இராணுவ `ஆட்சியின் கொடூரத்தை' தாங்க முடியாமல் தவிக்கும் குடாநாட்டு மக்கள்

ஆக்கம்: யாழின்மைந்தன்
எண்பதுக்கு முந்தைய காலத்தில் யாழ்ப்பாணச் சமூகம் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தது. இம்மக்களை வந்தாரை வாழவைக்கும் பண்பாட்டுச் சிறப்புமிக்க சமூகமாகவே உலக மக்கள் போற்றியதுண்டு. இன்றோ அவர்களின் நிலைமை கவலைதருவதாக பலரும் கூறுவதில் நியாயமில்லாமல் இல்லை. போர்ச்சூழலினால் அவன் இழப்பதற்கு எதுவுமில்லாமல் நடைப்பிணமாக சொந்த மண்ணில் வாழ்கின்றான்.

தேச விடுதலைக்காக அவன் சந்திக்கும் கொடூரங்கள், இழப்புகள் அக்கிரமங்கள் சர்வதேச மனித உரிமை இயக்கங்களால் கோடிட்டுக் காட்டப்படுகின்ற போதும் நிம்மதியான வாழ்வுக்காக மூன்று சகாப்தமாகக் போராடி வருகின்றான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்த காலத்தில் இம்மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு உத்தரவாதமிருந்தது. சட்டமும் ஒழுங்கும் பேணப்பட்டு வந்தது. உணவுக்காக அவன் ஒரு பொழுதேனும் ஏங்கியது கிடையாது. குடாநாட்டுக்குப் பொருளாதாரத் தடையை அரசு கொண்டுவந்தபோதும் சகல பொருட்களும் தட்டுப்பாட்டில்லாமல் கிடைத்திருந்தன.

பட்டினிக் கொடுமையால் எவரும் இறந்ததாக சரித்திரம் இருக்கவில்லை. அவசியம் ஏற்படும் போதெல்லாம் உயிரைப் பணயம் வைத்தே பயணங்களை மேற்கொண்டிருக்கின்றான். போஷாக்குக் குறைபாடுகளோ, சிசு இறப்புவீதமோ மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. கறுப்புச் சந்தைகள் வெளிக்காட்ட முடியாமல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பாடசாலை, சிவில் நிர்வாகம் சிறப்பாக இயங்கியிருந்தன. பொதுப்பரீட்சைகள் சிறப்பாக திட்டமிட்ட தினங்களில், பாதுகாப்புகள் எதுவும் தேவையில்லாமல் சுதந்திரமாகவும் அமைதியாகவும் நடைபெற்றன. இராணுவ நகர்வுகளின் போதெல்லாம், இடம்பெயர்ந்த மக்கள் "நிம்மதியாக வாழ" வழி செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, அரச பணியாளர்கள் மக்கள் நலனுக்காக சேவையாற்றி வந்தனர்.

என்றைக்கு யாழ்பாணக் குடாநாடு இராணுவ நிர்வாகத்துக்கு மாறியதோ அன்றைக்கு குடாநாட்டு மக்களுக்கு `சனியன்' பிடித்துவிட்டதாகவே கருத இடமுண்டு. அந்தளவுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் வாழ்வியலில் எத்தனையோ சோகங்கள் தொடர்கின்றன.

1996 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆக்கிரமித்து ஒரு தசாப்தம் நிறைவு பெற்றுள்ளது. இக்காலப்பகுதியை ஒப்புநோக்கும் ஆய்வாளர்கள், இராணுவ சிவில் நிர்வாகத்தின் செயல்பாடுகளினால் இராணுவத்தின் நகர்வுகள் இலக்கை எட்ட முடியாததையும் அதனால் யாழ். மக்களின் அவல வாழ்வையும் தெளிவாக விளக்க முடியும்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாதுகாப்புப்பிரிவினர், மக்களின் பாதுகாப்பை உறதிப்படுத்தி அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதாக அரசாங்கம் உலக சமுதாயத்துக்குத் தெரிவித்து வருகின்ற போதும், அண்மையில் யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி தோமஸ் சௌந்தரநாயகம் ஊடகங்களுக்கு யாழ் மாவட்ட நிலைமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை உண்மை நிலையை வெளிக்கொணர்ந்துள்ளது.

யாழ். குடாநாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில், மக்கள் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, குடாநாட்டில் தினந்தோறும் நடைபெறும் `வெள்ளைவான்' ஆட் கடத்தல்கள்' காணமால் போவதும் பயங்கரச் சூழ்நிலையை தோற்றுவித்துள்ளன. அடையாளம் காணப்படாதவர்களால் இவை மேற்கொள்ளப்படுகின்றது எனக் கூறப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. இக்கடத்தல் காரர்களையும், கொலையாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்த முடியாதளவு சட்டமும் ஒழுங்கும் குடாநாட்டில் சீர்குலைந்துள்ளன. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் வெள்ளைவானில் வருவோரால் ஆட்கள் கடத்தப்பட்டு காணாமல் போவதானது அரச தரப்பின் ஆதரவின்றி நடைபெற முடியாதென்பதே மக்களின் கருத்தாகும்.

குடாநாட்டுக்கான பிரதான வீதி மூடப்பட்டுள்ளமையால் குடாநாடானது திறந்தவெளிச்சிறைச்சாலை போல் காட்சியளிக்கின்றது. அரசாங்கம் யாழ் .குடாநாட்டு மக்களை இதன்மூலம் அந்நியப்படுத்தி வைத்துள்ளது. இதன் காரணம் அவர்கள் தமிழர்கள் என்பதேயாகும். இன்று யாழ்ப்பாணக் குடாநாடு மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தினமும் நடைபெறும் கொலைகள் மூலம் மண் சிவப்பு நிறமாகியுள்ளது.

இவைகளுக்கும் மேலாக, குடாநாட்டில், இன்று சிவில் நிர்வாகம் நடைபெறுகின்றதா அல்லது இராணுவ நிர்வாகம் இடம்பெறுகின்றதா என்பதை அறிய முடியாமல் உள்ளது. ஊடகவியலாளர்கள் உணவு விநியோகம் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தமக்குக் கிடைக்கும் தகவல்களை உறுதிப்படுத்த, தகவல்களைப் பெற முனையும்போது அதிகாரிகள் தமக்கு எந்தத் தகவல்களையும் கூற அதிகாரம் இல்லையென கூறி வருகின்றனர். மின்சார விநியோகம் குறித்துக் கேள்வி எழுப்பப்படும் போது அதிகாரிகள் அது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது எனச் சொல்கின்றனர். பத்திரிகைகளில் வரும் தகவல்கள் ஊகத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

கப்பல் பயணம் பற்றி அரச அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கப்படுவதில்லை. கப்பலில் பயணிகளை ஏற்றும் நேரத்தில் இராணுவத்தினர் தகவல்களை வெளியிடுவதால் முண்டியடித்து வீட்டிலிருந்து உடுத்த உடையுடன் சிங்கள மகா வித்தியாலயத்துக்கு வருவதால், பலர் மிதிபட்டும் உடைமைகள் உளக்கிக் கிழிக்கப்பட்டும் பயண அனுமதி பெற வேண்டியுள்ளது. இதில் ஊடகங்களில் வெளிவராத செய்தி- இரண்டாவது தடவையாக திருகோணமலையில் நடாத்தப்பட்ட பயணிகள் கப்பல் சேவையில் பயணம் செய்வதற்காக முண்டியடித்துச் சென்ற பெண்மணியொருவரை மக்கள் ஏறி உளக்கியமையால், அவர் திருகோணமலையில் உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக மாணவியொருவரும் இக்கதிக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றார். பதினையாயிரம் பேர் அவசரமாக பயணம் செய்ய வேண்டியிருக்கின்ற போது, வாரம் 650 பயணிகளை கப்பலில் ஏற்றி அனுப்புவதால் ஏற்படும் பயங்கர நிலை இதுவாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைவாக ஏ-9 பாதையை ஒருபோதும் இருதரப்பினரும் மூடக்கூடாது என தெரிவித்துள்ளபோதும், இராணுவம் தமது சொந்த நலனுக்காக மூடியிருப்பது அரச பயங்கரவாதமாகவே கூறப்பட்டு வருகின்றது. அரசாங்கம் பூநகரிப்பாதையைத் திறக்க முயல்வாக கூறப்படுகின்றது. இது எவ்வளவு சிரமமானது என்பது பற்றி எந்த புவி சார்ந்த அறிவுடையோருக்கும் தெரியும். இராணுவத்தின் எட்டமுடியாத இலக்குகளை எட்ட முடியாமல், இக்கோரிக்கையை முன்நிலைப்படுத்தியுள்ளது. சுருங்கச் சொன்னால், காலத்துக்குக் காலம் இராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளால், யாழ்ப்பாண மக்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என செயற்பட்டு வருவது தெரிகின்றது.

தொடர்ச்சியான ஊரடங்கு தமிழரின் நிம்மதிக்கு வேட்டாகக் கருதலாம். உணவுக்காக நடு வெயிலில் `கியு' வரிசையை ஏற்படுத்திய பெருமையும் இவர்களையே சாரும். தினம் தினம் இடம்பெறும் எறிகணைத் தாக்குதல் மற்றும் பல்குழல் தாக்குதல்களால் இதயத்தையே தாக்கி குடாநாட்டு மக்களை மிருக வாழ்க்கைக்குள் தள்ளிவிட்டுள்ளது இராணுவம்.

Please Click here to login / register to post your comments.