முகாமில் என்ன நடக்கிறது ?

ஆக்கம்: திருவேங்கிமலை சரவணன்
வெறுத்துப் போயிருக்கிறார் திருமாவளவன். ஈழப்பயணம் திருப்தியாக இல்லை என்பது அவர் குரலில் தெரிகிறது. ஈழத்திலிருந்து திரும்பியவரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். மனம் வெதும்பிப் பேசினார்.

``ஈழத்துக்குப் போனதுமே அங்க நடந்த விஷயங்கள் எதுவும் என் மனதுக்குப் பிடிக்கலை.முதல்ல யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களைச் சந்திக்கிறதா ஏற்பாடு. ஆனா டி.ஆர். பாலு அவர்களிடம் நெருங்கிப் பேசுவதை விரும்பவில்லை.என் மீது ஈழ மக்கள் எவ்வளவு அன்பு வைத் திருக்கிறார்கள் என்பது அவர்கள் என்னைப் பார்த்ததும் ஆர்வமாய் பேசவந்ததிலிருந்து புரிந்தது.

பலர் என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். ஆனால் எல்லோருக்கும் ஒரு தயக்கமும் பயமும் இருந்தது. ஏனென்றால், என்னுடைய நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ராணுவத்தினர் படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அதனால் மக்கள் வேகவேகமாய் கலைந்தார்கள்.

இந்திய அதிகாரிகளும், ``நேரமாச்சு, நேரமாச்சு'' என்று என்னை இழுத்துச் செல்வதிலேயே குறியாக இருந்தார்கள்.

அடுத்து முகாம்களுக்குச் சென்றோம். அங்கிருந்த தமிழ் மக்களைப் பார்த்தவுடன் நாம் 21ம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் வந்தது. ஏராளமான மனிதஉரிமை அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் அங்கு வேலை செய்து கொண்டிருந்தாலும் முகாம்களின் நிலை பரிதாபகரமாக இருந்தது. ஒரு மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகூட இல்லை.

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இதையெல்லாம் எப்படி சகித்துக்கொண்டு இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அழுக்குத்துணி, அழுக்கேறிய தலைமுடி, நலிந்த உடல், வறண்ட முகம், ஏக்கப் பெருமூச்சு, அச்சமும் பீதியும் கலந்த மனநிலை இதுதான் இன்றைய ஈழத்தமிழர்களின் அடையாளமாக மிச்சப்பட்டிருக்கிறது. குடிநீருக்காக காலி பாட்டில்களையும், பாத்திரங்களையும், வரிசையாக இடம்பிடிப்பதற்காக அடுக்கி வைத்திருப்பது அடிவயிற்றையே எரிய வைத்தது.

150 மருத்துவர்கள் அங்கு வேலை பார்ப்பதாக அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால் அந்த மருத்துவர் களை கண்ணால் காண முடியவில்லை. 13-ம் தேதி ராஜபக்சே சகோதரர் கோத்தபயராஜபக்சேயை சந்தித்தோம். அவர்தான் இலங்கையின் ராணுவச் செயலாளர். கோத்தபய ராஜபக்சே எதிலும் பிடிகொடுக்காமல் பேசினார். வழியனுப்பும்போது எக்காளமாய்ச் சிரித்தார்.

பசில் ராஜபக்சே சந்திப்பு மிக அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. இவர் இலங்கை அரசுக்கு ஆலோசகர். எதுவுமே தெரியாத அப்பாவிபோல அவருடைய அணுகுமுறை இருந்தது. கோப்புகளையும், படங்களையும் காட்டி திறமையாக விளக்கம் அளித்தார். அவரிடமிருந்து விடை பெறும்போது, `இந்திய அரசு எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது தெரியுமல்லவா?' என்று கிண்டலாய் கேட்டார்.

`பிரபாகரனின் பெற்றோரை எதற்காக அடைத்து வைத்திருக்கிறீர்கள்' என்று நான் கேட்டபோது, `முகாமில் உள்ள மற்றவர்களால் அவர்களுக்கு ஆபத்து வரக்கூடும் என்பதால் தனி இடத்தில் பத்திரமாக வைத்து இருக்கிறோம்' என்று சொன்னார். `பிரபாகரனின் அப்பா படுக்க மெத்தை வேண்டுமென்றும், குளிக்க வெந்நீர் வேண்டுமென்றும் எங்களை அதட்டிக் கேட்கிறார். ராணுவப்பிடியில் இருந்தால்கூட கொஞ்சமும் அச்சப்படாமல் எங்களையே அதட்டி வேலை வாங்குகிறார்' என்று ஏளனமாய்ச் சிரித்தார். `பிரபாகரனின் பெற்றோர், மாமியாரை அவர்கள் உறவினர்களிடம் ஒப்படையுங்கள்' என்று நான் சொன்னபோது, `முறையாக விண்ணப்பம் செய்யச் சொல்லுங்கள், அதுவும் இந்தியாவில் தங்குவதென்றால், அனுப்பி வைக்கிறோம்' என்றார்.

மாலை ராஜபக்சேவை சந்தித்தோம். போவதா வேண்டாமா என்று எனக்குள் ஏகப்பட்ட குழப்பம்.ராஜபக்சேவுடன் பேசாமல் இருந்து விடலாம் என்று முதலில் தோன்றியது. ஆனால் இரண்டு காரணங்களுக்காக அவரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது. தற்போதைய சூழலில் ராஜபக்சேயுடைய மனநிலையும் அணுகுமுறையும் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும், இந்திய அரசிடம் அவருக்குள்ள நட்புணர்வை அவருடைய பேச்சுக்களிலிருந்து தெரிந்து கொள்ளவும் விரும்பியதால் அவரைச் சந்திக்க சம்மதம் தெரிவித்திருந்தேன். அதுமட்டுமில்லாமல் நான் போகாவிட்டால் குழுவினருக்குள் மனக்கசப்பு உண்டாகும் என்றும் கருதினேன்.

ராஜபக்சேயை சந்தித்தபோது இரண்டு கோரிக்கைகளை வைத்தேன். `முகாம்களில் உள்ளவர்களை அவரவர் சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும். தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு வேண்டும்' என்று சொன்னேன். `தமிழர்களை உடனே அனுப்ப முடியாது. கண்ணி வெடிகளை அகற்றி குடியிருப்புகளைக் கட்டி படிப்படியாகத்தான் அனுப்ப முடியும்' என்று ராஜபக்சே சொன்னார்.

இரண்டாவது கேள்விக்கு `தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது என்னுடைய வேலை. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அப்படிப் பேசும்போது, 2004-ல் பாராளுமன்றத்தில் அவரை நான் சந்தித்ததை நினைவுபடுத்தினேன். அந்த சந்திப்பில், `உங்கள் தலைவர் பிரபாகரனிடம் சொல்லுங்கள். இடைத் தூதர் யாரும் இல்லாமல், நானும் அவரும் மட்டுமே பேசித் தீர்ப்போம்' என்று நீங்கள் சொன்னீர்கள் என்றேன். `அப்போது சொன்னேன். ஆனால் இப்போது பிரபாகரன் இல்லையே' என்று நக்கல் அடித்தார். ராஜபக்சேயை சந்திப்பதற்கு முன்பு `பார்த்துப் போங்கள்' என்று டி.ஆர். பாலு அன்பாய் எச்சரித்திருந்தார். இந்தியத் தூதரக அதிகாரிகளும் ஆவேசப்படக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள்.

எல்லாம் பேசி முடித்து எழுந்தவுடன் எதிர்பாராத நிலையில் காங்கிரஸ் உறுப்பினர் ஜே.எம். ஆரூண் திடீரென்று ராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்தினார். அது நாடாளுமன்றக் குழு சார்பில் போடப்பட்டது அல்ல. தனிப்பட்ட முறையில் போடப்பட்டது. இறுதியாக, குரூப் போட்டோ எடுக்கப்பட்டது. எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இடது புறம் நின்ற என்னைப் பார்த்த ராஜபச்சே, ``இவர் பிரபாகரனின் மிக நெருக்கமான நண்பர். நல்லவேளை, போர் நடந்தபோது பிரபாகரனோடு இவர் இல்லை'' என்று கூறி வெடிச்சிரிப்பு சிரித்தார்.

அவரது அந்தச் சிரிப்பு எங்கள் எல்லோரையும் அதிர வைத்தது. ஈழ மக் களுக்கு இவரால் விடிவு இல்லை என்பதைப் புரிய வைத்தது.''.

Please Click here to login / register to post your comments.