முள்வேலி முகாமில் தமிழச்சிகள் அவலம்!

ஆக்கம்: கார்த்திகைச் செல்வன்
ஈழ நினைவுகளிலிருந்து இதயம் மீளவில்லை. 2500 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள மாணிக் ஃபார்ம் முள்வேலி முகாமில் அடைபட்டுள்ள தமிழர்களின் அவல நிலையை நேரில் பார்த்த அனுபவத்தால் தாக்குண்டிருக்கும் தி.மு.க ராஜ்யசபா எம்.பி. கவிஞர் கனிமொழியிடம் இலங்கைப் பயணம் குறித்து கேட் டோம். மாணிக் ஃபார்ம் நிலவரத்தி லிருந்து வெளியே வரவில்லை அவரது மனது.

""ஒரு முகாமுக்குள் 8 முகாம் கள் இருக்கின்றன. அத்தனையும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்தால் ஒரு சிறை வளாகம் போலத்தான் தெரிகிறது. எங்களை இந்தச் சிறையிலிருந்து விடுவியுங்கள் என்ற குரல்தான் ஒருமித்து ஒலிக்கிறது. பெரும் மழைக்குத் தாங்காத ஒரு டெண்ட்டுக்குள்8 பேர் ஒடுங்கியிருக்கிறார்கள். அந்த இடத்தில் 2 பேர் மட்டு மே படுப்பதற்கான இடவசதி இருக்கிறது. அதில்தான் 8 பேரும் உட்கார்ந்து, உறங்கி, சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். இன்னும் எத்தனை காலம் இப்படியே போகும்? எப்போது நாங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்புவோம்?- மாணிக் ஃபார்மிலிருந்து கேட்கும் ஒட்டுமொத்த குரலிலும் ஒலிக்கும் வார்த்தைகள் இதுதான்.

அந்த பாட்டியம்மாவுக்கு 75 வயது. பேரக்குழந்தைகள் மூன் றும், அம்மா அப்பா எங்கே என்று பாட்டியைக் கேட்டுக்கொண்டிருக் கின்றன. என்ன பதில் சொல்வாள் அந்தக் கிழவி? எம் பொண்ணும் மருமகனும் யுத்தத்துக்குப் பிறகு காணலை. உசுரோடு இருப் பாங்கன்னு நம்பிக்கையும் இல்லை. அவங்க பெத்த இந்த மூணு புள்ளைகளுக்காகத்தான் என் உசுரை வச்சிக்கிட்டிருக்கேன். பசிக்குது.. பசிக்குதுன்னு இந்தப் புள்ளைங்க அழுகுது. கொஞ்சமா அரிசியும் பருப்பும் குடுக்குறாங்க. எண்ணெய், காய்கறி எதுவும் கிடையாது. சமைக்கிற சாப்பாடு இந்த சின்ன புள்ளைங்க வயித் துக்கே பத்தாது. என் பங்கையும் சேர்த்து அந்தப் புள்ளைகளுக்குப் போட்டுட்டு, வயித்தை இறுக்கிக் கட்டிக்கிட்டு படுத்துக்குறேன். காசு, பணத்தை கண்ணால பார்த்து 5 மாசமாகுது. என்னைக்கு என் பேரக்குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடு போடப்போறேன்னு தெரியலை... -கிழவியின் வார்த்தைகள் கண்ணீராக மாறுகின்றன.

ஆயுதம் தூக்கி சண்டை போட்ட வங்க ஒருத்தர், அவங்களை அழிச்சுக் கொன்னவங்க இன்னொருத்தர். இந்த இரண்டு பேருக்குமிடையில் மாட்டிக் கொண்ட நாங்கதான் இந்த முகாமில் சிக்கிக்கிட்டிருக்கோம். அப்பவும் நிம்மதியில்லை. இப்பவும் நிம்மதியில்லை. ஆண்டவா... உலகத்துல எந்த சனத்துக்கும் இப்படியொரு வாழ்க்கை அமையவேகூடாது -ஆறுதல் சொல்ல தொப்புள் கொடி உறவுகள் வந்திருக் கின்றன என்றதும் ஒரு நடுத்தர வயது பெண்மணியிடமிருந்து வெடித்து வெளிப்பட்ட வார்த்தைகள் இவை.

தண்ணீர் கிடைக்கிறதென்றால் அதற்கு ஈடாகத் தங்கத்தைக்கூடத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள் முகாமில் வசிக்கும் மக்கள். குடிப்பதற் காகக் கொடுக்கப்படுகிறது தலைக்கு 5 லிட்டர் தண்ணீர். அடுத்த முறை, தண்ணீர் வண்டி எப்போது வரும் என்பது தெரியாததால், நீண்ட கியூவாக நிற்கிறது மனிதப் பேரவலம். குளிப்பதா? அதெல்லாம், 5 நாட்களுக்கு ஒரு முறை நடந்தாலே விசேஷம். குளிக்கும்போது கழற்றும் சட்டையையேதான் குளித்தபிறகும் போட்டுக் கொள்ள வேண்டும். மாற்றி உடுத்துவதற்கு உடைகள் கிடையாது. இதில் ஆண்-பெண் பேதமில்லை. சமத்துவமாக எல்லோரும் அழுக்கு அப்பி, கிழிந்து தொங்கும் உடைகளையே அணிந்திருக்கிறார்கள்.

குளிக்கிறது, கழுவுறது எல்லாமே கஷ்டம் தான். அதுவும் மாதவிலக்கு ஏற்படுற பெண்களின் நிலைமையை விவரிக்கவே முடியாது. தண்ணீர் இல்லாததால சுத்தப்படுத்திக்க முடியல. மாற்றுத் துணியும் இல்லாததால ரொம்பவே கஷ்டப் படுறோம். உடல் அவஸ்தையோடு மன அவஸ்தையும் சேர்ந்துகொண்டு, தற்கொலை பண்ணிக்கலாமான்னு யோசிக்க வைக்குது என்று கதறும் முகாம் பெண்கள், எங்களை இங்கேயிருந்து அனுப்பிடுங்க. நடந்தே கூட சொந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்திடுறோம் என்று சொல்லும்போது வாழ்வின் வலி வெளிப் படுகிறது. தாயின் கைகளில் இருக்கும் அந்தக் குழந்தை கதறிக்கொண்டே இருக்கிறது. அதைப் பார்க்க முடியாமல் தாயும் கதறிக்கொண்டிருக்கிறாள். அவளுக்குப் புரிகிறது, நிச்சயமாக நீண்ட நேரம் அந்த குழந்தையைத் தன் கையில் வைத்திருக்க முடியாது.

அவள் கை, அந்தக் குழந்தைக்கு அரவணைப்பல்ல. வலியை உண்டாக்கும் அழுத்தம். ஆமாம்... குழந்தையின் உடம்பு முழுக்க வெயில் நேரக் கொப்புளங்கள். இந்த முகாம் கொடுத்திருக்கிற பரிசைப் பார்த்தீங்களாய்யா... இவ்வளவு உஷ்ணத்தை இந்தப் பிள்ளை எப்படி தாங்கும்? வெப்பத்தைத் தணிக்க வைக்கணும்னா நல்லா குளிக்க வைக்கணும். தண்ணி கிடைக்காத இந்த இடத்தில், குளிக்க வைக்க முடியுமா? அதனாலதான் உடம்பு முழுக்க கொப்புளம் வந்து குழந்தை துடிக்குது. என்ன பண்ணுதுன்னுகூட சொல்ல முடியாத புள்ளைக்கு இப்படியொரு கொடுமை எனக் கதறுகிறது பெத்த மனசு.

தேடிப்பார்த்தால் ஒன்றிரண்டு மரங்கள் தெரிகின்றன. அந்த மரத்தடிகளில் பிள்ளைகள் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கிறார்கள். செவிக்கு உணவில்லாத போதுதான் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதை இலங்கை யில்தான் பார்க்க முடியும். முகாமில் உள்ள பெண்களில் சிலரே டீச்சர்களாகி பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஞ கங்ஸ்ஹப் ஆ கங்ஸ்ஹப் என்று வகுப்புகள் உள்ளன. வயிறு காலியாக கிடக்கும்போது மனதில் எந்தப் பாடம்தான் ஏறும்? பெயருக்கு வகுப்பில் உட்கார்ந்து, கரும்பலகையின் நிறத்திற்கு எதிர்காலத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது ஈழத்தின் அடுத்த தலைமுறை.''

-தான் பார்த்தவற்றால் மனம் கனத்துப் போயிருக்கும் கனிமொழி,

""முகாமில் சிக்கியுள்ள தமிழர்களின் உயிரைக் காத்து, அவர்களின் கவுரவத்தை மீட்க வேண்டும். அதற்கு ஒரே தீர்வு அவர்களை சொந்த மண்ணில் மீள்குடியேற்றுவதுதான். அதைத் தான் ராஜபக்சேவிடம் வலியுறுத்தியிருக் கிறோம்'' என்கிறார். டி.ஆர்.பாலு தலைமை யில் கனிமொழி, திருமா, டி.கே.எஸ். இளங் கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், ஹெலன் டேவிட்சன், சித்தன், கே.எஸ். அழகிரி, ஆரூண் உள்ளிட்ட 10 தமிழக எம்.பி.க்கள் சென்னை திரும்பியபோது விமானநிலை யம் சென்று வரவேற்றார் கலைஞர்.

இலங்கையில் உள்ள முகாம்களின் நிலை குறித்து முதல்வரிடம் அறிக்கை கொடுத்துள்ளனர் எம்.பி.க்கள். குழந்தை களின் பசி தணிக்கும் வழிதெரியாது துடிக்கும் தமிழ்ப்பெண்கள், ஆமிக்காரர் களின் உதவியை நாடுவதும், அதற்கு ஆமிக்காரர்கள் பிரதிபலன் எதிர்பார்ப்ப தும், முகாம் தமிழர்களின் அவலநிலை யை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக் கிறது.

Please Click here to login / register to post your comments.