ராஜபக்சே என்னையும் அழித்திருப்பாராம்'' -கொதிக்கும் திருமா!

ஆக்கம்: இளையசெல்வன்
ஈழ மக்களின் வாழ்நிலைகளை அறிந்து வர, இலங்கை சென்ற தமிழ் எம்.பி.க்கள் குழுவில் இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகளால் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டவர் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.

""குழுவில் இடம் பெற்ற ஒவ்வொருவரை பற்றியும் முன்கூட்டியே தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறார் ராஜபக்சே. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர், பிரபாகரனின் நண்பர் என்று என் னைப் பற்றி அவரிடம் தகவல் தந்துள்ளனர். அதனாலேயே இந்த பயணத்தில் என்னை அதிகம் கண்காணித்தனர் அதிகாரிகள்'' என்கிறார் திருமா.

இலங்கையிலிருந்து திரும்பிய திருமாவை சந்தித்தோம்.

முள் கம்பிகளுக்கிடையே முடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது?

வவுனியாவின் காட்டுப்பிரதேசத்தில் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை அழித்து முகாம்களை அமைத்திருக்கிறார் ராஜபக்சே. முகாம் களில் அடிப்படை வசதிகள் எதுவும் போதுமான அளவில் இல்லைங்கிறது ஜீரணிக்க முடியாத துயரம். குளித்து ரொம்ப நாட்கள் ஆன நிலையில் அழுக்கான மக்கள், போதிய சத்துணவு கிடைக் காததால் மெலிந்து போன குழந்தைகள், மருத்துவ வசதிகள் போதிய அளவு இல்லாததால் அவஸ்தைப்படும் உடல் ஊனமுற்றவர்கள், பாலுக்கு ஏங்கும் குழந்தைகள் என மனித வாழ்க்கையில் நடக்கக்கூடாத அத்தனை அவஸ்தை களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மூன்று பேர் மட்டுமே இருக்க முடியும். டெண்ட்டில் இருபது பேர் அடைந்து கிடக்கின்றனர். இந்த முகாம்கள் முட்கம்பிகளால் சூழப்பட்டிருக்கிறது. முகாம்களைச் சுற்றி கழிவுகள் செல்ல கால்வாய் வெட்டி வைத்துள்ளனர். இது சுத்தப்படுத்தப்படாத தால் துர்நாற்றம் வீசுகிறது. மொத்தத்தில், விலங்குகளைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். இன்னும் கொஞ்ச நாள் போனால்... சோமாலியாவை போல் மாறிவிடும் "மாணிக் ஃபார்ம்' பகுதி.

மக்களை நீங்கள் சந்தித்தபோது அவர் களது உணர்வுகள் எப்படிப்பட்டதாக இருந்தது?

கோபம், ஆத்திரம், குமுறல்களாகவே இருந்தன. ஒரு பெரியவர், ""நாங்க என்னய்யா பாவம் செஞ்சோம்? தமிழனா பொறந்ததுதான் பாவமா? இப்படி சித்ரவதை செய்றதுக்கு விஷம் வச்சு கொன்னுடலாமே'ன்னு கதறினார். ஒரு மூதாட்டி, "போர்தான் முடிஞ்சிடுச்சே. எங்களை விட்டுடவேண்டியதுதானே. ஏன், இப்படி அடைச்சு வெச்சு எதையும் கொடுக்காம கொடுமைப்படுத்த ணும்?'னு கோபப்பட்டார். இன்னும் சில பேர், "இந்தியா நினைச்சிருந்தா எங்களுக்கு இந்த துயரம் நேர்ந்திருக்காது. ஆனா, ஈழ மக்களை போரின்போது கைவிட்டுடுச்சு இந்தியா' என்று இந்திய அரசு மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தி னார்கள். அப்போது சில இளைஞர்கள், "காங்கிரஸ்காரங்க கால் இந்த மண்ணுல படக்கூடாதுன்னு நினைச்சோம். பாவிங்க கால் இங்கு பட்டுடுச்சே'ன்னு ஆத்திரப்பட்டனர். இப்படி ஆத்திரம், சோகம், கதறல்னு இருந்தது அவர் களது பேச்சுக்கள். தினம் தினம் படுகிற நரகவேத னைகளை அவர்கள் வெளிப்படுத்தியபோதும், எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்னது... "இந்த நரகத்திலிருந்து எப்படியாச்சும் உடனடியா எங்களை மீட்டெடுங்க. மழை காலம் நெருங்கிருச்சு. மழை பொழிய ஆரம்பிச்சிருச் சின்னா... அந்த வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியாது' என்று கதறியதுதான். எல்லாவற்றையும் கேட்ட என் நெஞ்சே வெடித்து விடுவதுபோல் இருந்தது. அழுகை அழுகையாய் வந்தது.

பிரபாகரனின் பெற் றோர்கள் சித்ரவதை செய்யப் படுகிறார்கள் என்பது குறித்து இந்த விசிட்டின்போது ஏதே னும் விசாரித்தீர்களா?

இந்தத் தகவலையும் பஸில் ராஜபக்சேவிடம்தான் விசாரித் தேன். அதற்கு அவர், "பாதுகாப்பு காரணங் களுக்காக அவர்களை தனியாக வைத்திருக் கிறோம்' என்றார். அவர்களைப் பார்க்க வேண்டுமே என்ற தற்கு... "முடியாது' என்று மறுத்துவிட்டார். "பிரபாகரன் பெற்றோர்கள், பிரபாகரனின் மாமியார் சின்னம்மாள்ஏர்அம்பு ஆகியோரை அவர்களது உறவினர்களிடம் அனுப்பிவைத்துவிடலாமே' என்று நான் கேட்டபோது ""இதுபற்றி யாரும் எங்களுக்கு விண்ணப்பிக்கவில்லை. உறவினர்கள் யாரேனும் விண் ணப்பித்தால் அதுபற்றி பரிசீலனை செய்வோம். அதுவும், இந்தியாவில் தங்குவதாக இருந்தால் மட்டும்தான் அனுப்பு வோம். மற்ற நாடுகள் எனில் அனுப்பமாட்டோம்'' என்றார்.

இறுதி நாளின்போது, பிரபாகரனுடன் நீங்கள் இருந்திருந்தால் நீங்களும் அழிந்திருப்பீர்கள் என்று ராஜபக்சே உங்களை கமெண்ட் பண்ணியிருக்கிறாரே?

திமிர்த்தனமான பேச்சு. புலிகளின் ஆதரவாளன் என்பதால் என்னை நக்கல் பண்ணுவதற்காக அப்படி கமெண்ட் அடித்தார். இதனை நானும் வேறு விதத்தில் நக்கலடித்திருக்க முடியும். ஆனா தேவையற்ற சர்ச்சைகள் என்னால் உருவாக வேண்டாமே என்று நினைத்துதான் சிரித்து மழுப்பினேன். பிரபாகரனின் நண்பர் என்று என்னை ராஜபக்சே சொன்னதற்கு மகிழ்ச்சி.

கண்ணிவெடி இருப்பதால் மக்களை குடியமர்த்த உடனடியாக முடியவில்லை என்று ராஜபக்சே சொல்லும் காரணம் உண்மையா?

அது ஏமாற்று நாடகம். உண்மையில், தேர்தலுக்காகத் தான் மீள் குடியேற்றம் செய்ய அனுமதிக்காமல் தமிழர்களை முள் கம்பிகளுக்கிடையே முடக்கி வைத்திருக்கிறார் ராஜபக்சே. காரணம், முகாம்களில் உள்ள 2 லட்சத்து 53 ஆயிரம் தமிழர்களில் 75 சதவீதம் பேருக்கு வாக்குரிமை இருக்கிறது. இவர்களை வெளியே விட்டால் தனக்கு எதிராக தேர்தலில் ஓட்டளிப்பார்கள் என்பதால்தான் அவர்களை விடுவிக்காமல் இருக்கிறார் ராஜபக்சே.

இலங்கைக்கு சென்ற இந்த 5 நாள் பயணத் தால் என்ன பயன் கிடைத்திருப்பதாக உணர்கிறீர்கள்?

தமிழக எம்.பி.க்கள் குழு ஈழமக்களின் துயரங்களை அறிந்து, அதனை ராஜபக்சேவிடம் வலியுறுத்தியதால்தான்... முதல்கட்டமாக 58 ஆயிரம் பேர் முள்கம்பிகளிலிருந்து விடுவிக்கப்படவிருக்கிறார்கள். இது பயன் இல்லையா?

ராஜபக்சே சொன்னதை இதுவரை செய்திருக்கிறாரா?

நியாயமான கேள்வி. 15 நாட்கள்தானே. பார்ப்போம். நடக்கவில்லையென்றால்... (திருமா முகம் மாறுகிறது) அப்போது ஒரு முடிவு எடுப்போம்.

Please Click here to login / register to post your comments.