுத்த நாள் பி.ஜி. தேஷ்முக்கை சந்திக்க இருந்ததாகவும் ஒருதலைப்பட்சமான தமிழீழப் பிரகடன அறிவிப்பு பற்றிய வதந்தி நிலவிய நேரம் அது என்றும், தமிழ் மக்களுக்கு விடிவு விடுதலைக் கூட்டணி மூலம் ஏற்படும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் கூறியதாகவும் மாவை.சேனாதி ராஜாவின் குறிப்பை வைத்தும் ஒரு தகவலை சி.புஷ்பராஜா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இன்னொரு வாதத்தையும், அவர் அந்நூலில் பதிவு செய்துள்ளார். அதாவது அதிபர் பிரேமதாசா இலங்கைக்கு இந்தியா மூலமான தீர்வு தேவையில்லை என்று முடிவு எடுத்த நிலையில், தாம் விடுதலைப் புலிகளுடன் நட்பு கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்தியப் பிரதிநிதிகள் அமிர்தலிங்கத்தை அழைத்துப் பேசியதை விரும்பாமல் அவரே கூட இதுபோன்ற கொலைகளை ஆட்களை ஏவி செய்திருக்கலாமென்றும் கூறியிருக்கிறார்.

இதற்கு மேலும் ஒரு தகவலைக் கூறியுள்ளார் சி.புஷ்பராஜா, "ஒருமுறை அடையாறில் இருந்த புலிகளின் அலுவலகம் சென்று, பிரபாகரனுடன் பேசிவிட்டு தனது காரில் அமிர்தலிங்கம் ஏறும்போது, கார்க் கதவைச் சாத்திவிட்ட பிரபாகரன், ""அண்ணா, நீங்கள் கவனம்; உங்களைக் கொல்ல மற்ற இயக்கத்தவர்கள் முனையலாம்'' என்று எச்சரிக்கை செய்தார் என 1993-ஆம் ஆண்டு என்னுடன் பேசியபோது மங்கையற்கரசி அமிர்தலிங்கம் சொன்னார் என்றும் (பக்.509-510) கூறியிருக்கிறார்.

இவ்வகையான வாதங்களுக்குக் காரணமே எந்த இயக்கமும் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைக்குப் பொறுப்பு ஏற்காததுதான்.

137: பிரபாகரன் கொலையுண்டதாகப் புரளி!

அமிர்தலிங்கத்தின் கொலையை இந்திய அமைதிப் படை பிரசார நோக்கிற்காகப் பயன்படுத்திக் கொண்டது. அமைதிப் படை இருக்கும்போதே கொலை நிகழ்கிறது என்றால், அமைதிப் படை இல்லாத நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று கூறியது.

ஆனால் உண்மையில் இந்தக் கொலை என்பது கொழும்பு நகரில், இலங்கையின் தலைநகரில் நடந்திருக்கிறது. அமைதிப் படை இருப்பதோ வடக்கு-கிழக்கில். இருந்தாலும் மேற்கண்ட வாதம் முன்னெடுக்கப்பட்டது.

புலிகளை இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்தியதன் நோக்கம் என்னவென்றால், திம்பு பேச்சின் மீது வைத்த அடிப்படைக் கொள்கைகளைப் புறக்கணித்தது குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பெறுவது குறித்தும் புலிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியை விமர்சித்திருந்த காரணத்தால், கொலையில் தொடர்பிருக்கலாம் என்று வாதிடப்பட்டது.

ஆனால் லண்டனில் இருந்த புலிகளின் அலுவலகம், "அமிர்தலிங்கம் கொலையில் தங்களுக்குத் தொடர்பில்லை' என்று மறுத்தது.

அமிர்தலிங்கம் கொலை நடந்த அதே வாரத்தில் "பிளாட்' இயக்கத் தலைவர் முகுந்தன் என்கிற உமா மகேசுவரனும் கொழும்பில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு கட்சியின் உட்பூசல்தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அவர் இந்திய உளவுப் பிரிவையும் அதன் செயல்பாட்டையும் "டைம்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் மூலம் அம்பலப்படுத்தியிருந்த நேரத்தில் அவரது கொலை நடந்ததால், பல்வேறு யூகச் செய்திகள் வெளியாயின.

பிரேமதாசாவின் ஜூலை கெடுவைத் தொடர்ந்து, அமைதிப் படை முல்லைத் தீவுப் பகுதிகளில் ஏராளமான துருப்புகளை இறக்கி, கடுமையாகத் தாக்கியது. விடுதலைப் புலிகள் 1989 ஆகஸ்ட் மாதம் 9 மற்றும் 21 ஆகிய தேதிகளில் வெளியிட்ட மூன்று அறிக்கைகளின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் அமைதிப் படையினால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதிப் படையினர் வைத்த கண்ணி வெடியால் மதியாமதி, ஆனந்தப் புளியங்குளம் வீதியில் உள்ள நொச்சிகுளத்தில் ஆறு பேர் இறந்தனர் என்றும்,

கிழக்கு மாகாணத்தில் அகதிகள் முகாம்களிலிருந்து திரும்பவும் தத்தமது இடங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் மீன்பிடித் தடையாலும், விவசாயம் செய்ய ஏற்பட்ட தடையாலும் எதுவும் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அகதிகளாக இருந்தபோது கொடுக்கப்பட்ட நிவாரணமும் நிறுத்தப்பட்டுவிட்டது. தவிர்க்கமுடியாமல் பயிர் செய்தால், தடையை மீறி செய்யப்பட்ட விவசாயம் என்று கூறி அவை எரிக்கப்படுகின்றன.

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா, ஆத்தியடி, மணற்காடு, பச்சையடிக்கல், கல்லடைப்பு, சுங்கான்குழி, வல்வெட்டுவான், சின்னத்தீவு, பாலத்தடி, மதிரடியச்சேனை ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட விவசாயப் பயிர்கள் இவ்வாறு எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

உள்ளூர்க் கடைகளையும் மூடும்படி உத்தரவிடப்பட்டுவிட்டது. காரணம் குறிப்பிட்ட அளவுதான் பொருட்கள் வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதிகப்படியான பொருட்கள் வாங்கினால், அவை மறைந்திருக்கும் கொரில்லாப் படையினருக்குச் செல்லும் என்று தவறாகக் கருதப்பட்டது. அதிகப்படியான பொருள்கள் தேவையென்றால் ஈபிஆர்எல்எஃப், ஈஎன்டிஎல்எஃப், டெலோ இயக்க அலுவலகங்களில் அனுமதிச்சீட்டுப் பெற வேண்டும் என்ற நெருக்கடியும் கொடுக்கப்பட்டது.

வடக்கு-கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜ பெருமாள், இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி அரசு நடக்கத் தவறினால் தனி அரசான ஈழப் பிரகடனத்தைச் செய்யப் போவதாக அறிவித்தார். அறிக்கையில் அவர் மேலும் கூறுகையில், "அமைதிப் படையோடு, தமிழ் தேசிய ராணுவமும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும்' என்றும் கூறினார்.

விடுதலைப் புலிகள் மரபு ரீதியான தாக்குதலின்றி கொரில்லாத் தாக்குதலில் ஈடுபட்ட போதிலும், அவர்களுக்கு உடனடியாக ஆயுதங்கள் தேவைப்பட்டன. இந்த ஆயுதத் தேவைக்காகவே அவர்கள் அமைதிப் படை இலக்குகளைத் தாக்கி அழித்து, ஆயுதங்களைக் கைப்பற்றிச் சென்றார்கள். ஆயுதமின்றி புலிகள் மறைவிடங்களில் பதுங்கினார்கள்.

இந்த நிலையில் அதிரடிச் செய்தியாக விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன் மாத்தையாவினால் கொலை செய்யப்பட்டார் என்று செய்திகள் வெளியாயின. இந்தத் தகவல் தமிழகத்தின் பாரம்பரியப் பத்திரிகையிலேயே முக்கியச் செய்தியாக வெளியாயிற்று. இந்தச் செய்தியை வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் உறுதி செய்ததாகவும் அப்பத்திரிகை மேற்கோள் காட்டியது.

லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் ஓய்வு பெற்றதும் அமைதிப் படையின் பொறுப்பை ஏற்ற அமர்ஜித் சிங் கல்கத் என்கிற ஏ.எஸ். கல்கத் ஓர் அரசியல்வாதியைப் போன்று அறிக்கைகள் விடுபவர் என்று விமர்சிக்கப்பட்டவர். இவருக்குச் சரியான இணையாக பார்த்தசாரதி என்கிற மக்கள் தொடர்பு அதிகாரி. இவர், சென்னை நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களை அழைத்து விருந்தளித்துக் கொண்டே இருப்பார்.

இவ்வாறான சென்னைப் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், "கல்கத்- நீங்கள் இதுவரை சுட்டு வீழ்த்திய புலிகளின் எண்ணிக்கை பல ஆயிரம் வருகிறதே; புலிகளிடமிருந்து கைப்பற்றியதாக நீங்கள் கூறும் ஆயுதங்களைக் கணக்கிட்டால் அது சிங்களப் படையின் ஆயுதத்தைவிட அதிகம் இருக்கும் போலிருக்கிறதே' என்று செய்தியாளர்களில் ஒருவர் கேட்டதும், அவர் வாயடைத்துப் போனார். (பழ. நெடுமாறன் தனது நூலில்)

அதேபோன்று "பிரபாகரனை வளைத்து விட்டோம் இனி தப்ப முடியாது' என்று பேட்டியளித்ததும், இந்தியப் பத்திரிகைகள் மட்டுமன்றி, உலகப் பத்திரிகைகளும் இந்தச் செய்தியை பெரிய அளவில் வெளியிட்டன. ஆனால், அப்படியொரு நிகழ்ச்சி நடைபெறவே இல்லை.

இப்பொழுதும் கூட பிரபாகரன் கொல்லப்பட்டதான செய்தியும், கல்கத் பரப்பிய செய்தியாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளே அதிகம் இருந்தன. ஆனால், இவ்வகைப் பிரசாரத்தைப் புறக்கணித்துவிடவும் முடியாது என்று அப்போது கூறப்பட்டது.

காரணம், இதுபோன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதில் பிரபாகரன் தனக்கேயுரிய சாதுர்ய நடவடிக்கைகளால் தப்பியிருக்கலாம் என்பதும், வரலாற்றைக் கூர்ந்து நோக்குகிறவர்களின் கருத்தாக இருந்தது. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைகள், முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரன் கொலை, மாத்தையாவினால் பிரபாகரன் கொலையானதாக வந்த பத்திரிகைச் செய்தி- ஆகிய இம் மூன்றும் ஒரே மூளையில் உதித்தவையாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் அப்போது முன்வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளினதும், பிரபாகரனினதுமான தேவை எவ்வாறு உணரப்பட்டது என்ற கேள்விக்கு "முறிந்தபனை' நூலின் 517 மற்றும் 518-ஆம் பக்கத்தில் விடை உள்ளது. அவை வருமாறு:

""கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் அரசியல் அரங்கில் புலிகளே பிரதான பாத்திரத்தை வகித்து வந்திருக்கிறார்கள். தமிழ் பிரதேசங்களில் இவர்கள் நடத்திய யுத்தம் உலகின் நாலாவது பெரிய ராணுவமும் அதன் உள்ளூர் சகபாடிகளும் சேர்ந்து நடத்திய கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கைகளும், ஈவிரக்கமற்ற படுகொலைகளும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் கசப்பையும், வேதனையையும் பெருகிடச் செய்து, அதுவே ஆட்கள் தொடர்ந்து போய் புலிகளிடம் சேர்வதற்கான மூலாதாரமாகத் திகழ்ந்தது.

புலிகளின் யுத்த தந்திரோபாயங்களில் மக்கள் பிரமைகள் கலைந்தவர்களாய் இருந்தாலும் தமிழ் லட்சியத்தின் காவலர்களாகவே புலிகள் பெரிதும் இனங் காணப்பட்டிருந்தனர். இந்திய அமைதிப் படை குறித்து நடைமுறை சாத்தியமான சிறந்த நிலைப்பாட்டை புலிகள் கைக்கொண்டிருக்க வேண்டும் என்று மக்கள் கருதியிருந்ததோடு, ஒருங்கிணைந்த வட, கிழக்கு மாகாணங்களில் அமையவிருக்கும் மாகாண சபையிலும் புலிகளே தலைவர்களாக வருவதையும் கண்டு மகிழ மக்கள் விரும்பியிருந்தனர் என்று கூறுவதும் சரியானதேயாகும்'' என்று கூறுகிறது அந்த நூல். மேலும் அந்நூலில், "சமூகத்தின் ஒரு பகுதியினர் புலிகள் மீது நம்பிக்கை வைத்து, ஒத்துழைப்பும் நல்கிக் கொண்டிருந்தனர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புலிகளின் தலைவர் இறந்ததாக வந்த பத்திரிகைச் செய்தி, மக்களைத் திகைப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

138: வல்வெட்டித் துறை படுகொலை!

இந்திய அமைதிப் படையின் செயல்பாடுகளில் கடும் கண்டனத்துக்கு ஆளான சம்பவம் வல்வெட்டித் துறைப் படுகொலை ஆகும். இந்தப் படுகொலை நிகழ்ச்சிகளை, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் சம்பவத்துடனும், அமெரிக்காவின் வியட்நாம் போர்க் காலத்தில் நடைபெற்ற மயிலாய் சம்பவத்துடனும் உலகப் பத்திரிகைகள் ஒப்பீடு செய்கின்றன.

பல நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்படவும், 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்படவும், 45 கடைகள் எரித்து சாம்பலாக்கப்படவும், 62 வாகனங்கள், 12 மீன்பிடிப் படகுகள், 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்படவும், தங்க நகைகள், பெருந்தொகையான பணம், மின்னணுப் பொருள்களை அப்பகுதி மக்கள் இழக்கவும் காரணமான சம்பவத்தின் ஆரம்பம் என்பது வல்வெட்டித்துறை சந்தைப் பகுதியில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் நடந்த மோதல்தான்.

இந்த மோதல் காரணமாக அமைதிப் படையைச் சேர்ந்த 6 படைவீரர்கள் இறந்தனர். 11 பேர் காயமுற்றனர். இதனால் கொதிப்புற்ற, வல்வெட்டித்துறையைச் சுற்றியிருந்த மூன்று முகாம்களிலும் முடங்கியிருந்த ராணுவத்தினர், வல்வெட்டித் துறையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அந்தப் பகுதியில் 3 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஊரில் உள்ள ஆண்களும், பெண்களும் வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடந்தனர். சிலர் மினி தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு ஊரடங்கு காரணமாக வீட்டிலும், மற்ற இடங்களிலும் முடங்கிக் கிடந்தவர்களை வீட்டினுள் புகுந்தும், அவர்களை வெளியே இழுத்து வந்து போட்டும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர், அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க அங்கு முகாமிட்டிருந்த பிரான்ஸ் நாட்டு மருத்துவக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஊர்ச் சந்திப்பில், பொது இடங்களில் கும்பல், கும்பலாக சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சிதறிக் கிடக்க, அவர்களது உடல்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம், "அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற மோதலில் எதிர்பாராதவிதமாக பொதுமக்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்; புலிகளின் தாக்குதல் விளைவாக வீடுகளும், கடைகளும் சேதமடைந்தன. மோதலில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்' என்று இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் செய்தி ஒலி, ஒளி பரப்பானதுடன் முடித்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் இச் சம்பவம் பூதாகரமான நிகழ்ச்சியாக மாறியது எப்போது என்றால் இந்தப் படுகொலைகளும், சேதங்களும் குறித்து லண்டன் நாளிதழான "த சன்டே டெலிகிராப்' 13.8.1989-இல் அதன் தில்லி நிருபர் ஜெரிமி காவ்ரன் மற்றும் லண்டன் வெளியீடான "ஃபைனான்ஸியல் டைம்ஸி'ன் தில்லி நிருபர் டேவிட் ஹவுஸ்கோ, இந்தியப் பத்திரிகையான "த ஸ்டேட்ஸ்மன்' (18-8-1989) நாளிதழ்களில் தலையங்கம் மற்றும் செய்திகள் வெளியிட்டதன் காரணமாகவே வெளியுலகுக்குத் தெரியவந்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் (24.8.1989) தலையங்கம் தவிர, அதன் கொழும்பு நிருபர் ரீட்டா செபஸ்தியான் அரைப்பக்க அளவில் மிகப்பெரிய செய்திக் கட்டுரை ஒன்றினை ‘ஐடஓஊ ஹற்ழ்ர்ஸ்ரீண்ற்ண்ங்ள் ர்ய் ஸ்ரீண்ஸ்ண்ப்ண்ஹய்ள்: ஙஹள்ள்ஹஸ்ரீழ்ங் ஹற் டர்ண்ய்ற் டங்க்ழ்ர் என்ற தலைப்பில் வெளியிட்டு அதிர்ச்சியூட்டியிருந்தார்.

ஹிந்து நாளிதழ் (2.8.1989) இந்தச் செய்தியை ஆறே வரிகளில் புலிகள் -அமைதிப் படை மோதலில் 23 பேர் மரணம் என்று தெரிவித்தது. அதே பத்திரிகையின் தில்லி நிருபர் கே.கே. கட்டியால் 12.8.1989 தேதியிட்ட செய்தியில், மோதலின்போது புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்று செய்தி வெளியிட்டார். ஹிந்து நிறுவனத்தின் துணைப் பத்திரிகையான ஃப்ரண்ட்லைனில் (ஆக. 19-செப்.1, 1989) ஈரோஸ் இயக்கத் தலைவர் வி. பாலகுமார் கூறியதாக வந்த செய்தியில், மோதலில் பொதுமக்கள் 70 பேருக்கு மேல் இறந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டதாகவும், அங்கு நேரில் சென்று பார்த்தபோது அந்த நிகழ்ச்சி படுபயங்கரமாக இருந்ததாக அவர் தெரிவித்ததாகவும், அதன் செய்தியாளர் டி.எஸ். சுப்ரமணியன் வெளியிட்டிருந்தார்.

மேற்கண்ட செய்திகளின் நறுக்குகள் (ஸ்ரீன்ற்ற்ண்ய்ஞ்ள்) மூலம் அந்தந்தப் பத்திரிகைகளின் பார்வைகள் வெளியாகின்றன. ஆனால், அச் செய்திகளின் மூலம் தெரியவருவது என்னவென்றால், உண்மைகளை அவர்களால் மறைக்க முடியவில்லை என்பதுதான்.

இந்த நிகழ்வுகளின்போது நடந்த, தாக்குதலில் மக்கள் நலன் புரியும் குழுவின் செயலாளராக இருந்து வந்த ஆனந்தராஜாவும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அவரைக் குற்றுயிரும், குலையுயிருமாகக் கொண்டுவந்து மருத்துவமனையில் போடப்பட்டபின்னர், அமைதிப் படைத் தளபதிகளான பிரிகேடியர் சங்கர் பிரசாத், கர்னல் அவுஜியா, கர்னல் சர்மா மற்றும் டாக்டர் கேப்டன் சவுத்ரி முதலானோர் அவரை நன்கு அறிந்திருந்த நிலையிலும், ஒப்புக்கு மட்டுமே அனுதாபம் தெரிவித்து விசாரித்தனர்.

முடிவில் அவர்கள் ஒவ்வொருவரும், ""விடுதலைப் புலிகளின் ஆயுதக் கிடங்கு மற்றும் அவர்கள் ஒளிந்திருக்கும் இடங்களைக் காட்டுங்கள். நீங்கள் இதற்காகப் பயப்பட வேண்டாம், உங்கள் முகத்தில் கருப்புத் துணி போர்த்திதான் நாங்கள் அழைத்துச் செல்வோம், அதன்பின்னர் நீங்களும், உங்கள் குடும்பமும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படுவீர்கள். உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி தருகிறோம்'' என்று வற்புறுத்தியும் அவர் மசியவில்லை.

பின்னர் மறுநாள் மயக்கம் தெளிந்ததும் "காங்கேயன்துறை முகாமுக்குப் போவதைத் தவிர்க்க விரும்பினால் உண்மைகளைச் சொல்லி விடுங்கள்' என்று மிரட்டினர். (காங்கேயன்துறை முகாம் என்பது கொடிய சித்ரவதை முகாம் ஆகும்.) அப்படியும் அவர் பதிலளிக்கவில்லை.

இதனிடையே அவர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், இலங்கையின் இந்தியத் தூதுவர் எல்.எல். மெஹ்ரோத்ராவுக்கு (அதுவரை தூதுவராக இருந்த ஜே.என். தீட்சித் விடுவிக்கப்பட்டிருந்தார்) வல்வெட்டித்துறைக் கொடுமைகள் குறித்து எழுதி, "இந்த அவலங்களை இந்தியப் பிரதமருக்கு தெரியப்படுத்துங்கள். இவ்வகையான சம்பவங்கள் உலகில் எங்குமே நடக்கக் கூடாது என்றும் சொல்லுங்கள்' என வற்புறுத்தி எழுதினார் (21.8.1989).

அதேபோன்ற கடிதம் ஒன்றை, இலங்கை அதிபர் பிரேமதாசாவுக்கும் எழுதினார். தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு ரகசியமாக வந்து தமிழகத் தலைவர்கள், இந்தியத் தலைவர்களைச் சந்தித்து வல்வெட்டித் துறை படுகொலைச் சம்பவத்தை விவரித்தார்.

இதில் முகம் கொடுத்து ஒத்துழைத்த வட இந்தியத் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தச் சம்பவத்தை "இந்தியாவின் மயிலாய்' என்று விவரித்து, இந்தக் கொடுமைகளை நூல் வடிவில் அதாவது, இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் தனது முன்னுரையுடன் வெளியிட்டார். இதன் பின்னரே இந்தச் சம்பவம் குறித்து, இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் செய்தி பரவி, அமைதிப் படை செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் இந்தியாவிலும் அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. திமுக உள்ளிட்ட கட்சிகள் பொய்ச் செய்தி வெளியிடும் தொலைக்காட்சி நிலையச் செய்திகளைக் கண்டித்து "டிவி பெட்டி உடைக்கும்' போராட்டத்தை நடத்தினர்.

139: வி.ஆர்.கிருஷ்ணய்யரின் குற்றச்சாட்டு!

பிரேமதாசாவின் அரசியல் நெருக்கடிகளுக்குப் பதிலாக, விடுதலைப் புலிகளின் மீது தாக்குதல் தொடுத்த அமைதிப் படையையும், தமிழ் தேசிய ராணுவத்தையும் தாக்குப் பிடிக்க வேண்டுமானால், ஆயுதங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் பாலசிங்கமும் அமைச்சர் ஹமீதும் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர் நிகழ்வாக, புலிகளின் தேவைகளுக்கு முல்லைத் தீவு மாவட்ட மணலாறு பகுதியில் உள்ள முகாம் வழியாக ஆயுத உதவி வழங்கப்பட்டதாக அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அமைதிப் படையைத் திரும்பப் பெறுவது தொடர்பாக, பிரேமதாசா விடுத்த கெடு நெருங்கி வந்தது. ஆனால் இந்தியா இது குறித்து அமைதியாகவே இருந்தது.

இந்நிலையில் அமைதிப் படை இலங்கையைவிட்டு வெளியேறவேண்டும் என்று இந்தியாவிலிருந்தும் குரல்கள் கனத்து ஒலித்தன. இந்தக் குரல்கள் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், முன்னாள் மேஜர் ஜெனரல் கரியப்பா உள்ளிட்டவர்களிடமிருந்தும், பத்திரிகைத் தலையங்கங்கள் மூலமாகவும் எழுந்தன.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கருத்து வருமாறு:

கொள்கைப் பிடிப்புள்ள தேசபக்தரான அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு முன்னால் எப்போதும் இருந்திராத அளவுக்கு, ஸ்ரீலங்காவுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிற ஒரு தமிழ்த் தலைவனை நாம் பறி கொடுத்தோம். இந்த அதிபயங்கரமான வன்முறைச் செயலால் நான் அதிர்ந்து போனேன்.

அதைவிடவும் அதிபயங்கரமான சோகம் வேறு ஒன்று உண்டு. அமைதிகாக்கும் இந்தியப் படைக்கு ஆதரவான குரல்கள், இந்தப் படுகொலையை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான். கொழும்புவில் வைத்து அமிர்தலிங்கத்தைப் படுகொலை செய்திருப்பதால், இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கவேண்டும் என்பது அவர்களுடைய நியாயத்துக்குப் புறம்பான வாதம்.

அமைதிப் படைக்கு ஆதரவாகச் செயல்படும் குழுவினர், கொழும்புவிலுள்ள தமிழ்மக்களின் உயிர்களைக் காப்பதற்காக இந்திய ராணுவம், கொழும்புவை நோக்கிப் படையெடுக்கவேண்டும் என்றும் கேட்கக்கூடும். அமிர்தலிங்கம் படுகொலை என்பதை ஒரு சாக்காக வைத்து இந்தியா-ஸ்ரீலங்கா இடையே ஒரு போர் மூளவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

அமைதி காக்கும் இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்திலேயே இருக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதாகவும் இருக்கலாம்; அல்லது மோசமான சிந்தனையாகவும் இருக்கலாம். ஆனால் கொழும்புவில் நடந்த படுகொலைக்கும் அதற்கும் தொடர்பு இல்லை.

கடுமையான நீதித்துறை நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், தில்லி தன்னுடைய அமைதிப் படை அணிகளை ஐரோப்பாவுக்கு அனுப்பியோ, அல்லது இந்தியாவுக்குள்ளே தேடியலைந்தோ புலிகளைத் தேடிப் பிடித்துச் சுட்டுத் தள்ள வேண்டும் என்பதே இதன் பொருள். ஆனால் இந்தவிதமான அசட்டுத்தனமான பிரசாரம் இந்தியாவுக்குள்ளேயே செய்யப்படுகிறது. இதைப் பரப்புகிறவர்களுக்கே இந்தக் கோரிக்கையில் உள்ள முரண்பாடுகள் நன்கு தெரியும்.

ஆனால் நியாயத்தை ஒதுக்கிவிட்டு, வெறியைத் தூண்டிவிடவே விரும்புகிறார்கள். அதன்மூலம், ஓர் அடிமையான நிர்வாக அமைப்பை உருவாக்குதற்காக அமைதிப் படை யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கவேண்டும் என்பதும், அந்த அமைப்பு நாளாவட்டத்தில் பனிபோல் மறைந்துபோய்விடும் என்றும், அதைப் பாதுகாப்பது பாக் நீரிணைக்கு இப்பால் உள்ள ஜவான்களின் கடமையாக இருக்கவேண்டுமென்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.

அண்மையில், பிரபலமான ராஜீவ் விசுவாசியும் அமைதிப் படை ஆதரவாளருமான ஒருவர், ஸ்ரீலங்கா அரசுக்கே எதிரான முறையில் இந்திய ராணுவம், அங்கேயே பணியாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். ஏனென்றால் அமிர்தலிங்கத்தைப் புலிகள்தான் படுகொலை செய்திருக்கிறார்கள். இப்படி அவர் தமக்குத் தாமே நிரூபணமானதாகக் கருதிக்கொண்டு பேசியிருக்கிறார்.

இப்படி ஒரு கூச்சலைக் காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளர்களோ, இந்தியாவுக்கு எதிரான காஷ்மீர் தலைவர்களோ, பாகிஸ்தானில் போய் எழுப்பமுடியுமானால், எந்த இந்தியனாவது பொறுத்துக்கொண்டு பேசாமலிருக்க முடியுமா? இந்தமாதிரியான தில்லி ராஜதந்திரம் இந்தியா-ஸ்ரீலங்கா நல்லுறவை சுமுகமாக மேம்படுத்துமா? ஸ்ரீலங்காவின் ஒற்றுமையிலும் உறுதித்தன்மையிலும் இந்தியாவுக்கு ஆழமான அக்கறை உண்டு என்று 1987 ஜூலை 31-இல் ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்தில் சொன்னார். அவர்களே வரவழைத்த படைகளைத் திரும்ப அனுப்ப, அல்லது வெளியேறச் சொல்லும்போது அப்படிச் செய்ய மறுப்பதும் நம்பிக்கைத் துரோகமான செயலாகும்.

புலிகளின் பங்களிப்பு இல்லாமல் இந்த இனப் பிரச்னையைத் தீர்த்துவைக்க முடியாது. மக்களிடம் அவர்களுக்குள்ள பரவலான செல்வாக்குக்கும் மதிப்பளிக்கவேண்டும். 1983-இல் படுமோசமான படுகொலைகள் நடந்தபோது சிங்களக் காட்டுமிராண்டிகளை அதிவீரத்தோடு எதிர்த்துப் போரிட்டவர்கள் அவர்கள்.

இந்த இடத்தில், யாழ்ப்பாணத்தில் இந்தியா செய்யவேண்டியதென்ன என்பது பற்றி இன்னும் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ்ப் பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகாரம் வழங்குவது சம்பந்தமாக, இந்தியாவையும் மற்ற உலகநாடுகளையும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா ஏமாற்றுகிறார் என்று அமிர்தலிங்கத்துக்கு அதிருப்தி. யதார்த்தமான சட்டமன்ற அதிகாரத்தை மாற்றி வழங்குவது பற்றிக் கொழும்புவை தில்லி நிர்ப்பந்திக்கவில்லை என்றும் அவருக்கு வருத்தம். 1987 ஜூலை முதல், ஜெயவர்த்தனா பதவி துறக்கும் வரையில் இதுதான் நிலவரம். தமிழர்களுக்குச் சுய ஆட்சி உரிமை அல்லது ஒதுக்கிவிடமுடியாத அதிகார மாற்றம் -இவை பற்றி ஒருமுறைகூட ராஜீவ் காந்தி வலியுறுத்தியதில்லை. இதே பெருமாளும் அவருக்கு முன்னால் அவருடைய கட்சிச் செயலாளர் பத்மநாபாவும், ஜனாதிபதி ஜெயவர்த்தனா தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது பற்றி தில்லியிலுள்ளவர்களிடம் பலமுறை முறையிட்டும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது. "ஆபரேஷன் பவன்' திட்டத்தின்படி, டெல்லித் தலைமையிடம் காடுகளில் உள்ள புலிகளைத் தேடிச் சரண் அடையவைக்கும் முயற்சியில் ஆட்களை வேட்டையாடும் காரியமாகவே நடைபெற்றது. இதே நேரத்தில் எண்ணிக்கையில் அடங்காத தமிழர்கள் செத்தார்கள். தெரிவிக்கப்பட்டதை விடவும் அதிக எண்ணிக்கையில் ஜவான்களும் உயிரிழந்தார்கள். அறிவிக்கப்படாத யாழ் போரில், இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையே காவு கொடுக்கப்பட்டுவிட்டது.

இதுதான் பலன். ஸ்ரீலங்காவைப் பற்றி தில்லி தருகிற தகவல்கள் மட்டுமே நம்மிடம் உள்ளன. வெளிப்படுத்தப்படுகிற கருத்தின் விளைவாகவே பெரிய எதிர்ப்புகள் நிகழ்கின்றன. சமீபகாலம் வரை பத்திரிகைச் செய்திகளில் மிகவும் குறைவான கவனத்தையே அமைதிப்படை பெற்றிருந்தது என்பது ஓர் ஆச்சரியம். ஸ்ரீலங்காவில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சராசரி இந்தியனுக்கு எதையும் தெரிந்துகொள்ள வழியில்லை. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதே நிலைதான். அதிகாரபூர்வமானதாகத் தரப்படும் செய்திகள் மட்டும்தான்.

முன்னாள் இந்திய ஹைகமிஷனரை "இந்தியாவின் வைசிராய்' என்பதாகக்கூட இலங்கையர்கள் குறிப்பிடுவதாகச் சொன்னார்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாட்டில் நான் உடனிருக்க, சுப்ரமணியம் சுவாமியிடம் இந்திய ராணுவத்தினரின் அட்டூழியங்களைப் பற்றி விசாரிக்க ஒரு கமிஷன் ஏற்படுத்தவேண்டும் என்றுகூடக் கோரிக்கை வைத்தார்கள்.

சென்ற ஆண்டு லண்டன் மகாநாட்டில் என்னிடம், இந்த ராணுவ ஆக்கிரமிப்புக் கொடுமையைப் பற்றிக் கண்ணால் கண்டவர்களின் சாட்சியங்களும் அஃபிடவிட்டுகளும் தரப்பட்டன. ஹைகமிஷன் தருகிற செய்தியறிக்கைகளை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்காமல், எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளக்கூடிய உரிமை நமக்கு இருக்கிறது.

யாழ்ப்பாணம் உயர்நிலைப்பள்ளி ஒன்றின் தலைமையாசிரியராக இருந்த கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவரை நான் ஓராண்டுக்கு முன்னால் நியூஜெர்ஸியில் சந்தித்தேன். தமிழ்க்குடிமக்களை, பொறுப்பற்ற முறையில் பயங்கரமாகத் துன்புறுத்திய அமைதிப்படையின் செயல்களை, அங்கே நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் விவரித்தார். அவர்கள் புலிகளை விரட்டித் தேடியிருக்கலாம். அந்த நடவடிக்கையில் சந்தேகப்பட்டவர்களையெல்லாம் அவர்கள் சுட்டிருக்கக்கூடும்.

அமைதிப் படை என்பது, அவர்களுக்குள்ளேயே சட்டதிட்டங்களை உடைய அமைப்பு என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் விரும்புகிறவரை ஆட்களைக் காவலில் வைத்திருக்கலாம். அடித்து உதைக்கலாம். மாஜிஸ்திரேட் முன்னால் கொண்டுபோய் நிறுத்தவேண்டிய அவசியமில்லை. நாகரிகமான மக்களாட்சி முறைக்கு மேம்பட்டவர்களாகவே அவர்கள் நடந்துகொண்டார்கள்.

கொழும்பு பாரிஸ்டர் ஒருவர் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன். ஹேபியஸ் கார்ப்பஸ் -ஆள்கொணர்வு மனுக்களின் மீது உச்சநீதிமன்றமே நோட்டீஸ் அனுப்பியும், அமைதிப்படை தரப்பிலிருந்து எந்தப் பதிலும் கிடையாது என்று அவர் சொன்னார்.

நம்முடைய வீரர்கள்,காக்கி உடையில் நம்முடைய தூதர்களாக இயங்கவேண்டியவர்கள், சட்டத்துக்கு அடங்காதவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஸ்ரீலங்காவின் உச்சநீதிமன்றம் என்பது அமைதிப்படையினருக்கு வெறும் காகிதப் புலியா?

தவறான தகவல்களின் அடிப்படையில் இது திரித்துக் கூறப்பட்டதாகவும் இருக்கலாம். அப்படியானால் இதற்கு விடை, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதிகளைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்வதுதான். அவர்கள் நம்முடைய ஜவான்கள் மீதும் அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும். -என்று வி.ஆர்.கிருஷ்ணய்யர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். (தமிழ் வாய்ஸ் இன்டர்நேஷனல்-செப்டம்பர் 1989).

140: தலையங்க விமர்சனங்கள் !

இன்று இலங்கையில் இந்திய அமைதிப் படைக்கு நண்பர்கள் எவருமே இல்லை. வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளும், தெற்கில் ஜனதா விமுக்தி பெருமுனாவும்ம், நடுவில் இலங்கை அரசும் ஏதாவது ஒரு விஷயத்தில் ஒற்றுமையைக் காண்பிக்கிறார்கள் என்றால் அது இந்தியப் படை கூடிய விரைவில் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்பதில்தான். இக்கோரிக்கையை இவர்கள் அனைவரும் மறைக்காமல் கூறிவருவது இந்தியாவுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இந்த நிலைக்கு இலங்கையிலுள்ளவர்களைக் குறை கூறுவதைவிட, நாம் அங்கு எதற்காகச் சென்றோம், இப்போது அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நம்மையே கேட்டுக் கொண்டால் தெளிவு பிறக்கும்.

போதாக்குறைக்கு இந்தியப்படையின் பாதுகாப்பில் உயிர் வாழ்ந்துவரும் வடகிழக்கு மாகாண அரசு கூட இந்தியப் படையினருக்கு எதிராக ஈழ மாணவர்களும், ஆசிரியர்களும் நடத்திவரும் கிளர்ச்சியை ஆதரித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றிவிட்டது. காற்று எந்தப்பக்கம் அடிக்கிறது என்று இந்தியத் தூதுவருக்கு இப்பொழுதாவது தெரிந்திருக்கும் என்று நம்பலாமா?

இலங்கையின் ஒற்றுமைப் பிரச்னையை அந்த நாட்டின் அரசியல் தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அந்த நாட்டின் இறையாண்மையை மதிக்கும் வகையில் இந்தியா தன் துருப்புகளை அங்கிருந்து கூடிய விரைவில் விலக்கிக் கொள்வது அனைவருக்கும் திருப்தியளிப்பதாகவும் இருக்கும்; தெற்காசியாவில் சமாதானத்தை நிலைநிறுத்தவும் வழிவகுக்கும். -- தினமணி -தலையங்கம் 20-6-89

சந்திரன் ஒரு முறை தேய்ந்து வளர்வதற்குள் சரித்திரம் படைத்துவிட்டுச் சடுதியில் தாயகம் திரும்பிவிடும் என்ற நம்பிக்கையோடு சென்ற இந்திய ராணுவம் இன்றுவரை முழுதாகத் திரும்பவில்லை.

தமிழ் ஈழம் என்ற தாரக மந்திரத்தையும், இயந்திரத் துப்பாக்கிகளையும் ஆயுதங்களாக்கிக் கொண்ட பிரபாகரனின் புலிகள் விடுதலை அல்லது வீரமரணம் என்றிருந்த போது, மற்ற தமிழ்ப் போராளிகளின் துணையோடு, தேர்தலை நடத்தி, அமைதி அங்கே திரும்பி விட்டதாக வெற்றி பெற்ற வரதராஜப் பெருமாளே சொன்னபோதும், அதில் அத்தனை பேருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை.

இன்னும் விடுதலைப் புலிகள் காட்டிலேயே பதுங்கி இருப்பதாலும், ஆட்சிக்கு வந்த தமிழர் அரசாங்கத்துக்கு இந்தியப் படையைத் திரும்ப அனுப்பும் தைரியம் வராததாலும், வடக்கு கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குச் சிங்கள ராணுவத்தின் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படாததாலும், அமைதி ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

அமைதி காக்கும் படை இந்தியா திரும்பிவிட்டால், அமைதி மேலும் காத்திருக்காமல் இலங்கைக்குத் திரும்பிவிடும். -- சாவி -26-4-89

அந்நிய மண்ணில், அந்த நாட்டு அரசின் அனுமதியின்றி நமது படைகள் இருந்தால் ஆக்கிரமிப்பாளராகத்தான் நம்மை உலகம் கருதும்!

விடுதலைப் புலிகளுடன் நமது படைகளை மோதச் செய்ததும், வடகிழக்கு மாகாணக் கவுன்சிலுக்கு ஒரு பொம்மை அரசு அமைத்ததும் எதிர் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் இந்திய அரசு அடுத்தடுத்துச் செய்த தவறான காரியங்கள்! வெறும் வீம்புக்காகத் தொடர்

ந்து தவறுகளைச் செய்யப் போகிறோமா அல்லது விவேகத்துடன் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு செயல்படப் போகிறோமா? இதுதான் இன்றைய மிகப் பெரிய கேள்வி. -- ஆனந்தவிகடன் -தலையங்கம், 25-6-89

"இந்திய அமைதிப் படை, நாடு திரும்ப இதுதான் நல்ல நேரம்' என்று ஓர் இந்தியப் படை உயர் அதிகாரி கூறினார். ராணுவ ரீதியாக எல்.டி.டி.ஈ. தோற்கடிக்கப்பட்டுவிட்டாலும் அந்த இயக்கம் தலைமறைவாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இந்திய அமைதிப் படை திரும்பினால், திரும்பவும் விடுதலைப் புலிகள் தங்களை உறுதியாக்கிக் கொண்டு ஸ்ரீலங்காப் படைகளை மோதத் தொடங்கி விடுவார்கள் என்றே பாதுகாப்பு ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். அதுமட்டுமல்ல - குறுகிய காலத்துக்குள் அதன் பின்பு அவர்கள் தனிநாடு அமைத்தும் விடுவார்களாம்'. -- ஜி.கே. சிங் -த வீக், 4-2-1989

இனி, ஸ்ரீலங்காவில் செய்ய வேண்டியவை அரசியல் தொடர்பானவையே. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இன்றைய நிலையை விரைவாகவும்-சரியாகவும் அளவிட வேண்டும். ஸ்ரீலங்கா அரசோடும் அங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளோடும் தொடர்பு கொண்டும்-இந்தியப் பொதுமக்களின் கருத்தினைக் கலந்தும் இந்தியப் படையை நம் நாட்டுக்குத் திருப்பி அழைப்பது பற்றி அவர்கள் ஆலோசனை செய்ய வேண்டும். -- த ஹிந்து -தலையங்கம், 18-2-1989

நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பது தெரியாமல் காட்டுப் பகுதியில் ஒரு போராட்டக் குழுவைத் துரத்திக் கொண்டு திரிய வேண்டிய தேவை இல்லை என்றே அமைதிப் படை கருதுகிறது. இப்படையினர் குழம்பிப் போய் இருக்கிறார்கள். "இனியும் அங்கே செய்ய என்ன இருக்கிறது?' என்றுதான் களைத்துப் போன இந்திய ஜவான்கள் கேட்கிறார்கள். தங்கள் கடமை முடிந்துவிட்டது என்றும் - நாட்டை அந்த மக்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டியதுதான் என்றும் இந்தியப் படையினர் கருதுகிறார்கள்.

தன் நட்பு நாடுகளுக்கும்-அண்டை நாடுகளுக்கும் உதவ வேண்டியது இந்தியாவின் கடமையே. பிராந்திய அரசியலில் இந்தியா ஓரளவு தியாகம் செய்யவேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால் எதற்கும் ஓர் எல்லைக்கு உட்பட்டே எந்தத் தலையீடும் இருக்க முடியும். அதற்கு மேலும் போனால்-பிரச்னையில் நுழையும்போது ஏற்பட்ட சிரமத்தைவிட-பிரச்னையிலிருந்து வெளியே வர அதிக சிரமப்பட வேண்டியிருக்கும்.

இந்திய அமைதிப்படை, ஸ்ரீலங்காவில் உள்ளவர்களைப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்திவிட்டுதான் வெளியேற வேண்டும். ஸ்ரீலங்காவில் தொடர்ந்து இந்திய அமைதிப் படை இருக்கவோ சண்டை போடவோ எந்தக் காரணமும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா இதற்கு மேலும் தன் படைவீரர்களையும் பணத்தையும் அங்கே வீணாக அழித்துக் கொண்டிருக்க முடியாது. -- பிரிகேடியர் ஏ.சி. கரியப்பா (ஓய்வுபெற்ற படைத் தளபதி 20-2-1989

வெளிநாட்டுக் கொள்கையில் இந்தியா தனது பாதுகாப்பைப் பற்றிக் கவனிக்க வேண்டியதுதான். ஆனால் -இன்று -தன் அரசியல் -பொருளாதார நிலைமையை உணர்ந்து ஸ்ரீலங்காவில் உள்ள சம்பந்தப்பட்டவர்களிடமே -அமைதி உடன்படிக்கையை நிறைவேற்றும் சுமையை ஒப்படைத்துவிட்டு -குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் நம் படைகளைத் திருப்பி அழைப்பது பற்றி இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்க வேண்டும். --ஃபிரண்டலைன் -தலையங்கம், மார்ச் 4-17, 1989

வடக்கு -கிழக்கில் இந்தியாவின் உதவியோடு அதிகாரத்தைக் கைப்பற்றியதோடு -தமிழ்க் குழுக்கள் இந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேறக்கூடாது என்கிறார்கள். ஆனால்- இந்தியா எத்தனை காலத்துக்கு அவர்களைத் தாங்கமுடியும்? தென் வியட்நாமில் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் சோவியத்தும் படித்த பாடத்தை தங்கள் நாட்டுக்கு வெளியே படைகளை வைத்திருக்கும் எந்த அரசும் மறந்துவிடக் கூடாது. காலத்தை இன்னும் இழுத்துக்கொண்டிருக்காமல் -கொழும்போடு புதுடில்லி உறுதியாகப் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியப் படைகள் மரியாதையோடு விரைவில் நாடு திரும்ப வழிவகுக்க வேண்டும். --டெக்கான் ஹெரால்ட் - தலையங்கம்

இந்தியாவிலும் ஸ்ரீலங்காவிலும் பெரும்பாலானோர் இந்திய அமைதிப் படை, தன் வேலையை விரைவில் முடித்து நாடு திரும்ப வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

திடீரென்று இப்படையைத் திரும்பப் பெறுவது வடக்கிலும் தெற்கிலும் பாதுகாப்பைப் பொறுத்தவரை சிக்கலை உருவாக்கும். விடுதலைப் புலிகள் தீவிரமாக இருக்கும் பகுதிக்கு ஸ்ரீலங்காப் படையை அனுப்ப வேண்டிவரும். என்ன இருந்தாலும் இந்திய அமைதிப் படை தொடர்ந்து இங்கே (இலங்கையில்) நெடுங்காலம் இருக்க முடியாது. அப்படி 45,000-க்கு அதிகமான இந்தியப் படை வீரர்கள் இங்கே தொடர்ந்து இருந்தால் -ஸ்ரீலங்காவில் அவர்கள் நிரந்தரமாக இருக்கப் போகிறார்கள் என்ற கருத்து வலுப்பெற்றுவிடும்.

இந்திய -ஸ்ரீலங்கா அரசுகள் விரைவில் இப்படை திரும்புவதற்கு உரிய ஒரு காலத்தை வரையறை செய்ய வேண்டும்.

எமது கருத்து இதுதான்:- தன்னுடைய மண்ணில் இந்திய அமைதிப் படை சண்டை போடுவதை ஸ்ரீலங்கா மக்கள் நீண்டகாலம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. --த ஐலண்ட் -தலையங்கம், 13-3-1989 (இலங்கை ஆங்கில நாளிதழ்)

141: அமைதிப்படை வெளியேறத் தொடங்கியது!

இந்தியா, அமைதிப்படை வெளியேறுவது குறித்து மெüனம் சாதித்த நிலையில் பிரேமதாசா இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அமைதிப்படை திரும்புவதற்கான அட்டவணையை இறுதி செய்ய குழுவொன்றை தில்லிக்கு அனுப்பினார்.

இந்தக் குழு, ஜூலை 29-ஆம் தேதி தில்லி சென்றடைந்தது. எ.சி.எஸ். ஹமீது தலைமையில் இலங்கையின் தூதுவர் கலாநிதி ஸ்டான்லி கல்பகே, பிரட்மன் வீரக்கூன், சுனில் டிசில்வா, டபிள்யூ.டி. ஜயசிங்கா, ஃபீலிக்ஸ் டயஸ், அபே சிங்கா ஆகியோர் சென்றிருந்தனர். இந்திய அரசுத் தரப்பில் பி.வி. நரசிம்மராவ், கே.சி. பந்த் ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்ட, இந்தப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 4-இல் முடிவுற்றது. அமைதிப்படையை திரும்ப அழைக்க அட்டவணை, புலிகளுக்கு எதிரான செயல்களை முடிவுக்குக் கொண்டு வருதல், இந்திய-இலங்கை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவது, வடக்கு-கிழக்கில் மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது ஆகியவை குறித்துப் பேசி இறுதி செய்யப்பட்டது.

படைகளைத் திரும்பப் பெறுவது என்பது 1989 டிசம்பர் 31- ஆம் தேதிக்குள் முடிவுறும்படி பார்த்துக் கொள்ளப்பட்டதானது பிரேமதாசாவுக்கு நிம்மதியளிக்கிற நடவடிக்கையாக அமைந்தது. செப்டம்பர் 20-இல், அமைதிப்படை தனது தாக்குதலை நிறுத்த ஒத்துக்கொண்ட அதே வேளை "பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கமிட்டி' உருவாக்கப்பட்டு, அதில் ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர், அமைதிப்படைத் தளபதி, முதலமைச்சர் வரதராஜ பெருமாள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்திய அமைதிப்படை வெளியேறிய பிறகு, வடக்கு கிழக்கில் ஏற்படவிருக்கும் அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிக் குழுவுடன் அரசு நடவடிக்கைகளை மேம்படுத்துவது ஆய்வுக்குரியதானது.

எனவே, பிரேமதாசா "புலிகள் அரசியல் இயக்கம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்து யோசிக்கும்படி' பாலசிங்கத்திடம் தெரிவித்தார்.

புலிகளின் நோக்கம் சுதந்திரத் தமிழீழம்; பிரேமதாசாவின் நோக்கமோ ஒற்றையாட்சியின் கீழ், அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்ப வடக்கு - கிழக்கில் தீர்வு. இவையிரண்டும் சாத்தியமாக வேண்டுமானால் இருவரில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் இருவரும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தனர். எனினும், இந்த அம்சத்தை யாரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. "அமைதிப்படை வெளியேறிய பிறகு வடக்கு-கிழக்கு நிர்வாகம் அமைதியான முறையில் புலிகளுக்கு கைமாற்றப்படுமா' என்று ஹமீதிடம் வினவினார், பாலசிங்கம். "ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து புலிகள் இயங்கினால் அது சாத்தியம்' என்றார் ஹமீது: (ஆதாரம்: சுதந்திர வேட்கை, பக். 327).

அரசியல் பிரிவு அமைப்பதற்கான அனுமதியை பிரபாகரனிடம் பாலசிங்கம் ஏற்கெனவே பெற்றிருந்தார். அதன் கட்டமைப்பு, விதிகள் யாவும் பிரபாகரனிடம் விவாதித்தபடி உருவாக்கப்பட்டன. அமைப்புக்கு "விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி' என்று பெயரிடப்பட்டது. மகேந்திரா ராசா என்கிற மாத்தையா கட்சியின் தலைவராகவும், யோகரத்தினம் யோகி செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அரசியல் கட்சிக்கான விதிப்படி பல்வேறு பிரிவு மக்களைப் பிரதிநிதிப்படுத்தவும், பங்கெடுக்கவும் விதிகள் வகுக்கப்பட்டு, கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. புலிகளின் சின்னத்தைப் பதிவு செய்வதில் முரண்பாடுகள் எழுந்தன. அதில் சிறு மாற்றம் செய்யப்பட்டு அச் சின்னமும் பதிவு செய்யப்பட்டது.

இவ்வகையான நிகழ்வுகளால், பிரேமதாசா மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார். புலிகளை அரசியல் நீரோட்டத்தில் இணைத்துவிட்டதாக அவர் நினைத்தார். தனது தந்திரம் வென்றதாகவும் கருதினார். ஆகஸ்ட் 12-இல் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்திலும் "விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி' என்கிற அரசியல் கட்சியை இடம்பெறச் செய்தார். ஆனால் இந்தக் கூட்டத்தில் பிரச்னைகளைத் தீர்க்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இச்சமயத்தில், குறிப்பிடத்தக்க இரு உயிரிழப்புகள் தமிழீழப் பகுதியில் ஏற்பட்டன. காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட, தமிழர் புனர்வாழ்வுக் கழக நிறுவனர்களில் ஒருவரான கே.கந்தசாமி கடத்தப்பட்டார். அதுகுறித்த சர்ச்சை எழுந்து விவாதிக்கப்பட்ட நிலையில், அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

அதேபோன்று "முறிந்தபனை' நூலாசிரியர் மூவருள் ஒருவரான ராஜனி திராணகமவின் கொலையும் நேர்ந்தது. ராஜனியின் கொலைச் சம்பவம் படித்தவர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இவ்விரு கொலைகளுக்கும் எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ்-பிரேமதாசா உடன்பாட்டின்படி 1989 அக்டோபர் இரண்டாம் வாரத்தில், அமைதிப் படைகள் திரும்ப அனுப்பும் பணி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு படைப் பிரிவும், அதன் ஆயுதத் தளவாடங்களுடன் படிப்படியாக கிளம்பத் தொடங்கின. இந்த நேரத்தில், தமிழ் தேசிய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாவட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் அந்தந்த முகாம்களில் குடியேறியதும் நடந்தது.

142: மாவீரர் தினக் கொண்டாட்டம் ஏன் ?

தமிழகப் பத்திரிகைகளில், நவம்பர் 26-ஆம் நாள், விடுதலைப் புலிகள் தலைவர் பிறந்தநாள் என்றும், அதனைச் சிறப்பாகக் கொண்டாட, புலிகள் புதிய தாக்குதலை நடத்த இருப்பதாகவும் செய்தி வெளியாயிற்று. "உண்மையில் பிரபாகரன் எப்போதுமே தனது பிறந்தநாளைக் கொண்டாடியவரல்ல. தான் மட்டுமன்றி மற்றவர்களையும் பிறந்தநாள் கொண்டாட அனுமதித்ததில்லை' என்கிறார், பழ.நெடுமாறன் (தமிழீழம் சிவக்கிறது பக்-271).

உண்மையில் நடந்ததென்ன?

1989-ஆம் ஆண்டு நவம்பர் 27-இல், மாவீரர் தினம் கொண்டாடவே அனுமதிக்கப்பட்டது. இந்த நாள், விடுதலைப் போராளிகளில், முதன்முதலில் வீரமரணமடைந்த சங்கரின் நினைவுநாள் ஆகும். இந்த நாளில், போர்க்களத்தில் உயிர்நீத்தவர்கள் மற்றும் வீரத் தியாகம் புரிந்த லெப்டினன்ட் கர்னல்கள் விக்டர் ஓஸ்கா, பொன்னம்மான், இராதா, திலீபன், புலேந்திரன், குமரப்பா, சந்தோஷம், பாண்டியன், இம்ரான், ஜானி, மதி, நவம், ரீகன், கிரேஸி போர்க், சுபன், வேணு, சஹா, சூட்டி, ஜாய், குட்டிஸ்ரீ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நினைவில் வாழும் புலிகளுக்கு சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மணலாற்றுக் காட்டில் பதுங்கியிருந்து போரை நடத்தியபோது பிரபாகரன், இந்த முடிவினை மேற்கொண்டார். இந்த முடிவினைத் தமிழீழமெங்கும் நிறைவேற்றவும் ஆணையிட்டார்.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், பழ.நெடுமாறனிடம் விவரிக்கையில், இந்திய ராணுவத்துடன் நாங்கள் நடத்திய போரில் எந்த இடத்தில் எங்கள் தோழர்கள் விழுந்தார்களோ, அவர்களை அங்கேயே புதைத்து கல்லறை எழுப்பியிருக்கிறோம். போர்க் காலத்தில் அவர்களின் உடல்களைப் பெற்றோரிடமோ, உறவினர்களிடமோ ஒப்படைக்க முடியாது போனதால், ஏற்பட்ட முடிவல்ல; இறந்த மாவீரர்களின் விருப்பமும் இதுவே ஆகும்.

இந்திய அமைதிப் படையை எதிர்த்து நடத்திய "ஓயாத அலைகள்' என்கிற போரில் எங்களுக்கு அடைக்கலம் தந்தது இந்த காடே ஆகும். இந்தக் காட்டினை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். எங்கள் தோழர்களுக்கு எந்தக் காடு அடைக்கலம் தந்ததோ, எந்தக் காட்டில் எதிரிகளுடன் போரிட்டு வீரத்தை நிலைநிறுத்தினோமோ, அந்தக் காட்டிலேதான் எங்களைப் புதைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பியதில் வியப்பு ஏதுமில்லை. மணலாற்றுக் காட்டுக்குள் தங்கியிருந்து போராடிய புலிகள் தாங்கள் எங்கே சென்று போராடி வீரமரணம் அடைந்தாலும் தங்கள் உடலை மணலாற்றுக் காடுகளில்தான் புதைக்க வேண்டும் என்று நேரிலும், எழுத்துமூலமாகவும் எனக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள் என்று கூறியுள்ளார்.

இதுதவிர தமிழீழத்தின் பிற பகுதிகளிலும் மாவீரர்கள் கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கல்லறைக்கு "மாவீரர் துயிலும் இடங்கள்' என்று பெயரிடப்பட்டுள்ளன.

மறைந்த தன்னுடைய தோழர்கள் குறித்து வே.பிரபாகரன் கூறியதாக பழ.நெடுமாறன் பதிவு செய்துள்ள வரிகள் ஒவ்வொன்றும் பல்வேறு அர்த்தங்களைச் சுமந்து நிற்கின்றன. அவை:

எமது விடுதலை வரலாறு மாவீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது வரலாற்றை இயக்கும் உந்துசக்திகளாக அமைந்துவிட்டன. அந்த மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள். சுதந்திரச் சிற்பிகள். எமது மண்ணிலே ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அவர்கள்.

இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எமது இதயக் கோயிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன் அல்லன். அவன் ஒரு லட்சியவாதி. ஓர் உயர்ந்த லட்சியத்துக்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களுடைய விடிவுக்காகவும் விமோசனத்துக்காகவும் வாழும் சுயநலமற்ற, பற்றற்ற அவன் வாழ்க்கை உன்னதமானது; அர்த்தம் உள்ளது. சுதந்திரம் என்ற உன்னத லட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அளிக்கத் துணிகிறான்.

எனவே விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணப் பிறவிகள் என்று பிரபாகரன் பெருமிதத்துடன் கூறியுள்ளார். (தமிழீழம் சிவக்கிறது -பக்.277-278).

முதன்முதலாக அனுசரிக்கப்படும் மாவீரர் தினத்தில் கலந்துகொள்ளவென்று பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி மூவரும் விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் மட்டக்களப்பு நகரத்துக்கு கொழும்பிலிருந்து சென்றார்கள். அங்கிருந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவிலுக்குக் கார் மூலம் சென்றனர்.

மக்கள் அமைதிப்படையின் பிடியிலிருந்து விடுபட்டிருந்த நேரம். வழியெங்கும் மக்கள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். எங்கும் புலிகளின் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறந்தன. குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைய இவர்களுக்கு இரட்டிப்பு நேரம் பிடித்ததாகவும், கூட்டம் நடைபெறும் இடங்களில் மக்கள் நீண்டநேரம் காத்திருந்ததாகவும் அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு குறிப்பிடவேண்டிய இன்னோர் செய்தி, கிட்டுவுக்கு செயற்கைக் கால் பொருத்த லண்டன் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. எனவே அவர் ஹெலிகாப்டரில் வன்னிக்காட்டிலிருந்து கொழும்பு வந்தார். கிட்டுவை நீண்ட காலமாகக் காதலித்து வந்த மருத்துவ மாணவி சிந்தியா கொழும்புவுக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களின் திருமணம் எளிய முறையில் பாலசிங்கம் குழுவினர் தங்கியிருந்த ஹில்டன் ஓட்டலிலேயே நடைபெற்றது.

முதலில் கிட்டுவும், பின்னர் சிந்தியாவும் லண்டன் சென்றனர்.

மாவீரர் நினைவு நாளில், அதாவது 26-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அடித்ததும், மாவீரர் துயிலும் இடங்களில் கூடி, தளபதிகள் முதல் சுடரை ஏற்ற, மணியோசை முழங்கும். அடுத்து மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், தோழர்கள் என கல்லறைக்கு நெய் விளக்கு ஏற்றி வணங்குவார்கள். இது பின்னர் ஒவ்வோர் ஆண்டும் நடைமுறைக்கு வந்தது.

இந்த நாளுக்கு அடுத்த நாள் நவம்பர் 28-ஆம் நாள், விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெண்புலி அனிதாவுக்கு வீர அஞ்சலி வெளியிடப்பட்டது.

வன்னி, மன்னார், யாழ்ப் பிராந்தியங்களில் புலிகளுக்குத் தேவையான உணவு-பொருள்கள்-தளவாடங்கள் சேர்ப்பது என்பது எளிது. தமிழீழத்தின் நிலப்பரப்பில் இரண்டாயிரம் சதுர மைலில் பெரும்பகுதி, தமிழீழத்தில் எல்லை மாவட்டங்களாக கிழக்குப் பிராந்தியத்தைச் சார்ந்ததாகும். இங்கே சிங்களக் குடிகள் மட்டுமன்றி, போலீஸ், ராணுவம் சார்ந்த முகாம்களும் எண்ணிலடங்காத அளவில் உள்ளன. இத்தகைய சூழலில் புலிகளுக்கு உணவு சேகரிப்பதும் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதும் பெரும் பிரச்னையாக இருந்தது. சிறிதளவு கவனக்குறைவும் ஏற்பட்டாலும் கொரில்லாப் புலிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுவிடும்.

இந்தக் கத்திமேல் நடக்கிற வித்தையை லெப்டினன்ட் அனிதா மேற்கொண்டு வந்தார். அசாத்திய நிர்வாகத் திறமைகள் மிகுந்த இவர், ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எண்பதாயிரம் முஸ்லிம்கள், இரண்டு லட்சத்து எண்பதாயிரம் தமிழர்கள் வாழுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றிவந்த அனிதா 28-11-1988 அன்று ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தவரால் அடையாளம் காட்டப்பட்டு களுவாஞ்சிக்குடியில் வைத்துக் கைது செய்யப்பட்டார். விசாரணை இடத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது, உயிருடன் இருக்கக்கூடாது என்ற முடிவில் சயனைட் உட்கொண்டு வீரமரணத்தைத் தழுவினார். இவரின் ஓராண்டு நினைவு நாளையொட்டி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிழக்குப் பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட முதல் கொரில்லா வீராங்கனை அனிதா ஆவார். அனிதா உள்பட வீரமரணத்தைத் தழுவிய பெண்புலிகளின் எண்ணிக்கை 23 என்றும் அவ்வறிக்கையில் (28-11-1989) குறிப்பிடப்பட்டிருந்தது.

143: இந்தியாவில் அரசியல் மாற்றம்!

அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், அவ்வாறு நடந்து கொண்டிருக்கவும், அமைதிப்படையால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவத்தினருடன் ஏற்படப் போகும் மோதலைத் தவிர்க்க பிரபாகரன் விரும்பினார். எனவே, அவர் இருவகையான யோசனைகளை வெளியிட்டார்.

ஒன்று, தமிழ் தேசிய ராணுவத்தினர், அவ்வமைப்பில் இருந்து தானாக வெளியேறுவது, இரண்டாவதாக இந்த அழைப்புக்குப் பலன் ஏற்படாத நிலையில், ஏற்படப்போகும் மோதலில் சிங்களப் படையினர் கலந்துகொள்ளாது ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதாகும்.

எனவே, இரண்டாவது கோரிக்கையை பாலசிங்கம் மூலமாக இலங்கை அதிபர் பிரேமதாசாவுக்குத் தெரியப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய ராணுவத்தினருக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார்.

அவ்வேண்டுகோளில், ""பலாத்காரமாக சேர்க்கப்பட்ட இளைஞர்களாலும் நிர்ப்பந்தத்தின் பேரில் சேர்ந்துகொண்ட இளைஞர்களாலும் தொடங்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவம், இன்று ஓர் இக்கட்டான நிலையில் உள்ளது.

அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அமைதிப்படை வெளியேறியதைத் தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அப் படைப்பிரிவிலிருந்து வெளியேறி எம்மிடம் சேர்ந்துள்ளார்கள். தற்போது மட்டக்களப்பிலிருந்தும் அமைதிப்படை வெளியேறுகிற நிலையில், தமிழ் தேசிய ராணுவத்தினரைக் குற்றவாளிகளைப் போல லாரிகளில் ஏற்றி திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. நாளை திருகோணமலையிலிருந்தும் அமைதிப்படை வெளியேறும். அப்போது தமிழ் தேசிய ராணுவத்தினரை இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்போவதில்லை. மாறாக அவர்களை விடுதலைப் புலிகளுடன் போரிடுமாறு உத்தரவிடப் போகிறது.

அப்படியொரு யுத்தம் நேரிட்டால் வீணாகச் செத்துமடியப் போகிறீர்கள். எனவே, தமிழ் தேசிய ராணுவத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர்களே, இன்னும் சில நாள்களில் அமைதிப்படையால் பூரணமாகக் கைவிடப்படப்போகும் நீங்கள் தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து குற்றச் செயல்களைப் புரிந்துகொண்டு இருக்காது, உடனடியாக ஆயுதங்களுடன் வந்து சரணடையுங்கள். அதன் மூலம் தமிழீழப் போராட்டத்தில் நீங்களும் பங்காளிகளாக மாற முடியும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது (விடுதலைப் புலிகள் அறிக்கை: 30-11-1989).

விடுதலைப் புலிகளின் வேண்டுகோளை அடுத்து, ஏராளமான தமிழ் தேசிய ராணுவத்தினர் மட்டக்களப்புப் பகுதியில் சந்திரவெளி, முனைக்காடு, அம்பலாந்துறை, வண்டாருமுனை, மணல்பட்டி, வாழைச்சோனையிலும், திருகோணமலையில் கின்னியா, தம்பலகாமம் எனும் இடத்திலும், கிளிநொச்சியில் கல்முனை, உண்ணிச்சை பழுகாமம், மண்டூர், தம்பிலிவில் மற்றும் வவுனியாவில் குழுமாட்டுச் சந்திப்பிலுமாக ஈபிஆர்எல்எஃப், ஈஎன்டிஎல்எஃப் அணியைச் சேர்ந்தோர் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் கிடைத்தன.

மீதமிருந்த தமிழ் தேசிய ராணுவத்தினர் மீது முதலில் அம்பாறையிலும் பின்னர் மட்டக்களப்பிலும் புலிகள் இயக்கம் தாக்குதலைத் தொடுத்தது. இத் தாக்குதலின் காரணமாக பல ராணுவத் தளங்கள் விடுதலைப் புலிகள் வசமாயின. ஏராளமான இளைஞர்கள் சரணடைந்தார்கள்.

இறுதியில், ஈபிஆர்எல்எஃப்பின் தீவிர உறுப்பினர்கள் மட்டுமே புலிகளை எதிர்த்தனர். சரணடைந்த தமிழ் தேசிய ராணுவத்தினரை கிழக்கு மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களை அழைத்து அவர்கள் வசம், அவர்களது பிள்ளைகளை ஒப்படைத்தனர்.

கிழக்கு மாகாணத்தில் அமைதிப்படை வெளியேறிய இடங்களில் எல்லாம், புலிகள் ஆயுத பலத்தால் தங்களின்வசம் கொண்டுவருவதை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் எதிர்த்தார்.

இதுகுறித்து ராஜீவ் காந்தியிடமும் பிரேமதாசாவிடமும் மனுப் போட்டு முறையிட்டார். வரதராஜ பெருமாளின் மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்க விருப்பமில்லாத நிலையில் பிரேமதாசா இருந்தார். நடவடிக்கை எடுக்க ராஜீவ் காந்தி விரும்பினாலும் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆயுதம் வாங்கிய விவகாரத்தில் எழுந்த கடுமையான பிரசாரம் போன்ற காரணங்களினால், இந்தப் பிரச்னையில் தீவிரக் கவனம் செலுத்த முடியாதவராக ஆனார்.

இந்திய அரசியலிலும் மாற்றம் நிகழவிருந்தது. நாடாளுமன்றத்துக்கு டிசம்பரில் தேர்தல் நடக்கவிருந்தது. காங்கிரûஸ வீழ்த்த கூட்டணியால்தான் முடியும் என்று, அதே 1977-வது ஆண்டு சூத்திரப்படி, முன்னாள் காங்கிரஸ்காரரான வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி என்ற பெயரில் களம் அமைத்தனர். திமுக, தெலுங்குதேசம், அகாலிதளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேசிய முன்னணி என்ற அமைப்பில் சேர்ந்து, ஒரே குடையின் கீழ் தேர்தலைச் சந்தித்தனர். தேர்தல் முடிவில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங் பிரதமரானார் (டிசம்பர் 2, 1989).

வி.பி.சிங் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இலங்கைத் தமிழர்களின் பிரச்னையில், அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. "ராஜீவ் காந்தி ஸ்ரீலங்காவில் தலையிட்டமை ஒரு பெரிய ராஜதந்திரத் தவறுதலாக' வி.பி.சிங் அரசு கருதியது என அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

அவர் மேலும் இதுகுறித்து குறிப்பிடுகையில், "ராஜீவ் காந்தி புரிந்த தவறு நீடித்துச் செல்லக்கூடாது என்பதில் வி.பி.சிங், உறுதியாக இருந்தார். 1990 மார்ச் 31-க்குள் இந்திய அமைதிப்படையின் கடைசிச் சிப்பாய் இந்தியா திரும்புவார்' எனவும் தேதி நிர்ணயமானதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பிரேமதாசாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கிடையே பிரபாகரனின் குடும்பத்தினர் கொழும்பு விமான நிலையத்தில் வந்து இறங்கினர். இதற்கு முன்பு, 1987 அக்டோபரில் அமைதிப்படை தொடுத்த யுத்தத்தின்போது, யாழ் மக்களோடு மக்களாக நல்லூர் கந்தசாமி கோயிலில் தங்கியிருந்த பிறகு, மதிவதனியும் குழந்தைகளும் எங்கு சென்றார்கள் என்று குறிப்பு எதுவும் இல்லை. தற்போது, இவர்கள் பிரபாகரனுடன் சேர்ந்து வாழ, அடேல் பாலசிங்கம் வழியமைத்துக் கொடுத்தார். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து, பாஸ்போர்ட் ஒழுங்குகள் செய்யப்பட்ட பின்னர், இவர்கள் கொழும்பு வந்து சேர்ந்தனர்.

இவர்களைக் கொழும்பு விமானநிலையத்திலிருந்து வன்னியிலுள்ள அலம்பில் பகுதிக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலும், அமைதிப்படையினருடன் மோதலில் ஈடுபட்டதாக விடுதலைப் புலிகளின் 22-1-1990 தேதியிட்ட செய்திக் குறிப்பு கூறுகிறது. இந்த அறிக்கையில் துரோகச் செயலில் ஈடுபட்ட ஈஎன்டிஎல்எஃப் கும்பல், விடுதலைப் புலிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டபோது, இவர்களுக்கு உதவ நாவற்குழி முகாமில் இருந்து வெளியேற முயன்ற அமைதிப் படையினரை, வெளியே வர வேண்டாமென விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் இந்த வேண்டுகோளையும் மீறி ஜீப் வண்டி சகிதமாக வந்த இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதில், வண்டி எரிந்து சேதமானதுடன், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாயினர். இந்தச் சம்பவத்தையடுத்து, அரியாலை முகாமிலிருந்தும் அமைதிப்படையினர் வெளியே வந்தபோது, அவர்களையும் வெளியேற வேண்டாம் என புலிகள் வேண்டுகோள் விடுத்தும், வெளியேறியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்தப் போக்கு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பழ.நெடுமாறன் எழுதிய "இந்தியப் படையே வெளியேறு' நூலில் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். "சில இந்தியத் தளபதிகள் இவ்வளவு காலம் போராடி ஆயிரக்கணக்கான வீரர்களைப் பலிகொடுத்த பிறகும், மூவாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டபிறகும் எதையும் சாதிக்காமல் திரும்புவது தலைகுனிவானது என நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் போரைத் தொடர்ந்து நடத்தவேண்டுமென வற்புறுத்துகிறார்கள்.

இந்தத் தளபதிகளில் பெரும்பாலானோர் மேற்கு மற்றும் மத்திய இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதுவரை இந்திய ராணுவத்திலுள்ள அதிகாரிகள் தமிழர்களை வீரப் பரம்பரை என்று ஏற்றுக்கொண்டதே இல்லை. எனவே இப்போதும் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்' என்று பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளதை இங்கு பதிவு செய்வது தேவையாகிறது.

144: சுய நிர்ணய ஆட்சி அல்லது சுதந்திரத் தமிழ் ஈழம்

மார்ச் 31-க்குள் இந்தியப்படை திரும்பும் என்று பிரதமர் வி.பி.சிங் அறிவித்தபிறகு, வடக்கு - கிழக்கு மாகாண கவுன்சிலின் முதலமைச்சர் சென்னைக்கும் தில்லிக்கும் பயணம் மேற்கொண்டார். இந்திய அமைதிப்படை திரும்புவதற்கு முன்பாக வடக்கு - கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்களைப் பெற்றுத்தரவும், மக்களின் பாதுகாப்புக்குரிய ஏற்பாடுகளைச் செய்து தரவும் வேண்டும் என வலியுறுத்தினார்.

தில்லியில் அவரது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், சென்னை வந்து தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியை மீண்டும் சந்தித்தார்.

ஈழத் தமிழர்கள் மீது அமைதிப்படை இழைத்த கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளமுடியாது என்று தெரிவித்த முதலமைச்சர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளுடன் இணக்கமாகி, வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகத்தைப் புலிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினார் (சுதந்திர வேட்கை-அடேல் பாலசிங்கம் பக்-334).

இதன் பின்னர், ஈபிஆர்எல்எஃப் இயக்கத் தலைவர் பத்மநாபா கையெழுத்திட்ட 25 பிப்ரவரி 1990 தேதியிட்ட மனு ஒன்றை அவர், தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் அளித்ததோடு, பத்திரிகைகளுக்கும் விநியோகித்தார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி அமைந்த வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகத்தை நிலை நிறுத்த இதுவரை 600 பேரைப் பலி கொடுத்திருப்பதாகவும், இந்த ஆட்சியின் மூலம் மக்களுக்கு நன்மை செய்வதில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈரோஸ் அமைப்பின் தாக்குதல் மற்றும் பிரசாரங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் இந்திய-இலங்கை நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை மதிக்கவும் செயல்படுத்தவும் இலங்கை தயாராக இல்லாத நிலையில், இதனைச் செயல்படுத்தவே இம் மனு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கை அரசு ஒரு காலமும் தமிழரின் உரிமைகளை ஏற்றுக்கொள்ளாது என உறுதியாகத் தாம் நம்புவதாக அம்மனுவில் ஈபிஆர்எல்எஃப்-வினர் தெரிவித்தனர்.

அம் மனுவில் பிரேமதாசா அரசின் அணுகுமுறை குறித்தும் விவரிக்கப்பட்டிருந்தது. பிரேமதாசா மிகவும் தந்திரமாக, தமிழர் குழுக்களுக்கிடையே ஒற்றுமை இல்லாத நிலையில், மாகாண அரசைக் கலைத்துவிட்டு, திரும்பவும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுவதின் நோக்கம் வெளிப்படையானது. இந்த வடக்கு-கிழக்கு மாகாண அரசைக் கலைப்பது மற்றும் தேர்தல் நடத்துவதன் மூலம் அவர் லாபமடையப் பார்க்கிறார். பிரேமதாசாவின் கட்சிக்கு தற்போதைய மாகாண கவுன்சில் நிர்வாகத்தில் ஒரேவொரு இடம் மட்டுமே கிடைத்திருக்கிறது. தேர்தல் என்று வந்தால் இந்த எண்ணிக்கை உயர்ந்து 15-லிருந்து 16 இடங்கள் வரை கிடைக்கும் என அவர் எதிர்பார்க்கிறார்.

தற்போதுள்ள மாகாண கவுன்சிலில் தமிழ்க் கட்சிகள் 55 இடங்களைப் பெற்றிருக்கின்றன. தேர்தல் என்று வந்தால் இந்த எண்ணிக்கை 48-க்கும் கீழ் செல்லும் என்றும் அவர் நம்புகிறார்.

மேலும், தேர்தல் வந்தால் இதன்மூலம் அதிகாரப் பரிமாற்றம் குறித்துள்ள பிரச்னையும், சிங்களக் குடியேற்றப் பிரச்னையும் தமிழர் பகுதிக்கு போலீஸ் படைப் பிரச்னையும் மூழ்கடிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் நம்புகிறார்.

தேர்தல் மூலம் ஸ்ரீலங்காவின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த முடியும் என்றும் பிரேமதாசா நினைக்கிறார். தற்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் இருக்கின்றன. புதிதாகத் தேர்தல் வந்தால் எட்டு அல்லது பத்து இடங்கள்தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும் என்றும் அவர் கணக்குப் போட்டுள்ளார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்தல் வந்தால் தமிழ்க் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு, ரத்த ஆறு ஓடட்டும் என்றும் விரும்புகிறார். இதன் மூலம் சிங்களப் பேரினத்தின் மீதான தமிழர்களின் தாக்குதல் பலவீனமடையும் என்றும் நம்புகிறார் என்றும் விவரிக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் கருணாநிதிக்கு ஈபிஆர்எல்எஃப் தந்த அம் மனுவில் சில விருப்பங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன. (அ) வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்கள் வழங்குவதுடன், மக்களின் பாதுகாப்புக்கும் உறுதி செய்ய அனைத்துத் தமிழர் கட்சிகளும் பாடுபடுவது; இதற்கான முயற்சியை தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி மேற்கொள்வது; (ஆ) மேற்கண்டவற்றைச் செய்ய இலங்கை அரசுக்குக் காலக்கெடு விதிப்பது; (இ) இதற்கென ஒரு குழு அமைப்பதுடன் அதை மத்திய அரசு (இந்தியா) கண்காணிக்க வகை செய்வது; (ஈ) இவ்வகையான முயற்சிகள் எதுவும் வெற்றிபெறாத நிலையில், "சுதந்திரத் தமிழீழம்' என்கிற ஜனநாயக வழியிலான நாட்டை இந்திய அரசு அங்கீகரிப்பதுடன் இதற்கான அனைத்து ஒத்துழைப்பு மற்றும் உதவி அளிப்பது ஆகியவற்றைத் தெரிவித்திருந்தது.

இதுதவிர, ஒற்றையாட்சி முறையில் உண்மையான வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சில் அமையும்போது அதிகாரப் பரிமாற்றம், நிதிவசதி, குடியேற்றம், தமிழ் மாகாண எல்லை வரைவு, காவல் பணி, வடக்கு-கிழக்கில் தங்கியிருப்போருக்கான திட்டமிட்ட வாக்குரிமை, நிதியாதாரம் பெருக்குவதற்குண்டான அதிகாரம், வெளிநாட்டு ஏஜென்சிகள் வெளியேறுவது உள்ளிட்ட 19 அம்சங்கள் கொண்ட யோசனைகளும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

மேலும், இடைக்கால அரசு குறித்த யோசனை ஒன்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதுள்ள மாகாண கவுன்சில் அரசை அதன் போக்கில் அனுமதித்து, 1991 மார்ச்சில் தேர்தலை நடத்துவது என்றும் இவ்வாறான நிலையில் யாரும் ஆயுதங்களைக் கையாளக்கூடாது என்றும், அல்லது தற்போதுள்ள வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சில் நிர்வாகத்தில் அனைத்து தமிழ்க்குழுக்களும் பங்குகொண்டு 55 இடங்களைப் பகிர்ந்து கொள்வது என்றும் இந்த இடங்களைப் பகிர்வு செய்வதில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி முடிவுப்படி செயல்படுவது என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. அல்லது, விடுதலைப் புலிகள் தனித்து ஆட்சி புரிய விரும்பினால் தங்களது 38 இடங்களையும் அளித்துவிட்டு நிர்வாகத்திலிருந்து, விலகிக் கொள்ளவும் தயாராக இருப்பதாக அம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இறுதி வாசகமாக, "ஒற்றையாட்சி அடிப்படையில் என்றால் தமிழர்களே ஆளும் சுய நிர்ணய ஆட்சி; இல்லையென்றால், சுதந்திரத் தமிழீழம்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

145: புலிகளின் இரண்டு கோரிக்கைகள்

இப்படிப்பட்ட சூழலில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியிடமிருந்து பாலசிங்கத்துக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. எவ்வளவு விரைவில் சென்னை வரமுடியுமோ, அவ்வளவு விரைவில் வரும்படிச் சொன்னதும், இந்தத் தகவலை பிரபாகரனிடமும் பிரேமதாசாவிடமும் பாலசிங்கம் தெரிவித்தார். அந்தத் தொலைபேசி அழைப்பு வந்த இருநாள்கள் கழித்து, பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி உள்ளிட்டோர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

இவர்களது வருகையும் தங்குமிடமும் ஆரம்பத்தில் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. பின்னர் இவர்கள் தங்கியிருந்த துறைமுக விருந்தினர் இல்லத்தில் ஏற்பட்ட பரபரப்பு மற்றும் முதலமைச்சர் வருகை முதலியவற்றால் வெளியுலகுக்குத் தெரியவந்தது.

இவர்களின் சந்திப்பில், முதலமைச்சருடன் முரசொலி மாறனும் உடனிருந்தார். இவ்வகையாக அடுத்தடுத்து மூன்று நாள்கள் இவர்களது சந்திப்பு நிகழ்ந்தது. இந்தச் சந்திப்பில் ஈபிஆர்எல்எஃப் தெரிவித்தக் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. பாலசிங்கமோ, புலிகள் புதிய தேர்தலைச் சந்திக்க விரும்புவதாகக் கூறியதுடன், தற்போதுள்ள வடக்கு-கிழக்கு மாகாணசபை, தவறான வழிமுறைகளால் தேர்தல் நடத்தப்பட்டு உருவானதாகும் என்றும் விளக்கினார்.

இவர்கள் ஆட்சி நடத்திய முறைகளால் மக்கள் வெறுப்புற்று இருக்கிறார்கள் என்றும், புதிதாகத் தேர்தல் நடந்தால், தாங்கள் மிகப்பெரிய அளவிலான வெற்றியைப் பெற முடியும் என்றும் விளக்கினார்.

இது குறித்து, அடேல் பாலசிங்கம் தனது நூலில், "இறுதியில் புலிகளின் நிலைப்பாட்டைக் கருணாநிதி அங்கீகரித்தார். நிர்வாகத்தில் பங்கேற்பது குறித்து வலியுறுத்துவதைத் தவிர்த்தார்' எனக் குறிப்பிட்டுள்ளார் (பக்.335).

இறுதியில் பாலசிங்கம் குழுவினர், வைகோ, கி.வீரமணி மற்றும் தங்கள் ஆதரவாளர்களைச் சந்தித்தபின், கொழும்பு திரும்புவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களையும் சந்தித்தனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில், பிரேமதாசா-புலிகள் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து விளக்கினார்கள். அமைதிப்படை வெளியேற்றம்-அதன் பின்னர் வரப்போகும் நிகழ்வுகள் குறித்து விளக்குகையில், அமைதிப்படையுடன் கைகோர்த்தவர்களின் ஆட்சி தானே போய்விடும் என்று நம்புவதாகவும், அந்த ஆட்சி என்பது மாபெரும் மோசடித் தேர்தல் மூலம் அமைக்கப்பட்டது என்றும், அந்த ஆட்சி என்பது தமிழீழ மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் பாலசிங்கம் தெரிவித்தார்.

இலங்கையில் அமைதி திரும்பிய சூழ்நிலை நிலவியது. தெற்கில் ஜே.வி.பி.யினரை பிரேமதாசா கட்டுப்படுத்தியிருந்தார். சிங்களப் படைகளுக்கும் புலிகளுக்கும் மோதல் எதுவும் நிகழாத நிலையில், அமைதிப்படையும் நாடு திரும்புவதற்குண்டான முயற்சிகளில் தீவிரம் காட்டியதால், வடக்கிலும் மோதல் இல்லை. அமைதிப்படை வெளியேறிய பிறகு அந்த நிலைகளை, புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

பேச்சுவார்த்தை என்பது தற்சமயம் இலங்கை அதிபருக்கும் புலிகளுக்குமான பேச்சுவார்த்தையாக நடந்து கொண்டிருந்தது. அதிபரின் சார்பாக அமைச்சர் ஹமீது அவ்வப்போது பாலசிங்கம் குழுவினரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கிக் கொண்டிருந்தார்.

புலிகள் அப்போது இரு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஒன்று, ஈபிஆர்எல்எஃப் தலைமையிலான வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சிலைக் கலைக்கவேண்டும் என்பதாகும். அடுத்து, வரப்போகும் மாகாண கவுன்சிலில் புலிகள் பங்கேற்க வகை செய்யும் விதமாக இலங்கை அரசமைப்பின் 6-வது சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறுவது.

6-வது சட்டத் திருத்தம் என்பது, இலங்கையில் 1978-ஆம் ஆண்டில், ஜெயவர்த்தனா அரசால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சட்டத் திருத்தமாகும். அதன்மூலம் ஒற்றையாட்சி வலியுறுத்தப்பட்டதுடன், நாட்டைத் துண்டாடும் போக்கும் தடுக்கப்பட்டது.

அத்துடன், பிரிவினை கோருபவர்களின் அமைப்பு தடை செய்யப்படும் என்றும் அவ்வமைப்பில் அங்கம் வகிப்போரின் அடிப்படை உரிமைகளான குடியுரிமை, வாக்களிக்கும் உரிமை மற்றும் பேச்சு, எழுத்துச் சுதந்திரம் யாவும் ரத்து செய்யப்பட்டது. மேலும் அந்த நபரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் இந்தத் திருத்தம் வகை செய்தது.

அது மட்டுமன்றி, இலங்கை அரசால் நடத்தப்படும் தேர்தலில் பங்குபெறுவதற்கு முன்பாக ஒற்றையாட்சி அரசுக்கு விசுவாசப் பிரமாணம் மேற்கொள்ளவேண்டும் என்ற விதியும் இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

இவ்விதியே தற்போது விடுதலைப் புலிகளுக்கு இடைஞ்சலாக அமைந்தது. ஒற்றையாட்சி அரசுக்கு விசுவாசம் தெரிவித்து, பிரமாணம் ஏற்க விடுதலைப் புலிகள் தயாராக இல்லையென ஹமீதிடம் தெரிவித்தனர்.

சுயநிர்ணய உரிமைக்குப் போராடும் புலிகளுக்கு இந்த விதி அவமானகரமானதாகும் என்றும், சகல உரிமைகளையும் பறிக்கும் இந்த 6-வது சட்டத்திருத்தம் வாபஸ் பெறப்பட்டால்தான், தேர்தலில் தங்களால் பங்கேற்க முடியும் என்றும், புலிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

தங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை, அடிப்படையான உரிமையென்றும், இதை உலகெங்கிலும் உள்ள நாடுகளில் காணமுடியும் என்றும் இப்படி வலியுறுத்துவது பிரிவினை ஆகாது என்றும், புலிகள் விளக்கினர்.

"ஒருவர் தனது அரசியல் எதிர்காலத்தைத் தேர்வு செய்யும் உரிமையைத் தடை செய்யும் 6-வது சட்டத்திருத்தம் ஒழிக்கப்படாவிட்டால், விடுதலைப் புலிகள் மக்களாட்சி அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் தேர்தலில் பங்கெடுக்கமாட்டார்கள்' என்றும் பிரேமதாசாவிடம் புலிகள் தெரிவித்தனர் (ஆதாரம்: சுதந்திர வேட்கை.அடேல் பாலசிங்கம், பக்.336-337).

பிரேமதாசாவைப் பொறுத்துவரையில், விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளில் வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சில் நிர்வாகத்தைக் கலைப்பது என்பது நடக்கக்கூடியதுதான். ஆனாலும், அதற்குத் தகுந்த காரணம் வேண்டும். ஒரு மாகாண அரசைக் காரணமின்றி கலைக்க, 13-வது திருத்தச் சட்டம் தடுக்கும். எனவே, அமைதிப்படை வெளியேற்றத்துக்குப் பிறகு அந்த நிர்வாகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி தானாக ஏற்படுவதையே பிரேமதாசா விரும்பினார். அதனால், பிரேமதாசா அந்த விஷயத்தில் ஆர்வமற்றவராக இருந்தார்.

6-வது சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறுவது என்பதோ அவரால் நினைத்துப் பார்க்கவும், கோரிக்கையை நிறைவேற்றவும் முடியாதவராக இருந்தார். காரணம் இந்தச் சட்டத்திருத்தம் என்பது சிங்களத் தீவிரவாதிகளைச் சமாதானப்படுத்தவென்றே ஜெயவர்த்தனாவால் உருவாக்கப்பட்டதாகும். அந்தச் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற்றால், சிங்களப் பேரினவாதிகளால் ஏற்படப்போகும் எதிர்ப்பை சமாளிப்பது எப்படி என்பதே அவரது சிந்தனையாக இருந்தது.

மேலும். பிரேமதாசா அடிப்படையில் ஒற்றையாட்சி என்பதில் நம்பிக்கை கொண்ட சிங்கள தேசியவாதியாவார். அதுமட்டுமன்றி, சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறக்கூடிய அளவுக்கு நாடாளுமன்ற அவையில் அவருக்குப் பெரும்பான்மையுமில்லை. எனவே, மற்ற கட்சிகளின் தயவை நாடுவதில் உள்ள சிரமமும் அவரை நோகவைத்தது.

இக் காரணங்களால் விடுதலைப் புலிகளின் 6-வது சட்டத் திருத்தம் வாபஸ் என்ற கோரிக்கை அவருக்கு வெறுப்பூட்டியது. எப்பாடுபட்டாவது விடுதலைப் புலிகளை ஜனநாயக வழிக்குத் திருப்புவது என்ற அவரின் விருப்பம், நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பதைப்பும் அவரிடம் இருந்ததால், தனது கோபத்தை வெளிக்காட்டாதிருந்தார்.

ஆகவே, இந்தப் பிரச்னை பேச்சுவார்த்தைக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருந்ததால், மேற்கொண்டு எந்தப் பேச்சும் நிகழாதவாறு அது தடுத்தது.

146: ஈழ மக்களாட்சி குடியரசு!

விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி கட்சி தொடங்கப்பட்டதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் விரிவாக்கம் தொடங்கிற்று. இதனை மக்களிடையே கொண்டு செல்ல ஒரு மாநாடு அந்த அமைப்புக்குத் தேவைப்பட்டது. இந்த மாநாட்டை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்துவதென்றும், அதற்கான இடமாக "வாகரை' என்கிற கடற்கரையோரம் அமைந்த சிற்றூர் தெரிவு செய்யப்பட்டது.

இவ்வாறாக மக்கள் முன்னணியின் முதல் மாநாடு வாகரையில் பிப்ரவரி 24-இல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள வடக்கு-கிழக்கில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் பிரதிநிதிகள் வாகரையில் வந்து குழுமினர்.

கொழும்பு ஹில்டன் ஓட்டலில் தங்கியிருந்த பேச்சுவார்த்தைக் குழுவினரான பாலசிங்கம் உள்ளிட்டவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மட்டக்களப்பு வந்து சேர்ந்து, அங்கிருந்து வாகனங்களில் வாகரை வந்து சேர்ந்தனர்.

அம்பாறை, மட்டக்களப்பிலிருந்து அமைதிப் படை வெளியேறியதைப் போன்றே முல்லைத் தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அமைதிப் படை வெளியேறியிருந்தது. யாழ் மற்றும் திருகோணமலையில் மட்டும்தான அமைதிப் படை வெளியேற வேண்டியிருந்தது.

இவ்வாறாக அமைதிப் படை வெளியேற்றம், தமிழ் தேசிய ராணுவத்தைக் கட்டுப்படுத்தியது உள்ளிட்ட நிகழ்வுகளால் மக்கள் முன்னணி உறுப்பினர்களிடையே மகிழ்ச்சிப் பெருக்கு நிலவியது. மாநாட்டு நிகழ்வுகள் ஒருவாரம் வரை தொடர்ந்தது. மாநாட்டில், தேசிய, சமூகம் குறித்த பல தீர்மானங்கள் ரகசியமாக விவாதிக்கப்பட்டன.

வெளியே தெரிய வந்த தீர்மானங்களில், (அ) சாதியக் கொடுமைகளை வேரறுத்து, சமூகநீதி காக்க உழைப்பது மற்றும் அதில் முழு ஈடுபாட்டுடன் போராடுவது (ஆ) பெண் விடுதலை- மக்கள் முன்னணியின் வேலைத் திட்டத்தில் ஒன்றாக்கப்படுவது (இ) பெண்களின் திருமணத்தில் சீதனமுறையால் ஏற்படும் அவலங்களையும் அதனால் ஏற்படும் சுரண்டல் மற்றும் துன்புறுத்தப்படுதலையும் ஒழிக்கப் பாடுபடுவது (ஈ) வடக்கு-கிழக்குப் பகுதிகளில் மக்கள் முன்னணியை நிறுவி மக்களை அதில் ஈடுபடுத்தச் செய்து, அவர்களை அதன் நிர்வாகத்தில் பங்கெடுக்கச் செய்வது போன்றவை முக்கியமானவையாகும். பெண்கள் குறித்த தீர்மானங்களை மகளிர் நிர்வாகிகளே கொண்டுவந்தனர்.

முக்கியத் தலைவர்கள் கூடியிருந்த நேரத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு, மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு இருந்தது. அதன் காரணமாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்ணுக்குப் புலப்படாத வகையில் செய்யப்பட்டிருந்தன.

வடக்கு-கிழக்கு இடைக்கால அரசு குறித்தும், தற்போதுள்ள மாகாண அரசு நிர்வாகத்தில் புலிகள் பங்கெடுப்பது குறித்தும் யோசனைகளைத் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் அளித்து இலங்கை திரும்பினார் வரதராஜ பெருமாள்.

இந்திய அமைதிப் படை, தனது இறுதிக்கட்ட பயண ஏற்பாடுகளை திருகோணமலையில் நடத்திக் கொண்டிருந்தது. பிப்ரவரி 25-ஆம் நாளில் கட்சியின் செயலாளர் பத்மநாபா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் ஒரு மனு அளித்திருந்தார். ஆனால், ஒரே வாரத்துக்குள் எதிர்பாராதவிதமாக, அதாவது மார்ச் முதல் தேதி அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

தற்போதுள்ள மாகாண கவுன்சிலில் இடம்பெற்றுள்ள அங்கத்தினர்களைக் கொண்ட குழு, "அரசியல் நிர்ணய சபை'யாக மாறுகிறது என்றும், "சுதந்திரத் தமிழ் அரசு'க்கான அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை மாகாண கவுன்சிலில் இடம்பெற்றவர்கள் உருவாக்குவார்கள் என்றும் அறிவித்தார்.

அவ்வறிப்பில், இந்த அரசியல் சட்டத்தின்படி அமையும் அரசுக்கு "ஈழ மக்களாட்சிக் குடியரசு' என அழைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு வெளியான உடன் இலங்கை அரசு அதிர்ச்சியடைந்தது. இது கிட்டத்தட்ட "சுதந்திரப் பிரகடனம்' என்றே அரசு கருதியது. இந்த தன்னிச்சையான அறிவிப்பு பிரேமதாசாவை கடுமையாகப் பாதித்தது.

கடும்கோபத்தில் இருந்த அவர், பதிலுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெüனமாக இருந்தார். இந்திய அமைதிப் படையின் வெளியேற்றம் என்பது தீவிரமாக நடந்துகொண்டிருந்த நேரம். இறுதிக்கட்ட நடவடிக்கையாக, திருகோணமலைத் துருப்புகள் வெளியேற வேண்டியதுதான் பாக்கி. இந்த நேரத்தில் எந்த ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ள பிரேமதாசா விரும்பவில்லை என்பதாக இலங்கைப் பத்திரிகைகளில் செய்தி வெளியாயிற்று.

இந்திய அமைதிப் படையினர் முழுவதுமாக இலங்கையைவிட்டு வெளியேற அவர் காத்திருப்பதாக, கொழும்பு ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.

உடனடியாக நடவடிக்கை எடுக்க அவரது அமைச்சர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்க, சிங்கள ராணுவத் தலைமையும் தாக்குதலுக்குத் தயாரானது. இவையெல்லாவற்றுக்கும் பிரேமதாசாவின் மெüனமே முட்டுக்கட்டையானது.

147: அமைதிப்படை தாயகம் திரும்பியது!

‘The Soldier, above all other people, prays for peace, for he must suffer and bear the deepest wounds and scars of war’- General Douglas MacArthur.

என்கிற வாசகங்கள், சென்னைக் கோட்டையிலிருந்த அமைதிப்படைத் தலைமையகத்தில், லெப்டினன்ட் ஜெனரல் எ.எஸ். கல்கத் இருக்கையின் பின்னே தொங்கும் அட்டையில் இடம்பெற்றிருந்தது. இவ்வாசகம் ராணுவ வீரர்களிடையே பிரபலமான வாசகமாகும். அது எந்த நாட்டு ராணுவமாக இருந்தாலும் பொருந்தும்.

"இலங்கையில் உள்ள தமிழர்கள் அபாயத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காக்க நாம் செல்கிறோம் என்று எங்கள் வீரர்களுக்கு நாங்கள் சொன்னோம். ஆனால், திடீரென்று யாருக்காக நாங்கள் போராடப் போனோமோ, அவர்களுடனேயே நாங்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது' (அர்ஜுன் கத்தோஜ்.எக்கானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி கட்டுரையில்) என்று இந்திய ராணுவத்தின் அதிரடிப் படைக்குத் தளபதியாக இருந்தவர் கூறியிருக்கிறார்.

ஆனால், அமைதிப் படையினர், இலங்கையின் தமிழர் பகுதிகளில் தரையிறங்கியதும் குடிமைப் பொருள்களை வழங்கும் வேலையிலும், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி சீரமைப்பிலும் ஈடுபட்ட நிலையிலும், அவர்களிடம் எந்திரத் துப்பாக்கிகள் இருந்தன. டாங்கிகள் போன்ற தளவாடங்களும், ராக்கெட்டுகளும் அதை இயக்குகிற லாஞ்சர்களும்கூட முகாமில் இருந்தன. கூடவே ஒலி, ஒளிபரப்பு சாதனங்களும் முகாம்களில் பொருத்தப்பட்டிருந்தன. இவ்வகையில் பார்க்கும்போது அவ்வீரர்களுக்குப் போரிடவும் நேரும் என்ற உண்மை தெரிந்துதான் இருக்கும். போர் என்றால், அதில் ஈடுபடுகிற வீரனுக்கு ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர் குறிப்பிட்டவாறு,

"போர்வீரன், மற்றவர்களைவிட மேலானவனாக இருந்தபோதிலும், அமைதியை விரும்பியபோதிலும், அமைதியை நிலைநாட்ட என்று சொல்லப்பட்ட யுத்தங்களின்போது அவன் துன்பங்களும் துயரங்களும், ஏன் ஆழமான காயங்களும் பெறுவதில் இருந்துத் தப்பிக்க முடியாது' என்பது உண்மையாகத்தான் இருக்கும். இந்திய அமைதிப்படையின் வீரர்களுக்கும் அதுவே நேர்ந்தது.

அமெரிக்கர்களுக்கு ஒரு வியட்நாம், ரஷியர்களுக்கு ஓர் ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கு ஓர் இலங்கை என்ற உதாரணம் நின்று நிலைத்துவிடும்படியாகக் கிட்டத்தட்ட 31 மாதங்கள் இலங்கையின் வடக்கு-கிழக்கில் நிலைகொண்டிருந்தது இந்திய அமைதிப்படை. தமிழர் பகுதிகளில் அறிவிக்கப்படாத யுத்தத்தைத் தொடர்ந்ததன் மூலம் 1115 பேரை இழந்து, ஆயிரக்கணக்கான வீரர்கள் படுகாயமுற்று, நான்கு பிராந்தியங்களில் முகாமிட்டிருந்த 48 ஆயிரம் வீரர்கள் நாடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்திய-இலங்கைப் பிரச்னையில் இந்திய ராணுவம் சிக்கிக்கொண்டதை வெளிப்படையாக ராணுவத்தில் உள்ளவர்கள் பேச முடியாது. பேசினால் விசாரணை வரும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது ("சண்டே' வார இதழ்:14-20 மே 1990).

ஆனால், உளவுப் பிரிவுத் தகவல் சிலவற்றை அதே சண்டே இதழ் வெளியிட்டிருக்கிறது. உளவுப் பிரிவுத் தகவல்படி, "5,000 பேராக இருந்த விடுதலைப் புலிகளை 1,500 ஆகக் குறைத்துவிட்டது என்றும், இதில் 850 பேர் வவுனியாக் காட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், 170 பேர் யாழ்குடாவிலும், 100 பேர் கிளிநொச்சியிலும், 150 பேர் திருகோணமலையிலும், 250 பேர் மட்டக்களப்பிலும் மறைந்து கொரில்லா யுத்தத்தில் ஈடுபட்டதாகவும்' தெரிய வருகிறது.

அதுமட்டுமன்றி, "அமைதிப்படையினர் 1,200 புலிகளைக் கொன்றதாகவும் காயமுற்றோர் எண்ணிக்கை 850 என்றும், சரணடைந்தவர்கள் 263 பேர் என்றும் அதே உளவுப் பிரிவுத் தகவலில்' கூறப்பட்டுள்ளதாகவும் சண்டே இதழ் வெளியிட்டுள்ளது.

இதன் பின்னர் புலிகள் புதிய ஆட்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்ததாகவும் அதே உளவுத் தகவலில் குறிப்பு உள்ளது.

விடுதலைப் புலிகள் குறித்து இந்தியத் தளபதிகள் கூறுவது என்ன?

*"வவுனியா காட்டில் புலிகளைத் தேடியபோது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைக்க வேண்டியிருந்தது. கண்ணி வெடிகள் இருக்கலாம் என்ற கவனத்தில் நடக்கும்போது மரங்களையும்கூட போராயுதங்களாக, புலிகள் பயன்படுத்தினர்' என்கிறார் லெப்டினன்ட் கர்னல் பி.சி. காடோச்.

*"வன்னிக் காட்டில் எங்களது முதல் எதிரி புலிகளே அல்ல; அங்கு நிலவிய வெப்பம், வறண்ட காற்றுதான். இதனால் ஏற்பட்ட வறட்சியால் தாகம் எடுத்தது. குடிக்க நீரில்லை, நீர் நிலைகளும் வறண்டுவிட்டன. வீரர்கள் தாகத்தால் தவித்தனர்.

*லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் தனது அனுபவத்தை எழுதும்போது, "பிரபாகரனை உயிருடனோ, உயிரற்ற நிலையிலோ பிடிக்காதது ஏன் என்று கேட்கிறார்கள். ஒரு தனிமனிதரை மட்டும் தனிமைப்படுத்திப் பாதுகாப்பதோ அழிப்பதோ, இதுபோன்ற சூழ்நிலையில் இயலாத செயலாகும். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. இதில், அப்பட்டமான உண்மை என்னவென்றால், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இளையதலைமுறைத் தலைமை சிறப்பாக உருவாகியுள்ளது என்பதுதான். பிரபாகரனே இல்லாவிட்டாலும் இளைய தலவைர்கள் வரிசையாக முன்வந்து, போரைத் தீவிரமாக நடத்துவார்கள். புலிகள் இயக்கம் ஒருபோதும் கலைந்து விடாது' என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் (தமிழீழம் சிவக்கிறது-பழ.நெடுமாறன்).

*மட்டக்களப்பில் பணியாற்றிய பிரிகேடியர் சிவாஜி பட்டேல், "பிரபாகரன் ஒரு மாவீரர். அவரின் ராணுவத் தந்திரங்கள் திகைக்க வைக்கின்றன. அவர் தனது போராளிகளுக்கு இத்தகைய பயிற்சியை எப்படி அளித்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

*யாழ்ப்பாணத்தில் அதிரடிப்படைத் தளபதியாக இருந்த அர்ஜுன் காத்தோஜ், "மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்றிருக்கும் விடுதலைப் புலிகள் போன்ற கட்டுக்கோப்பான இயக்கங்களை எந்த ராணுவமும் எளிதில் வெற்றிகொள்ள முடியாது. கல்வியில் நூறு சதம் பெற்ற யாழ்ப்பாண இளைஞர்களை மூளைச் சலவை செய்து புலிகளின் இயக்கத்தில் சேர்க்க முடியாது. இளைஞர்கள் விரும்பியே அவ்வியக்கத்தில் சேர்ந்திருக்கிறார்கள். யாழ் பல்கலை அவர்களுக்கு நாற்றங்கால் மாதிரி. அங்கு படித்து, புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள் தயாரிப்பில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.

இந்தக் குறிப்புகள் மேலும் நீளும். இவ்வாறெல்லாம் கூறிய அமைதிப்படை வீரர்களும், உயர் அதிகாரிகளும் இலங்கையை விட்டு 1990-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி கிளம்பினர்.

148: பிரேமதாசாவின் நயவஞ்சகம்!

அமைதிப்படை சென்னைத் துறைமுக வளாகத்தில் வந்திறங்கியபோது, வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பிரதாயமான இந்த வரவேற்பைத் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி புறக்கணித்தார். இதற்காக அவர் சொன்ன கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது. பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் இதுகுறித்து விமர்சிக்கப்பட்டது.

இந்த சர்ச்சை, வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சில் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் திருகோணமலையில் இருந்து வெளியேறிய விஷயத்தால் அமுங்கிப்போனது. வரதராஜ பெருமாள் என்ன ஆனார் என்ற செய்தி பரபரப்புக்கிடையே அமைதிப்படையுடன் அவரும், அவருடன் அங்கம் வகித்தவர்களும் புறப்பட்டு சென்னை வந்ததாகச் செய்திகள் வெளியாயிற்று.

அவரைத் தமிழகத்தில் வைப்பது சரியானதாக இருக்காது என்று கருதி, ஒரிசா மாநிலத்தில் சில நாள்களும், பின்னர் பெயர் தெரிவிக்கப்படாத வடமாநிலம் ஒன்றிலும் குடியமர்த்தினார்கள். அவர் எங்கிருக்கிறார் என்பது மைய அரசுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாயிற்று.

அமைதிப்படை வெளியேறிய அனைத்து இடங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி அந்த இடங்களில் தங்களின் பாசறைகளை அமைத்தனர். கிட்டத்தட்ட சிவில் நிர்வாகம் உள்பட அனைத்தையும் புலிகளே மேற்கொண்டனர். வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை உடனடியாகப் புலிகள் தொடங்கினர். போராளிகளுக்கு பாலசிங்கமும், காசி ஆனந்தனும் அரசியல் வகுப்புகள் நடத்தினர். இந்த நிர்வாக அமைப்புக்கு, சட்டரீதியான அங்கீகாரம் பெற, பாலசிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஹமீது மற்றும் பிரேமதாசாவிடம் பேசினர்.

வரதராஜ பெருமாள் அரசின் முடிவு தானே முடிவுற்ற நிலையைச் சுட்டிக்காட்டி, ஒரு திருத்தச் சட்டம் கொண்டுவருவதன் மூலம் மாகாணக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு, புதிதாகத் தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு பிரேமதாசாவிடம் பாலசிங்கம் வலியுறுத்தினார்.

ஆனால், பிரேமதாசா, அதைச் செய்வதற்கு உடன்படவில்லை. இந்த ஒரு விஷயமே இனி வரப்போகிற காலங்களிலும் அவர் எப்படி நடந்துகொள்வார் என்பதற்குச் சான்றாயிற்று. மாகாணக் கவுன்சில் கலைக்கப்பட்டு, புதிய தேர்தலும் வந்தால், அந்தத் தேர்தலில் புலிகள் பெருவாரியான வெற்றியை ஈட்டிவிடுவார்கள் என்பதால், அவர் தயக்கம் காட்டினார்.

அது மட்டுமன்றி, புலிகள் சட்டத்துக்குட்பட்ட ஆட்சியை அமைத்துவிட்டால் அதன் பின்னர் ஏற்படும் இதர விளைவுகளுக்கும் அஞ்சினார். அடுத்தகட்ட முயற்சியாக சுயாட்சிக்கு சமமான அதிகாரங்களைப் பெறுவதில் முடிந்துவிடுமோ என்பதும் அவரது கவலையாக இருந்தது.

புலிகளைப் பொறுத்தவரை, சிங்களவர்களுடன் அரசியல் சட்டத்துக்குட்பட்டு அவர்களுடன் சேர்ந்து வாழமுடியுமா என்பதை முயன்று பார்க்கும் வாய்ப்பாகக் கருதினார்கள். இந்த முயற்சி வெற்றி பெறாது போனால், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுதந்திரத் தமிழீழம் அமைப்பது என்றும் அவர்களால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பிரேமதாசாவோ ஒரே தேசம், ஒரே மக்கள் என்ற கோட்பாட்டில் இந்த முயற்சிகளை முடிந்தவரை தள்ளிப்போட முயன்றார். தொடர்ந்து அமைச்சர் ஹமீது வந்து, ஆயுதம் களைவது தொடர்பாக பேசத் தொடங்கினார். இதுவரை ஆயுதம் களைவது குறித்த எந்தப் பேச்சும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படாத நிலையில், புதிதாக ஆயுதம் துறப்பது குறித்துப் பேசியதன் மூலம், பிரேமதாசாவின் திட்டம் வெளிப்பட்டது. பாலசிங்கம் குழுவினர் இது குறித்து கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். ஹமீது இந்தக் கருத்து தன்னுடையதல்ல என்றும் அதிபரின் கருத்தையே தான் இங்கு தெரிவித்ததாகவும் கூறினார்.

அமைச்சர் ஹமீது மேலும் விளக்குகையில், தேர்தலின்போது வன்முறை தலைதூக்கக்கூடாது என்று பிரேமதாசா விரும்புகிறார். இந்தத் தேர்தலில் ஈபிஆர்எல்எஃப் உள்ளிட்ட பிற கட்சிகளும் இடம்பெறுவதும் அவரது விருப்பமாக உள்ளது. இந்த நிலையில் புலிகள் ஆயுதங்களுடன் நடமாடுவது அச்ச உணர்வை மட்டுமல்ல; ஒரு மேலாண்மைப் போக்கை நிலைநாட்டுவதாக அது அமைந்துவிடும் என்றும் அவர் கருதுவதாகத் தெரிவித்தார்.

பாலசிங்கம் குழுவினர் இந்தக் கருத்தைக் கேட்டதும், இதுதான் உண்மையென்றால் அதிபர் தங்களை நேரில் சந்தித்தபோது இது குறித்து தெரிவிக்காமல் இப்போது தெரிவிப்பது ஏன் என்று வாதிட்டதுடன், அமைதிப்படை இலங்கையைவிட்டு வெளியேறிய பின்னர் புலிகளுக்கு எதிரான அமைப்புகளுடன் பிரேமதாசா ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதும் தங்களுக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டனர்.

விடுதலைப் புலிகளின் வாதம் என்னவென்றால், தாங்கள் ஆயுதம் வைத்திருப்பது தமிழீழப் பகுதியின் பாதுகாப்புக்கு என்றும், சட்டம் ஒழுங்குக்கு அவர்களே பொறுப்பாக இருப்பார்கள் என்றும், அதனைக் கையாளும் தகுதி புலிகளுக்கே உண்டு என்றும், பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாப்புப்படை, புலிகள் வசம் இருப்பது அவசியம் என்றும் தெரிவித்தனர்.

தற்போது தொங்கிக்கொண்டிருக்கும் வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சிலைக் கலைத்துவிட்டுப் புதிய தேர்தல் நடத்தும் அறிவிப்பு வெளியிட்ட பின்னர், 6-வது சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆயுதக் களைவு குறித்துப் பேசலாம் என்றும் தற்போது பேசுவது பொருந்தாது என்றும் புலிகள் குறிப்பிட்டனர்.

இறுதியாக புலிகள், மாகாண கவுன்சில் என்பது புலிகளின் இலக்கு அல்ல என்றும், ஒரு திட்ட வரையறையில் புலிகள், சிங்களவருடன் சேர்ந்து நிர்வாகத்தில் ஈடுபட முடியுமா என்று பார்ப்பதுதான் தற்போதைய நிலை என்றும், இதுவே நிரந்தரத் தீர்வு ஆகிவிடும் என்று புலிகள் கருதவில்லை என்றும் அமைச்சர் ஹமீதிடம் உறுதியாகச் சொல்லி, புரியவைத்தார்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில், ஜனநாயக வழிமுறைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்பதை நிலைநாட்டவும், மற்ற கட்சிகளுடன் தேர்தலில் பங்குபெறவும், சுதந்திரமான, நியாயமானத் தேர்தலை நடத்தவும் அரசுடன் ஒத்துழைப்போம் என்றும் உறுதி கூறினர் (ஆதாரம்: சுதந்திர வேட்கை.அடேல் பாலசிங்கம்).

""மாகாணசபை நிர்வாகக் கட்டுமானத்தின் ஓர் அம்சமாக, மாகாணக் காவல்துறையை அமைத்து, புலிப் போராளிகளை அதிகாரிகள் ஆக்கலாமே'' என்றார் ஹமீது.

""அப்படியென்றால் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் காவல் பணிக்கு 10 ஆயிரம் பேர் தேவைப்படுவர். அதற்கான ஆயுதங்களுக்கும் அரசு செலவு செய்ய வேண்டியிருக்கும்'' என்றார் பாலசிங்கம்.

விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதம் பறிப்பது என்ற விவாதம்-விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கும் கட்டத்துக்கு வந்தது. அமைச்சர் ஹமீது பேச்சுவார்த்தை வெற்றி பெறாததால் தளர்ந்து போயிருந்தார் (ஆதாரம்: மேற்கூறிய நூல்).

பிரேமதாசா திறந்த மனதுடன் இருந்து, 6-வது சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற்று, புலிகளுக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பாரா அல்லது புலிகளுடன் ராணுவ ரீதியாக மோதுவாரா என்பது குறித்துப் புலிகளுக்கு அதிகம் யோசிக்கத் தேவையில்லை. அவர் ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று உறுதியாக நம்பியதன் அடிப்படையில், பாலசிங்கம் குழுவினரை யாழ்ப்பாணம் திரும்பும்படி பிரபாகரன் பணித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தை முறிவுக்குப் புலிகளைக் காரணமாக்கும் வகையில், 1987-லிருந்து வடக்கு-கிழக்கில் முகாம்களில் முடங்கிக் கிடந்த சிங்கள ராணுவத்தினரை கட்டுப்பாடற்ற வகையில் நடந்துகொள்ளும்படி பணிக்கப்பட்டது. இதன் மூலம் புலிகள் வெகுண்டெழுந்து போரிட முயல்வர் என்பது எளிதான கணக்கு ஆயிற்று. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்குமாக செய்யப்பட்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை, அப்பட்டமாக மீறும் வகையில் செயல்கள் அடுத்தடுத்து நடைபெற்றன.

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் மூத்த போராளி ஒருவரை, ஆயுதத்தைப் பறித்துவிட்டு, சாலையில், மக்கள் முன்னிலையில் முட்டிபோட்டு நகரும்படி சிங்கள ராணுவம் உத்தரவிட்ட நிலையில், அவர் அவமானம் தாங்காமல் "சயனைட்' குப்பியைக் கடித்து உயிர் துறந்தார்.

இன்னும் கொழும்பிலிருந்து கிளம்பாத நிலையில், பாலசிங்கம் குழுவினர், பிரேமதாசாவின் கவனத்திற்கு இந்தச் சம்பவத்தைக் கொண்டுவந்தனர். பலன் இல்லை. அமைச்சர் ஹமீதுவிடம் தொடர்பு கொண்டார் பாலசிங்கம். அவர் தெரிவித்த செய்திகள் பாலசிங்கத்துக்கு அதிர்ச்சியூட்டின.

கிழக்குப் பகுதியில் அமைதிப்படைகள் வெளியேறிய முகாம்களில் சிங்களப்படை குடியேற வேண்டும் என்றும், இதன்பின்னர் வடக்கிலும் அதை நிறைவேற்ற ராணுவத் தலைமைக்கு உத்தரவிட்ட நிலையில், இனி கோரிக்கைகள் எதுவும் பலிக்காது என்றும் விளக்கினார்.

கிழக்கில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. காவல் நிலையங்களிலும் புதிய ஆள்கள் குவிக்கப்பட்டனர். எந்த நேரத்திலும் இருவருக்கும் மோதல் ஏற்படலாம் என்ற நிலை எழுந்தது.

பிரேமதாசா தங்களை நயவஞ்சகமாக ஏமாற்ற முயற்சிக்கிறார் என்கிற பலமான சந்தேகம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

அமைதிப்படையின் உதவியுடன் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்திய நிலையில், அவர்கள் வெளியேறிய முகாம்களில் சிங்களப் படைகளைக் குடியேற்றி, தனது மேலாண்மையை நிலைநிறுத்திவிடலாம் என்று பிரேமதாசா திட்டமிட்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!

149: பத்மநாபா மீது தாக்குதல்!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஜக்கிரியா காலனியில், ஜெர்மனியில் இருந்து ஈபிஆர்எல்எஃப் இயக்க வேலைகளில் ஈடுபட வந்த வில்சனுக்காக எடுக்கப்பட்ட வீட்டில் பத்மநாபா குழுவினர், தங்கினர். இந்த வீடு அவரின் வசிப்பிடமாகவும், இயக்கத்தின் சென்னை அலுவலகமாகவும், கலந்துரையாடும் இடமாகவும் பேணப்பட்டு வந்தது.

இந்த வீட்டில் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர் பலர் சந்திக்க இருக்கிறார்கள், என்கிற தகவலை விடுதலைப் புலி அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சாந்தன் அளித்ததைத் தொடர்ந்து அங்கு புலிகள் ஆயுதங்களுடன் குவிந்தனர். கதவைத் தட்டியதும், திறக்கப்பட்ட வேகத்தில் உள்ளே நுழைந்தவர்கள் அங்கே குழுமியிருந்த பத்மநாபா உள்ளிட்ட 13 பேரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர். (6.6.1980)

அந்த நேரத்தில் பத்மநாபாவின் மனைவி ஆனந்தி, தனது தந்தையின் வீட்டுக்குச் சென்றிருந்ததால் தப்பித்தார். (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்-சி. புஷ்பராஜா பக். 531). இந்தத் துக்ககரமான சம்பவம் மறுநாள் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்து அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

இந்தக் கொலைக்கு ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினரின் இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் நெருங்கிய தொடர்பே காரணமாகச் சொல்லப்பட்டது. இன்னொரு காரணமாக, ஈபிஆர்எல்எஃப் எம்.பி.யான யோகசங்கரி-பிரேமதாசா இடையே நடைபெற்ற ரகசிய சந்திப்பும்கூடக் காரணமாகக் கருதப்பட்டது. இந்தச் சந்திப்பு மூலம், சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து புலிகளை ஒழிக்க பேரம் பேசியதாகவும் இதற்கு பத்மநாபா உடன்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

தொடர்ந்து, இலங்கை வடக்கில் அரியாலையில் அமைந்திருந்த ஈபிஆர்எல்எஃப் முகாம், தாக்கி அழிக்கப்பட்டு, யாழ்குடாப் பகுதி முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்த, அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பூபதி அம்மாளின் நினைவுநாள் ஏப்ரல் 19-ஆம் தேதி நல்லூர் கந்தசாமி கோவிலடியில் கடைபிடிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு யாழ் மற்றும் கிழக்கில் இருந்தும் பெருந்திரளாக மக்கள் வந்து கலந்துகொண்டனர்.

அடுத்து வந்த மே தினக் கொண்டாட்டத்திலும் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு பேரணியை சிறக்கச் செய்தனர். இந்த மே தினக் கூட்டத்தில் பாலசிங்கம், யோகி உள்ளிட்டோர் பேசினர். இந்தக் கூட்டத்தில், அடேல் பாலசிங்கம், பெண்கள் நிலை குறித்துப் பேசினார்.

அடுத்த கட்ட ஈழப் போர் என்பது, மட்டக்களப்பில் முஸ்லிம் மாது ஒருவர் ஜூன் 10-இல், சிறுமைப்படுத்தப்பட்ட சம்பவத்தையொட்டி எழுந்தது. இந்த சம்பவம் மட்டக்களப்பு காவல் நிலையத்தில் நடைபெற்றதால், இதனைத் தட்டிக் கேட்கும் விதத்தில் விடுதலைப் புலிகள் பிரச்னையை முன்னெடுத்தனர். பிரச்னை, பேச்சுவார்த்தையில் ஆரம்பித்து, துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இந்த மோதலில் காவல் நிலையம் புலிகள் வசமாயிற்று. தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களும் கைப்பற்றப்பட்டன. சில காவல் நிலையங்களில் எதிர்ப்பு இருந்த நிலையில் தாக்குதலும் நடந்தன. இம் மோதல்-படிப்படியாக புலிகள்-சிங்களப் படைகள் மோதலாக உருவெடுத்தது.

நிலைமை மோசமடைவதற்கு முன்பாக, போர் நிறுத்ததைத் தொடரும் விதமாக அமைச்சர் ஹமீது, பிரபாகரனைச் சந்திக்க, பலாலி விமானநிலையத்தில் வந்திறங்கினார். அவரை விமான நிலையத்துக்கு வெளியே ஓரிடத்தில் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது. விமான நிலையத்தில் இருந்து சந்திப்பு நடக்கும் இடத்துக்கு வாகனத்தில் ஹமீது சென்று கொண்டிருந்தபோது அவரது காரின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியது சிங்களப்படை.

பிரேமதாசா அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன் விளைவுதான் துப்பாக்கிச்சூடு. துப்பாக்கிச் சூட்டையும் மீறி ஹமீது-பிரபாகரன் சந்திப்பு நடந்தது.

பிரேமதாசா மற்றும் அமைச்சர்களும், சிங்கள ராணுவமும் விடுதலைப் புலிகளை ஒழிக்க இதுவே சரியான தருணம் என்று கருதினர். புலிகள்-பிரேமதாசா இடையே போர்நிறுத்தம் அமலில் இருந்த காலத்தில், ராணுவத்தினர் புத்துணர்வு பெற்றிருந்ததாகவும், அதேசமயம் புலிகளோ அமைதிப் படையுடன் தொடர்ந்து போரிட்டு களைப்புற்றிருந்ததாகவும் கணிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் தெற்குப் பகுதியில் ஜே.வி.பி.யினரை அடக்கியதைப் போன்று புலிகளையும் ஒடுக்கிவிடலாம் என்ற நினைப்பில், மீண்டும் போர் என்பது தவிர்க்க முடியாததாகியது. பேச்சுவார்த்தைக் காலங்களில் நட்பாக இருந்து வந்த பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே நாடாளுமன்றத்தில் பேசும்போது, "புலிகள் மீது முழுமையாகப் பாயப் போகிறோம். அவர்களை அழிப்போம்' என்று வீரம் பேசினார்.

போர் என்றால் போர்; சமாதானம் என்றால் சமாதானம் என்று 1987-இல் வீம்பு காட்டிய ஜெயவர்த்தனாவைப் போன்றே, பிரேமதாசாவும், அடக்குமுறைகளைக் கையாள ஆரம்பித்தார். யாழ்ப்பாணப் பகுதியில், மின்சாரத்தை நிறுத்தியதன் மூலம் நகரத்தை இருளில் மூழ்கடித்து கூட்டுத் தண்டனையை வழங்கினார். தொடர்புகளை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் தகவல், தொலைத் தொடர்பையும் துண்டித்தார்.

யாழ்ப்பாணம் மீது மீண்டும் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டது. இதனால் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் வருகை தடைபட்டதால், பொருட்களின் தட்டுப்பாடு வானை எட்டியது. எரிபொருட்கள் வருகை நின்றதால், தொழில்களும் முடங்கின. வியாபாரமும் நசித்தது. விவசாயம் இல்லை, வாழ்க்கை என்பது மக்களுக்கு பெரும் சுமையாகியது.

இதேவேளை, விமானம் மூலம் குண்டுத் தாக்குதலும், யாழ் கோட்டை வழியாக பீரங்கித் தாக்குதலும் அதிகரித்தன. கடற்படையும் கரையோரப் பகுதிகளில் குண்டுவீசித் தாக்குதலைத் தொடங்கியது.

மக்கள் மீண்டும் பதுங்கு குழியை நாடினர். புதிய பதுங்கு குழிகளையும் வெட்டுவதற்குத் தலைப்பட்டனர்.

யாழ்ப்பாணம் புலிகள்வசம் வந்தபோதிலும் யாழ் கோட்டை சிங்கள அரசின் மேலாண்மையை வலியுறுத்தும் வகையில், சிங்கள ராணுவம் வசமே இருந்தது. இந்தக் கோட்டையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்று பிரபாகரன் திட்டமிட்டார். இந்தக் கோட்டையிலிருந்து ராக்கெட் மற்றும், பீரங்கித் தாக்குதல் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அதனை முறியடிக்கும் வகையில், புலிகள் மரபு வழித் தாக்குதலின்படி அரண்கள் அமைத்து, 1990 ஜூன் 18-இல் தாக்குதலைத் தொடங்கினர்.

இந்த கோட்டையிலிருந்த வீரர்களுக்கு உணவும், தளவாடங்களும் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதைத் தடுக்க, வான் தாக்குதலும் குறிவைக்கப்பட்டது. கோட்டைக்குள் ராக்கெட் வீச்சு நடத்தப்பட்டது. இத் தாக்குதலில் கோட்டையைக் காப்பாற்ற சிங்களப் படை பெரிதும் முயன்றது. புலிகளின் நிலைகளின் மீது வெகுவாக குண்டுமழை பொழிந்தது. இதுபோதாதென்று யாழ் நகரில் பல்வேறு இடங்களிலும் குண்டுவீச்சும் நடத்தப்பட்டது.

யாழ் நகரிலிருந்து மீண்டும் மக்கள் அகதிகளாக வெளியேறத் தொடங்கினர். மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தியதால் நோயாளிகள், ஊழியர் அனைவரும் பாதுகாப்பு தேடி ஓடினர். 107 நாள்கள் இந்தப்போர் நடந்த பின்னர், செப்டம்பர் 26-ஆம் நாளில், கோட்டை புலிகள் வசமாயிற்று.

இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் அமைதிப்படையின் அதிரடிப் படைத் தளபதியாக பணி புரிந்த அர்ஜுன் காத்தோஜ், ""1990-ஆம் ஆண்டில் இந்திய அமைதிப்படையின் தளபதியான கல்கத், பெரிய சாதனை புரிந்துவிட்டதாகவும், விடுதலைப் புலிகளின் முதுகெலும்பை முறித்து விட்டதாகவும் அவர்களை வவுனியா காட்டிற்குத் துரத்தி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், அமைதிப்படை வெளியேறிய பின்பு, ஸ்ரீலங்கா ராணுவம் யாழ்ப்பாணக் கோட்டையை இழந்தது; மாங்குளம் முகாமை இழந்தது. இரண்டு வருட காலத்தில் அமைதிப்படை இழந்த இழப்பை விட அதிகமான இழப்பினை ஆறேழு மாதங்களில் ஸ்ரீலங்கா ராணுவம் அடைந்தது. புலிகளின் முதுகெலும்பை முறித்திருந்தால்- இப்படியெல்லாம் புலிகளால் வெற்றி பெற்றிருக்க முடியுமா?'' என்று எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி என்னும் ஏட்டில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் (தமிழீழம் சிவக்கிறது-பழ.நெடுமாறன்).

இந்தக் கருத்து யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய அமைதிப் படையின் தளபதிகளில் ஒருவர் சொன்ன கூற்றானதால், புலிகளின் வலிமை மீண்டும் நிரூபணமாயிற்று. இதுவே, பிரேமதாசாவுக்கு மாபெரும் அவமானகரமான சம்பவம் ஆயிற்று. பாதுகாப்புத்துறை அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே யாழ்ப்பாண மக்களைத் துன்புறுத்தும் வேலையில் இறங்கி, குண்டு மழை பொழிய வைத்தார்.

இந்தத் தடைகள் மற்றும் தாக்குதல் குறித்து உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. அச்சமயம் பிரேமதாசாவின் நண்பர்களாக இருந்த ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினரும் கண்டனம் தெரிவித்தனர். ஈரோஸ் அமைப்பு தங்களின் நாடாளுமன்றப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அவ்வமைப்பின் 13 உறுப்பினர்களும் பதவி விலகினர். இலங்கையில் உள்ள போராளி அமைப்புகளும் மக்களும் தமிழ்நாட்டில் உள்ளவர்களும் குரல் கொடுக்க முடிந்ததேயொழிய, இந்தியா தலையிட வேண்டும் என்று குரலெழுப்ப முடியவில்லை. காரணம், இவர்கள் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்று குரல் கொடுத்திருந்ததுதான். இந்தக் காரணமே பிரேமதாசாவுக்கும் அவரது சிங்கள ராணுவத்துக்கும் சாதகமான அம்சமாக இருந்தது.

150: புலிகள் - முஸ்லிம்கள் உறவு!

"இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவருமே தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆவார்கள். மதத்தால் வேறுபட்டவர்களே தவிர மொழியாலும் இனத்தாலும் முழுக்க, முழுக்க தமிழர்களே ஆவார்கள். உருது, அரபி, பாரசீகம் மற்றும் மலாய் பேசும் முஸ்லிம்கள் தமிழீழத்துக்கு வெளியே, கொழும்பு நகரை ஒட்டி, குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதை ஆரம்ப அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ளோம்.

தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் பூர்வமான தாயகம் என்று அழைக்கப்படுகிற பகுதியில்தான் அவர்கள் வாழ்கிறார்கள். எனவே உருவாகப்போகும் தமிழீழ நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாகத்தான் அவர்கள் திகழ்கிறார்கள்' இவ்வாறு புலிகள் - முஸ்லிம்கள் உறவு குறித்து "தென் செய்தி' வெளியீடு எண் 8 கூறுகிறது.

இந்நிலையில், "இலங்கை, வடக்கு - கிழக்கு மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள் குறித்து உண்மைகளைத் திரித்துக் கூறும் தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதையொட்டி 1988-ஆம் ஆண்டு, சென்னையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர் கிட்டுவுடன் முஸ்லிம் தூதுக் குழு ஒன்று பேச்சு நடத்தியது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசில் மூத்த அமைச்சராக இருந்த பதுஃதீன் முகமது தலைமையில் வந்த தூதுக் குழுவினர் கிட்டுவுடன் பேசி, உருவாகப் போகும் தமிழீழத்தில் தங்களுக்குள்ள உரிமைகள் குறித்துப் பேசி உடன்பாடு கண்டதாக' -அந்த வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் 1988-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அவ்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

தமிழ் தேசிய இனத்தில் தனித்துவமான கலை, கலாசாரம், பண்பாடுகளைக் கொண்ட இனக் குழுவினரான இலங்கைவாழ் முஸ்லிம்கள், அச்சம், ஐயப்பாடுகளின்றி தமது கலை, கலாசாரம், பண்பாடு, மதம் போன்றவற்றைப் போற்றி வளர்க்கவும் பாதுகாக்கவும் தமிழ் தேசிய இனத்தின் ஏனையவர்களுக்குள்ள அனைத்து உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் உத்தரவாதம் வழங்குகின்றோம். பின்தங்கிய நிலையில் இருக்கும் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார, அரசியல் உரிமைகளை மேம்படையச் செய்ய எமது இயக்கம் எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பு வழங்கும். தமிழ் தேசிய இனத்தில் சமத்துவமான நிலைமையை அவர்கள் அடையும்வரை அவர்களுக்கு அவர்கள் பின்தங்கிய துறைகளில் சிறப்புச் சலுகைகள், உதவிகள் ஆட்சி நிர்வாகத்தின்கீழ் கிடைக்க எமது இயக்கம் ஆவனவற்றைச் செய்யும்.

இனத்தின் தனித்துவம் காப்பாற்றப்பட நிரந்தர வாழ்விடம் எவ்வளவு அவசியம் என்பதை நன்கறிந்தவர்கள் முஸ்லிம்கள். பாரம்பரியமாக இருந்து வந்த நிலத்தை, சியோனிஸ்டுகளான யூதர்களிடம் இழந்துவிட்டு இன்று பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பல்வேறு நாடுகளில் அகதிகள் முகாம்களிலிருந்து தமது போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களது நிலைமைகளைப் போலன்றி, தம் நிலத்தைக் காப்பாற்ற தனித்துவமான தமது கலை, கலாசாரம், பண்பாடு, மதம் என்பவற்றைக் காப்பாற்ற எம்முடன் சேர்ந்து போராட முன்வந்திருக்கிறார்கள். அதன் ஒருபடிதான் முஸ்லிம் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தி வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கை.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசுபவர்களாக இருப்பினும் அவர்கள் வேறுபட்ட தனித்துவத்தைக் கொண்ட தமிழ் தேசியத்தினுள் உள்ளடங்கிய ஓர் இனக்குழு என்பதனையும் வடக்கு-கிழக்கு மாகாணம் ஏனைய தமிழ் மொழி பேசும் மக்களின் பாராம்பரியத் தாயகமாக உள்ளது போலவே முஸ்லிம்களது பாரம்பரியத் தாயகமாக உள்ளது என்பதனையும் ஏற்றுக் கொள்கிறோம்.

வடக்கு-கிழக்கு ஒன்றிணைத்த தாயகத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் வாழ, தமிழீழ விடுதலைப் புலிகள் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவர் என்பதையும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கு எதிர்பார்க்கப்படும் முழு உத்தரவாதமும் சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

தாயகத்தில், முஸ்லிம் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் எனவும் தாயகத்தில், உரிமைகளை வென்றெடுப்பதற்காக முஸ்லிம் மக்கள் ஏனைய தமிழ் பேசும் மக்களுடன் பெருமளவில் இணைவதன் மூலமாகத்தான் தமது மண்ணையும் கலாசாரத்தையும் காப்பாற்ற முடியுமென்பதையும் முஸ்லிம் மக்களின் நலனுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாகப் பாடுபாட்டு வருவார்கள் என்பதும் உறுதியாக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மாகாண சபைக்கான 13-வது அரசியல் சட்டத் திருத்தம் முஸ்லிம் மக்களினதும் ஏனைய தமிழ் பேசும் மக்களினதும் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவில்லை.

முஸ்லிம் மக்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் ஆட்சியதிகாரங்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளவும் கூடிய ஏற்பாடுகளைச் செய்யும்போது அத்தகைய நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டிற்குப் பாரதூரமான குந்தகமெதுவும் ஏற்படுத்தக்கூடாது.

மேற்கூறியதன் அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாகாண சபையில் ஏனைய தமிழ் பேசும் மக்களுக்குள்ள இன உரிமைகளையும் சலுகைகளையும் வாய்ப்பினையும் சுதந்திரத்தினையும் அனுபவிப்பதற்கு வடக்கு-கிழக்கு மாகாணத்தைத் தமது தாயகமாகக்கொண்ட முஸ்லிம்கள் உரித்துடையவர்கள்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 33 சதவிகிதம் தொகையினர். வடக்கு-கிழக்கு ஒன்றிணைந்த மாகாணத்தில் முஸ்லிம்கள் 18 சதவிகிதத் தொகையினர். முஸ்லிம்கள் அதிகபட்ச பாதுகாப்பைப் பெற்று ஆட்சி அதிகாரங்களை, பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெறக்கூடிய வகையில் ஒன்றிணைந்த தாயகத்திலுள்ள 30 சதவிகிதத்திற்குக் குறைவில்லாத வகையில், மாகாண சபையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கும் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கும் உரித்துடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதுடன் இவ் விகிதப்படியான உரித்துகளைப் பெறுவதற்குத் தேவையான அரசியல் சட்ட ஏற்பாடுகளைச் செய்வதற்கு இருதரப்பினரும் முழு முயற்சிகளையும் மேற்கொள்வர்.

வருங்கால அரச காணிப் பங்கீடு முஸ்லிம்களுக்குக் கிழக்கு மாகாணத்தில் 35 சதவிகிதம் குறைவில்லா வகையிலும் மன்னார் மாவட்டத்தில் 30 சதவிகிதத்துக்குக் குறைவில்லாத வகையிலும் வட மாகாணத்தில் ஏனைய பகுதிகளில் 5 சதவிகிதத்துக்குக் குறைவில்லாத வகையிலும் இருக்க வேண்டும்.

வடக்கு-கிழக்கு தாயகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் முஸ்லிம்களின் விகிதாசாரத்தின்படி பொதுத்துறை வேலைவாய்ப்பிற்கான உரிமையை முஸ்லிம்கள் கொண்டிருப்பர்.

கல்வித்துறையில் எல்லா இடங்களிலும் சம வாய்ப்புகள் பேணப்படும் வரை பல்கலைக்கழக அனுமதியின்போது கல்வித் துறையில் பின்தங்கியுள்ள பிரதேசங்களில் விசேஷ கவனிப்புச் செலுத்தப்படும்.

பல்கலைக்கழக மட்டம் வரையிலான பிரத்தியேகக் கல்வி வசதிகள் முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்படும்.

முஸ்லிம் மக்களுக்காக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் நிறுவப்படும்.

முஸ்லிம் மக்களது தனித்துவத்தின் உரிமைகள், அக்கறைகள் என்பவற்றைப் பாதிக்கக்கூடிய எந்தவித சட்டவாக்கியங்களும் அவற்றிற்கு முஸ்லிம் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் சார்பாக வாக்களித்தாலன்றி வடக்கு-கிழக்கு மாகாண சபையினால் நிறைவேற்றப்படலாகாது.

வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் முறையாக நியமிக்கப்பட்டிருந்தாலன்றி, அம் மாகாண சபையின் துணை முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும்.

வடக்கு-கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அவர்கள் அரசியல், நிர்வாக, அபிவிருத்தி அலகுகள் பல்வேறு மாவட்டங்களில் உருவாக்கப்படுதல் வேண்டும். இதுபற்றி விடுதலைப் புலிகள் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இவற்றுள் உள்ளடக்கப்பட வேண்டிய பாரம்பரிய எல்லைகள், மூலவளங்கள் என்பன பற்றி மேலும் இருபகுதியினரும் ஆய்வு நடத்தி இறுதி முடிவு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு பல நிலைகள் விவாதித்து முடிவு காணப்பட்டன. தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய இந்த உடன்பாட்டில் விடுதலைப் புலிகள் சார்பில் கிட்டுவும், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பில் எம்.ஐ.எம். மொகைதீனும் கையெழுத்திட்டனர்.

நாளை:

151: பிரித்தாளும் சூழ்ச்சி!

கிட்டுவும், மொகைதீனும் கையெழுத்திட்டு உருவான உடன்படிக்கை கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. ஆளும் தரப்பினர், தமிழர்-முஸ்லிம் இடையே பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைபிடிக்க ஆரம்பித்தனர். அமைதிப்படையும், விடுதலைப் புலிகளும் நேரடியாக மோதிய சூழ்நிலையில், தமிழர்கள்-முஸ்லிம்கள் இடையே முரண்பாடுகளும் வளர்த்து விடப்பட்டன.

இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது நூலில், "முஸ்லிம் காங்கிரஸ், ஜிகாத் அமைப்பினருக்கு அமைதிப் படை ஆயுதங்களை வழங்கி புலிகளுக்கு எதிராகப் போராடும்படி தூண்டியது. ஆனாலும், புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரங்கள் நடைபெற அனுமதிக்கவில்லை' (தமிழீழம் சிவக்கிறது பக். 345) என்றும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறியபோது, பிற போராளி குழுக்களுக்கும், மறுபுறம் ஜிகாத் இளைஞர்களுக்கும் ஏராளமான ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கி விட்டுத்தான் சென்றது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் நோக்கம் இவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினாலும், புலிகள் தொடர்ந்து நெருக்கடியைச் சந்திக்க வேண்டும் என்பதே ஆகும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இதே நிலையைத்தான் பிரேமதாசா அரசும் விரும்பியது.

பிரேமதாசா-புலிகள் பேச்சு முறிவடைந்து யுத்தம் பெருமளவில் மூண்ட நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில் "பொத்துவில்' என்கிற இடத்தில் தமிழர்-முஸ்லிம்களிடையே பெரும் மோதல் எழுந்தது. இதில் தமிழர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன.

பொத்துவிலில் தொடங்கிய மோதல் அம்பாறை மாவட்டம் முழுவதும் விரிவடைந்தது.

இதனால் தமிழர்கள் அந்தப் பகுதியிலிருந்து விரட்டப்பட்டார்கள். இவ்வாறாக 75 ஆயிரம் தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர நேர்ந்தது. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்ததாகவும் தகவல் உள்ளது. "நூற்றுக்கும் மேற்பட்ட பழந்தமிழ்க் கிராமங்கள் பல அடியோடு அழிக்கப்பட்ட நிலையில், பாண்டிருப்பு, காரைத்தீவு, கோமாரி, தம்பிலுவில், திருக்கோவில் கிராமங்களில் மட்டுமே தமிழ் மக்கள் வசிக்கிறார்கள்' (தமிழீழம் சிவக்கிறது-பழ.நெடுமாறன்-பக். 352).

இதன் தொடர் நிகழ்வாக, முஸ்லிம்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல் குறித்து, "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூலில் சி.புஷ்பராஜா வெளியிட்டுள்ளார். அந்தத் தகவலின்படி 1990-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி குருக்கள் மடத்திலும், ஆகஸ்ட் 3-ஆம் தேதி காத்தான்குடி பள்ளிவாசலிலும், அதே ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஏறாவூரிலும் ஆக மொத்தம் 271 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அவர் எழுதியுள்ளார். "ஈழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் மாபெரும் தவறுதான்' என்று குறித்துள்ள புஷ்பராஜா, தான் அங்கம் வகித்த ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர் அமைதிப்படையினருடன் சேர்ந்து 1987-இல் கல்முனையிலும், 1989-இல் சம்மாந்துறையிலும் முஸ்லிம் மக்களுக்குச் செய்த கொடுமைகளையும் குறிப்பிட்டிருக்கிறார் (பக்.502).

யாழ்ப்பாணக் குடா நாட்டிற்குள், புலிகளின் அரண்களையும் கொரில்லா நடவடிக்கைகளையும் ஜிகாதி இளைஞர்களில் சிலர் சிங்களப்படைக்குக் காட்டிக்கொடுத்து வந்தனர் என்றும், இந்த ஜிகாதி இளைஞர்களுக்கு யாழ் நகர முஸ்லிம்கள் புகலிடம் அளித்தனர் என்றும், இதனைக் கண்டித்த புலிகள் இந்தப் போக்கைக் கைவிடுமாறும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த எச்சரிக்கைக்கு பயன் ஏற்படாத நிலையில், ஜிகாதி இளைஞர்களின் துப்பு, சிங்களப் படையின் தாக்குதலைக் கடுமையாக்கியது. வேறு வழியின்றி விடுதலைப் புலிகள் முஸ்லிம் வட்டாரங்களில் வாழ்ந்தோரை குறுகிய காலக்கெடுவில் யாழ்குடா நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டனர் (புலிகள் அறிக்கை).

பலத்த விமர்சனத்துக்கு ஆளான இந்த உத்தரவு குறித்து பி.பி.சி. வானொலிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அளித்த பேட்டியில்,

""1990-ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இனக் கலவரம் வெடித்துப் பெரும் தொகையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபொழுது யாழ்ப்பாணத்திலும் கலவரம் பரவும் ஆபத்து எழுந்தது. அந்த வேளையில், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பைக் கருதி நாம் அவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தாற்காலிகமாக வெளியேறும்படிக் கேட்டுக் கொண்டோம். ஆயினும், யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர அனுமதிப்போம்'' என்றார்.

முஸ்லிம் மக்கள் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன? என்று பி.பி.சி. நிருபர் கேட்ட இன்னொரு கேள்விக்கு வே.பிரபாகரன் அளித்த பதில்:

""முஸ்லிம் மக்கள் தனித்த பண்பாடு உடைய ஓர் இனக்குழு என்ற வகையில், அவர்களது பிரச்னை அணுகப்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் தனித்துவம் மற்றும் நில உரிமைப்பாடு பேணப்படும். அதேவேளை, அவர்கள் தமிழ் மக்களோடு ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களது சமூக, அரசியல், பொருளாதார வாழ்வைச் சிறப்பாக்கும் என நாம் கருதுகிறோம். சிங்களப் பேரினவாதிகளும் சுயநலம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும், தமிழ்-முஸ்லிம் மக்களிடையே வேற்றுமையையும், விரோதத்தையும் வளர்த்துவிட முயலுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு முஸ்லிம் மக்கள் பலிகடா ஆகக் கூடாது'' என்றும் அவர் பதிலளித்தார்.

இந்திய அரசியலில் ஒரு மாற்றமாக, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பில் மண்டல் கமிஷனின் பரிந்துரை அமலாக்கத்தில் பிரச்னை எழுந்தது. ஆனால், மண்டல் பரிந்துரையை அமல்படுத்துவது என்பதில் வி.பி.சிங் உறுதியாக இருந்தார். இம் முயற்சியை இந்தியாவின் வட மாநிலங்களில் மாணவர்களும், படித்த வர்க்கத்தினரும் கடுமையாக எதிர்த்தனர். தீக்குளிப்பு சம்பவங்களும் நடைபெற்றன.

மண்டல் கமிஷன் அறிக்கை அமலாக்கம், இந்திய மக்களை இருவேறு பிரிவுகளாகப் பிளவுபடுத்தும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

வி.பி.சிங் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்த பாஜக எந்த நிலை எடுப்பது என்பது குறித்து அந்தக் கட்சிக்குள்ளேயே பலத்த விவாதம் எழுந்தது. இறுதியில் மண்டலுக்கு எதிராக, ராமர் கோயிலா - பாபர் மசூதியா? என்கிற பிரச்னையை பாஜக கையிலெடுத்தது. ஆறாயிரம் மைல்களை உள்ளடக்கிய ரதயாத்திரைத் திட்டத்தை, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி, 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-இல், குஜராத்தின் சோமநாத் கோயிலில் இருந்து, தொடங்கினார்.

வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் புயலைக் கிளப்பிய இந்த ரதயாத்திரை, பீகார் எல்லையைத் தொட்டவுடன், அம்மாநில முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் யாத்திரையைத் தடை செய்து, அத்வானியைக் கைது செய்தார். அரசு விருந்தினர் மாளிகை ஒன்றில் அவர் சிறைவைக்கப்பட்டிருக்க, அவருடன் வந்த தொண்டர்கள் உத்தரபிரதேசத்தை நோக்கிச் சென்றார்கள்.

அங்கே, அம்மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ், ஊர்வலத்தில் வந்தவர்களைக் கூட்டமாகக் கைது செய்து, நகரவிடாமல் செய்தார்.

அதனையும் மீறி ஒன்றரை லட்சம் பேர் தடுக்கப்பட்டனர். அதையும் மீறி "கரசேவகர்கள்' என்றழைக்கப்பட்ட தொண்டர்கள் சரயு நதியைத் தாண்டிச் சென்று, பாபர் மசூதி அமைப்பில் காவிக்கொடியை நட்டனர். சிறப்பு அதிரடிப் படைக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் உயிர்துறந்தனர். ஏராளமான பேர் படுகாயமுற்றனர்.

வி.பி.சிங் அரசுக்கு அளித்துவந்த தனது 86 உறுப்பினர்களின் ஆதரவை பாரதீய ஜனதாக் கட்சி விலக்கிக் கொண்டது. பிரதமர் வி.பி.சிங் தனது பதவியைத் துறந்தார். 1979-இல் மொரார்ஜி தேசாய் அமைச்சரவைப் பதவி விலகியதையொட்டி, சரண்சிங் பிரதமராவதற்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்த அதே உத்தியைப் பயன்படுத்தி, தற்போது சொற்ப எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட முன்னாள் "இளந்துருக்கியரா'ன சந்திரசேகர் பிரதமர் ஆவதைக் காங்கிரஸ் கட்சி வரவேற்று, ஆதரவு தெரிவித்தது. 1990-ஆம் ஆண்டு நவம்பர் 10-இல் சந்திரசேகர் பிரதமரானார்.

உடனடித் தேர்தலை யாருமே விரும்பாத நேரத்தில், சந்திரசேகர் ஆட்சி இடைக்கால ஏற்பாடாகவே அப்போது கருதப்பட்டது.

152: ராஜீவ் படுகொலை!

புலிகளின் மகளிர் பிரிவு, நேரடிப் போரில் கலந்துகொண்டது "கொக்காவில்' சிங்கள ராணுவ முகாம் தகர்ப்பில்தான். அதுநாள்வரை மகளிர் படைப்பிரிவு, தற்காப்பு யுத்தத்திலேயே பங்கெடுத்திருந்தார்கள். இந்த "கொக்காவில்' சிங்கள முகாம் தகர்ப்பில் புலிகளுடன் மகளிரும் சம அளவில் கலந்துகொண்டனர்.

1990-ஆம் ஆண்டு ஜூலை 10, 11-ஆம் தேதிகளில் நடைபெற்ற தாக்குதலில் ராணுவ முகாம் முழுமையாகத் தகர்க்கப்பட்டது. முகாம் பொறுப்பாளர் காப்டன் அலந்தெனியா உள்ளிட்ட எழுபதுக்கும் மேற்பட்டோர் உயிர் துறந்தனர்.

புலிகள் தரப்பிலும் 18 வீரர்கள் இறந்தனர். இதில் மகளிர் படைப் பிரிவைச் சேர்ந்த 6 பெண் புலிகளும் அடங்குவர். இந்தப் போரில் காப்டன் உஷா, இரண்டாம் லெப்டினன்ட் பிரியங்கா, சாலினி, மாலா, குமாரி, அஜந்தா ஆகியோர் இறந்தனர். பெண்புலிகளின் இந்தத் தாக்குதல் சிங்கள ராணுவத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

யாழ்கோட்டை விழுந்தபிறகு சிங்கள ராணுவம் வன்னிப் பகுதியில் மாங்குளத்தில் இருந்த ராணுவ முகாமை பலப்படுத்தியது. இந்த முகாமைத் தாக்குவது புலிகளின் திட்டமாயிற்று. 1990-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் தாக்குதல் நடைபெற்றது. பெருமழையிலும், எதிரிகள் வானிலிருந்து குண்டு மழை பொழிந்த போதிலும் புலிகள் கடுமையாகப் போரிட்டனர். முகாமில் இருந்த அனைவருமே கொல்லப்பட்டனர். பெருமளவில் ஆயுதங்கள் மற்றும் கவச வண்டிகள், பீரங்கிகள், வெடிமருந்துகள், ரவைகள் கைப்பற்றப்பட்டன.

மாங்குளம் வீழ்ச்சியினால் எதிர்க்கட்சிகளின் கண்டனத்தையும் பிரேமதாசா அரசு சந்திக்க வேண்டியிருந்தது. இந்தப் போரில் விடுதலைப் புலிகளின் "பசீலன்' என்கிற 500 மீட்டர் தூரத்தில் இருந்து வீசக்கூடிய ராக்கெட் குண்டுகள், எதிரிகளை நிலைகுலைய வைத்தது.

புலிகள் 1991-ஆம் ஆண்டு ஜனவரியில் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். இந்தப் போர்நிறுத்தத்தை சிங்கள அரசு ஏற்கவில்லை. புலிகள் தங்களது ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்தால்தான் போர்நிறுத்தம் என்று சொன்ன பிரேமதாசா, போர்நிறுத்தக் கோரிக்கையை நிராகரித்தார்.

அதுமட்டுமன்றி, இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே, "புலிகளின் பலவீனப் போக்கை வெளிப்படுத்துகிறது' என்றார்.

"வல்வெட்டித்துறை முகாமில் பிரபாகரன் தங்கியிருக்கிறார்' என்ற தகவலையடுத்து, வடமராட்சிப் பகுதி, விமானத் தாக்குதலுக்கு ஆளானது. அமைதிப் படையின் தாக்குதலுக்குத் தப்பிய கட்டடங்கள், சிங்களப் படையின் விமானத் தாக்குதலால் தரைமட்டமாயின. சிங்களப் படைகள் இந்தத் தாக்குதலில் பீப்பாய் குண்டு என்கிற ஆயுதத்தை மேலிருந்து வீசினார்கள். பீப்பாய் குண்டில் வெடிமருந்துகள் அதிக அளவில் நிரப்பப்பட்டிருக்கும். இதனால் அது கீழே விழுந்து சிதறியபோது பெருமளவில் நாசத்தை ஏற்படுத்தியது.

"ஒரு லட்சம் வீரர்கள்' என்ற கோஷத்தை முன்வைத்த இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே, ராணுவத்துக்கு அப்போது இருந்த 60 ஆயிரம் வீரர்கள் என்ற எண்ணிக்கையை ஒரு லட்சம் வீரர்களாக உயர்த்தப் போவதாக அறிவித்தார்.

ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த அதிரடி அரசியல்வாதிகள் காமினி திஸ்ஸநாயகா, அதுலத் முதலி போன்றோரை பிரேமதாசா ஒதுக்கி வைத்துதான் ரஞ்சன் விஜயரத்னேவுக்கு பதவி வழங்கி இருந்தார். தொடர்ந்த சில வாரங்களில், பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே குறிவைக்கப்பட்டார். இருவேறு தாக்குதல் முயற்சிகளில் தப்பித்த அவர், மூன்றாவது முயற்சியாக, வெடிபொருள் நிரப்பிய மினிபஸ் மோதலில் சின்னாபின்னமாக்கப்பட்டார் (2-3-1991).

இந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் பிரதமர் சந்திரசேகர் ஆட்சியில், நிர்வாகரீதியாக சொல்லப்பட்ட தகவலை, புலிகளுக்கு தெரிவித்ததாக திமுக அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது.

தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் பர்னாலாவிடம் மத்திய அரசு அறிக்கை கேட்ட சூழ்நிலையில், அவர் மறுக்கவே, அவரை தில்லிக்கு அழைத்தனர். தில்லியில் உளவுத்துறை இயக்குநர் எம்.கே. நாராயணன், "ரா' உயர் அதிகாரி ஜி.எஸ். வாஜ்பாய் ஆகியோர் திரட்டித் தந்த தகவல்கள் கொண்ட கோப்பினை, அவரது பார்வைக்கு வைத்தனர். அந்த உளவுத் தகவல்கள், விடுதலைப் புலிகளுடனான தகவல் பரிமாற்றங்களை இடைமறித்துக் கேட்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

நிர்வாகரீதியில் அரசுக்குத் தரப்பட்ட தகவல்கள் புலிகளிடம் தெரிவிக்கப்பட்டதாக அத்தகவல்கள் கூறின. இதன் அடிப்படையில் 30-1-1991-இல் திமுக அரசின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இலங்கையைத் தாயகமாகக் கொண்டதும், தமிழீழம் என்னும் தனி நாடுக்கான ஆயுதமேந்திய போராட்டம் நடத்தி வருவதுமான தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் தமக்கென்று சில பகுதிகளில் செல்வாக்கை ஏற்படுத்திக்கொண்டு சுதந்திரமாகச் செயல்படக்கூடிய அளவுக்கு வளரவிட்டதாகவும், அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும் திமுக அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் காரணத்துக்காகவே மாநில அரசு கலைக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது (31-1-1991-தினமணி).

ஆளுநர் அறிக்கையைப் பெறாமல் திமுக அரசு கலைக்கப்பட்டது குறித்து எழுந்த விமர்சனத்துக்கு அப்போதைய வர்த்தகம் மற்றம் சட்டத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சுப்ரமணியன் சுவாமி "ஆளுநரிடம் அறிக்கை கேட்கலாம்; பெறவேண்டும் என்பது அவசியமில்லை' என்று தெரிவித்தார் (நாளிதழ்கள் செய்திகள்).

இதனையொட்டி, பிரதமர் சந்திரசேகர் பலத்த கண்டனத்துக்கு ஆளானார்.

ஆட்சிக்கலைப்பையொட்டி கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.கருணாநிதி, "ஜனநாயகத்துக்கு விடப்பட்ட அறைகூவல்; தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்' என்று குறிப்பிட்ட அவர், மேலும் கூறுகையில், "ஜனநாயக நெறிமுறைகளைக் காப்பாற்றத் தவறியுள்ள சந்திரசேகர், எனது தலைமையிலிருந்த ஆட்சியைக் கலைத்ததன் மூலம் தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்' என்றும் தெரிவித்தார். பிப்ரவரி 6-ஆம் தேதி முழு அடைப்பு நடத்துவதாக, தேசிய முன்னணி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுத்ததாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. 20, 23, 26-5-1991 ஆகிய தேதிகள் தேர்தல் நாள்களாக அறிவிக்கப்பட்டன.

இதில் தமிழகம், பாண்டிச்சேரி, மேற்கு வங்காளம், ஒரிசா, குஜராத் மாநிலங்களில் முழு அளவிலும், உத்தர பிரதேசத்தில் இறுதிக்கட்டமாக 43 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மையத்தில் ஆட்சியை இழந்திருந்த ராஜீவ் காந்தி, இம்முறை ஆட்சியைப் பிடிப்பதில் தீவிரம் காட்டி, பிரசாரத்தை முடுக்கிவிட்டிருந்தார். அந்தவகையில் அவர் தமிழகத்திலும் பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.

ராஜீவ் காந்தி தமிழகத்துக்கு வருவது என்பது புதிதல்ல; 1984 தொடங்கி 1991 வரை பிரதமர் என்கிற முறையிலும் பிரதமர் அல்லாத நிலையிலுமாக 64 தடவைகள் அவர் தமிழகம் வந்திருக்கிறார்; பத்திரமாகத் திரும்பிச் சென்றுமிருக்கிறார்.

அதேபோன்றுதான் தற்போதும் (1991) பிரசாரம் மேற்கொள்ள மே 21-ஆம் தேதி, இரவு 8.30 மணியளவில் சென்னை வந்திறங்கினார். விமானநிலையத்திலிருந்து குண்டு துளைக்காத காரில் ஏறி, நேரடியாகப் பிரசாரத்துக்குக் கிளம்பினார். வழியில் காரை நிறுத்தி, போரூர், பூவிருந்தவல்லி சந்திப்புகளில் வாக்குக் கேட்டுவிட்டு, ஸ்ரீபெரும்பூதூர் சென்றார். அங்குதான் விரிவான பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சாலையோரமிருந்த அன்னை இந்திரா காந்தி சிலைக்கு மாலையணிவித்துவிட்டு, அங்கிருந்து நடந்தே பொதுக்கூட்ட மேடைக்குச் சென்றார். வழியில் தொண்டர்களும், பொதுமக்களும் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர், மேடையை நெருங்கியபோது, அங்கே நின்றுகொண்டிருந்த காங்கிரஸ் பிரமுகர் லதா கண்ணனின் மகள் கோகிலா, ராஜீவ் காந்தியைப் புகழ்ந்து, தான் எழுதிய கவிதையை வாசித்துக் காட்டினார். அதைக்கேட்டு மகிழ்ந்த ராஜீவ், கோகிலாவின் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுத் திரும்பினார்.

கையில் மாலையுடன் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை போலீசார் தடுப்பதைப் பார்த்து, அவரை அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். அந்தப் பெண் ராஜீவ் காந்தியை நெருங்கி, பாதம் நோக்கிக் குனிந்தபோது, பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்து அங்கு கூடியிருந்த 18 பேர் உடல் சிதறி பலியாயினர்.

அந்த 18 பேரில் ராஜீவும் ஒருவராக இருக்கக்கூடும் என்று கனவிலும் கருதாத நிலையில், அவரைத் தேடினார்கள். அனைவரிடமும் பதைபதைப்பும், ஆற்றாமையும் பொங்கிக்கொண்டிருந்த நிலையில், ராஜீவ் காந்தி அணிந்திருந்த "கான்வாஸ் ஷூ'வுடன் கிடந்த கால்களும் மற்றும் சில உடல் பாகங்களும் அவர் இறந்துவிட்டார் என்பதைப் புரியவைத்தது. கூடியிருந்தவர்களும் செய்தி அறிந்தவர்களும் பதறினர்.

இந்தச் சம்பவத்துக்குக் காரணமான பெண்ணின் தலை சில அடி தூரத்தில் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டெடுத்தார்கள். அந்தப் பெண் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. (ஆதாரம்: India after Gandhi by Ramachandra Guha. Page-637)

153: முதல்வராகிறார் ஜெயலலிதா!

லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் அலுவலகத்தில் இருந்த கிட்டு, ராஜீவ் கொலையைத் தாங்கள் செய்யவில்லையென்றும் இந்தப் படுகொலைக்கும் தங்களது இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மறுத்தார். ஆனால் படுகொலை நடந்த இடத்தில் கிடந்த காமிரா மூலம், ராஜீவ் காந்தியின் இறுதி நிகழ்ச்சிகளாகப் பதிவு செய்யப்பட்ட படங்களில் "தனு' படமும் இடம்பெற்றிருந்தது. அவர் "புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்' என்று கருதப்பட்டது.

இக் கொலைச் சம்பவத்துக்கு யார் காரணம் என்பது உறுதியாவதற்கு முன்பாகவே, விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழகத்தில் விமர்சனத்துக்கும், பலத்த கண்டனத்துக்கும் உள்ளானது. இதன் காரணமாக இவ்வியக்கம் பெருமளவில் பின்னடைவைச் சந்தித்தது.

இந்த சோகத்துக்கிடையே நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறுமா -ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. மூன்று கட்டங்களாக நடைபெறவிருந்த 1991 நாடாளுமன்றத் தேர்தலில் முதல் கட்டத் தேர்தல்கள் முடிவுற்றிருந்த நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தல்கள் முறையே மே மாதம் 23 மற்றும் 26 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தன.

நாடெங்கும் நிலவிய கொந்தளிப்பான சூழ்நிலையில், தில்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாகத் தேர்தலை மறுபடியும் ஜூன் மாதம் 12 மற்றும் 15 தேதிகளில் நடத்துவது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தலும் சட்டமன்றத்துக்கான தேர்தலும் 15-ஆம் தேதியன்று நடத்தப்பட்டன.

தேர்தல் கருத்துக்கணிப்பு மூலம் தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்றும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தெரியவருவதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் ராஜீவ் காந்தியின் அகால மரணத்தால் எழுந்த அனுதாப அலை காரணமாக, காங்கிரஸ் கட்சி 244 இடங்களில் வென்று மக்களவையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது.

இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவரும், ஆந்திரப் பிரதேசத்தவருமான பி.வி.நரசிம்மராவ் ஆளும் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்றார்.

பாஜக கட்சியோ அனுதாப அலையையும் மீறி 120 இடங்களில் வென்றது.

தமிழக சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் அஇஅதிமுக -காங்கிரஸ் அணி பெரும்பாலான இடங்களில் வென்று பெரும்பான்மை பலம் பெற்றது. திமுக இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு ஏற்றார்.

""ராஜீவ் காந்தி படுகொலையை நிகழ்த்தியது யார் என்பதில் பல்வேறு யூகங்களும் பதிவுகளும் வெளியான நிலையில், சி.பி.ஐ. கூடுதல் இயக்குநர் கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு அதற்கான அலுவலகமும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஒதுக்கப்பட்டது. தொடர்ச்சியாக நீதிபதி வர்மாவின் தலைமையில் "வர்மா கமிஷன்' அமைக்கப்பட்டு, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்தனவா என்று ஆராயப்படும் என்றும், ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் சதிச் செயல் இருக்கிறதா -அதில் யாரெல்லாம் பங்கு பெற்றிருக்கிறார்கள் என்று ஆராய நீதிபதி ஜெயின் தலைமையில் "ஜெயின் கமிஷன்' ஒன்றும் அமைக்கப்பட்டது (ஆகஸ்ட் 1991).

யாழ்குடாவையும், வடபகுதியையும் இணைக்கும் பாதையில் ஆனையிறவு உள்ளது. யாழ் கோட்டையை இழந்த பின்னர் இங்கே பெருமளவில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. இந்த முகாம் இருபகுதி மக்களையும் பிரித்து வைப்பதில் கண்ணாக இருந்தது. பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், எந்தப் பொருளும் இந்த ஆனையிறவு வழியாக யாழ்குடா செல்வதைத் தடுப்பதிலும் தீவிரமாக இருந்தது. யாழ்ப்பாணம்-கண்டி தேசிய நெடுஞ்சாலை, ரயில்பாதை ஆகியவை துண்டிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்பாக சிலாவத்துறையில் இருந்த சிங்களப் படை முகாமை நான்கு முனைகளில் முற்றுகையிட்டு, போர் புரிந்து சாதனை நடத்தியிருந்ததால், அந்த அனுபவம் மூலபலமாக கொள்ளப்பட்டது.

மன்னார் -மடு நெடுஞ்சாலையில் உள்ள பகுதி சிலாவத்துறை ஆகும். இப் பகுதி சிங்கள ராணுவ முகாம்களின் இருப்பிடமாக மாறி பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. தமிழர் வாழ்விடமான இப் பகுதியில் 6000 ஏக்கர் முந்திரிப் பண்ணையை உருவாக்கி சிங்களவர் குடியேற்றம் நிகழ்ந்த காரணத்தால் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்தார்கள். இந்த முகாம்களைத் தகர்ப்பது என முடிவெடுத்துதான் தாக்குதல் தொடுக்கப்பட்டது. நான்கு நாள்கள் இத்தாக்குதல் நேருக்கு நேர் நடத்தப்பட்டது.

சிலாவத்துறையில் பெண் புலிகளுக்குத் தலைமை ஏற்ற தளபதி ராதா, "கொக்கிளாய் சண்டை, மாங்குளம் சண்டை ஆகியவை எங்களுக்கு தரைப்படைச் சண்டை அனுபவத்தைப் பெற்றுத் தந்தன. சிலாவத்துறை போர் முப்படையையும் ஒரே சமயத்தில் சந்திக்கும் வல்லமையையும் அதற்குரிய அனுபவத்தையும் எங்களுக்குப் பெற்று தந்தது' என்று கூறியதற்கொப்ப ஆனையிறவுப் போர் திட்டம் வகுக்கப்பட்டது.

ஆனையிறவை சிங்களப் படை முக்கியமாகக் கருதுவதற்குண்டான காரணங்கள் என்ன?

* ஆனையிறவு முகாமை இழந்தால் தமிழீழம் கைவிட்டுப் போய்விடும் என்ற பயம் சிங்களவருக்கு உண்டு.

* ஆனையிறவு முகாம்- பல முகாம்களுக்குண்டான வலிமை கொண்டது.

* ஆனையிறவு முகாமைச் சுற்றி இயற்கை அரண் போல கடல்நீர் ஏரி உள்ளது. பெருங் கடலுடனும் அது தொட்டுக் கொண்டிருக்கிறது. பொட்டல் வெளியும் அதிகம்.

எனவே யுத்தம் என்றால் நேருக்கு நேர் மோதினால்தான் உண்டு. இது அனைத்து வகையிலும் சிங்கள ராணுவ முகாமுக்கு மிக மிக பாதுகாப்பானது. பல்வேறு துன்பங்களை அளித்து வந்த ஆனையிறவு முகாம் தகர்ப்பு என்பது புலிகளின் அவசியத் திட்டமாக இருந்தது.

154: ஆனையிறவுப் போர்!

ஆனையிறவுப் போர்த்திட்டம் குறித்தும், நடந்த போர் குறித்தும் பழ. நெடுமாறனின் தமிழீழம் சிவக்கிறது நூலின் 220-234 பக்கங்களில் விரிவான விவரணை உள்ளது. அதன் பகுதி மற்றும் சுருக்கம் வருமாறு:

ஆனையிறவுத் தளம் ஐந்து பெரிய முகாம்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.

1. தடை முகாம்; 2. உப்பள அலுவலக முகாம்; 3. உப்புக் கூட்டுத்தாபன முகாம்; 4. பாடசாலை முகாம்; 5. உல்லாச விடுதி முகாம்.

இதில் மையப் பகுதியில் இருக்கும் உப்புக்கூட்டுத்தாபன முகாமே தளத்தின் பெரியதும் தலைமை முகாமுமாகும். இங்கு ஹெலிகாப்டர் இறங்குதளம் உண்டு. இதன்மூலம் உணவு, வெடிமருந்துகள் வழங்க வசதியுள்ளது.

தளத்தின் வடபகுதியில் (இயக்கச்சிப் பக்கம்) இருக்கும் தடை முகாமிற்கும், தென் பகுதியில் உள்ள (பரந்தன் பக்கம்) உல்லாச விடுதி முகாமிற்கும் முன்னால் புலிகளின் காவலரண்கள் உண்டு.

தளத்தின் மற்ற பகுதிகளில் புலிகளின் காவலரண்கள் கிடையாது. ஏனெனில், அவை நீரிணையால் சூழப்பட்டுப் பாதுகாப்பாக உள்ளன. மேற்கூறப்பட்ட இரு முகாம்களுக்கு ஊடாகத்தான் தளத்தின் மற்ற பகுதிகளுக்குப் பாதை உண்டு.

தடை முகாமுக்கு முன்பாக சுமார் 200-300 மீட்டர் தூரத்திலும், உல்லாச விடுதி முகாமுக்கு முன்பாக சுமார் 500-600 மீட்டர் தொலைவிலும் புலிகளின் காவலரண்கள் உள்ளன. இந்த இடைவெளி முழுவதிலும் சிங்கள ராணுவம் மிதிவெடிகளைப் புதைத்து வைத்திருந்தது.

ஆயிரக்கணக்கான படை வீரர்கள், ஏராளமான இலகு இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் ஏவுகணைகள், நீண்டதூரம் பாயும் ஆட்டிலறிகள், பலமான காவலரண்களையே தகர்த்தெறியும் பீரங்கிகள், ஆர்.சி.எல். எனப்படும் பீரங்கிகள், கவச வாகனங்கள் போன்ற தளவாடங்கள் இத் தளத்தில் குவிக்கப்பட்டிருந்தன. விமானங்களும் ஹெலிகாப்டர்களும் சிங்களவர்களுக்கு நம்பிக்கைக்குரிய முக்கிய ஆயுதங்களாக இருந்தன.

ஆனையிறவுப் பகுதி முழுமையுமே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் இரண்டு அல்லது மூன்று அடி தோண்டினாலே நீர் சுரந்துவிடுகிறது. எனவே, பதுங்கு குழிகள் தோண்டுவது சாத்தியமற்றது.

இத்தனை தடைகளையும் மனத்தில் கொண்டுதான் புலிகள் தங்கள் போர்த் திட்டத்தை வகுத்தனர்.

இப்பெரும் போரைத் திறம்பட நடத்துவதற்காக ஒவ்வொரு போர் முனைக்கும் கள அனுபவம் வாய்ந்த தளபதிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

ஒட்டுமொத்தமாக ஆனையிறவுப் போரை நடத்துவதற்குப் பொறுப்பாக புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரான பொட்டு நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனையிறவு ராணுவ தளத்தின் தென்பகுதி முனையில் நடைபெறும் போருக்குப் பொறுப்பாக சார்லஸ் அன்டனியும் சிறப்புப் படையணிக்குத் தளபதி பால்ராஜும் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்குக் கீழ் இப்பகுதி தாக்குதல் அணிகளுக்கு நேரடித் தலைமை தாங்க தளபதி சூசை நியமிக்கப்பட்டிருந்தார். இவருடன் மகளிர் பிரிவின் தளபதிகளுள் ஒருவரான ஜெனாவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதேசமயம் இதே பகுதியில் வான்வழி தரை இறக்கத்தை எதிர்பார்த்து நின்ற காவல் அணிகளுக்குத் தளபதியாக தண்டேஸ் நியமிக்கப்பட்டிருந்தார். (பின்னர் நடந்த மணலாற்றுப் போரில் இவர் வீரமரணம் அடைந்தார்) இவருடன் மகளிர் படைப்பிரிவின் துணைத் தளபதி ராதா நியமிக்கப்பட்டிருந்தார். இப்பகுதியின் வழங்கல்களுக்குப் பொறுப்பாகத் தளபதி குட்டியும், தளபதி மனோவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இப்பகுதியின் மீட்பு வேலைகளுக்குப் பொறுப்பாகத் தளபதி மல்லியும் மருத்துவ வேலைகளுக்குப் பொறுப்பாகத் திவாகரும் நியமிக்கப்பட்டனர்.

இத் தளத்தின் வடமுனையில் நடைபெறும் போருக்குப் பொறுப்பாக யாழ் மாவட்டத் தளபதி தினேஷ் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் தலைமையின் கீழ் இப்பகுதி தாக்குதல் அணிகளுக்குத் தளபதி குணாவும் மகளிர் படைப் பிரிவின் தளபதிகளுள் ஒருவரான விதுஷாவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு கடற்கரைப் போருக்குப் பொறுப்பாக லெப். கர்னல் சூட்டி நியமிக்கப்பட்டிருந்தார்.

1991-ம் ஆண்டு, ஜூலை மாதம், 10-ம் நாள் ஆனையிறவுப் போரைத் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

ஜூலை 9 ஆம் நாள் இரவு, போராளிகளிடையே வே. பிரபாகரன் தோன்றி, ""எங்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கும் ராணுவ வீரனது உயிர் பறிக்கப்படும் வரை எமது போராளிகள் உயிர் இழந்து கொண்டுதான் இருப்பார்கள். எனவே எதிரியின் அரண்களுக்குள் பாய்ந்து செல்லுங்கள். எதிரிகளை எவ்வளவு விரைவாக வீழ்த்த முடியுமோ, வீழ்த்துங்கள். அதன்மூலம் வெற்றியைப் பெறுங்கள்- செல்லுங்கள்- வீழ்த்துங்கள்- வெல்லுங்கள்- புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'' என்ற அவரின் பேச்சு போராளிகளுக்கு உரமாக அமைந்தது. பிரபாகரனிடம், போராளிகள் தங்களின் போர் உத்தி குறித்து விளக்கங்கள் கேட்டு அறிந்தனர்.

ஜூலைத் திங்கள் 10-ம் நாள் அதிகாலை 4.30 மணியளவில் "பசீலன்' ராக்கெட்டுகள் சிங்களப் படை முகாமில் விழுந்தன. இதற்கெனவே காத்திருந்தது போன்று சிங்கள ராணுவத்தின் ஹெலிகாப்டர்களும், சிறுரகப் போர் விமானங்களும் வானில் சீறிப் பறந்தன. இதை எதிர்பார்த்த போராளிகள் வானில் பறந்த ஹெலிகாப்டர்களுக்கும், விமானங்களுக்கும் குறிவைத்து தாக்கினர். இதன் காரணமாக அவை கீழே தாழ்ந்து பறக்க முடியாத சூழ்நிலை உருவாகியது. கவசமிடப்பட்ட புல்டோசர்களையும், உழவு எந்திரங்களையும் சிங்களப் படை முகாமை நோக்கி செலுத்தி, அதன் பின்னால் போராளிகள் முன்னேறினர். புலிகளின் முதல் இலக்கு "சுற்றுலா விடுதி முகாமை'. அன்றிரவே கைப்பற்ற வேண்டும் என்பதுதான். கடும் சண்டைக்குப் பின்னர், போராளிகள் இழப்புக்குப் பின்னர், காவல் அரண் தகர்க்கப்பட்டு, உள்ளே நுழைந்து "சுற்றுலா விடுதி முகாமை' நள்ளிரவில் கைப்பற்றினர். இதை வாக்கி டாக்கி மூலம், இத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய தளபதி சூசை அறிவித்தார்.

ஜூலை 11-ஆம் நாள், இரவு 7.30 மணியளவில் தடை முகாம் மீது யாழ் மாவட்டத் தளபதி தினேஷ், தளபதிகள் குணா, செல்வி விதுஷா ஆகியோர் தலைமையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. கடும் சண்டை நடந்துகொண்டிருந்தபோது புல்டோசர்களும் உழவு எந்திரங்களும் மண்ணில் புதைந்து விட்டதால் பெரிய அளவில் போராளிகளுக்கு இழப்பு ஏற்பட்டும், காயமடைந்தும் போனதால் தங்களின் முகாமிற்குத் திரும்பினார்கள்.

அடுத்ததாக ஜூலை 13-ஆம் நாள், ஏற்கெனவே கைப்பற்றப்பட்டிருந்த உல்லாச விடுதிக்கு அடுத்திருந்த உப்பள அலுவலகம் மீது தளபதி பால்ராஜ் கண்காணிப்பிலும், தளபதி சூசை தலைமையிலும், பெண்புலிகளின் தளபதி ஜெனா தலைமையிலும் உப்பளப் பகுதிக்குள் புகுந்தனர். புல்டோசர் தாக்குதலுக்கு ஆளாகிச் செயலிழந்தது. இதனால் மேஜர் ரெட்டி தலைமையில் இன்னொரு அணி உள் நுழைந்தும், நினைத்தபடி காவல் அரண்களைக் கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும் சிங்கள ராணுவத்திடமிருந்து ஏராளமான ஆயுதங்களைக் கைப்பற்றிச் சென்றனர்.

ஆனையிறவு முகாம் மீது புலிகள் முற்றுகை நீடித்ததால், கடல் வழியாகப் படைவீரர்களைக் கொண்டு வந்து இறக்க, சிங்களப்படை முற்பட்டது. இதனை முறியடிக்க வெற்றிலைக்கேணி பகுதிக்குப் பொறுப்பாக இருந்த, தளபதி சூட்டி, ஜூலை 14-ஆம் தேதி தாக்குதல் தொடுத்தார். இத் தாக்குதலில் சூட்டி உயிரிழந்தார். இருப்பினும், இதற்கு முன்பு நடந்த ஒரு போரில் ஒரு கையை இழந்த மேஜர் யாசின் தலைமையில் புலிகள் சிங்களப் படையுடன் நேருக்கு நேர் யுத்தம் புரிந்தனர். இந்தப் போரில் சிங்கள ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ஆஞ்சலோ பீரிஸ் கொல்லப்பட்டார்.

ஒவ்வொரு நாளும் போர் தணிவதும் உக்கிரமாவதுமாக இருந்தது. எண்ணிக்கையிலடங்கா வீரர்களைப் பலி கொண்ட இந்த யுத்தத்தில் இழந்த இடங்களையும் சிங்களப் படை இறுதியில் மீட்டது.

புலிகளுக்கு இந்தப் போரில் வெற்றி கிடைக்கவில்லை. ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை ஒரு மாதகாலம் நேருக்கு நேர் நடைபெற்ற யுத்தத்தில் புலிகள் பல படிப்பினைகளைப் பெற்றார்கள். அனைத்து நிலைகளிலும் பாதகங்களே சூழ்ந்திருந்தபோது நடைபெற்ற இந்தயுத்தத்தின் மூலம், புலிகளின் வீரம் உலகுக்குத் தெரியவந்தது; மரபுவழி ராணுவமாக புலிகளின் படை உருவெடுத்ததையும் உலகம் அறிந்தது. விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்கள், பீரங்கிப்படைகள், கவச வாகனங்கள் போன்ற கனரக சாதனங்களுடன் சிங்களப் படை போரிட்டது. அவர்களது படைப்பிரிவில் 10 ஆயிரம் சிங்கள வீரர்கள் இருந்தனர். புலிகள் தரப்பில் 2 ஆயிரம் போராளிகள் போரிட்டனர்.

ஆனையிறவுப் போர் தொடர்பாக பி.பி.சி.யின் கொழும்பு நிருபர் கிறிஸ்டோபர் மோரிஸ் என்பவருக்கும் லண்டன் தலைமையகத்தில் உள்ள விமர்சகருக்கும் 28-7-1991 அன்று நடந்த உரையாடல் வருமாறு:

விமர்சகர்: ஆனையிறவில் என்ன நடக்கிறது?

நிருபர்: புலிகள் ஆனையிறவை முற்றுகையிட்டு உக்கிரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுத்து நிறுத்த ராணுவம் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இழப்புகள் பற்றி ராணுவத் தரப்பில் இருந்து வரும் தகவல்கள் நம்பகத்தன்மை அற்றவையாக உள்ளன. பத்தாண்டுக் காலமாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் முதல் தடவையாக மரபுவழிப் போர் முறையில் புலிகள் போராடுகிறார்கள். ஸ்ரீலங்கா ராணுவமும் அதற்கெதிராக மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையை....

இடைமறித்த விமர்சகர்: ஆகவே, இப்பொழுது இலங்கையில் இரு ராணுவங்கள் இருப்பதாகக் கூறுகிறீர்களா?

நிருபர்: ஆம்! அப்படித்தான்!

155: சிங்கள ராணுவ முகாம்கள் அழிப்பு!

ஆனையிறவுப் போரில் 123 பெண்புலிகள் உள்பட 573 போராளிகள் கொல்லப்பட்டனர். இதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இப்போரின்போது யாழ் மக்கள் காட்டிய ஆர்வமும் உதவியும் கணக்கில் அடங்கா. உணவுப் பொருள்கள் வாகன உதவிகள் என தாராளமாக வழங்கினர். யாழ்குடாவிலிருந்து வன்னிப் பகுதிக்குச் சுலபமாகச் செல்ல ஆனையிறவு முகாம் அழிக்கப்படவேண்டும் என்று அவர்கள் விரும்பியதே மேற்கண்ட உதவிகளுக்குக் காரணமாகும்.

காயமடைந்தவர்களுக்கு என சுண்டிக்குளத்தில் தற்காலிக மருத்துவ நிலையம் திறக்கப்பட்டது. இதில் அடேல் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் தாதிப்பெண் பயிற்சி பெற்றவர்களும், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் சிகிச்சை மேற்கொண்டனர். ஆண்-பெண் போராளிகள் பல்வேறு வகையான காயங்களுடன் இங்கு கொண்டுவந்து போடப்பட்ட நிலையில், முகம் சுளிக்காது தாதிப் பெண்கள் சிகிச்சையளித்தனர்.

இவ்வகையான மருத்துவ நிலையம் திறக்கப்பட்டிருக்கிற செய்தி யாழ்ப்பாணம் முழுவதும் அறிந்த செய்தியாயிற்று. யாழ் மக்கள் இந்த மருத்துவ நிலையத்துக்கு முதலுதவி மருந்துகள், படுக்கைகள், விரிப்புகள் மற்றும் உணவுப் பொருள்கள் அனுப்பி வைத்தனர்.

இந்தச் செய்தி அறிந்த சிங்களப் படையினரின் குண்டுவீசும் விமானம் தாழப்பறந்து இரு குண்டுகளை வீசிவிட்டுப்போனது. மருத்துவ சிகிச்சை செய்துவிட்டு அப்போதுதான் தனது இருக்கைக்குத் திரும்பிய அடேல் பாலசிங்கம், குண்டுச் சிதைவின் அதிர்வில் தூக்கி வீசப்பட்டார். அடேலின் பாதுகாவலர்கள் அங்கே ஓடிவந்து குண்டுவீச்சு விமானம் போய்விட்டதாகத் தெரிவித்தனர். மருத்துவ நிலையம் இருந்த இடத்துக்குச் சென்று இவர்கள் பார்த்தபோது, நல்லவேளையாக அங்கே எந்த பாதிப்பும் இல்லை. விமானத்தின் ஓசை கேட்டதுமே நிலையத்தில் இருந்த காயம்பட்டவர்களும், தாதியர்களும் பதுங்குகுழிக்குள் ஓடி ஒளிந்து கொண்டதால் தப்பித்தனர்.

மணலாற்றுப் பகுதி, இலங்கையின் வடக்கு - கிழக்கு இரண்டையும் இணைக்கும் பகுதியாகும். இந்தப் பகுதியை ஆக்கிரமித்து அதனைத் துண்டிக்க வேண்டும் என்பது சிங்களவரின் திட்டமாகும். இங்கு சிங்களப் படைகள் குவிக்கப்பட்டு, ராணுவ முகாம்கள் அமைத்து, வடக்கு-கிழக்கைத் தனித்தனிப் பகுதிகளாகப் பிரித்தால் தமிழீழக் கனவைத் தகர்த்துவிடலாம் என்ற சிங்களவரின் திட்டத்தை, புலிகள் அவ்வப்போது முறியடிப்பது வழக்கமாயிற்று.

இதையும் மீறி, திருகோணமலையிலும் மணலாற்றுப் பகுதியிலுமாக நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களை சிங்களப் படை நிறுவியது. 30 ஆயிரம் வீரர்கள் இங்கு குவிக்கப்பட்டனர். புலிகளும் இதே பகுதியில் பல முகாம்களை அமைத்து சிங்களப் படைகளை நகரவிடாமல் தடுத்தனர்.

இந் நிலையில், 1991 அக்டோபர் 29-ஆம் தேதி மணலாற்றுக் காட்டுப்பகுதியில் சிங்களப்படை தாக்குதலை ஆரம்பித்தது. இத் தாக்குதலுக்கு "மின்னல்' என்றும் பெயரிட்டது. பெயருக்கு ஏற்ப வானிலிருந்து குண்டுமழை பொழியப்பட்டது. இருந்தபோதிலும் புலிகள், தங்களுக்கே உரிய வகையில் எதிர்த்தாக்குதலை நடத்தி, சிங்களத் தாக்குதலை முறியடித்தனர்.

200 பேருக்கும் மேலான வீரர்களைப் பலிகொடுத்த சிங்களப்படை ஓடி ஒளிந்தது.

இதன் பின்னர் மேலும் 1992 மார்ச் மற்றும் மே மாதங்களில் சிங்களப்படை இரு முயற்சிகளை மேற்கொண்டது. அவ்விரு முயற்சிகளையும் புலிகள் வெற்றிகரமாக முறியடித்த நிலையிலும் ஏராளமான போராளிகளை இழந்தது. 275 பேர்வரை உயிர் துறந்தனர். சிங்களப் படையினரோ 400 பேருக்குமேல் உயிர் துறந்தும், 100க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

மணலாற்றைக் கையகப்படுத்த சிங்களப்படை இரு ஆண்டுகளில் மூன்றுமுறை முயன்றும், அது கைகூடாமல் போனதற்கு, போராளிகளின் வீராவேசத் தாக்குதலே காரணம் ஆகும்.

தமிழீழத்தின் எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிங்கள முகாம்களைத் தகர்ப்பது அங்கு வாழும் தமிழருக்கு நிம்மதியைத் தரும் என்ற அடிப்படையில் தாக்குதல் திட்டம் தயாரானது. 1992-ஆம் ஆண்டில் சிங்களப் படையினரின் முகாம்களில் தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தும், அழிக்க முடியாதவற்றை முகாமை விட்டு வெளியேற முடியாதவாறு செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் நடந்த போர் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சீனன்குடாவில் சிங்களப் படையின் பிரமாண்டமான விமானதளம் இருந்தது. இந்த விமானதளத்தின் மீது புலிகள் 1992 ஜனவரியில் திடீர்த் தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்த 6 பாசறைகள் முற்றாக அழிக்கப்பட்டன. அதுமட்டுமன்றி 4 பயிற்சி விமானங்களும், ஹெலிகாப்டர்களும்கூட தாக்குதலுக்கு ஆளாயின. இதில் விமானிகள், சிறப்பு அதிரடிப் படையினர் உள்ளிட்ட 150 பேர் சிங்களத் தரப்பில் இறந்தனர்.

ஆயுதக் கிடங்கு வெடி வைத்து தகர்க்கப்பட்டதால், பல கோடி ரூபாய் பெறுமான ஆயுதங்கள் எரிந்து நாசமாயிற்று.

ஏப்ரலில், மணலாறு-கொக்குத்தொடுவாய் முகாமிலிருந்து கிளம்பிய சிங்களப்படை வீரர்களை, மறித்து நடத்திய தாக்குதல் 3 மணி நேரமே நீடித்தது. இத் தாக்குதலில் 26 ராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில், அதிநவீனமான பின்னுதைப்பற்ற பீரங்கி ஒன்றைப் புலிகள் கைப்பற்றினர். இந்த பீரங்கி அமெரிக்கத் தயாரிப்பாகும். ஒரு கிலோ மீட்டருக்கும் அப்பால் வருகின்ற டாங்கிகளை இந்த பீரங்கியால் குறிவைத்துத் தகர்க்க முடியும். இந்த பீரங்கி 34 மீட்டர் நீளம் கொண்டதாகும்.

தமிழீழப் பகுதி எல்லைப் பகுதியில் "காட்டுபொத்த' என்ற பெயரில் சிங்கள முகாம் ஒன்று இருந்தது. இம் முகாமையும் புலிகள் தாக்கி அழித்ததில் 55 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இன்னொரு எல்லைக் கிராமம் அனுராதபுரத்தையொட்டியுள்ள காட்டுப் பகுதியில் உள்ளது. அதன் பெயர் "வண்ணான்குளம்' ஆகும். இந்தப் பகுதியில் உள்ள தமிழ் கிராமங்களில் உள்ள தமிழர்களை விரட்டிவிட்டு, அங்கு சிங்களக் குடியேற்றத்தை நிறுத்துவதற்கு வசதியாக வண்ணான்குளம் சிங்கள முகாம் உதவி செய்தது.

எனவே, இந்த முகாமை அழிப்பது என்பது புலிகளுக்கு அவசியமான ஒன்றாக இருந்தது. 11-7-1992 அன்று இம் முகாம் மீது திடீர்த் தாக்குதல் நடத்தி, அழித்தனர். இந்தப் போர் அதிகாலை தொடங்கி, 30 நிமிடங்களில் முடிந்ததாகும்.

இந்த முகாமில் இருந்த கவச வாகனங்களும் புல்டோசர்களும் முற்றாக அழிக்கப்பட்டன. இந்த முகாமைக் காப்பாற்ற அருகிலிருந்த தந்திரிமலை முகாமிலிருந்து வெளியே வந்த சிங்கள வீரர்களை மறைந்திருந்து வரும் வழியிலேயே தாக்கி அழித்தனர்.

அக்டோபர் 2-ஆம் நாள் கட்டைக்காடு முகாம் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கட்டைக்காடு முகாமானது ஆனையிறவுப் போரில், சிங்களப் படையினரை விமானம் மூலம் தரையிறக்கிய இடமாகும். தரையிறங்கிய வீரர்கள் அங்கேயே குடிகொண்டு, முகாம் ஒன்றை அமைத்தனர். எனவே இந்த முகாமையும் அழிப்பது என்ற முடிவில் ஆனையிறவுப் போர் நடந்த 15 மாதங்கள் கழித்து, திடீர்த் தாக்குதல் நடத்தப்பட்டது.

56 மணி நேரம் நடந்த இந்தப் போரில் ராணுவத்தினர் அழிக்கப்பட்ட நிலையில், 50 விமான எதிர்ப்பு பீரங்கிகள், 28 ராக்கெட்டுகள், 180 பெல்ஜியத் துப்பாக்கிகள், 2 இலகுரகத் துப்பாக்கிகள், 3 லட்சம் துப்பாக்கி ரவைகள், குண்டுவீசும் சாதனங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

ஒன்றன்பின் ஒன்றாக சிங்கள ராணுவத்தின் முகாம்களை அழிப்பதில் விடுதலைப் புலிகள் முனைப்புடன் இருந்தனர்.

156: புலிகள் வசம் யாழ்ப்பாணம்!

போருக்கு இடையிலும், போராளிக் குழுக்களின் போட்டிகளுக்கிடையிலும் வாழப் பழக்கப்பட்ட மக்களாக பாலஸ்தீனியரையும், ஆப்கானிஸ்தானியரையும் குறிப்பிடுவதைப்போன்றே யாழ்ப்பாண மக்களையும் குறிப்பிடலாம். அவர்களுக்குத் தற்போது அமைந்துள்ள சூழல் இயல்பான ஒன்றாக இருந்ததற்குக் காரணமே, யாழ்ப்பாண நிர்வாகத்தை புலிகள் மேற்கொண்டிருந்ததுதான்.

சிங்கள ராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவிலிருந்து வெளியேறி, தமிழீழத்தில் நுழைந்ததற்கு அறிகுறியாக, தமிழீழ எல்லைக் காவல்படை, தமிழீழ ராணுவம், தமிழீழ உள்வரவு-வெளியேற்றப் பணியகம் முதலியவற்றால், வழங்கப்படும் அனுமதி அட்டை, தமிழீழம் என்ற புதிய நாட்டிற்குள் நுழைந்துவிட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்தின.

தமிழீழத்துக்கான தேசியக் கொடியாக 27-11-1990 மாவீரர் நாளில் ஏற்றப்பட்ட, புலிகளின் கொடியில் உள்ள எழுத்துகள் நீக்கப்பட்ட கொடியே தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டது. இக்கொடியில் மஞ்சள், சிவப்பு, கறுப்பு வண்ணங்கள் இருந்தன. மஞ்சள் நிறம் தனித்த தேசிய இனம் என்றும், தாயகம் தழைத்து உள்ளது என்றும், மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறுகிறது. சிவப்பு நிறம் வர்க்கம்-சாதி-பெண்ணடிமை நீங்கவும், சமத்துவ சமுதாயம் நிலவுவதையும் கொள்கையாகக் குறிக்கிறது. கறுப்பு நிறம் - விடுதலைப் பாதை கரடுமுரடானது; இழப்புகளும் துன்பங்களும் நிறைந்தது. இதனைத் தாங்க இரும்பு இதயம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது என்றும் கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் காவல்துறையைத் தவிர்த்துசில நிர்வாகக் கட்டமைப்புகளை சட்டம் ஒழுங்கு சார்ந்தும், சிவில் நிர்வாகம் சார்ந்தும் ஏற்படுத்தவேண்டிய அவசரத்தில் புலிகள் இருந்தனர். நிதி நிர்வாகம், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம் போன்றவை ஸ்ரீலங்கா அரசின் நிதியாதாரங்களைக் கொண்டே இயங்கி வந்தன. அவற்றை அதன்போக்கிலே விட்டு, மேற்பார்வை செய்யும் விதமான மாற்றங்களே தற்போது மேற்கொள்ளப்பட்டன. இவ்வகை மாற்றங்களில் அரசுப் பணிகளில் அனுபவம் பெற்று ஓய்வு பெற்றவர்களையும், சமூக ஆர்வலர்களையும் ஆலோசனை வழங்கக் கேட்டுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்குப் பணிப்பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது.

நிதி நிர்வாகம், புலிகளின் நிதியாதாரங்களைக் கவனித்து வந்த தமிழேந்தியின் பொறுப்பில் விடப்பட்டது. நிதியாதாரங்களுக்கு வரி வசூலிப்பது என்பது பெரும் வர்த்தகங்கள், நடுத்தர வியாபாரிகளிடம் மட்டுமே நடைபெற்றது. இதுகாறும் அல்லலுற்ற பொதுமக்களிடம் வரி வசூல் செய்வதைத் தவிர்த்தனர்.

சட்டம், ஒழுங்கு பராமரிப்புக்கு, புலிகள் அமைப்பிலிருந்தே போராளிகளைத் தேர்ந்தெடுத்து காவல்படை அமைக்கப்பட்டது. இந்தக் காவல்துறை அமைப்பை வே.பிரபாகரன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாத்தையா, தமிழ்ச்செல்வன், இளங்குமரன், யோகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காவலர்களுக்கான சீருடை, நீலநிறத்தில் கட்டம்போட்ட மேற்சட்டையும், நீலநிற கால்சட்டையும் பிரபாகரனால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

காவலர்கள் அணியும் தொப்பி - தமிழீழத்தின் தேசிய மரமான பனைமரத்தின் ஓலைகளால் ஆன தொப்பியில், நீல நிறத்துணி உறையிடப்பட்டிருந்தது.

ஒரே சமயத்தில் யாழ்பகுதியில் யாழ்ப்பாண நகரம், கோப்பாய், சுன்னாகம், சங்கானை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, பளை ஆகிய இடங்களில் காவல்நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இதன் தலைமையகம் யாழ்ப்பாணத்திலும், கிளைகள், புலிகள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் நிறுவப்பட்டன. காவல்துறையைத் தொடர்ந்து நீதித் துறையிலும் மறுகட்டுமானம் செய்யவும், வடமாநிலத்தில் கூடுமானவரை நிர்வாகத்தைச் செம்மையாக்கும் முயற்சியிலும் பிரபாகரன் இறங்கினார்.

இதுகுறித்து, தமிழீழப் பகுதிக்குச் சென்று வந்த பத்திரிகையாளர் கே.பி.சுனில், "பிசினஸ் அண்ட் பொலிடிகல் அப்சர்வர்' இதழில் (1992 மார்ச்) எழுதிய கட்டுரையில் யாழ் காவல்துறையின் பொறுப்பிலிருந்த நடேசன் பேட்டி அளித்திருந்தார். அவர் கமிஷனர் "ரேங்கிங்' பணியிலிருந்தார். அந்தப் பேட்டி வருமாறு:

""நாங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி, சட்டப்பிரிவை உருவாக்கி இருக்கிறோம். இதில் முன்னாள் நீதிபதிகள் தங்கள் ஆலேசனைகளை வழங்குகின்றனர். சட்ட விதிகளை தமிழ்ச் சூழலுக்கேற்ப உருவாக்க இருக்கிறோம். மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் அவ்வகையில் உருவாகும். இது நகரம் மற்றும் கிராமங்களில் செயல்படும். இதற்கானப் பணியில் ஓய்வுபெற்ற நீதிபதிகளை பணியில் அமர்த்தியுள்ளோம். சட்ட மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஸ்ரீலங்காவில் இருப்பது போலல்லாமல், தேசவழமைச்சட்டம், குற்றவியல் சட்டம் முதலியவற்றில் சூழலுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சட்டக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படித்து, தேர்வு பெற்றால் அவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

சட்டத்தின் முன் மாவீரர்களின் அளப்பரிய தியாகத்துக்கு மதிப்பளித்து போற்றுகிறோம். அவர்களது குடும்பங்களுக்குப் போக்குவரத்து வசதிகள் போன்ற சலுகைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் மீது புகார் வந்தால் முறைப்படி விசாரிக்கப்படும். அதேபோன்றுதான் போராளிகள் நிலையும். காவல்துறையில் பணியாளர்களுக்கு ரூ.1500 மாத ஊதியம் நிர்ணயித்துள்ளோம். மற்றும் சீருடை, மருத்துவ வசதி, தங்கும் வசதி ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

செஞ்சோலை என்பது காப்பகம். அநாதையாக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் தங்குமிடமாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காப்பகத்தில் தற்போது (1991-இல்) 70 பேர் உள்ளனர். இவர்களுக்குப் படிப்பு, தோட்டவேலை முதலியவை சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. பெரும்பாலான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. போரினால் ஏற்பட்ட அவலங்களில் இந்த அநாதையாக்கப்பட்ட விஷயமும் ஒன்றாகும். வடக்கு-கிழக்குப் பகுதிகளில் உள்ள புலிகளின் நிர்வாகிகள் மூலம் இந்தவகைப் பிரிவினர் இங்கு கொண்டுவரப்படுகிறார்கள். இவர்களுக்குப் பிரபாகரனே தாயும் தந்தையுமாக உள்ளார். அவரின் சிறப்புக் கவனிப்பில் இந்தக் காப்பகம் செயல்படுகிறது.

"ரூட்' என்கிற (Research Organisation of Tamil Eelam) சமூகசேவை நிறுவனம், புலிகளால் 1990-லிருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆராய்ச்சிகளை மேற்கொள்வது இதன் முக்கியப் பணி. விவசாயம், கால்நடை விஞ்ஞானம், மீன்வளம், குடிசைத்தொழில், பெருந்தொழில், உணவு பதனிடுதல், கட்டுமானத்தொழில், எரிசக்தி, கிராமநலன், வர்த்தகம், தகவல் தொடர்புத்துறை, பனைத்தொழில் போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதன் தலைவராக ரவி இருக்கிறார்.

இந்த அமைப்பு மூலம் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் உள்ளது. இந்த ஆராய்ச்சியகத்துக்கென்று 650 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, 295 திட்டங்களில் ஆய்வுப்பணிகள் நடைபெறுகின்றன.

இவர்களுக்கு வழிகாட்டிகளாக, ஒவ்வொரு துறையிலும் ஓய்வு பெற்றவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அமைப்புக்கு நிதியாதாரமாக பிரபாகரன் 10 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில் 6 கோடி) ஒதுக்கியுள்ளார்.

ரூட் அமைப்பின் கீழ் "தேசநிர்மாணிகள்' என்ற பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட சாலைகளை செப்பனிடுவதிலும், அமைப்பதிலும் ஈடுபட்டுள்ளார்கள். ஸ்ரீலங்கா அரசு எந்த நேரமும் மின்சாரத்தையும், எரிபொருளையும் பெட்ரோலியப் பொருள்களையும் முடக்கி, தடை போடுவதால் மாற்று எரிபொருள் ஆய்வும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சரியான கருத்தில், நாடகம் உருவாக்கப்பட்டு கிராமங்கள்தோறும் குழுக்கள் சென்று, நாடகம் போடுவதுடன், புலிகள் நடத்தும் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் 4 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. போரில் சினிமா தியேட்டர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதால், தொலைக்காட்சி ஒளிபரப்பு விரிவுபடுத்தப்பட்டது'' என்றார்.

பெண்கள் பிரிவுக்குத் தலைவராக இருந்த ஜெயா கூறுகையில், "ஆண்களுக்கு நிகராக தோளோடு தோள் நின்று போர் புரிவதைப் பெருமையாகவே கருதுகிறோம். ஆனையிறவுப் போரில் எங்கள் பிரிவினரும் கலந்துகொண்டனர்' என்றார்.

புலிகளின் அரசியல் இயக்கமான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி அலுவலகம் கொண்டாவில் பகுதியில் திறக்கப்பட்டது. அதன் கிளைகள் வடக்குப் பகுதியின் ஒவ்வொரு ஊரிலும், வட்டத்திலும் அமைக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கு மற்றும் நிதிப் பொறுப்பு தவிர்த்து இதர நிர்வாகங்கள் மக்கள் முன்னணியின் பொறுப்பில் இருந்ததால், இதன் கிளைகளில் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், அரசு முன்னாள் ஊழியர்கள், பெண்கள் எனப் பலரும் உறுப்பினர்களாகச் சேர்ந்து கொண்டனர்.

மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கைக் கட்டுப்படுத்த, விடுதலைப் புலிகள் சில கட்டுப்பாடுகளை விதித்தனர். இதற்கென "பாஸ்' முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் புலிகளுக்கும், பெற்றோர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. வெளிநாட்டில் தங்களது பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து, வளம் சேர்ப்பதைப் "பாஸ்' முறை தடுக்கிறது என்றும் கருத்து தெரிவித்தார்கள்.

அதேபோன்று விமர்சனத்துக்கு ஆளான இன்னொரு பிரச்னை தமிழ் சினிமா ஆகும். தமிழ் சினிமா மக்களின் வாழ்வைச் சிதைப்பது மட்டுமன்றி, மக்களின் வாழ்வை அடையாளப்படுத்துவதாகவும் இல்லை என்று புலிகள் படங்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தார்கள். இந்தக் கட்டுப்பாட்டில் மக்களின் கருத்துக்கும் புலிகளுக்கும் இடையே முரண்பாடு தலைதூக்கிற்று. எந்தப் படத்தையும் பார்ப்பதில் தங்களுக்குள்ளேயே சில மனக்கட்டுப்பாடு இருப்பதால் தடை தேவையில்லை என்பது மக்களின் வாதமாக இருந்தது.

அடுத்து, யாழ்ப்பாண சமூகத்தில் ஏற்பட்ட முணுமுணுப்பு புலிகள் இயக்கத்தில் பெண்கள் சம்பந்தப்பட்டதாகும். ஆரம்பத்தில், பெண்களைச் சேர்த்தபோது கண்டுகொள்ளாத யாழ்ப்பாண சமூகம், தற்போது பெண்புலிகள் சீருடை அணிந்து வீதியில் நடக்கவும், தமிழீழக் காவல்படைக்கு மாற்றப்பட்ட பெண் புலிகள், போலீஸ் உடை அணிந்து செல்வதும், நீண்ட கூந்தலைக் குறைத்துக் கொள்வதும் விமர்சனத்துக்குள்ளானது.

யாழ்ப்பாணத்தில் தாய்வழிச் சமூக நிலைப்பாடுதான் என்றபோதிலும், பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வழிவழிவந்த மரபு முறையே போற்றப்பட்டதால், பெண் புலிகள் தோற்றம்-பதவிப் பொறுப்பு-அன்றாட வாழ்க்கை போன்றவை கேள்விக்கும் விமர்சனத்துக்கும் உட்படுத்தப்பட்டது. தேசிய இனப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்ற உந்துதலில் பெண்களும் போரில் குதிக்கிறார்கள். அவர்கள் பணியின் நிமித்தம் சீருடை அணிவதோ, பயிற்சியின் நிமித்தம் ஆயுதம் தூக்குவதோ, நீள்முடியைக் கத்தரிப்பதோ ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயமல்ல என்ற எதிர்வாதங்களும் எழுந்து பெண்கள் சார்ந்த முரண்பாட்டை சமன் செய்தன.

அதுவரை இருந்து வந்த அரசுரீதியான கல்வி முறையில் தலையிடாமல், இளங்குமரன் (பேபி சுப்ரமணியம்) தலைமையில் தமிழீழக் கல்விக் கழகம் அமைக்கப்பட்டு, தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு முதலியவற்றில் புதிய நூல்கள் படைக்கப்பட்டு, அறிமுகம் ஆயின. இதன்மூலம் அரசின் வரலாறுகளில் திரிக்கப்பட்டிருந்த தமிழர் வரலாறு சரிசெய்யப்பட்டது.

யாழ்ப்பாண நிர்வாகத்தைப் புலிகள் எடுத்துக்கொண்டதும், கோபம் கொண்ட பிரேமதாசா கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில், ராணுவத்தைக் குவித்தார். கடற்கரையோரமிருந்த நகரங்களில் கடும் மோதல் எழுந்த சூழ்நிலையில், புலிகள் நகரங்களில் இருந்து விலகி, காட்டுப் பகுதிகளில் நிலைகொண்டதுடன். அவ்வப்போது தாக்குதலையும் தொடுத்தனர்.

157: யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடை!

இலங்கை அரசு ராணுவத்துக்காக மட்டும் தினந்தோறும் 4 கோடி ரூபாய் செலவிடுகிறது. இந்தச் செலவு என்பது, தமிழர்களை ஒடுக்கத்தான் பயன்படுத்தப்படுகிறது. இதனைச் சமாளிக்க கொரில்லா யுத்தம் தொடங்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் போராளிகளைக் கொண்ட ஓர் இயக்கமாக, அமைப்பாக, மரபுவழி ராணுவமாக உருமாற்றம் பெற்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான மாதச் செலவு 6 கோடி ரூபாய் ஆகிறது. ஸ்ரீலங்கா ராணுவச் செலவு மாதம் ரூ.125 கோடி என்றால், அதைப் புலிகள் ரூ.8 கோடி ரூபாய் செலவில் சாத்தியப்படுத்த முனைவது எவ்வாறு?

புலிகளின் விடுதலைப் போராட்டத்துக்கான நிதி, அம் மக்களிடமிருந்தே திரட்டப்பட்டது. இந்த நிதியை அவர்கள் "மண்மீட்பு நிதி' என்று அழைத்தனர். தமிழீழ மண்ணில் குறிப்பிட்டப் பகுதியை, தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக வைத்திருந்தாலும், ஒரு சுதந்திர அரசை அவர்கள் இன்னும் நிறுவவில்லை. அதனால், அரசு ரீதியான நிதி வளங்களை வேறு நாடுகளில் இருந்து திரட்ட முடியாது. சொந்த மக்களின் வளங்களும் விவசாயம் செய்ய முடியாமல், தொழில் நடத்த வழியில்லாமல், அழிக்கப்பட்டு, முடக்கப்பட்டு விட்டதால், அவர்களிடம் பெரிய அளவில் தொகையைப் பெறுவது என்பதும் முடியாது.

இது குறித்து, பழ.நெடுமாறன் தனது நூலில், "வசதியும் வாய்ப்பும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இரண்டு பவுன் தங்கம் அல்லது ஆயிரம் ரூபாயை மண்மீட்பு நிதிக்கு அளிக்குமாறு புலிகள் வேண்டுகோள் விடுத்தனர். இது நன்கொடை அன்று. மாறாக, மக்கள் அளிக்கும் இந்தத் தங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் புலிகள் அதற்கான கடன் பத்திரங்களை அளிக்கிறார்கள். கடனாகப் பெறப்படும் இந்த இரண்டு பவுன் தங்கமானது, பின்னர் அவர்களுக்கே திரும்ப அளிக்கப்படும். ஒவ்வொரு மாதமும் 100 கடன் பத்திரங்களுக்குரிய தங்கம் அவ்வாறு திரும்ப அளிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்துள்ள அவர், இந்த மண்மீட்பு நிதிக்கு, உதவி அளிக்க மக்கள் பெருமளவில் முன்வந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"விடுதலைப் புலிகளால் கொடுக்கப்படும் மீளக்கொடுப்பமைவுப் பத்திரம்' என்று குறிப்பிடப்பட்டுள்ள தமிழீழ மீட்பு நிதி பத்திரச் சான்றில், நிதிப் பொறுப்பாளர் என்ற இடத்தில் தமிழேந்தியும், விடுதலைப் புலிகள் தலைவர் என்ற இடத்தில் வே.பிரபாகரனும் கையெழுத்திட்டிருந்தனர்.

இந்த நிதியைக் கட்டாயப்படுத்திப் பெறவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள வசதியற்றவர்களை ஒதுக்கிவிட்டு, வசதிமிக்க 1 லட்சம் குடும்பத்தினரிடம் மட்டுமே இந்த நிதி பெறப்பட்டது என்றும் இந்த நிதியை புலிகள் திருப்பித் தரமாட்டார்கள் என்று வதந்தியும் பரப்பப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தங்கத்தைத் தர மக்களிடையே தயக்கம் இருந்தது. ஆனால் மாதந்தோறும் 100 குடும்பங்களுக்கு அந்தக் கடன் திரும்பக் கொடுக்கப்பட்டது. அப்போதும் வதந்திகள் வேறுவகையாகக் கிளம்பியது. அதிகம் பெறவே, திரும்பக் கொடுக்கிறார்கள் என்ற பிரசாரத்தைக் கிளப்பினர். அவர்களிடம் நிலைமை விளக்கப்பட்டது என்றும் பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.

இதையெல்லாம் மீறி அந்த மண்மீட்பு நிதிக்குப் பெருமளவில் தங்கம் குவிந்தது என்கிறது புலிகள் வெளியீடு.

இலங்கை அரசு, ராணுவ நடவடிக்கையால் யாழ்ப்பாணத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியாது எனக் கருதி, ஏற்கெனவே விதித்த பொருளாதாரத் தடையை பிரேமதாசா அரசு மேலும் இறுக்கியது.

ஏற்கெனவே தடை விதிக்கப்பட்ட உணவுப் பொருள், மளிகைச் சாமான்கள், உயிர்காக்கும் மருந்துப் பொருள்கள், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் எண்ணெய் வகைகள், சோப்பு வகைகளுடன் மேலும் பல பொருள்களின் தடை பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்தப் பட்டியலில் (1) ஆயுதங்கள், (2) வெடிமருந்துகள், (3) விளையாட்டுத் துப்பாக்கிகள், (4) மின்சார வயர்கள், (5) தூரத்துக் கட்டுப்பாட்டுக் கருவிகள், (6) மின்.எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருள்கள், (7) தலைக் கவசங்கள், (8) நுணுக்குக் காட்டிகள், (9) தொலைநோக்குக் கண்ணாடி (டெலஸ்கோப்), (10) காம்பஸ், (11) பாதுகாப்புப் படையினரின் உடைகளையொத்த துணிவகைகள், (12) இரும்புகள், இரும்புக் கம்பிகள், (13) அலுமினியம், அலுமினியப் பொருள்கள், (14) சாக்குப் பைகள், (15) சிமெண்ட், (16) சைக்கிள் ரேசர்கள், (17) மரங்கள், (18) முட்கம்பிகள், (19) கம்பி வெட்டும் கருவிகள், (20) தீப்பற்றும் பொருள்கள், (21) கற்பூரம், (22) நிலக்கரி, (23) யூரியா உரம், (24) சகலவகையும் சார்ந்த பேட்டரிகள், (25) வானொலி உதிரி பாகங்கள், (26) மின்கருவிகள், (27) பிளாஸ்டிக் கேன்கள், (28) மோட்டார் வாகன டயர்கள், (29) மோட்டார் வாகன உதிரி பாகங்கள், (30) மோட்டார் சைக்கிள்கள், (31) அச்சிடும் தாள்கள் (எல்லாவகையும்), (32) அச்சு இயந்திரங்கள், அதன் பாகங்கள் மற்றும் அதன் உபயோகப் பொருள்கள், (33) ஜெராக்ஸ் போன்ற பதிவு எந்திரங்கள், (34) பாடசாலைப் பைகள், (35) தங்கம், கட்டியாகவும் நகைகளாகவும், (36) மதுபானங்கள், (37) மேலும் சில உயிர்காக்கும் மருந்துகள், மற்றும் அறுவைச்சிகிச்சைக் கருவிகள் (ஆக்ஸிஜன் உள்ளிட்டவை), (38) உராய்வுப் பொருள்கள், (39) பாலிதீன் பைகள் எல்லாவகையும், (40) மெழுகு, மெழுகுவர்த்திகள், (41) டர்பென்டைன் போன்ற பொருள்கள், (42) அனைத்து வகை சோப்புகள், (43) அனைத்துவகை ரசாயனப் பொருள்கள், (44) சோயா-புட்டியில் அடைக்கப்பட்ட உணவுகள், (45) இனிப்பு வகைகள் ஆகியவை யாழ்ப்பாணம் உள்ளிட்டவை வடக்கு மாகாணங்களுக்குக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்துக்கோ ஆயுதங்கள் (வெடிகுண்டுகள்), வெடிமருந்துகள், யூரியா உரம் மட்டும் தடை என்றும் அறிவிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்டப் பொருள்கள் வவுனியா பிரதேசத்திலிருந்து, ஆனையிறவைத் தாண்டிச் செல்வது என்பது குற்றமாக அறிவிக்கப்பட்டது. அதையும் மீறி எடுத்துச் செல்கிறவர்கள் தேசிய விரோதிகள் என்றும் தண்டிக்கப்பட்டார்கள்.

இவ்வாறு பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி, யாழ்ப்பாணத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் கூட்டுத்தண்டனையை பிரேமதாசா நிர்வாகம் மேலும் இறுக்கியபோதிலும், யாழ்ப்பாணவாசிகள் இதுபற்றி அஞ்சவில்லை.

இதுகுறித்து வே.பிரபாகரன் வெளியிட்ட அறிக்கையில், "தற்போது ஈழத்தமிழர்கள் இரு யுத்தங்களை ஒருசேர நடத்திக்கொண்டிருக்கிறார்கள். முதலாவது, எமது தாயகத்தை எதிரிகளிடமிருந்து மீட்பதற்கான விடுதலைப் போராட்டம். இரண்டாவது, போதிய உணவை உற்பத்தி செய்து, பொருளாதாரம் என்ற பெயரில் சிங்கள அரசால், உணவுப் பொருள்களை வடக்கு-கிழக்குக்கு அனுப்புவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை முறியடிப்பது. இந்த இரு போராட்டங்களிலும் நாம் வெற்றி பெற்று எமது லட்சியமான தமிழீழத்தை அடைவோம் என்பதில் உறுதியுடன் இருக்கின்றோம்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "ஆங்கிலேய ஆட்சியில் தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்டப் பயிர்களை அறிமுகம் செய்து, அவர்களின் நிர்வாக வசதிக்காக தமிழீழத்தையும் மற்ற பகுதிகளையும் ஒருங்கிணைத்து, கொழும்பு நகரை உணவுச் சந்தைப்படுத்தலின் பிரதான மையமாக்கினர் என்றும், ஆங்கிலேயரைத் தொடர்ந்து வந்த சிங்கள அரசுகளும் தமிழர்கள், தமிழ்ப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கொழும்பில் தங்கி வாழும் தன்மையை ஊக்கப்படுத்தினர் என்றும், இவர்களின் முதலீடுகள் மூலம் வரும் வருமானத்தை கொழும்பில் உள்ள நிறுவனங்கள் மூலம் பெறுகிறவரை, விடுதலைப் போராட்டம் வெற்றிபெற முடியாது என சிங்கள இனவெறியர்கள் கருதிச் செயல்படுகின்றனர் என்றும் இதன் காரணமாகவே விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுகிற நிலையை அடையும்போதெல்லாம் ஸ்ரீலங்கா அரசு பொருளாதாரத் தடையை எமது பகுதிகள் மீது விதிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

"இதனைச் சமாளிக்க உணவு உற்பத்தி மற்றும் எல்லாவகையிலும் தன்னிறைவு அடைதல், தமிழீழத்தை அடைவதற்கான மிக அத்தியாவசிய முன்தேவையாக உள்ளது' என்றும் அவர் அவ்வறிக்கையில் வலியுறுத்தியிருந்தார்.

இதன்படி, பொருளாதாரத் தடையை முறியடிக்க உணவுப் பொருள் தேவையில் 30 சதவீதத்தை தமிழீழப் பகுதியில் உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வென்றனர். அந்நிலையிலும் பற்றாக்குறை அவர்களை மேலும் நிர்பந்திக்க, உணவு உற்பத்தியில் மேலும் தீவிரம் காட்டினர்.

கல்விக்கான அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலையிலும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும் மின்சக்தி பெற சைக்கிள் டைனமோ முறையும், விளக்கெரிய திரி விளக்குகளும் பயன்படுத்தப்பட்டன. சவக்காரத் தடையைப் போக்க, பனம்பழச்சாற்றைக் கொண்டு உடைகளைச் சலவை செய்தல் உள்ளிட்ட பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி வென்றனர்.

158: போராட்டம் தொடர்கிறது...

ராஜீவ்காந்தி படுகொலையைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதன் ஆதரவாளர்கள் மீது தடா சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவை பிரயோகிக்கப்பட்டன. இதன் உச்சகட்ட நடவடிக்கையாக விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்திய அரசு தடைவிதித்தது.

இது குறித்து பழ.நெடுமாறன் தனது நூலில், "தமிழகத்தில் செயல்படாத ஓர் இயக்கத்தின் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மீட்புப்படை என்ற பெயரில் சில இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க, விடுதலைப் புலிகள் சதி செய்தனர் என்ற குற்றச்சாட்டு நகைப்புக்கு இடமான குற்றச்சாட்டாகும்.

தமிழ் தேசிய மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணையே இன்னும் தொடங்கப்படவில்லை. வழக்கு விசாரிக்கப்பட்டு, குற்றச்சாட்டு உண்மை என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. அவ்வாறு நிரூபிக்கப்பட்ட பின்பே தமிழ்த் தேசிய மீட்புப்படை உண்மையில் இருந்தது என்பது நிரூபணம் ஆகும். இந்த வழக்கே விசாரணைக்கு வராத நிலையில் இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்துள்ளது சரியல்ல' என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு தடை அறிவிக்கப்பட்டதும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அவ்வறிக்கையில், "தமிழ்நாட்டு இளைஞர்கள் சிலருக்கு யாழ்ப்பாணத்தில் ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும், தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டிவிட்டதாகவும் இந்தியா, விடுதலைப் புலிகள் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்துகின்றது. இந்தக் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையுமில்லை' என்று தனது மறுப்பினை வெளியிட்டு, இலங்கையின் இனப் பிரச்னையில் இந்தியாவின் தவறுகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதிக்கும் நடவடிக்கையைக் கூட சட்டப்படி இந்திய அரசு செய்யவில்லை. 14-5-1992 அன்று இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தடை சரிதானா? என்பதைப் பற்றி முடிவு செய்ய நடுவர் மன்றம் ஒன்றையும் அமைத்தது (தமிழீழம் சிவக்கிறது - பழ.நெடுமாறன், பக்-488).

8-7-1992 அன்று நடுவர் மன்றம் வெளியிட்ட அறிவிப்பில், "விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்ப்பவர்கள் தங்கள் மனுக்களை, தம்மிடம் அளிக்கலாம்' என்றும் தெரிவித்திருந்தது.

இதனையொட்டி, பழ.நெடுமாறன், மணியரசன், தியாகு, தீரன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்தனர். விடுதலைப் புலிகளின் பன்னாட்டுச் செயலகம் சார்பில் திலகர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "தமிழீழ மக்களுக்கு எதிரான இன ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிற ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக, ஆயுதப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள். பன்னாட்டுச் சட்டங்களின் கீழும், பன்னாட்டு முறைமைகளின் கீழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. 1985-ஆம் ஆண்டில் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதும், 1987-ஆம் ஆண்டில் இந்திய-இலங்கை உடன்படிக்கையின்போதும் இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் பேராட்ட ஈடுபாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்குவதற்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுத்துள்ளது.

1967-ஆம் ஆண்டு சட்டவிரோதச் செயல்பாடுகள் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள கருத்துகளின் கீழ் விடுதலைப் புலிகளின் இயக்கம் வரவில்லை. இந்திய அரசின் நீதி-நிர்வாக எல்லைக்குள்ளும் அஃது இயங்கவில்லை. எனவே, எந்தச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டாலும் அது செல்லத்தக்கதன்று.

இந்தியாவின் உள் அரசியலிலோ அல்லது அதனுடைய எல்லைகளுக்கு அபாயம் விளைவிக்கும் வகையிலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறுக்கிடும் எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு அறவே இல்லை' என்று கூறிய அவர், மேலும் கூறுகையில், "இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வீணானது; தேவையற்றது. சட்டத்தினால் செயல்படுத்த முடியாதது' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந் நிலையில், நடுவர் மன்றத்தில் தங்களது கருத்துகளைச் சொல்ல வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், விசாரணைகள் ரகசியமாக நடக்கின்றன என்றும், இதனால் ஒருதலைப்பட்சமான முடிவு அறிவிக்கப்படலாம் என்றும் இவ்விசாரணைக்குத் தடை கோரி, தியாகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இம் மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், 27-10-1992 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இரண்டு வாரத்தில் பதிலளிக்க நடுவர் மன்றத்தின் பதிவாளருக்கு அறிவிப்புக் கொடுக்க உத்தரவிட்டது.

ஆனால், உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு கிடைக்கும் முன்பாகவே, நடுவர் மன்றம் ரகசியமாகக் கூடி விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்கப்பட்ட தடை செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியது (ஆதாரம்: மேலது நூல்).

விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இந்தியாவில் அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். பத்திரிகைகளும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டன. அது குறித்த விவாதங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன.

159: கிட்டுவின் உயிர்த்தியாகம்!

புலிகள்-பிரேமதாசா பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி விழும் முன்பாக, கிட்டுவும் அவரது மனைவி சிந்தியாவும் லண்டன் சென்றார்கள். அங்கு கிட்டுவின் இழந்த காலுக்கு ஏற்ற சிகிச்சை மேற்கொண்டதுடன், புலிகளின் பன்னாட்டுச் செயலகத்தை அமைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.

உலக நாடுகளின் 52 நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் அலுவலகங்களை லண்டன் அலுவலகத்துடன் இணைத்தார். இதன்மூலம் வெளிநாடுகளில் வசித்த ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்றிணைந்தனர்.

மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேசி புலிகளின் பிரச்னைகளையும், ஸ்ரீலங்கா அரசு இழைத்துவரும் அடக்குமுறைகளையும் விவரித்தார் கிட்டு. இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அரசுகள், கிட்டுவை லண்டனிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தின. இறுதியாகக் கிட்டு, லண்டனிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஐரோப்பிய நாடுகளில் ஒரு நாடோடி போலத் திரிந்தார். எந்த நாட்டில் இருந்தாலும், அந்நாட்டிலிருந்தே தனது அலுவலக வேலைகளைச் செய்தார்.

மேற்குலக நாடுகளில் பிரபலமான குவேக்கர்ஸ் அமைப்பு இலங்கை சென்றது. அங்கு அரசுத்தரப்பு மற்றும் புலிகளுடன் பேசி, சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியுறுத்தியது. இலங்கையைத் தவிர்த்து வேற்று நாடொன்றில் அந்தப் பேச்சு அமைவது என முடிவெடுக்கப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் கிட்டு இருந்ததால், அவர் பிரபாகரனிடம் நேரில் பேசி, முடிவெடுக்க, தமிழீழம் நோக்கிப் புறப்பட்டார்.

1993-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் நாளன்று, எம்.வி.அகதா என்ற கப்பலில், இந்தியாவின் கடல் எல்லைக்கு 440 கடல் மைலுக்கு அப்பால் வந்து கொண்டிருந்தார். அவருடன் லெப்டினன்ட் கர்னல் குட்டிஸ்ரீ உள்ளிட்ட 9 போராளிகளும் உடன் வந்தனர். இந்தக் கப்பலை, இந்தியக் கடற்படை முற்றுகையிட்டது. கப்பலை இந்தியாவை நோக்கித் திருப்பும்படி சொல்லப்பட்டது. கிட்டு அதற்கு உடன்பட மறுத்தார்.

ஹெலிகாப்டர் மூலம் அதிரடிப் படைகள் கப்பலில் இறங்கி, கிட்டுவையும் அவருடன் வந்த போராளிகளையும் கைது செய்ய முயன்றனர். இரு நாள்கள் நடந்த இந்தப் போராட்டத்தில், அதிரடிப் படைவீரர்கள், கப்பலில் இறங்க முயன்ற நேரத்தில் கிட்டுவும் அவரது நண்பர்களும் சயனைட் குப்பி கடித்து உயிர்துறந்தனர். கோபமுற்ற கடற்படையினர் அக் கப்பலைத் தாக்க முயன்றபோது, கப்பல் வெடித்துச் சிதறி, கடலில் மூழ்கியது.

கப்பலை இயக்கிய மாலுமி உள்ளிட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டு விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

கிட்டுவின் உயிர்துறப்பு உலகின் கவனத்துக்கு வந்தபோது, யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகளாவிய மனித உரிமை ஆர்வலர்கள் அனைவருமே கலங்கினர். ஆனால், சதிவேலைகளுக்காக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றபோது, கப்பல் சுற்றிவளைக்கப்பட்டதாக இந்திய அரசு கூறியது. ஆனால், இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே வராத இந்தக் கப்பல் ஏன், எதற்காக இப்படிச் சுற்றி வளைக்கப்பட்டது என்பதற்கு யாரும் எந்தவித விளக்கமும் இன்றுவரைத் தரவில்லை.

இதுபற்றித் தில்லியில் உள்ள ராணுவ இலாகா அதிகாரி கூறிய செய்தி, சென்னை நாளிதழ்களில் பின்வருமாறு இருந்தது. கிட்டு பயணம் செய்த கப்பலில் நிறைய ஆயுதங்களும் வெடிமருந்துகளும் இருந்தன. கப்பலை மடக்கிக் கொண்டுவரும்பொழுது, விடுதலைப் புலிகள் கப்பலை மூழ்கடிக்கும் வண்ணம் வெடிவைத்துவிட்டனர். தீப்பிடித்த கப்பலில் இருந்து ஒன்பது விடுதலைப் புலிகள் கடலுள் குதித்தனர். அவர்களைக் கடற்படை வீரர்கள் காப்பாற்றி, நமது கப்பலுக்குக் கொண்டுவந்து காவலில் வைத்தனர். கைதான விடுதலைப் புலிகளில் கிட்டு இல்லை. இவ்வாறு அந்தச் செய்தி கூறியது.

கிட்டுவின் கப்பல் சுற்றிவளைக்கப்பட்ட செய்தியை பிரான்ஸிலிருந்து திலகர், பழ.நெடுமாறனுக்குத் தெரிவித்தார். இதனையொட்டி, பழ.நெடுமாறன் பத்திரிகையாளர்களின் கூட்டத்தைக் கூட்டி, தகவல் தெரிவித்த பின்னரே இந்தச் செய்தி, தமிழீழப் பத்திரிகைகளில் வெளியானது.

இதுகுறித்து பழ.நெடுமாறன் கூறுகையில், "1993-ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் கிட்டுவின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்துப் பேச அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றினைக் கூட்டியிருந்தேன். இதில் பெருஞ்சித்திரனார், சாலை.இளந்திரையன், பண்ருட்டி ராமச்சந்திரன், துரைசாமி, மணியரசன், தியாகு, தீனன், சுப.வீரபாண்டியன், புலமைப்பித்தன் உள்ளிட்ட 26 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கிட்டுவின் மரணத்தைக் கண்டித்து, தென்பிராந்திய ராணுவத் தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தோம். செய்தி வெளியான அன்றே என்னையும், புலமைப்பித்தன், சுப.வீரபாண்டியன், தீனன், சரஸ்வதி இராசேந்திரன் ஆகியோரையும் கைது செய்தனர். ஐந்து நாள்களுக்குப் பிறகு ஜாமீனில் விடப்பட்டோம். ஜனவரி 27-ஆம் நாளன்று மீண்டும் என்னையும், பெருஞ்சித்திரனார், பொழிலன் ஆகியோரையும் தடா சட்டத்தில் கைது செய்தனர். கிட்டுவின் படுகொலையையொட்டி தமிழகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு, எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சிறையில் இருந்தபடியே சென்னை உயர் நீதிமன்றத்தில் கிட்டு பற்றிய ஆட்கொணர்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்தேன். எதிர்மனுதாரர்களாக இந்தியப் பாதுகாப்புத் துறை, இந்திய உள்துறை, தமிழகக் காவல்துறைத் தலைவர் ஆகியோரைச் சேர்த்திருந்தேன். இவர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு, வாதாடுவதற்காக இந்திய அரசின் இணை.சொலிசிட்டர் ஜெனரல் கே.டி.எஸ்.துளசி வந்தார். இந்த மனு தாக்கல் செய்யப்பட்டபோது, இந்திய அரசு முதலில் சாதாரணமாகத்தான் நினைத்தது. ஆனால், அரசின் உயர் வழக்கறிஞர் வந்து வாதாடவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த வழக்கின் மூலம் பல உண்மைகள் வெளியாயின. கிட்டு, இந்தியக் கடல் எல்லையில் ஊடுருவவே இல்லையென்பதும், அவர் வந்த கப்பல் இந்தியாவின் கடல் எல்லைக்கு அப்பால் 440 கடல் மைலுக்கு வந்துகொண்டிருந்ததாகவும், கிட்டு கப்பலில் வரும் உளவுத் தகவல் கிடைத்தபிறகு அவரது கப்பலை வழிமறிக்க, இந்தியக் கப்பற்படை சென்றது என்பதும், அவரது கப்பலை வலுக்கட்டாயமாக இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும்படி மிரட்டப்பட்டார் என்பதும், அவர் அதற்கு ஒத்துழைக்காத நிலையில் அதிரடிப்படை ஹெலிகாப்டர் துணையுடன் கப்பலினுள் இறங்கிய நிலையில், அவரும், அவருடன் வந்த போராளிகளும் சயனைட் அருந்தி உயிர்துறந்தனர் என்பதும் தெரிய வந்தது.

இந் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தனக்கு இந்த வழக்கை இதற்குமேல் விசாரிக்க அதிகாரமில்லை, ஆந்திர உயர் நீதிமன்றத்திற்குத்தான் அதற்கான அதிகாரம் உள்ளது என அறிவித்து ஒதுங்கிவிட்டது. எனவே, ஆந்திராவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை மூலமே, கிட்டு மரணம் குறித்த உண்மைகள் பல வெளி உலகுக்குத் தெரிய வந்தன' என்ற நெடுமாறன், "தமிழீழம் சிறந்த தளபதி ஒருவரை இழந்துவிட்டது. கிட்டு ஒரு சிறந்த ராஜதந்திரியாக உருவானார். அவர் பேச்சுவார்த்தைகளில் சமர்த்தர். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண உலக நாடுகள் முயற்சிப்பது கிட்டு வழியாகத்தான் என்பதை உணர்ந்தே அவரைப் பழிதீர்த்திருக்கிறார்கள்' என்றும் குறிப்பிட்டார்.

கிட்டுவின் இழப்பு, வே.பிரபாகரனுக்குத் தாங்கமுடியாத சோகத்தை ஏற்படுத்தியது. அவர் கிட்டுவின் இழப்பைத் தொடர்ந்து, வெளியிட்ட அஞ்சலியில், "என் ஆன்மாவைப் பிழிந்த சோக நிகழ்வு. அதனைச் சொற்களால் வார்த்துவிட முடியாது. நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக என் சுமைதாங்கும் லட்சியத் தோழனாக இருந்தவர். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாற்பட்டது. ஒரே லட்சியப் பற்றுணர்வில், ஒன்றித்த போராட்ட வாழ்வில், நாங்கள் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில், ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில், வேரூன்றி வளர்ந்த மனித நேயம் இது.

கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். ஓய்வில்லாது புயல் வீசும் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு. வங்கக் கடலில் பூகம்பமாக அவர் ஆன்மா பிளந்தது. அதன் அதிர்வலையில் எமது தேசமே விழித்துக் கொண்டது. கிட்டு... நீ சாகவில்லை. ஒரு புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய்' என்று குறிப்பிட்டிருந்தார்.

160: பிரேமதாசா மரணமும் சந்திரிகாவின் அணுகுமுறையும்!

கிட்டுவின் உயிர்த் தியாகத்தையொட்டி, 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 20-ம் தேதி வரை, மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்டன. கிட்டு கப்பலில் வருவது மாத்தையாவால்தான் இந்திய உளவுப் பிரிவுக்குத் தெரியவந்தது என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. எனவே யாழ்ப்பாணத்தில் அனுசரிக்கப்பட்ட அஞ்சலிக் கூட்டத்தில் மாத்தையா கலந்துகொள்ளவில்லை.

இதுகுறித்து அடேல் பாலசிங்கம் எழுதிய நூலில், 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள், கொக்குவில் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த மகேந்திரராசா உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், ஓர் அறையை ஒதுக்கித் தர வேண்டும் என்று கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாலசிங்கம் உண்ணாவிரதம் இருப்பதன் அவசியம் என்ன என்று கேட்டபோது, அவர், புலிகள் இயக்கத்தின் உப தலைவர் பதவியிலிருந்தும் அரசியல் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும் தாம் விலக்கப்பட்டது காரணமாக இயக்கத்தின் தலைமைப் பீடத்தின் மீது ஏமாற்றம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணியில் மாத்தையா மீது, தனக்கென ஒரு குழுவை உருவாக்கி, செயல்படுவதாகவும் தனக்கு விசுவாசமான ஒரு சிலரின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றி வருவதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையொட்டி, அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்திய உளவுத் துறையின் வலையில் சிக்கி, பிரபாகரனை அகற்றும் திட்டத்துக்கு உடன்பட்டு, பெரும் சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரியவந்து, அவரும் அவரது சகாக்களும் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி கலைக்கப்பட்டு, அதற்குப் பதில் அரசியல் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் யாழ்த் தளபதியாக இருந்து வந்த சுப. தமிழ்ச்செல்வன் நியமனம் ஆனார்.

பிரேமதாசாவால் ஒதுக்கப்பட்டிருந்த அதுலத் முதலியும், காமினி திசநாயக்காவும் தங்கள் பகையை மறந்து, புதிய கட்சி ஒன்றைத் தொடங்கி மேற்கு மாகாண இடைத் தேர்தலில் தீவிரம் காட்டினர். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரால் லலித் அதுலத் முதலி சுட்டுக் கொல்லப்பட்டார் (ஏப்ரல் 23, 1993).

அதற்கடுத்த பத்து தினத்துக்குள் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட அதிபர் பிரேமதாசா, ஆர்மர் வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை தானே சரிசெய்கிறேன் என்று இறங்கினார். அந்த ஊர்வல நெருக்கடியிலும் கூட்டத்தில் ஊடுருவிய சைக்கிளைத் தடுத்து நிறுத்த காவலர்கள் முயன்றபோது, அந்த சைக்கிள் வெடித்து, பிரேமதாசா உள்ளிட்டோர் இறந்தனர்.

இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று புலிகள் அறிக்கை வெளியிட்டனர். ஒருவாரத் துக்கத்திற்குப் பிறகு மே 7-ல் பிரதமராக இருந்த திங்கரி விஜேதுங்க, தற்காலிக அதிபராக ஆறு மாதங்கள் பதவி வகித்தார்.

கணவர் விஜயகுமாரதுங்க கொலையுண்ட பின்னர், லண்டனில் வசித்து வந்த சந்திரிகாவை உடனே நாடு திரும்பும்படி, தாயார் ஸ்ரீமாவோ உத்தரவிட்டார். நாடு திரும்பிய சந்திரிகா குமாரதுங்க நாட்டில் அமைதியை நிலைநாட்டப் பாடுபடப் போவதாக அறிவித்தார். மக்களும் அதையே விரும்பியதால், வலுவான கூட்டணியும் அமைத்து 19.8.1994-ல் பிரதமரானார். பதவி பொறுப்பை ஏற்றதும், தமிழர் பகுதிகளில் பிரேமதாசா விதித்த பொருளாதாரத் தடைகளை சிறிதளவு தளர்த்தினார்.

சந்திரிகாவின் இந்த நடவடிக்கையை வரவேற்று, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், செப்டம்பர் 2, 1994 அன்று, கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் ஒரு பிரதியை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சந்திரிகாவுக்கும் அனுப்பி வைத்தார்.

அவ்வறிக்கையில், ""முந்தைய அரசின் பொருளாதாரத் தடையை சிறிதளவு நீக்கிக் கொண்டதற்கு எங்களது வரவேற்பைத் தெரிவித்துக் கொள்வதுடன், அந்தத் தடையை முழுவதுமாக நீக்குவதற்கும் உத்தரவிட வேண்டும். இவ்வகையாக எமது பகுதியில் முற்றிலுமாக அமைதி நிலவ ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு புலிகள் இயக்கம் முழு ஒத்துழைப்பத் தரும். இதன் நல்லெண்ண வெளிப்பாடாக போர்க் கைதிகளாக எம்மிடம் உள்ள பத்துப் போலீஸôரை விடுதலை செய்யவும் தயாராக இருக்கிறோம். நான்காண்டு பொருளாதாரத் தடையால் அவதியுறும் மக்கள் சிங்களர்களைப் போன்று அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் பெறுவதற்குண்டான வழிவகைகளைச் செய்வது, எம்மை மகிழ்ச்சி அடையச் செய்யும். மேலும், நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தால், நாங்கள் போர் நிறுத்தம் செய்யவும் தயாராக இருக்கிறோம்'' என்றும் அதில் உறுதியளித்திருந்தார்.

இந்த அறிக்கை தனக்கு கிடைக்கப் பெற்றதும் மகிழ்ந்த சந்திரிகா குமாரதுங்க, செப்டம்பர் 9, 1994 அன்று வே. பிரபாகரனுக்கு பதில் கடிதம் எழுதியதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு கடிதம் எழுதிய முதலாவது பிரதமர் என்ற பெயரையும் பெற்றார்.

அந்தக் கடிதத்தில், ""முந்தைய அரசு ஏற்படுத்திய பொருளாதாரத் தடையை நீக்கியதை வரவேற்று புலிகள் வெளியிட்ட அறிக்கையைக் கண்டு மகிழ்கிறேன். நல்லெண்ணம் மற்றும் நல்லுறவு மேம்பட வேண்டும் என்ற அவாவில் பொருளாதாரத் தடையின் சில அம்சங்களை விலக்கி இருக்கிறேன். அதேபோன்று பல ஆண்டுகளாக புலிகளின் சிறையில் இருந்த பத்து போலீஸôரை விடுவிக்கும் முடிவும் வடக்கு-கிழக்குப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.

யாழ்ப்பாண மக்களுக்கு அனைத்துப் பொருள்களும் கிடைக்க வேண்டுமானால், அங்கே பொருள்களைக் கொண்டு வந்து இறக்குவதே முக்கியப் பிரச்னையாகும். அதற்கான வழிகளை உடனடியாகக் கண்டறிவோம்.

மின்சாரம், சாலைகள் மேம்பாடு, விவசாயத்துக்கான நீர்ப்பாசன வசதிகள் போன்றவை கிடைக்க உடனே முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு தங்களின் ஒத்துழைப்பும் தேவை. பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கும் பிரதிநிதிகள் பெயரை அறிவித்தால், அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபடலாம்'' என்றும் சந்திரிகா குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதத்தில் பிரபாகரன் எழுப்பியிருந்த முற்றிலுமான பொருளாதாரத் தடையை நீக்குதல் மற்றும் போர்நிறுத்தம் குறித்து சந்திரிகா எதுவும் குறிப்பிடாத நிலையிலும், புலிகள் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட அரசியல் பிரிவுத் துணைத் தலைவர் கரிகாலன், எஸ். இளம்பரிதி, ஏ. ரவி, எஸ். டொமினிக் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

பொருள்கள் நடமாட்டத்துக்குண்டான தடையை நீக்குவது பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருந்தது. (12.9.1994 பிரபாகரனின் கடிதம்).

இவ்வாறு கடிதப் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலும், கடற்படைத் தாக்குதலும், புலிகளின் எதிர்த்தாக்குதலும் மன்னார் பகுதியில் நடந்து கொண்டுதான் இருந்தது. செப்டம்பர் 19-ல் நடைபெற்ற தீவிரமான தாக்குதலில், சிங்களக் கடற்படையின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் 24 வீரர்கள் கொல்லப்பட்டனர். கடலில் மூழ்க இருந்த கப்பலின் காப்டனும் இதர அதிகாரிகளும் காப்பாற்றப்பட்டு, போர்க் கைதிகளாக்கப்பட்டனர்.

இவ்வகையான தாக்குதலில் புலிகள் மகிழ்ச்சி அடையாத நிலையிலும், செப்டம்பர் 21-ம் தேதி சந்திரிகா பிரபாகரனுக்கும் மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், பேச்சுவார்த்தைக்கான அரசுப் பிரதிநிதிகள் பட்டியல் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமரின் செயலாளர் பாலபட்டபெந்தி, சுற்றுலாச் செயலாளர் லயனல் ஃபெர்னாண்டோ, பேங்க் ஆப் சிலோன் தலைவர் ஆர். ஆசிர்வாதம், கட்டட நிர்மாணப் பிரிவு தலைவர் என்.எல். குணரத்னே ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என்றும், அக்டோபர் மாதத்தில் 30-ம் தேதியிலிருந்து 6-ம் தேதிக்குள் ஒரு நாளும், 12-ம் தேதியிலிருந்து 15-ம் தேதிக்குள் ஒரு நாளும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சந்திரிகாவின் பிரதிநிதிகளின் யாழ்ப்பாணம் வருகை அக்டோபர் 13, 14-ல், இருந்தால் வசதியாக இருக்கும் என்று பிரபாகரன் குறிப்பிட்டதுடன், பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கும் உறுதி அளித்திருந்தார்.

இதன்படி பலாலி விமான தளத்தில் அவர்கள் வந்து இறங்குவார்கள் என்று சந்திரிகா குறிப்பிட்டதையொட்டி, பிரபாகரன் பலாலி என்பதைவிட யாழ். பல்கலைக்கழக திறந்தவெளி சரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

விமானப் பயணம் சரியாக வராது என்று பிரதமர் கருதினால் காங்கேசன் துறைக்கு செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் வந்து சேர்ந்தால், அங்கிருந்து எமது ஆட்கள், அந்தப் பிரதிநிதிகளை அழைத்து வந்து சுபாஷ் ஓட்டலில் தங்க வைப்பார்கள். அந்த ஓட்டல் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ளதால் அவர்களின் பாதுகாப்புக்கும் பிரச்னை இல்லை என்றும் பிரபாகரன் (8.10.1994) தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த பாலபட்டபெந்தி யாழ்ப் பல்கலை திறந்தவெளியில் வந்து பிரதிநிதிகள் இறங்குவர் என்றும், அதற்கான "எச்' என்கிற பெரிய அடையாளத்தை வெள்ளை நிறத்தில் திடலில் பொறிக்கும்படியும், அதுவே தரையிறங்க வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். உடன், எதுகுறித்துப் பேசப் போகிறோம் என்ற குறிப்புகளும் அதில் இடம்பெற்றிருந்தன.

1. பொருள்களைக் கொண்டு செல்ல போக்குவரத்து வசதி.

2. மின் விநியோகம், சாலை மேம்பாடு, நீர்ப்பாசன வசதிகளை உறுதி செய்தல்.

3. யாழ்ப் பல்கலை. நூலகம் மீள உருவாக்கம்.

4. போர் நிறுத்தத்துக்கான வழிவகை காணுதல்.

ஈழத் தமிழர் பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் இந்தப் புதிய முயற்சிக்கு அனைத்துத் தரப்பினர் மத்தியிலிருந்தும் வரவேற்பும் எதிர்பார்ப்பும் குவிந்தன.

161: மாத்தையாவுக்கு மரண தண்டனை!

புலிகளுக்கும், சந்திரிகா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. சந்திரிகா அரசு, பொருள் போக்குவரத்தை மட்டுமே முக்கிய அமசமாகக் கருதியது. புலிகளோ, பொருளாதாரத் தடையை முற்றிலுமாக நீக்குவதை பிரதானமாக்க முடிவு செய்திருந்தனர். அரசு பொருள் போக்குவரத்தை சரிசெய்ய முயன்றாலும், தாண்டிக்குளம் பகுதியில் உள்ள ராணுவச் சோதனைச்சாவடி அப்பொருள்களைத் தமிழர் பகுதிக்கும் கொண்டு செல்ல தடை விதிக்க, அதிகாரம் பெற்றிருந்ததுதான் புலிகளின் அதிருப்திக்குக் காரணம். ""தினசரி உபயோகமான தீப்பெட்டியும், சோப்பும், எண்ணெய் வகைகளும் கூட இவ்வாறு சோதனைச் சாவடியில் தடுக்கப்படுகிற நிலை. பாதுகாப்பு என்கிற பெயரில் குடையையும், ஷு பாலிஷையும் கூட தடுக்கிறார்கள். கடற்புலிகளின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகக் கூறி, கடலில் மீன்பிடித் தொழில் செய்வதைத் தடுக்கிறார்கள். இதன் காரணமாக நூற்றுக்கணக்கான மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் வறுமையில் உழல்கிறார்கள். இவ்வாறான தடைகள் மூலம், மக்களை கூட்டுத் தண்டனைக்கு உள்படுத்துவது, மனிதநேயத்துக்கு எதிரானது'' என்பது புலிகளின் கருத்தாக இருந்தது. ""பொருளாதாரத் தடையை நீக்குவதையே பேச்சுவார்த்தையின் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். சந்திரிகா தமிழர்களின்பால் அக்கறை கொண்டிருப்பதாகப் பேசுவது உண்மையென்றால், முந்தைய அரசு விதித்த அனைத்து தடைகளையும் நீக்குவதே சரியானதாகும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்'' என்று பிரபாகரன் பேச்சுவார்த்தை குழுவினருக்கு உத்தரவிட்டார். இதன்படி பாலசிங்கம், சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் யாழ்ப் பல்கலைக்கழகத் திறந்தவெளித் திடலில், அரசுப் பிரதிநிதிகளை வரவேற்று சுண்டிக்குளத்திலுள்ள தலைமையகத்துக்கு அழைத்து வந்தார்கள். புலிகளின் பிரதிநிதிகள், பொருளாதாரத் தடையை நீக்குவது, போர் நிறுத்தம், குடா நாட்டில் இருந்து சுலபமாக வன்னிப் பகுதி சென்று வர சங்குப்பிட்டி-கீரைத் தீவு சாலைப் போக்குவரத்தைத் திறந்து விடுவது, இதுதொடர்பாக பூநகரி முகாமை அகற்றுவது உள்ளிட்டவற்றை வலியுறுத்திப் பேசினார்.

முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும், அடுத்த கட்ட பேச்சுக்கான திட்டத்தில் அது சேர்க்கப்பட்டது. கரிகாலனும், பாலபட்டபெந்தியும் கையெழுத்திட்ட அறிக்கையும் அவற்றை உறுதிப்படுத்தியது. அறிக்கையில், கரிகாலன், சந்திரிகா அரசிடம் சுமுகமான நல்ல சூழலை நாடு எதிர்பார்ப்பதாகக் கூறியதுடன், வடக்கு - கிழக்கில் மக்கள் படும் துன்பங்களையும் எடுத்துரைத்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. பிரதமரின் செயலாளர் பாலபட்டபெந்தி, சந்திரிகாவின் நல்லெண்ணத் தூதுவர்களாக வந்துள்ள தாங்கள், நல்லது செய்ய முயல்வோம் என்றும் உறுதி கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. புலிகளின் பல்வேறு கோரிக்கைகள் உடனடியாகப் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் 24, 1994 என்று முடிவானது. அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை, குறிப்பிட்ட தேதியில் நடைபெறாமல் தள்ளிப் போனதற்கு காமினி திஸ்ஸநாயக்காவின் கொலை காரணமாக அமைந்தது. அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெறுவதையொட்டி, காமினி திஸ்ஸநாயக்கா மீண்டும் யுஎன்பி கட்சியில் இணைக்கப்பட்டு, அதிபர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். பிரதமராக இருந்த சந்திரிகா சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளரானார். அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காமினி திஸ்ஸநாயக்கா மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். யுஎன்பி என்கிற ஐக்கிய தேசியக் கட்சி, இக்கொலைக்கு புலிகளும் சந்திரிகா அரசுமே காரணம் என குற்றம் சாட்டியது. சந்திரிகா இக் கொலை குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காது இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குப் பயந்து, 24-ஆம் தேதி நடைபெற இருந்த புலிகளுடனான பேச்சு வார்த்தையைத் தள்ளி வைத்தார்.

காமினி திஸ்ஸநாயக்காவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மனைவி ஸ்ரீமா திஸ்ஸநாயக்கா அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் அட்டவணைப்படி நவம்பர் 9-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் தவிர்த்து நடைபெற்ற தேர்தலில் 62 சத வாக்குகளைப் பெற்று சந்திரிகா இலங்கையின் அதிபரானார். (நவம்பர் 12). மக்களுக்கு சந்திரிகா விடுத்த செய்தியில், ""அமைதியை விரும்பும் பெரும்பான்மையான மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற உழைப்பேன்'' என்று அறிவித்தார்.

சந்திரிகா அதிபரான நிலையில், அதனை வரவேற்கும் விதமாக புலிகள் இயக்கம் நவம்பர் 12 முதல் 19-ஆம் தேதி வரை போர் நிறுத்தம் அறிவித்தனர். ஆனால் இந்தப் போர் நிறுத்தத்தை சந்திரிகா கண்டுகொள்ளவில்லை. மாறாக ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாயிற்று. வன்னிப் பகுதியில் உள்ள நெடுங்கேணியில் நடைபெற்ற தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் அமுதன் கொல்லப்பட்டு, அவரது தலையைத் துண்டித்து, ராணுவத்தினர் எடுத்துச் சென்றனர்.

செஞ்சிலுவைச் சங்கம் மூலம், சுப.தமிழ்ச்செல்வன் அமுதனின் (மல்லி) துண்டிக்கப்பட்ட தலையை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியிருந்தார். "அதுமட்டுமன்றி சந்திரிகா அதிபரானதையொட்டி, நல்லெண்ண நடவடிக்கையாக ஒருவார போர் நிறுத்தம் அறிவித்தப் புலிகளுக்கு சிங்கள ராணுவம் அளித்த பரிசு இதுதானா?' என்றும் கேட்டிருந்தார். இதற்குப் பதலிளித்த துணைப் பாதுகாப்பு அமைச்சர் கர்னல் அனுருத்த ரத்தவத்தே, போர் நிறுத்தம் குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் சிதைந்த நிலையில் இருந்த அமுதனின் தலை எரியூட்டப்பட்டது என்றும், அதன் சாம்பலை அனுப்பியுள்ளதாகவும் கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். இந்தக் கடிதத்துக்கு வே.பிரபாகரனே பதில் எழுதினார். அந்தப் பதிலில், ""எங்களது ஒருவார போர் நிறுத்தம் குறித்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அதிபருக்குத் தெரிவித்துவிட்டு, பத்திரிகைகளுக்கு செய்தி அளித்து, அவை உள்ளூர் மற்றும் உலகப் பத்திரிகைகளிலும், ஊடகத்திலும் வெளிவந்துள்ளதை நினைவூட்டுகிறேன். அரசின் புதிய நிலை எங்களுக்கு அதிர்ச்சியூட்டுகிறது. அமுதன் தலை துண்டிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட செய்தி எங்களை கோபமூட்டச் செய்யப்பட்ட ஒன்றாகும். இது அமைதியை விரும்பும் அதிபரின் நிலைக்கு எதிரானதாகும். எனவே நடந்த சம்பவத்துக்கு உரிய விசாரணையை உடனே மேற்கொண்டு, எமக்குத் தெரிவிக்க வேண்டும்'' என்றும் அமைச்சர் அனுருத்த ரத்தவத்தேயிடம் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த துணை பாதுகாப்பு அமைச்சர் கர்னல் அனுருத்த ரத்தவத்தே சிங்களத் தலைவர்களின் கொலைகளுக்குப் புலிகளே காரணம் என குற்றம்சாட்டினார். இதனால் வெகுண்ட பிரபாகரன், சிங்களத் தலைவர்களின் ஒப்பந்த மீறல், 60 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது, பொருளாதாரத் தடை விதித்ததன் மூலம் அன்றாடம் பல சாவுகளுக்குக் காரணமானது எல்லாமே சிங்களத் தலைவர்கள்தான் என்று குறிப்பிட்டு, கடுமையான வார்த்தைகளில் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று பாலசிங்கத்திடம் வலியுறுத்தினார்.

பிரபாகரனை சமாதானம் செய்த பாலசிங்கம், ""அரசியல் ரீதியாக அவர்களை வெற்றி கொள்ள நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்படிதான் அவர்களுக்குக் கடிதம் எழுத வேண்டும்'' என்று கூறினார்.

அதன்படி எழுதப்பட்ட கடிதத்திற்கு, ""1995 ஜனவரி முதல் இரு வாரங்களுக்குப் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கலாம்'' என்று அனுரத்த ரத்தவத்தே பதில் எழுதினார். அக்கடிதத்தில், ஜனவரி 2-ஆம் நாள், அரசுப் பிரதிநிதிகள் வந்து பேசி ஓர் ஒப்பந்தத்திற்கு வருவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மாத்தையா (மகேந்திரராசா) மீது பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில், வேலூர் சிறையிலிருந்து தப்பியப் பிரபாகரனின் முன்னாள் மெய்க்காவலர் மூலம், பிரபாகரனைக் கொலை செய்யவும் திட்டம் இருந்தது என்றும், அதன் பிரகாரமே சிறையிலேயே தயாரிக்கப்பட்டு, அவர் ரகசியமாக விடுவிக்கப்பட்டார் என்றும், அவர் தப்பி வந்ததாகக் கூறியதை நம்பி அவர் மீண்டும் முக்கிய இடத்தைப் பிடித்தார் என்பதும்கூட விசாரணையில் தெரிய வந்தது. மாத்தையாவின் கொழும்புப் பயணங்கள், இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் அவருக்குள்ள தொடர்பு எல்லாமே விசாரணையில் வெளிவந்தன. இறுதியில் மாத்தையாவுக்கு 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. 1995, ஐனவரி 2-ஆம் தேதி, சிங்களக் கடற்படையின் உயர் அதிகாரி பிரிகேடியர் ஏ.எஸ். பீரிஸ், காப்டன் பிரசன்னா ராஜரத்னே மற்றும் விடுதலைப் புலிகள் சார்பில் சுப. தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துபேசி, புலிகள், சிங்களப் படை இரண்டில் யார் யுத்தத்துக்கு முயன்றாலும் அதுகுறித்து 72 மணி நேரத்துக்கு முன்பே தெரிவித்து விட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு, அதுவே ஒப்பந்தமாக உருவாகி, யாழ்ப்பாணத்தில் இருந்தபடியே பிரபாகரனும், கொழும்பில் இருந்தபடியே சந்திரிகாவும் கையொப்பமிட்டனர்.

இதே ஒப்பந்தத்தில் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க குழு அமைப்பது என்றும், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத் தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 6 பகுதிகளில் குழு அமையும் என்றும், இதில் அரசுத் தரப்பில் இருவரும், புலிகள் தரப்பில் இருவரும், உலக நாடுகளின் பிரதிநிதி ஒருவர் குழுவின் தலைவராகவும் இருந்து கண்காணிப்பார் என்றும் முடிவாயிற்று.

இந்த ஒப்பந்த நடவடிக்கைகளில் நடுவராகவும், கடிதப் பரிமாற்றத்துக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமே உதவி செய்தது.

162: பிரபாகரன் விதித்த கெடு!

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில், ஆறு பகுதிக்கும் ஆறு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். ஆனால் நான்கு பிரதிநிதிகள் மட்டுமே இருந்தனர். அதிலும்கூட, இரு வெளிநாட்டுப் பிரதிநிதிகளை புலிகளுக்கு அறிமுகம் செய்யாமலேயே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளுக்கு அரசு அனுப்பி வைத்தது. இதுகுறித்த ஆட்சேபணையை சுப. தமிழ்ச்செல்வன் எழுப்பிய போது, ஜனவரி 17-ஆம் தேதி அவர்களை அனுப்பி வைப்பதாக சந்திரிகா தெரிவித்தார்.

இந்நிலையில் கிழக்கு மாவட்டங்களில் புலிகளின் கொரில்லாப் பிரிவினர் நடமாட சிங்கள ராணுவம் கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தது. ஆயுதம் எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி, கடலிலும் சில பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இரவில் கண்டிப்பாக மீன்பிடிக்கக் கூடாது என்றும் ஜனவரி 9-ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் அமைதிச் சூழலை சீர்குலைக்கும் என்று புலிகள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தத் தடை என்று சொல்லப்பட்டாலும், அப்படியொரு தாக்குதல் நடவடிக்கை ஏதுமில்லை. மீன் பிடிப்பது என்பது ராணுவம், கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதிகளில் மட்டுமே தடை செய்யப்பட்டதை புலிகள் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஜனவரி 14-ல் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை அதே இடத்தில், அதே இருதரப்புப் பிரதிநிதிகளிடையே நடைபெற்றது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி பேச்சு அமையாமல் கிழக்கில் புலிகள் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் வைத்திருப்பதைத் தடுப்பது, கடலில் புதிதாக விதிக்கப்பட்ட தடை, அதே போன்று இரவிலும் மீன்பிடிக்கக் கட்டுப்பாடு விதித்தது போன்ற விஷயங்களில் முக்கிய அம்சமாயிற்று.

மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டிருப்பதற்குக் காரணம் கடற்புலிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தத்தான் என்று அதிபரின் செயலாளர் வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். அதேபோன்று பூநகரி முகாமை அப்புறப்படுத்த இயலாது என்றும், பொதுமக்கள் பயணிக்க 600 மீட்டர் இடைவெளி விட்டு ராணுவம் உள்வாங்கும் என்றும், அதேசமயம் அந்த வழியே செல்பவர்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவர் என்றும் பாலபட்டபெந்தி தெரிவித்தார். மீன்பிடித் தடை குறித்தும், கிழக்கில் புலிகள் ஆயுதத்துடன் நடமாடும் உரிமை குறித்தும், அரசிடம் பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் இதுகுறித்து எடுக்கப்படவில்லை. இது போர்நிறுத்தச் சூழல் குறித்த ஒப்பந்தத்தையும், அமைதிச் சூழலையும் சீர்குலைக்கும் என்று தமிழ்ச்செல்வன் மீண்டும் சந்திரிகாவுக்கு கடிதம் எழுதினார். பதிலாக சில பொருள்களுக்குத் தடை நீக்கப்பட்டிருப்பதான கடிதம் ஒன்றை சந்திரிகா அனுப்பி வைத்தார். அதில் விளையாட்டுப் பொருள்கள், பொம்மைத் துப்பாக்கிகள், மின்சார வயர், மின்சாரம் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள், பொம்மைகள், அலுமினியம் பொருள்கள், சணல் பைகள், பால் பேரிங்குகள், மோட்டார் உதிரிப் பாகங்கள், அச்சு எந்திரம், அதன் உதிரி பாகங்கள், அச்சுப் பொருள்கள், தங்கம், ரசாயனப் பொருள்கள், பேட்டரிகள் அனைத்து வகையும் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இறுதியாக பிப்ரவரி 5-ஆம் தேதி போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அதுன்ஹோல்ம், ஜோகன் காபிரியல்சன் (நார்வே), பால் ஹென்றி ஹோஸ்டிங் (நெதர்லாந்து), மேஜர் ஜெனரல் கிளைவ் மில்னர் (கனடா) ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள செயின்ட் ஜான் கல்லூரி திடலில் வந்து இறங்கினர். அவர்களை பிரபாகரன், தமிழ்ச்செல்வன், பாலசிங்கம் உள்ளிட்டோர் வரவேற்று, சுண்டிக்குளியிலுள்ள தங்களது தலைமை நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகளை பிரபாகரனே நேரில் வந்து வரவேற்றார். அவரை நேரில் சந்திக்க கிடைத்த வாய்ப்பைக் கண்டு அவர்கள் வியந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கம் பூரண ஒத்துழைப்பு கொடுக்கும் என்று அவர்களிடம் பிரபாகரன் உறுதியளித்தார். போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க உறுப்பினர்களை அனுப்பி வைத்த அவர்களது நாட்டுத் தலைவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இவர்களின் ஆலோசனைக் கூட்டம், மூடப்பட்ட தனி அறையில் நடைபெற்றது.

இச் சந்திப்பின்போது அரசுப் பிரதிநிதியாக பிரிகேடியர் பீரிஸ் இருந்தார். புலிகள் மற்றும் அரசுப் பிரதிநிதிக்கு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துக் கொண்ட அதேவேளையில், "எந்தப் பிரச்னையானாலும் இருவரும் தாமதிக்காமல் எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தால், பிரச்னைகள் நீண்டுகொண்டே போவதைத் தவிர்க்கலாம்' என்றும் கூறினர்.

இருதரப்பினரும் அதுநாள் வரை செய்த போர் நிறுத்த மீறல்களை, அவர்களது கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இதரப் பகுதிகளுக்கும் நெதர்லாந்து, கனடா நாட்டுப் பிரதிநிகளையே நியமிக்கலாம் என்று புலிகள் கருத்து தெரிவித்தனர்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்காமல், மீன்பிடி உரிமையைத் தராமல், புலிகள் ஆயுதங்கள் வைத்திருப்பதைத் தடுக்கும் நிலையில், யாழ்குடாவில் இருந்து வவுனியா பகுதிக்குத் தாராளமாகச் சென்று வர வழி ஏற்படுத்தாத நிலையில்,

சந்திரிகா, இனப் பிரச்னைக்குத் தீர்வு காண உகந்த நேரம் வந்துவிட்டதாகவும், ஹைதி, எத்தியோப்பியா நாடுகளில் பிரெஞ்சு நாட்டின் தூதுவராக இருந்து ஓய்வுபெற்றுள்ள ஃபிராங்காய்ஸ் மிச்சலை நடுவராகக் கொண்டு பேசலாம் என்றும், இந்தப் பேச்சு வார்த்தை ரகசியமாக இருக்கும் என்றும், அவர் தற்போது கொழும்பில் இருப்பதால், இதுகுறித்த புலிகளின் கருத்துகளைத் தெரிவித்தால் நல்லது என்றும், வேண்டுமானால் மிச்சலை யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பதாகவும் பிரபாகரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார் (20.2.1995).

இந்தக் கடிதம் கிடைத்ததும், தங்களின் கோரிக்கைகளான அன்றாடப் பிரச்னைகள் தீர்வு, மீன்பிடி உரிமை மற்றும் போர்நிறுத்தக் கண்காணிப்பை நடைமுறைப்படுத்திய பிறகு இனப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என்றும், அப்படியே பேசினாலும் அந்த முயற்சிக்கு பிரெஞ்சுக்காரர் தேவையில்லை என்றும், பிரச்னையைத் தீர்க்க மூன்றாவது நபர் தேவையில்லை என்றும், அப்படியே தேவைப்பட்டாலும் இருவரும் ஏற்கத்தக்க ஒருவரைப் பிறகு பேசி முடிவு செய்யலாம் என்றும்-பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்த முயற்சிகள் நடக்கும்போது, வெளிப்படையாக நடப்பதையே தாங்கள் விரும்புவதாகவும் புலிகள் தரப்பில் தெரிவித்தனர்.

இந்தச் செய்திகள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண பத்திரிகைகளில் செய்தியாகக் கசிந்த நிலையில், இதுகுறித்து பத்திரிகையாளர் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு, நிலைமையைப் புலிகள் விளக்கினர். இந்தச் செய்தி ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கப்பட்டு, அவ்வாறான தமிழாக்கத்தை, மீண்டும் ஆங்கில வடிவமாக்கி லண்டன் அலுவலகம் மூலம் சர்வதேசப் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இதில் தான் சொல்லாதது வெளிவந்ததாக சந்திரிகா, பிரபாகரனுக்குக் கடிதம் எழுதினார். மேலும் அந்தக் கடிதத்தில், பேச்சுவார்த்தை நடத்த வேறு எந்த நாட்டுப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைத் தெரிவித்தால் நல்லது என்றும், அதுகுறித்துப் பேச எமது பிரதிநிதிகள் ஏப்ரல் 2 முதல் 10 தேதிகளுக்குள் வந்து சந்திப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் எந்தப் பிரச்னையும் தீராத நிலையில், போர் நிறுத்தத்தையே நடுநிலையாகக் கண்காணிக்க முடியாத நிலையில் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண நேரம் வந்துவிட்டதாகப் பேசுவதும், அதற்கான பிரதிநிதியைத் தேர்வு செய்வதும், பேச்சுவார்த்தைக்குள் தங்களை முடக்க சந்திரிகா விரும்புகிறார் என்றே புலிகள் இயக்கம் கருதியது. எனவே பிரபாகரன் மார்ச் 16, 1995-ல் சந்திரிகாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில் ""எங்களது எந்தக் கோரிக்கையையும் அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோன்று எதையும் நிறைவேற்றவும் தயாராக இல்லை. யாழ்குடாவிலிருந்து வன்னிப் பகுதிக்குச் செல்லும் உரிமை கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. நிரந்தரப் போர் நிறுத்தம் என்கிற கோரிக்கை ஏற்கப்படவில்லை. பூநகரி ராணுவ முகாம், மீன்பிடி உரிமை போன்றவை பாதுகாப்பு சார்ந்தது என்று மறுக்கப்படுகின்றது. இவையெல்லாம் நடந்து கொண்டிருக்க, இனப் பிரச்னை தீர்க்க பேச்சுவார்த்தை என்பது சரியல்ல. எங்களின் கோரிக்கைகள் மார்ச் 28-ஆம் தேதிக்குள் நிறைவேறாவிட்டால் பேச்சுவார்த்தையில் நாங்கள் இருக்கிறோமா இல்லையா என்பதை முடிவு எடுக்க நேரும்'' என்று பிரபாகரன் கெடு விதித்திருந்தார்.

அதிபர் சந்திரிகா, மார்ச் 24, ஏப்ரல் 1 மற்றும் 12 ஆகிய தேதிகளில், பிரபாகரனுக்கு எழுதிய கடிதங்களில் அரசுக்கு கெடு விதிப்பது, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் விஷயமென்றும், அது நட்புரீதியான சொல் ஆகாது என்றும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது, தான் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என நிபந்தனை விதிக்கவில்லை என்றும், ஆனால் வழக்கில் அப்படித்தான் சொல்லப்படும் என்றும் (மார்ச் 24 கடிதத்தில்) தெரிவித்ததோடு, எரிபொருள், மீன்பிடித் தடையை (குறிப்பிட்ட பகுதி தவிர) நீக்கவும் முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இவை சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14-ல்) நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு வெளியே பன்னாட்டு நிதியகங்களிலிருந்து பெறப்படும் நிதியாதாரங்களைக் கொண்டு, ஆயுதங்கள் வாங்கி குவிக்கப்படுவதான, விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அவ்வாறு பெறப்படும் நிதி, மறு கட்டமைப்புக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும் ஏப்ரல் 1 கடிதத்தில் கூறியிருந்தார்.

இவ்வாறு பிரபாகரனுக்கும், அதிபர் சந்திரிகாவுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்குமான 86 கடிதங்கள் பெறப்பட்ட நிலையில், (சந்திரிகா -பிரபாகரனிடையே மட்டும் 46 கடிதங்கள்) ஏப்ரல் 19-ஆம் தேதி இறுதிக்குள், புலிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இறுதிக்கெடு விதித்து பிரபாகரனால் எழுதப்பட்டது. அதன்பிறகு கடிதம் இல்லை.

அமைதிப் பேச்சு-அமைதி என்று கூறி, அதிபராக வந்த சந்திரிகா, நாளடைவில் வழக்கமான கடிதப் போக்குவரத்தில், வெறும் வார்த்தைகளில் மட்டுமே நம்பிக்கையை வளர்த்தார். அறிவிப்புகள், மக்களைச் சென்றடைய முடியாத நிலை. ராணுவ முகாம்களின் நெருக்கடிகள் வழக்கம்போல் தொடரவே செய்தன. இதற்கும் அப்பால் ராஜீவ் காந்தி கொலையில் பிரபாகரனும், பொட்டு அம்மானும், அகிலாவும் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களைப் பிடித்துத் தருமாறு இந்தியா அளித்த நெருக்குதல் காரணமாகவும் சந்திரிகா காலம் தாழ்த்தும் உத்திகளில் இறங்கியதாகவும், விமர்சனங்கள் உண்டு. ஆறு மாதங்கள் உருண்டோடின.

163: மூன்றாவது ஈழப் போர்!

"மூன்றாவது ஈழப் போர்' என்று சொல்லப்படும் யுத்தம் திருகோணமலை துறைமுகத்தில் நின்றிருந்த போர்க் கப்பலை கடற்புலிகள் வெடி வைத்துத் தகர்த்ததில் ஆரம்பமாயிற்று. கடற்புலிகளின், தற்கொலைப் படையினர் ஏராளமான வெடி பொருள்களுடன் படகில் சென்று, போர்க் கப்பல் மீது மோதி, அதை அழித்தார்கள். இந்தக் கப்பல் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாகும். அடுத்து இன்னொரு கப்பல் 21 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டதாகும். அந்தக் கப்பலும் தகர்க்கப்பட்டது.

இந்தத் தாக்குதலில் அதிர்ந்த சந்திரிகா, பலாலியில் படைகளைக் குவித்தார். வான் வழியாகவும், கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் தாக்குதல் ஆரம்பமாயிற்று. யாழ்ப்பாணத்தை நோக்கி சிங்களப் படைகள் முன்னேறின.

அமைதிப் பேச்சுக்கு எதிரானவர்கள் புலிகள் என்ற பிரசாரத்தை சந்திரிகாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் தீவிரமாக முடுக்கிவிட்டார். கொழும்பில் இருந்த பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரை அழைத்து, அமைதிப் பேச்சு வார்த்தைக்காக சந்திரிகா உழைத்ததாகக் கூறினார்.

எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர்- என்று சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில், யாழ் மக்கள் மீது விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் பதுங்கு குழியை நோக்கி ஓடினர். "முன்னேறிய பாய்ச்சல்' என்ற பெயரை வைத்துக் கொண்டு சிங்களப் படை முன்னேறியபோது, "புலிப் பாய்ச்சல்' என்று புலிகள் தங்களது எதிர்த் தாக்குதலை தீவிரமாக்கினர். புலிகளைத் தாக்குவதாகக் கூறிக் கொண்டு, அப்பாவி மக்களைத் தாக்குகிறார்கள் என்று புலிகள் குற்றம் சாட்டுவதற்கு முன்பாகவே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது குற்றச்சாட்டைப் பதிவு செய்தது.

ஆனால், லட்சுமண் கதிர்காமர் சொன்னதுதான் உலக அரங்கில் எடுபட்டது. பதிலுக்கு, புலிகள் வெளி உலகத் தொடர்பு கொள்ள முடியாதவாறு யாழ்ப்பாணத்தில், அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களையும் அரசு துண்டித்துவிட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்த பத்திரிகையாளர்கள், தங்களது உண்மைத் தகவல்களை கொழும்பில் உள்ள தலைமைக்குக்கூடத் தெரிவிக்க முடியவில்லை.

எனவே, பேச்சுவார்த்தை தோல்வியுற்றதற்குக் காரணம் என்ன என்று சில கடிதப் போக்குவரத்துகள் புலிகள் தரப்பில் வெளியிடப்பட்டன. அதன்மூலம் பேச்சுவார்த்தைக்குள்ளும் நடந்த அவர்களது போராட்டம் வெளியே தெரியவந்தது.

பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்களும் இனப் பிரச்னைகளை அறிந்தவர்கள் அல்ல; அரசு அதிகாரி, ஒரு வழக்கறிஞர், ஒரு கட்டடக் கலைப் பொறியாளர் உள்ளிட்டவர்களை அனுப்பி ஒரு சாதாரணப் பேச்சுவார்த்தையாக்கவே சந்திரிகா விரும்பினார். வேறு வழியின்றி புலிகளும் இவர்களுடன் பேச நேர்ந்தது. இவர்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. அதிபரிடம் தெரிவிக்கிறோம், கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம் என்று மட்டுமே இவர்களால் கூற முடிந்தது.

ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்கும் முன்பும் அரசின் அல்லது ராணுவத்தின் நடவடிக்கைகளால் எழுந்த சிக்கல் குறித்துப் பேசுவதும், சென்ற கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுகளில் அரசு கருத்து என்னவாயிற்று- முடிவு என்னவாயிற்று என்பது குறித்துப் பேச முடியாமலும் திட்டமிட்டு திசை திருப்பப்பட்டது.

பெரும்பாலான கடிதங்களில், சந்திரிகாவும் அரசு அதிகாரிகளும் வார்த்தைகளில் இனிப்பை சேர்த்திருந்தனர். அறிவிப்புகளை வெளிப்படுத்தினர். ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று கெடு விதித்தால், செப்டம்பர் 2-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கூறியதைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தனர்.

சந்திரிகா என்ன நினைக்கிறார் என்பது அதிகாரிகளுக்குப் புரியாது. அதிகாரிகள் செய்வது சந்திரிகாவுக்குப் போவதில்லை. சந்திரிகாவின் பேச்சுவார்த்தை முயற்சிகள் சிங்கள ராணுவத்துக்குப் பிடிக்கவில்லை என்பதால், அவர்கள் போர் நிறுத்தத்தை மீறி- தாக்குதலையும், நெருக்குதலையும் அளித்துக் கொண்டே இருந்தார்கள் என்றெல்லாம் புலிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

"யாழ்குடாவுக்கும் வன்னிப் பகுதிக்கும் இடையே போக்குவரத்துக்குத் தடையாக உள்ள முகாமையும், பொருள் போக்குவரத்துக்கு தடையாக உள்ள தாண்டிக்குளம் சோதனைச் சாவடியையும் நீக்க ஒவ்வொரு கடிதத்திலும் வலியுறுத்தியும், எங்களது முயற்சி வெற்றி பெறவில்லை. தாண்டிக்குளம் சோதனைச் சாவடியின் அட்டகாசத்தால், பொருள்கள் கொண்டுவர முடியாமல், படகுகளில் கொண்டு வந்து, அல்லது ரகசியமாக எடுத்து வந்து, பொருள்களை யாழ் பகுதியில் விற்கும்போது, அவற்றின் விலை பன்மடங்கு உயர்கிறது என்று சொல்லியும் சோதனைச் சாவடியை நீக்க சந்திரிகா விரும்பவில்லை.

கடும் நெருக்குதல் கொடுத்து, சந்திரிகா பொருளாதாரத் தடையை நீக்கினாலும், இந்த சோதனைச் சாவடி, ராணுவம் வசம் இருந்ததால், அங்கே ராணுவம் விதிப்பதுதான் உத்தரவு. இவை எதுவும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

அதேபோன்று, சிங்கள ராணுவம், பூநகரி முகாமை அப்புறப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆனையிறவு முகாம்களும் சேர்ந்து, யாழ் குடாவை வளையமிட்டன. வன்னிப் பகுதியை அடைய வேண்டுமானால் யாழ் மக்கள் கிளாலி கடல் வழியாக, படகுகளில் செல்ல நேர்கையில், கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகி, பலர் மடியும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே சங்குபிட்டி வழியைத் திறக்கவும், பூநகரி முகாமை அகற்றவும் புலிகள் கோரினர்.

அரசு உண்மையிலேயே அமைதித் தீர்வுகளை விரும்பினால், யாழ் மக்களின் போக்குவரத்தைச் சுலபமாக்க வேண்டும். ஆனால், அரசு இக் கோரிக்கையை ஏற்கவில்லை' என்றும் பாலசிங்கம் தனது "வார் அண்ட் பீஸ்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம்பெறும் வெளிநாட்டுப் பிரதிநிதியே, இந்தக் குழுவின் தலைவராக இருப்பார் என்று முடிவு எடுத்த பின், விடுதலைப் புலிகள் தலைவரைச் சந்திக்கக்கூட அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எவ்வளவு இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு காலம் தாழ்த்தப்பட்டது. ஓயாத கடித வரைவு மூலம் இக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது என்றும் பாலசிங்கம் கூறியுள்ளார்.

அதிபர் பதவியில் அமர்ந்த நேரத்தில் அமைதியை விரும்பும் தேவதையைப் போன்று தோற்றம் காண்பித்த சந்திரிகா, உண்மையில் அந்தத் தோற்றத்துக்குப் பொருந்தாதவர் என்றும், அவரது ஆட்சியில் பைபிள் கதைகளில் வருவது போன்று கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேற்றப்பட்டதைப் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது என்றும், அவரின் யாழ்ப்பாண ஆக்கிரமிப்பின்போது இந்த அவலம் நிறைவேறியது என்றும் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.

யாழ்ப்பாணம் மீது 1995-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியன்று தாக்குதல் தொடங்கப்பட்டபோதிலும், முழு அளவிலான தாக்குதல் ஜூலையில்தான் தொடங்கியது. தாக்குதல் தீவிரமானதும், யாழ்ப்பாணவாசிகள் வழக்கமாக பதுங்கு குழிகளில்தான் பதுங்குவார்கள். ஆனால், தற்போது பெரும்பாலானோர் அத்தியாவசியப் பொருள்களை எடுத்துக்கொண்டு சாவகச்சேரியை நோக்கி, நகர்ந்தனர்.

ஓரிரவில் எடுத்த முடிவாக ஊரையே காலி செய்துகொண்டு போவது போன்று அவர்கள் சென்றனர். அதேபோன்று, புலிகளும் யாழ்ப்பாணத்திலிருந்து பின்வாங்கி, கிளிநொச்சிக்குச் சென்றனர். அவ்வப்போது புலிகளின் கொரில்லாக்கள் தாக்குதலைத் தொடுத்தவண்ணம் இருந்தனர்.

புலிகளின் தாக்குதலின்றியே யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.

தமிழகத்தில் 1996-ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலுக்கான நேரம் நெருங்கி வந்தபோது, கருத்து வேறுபாடு காரணமாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே. மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற அமைப்பினைக் கண்டார். மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை உடன்பாடு கண்டு தேர்தலைச் சந்தித்தன. தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 173 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி மீண்டும் நான்காவது முறையாக முதல்வரானார். அதேபோன்று, இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றிவாய்ப்பை இழந்து, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஐக்கிய முன்னணி 332 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பிரதமராக தேவ கௌடா பொறுப்பேற்றார்.

164: கிளிநொச்சி மீட்பு !

யாழ்ப்பாணத் தாக்குதலுக் குப் ப தி ல டி யாக கொழும் பி ன் மையப் பகு தி யி ல் அமைந்துள்ள சென்ட்ரல் வங் கி யி ல், பு லி கள் அ தி ர டி த் தாக்குதல் நடத் தி ன ôர்கள் ( 31- 1- 1996). இந்தத் தாக்குதலி ல் நூற்றுக்கும் மேற்பட் டவர்கள் இற ந்தன ர். 1400 பேருக்கு மேல் படுகாயமுற்றன ர். அடுத்த தாக்குதலி ல் கொழும் பி ன் தெற்குப் பகு தி யி ல் உள்ள " தெ கி வளை' என்ற இடத் தி ல் உள்ள ர யி ல் நி லையத் தி ல் வைக்கப்பட்ட குண் டி ன் மூலம் 70 பேர் உ யி ர்துற ந்தன ர் ( 24- 7- 1996). நூற்றுக்கணக்கானே ôர் படுகாயமடைந்தன ர்.

இ ன்னெ ôரு உச்சகட்டத் தாக்குத லாக முல்லைத் தீ வு தாக்குதல் அமைந்தது. முல்லைத் தீ வி ல் பத்தா யி ரம் அ டி நீ ள மும், ஐயா யி ரம் அ டி அகலமும் கொண்ட பகு தி யை ஆக் கி ர மி த்து சி ங்கள ராணுவ முகாம் இருந்தது. இந்த முகா மி ல் துருப் பு கள் மட்டுமன் றி ஏராள மான ஆயு தங்களும், கன ரக ஆயுதங்களும் கு வி த்துவைக்கப்பட் டி ருந்தன. என வே, இந்த முகாமைத் தகர்ப் பதும், அ தி லுள்ள ஆயுதங்கள் அனை த்தையும் சேதாரம் இல்லா மல் கைப்பற்றுவது என்பதும் பி ர பாகர னி ன் தி ட்டமாக இருந்தது. கடலி ல் கடற் பு லி கள் தாக்குவது என்றும், கரை யி ல் போரா ளி கள் தாக்குவது என்றும் மு டி வா யி ற்று. 1996- ஆம் ஆண்டு ஜ þலை 18- ஆம் நாள் அ தி காலை ஒரு ம ணி யள வி ல் தாக்குதல் தொடங் கி யது. வி ழி த் தெழுந்த சி ங்கள ராணுவத் தி ன ர் எ தி ர்த்தாக்குதல் தொடுத்தும் பய ன ற்றுப் போன து. இறு தி யி ல் முல் லைத் தீ வு, ராணுவ முகாம் பு லி கள் வசமா யி ற்று. முல்லைத் தீ வைக் காப்பாற் றி க் கொள்ளும் முயற் சி யாக சி ங்கள ராணுவம் அலம் பி ல் வ ழி யாக, போர் நடந்த இடத் தி ற்கு அப்பா லுள்ள ஓர் இடத் தி ல் ஏராள மான துருப் பு களை க் கொண்டுவந்து இற க் கி யது. இதனை யூ கி த்து உணர்ந் தி ருந்த பு லி கள் அவர்களை வரும் வ ழி யி லேயே மடக் கி அ ழி த் தன ர்.

ஆறு நாள்கள் நீ டி த்த " தி ரி வி டப கர' என்னும் இந்த யுத்தத் தி ல், ஆ யி ரக்கணக்கான ராணுவ வீரர்கள் உ யி ரி ழந்தன ர். கும்பல் கும்பலாக இற ந்த சி ங்கள வீரர்க ளி ன் உடல்க ளை ப் பெற, சந் தி ரி கா அரசு மறுத் தது. இற ந்துபோன வீரர்க ளி ன் உடல்களை ஏற்றுக்கொண்டால், அது தோல் வி யை ஒப் பு க்கொண்ட தாக அமைந்து வி டும் என்று கரு தி ய ராணுவம், இற ந்துபோன வீரர் கள், சி ங்கள வீரர்கள ல்ல என்று அ றி வி த்தது. உ யி ரற்ற 1200 உடல்க ளி ல் 55 உடல்களை மட்டும் செஞ் சி லு வைச் சங்கம் மூலமாகப் பெற்றுக் கொண்டது. எஞ் சி யி ருந்த உடல் களை செஞ் சி லுவைச் சங்கத் தி ன ர் முன் னி லை யி ல் பு லி களும், வன் னி ப்பகு தி மக்களும் கும்பல் கும்ப லாகத் தீ யி ட்டன ர்.

இந்தத் தாக்குதலுக்குப் பு லி கள் வைத்த பெயர் " ஓயாத அலைகள்- 1' என்பதாகும். இத் தாக்குதலி ல் இல குரக ஆயுதங்கள் மட்டுமன் றி , கன ரக ஆயுதங்கள ôன போஃ பர்ஸ் வகை பீரங் கி கள் இரண்டும் கைப் பற்ற ப்பட்டன. இது த வி ர முகாம்க ளி ல் கு வி க்கப்பட் டி ருந்த கோ டி க்க ணக்கான ரூபாய் ம தி ப் பி லான ஆயுதங்களும் கைப்பற்ற ப்பட்டன. இ ந் தி யா வி ல் ஐக் கி ய முன்ன ணி அர சி ல் வெ ளி யுற வுத்துறை அமைச்சராக இருந்த ஐ. கே. குஜ் ரால் அண்டை நாடுகளுடன ôன உற வு கு றி த்து ஐந்து அம்சக் கொள் கைகள் ஒன்றை அ றி வி த்தார்.

அவை: ( 1) அண்டை நாடுகள ôன பங்கள ôதேஷ், பூட்டான், மாலத் தீ வு, நேபாள ம் மற்றும் ஸ்ரீலங்கா ஆ கி யவற் றி ன் பி ரச்னை க ளி ல் எ தி ர்பார்ப் பு எதுவு மி ன் றி உதவு வது, ( 2) ஒரு நாட் டி ன் எல்லைக ளுக்கும் இறை யாண்மைக்கும் பங் கம் நேராமல்- ம தி த்து நடப்பது, ( 3) ஒரு நாட் டி ன் உள்நாட்டுப் பி ரச் னை க ளி ல் இன்னெ ôரு நாடு தலை யி டாமல் இருப்பது, ( 4) அண்டை நாடுக ளி ன் தேசப் பாதுகாப் பு க்கும் இறை யாண்மைக்கும்- ஒருமைப் பாட்டுக்கும் பங்கம் நேராமல் பார்த்துக்கொள்வது, ( 5) அண்டை நாடுகள் தங்களுக்குள் ஏற்படும் பி ரச்னை களை இருதரப் பி ன ரும் பே சி த் தீ ர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

இது நடைமுறை சாத் தி யமா என்பது கு றி த்து அப்போது பலத்த வி வாதங்கள் எழுந்தன. பா கி ஸ் தான், பங்கள ôதேஷ் உள் ளி ட்ட நாடுகளுடன் இந் தி யா எந்த முறை யி ல் நடந்து கொள்ளும் என்ற கேள் வி களும் எழுந்தன. ஆன ô லும், இந் தி ய வெ ளி யுற வுத் துறை அமைச்ச ரி ன் இந்தக் கொள்கை அ றி வி ப்பால் ம கி ழ்ந்த நாடுக ளி ல் முக் கி யமான து இலங்கை ஆகும்.

ஆமாம், இந்தக் கொள்கை யி ல் இலங்கை யி ன் இன ப் பி ரச்னை யி ல் இந் தி யத் தலையீடு இருக்காது என்று சந் தி ரி கா உறு தி யாக நம் பி ன ôர். என வே தன்போக் கி ல் அவர் செயல்பட ஆரம் பி த்தார்.

சந் தி ரி கா அரசு முல்லைத் தீ வை இழந்ததை மாபெரும் அவமான மாகக் கரு தி யது. இதற்குப் ப தி ல டி கொடுத்தே ஆகவேண்டும் என்றும் தி ட்டங்கள் தீ ட்டப்பட்டன. " சத் ஜெ ய' என்ற பெய ரி ல் சி ங்கள ராணுவம் முப்படைகளும் இணைந்த தாக்குதல் ஒன்றை கி ளி நொச் சி மீது தொடுத்தது. கி ளி நொச் சி யைக் கைப்பற் றி ய ராணு வம் சுற் றி யி ருந்த இதர பகு தி களை யும் கைப்பற்றும் முயற் சி யி ல் 30 ஆ யி ரம் வீரர்களுடன் கள ம் இற ங் கி , " ஜெ ய சி க்குறு' என் கி ற பெய ரி ல் 13- 5- 1997- இல் போ ரி ல் ஈடுபட்டது. 1998- ஆம் ஆண்டு ஜன வ ரி 25- ஆம் தே தி , கண் டி யி ல் உள்ள பு த்த ரி ன் பல் வைக்கப்பட்டுள்ள தாகக் கூற ப்படும் பு கழ்பெற்ற பு த்தக் கோ வி லான " தலதா மா ளி கை' மீது வி டுதலைப் பு லி கள் தாக்குதல் நடத் தி ன ர். இ தி ல் 17 பேர் கொல் லப்பட்டன ர்.

கி ளி நொச் சி யை மீட்பதற்காக, பி ரபாகரன் பி ப்ரவ ரி 2- ஆம் தே தி போரைத் தொடங் கி ன ர். உடன டி வெற் றி சாத் தி யப்பட வி ல்லை. என வே, கைப்பற்றும் முயற் சி கள் தொடர்ந்தன. ஒவ்வொரு ஊராகக் கைப்பற் றி ய பு லி கள் தி லீப னி ன் ப தி னே ôராம் ஆண்டு நி னை வு நாள ôன செப்டம்பர் 26- ஆம் தே தி மி கப் பெ ரி ய தாக்குதலைத் தொடுத்தன ர்.

இந்தத் தாக்குதலி ல் ராணுவத் தரப் பி ல் ஆ யி ரத்துக்கும் மேற் பட்ட வீரர்கள் பலி யான ôர்கள்.

இறு தி யி ல் கி ளி நொச் சி மீண்டும் பு லி கள் வசமான து. இத் தாக்குத லுக்குப் பு லி கள் " ஓயாத அலைகள்- 2' என்று பெயர் வைத் தி ருந்தன ர்.

1998- இல் சந் தி ரி கா, வி டுதலைப் பு லி கள் இயக்கத்துக்கு மீண்டும் தடை வி தி த்தார்.

ரா ஜீவ் காந் தி கொலை தொடர் பான வி சாரணைகளுக்காக 5- 5- 1993- இல் பூந்தமல்லி யி ல் அமைக் கப்பட்ட த னி நீ தி மன்ற ம் 1997- இல் வி சாரணையை மு டி த்தது. 1998- ஆம் ஆண்டு ஜன வ ரி 28- ஆம் தே தி , இந்த வழக் கி ல் தீ ர்ப்ப ளி க்கப்பட் டது. குற்ற ம் சாட்டப்பட்டவர்க ளி ல் ந ளி னி - முருகன் தம்ப தி உள் ளி ட்ட 26 பேருக்குத் தூக்குத் தண் டனை யும் அவர்கள் சாகும்வரை தூக் கி ல் தொங்க வி டப்படவேண் டும் என்றும் த னி நீ தி மன்ற த் தி ன் நீ தி ப தி வி . நவ நீ தம் தீ ர்ப்ப ளி த்தார்.

குற்ற வா ளி கள் சார் பி ல் உச்ச நீ தி மன்ற த் தி ல் மனு ( 16- 2- 1998) செய் யப்பட்ட தி ல், ந ளி னி , முருகன், சாந் தன், பேர றி வாள ன் ஆ கி யோ ரி ன் தண்டனை உறு தி செய்யப்பட் டது. ( 11- 5- 1999) ராபர்ட் ஜெ யகு மார், ர வி ச்சந் தி ரன் ஆ கி யோ ரி ன் தூக்குத் தண்டனை ஆயுள் தண்ட னை யாக்கப்பட்டது. மீதமுள்ள 19 பேர் வி டுதலை செய்யப்பட்டன ர்.

" ஓ யாத அலைகள்- 3' என்பது மாங் குள ம் பகு தி களை மீட்பது ஆகும்.

இந்தப் பகு தி யாழ்- கண் டி நெடுஞ் சாலையான " ஏ- 9'- க்கு கி ழக்கே உள்ள ஒட்டுசுட்டான் பகு தி யா கும். இந்தப் பகு தி யை மீண்டும் கைப்பற்றும் வகை யி ல் பு லி கள் இருகட்டத் தாக்குதலை மேற் கொண்டன ர். 1999- ஆம் ஆண்டு நவம்பர் 1, 5, மற்றும் 7- ஆம் தே தி க ளி ல் நடைபெறற தாக்குதல்க ளி ல் ஒட்டுசுட்டான் பகு தி யி ல் அடங் கி ய நெடுங்கே ணி , அம்பகாமம், க ரி ப்பட்டமு றி ப் பு , மாங்குள ம், கரையான்குள ம், பு ளி யங்குள ம் ஊர்களை யும் பு லி கள் கைப்பற் றி ன ர்.

இரண்டாம் கட்டமாக, மன் ன ôர் பகு தி யி ல், ராணுவம் கைப்பற் றி யி ருந்த பள்ள மடு, பெ ரி யமடு, தட்சணா மருதமடு, மடுத்தேவால யப் பகு தி கள் கைப்பற்ற ப்பட்டன. சி ங்கள ராணுவத் தி ன் தோல் வி களை வெ ளி யி ட பத் தி ரி கைகளுக் குத் தடை வி தி க்கப்பட்டது. கடும் த ணி க்கை வி தி களும் அமல்படுத் தப்பட்டன. 1999- ஆம் ஆண்டு டி சம்பர் மாதம், சந் தி ரி கா மீது நடத்தப் பட்ட தாக்குதலி ல், அவர் கண் ணி ல் காயத்துடன் உ யி ர்தப் பி ன ôர். அதன் பி ற கு நடைபெற்ற அ தி பர் தேர்தலி ல் வென்று, மீண் டும் அ தி பராகப் பொறுப்பேற்ற ôர் ( 22- 12- 1999).

165: ஆனையிறவு புலிகள் வசம்!

புத்தாயிரம்-2000-ஆவது ஆண்டில், ஜனவரி 5-ஆம் தேதி, தமிழீழத் தலைவர்களில் ஒருவரான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் குமாரர், குமார் பொன்னம்பலம் கொலையுண்டார். வழக்கறிஞரான இவர், சிங்கள ராணுவம், அதிரடிப்படை, போலீஸ் ஆகியவற்றின் கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்.

செம்மணி புதைகுழி போன்ற அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதாலும், ஐ.நா. மனித உரிமைக் கமிஷன், ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு நேரடியாகச் சென்று புகார்களை அளித்ததாலும் இலங்கை அதிபர்களின் கோபத்துக்கு ஆளானவர். இறுதியாக, 29-12-1999 அன்று தேர்தல் வெற்றிவிழா கூட்டத்தில் அதிபர் சந்திரிகா பேசிய பேச்சில் பயங்கரவாதத்தை அகற்றுவதுதான் தனது பணி என்று குறிப்பிட்ட அவர், குமார் பொன்னம்பலத்துக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து குமார் பொன்னம்பலம் வெளிப்படையான கடிதம் ஒன்றை சந்திரிகாவுக்கு எழுதினார். அந்தக் கடிதத்தில், "விடுதலைப் புலிகளின் அரசியல் தத்துவத்தை அப்படியே ஏற்றுக்கொண்டவன் என்கிற முறையிலும் அந்த ஆழமான நம்பிக்கையுடன் தெற்குப் பகுதியில் வாழ்பவன் என்கிற முறையிலும் இக்கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத் தீவில் மட்டுமல்ல; இத் தீவுக்கு வெளியேயும் இந்தக் கருத்தை எழுத்திலும், பேச்சிலும் பகிரங்கமாக வற்புறுத்த விரும்புகிறேன். உங்களுடைய பேச்சில் என்னை எச்சரித்து இருக்கிறீர்கள். உங்கள் பேச்சு நெடுகிலும் வெளிப்பட்ட அப்பட்டமான மிரட்டல்களைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாதவன் என்கிற முறையிலும் இக்கடிதத்தை எழுதுகிறேன்' என்று குறிப்பிட்ட அவர்,

"டிசம்பர் 19-ஆம் தேதி இரவு வரலாற்றில் மறக்கமுடியாத இரவாகும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருளின் கரங்கள் படிந்த இரவாகவும் வர்ணித்து இருக்கிறீர்கள். குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள். தமிழீழப் பகுதியில் ஆயிரக்கணக்கான விதவைகள், சொந்த வாழ்வில் எத்தனையோ இரவுகள் இருள்பிடித்த இரவுகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த நாட்டின் ராணுவத்தின் தலைமைத் தளபதி என்கிற முறையில் உங்களுடைய இருள்படிந்த கரங்களினால் அவர்கள் வாழ்வை இழந்தார்கள் என்பதையும் நீங்கள் என்றாவது உணர்வீர்கள்' என்றும் உறுதிப்படக் கூறியிருந்தார். தொடர்ந்து அக்கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது, "விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டப்போவதாக உறுமியிருக்கிறீர்கள். உங்களால் முடியுமானால் செய்து பாருங்கள். அத்தகைய முயற்சி நடைபெறுமானால் இந்தத் தீவில் காலாகாலத்திற்கும் அமைதி என்பதே இல்லாமல் போகும் என எச்சரிக்கிறேன்- இந்தத் தீவில் பயங்கரவாத மரணக் கலாசாரம் பரவியது என்று சொன்னால் அதற்கு சிங்களவரே காரணமானவர்கள். 1956-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வன்முறைக் கலாசாரத்தைத் தொடங்கியவர்கள் அவர்களே. (சந்திரிகாவின் தந்தை பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்துக்கு எதிரே போராடியவர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடந்தது.) விடுதலைப் புலிகளின் அருகே நீங்கள் செல்வதற்கு முன்னால், நீங்கள் மட்டுமல்லாமல் இந்தத் தீவில் வாழும் ஒவ்வொருவரும் முதலில் இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். சிங்களவருடைய தயவில் அல்லது அவர்கள் தூக்கியெறியும் பிச்சையில் வாழ்வதற்காக நாங்கள் பிறக்கவில்லை. இந்தத் தீவின் ஒரு பகுதி நியாயமாக எங்களுக்கு உரியது. அதைப் போல மற்றொரு பகுதி நியாயமாக சிங்களவருக்குச் சொந்தமானது. இந்த உண்மையைச் சிங்களவர் ஏற்கவேண்டும். தமிழர்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதையும், தங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும், அந்த உரிமையை எந்தக் காரணத்தைக்கொண்டும் அந்நியப்படுத்த முடியாது என்பதையும், அது அவர்களின் பிறப்புரிமை என்பதையும், அந்த உரிமையை நிலைநாட்டுவதற்குண்டான அறிவுக்கூர்மை தங்களுக்கு உண்டு என்பதையும், தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்யவேண்டும் என்பதையும் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள்' என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் பத்திரிகைகளில் வெளிவந்த நான்கே நாளில், அதாவது ஜனவரி 5-ஆம் தேதி குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்கு சந்திரிகாவின் ஆள்களே காரணம் என்று அப்போது கூறப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ""நேர்மைத் திறமையுடன் அபாரமான துணிச்சலுடன் அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. குமார் பொன்னம்பலத்தின் இனப்பற்றுக்கும், விடுதலை உணர்வுக்கும் மதிப்பளித்து அவரைக் கெüரவிக்கும் விதமாக "மாமனிதர்' என்ற விருதை வழங்குவதாக'' அறிவித்தார்.

புலிகளின் தாக்குதல் மற்றும் மீட்பு சரித்திரத்தில் ஆனையிறவுப் போர் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மிகப் பெரும் பரப்பளவில், ஏராளமான ஆயுதங்களுடன், கனரக ஆயுதங்கள் உள்பட, குவிக்கப்பட்டு, 20 ஆயிரம் வீரர்களைக் கொண்ட பல்வேறு முகாம்களை உள்ளடக்கியது. அந்த முகாமைத் தகர்ப்பது யாழ்ப்பாணத்துடன் இதரப் பகுதிகளை இணைப்பதற்கான முயற்சியாகும். இத் தாக்குதல் தொடங்கப்பட்டால் எதிரி தலையெடுக்க முடியாதபடி, ஒரேயடியில் வீழ்த்துவது என்ற சூத்திரப்படி, அதிக நாள்கள் பிடிக்காமல், பலத்தத் தாக்குதலில் வீழ்த்த வேண்டும் என்றும் புலிகள் தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டப்படி பலமுனைகளில் தாக்குதல் தொடுக்கப்பட்ட 48 மணி நேரத்தில் ஆனையிறவு தளம் புலிகளின் வசமாயிற்று. 20 ஆயிரம் வீரர்களுடன் 4 ஆயிரம் புலிப் போராளிகள் மோதி வென்றனர். ஆயிரக்கணக்கில் சிங்கள வீரர்கள் இப் போரில் மடிந்தனர். சந்திரிகாவின் கடும் தணிக்கைக்குப் பிறகும் வெளிவந்த செய்திகள் மூலம் சிங்கள ராணுவத்துக்குப் பேரிழப்பு ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரியவந்தது. மூடி மறைக்கப் பார்த்தும் முடியவில்லை. வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ஆனையிறவுப் போர்க்காட்சிகளும், மீட்புச் செய்தியும், தென்மராட்சி, வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதிகளையும் மீட்ட செய்திகளும் அடுத்தடுத்து வெளிவந்தன. சிங்கள ராணுவத்துக்கு மிகப் பெரும் இழப்பு என்பது உறுதியாயிற்று. இதனைத் தொடர்ந்து சிங்கள ராணுவத்தின் வீரர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்த சலசலப்பு முல்லைத்தீவுச் சண்டையில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான வீரர்களை சிங்கள வீரர்கள் அல்ல என்று சொன்னதில் ஆரம்பமானது. ஆனையிறவு முகாம் தகர்ப்பில் உயிரிழந்த வீரர்களுக்கும் அதே நிலை நீடித்ததால், பல ஆயிரம் ராணுவ வீரர்கள், ராணுவத்தைவிட்டு ஓடினர். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் வெற்றி பெறவில்லை. விடுதலைப் புலிகள் தரப்பில் தற்கொலைப் படைப்பிரிவிலும் போட்டி போட்டுக்கொண்டு சேர்ந்து பணியாற்றும் நிலையில், சிங்கள ராணுவ வீரர்கள், பணியிலிருந்து சொல்லாமல் ஓடுவது ஏன் என்று, சந்திரிகா யோசித்தார். ஒரு முடிவாக மாவீரர் தினம் போல, "போர்வீரர்கள் தினம்' கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, 7-6-2000 அன்று தேவாலய மணிகள் ஒலிக்கும் நேரத்தில் அவரவர் இருக்குமிடத்தில் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தினார்.

போர்வீரர்கள் நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட அதே நாளில் அமைச்சர் சி.வி.குணரத்னே குண்டுவெடிப்பில் சிக்கி பலியானார். அவருடன் மேலும் 20 பேர் உயிரிழந்தனர்.

முகமலை கிளாலி பகுதியில் புலிகள் தங்களது தாக்குதலைத் தொடங்கினார்கள். இந்த அதிரடித் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மடிந்தனர். ஏராளமானோர் படுகாயமுற்றனர். இந்தத் தாக்குதல் மூலம் "ஓயாத அலைகள்-3' ஆரம்பமாகின்றது என்று புலிகள் அறிவித்தனர். புலிகளின் திருகோணமலைத் தாக்குதல் (அக்டோபர் 23) ஆரம்பமானது. இந்த அறிவிப்பு வெளியான சமயத்தில் சந்திரிகாவின் தாயார் ஸ்ரீமாவோ பிரதமர் என்ற நிலையிலும், அடுத்தப் பிரதமரும் அவரே என்ற நிலையிலும் காலமானார். மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் மகிந்த ராஜபட்ச மீன்வளத்துறை அமைச்சரானார்.

166: நார்வேயின் சமாதான முயற்சி!

"ஈழ வரலாற்றில், சமாதானப் பேச்சுவார்த்தையில் நார்வே நாடு கலந்துகொண்டது தற்செயலாக ஏற்பட்ட ஒரு திருப்பம் என்றுதான் கூறவேண்டும். அமெரிக்கா-சோவியத் நாடுகளிடையே நிழல்யுத்தம் நிலவி வந்த நிலையிலும்கூட, மேற்கத்திய நாடுகளின் பக்கமே இருந்தபோதிலும், ரஷியாவுடன் நார்வேக்கு எந்தப் பிணக்கும் இல்லை. அதேபோன்று, ஸ்வீடன், பின்லாந்து போன்ற அண்டை நாடுகளுடனும் மோதல் கிடையாது.

உலகின் எந்தப் பகுதியிலும் ராணுவத்துறையிலோ, அரசியல்துறையிலோ தந்திரோபாய அக்கறை கொண்டிராத சிறிய நாடு. மத்திய கிழக்குத் தகராறு, பாலஸ்தீன-இஸ்ரேல் முரண்பாடு, குவாட்டமாலா பிரச்னை போன்றவற்றில் ஈடுபட்டதால் நார்வே உலகெங்கும் பேசப்படும் நாடாக மாறியது' என்கிறார் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைப் பணிகளில் ஈடுபட்ட எரிக் சோல்ஹைம் (இலங்கையில் சமாதானம் பேசுதல்-அடையாளம் வெளியீடு, பக்.436). அந்நூலில் எரிக் சோல்ஹைம் தனது நாட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில், "நார்வே ராணுவரீதியாக ஒரு வல்லரசாக இல்லாவிடினும், உலகில் சமாதானச் சூழலை ஏற்படுத்த முனைந்த, செல்வாக்கைக் கொண்ட ஒரு வளமான நாடு' என்கிறார். நார்வே நாட்டின் அரசியலில் இவர் முக்கியமானவராவார். வெளிவிவகார அமைச்சகத்தில் பங்குபெற்று, அதன் ஆலோசகராக இலங்கை அலுவலகத்தில் பணிபுரிந்தவர் எரிக் சோல்ஹைம். இவரை, நார்வே அரசு, புலிகள்-இலங்கை அரசுடன் பேச்சு நடத்தும் ஒரு சமரசப் பேச்சாளராக அறிவித்தது.

இலங்கை இனப் பிரச்னையில் சுமுகத் தீர்வு காண்பதற்கான முயற்சியின் ஒரு வேலைத்திட்டமாக வன்னிப் பகுதியின் வடபகுதியிலுள்ள மல்லாவி என்கிற இடத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை 31-10-2000 அன்று சோல்ஹைம் சந்தித்தார். அவருடன் இலங்கைக்கான நார்வே தூதுவரான ஜான் வெஸ்ட்போர்க், நார்வேயின் வெளியுறவுச் செயலக நிர்வாக அதிகாரியான செல்வி ஜெர்ஸ்தி ட்ரோம்ஸ்டல் ஆகியோரும் சென்றிருந்தனர். பிரபாகரனுக்கும் இவர்களுக்குமிடையே இரண்டு மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனையின்போது, "சந்திரிகா, இனப் பிரச்னையைப் போரின் மூலமே தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளவர். பொதுவாக சமாதானப் பேச்சு போர்ச்சூழலில் நடைபெற முடியாது. அங்கு அமைதி நிலவ வேண்டும். போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும். விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை நீக்கப்படவேண்டும். பொருள்கள் தாராளமாகக் கிடைக்கப் பெறவேண்டும். இதன் பின்னணியில் அமைகிற பேச்சே வெற்றி பெறும். இருந்தாலும் புலிகள் சமாதானப் பேச்சில் ஈடுபடத் தயாராக இருக்கிறார்கள்-நான் தயாராக இருக்கிறேன்' என்று பிரபாகரன் தெரிவித்தார்.

நன்றி கூறி விடைபெற்ற நார்வே குழு, நேரடியாகக் கொழும்பு சென்றது. அதிபர் சந்திரிகாவிடம் பிரபாகரன் கூறியதைத் தெரிவித்தனர். அவரோ, பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்த நிலையிலும், போர் நிறுத்தம் அறிவிக்க முடியாது என்றும், போருக்கிடையே பேசலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.

இருப்பினும் நார்வே தூதர்கள் தங்களது முயற்சிகளில் இருந்து பின்வாங்காமல், பிரபாகரனுக்கு அந்நாட்டின் வெளிவிவகாரத்துக்கான துணையமைச்சர் ரேமண்ட் ஜான்சன் புரிந்துணர்வு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

அக் கடிதத்தில், "18 மாதங்களாக ஸ்ரீலங்காவின் அதிபர் சந்திரிகா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரிடமும், புலிகளின் பேச்சாளரான அன்டன் பாலசிங்கத்திடமும் தொடர்புகொண்டு பேசியதில், பேச்சுவார்த்தைக்கு இணக்கம் காட்டப்பட்டதற்கு நன்றி தெரிவித்ததுடன், மிகுந்த கவனத்துடன் மனிதநேயத்துக்கான புரிந்துணர்வு திட்டம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக' குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் சில திட்டங்களுக்கான குறிப்புகளும் இணைக்கப்பட்டிருந்தன. அதில் பேச்சுவார்த்தைக்கான இணக்கமான சூழலை உருவாக்கும் யோசனைகள் இருதரப்பும் ஏற்கும் விதமாக பொதுவாகக் கூறப்பட்டிருந்தன.

அதில், வன்னிப் பகுதியில் ஆயுதக் குவிப்பு கூடாது என்றும், மக்களின் அன்றாடத் தேவைகளுக்குண்டான பொருள்கள் தாராளமாகக் கிடைக்க அரசு வழிசெய்ய வேண்டும் என்றும், ஏ-9 தேசிய நெடுஞ்சாலையில் மேலும் ஒரு செக் பாய்ண்டில் பொருள்கள் வந்து இறங்க வழி செய்யவேண்டும் என்றும், இவ்வாறு பொருள்கள் குவிக்கும்போதும், விநியோகிக்கும்போதும் புலிகள் ஆயுதப் பிரயோகம் செய்யலாகாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புலிகள் தரப்பில் வே.பிரபாகரன் 27, நவம்பர் 2000 அன்று தான் ஆற்றிய மாவீரர் தின உரையில், "நார்வே நாட்டின் புரிந்துணர்வை ஏற்பதாகவும், இந்த விஷயத்தில் ஸ்ரீலங்கா அரசின் எண்ணங்களுக்கேற்ப எங்களது செயலும் இருக்கும்' என்றும் கூறியிருந்தார்.

சந்திரிகா இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால், பிரதமரும் ராணுவத் தளபதியும் வெவ்வேறு குரல்களில் பேசி, பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்று கருத்து தெரிவித்தனர். ஆனால், பிரபாகரன் சமாதானப் பேச்சில் ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறி, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு, ஒரு மாதம் போர்நிறுத்தம் செய்வதாகவும் டிசம்பர் 24-ஆம் தேதி அறிவித்தார். சந்திரிகா, அப்போதும் எதுவும் பேசவில்லை. மாறாக சிங்கள ராணுவம் வழக்கம்போல் ஆங்காங்கு சிறுசிறு தாக்குதல்களை நடத்திக்கொண்டே இருந்தது. இந்த வகையான எரிச்சல் மூட்டும் நடவடிக்கைகளை பிரபாகரன் சகித்துக்கொண்டதுடன், மேலும் 3 மாதம் போர்நிறுத்தம் என்றார் (வார் அண்ட் பீஸ்-அன்டன் பாலசிங்கம், பக்.344).

பிரபாகரனின் போர்நிறுத்த அறிவிப்புகளை அதிபரின் செயலகம் முற்றிலுமாக நிராகரித்து, போருக்கு இடையேதான் பேச்சு என்பதைத் தெரிவித்தது. போர்நிறுத்தம் முடிந்ததும் பிரபாகரன் 24, ஏப்ரல் 2001 அன்று ஓர் அறிக்கையினை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், "போர்நிறுத்தம் அறிவித்த நான்கு மாதங்களில் 160 போராளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 400 பேருக்கு மேற்பட்டவர்கள் படுகாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். முல்லைத்தீவு, திருகோணமலையில் மக்கள் வாழும் பகுதிகளில், தொடர்ந்து வான்வழியாக குண்டுவீச்சு நடத்தப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் பெருமளவில் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. சிங்கள ராணுவத்தின் இந்தச் செயல் எங்களை, எங்களது போராளிகளை உசுப்பிவிடத் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்தக் காலத்தில் சிங்களக் கடற்படை, வான்படைகளுக்கு ஏராளமான அளவில் ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையிலும் நார்வே நாட்டின் சமாதான முயற்சிகளை மதிக்கும் வகையில் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். ஒத்துழைப்பு கொடுப்போம். அதே வேளையில், எங்களது போர்நிறுத்தத்தை இதற்கு மேலும் நீட்டிப்பது எவ்வாறு?' என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதே நாளில் (ஏப்ரல் 24) சிங்கள ராணுவம் "அக்னி ஜ்வாலா' என்ற பெயரில் ஆனையிறவுப் பகுதியில் முப்படைகளைக் கொண்டும் தாக்குதலைத் தொடுத்தது. ஆனையிறவுத் தளத்தை மீண்டும் கைப்பற்றுவது இத் தாக்குதலின் நோக்கமாக இருந்தது. சிங்கள ராணுவத்தின் 52, 53 மற்றும் 55-வது படைப் பிரிவுகளில் உள்ள 12 ஆயிரம் துருப்புகள் ஒருசேரத் தாக்கின.

இந்த நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குபவராக பாதுகாப்புத்துறை அமைச்சர் அநுருத்த ரத்தவத்தே பலாலி விமானதளத்தில் வந்து தங்கியிருந்தார். எதிர்பார்த்த எதிர்த் தாக்குதல் இல்லை. ராணுவத்தினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தனர். ராணுவத்தினரை முன்னேறவிட்டு, திடும்மென புலிகள் ராணுவத்தினரைத் தாக்கினர்.

எதிர்பாராத இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் திகைப்புற்று, சிதைந்து ஓடினர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திறங்கிய கடற்படையினர் மீதும் சரமாரித் தாக்குதல் நடத்தப்பட்டது. "அக்னி ஜ்வாலை' அணைந்து போனது என்று குறிப்பிட்ட பாலசிங்கம், 600 வீரர்களை இழந்து, 2 ஆயிரம் பேர் படுகாயமுற்று ஓடியதாகவும் தனது நூலான வார் அண்ட் பீஸில் (பக்.349) குறிப்பிட்டுள்ளார்.

167: ரணில் பிரதமரானார்!

புலிகளிடம் இழந்த ஆனையிறவை மீண்டும் கைப்பற்றி விடுவோம் என்ற நினைப்பில், பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்தவத்தே கொழும்பிலிருந்து ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை விமானத்தில் கூட்டி வந்திருந்தார். அவர்களனைவரும் பலாலி விமானதளத்தில் உள்ள ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

உயிரிழந்த, காயம்பட்ட, கண்ணிவெடியில் கால்களை இழந்தவர்களை நூற்றுக்கணக்கில் கொண்டு செல்ல, பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு அவை பயன்படுத்தப்பட்டன. போதாக்குறைக்கு கொழும்பிலிருந்து மேலும் விமானங்கள் வரவழைக்கப்பட்டு வீரர்களை ஏற்றி அனுப்புவதைப் பத்திரிகையாளர்கள் நேரில் கண்டு திகைத்தனர். அவர்களில் பலரும் தாங்கள் எழுதிய கட்டுரைகளுக்கு இட்டிருந்த தலைப்பு: "அக்னி ஜ்வாலை நெருப்பை கக்காதது ஏன்?' என்பதாகும்.

இலங்கை ராணுவத்துக்குக் கடுமையான இழப்பு ஏற்பட்டபிறகும் சந்திரிகா, நார்வே சமரசத்தை ஏற்கவில்லை. நார்வே நாட்டுக்கு முன்பாக, வாஜ்பாய் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்று, ஜஸ்வந்த் சிங்கை கொழும்புக்கு அனுப்பி வைத்தது.

இக்காலத்தில், விடுதலைப் புலிகளின் தலைவருடனான சந்திப்புக்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்குத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா முயன்றார். சந்திக்கலாம், என்ன தகவல் வேண்டுமோ அதைப் பெற்றுத்தர முடியும்; ஆனால் பிரபாகரனிடம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடச் சொல்லக்கூடாது என்று பிரஜேஷ் மிஸ்ராவிடம் சொல்லி, அதற்கு அவர் உறுதிகொடுத்த பின்பு, அவ்வாறு கேட்கமாட்டோம் என்று பிரஜேஷ் சொன்னபிறகு பிரபாகரனிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா விதித்த தடையை நீக்கினால் நல்லது என்கிற பிரபாகரனின் விருப்பத்திற்கு, தடைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லை என்று பிர்ஜேஷ் மிஸ்ரா விளக்கமளித்தார். இந்திய சமரச முயற்சிக்கு ஒத்துக்கொண்டதைப் பிரபாகரன் 2, ஜூன் 2000-இல் பிரஜேஷ் மிஸ்ராவுக்கு தெரிவித்தபின்னர்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் கொழும்பு சென்றார். சந்திரிகாவிடம் பேசினார்.

இந்தியாவின் சமரச முயற்சிக்கு சந்திரிகா ஒத்துக்கொள்ளாததால், அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது. இந்த முயற்சிகளில் இந்திய சட்ட அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, மறவன்புலவு க.சச்சிதானந்தம், காசி.ஆனந்தன், பழ.நெடுமாறன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

அதேபோன்று இங்கிலாந்தும் சமரச முயற்சியில் ஈடுபட முயன்று, எதிர் எதிரான சிங்களக் கட்சிகளிடையே இனப் பிரச்னையில் ஒத்த கருத்தை உருவாக்க முயன்றது. இந்தத் திட்டத்துக்கும் சந்திரிகா முன்வரவில்லை.

இவ்வாறே நார்வேயின் சமரச முயற்சியையும் அவர் புறந்தள்ளிவிட முயல்வது வெளிப்படையாகத் தெரிந்தது. விடுதலைப் புலிகள் சந்திரிகாவுக்கு ஒரு பாடத்தைச் சொல்ல விரும்பினார்கள்.

"1983-ஜூலை படுகொலை நினவுநாளி'ல், ஜூலை 24, 2001 அன்று அதிகாலை, விடுதலைப் புலிகளின் அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த 14 பேர் கொழும்புக்கு வடக்கே உள்ள கட்டுநாயக்கா விமானப்படை தளத்தை முற்றுகையிட்டனர். புலிகளின் உளவுப் பிரிவு பல மாதங்களாக திரட்டிய தகவல்களின் அடிப்படையில், போராளிகள் ராணுவ வீரர்களின் சீருடையில் உள்ளே நுழைந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில், 8 விமானப்படை விமானங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. அதிர்ந்த விமானப்படை வீரர்களுக்கும் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. விமானப்படைத் தளத்தையொட்டிதான் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையமும் இருந்தது. போராளிகள் அங்கும் நுழைந்து 3 பயணிகள் விமானங்களைத் தாக்கி அழித்தனர். அதுதவிர இரு இடங்களிலும் சேர்த்து 16 சிறு போர்விமானங்களும், ஹெலிகாப்டர்களும் குண்டு வீசித் தகர்க்கப்பட்டன.

விமானங்கள் தாக்குதலுக்குள்ளானதும், அடுத்த சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கில் வீரர்கள் அங்கே குவிந்தனர். அவர்கள், 14 புலிகளையும் சுற்றிவளைத்து தாக்கிய நிலையிலும், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானங்களை அழித்த அவர்களில் சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிலர் சயனைட் குப்பி கடித்து உயிர்துறந்தனர்.

இந்தச் சம்பவம் இலங்கை மட்டுமன்றி உலகம் முழுவதும் பரவி, பரபரப்புக்குள்ளானது. இதன் உடனடித் தாக்கமாக சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொண்டு, இலங்கைப் பயணத்தை ரத்து செய்ததில் முடிந்தது. இன்னொரு விளைவாக, வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தன.

இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில், "தொடர் யுத்தம் காரணமாக, பொருளாதாரம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. வளர்ச்சித் திட்டங்களுக்குப் போகவேண்டிய நிதி, யுத்தச் செலவுகளுக்கும், ஆயுதங்களுக்குமே திருப்பிவிடப்படுகிறது' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது (வார் அண்ட் பீஸ்-அன்டன் பாலசிங்கம், பக்.352).

ஆனையிறவு மீட்பில் பலத்த அடிவாங்கிய சந்திரிகா, அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், ராணுவரீதியாகவும் கடும் நெருக்கடிக்கும், தொடர் விமர்சனங்களுக்கும் ஆளானார். இதற்கு மேலும் அழிவைச் சந்திக்க முடியாது என்று முடிவெடுத்த சந்திரிகா, லட்சுமண் கதிர்காமரை அழைத்து, நார்வே நாட்டின் சமாதான முயற்சிகளைப் புதுப்பிக்கும்படி உத்தரவிட்டார்.

லட்சுமண் கதிர்காமர், நார்வேயின் இலங்கைக்கான தூதுவர் ஜான் வெஸ்ட்போர்க்கைத் தொடர்பு கொண்டார். அவர் முந்தைய முயற்சிகளில் காயமடைந்த விடுதலைப் புலிகளிடம் தொடர்பு கொள்வதில் உள்ள சிரமங்களை விளக்கினார். இருப்பினும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக ஜான் வெஸ்ட்போர்க் தெரிவித்து, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனைத் தொடர்பு கொண்டபோது, அவர், விடுதலைப் புலிகள் மீதான தடையையும், பொருளாதாரத் தடையையும் விலக்குவதுடன் இருதரப்பு போர்நிறுத்தத்துக்கான அறிவிப்பை வெளியிடுவதும் அவசியம் என வலியுறுத்தினார். ஆனால், சந்திரிகா இந்த நிபந்தனைகளுக்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதே வேளையில், நார்வே நாட்டிலும் ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருந்தது. தொழில்கட்சி அரசு பதவி விலகி, கன்சர்வேடிவ் கட்சியும், கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியும் இணைந்த அரசு பதவியேற்று, அதன் பிரதமராக கே.எம்.பாண்டெவிக் மற்றும் புதிய வெளியுறத்துறை அமைச்சராக ஜான் பீட்டர்சன் பொறுப்பேற்றதும், இலங்கை சமாதான முயற்சிகளின் தூதுவராக எரிக் சோல்ஹைம் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ரணில் விக்ரமசிங்கே இருக்கும்போது, தனது தேர்தல் அறிக்கையில் "அமைதி, அமைதி மட்டுமே தனது கட்சியின் முக்கிய அம்சமாக இருக்கும். முந்தைய அரசின் தவறான அணுகுமுறைகளால் ஏற்பட்ட போரின் விளைவாக அல்லலுற்ற நாம், ஒன்றிணைந்த இலங்கையில் அனைவரும் ஏற்கும் வகையிலான சமரசத் திட்டத்தை முன்வைத்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம். சமாதானப் பேச்சைத் தொடர்வோம். விடுதலைப் புலிகளை அரவணைத்துச் செல்வோம். அனைவரும் ஏற்றால் நாட்டின் அரசியலமைப்பில் தேவைப்படும் மாற்றங்களை ஏற்படுத்தி, ஒருங்கிணைந்த புதிய இலங்கையைப் படைப்போம். வடக்கு-கிழக்கில் இடைக்கால அரசு ஒன்றை அமைக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களை அவர்களது பகுதியிலேயே மீண்டும் குடியமர்த்தவும், "கமிஷன்' ஒன்றையும் அமைப்போம். முதற்கட்டமாக அங்குள்ள மக்களின் அன்றாடத் தேவைக்குண்டான அனைத்துப் பொருள்களும் தினசரி கிடைக்கும் வகையான சூழலை உருவாக்கித் தருவோம்' என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்று, வே.பிரபாகரன் 27, நவம்பர் 2001 மாவீரர் நாள் உரையில், "ராணுவமயம் என்றும் அதன் மூலமே தீர்வு என்றும் நம்பிக்கை கொண்ட அடக்குமுறையாளர்களை சிங்கள மக்கள் அடையாளம் கண்டு இத் தேர்தலில் ஒதுக்கவேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். அவ்வுரையில் அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் சிங்களவர்களின் எதிரிகளல்ல. அவர்களுக்கெதிராகவும் நாங்கள் போராடவில்லை. சிங்களப் பேரினவாதிகளையும், பேரினவாத அரசியலாளர்களையும் மட்டுமே எதிர்க்கிறோம். இவர்களால்தான் தமிழ்-சிங்கள மோதல்கள் உருவாகின்றன. எங்களுக்கு நன்றாகத் தெரியும், போர் என்பது தமிழர்களை மட்டுமல்ல, அது சிங்களவர்களையும் பாதிக்கிறது என்று. போர் வெறியால், அடக்குமுறையால், அப்பாவி சிங்கள இளைஞர்கள் பெருமளவில் உயிரிழந்திருக்கின்றனர். எனவே இத் தீவில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தவல்ல, தமிழர்களுக்குரிய நல்ல தீர்வைத் தரக்கூடியவர்களையே அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் அணி பெரும்பான்மை பலம் பெற்றது. 5, டிசம்பர் 2001-இல் ரணில் பிரதமரானார். புலிகள் வழக்கம்போல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு ஒரு மாதம் போர்நிறுத்தம் அறிவித்தார்கள். புதிய பிரதமரான ரணிலும் பதிலுக்கு போர்நிறுத்தம் அறிவித்தார்.

168: போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது!

இலங்கை அரசியல் சட்டப்படி அதிபர்தான் பாதுகாப்புக்கும் அமைச்சராவார். பாதுகாப்பு அமைச்சர் என்று சொல்லப்படும் அமைச்சர்கள் வெறுமனே துணை பாதுகாப்பு அமைச்சர் என்றுதான் அழைக்கப்படுவர்.

எனவே பிரதமர் ரணிலின் உத்தரவை, அதிபர் சந்திரிகா புறம் தள்ளினார். முப்படைகளுக்கும் தலைவர் என்ற முறையில் தளபதிகளும் சந்திரிகாவின் பேச்சையே கேட்டனர். போர்நிறுத்த அறிவிப்பு வெளியிடும் முன்பு தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றும் சந்திரிகா குற்றம்சாட்டினார்.

ஆனால், சமாதானத் தேவதை என்றும், அமைதித் தேவதை என்றும் லட்சுமண் கதிர்காமரின் வெளியுறவுத்துறையால் பிரசாரப்படுத்தப்பட்டிருந்த சந்திரிகா உலகளவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

ரணில் ஆட்சிப் பொறுப்பேற்றதும், செய்த இன்னொரு நகர்வாக, "நார்வே நாட்டின் சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாக இருப்பேன்' என்று அறிவித்தது ஆகும். அதுமட்டுமன்றி தமிழர்கள் பகுதியில், சந்திரிகாவால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை 15, ஜனவரி 2002 முதல் நீக்குவதாகவும் அறிவித்தார்.

விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன் நார்வே நாட்டின் புதிய பிரதமர் கே.எம். பாண்டெவிக்கிற்கு ஒரு கடிதம் எழுதி, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கடந்த இரண்டரையாண்டு காலமாக சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நார்வே நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்ததுடன், அந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு, தமிழீழத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு நல்லது வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அக்கடிதத்தில், சமாதான முயற்சிகளுக்கு ஒத்திசைவாக விடுதலைப் புலிகள் அமைப்பு நடந்து கொள்ளும் என்றும் உறுதியளித்திருந்தார்.

ஜனவரி முதலாம் தேதி எழுதப்பட்ட இக் கடிதத்திற்கு நார்வே நாட்டின் பிரதமர் கே.எம். பாண்டெவிக் உடனடியாகப் பதில் எழுதி, சமாதான முயற்சிகளை அரசு சார்பில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பாட்டர்சன் மற்றும் அரசுச் செயலாளர் விதார் ஹெல்கசன் ஆகியோர் மேற்பார்வையிடுவர் என்றும் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் நார்வே நாட்டு சமாதானக் குழுவினர் புலிகள் மற்றும் அரசிடம் போர் நிறுத்தம் குறித்த தங்களது திட்டங்களை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர் (ஜனவரி 7). இதனையொட்டி லண்டனில் இருந்த அன்டன் பாலசிங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான வரைவுத் திட்டத்தை எழுதவும், நார்வே நாட்டுக் குழுவினரிடம் தொடர்பு கொள்ளவும் பணிக்கப்பட்டார்.

வன்னிப் பகுதியில் இருந்த அன்டன் பாலசிங்கம் லண்டன் சென்றது எவ்வாறு என்பது இங்கு அறிவது அவசியமாகும். வன்னியில் இருந்த அன்டன் பாலசிங்கத்தின் இடது சிறுநீரகம் முற்றிலுமாகப் பழுது ஆனதால், அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவது அவசியம் என்று புலிகளின் மருத்துவரான சூரி கருத்து தெரிவித்தார்.

இதனையொட்டி லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், நார்வே நாட்டு அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டனர். இறுதியில் எரிக் சோல்ஹைமையும் அணுகினர். இலங்கையின் நார்வே நாட்டுத் தூதரகமும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் சந்திரிகா அரசைத் தொடர்பு கொண்டு, தாங்கள் அனுமதித்தால் அன்டன் பாலசிங்கத்துக்கு சிகிச்சையளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். சந்திரிகா மனிதாபிமானமற்ற முறையில், புலிகள் இயக்கத்துக்கு சில நிபந்தனைகளை விதித்தார். அவை:

1) வடக்கு-கிழக்கில் அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபடக் கூடாது. 2) வான் மற்றும் கடல் வழியாக அந்தப் பிரதேசத்திற்கு முகாம்களுக்கு செய்யப்படும் விநியோகத்திற்குக் குந்தகம் இழைக்கக் கூடாது. 3) நாடு முழுவதும் உள்ள அரசு சொத்துகளைத் தாக்கியழிக்கக் கூடாது. 4) தடுத்து வைத்திருக்கும் எல்லாப் போர்க் கைதிகளையும் (செஞ்சிலுவைச் சங்கம் அறிந்த மற்றும் அறியாத) விடுவிக்க வேண்டும். 5) புலிகள் படையில் 18 வயதுக்குள்ளான போராளிகளை அதிலிருந்து விலக்கி பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தப்பட்டன.

"இந்தக் கோரிக்கைகள் ராணுவ ரீதியானவை. இதற்கும் நோயுற்ற பாலசிங்கத்தை சிகிச்சைக்கு அனுமதிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே நானும் பாலாவும் இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டோம்' (சுதந்திர வேட்கை- அடேல் பாலசிங்கம்) என்று தனது நூலில் குறிப்பிட்ட அடேல், மாற்று வழியில் கப்பல் மூலம், தென் கிழக்கு ஆசிய நாடொன்றில் யாருமறியாமல் ரகசியமாக சிறுநீரகத்தை அகற்றும் சிகிச்சை மேற்கொண்டு, பின்னர் அங்கிருந்த லண்டன் தூதுவர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டது என்றும், அடேல் பாலசிங்கத்துக்கு ஆஸ்திரேலிய தூதுரகம் மூலமாக புதிய பாஸ்போர்ட் பெற்று, சிகிச்சை மேற்கொண்ட நாட்டின் உயர் அதிகாரிகளான நண்பர்களின் உதவியால் லண்டன் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் மருத்துவர்கள் மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதை அங்கீகரிக்கவில்லை. இந்த சமயத்தில்தான் நார்வே நாட்டுச் சமாதானக் குழுவினர் லண்டனில் பாலசிங்கத்தைச் சந்திப்பது நேர்ந்தது.

இதன் பின்னர் நார்வே நாட்டு தூதுக் குழுவினர், தங்கள் நாட்டு மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, மாற்றுச் சிறுநீரகம் பொருத்தலாம். ஆனால் அந்தச் சிறுநீரகத்தின் செயல்பாடு குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே இருக்கும் என்று தெரிவித்தனர்.

இதன்படி, வேறு வழியின்றி, பாலசிங்கத்துக்கு நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அங்கு சில மாதங்கள் தங்கி ஓய்வு எடுத்த பின்னர் பாலசிங்கம் தம்பதியினர் லண்டன் திரும்பினர்.

லண்டனிலிருந்த பாலசிங்கத்தை சமாதான முயற்சி தொடர்பாக விதார் ஹெல்கசன், எரிக் சோல்ஹைம், ஜான் வெஸ்ட்போர்க், ஜெர்ஸ்தி ட்ரோம்ஸ்டல் உள்ளிட்ட தூதுக் குழுவினர் சந்தித்தது இவ்வாறுதான். இருதரப்பிலும் பல தடவைகள் பேச்சு நடத்தி ஒரு வரைவுத் திட்டத்தைத் தயாரித்தனர்.

22 பிப்ரவரி, 2002 அன்று போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கிளிநொச்சியில் இருந்தபடி இந்த ஒப்பந்தத்தில் வே. பிரபாகரன் முதல் கையெழுத்திட்டார். தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வவுனியாவுக்கு வந்திருந்து கையெழுத்திட்டார்.

இதேநேரத்தில், நார்வே நாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பீட்டர்சன் குழுவினர் ஆஸ்லோ நகரில், பத்திரிகையாளர் சந்திப்பின் போது, விடுதலைப் புலிகள்- இலங்கை அரசுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதான செய்தியை உலகுக்கு அறிவித்தனர். இதுகுறித்து ஜான் பீட்டர்சன் விளக்குகையில் தெரிவித்ததாவது:

"இதுவரை நடந்த யுத்தங்களின் மூலம் இலங்கையில் 60 ஆயிரம் உயிர்கள் பலியாகி இருக்கின்றன. பல லட்சக்கணக்கானோர் பல்வேறு வகையில் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே, இந்நிலையில் சமாதானப் பேச்சும், போர்நிறுத்தமும் அவசியமாகிறது. இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள், சிங்களர்கள் மற்றும் அனைத்து பிரிவினரும் இயல்பு வாழ்க்கை வாழ உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க நார்வே நாட்டுத் தலைமையில் சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அக்குழு, போர் நிறுத்ததைக் கண்காணிக்கும்.

ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்கள் எடுத்த மிகவும் துணிச்சலான நடவடிக்கை ஆகும். அதாவது சமாதானத்துக்காக எடுத்திருக்கிறார்கள். சமாதானம் என்பது நீண்டபாதை. அது கரடு முரடானது. பார்க்க சுலபமானது. ஆனால் உண்மை அதுவல்ல. இருதரப்பினருக்கும் ஓர் அர்ப்பணிப்பு உணர்வும் ஈடுபாடும் இருந்தால் மட்டுமே இந்த நீண்ட பாதையைக் கடக்க முடியும்.

ஒளிமயமான எதிர்காலம் எங்கள் முன் தென்படுகிறது. எங்களது பயணத்தில் வெற்றியடைவோம் என்று உறுதியாக நம்புகிறோம்.

இந்த ஒப்பந்தம் மூன்று அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. 1) போராளிகளோ அரசோ ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது; அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். 2) இலங்கையின் அனைத்து இன மக்களும் இயல்பு வாழ்க்கை வாழ அனுமதிக்கப்பட்டு, பேதமின்றி அனைத்துப் பிரிவினருக்கும் உண்டான உரிமைகள் சலுகைகளை அடையப் பாடுப்படுவது. 3) போர் நிறுத்தக் காலத்தில் இவைகளைக் கண்காணிக்க நார்வே தலைமையில் கண்காணிப்புக் குழு மேற்பார்வை இடுவது- ஆகியவை அடங்கும்.

புலிகள்- அரசுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அறிந்து தமிழர்கள் மட்டுமன்றி உலக நாடுகள் மத்தியிலும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது.

ஆனால் சந்திரிகாவோ இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை இது என்றும் இதுகுறித்த "முன் அனுமதி'யைத் தன்னிடம் பெறவில்லை என்றும் கடுமையான விமர்சனங்களில் இறங்கினார்.

இதுகுறித்து நார்வே நாட்டு சமாதானத் தூதுவர் எரிக் சோல்ஹைம் பின்னர் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிடுகையில், "அப்போதைய காலப் பகுதியில் பல்வேறு கஷ்டங்கள் இருந்த போதிலும் அரசுக்கும் புலிகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையானது, 1983-ல் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு முதன்முதலாக ஏற்பட்ட உறுதியான- அமைதியான- சூழ்நிலையை உருவாக்கியது. அதுவே அப்போது எங்களது சாதனையாக இருந்தது.' (இலங்கையில் சமாதானம் பேசுதல்- குமார் ரூபசிங்கவுக்கு அளித்த பேட்டியில். பக். 443) என்று தெரிவித்துள்ளார்.

169: உலகைக் கவர்ந்த பிரபாகரன் பேட்டி!

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு அதை நடைமுறைப்படுத்துகிற விஷயங்களில் ஏற்பட்ட சுணக்கங்களை நார்வே சமரசக் குழுவினரின் கவனத்திற்கு பாலசிங்கம் கொண்டு வந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் பிரபாகரனின் ஆலோசனைகளை நேரடியாகப் பெறவேண்டிய நிலையில் இருப்பதாகவும், பாதுகாப்புச் சூழ்நிலை கருதி இந்தப் பேச்சுவார்த்தைகளை கொழும்பில் அல்லாமல் வேறு ஒரு நாட்டில் நடத்துவது சரியாக இருக்கும் என்றும் பாலசிங்கம் கருத்துத் தெரிவித்தார்.

பிரபாகரனுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய அடேலும், பாலசிங்கமும் வன்னி செல்வதற்கு இன்னொரு நாட்டின் உதவி தேவைப்பட்டது. மாலத்தீவு கடல் சுற்றுலாவுக்கான விமானங்களைக் கொண்டிருப்பதால், அந்த நாட்டின் உதவி அணுகப்பட்டு, மாலத்தீவு சென்று, விமான நிலையத்தின் அருகே மார்ச் 24-இல் ஓட்டலில் இரவு தங்கினர். பாலசிங்கம் குழுவினர் கடற்படை விமானத்தில் புறப்பட்டு வன்னிப் பகுதியை அடைந்தனர்.

அன்றைய தினமே பிரபாகரனுடன் விரிவாகப் பேசிய நிலையில், மாலையில் வந்த நார்வே குழுவினருடன் பேச்சு நடத்தப்பட்டது. இக் குழுவினருடன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுப் பொறுப்பாளர் ஜெனரல் ட்ரான்ட் ஃப்ரோகோவுட் மற்றும் ஃபின்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் கலந்துகொண்டனர்.

பேச்சினூடே வவுனியா-கிளிநொச்சி வழியாகச் செல்லும் ஏ-9 தேசிய நெடுஞ்சாலை ஏப்ரல் 8-ஆம் தேதியிலிருந்து திறக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். பிரபாகரன் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் நிறைவேற்றப்படுவதில் சுணக்கம் தென்படுகிறது என்று குறிப்பிட்டார். அப்போது பிரதமர் எல்லா அம்சங்களையும் நிறைவேற்ற உறுதி பூண்டிருப்பதாக நார்வே குழுவினர் தெரிவித்தனர். ஏ-9 தேசிய நெடுஞ்சாலை ஏப்ரல் 8-ஆம் தேதி திறக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்க வரலாற்றில் ஏப்ரல் 10, 2002 ஒரு முக்கியமான நாளாகும். அன்றைய தினம் வே. பிரபாகரன் இலங்கைப் பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி உலகிலுள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களையும் கிளிநொச்சியில் சந்தித்தார். தூயவன் அறிவியல் கல்லூரியில் இம் மாநாடு நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்ற வளாகம் மட்டுமன்றி, அந்தப் பகுதி முழுவதுமே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

குறிப்பிட்ட நேரத்தில் வே.பிரபாகரன் அரங்கத்துக்கு வந்தார். அவருடன் அன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச் செல்வன், தென்பகுதித் தளபதிகள் கருணா, பதுமன் ஆகியோரும் வந்தனர்.

விடுதலைப் புலிகளின் 25 ஆண்டு காலத்தில் இவ்வளவு பெரிய பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டியது இதுவே முதல் முறை.

மாலை 4.30 மணிக்குதான் கூட்டம் என்ற போதிலும், பத்திரிகையாளர்கள் அதிகாலையிலிருந்தே வர ஆரம்பித்துவிட்டனர்.

பல்வேறு வகையான கேள்விகளுக்கும் பொறுமையுடன் பதிலளித்த பிரபாகரன் எந்தக் கட்டத்திலும் உணர்ச்சி வசப்படவில்லை என்பது பத்திரிகையாளர்களின் மதிப்பீடு ஆகும். இங்கே சில கேள்விகளும் பிரபாகரன் அளித்த பதில்கள் வருமாறு:

கேள்வி: ""தனிநாடு கோரிக்கையை கைவிட்டு விட்டீர்களா?''

பதில்: ""1977-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தமிழீழக் கொள்கைக்கு ஆதரவாக எங்கள் மக்கள் தீர்ப்பு அளித்தனர். மக்கள் அளித்த அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நாங்கள் இப்போது போராடி வருகிறோம். எங்களுடைய தனிநாடு கோரிக்கையைக் கைவிடுவதற்குச் சரியான சூழ்நிலைகள் இன்னமும் உருவாகவில்லை.''

""போர்நிறுத்தம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?''

""அமைதிக்கான எங்கள் அர்ப்பணிப்பில் நாங்கள் உண்மையாக இருக்கிறோம். அமைதி வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிற காரணத்தினாலேதான், நாங்களாகவே முன்வந்து நான்கு மாத காலம் போர்நிறுத்தம் செய்தோம்.''

""கடந்த காலத்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சு போல இந்தப் பேச்சுவார்த்தையும் தடம்புரண்டு விடுமா?''

""முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைப் போன்று இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடையாது. முதலாவதாக இந்தப் பேச்சுவார்த்தையில் தொடர்பாளராக நார்வே நாடு உள்ளது. இரண்டாவதாகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அமைதி வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை கொண்டிருக்கிறார்.''

""அமைதிக்கான விலை என்னவென்று தீர்மானமாகிவிட்டதா?''

""எங்களுடைய தனிநாடு கோரிக்கையை நாங்கள் கைவிட வேண்டும் என்பது அதன் விலையானால், அதற்குச் சரியான மாற்றுத் திட்டத்தினை இலங்கை அரசு அளிக்க வேண்டும். அதைப் பார்த்துதான் எங்களுடைய கோரிக்கையை நாங்கள் கைவிடுவதா இல்லையா என்பதை முடிவு செய்வோம்.''

""உங்களை பயங்கரவாதிகள் என்று கூறி அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளனவே?''

""நாங்கள் பயங்கரவாதிகள் அல்லர். நாங்கள் சுதந்திரத்துக்காகப் போராடும் போராளிகள். பயங்கரவாதத்துக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை விளக்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும். இதுவரை இதற்கான விளக்கத்தை யாராலும் அளிக்க முடியவில்லை.''

""இனப் பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காணவேண்டும் என்று கூறுவீர்களா?''

""திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டும் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.''

""இலங்கை அரசு அவ்வாறு தீர்வு காணுமா?''

""திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் இனப் பிரச்னைக்குத் தீர்வு காணும் திட்டத்தை சிங்கள அரசுதான் அளிக்கவேண்டும். சுயநிர்ணய உரிமைப் பிரச்னையில் தனது அரசியல் சட்டத்திலேயே விளக்கம் தந்த நாடு தென் ஆப்பிரிக்கா. தேசிய இனப் பிரச்னைக்குத் தனது அரசியல் சட்டத்தில் விளக்கம் தந்த நாடு ஸ்பெயின். கனடா நாடும் தனது நாட்டிலுள்ள சிறுபான்மை இனங்களின் பிரச்னைக்குத் தீர்வு கண்டுள்ளது. இந் நாடுகளைப் போன்று இனப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டிய கடமை சிங்கள அரசுக்கும் உண்டு.''

""உங்கள் இயக்கம் மீது தடை இருக்கிறதே? எப்படிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பீர்கள்?''

""தடை நீக்கப்பட்டபிறகு பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்.''

""ஏ-9 தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளதே?''

""நன்றி சொல்கிறோம்.''

""சமாதானப் பேச்சு பற்றி உலகத் தமிழர்களின் கண்ணோட்டம்?''

""நீண்ட காலத்துக்குப் பிறகு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறோம். எல்லா நாடுகளிலும் உள்ள அனைத்து தமிழர்களின் ஆதரவும் எம் பக்கம் இருக்கவேண்டும்.''

""உங்களிடம் ராணுவக் கைதிகள் உள்ளனரா?''

""சிறிய அளவிலான தொகையினர்தான் கைதிகளாக உள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக, அவர்களைத் தங்கள் குடும்பத்துடன் தொடர்பு கொள்வதற்கான ஒழுங்குகள் நீண்டகாலமாகவே செய்து தரப்பட்டுள்ளன.''

Please Click here to login / register to post your comments.