பதினாறு பேறுகளையும் பெற்று தரும் கந்தனும் கந்தசஷ்டி விரதமும்

ஆக்கம்: திருமதி சிவானந்தன் பூங்கோதை
""அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி'' ஆம். அமரர்களாகிய தேவர்களின் துன்பத்தினைப் போக்குவதற்காக அசுரர்களுடன் போர் புரிந்து தேவர்களை மீட்டவர் முருகப் பெருமான். இம் முருகப் பெருமானை முழு முதற் பொருளாகக் கொண்டு வழிபடபடும் நெறி கௌமாரமாகும். அழகன் முருகனை வழிபடுவதன் மூலம் அடியவர்களின் சொல்லொணாத் துன்பம் நீக்கப்படுவதுடன் தினமும் நெஞ்சுருகி கந்த சஷ்டி கவசத்தினை பாராயணம் செய்வதன் மூலம் மக்கட் பேறு முதலான பதினாறு பேறுகளும் (செல்வங்களும்) கிடைக்கப் பெறுவர் என்பதனை துதிப்போர்க்கு வல்வினைபோம் என்னும் அடிகள் மூலம் அறிய முடிகின்றது. அனாதியாகவே ""செம்பில் களிம்பு போன்று ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது அனுபவம் பெற்ற முருக பக்தர்களின் அருள்வாக்கு.

முருகப் பெருமானை வழிபடும் முறைகளில் விரதமும் ஒன்றாகும். இவரை வேண்டியிருக்கும் விரதங்களாவன; கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், மாத சஷ்டி, மாத கார்த்திகை, வெள்ளிக்கிழமை விரதம் என்பன குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்புடையதாகும். இந்துக்கள் அனைவராலும் ஆண், பெண் வேறுபாடு இன்றி, வயது வேறுபாடு இன்றி போற்றி விசுவாசத்துடன் காக்கப்படும் ஒரு விரதமாகும். இவ் விரதமானது ஐப்பசி மாதம் பூர்வபட்ஷ முதல் நாளாகிய பிரதமை தொடக்கம் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களுக்கு அனுஷ்டிக்கப்படும். இன்நோன்பினை அனுஷ்டிப்போர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி முருகப் பெருமானின் வரலாறு கூறும் கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிச் செய்த கந்த புராணம் என்னும் நூல் பின்வருமாறு கூறுகின்றது.

பிரதமைக்கு முதல் நாள் ஒரு நேரம் மட்டும் சைவ உணவு உண்ணல் வேண்டும். பின் விரத நாளான பிரதமை திதி அன்று அதிகாலை காலைக் கடன்களை முடித்து நீராடி தோய்த்து உலர்ந்த சுத்தமான ஆடை அணிந்து முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடாற்றி காப்பு அணிவதுடன் விரதம் ஆரம்பிக்கப்படல் வேண்டும். தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் ஆலய தரிசனம் செய்து முடிந்தவரை ஆலயத்திலேயே தங்கி இருந்து இறை வழிபாட்டினை மேற்கொண்டால் சிறந்த பலனைப் பெறலாம் என்றும், இறுதி நாள் காப்பினை கழற்றியே விரதத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றது. மேலும் இவ்விரதத்தின்போது ஆறு நாட்களும் சிறிது நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தலே சிறந்தது என்றும் அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்களும் சூரிய அஸ்தமனத்தின் பின் வழிபாடுகளை முடித்து, இறைவனுக்கு நிவேதனமாக வைத்த பால், பழம் என்பவற்றை உண்டு, ஆறாவது நாளான சஷ்டி அன்று உபவாசம் இருக்கலாம் என்றும் இவ்வாறு இருக்க முடியாதவர்கள் முதல் 5 நாட்களும் நண்பகல் அல்லது சூரிய அஸ்தமனத்தின் பின் சர்க்கரை சாதத்தினை இறைவனுக்கு நிவேதனம் செய்து அந்நிவேதனத்தை உண்டு ஆறாவது நாள் உபவாசத்துடன் சூரசம்ஹார முருக வழிபாடு செய்தல் வேண்டும். மறுநாள் அதிகாலை சூரியோதயத்திற்கு முன் எழுந்து நீராடி முருக வழிபாட்டினை மேற்கொண்டு அடியவர்களுக்கு அன்னதானம் செய்த பின் தானும் உண்டு பாரணையுடன் விரதத்தினை சிறப்புடன் முடிக்க வேண்டும் எனக் கூறுகின்றது.

இவ் விரத காலங்களில் முருகப் பெருமானின் வரலாற்றினையும் அவர் தம் புகழினையும் எடுத்துக் கூறும் நூல்களான கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் கலிவெண்பா, திருப்புகழ், திருமுருகாற்றுப் படை, கந்தசஷ்டி கவசம், கந்தபுராணம் போன்ற முருகன் பெருமைகளைக் கூறும் நூல்களைப் பாராயணம் செய்தல் மிகச் சிறந்த பயனைத் தரும். சூரனுடன், முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதிநாளாகிய சஷ்டி எனப்படும். சஷ்டி என்பது திதியாகும். இவர்கள் இருவருக்கும் இடையில் போர் நடந்த இடம் முருகப் பெருமõன் குடிகொண்டுள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றாகியதும், கடலும்,கடல் சார்ந்த பிரதேசமாகிய நெய்தல் நிலமாகிய திருச்செந்தூர் என்னும் தலமாகும். சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணக்கூடியதாக இருக்கும். இந்த அருட்காட்சியானது நாம் நேரில் தரிசித்து இறையருள் பெறவேண்டிய ஒன்றாகும்.

கந்த சஷ்டி நோன்பு பற்றி ஒரு புராண வரலாறு உண்டு. பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான். இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும் மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.

மாயை காரணமாக தோன்றிய இந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு) கொண்டு காணப்பட்டனர். இந் நால்வரும் சிவனை நோக்கி கடுந் தவம் புரிந்தனர். இவர்களின் கடுந்தவத்திற்கு இரங்கிய பரம் பொருள் இவர்கள் முன் தோன்றி வேண்டும் வரங்களை அருள்வதாகக் கூறி என் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியாவது உங்களை அழிக்க முடியாது என அருளினார். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணா துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.

அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். சூரன் முதலான அசுரர்களை அழிப்பதற்காக சிவன் தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் மூலம் ஆறு குழந்தைகளை உருவாக்கினார். அக்குழந்தைகள் சரவணப் பொய்கையில் ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு, உரிய காலம் வந்ததும் ஆறு குழந்தைகளும் பார்வதி தேவியினால் ஒன்று சேர்க்கப்பட்டு ஆறுமுக சுவாமி எனப் பெயர் பெற்றார். இந்த ஆறுமுகக் கடவுள் சூரனை வதை செய்யும் போது மாயையினால் மாமரமாக நின்றான். அவனைத் தனது ஞான வேலால் பிளந்து அவனது ஆணவத்தினை அடக்கி சேவலும் மயிலுமாக மாற்றி சேவலை தன் கொடியாகவும், மயிலைத் தன் வாகனமாகவும் கொண்டு சூரனுக்கு சாரூப முத்தியை அருளி ஆட்கொண்டார். இவ்வாறே சிங்க முகன், தாருகன் என்போரின் அகங்கார, மமகாரம் அழிக்கப்பட்டு இவர்கள் முறையே அம்பிகையினதும் ஐயனாரினதும் வாகனங்களாகி ஆட்கொள்ளப்பட்டனர்.

இவ்விரதத்தினை வாழ்க்கையின் எந்நிலையில் உள்ளவர்களும் தமக்கு வேண்டிய வரத்தினைப் பெற அனுஷ்டித்து அவற்றினை பெற்றுக் கொள்ளலாம் என்பது திண்ணம். ""மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்தருளும் ஏரகச் செல்வ'' என்னும் வரிகளும் ""எந்த நாளும் ஈரேட்டாய் வாழ்வார்'' என்னும் வரி மூலமும் மனித வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு பேறுகளையும் தரவல்லது என்பதனையும் அறிய முடிகின்றது. மேலும் கந்த சஷ்டி கவசம் என்னும் பாடலைப் பாடிய தேவராசன் சுவாமிகள் பல ஆண்டுகளாக மாறாத கொடிய வயிற்று வலியால் பீடிக்கப்பட்டு இருந்த போதிலும், இவ்விரதத்தினை அனுஷ்டித்து முருகன் அருளால் குணமடைந்தார். எனவே அன்பர்களே கிடைத்தற்கரிய மானிட பிறவியினைப் பெற்ற நாம், புனிதமான இவ் விரதத்தினை அனுஷ்டித்து இக பர இன்பங்களைப் பெற்று மங்கள வாழ்வு வாழ்வோமாக.

Please Click here to login / register to post your comments.