கண்ணிவெடி: அரசின் கொள்கை என்ன?

ஆக்கம்: ஏ.ரஜீவன்
இலங்கையில் நிலக்கண்ணி வெடி பயன்பாட்டின் மிக மோசமான பாரம்பரியத்திற்கு எடுத்துக் காட்டாக யாழ். குடாநாட்டின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியொன்றைச் சேர்ந்த இளம் பெண்ணின் அவலம் அமைந்துள்ளது.

பலாலிப் பகுதியில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக அவசர அவசரமாக தனது இரண்டு வயது மகனுடனும், கணவருடனும் மல்லாகப் பகுதிக்கு இடம் பெயர்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர் அந்த பெண்.

தற்காலிக நலன்புரி நிலையமொன்றில் சில நாட்கள் தங்கியிருந்த பின்னர், தனது உறவினரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கையில் அவர் நிலக் கண்ணி வெடியில் சிக்கியுள்ளார்.

இரண்டு மணி நேரத்தின் பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட போது அவரது இடது கால் முழங்காலுக்குக் கீழே துண்டிக்கப்பட்டது.

நிலக்கண்ணி வெடியில் சிக்கி அவயவங்களை இழப்பவர்கள எதிர் கொள்ளும் சகல வகையான உளவியல் நெருக்கடிகளையும் அவர் எதிர் கொண்டுள்ளார்.

அங்கவீனர்கள் குறித்து சமூகத்தில் காலாதி காலமாக காணப்படும் பார்வையிலிருந்து அவர் தப்பவில்லை.

பொருளாதார ரீதியான சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக அந்தப் பெண்ணின் கணவர் மத்திய கிழக்கிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட, அதன் பின்னர் அந்தப் பெண் மணி மேலும் நெருக்கடிகளை சந்தித்துள்ளார்.

தனியொருவராக துண்டிக்கப்பட்ட காலுடன் வாழ்வை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

புள்ளி விபரங்களின் படி இலங்கையில் நிலக் கண்ணி வெடிகளில் சிக்கும் 86 வீதமானவர்கள் உயிர் தப்புகின்றனர்.

இதன் காரணமாக மிகக் குறைந்தளவு மருத்துவ வசதிகளை வைத்துக் கொண்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

மேலும், அவர்களது நீண்ட கால தேவைகளையும் கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது.

இலங்கையில் 730 கிராமங்கள் நிலக்கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலேயே இந்தக் கிராமங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இதன் காரணமாக தமது சொந்தப் பகுதிகளுக்கு மீளத் திரும்பும் மக்கள் இவற்றில் சிக்க வேண்டிய அபாயமுள்ளது.

இது தவிர, நிலக்கண்ணி வெடிகளால் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்கள் ஆண்களாக உள்ளனர். பதிவு செய்யப்பட்டுள்ள புள்ளி விபரங்களின் படி பாதிக்கப்பட்டவர்களில் 85 வீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆண்கள்.

இவ்வாறான ஒரு பின்னணியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இந்த விடயத்தில் எவ்வளவு தூரம் அக்கறை காட்டுகின்றது என்ற கேள்வி முக்கியமானது.

நிலக்கண்ணி வெடிகளைத் தடை செய்யும் ஒட்டவா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத இலங்கை அரசாங்கம் நிலக்கண்ணி வெடிகள் குறித்துத் தெளிவான கொள்கைகளையோ, சட்டங்களையோ இதுவரை உருவாக்கவில்லை.

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசு கண்ணிவெடிகளை தடை செய்யும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை.

2002 ஒக்டோபரிலிருந்து அரசாங்கம் பல தடவைகள் விடுதலைப் புலிகளுடன் இணக்கப்பாடொன்றிற்கு வந்த பின்னர் (பயன்படுத்துவதில்லை) உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதாக தெரிவித்து வருகின்றது.

குரோசியாவில் 2005 இல் நடைபெற்ற கண்ணிவெடிகளை தடை செய்யும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடுகளின் மாநாட்டிலும் இலங்கை பார்வையாளராக கலந்து கொள்ளவில்லை.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை நிலக்கண்ணி வெடிகளை தடை செய்வது குறித்த கலந்துரையாடல்களில் பங்குகொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர் என்கிறது கண்ணிவெடி கண்காணிப்பு அறிக்கை 2006.

அதேவேளை, சமாதானத்தை நோக்கிய பாதையில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்ட பிறகே இது குறித்த உறுதிமொழிகளை வழங்கலாம் என்பதும் அவர்களது நிலைப்பாடு. சுவிட்சர்லாந்தில் அந்தநாட்டைச் சேர்ந்த அரச சார்பற்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் புலிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கண்ணிவெடிகளை தடை செய்வதனால் என்ன உறுதியான சாதகத்தன்மை ஏற்படும் என்பதை அவர்கள் அறிய விரும்பினர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஜெனீவா கோல் போன்ற அரச சார்பற்ற அமைப்புகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் கவனத்தையும் இந்த விடயத்தில் ஈர்க்க முனைந்துள்ளது.

இலங்கை அரசாங்கம் நிலக்கண்ணிவெடிகளை உற்பத்தி செய்வதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.

எனினும், அது தொடர்ந்தும் நிலக்கண்ணிவெடிகளை இறக்குமதி செய்து வருகின்றது.

பாகிஸ்தான், போர்த்துக்கல், சீனா, இத்தாலி, சிங்கப்பூர், பெல்ஜியம், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்தே இலங்கை இதனை பெற்றுக் கொள்கின்றது.

நிலக்கண்ணிவெடிகள் தொடர்பாக இலங்கை தானாக முன்வந்து சமர்ப்பித்த அறிக்கையில் என்ன வகையான நிலக்கண்ணிவெடிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் எண்ணிக்கை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இலங்கை அரசாங்கம் 2002 இல் (ஆகஸ்ட்) முதன் முதலாக கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக தேசிய குழுவை உருவாக்கியது.

நிலக்கண்ணிவெடிகள் தொடர்பான கொள்கைகளையும் முன்னுரிமைகளையும் வகுப்பதும் அவற்றை ஒருங்கிணைப்பதுவுமே இதன் நோக்கம். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அமைச்சின் செயலாளர் தலைமையில் ஆறு வாரத்திற்கு ஒரு முறை இந்தக் குழு கூடுகின்றது. பல அமைச்சுகளினது பிரதிநிதிகளும் அரசாங்க அதிபர்களும் உள்ளூர் சர்வதேச ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி தொடர்பான செயற்பாட்டு அமைப்புகளினதும் பிரதிநிதிகளும் இதில் அங்கம் வகிக்கின்றனர்.

எனினும், இது வரையில் நிலக்கண்ணி வெடிகள் குறித்த சட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஏப்ரல் 2006 இல் அமைச்சு நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான தேசிய தர நிலைப்பாடு பற்றிய புதிய விதிகளை பிரசுரித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அப்பால், ஐக்கிய நாடுகளினதும் அமைப்புகளினதும் அரச சார்பற்ற அமைப்புகளும் இதில் காட்டி வரும் தீவிர ஆர்வம் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகவுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் இலங்கை அரசாங்கத்துடன் செய்து கொண்ட மூன்றாண்டு கால ஒப்பந்தத்தின் கீழ் அது கொழும்பில் உள்ள அலுவலகங்கள் ஊடாக கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான மனிதாபிமான செயற்பாடுகளினை ஒன்றிணைத்து வருகின்றது. இதற்கான ஒப்பந்தம் 2003 இல் செய்து கொள்ளப்பட்டது. இது 2006 ஆம் ஆண்டின் இறுதியில் முடிவிற்கு வருகின்றது.

கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான தர நிர்ணய விதிகளை தயாரித்தல், புள்ளி விபரங்களை சேகரித்தல், செயற்பாடுகளை ஒன்றிணைத்தல் போன்றவை இதில் முக்கியம் பெறுகின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் உள்ள பிராந்திய கண்ணிவெடி அகற்றும் காரியாலயங்கள் தமது பகுதிகளில் நடைபெறும் நிலக்கண்ணி வெடியை அகற்றும் நடவடிக்கைகளை ஒன்றிணைக்கின்றன.

மேலும் இவை மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கும் தங்களது தேவைகளைப் பெற்றுக் கொடுக்கின்றன.

அரசாங்க அதிபர்களே முன்னுரிமைகளை தீர்மானிக்கின்றனர். பிரதேச செயலாளர்களினால் இனம் காணப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப அவர்கள் இதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

பெப்ரவரி 2004 இல் இலங்கை ,2006 இற்குள் நிலக்கண்ணி வெடிகளை முற்றாக அகற்றும் முழுமையான மனிதாபிமான செயற்றிட்டத்தினை முன்னெடுப்பதாக அறிவித்திருந்தது.

எனினும், பின்னர் இந்தக் கால எல்லை 2008 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதிலும் பின்னர் மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளன. 2006 இற்குள் மிக முக்கியமான மற்றும் நடுத்தர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலிருந்தே நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

உயர் பாதுகாப்பு வலயம் தவிர ஏனைய பகுதிகளிலிருந்து 2008 இற்குள் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் எனத் தற்போது தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை 11 அமைப்புகள் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வரும் அதேவேளை, நிலக்கண்ணி அபாயம் பற்றிய விழிப்புணர்வுக் கல்வியை வழங்குவதிலும் ஏழு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

எனினும், இலங்கையில் புதைக்கப்பட்டுள்ள நிலக் கண்ணி வெடிகள் குறித்து முழுமையான ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இதன் காரணமாக புள்ளி விபரங்கள் மாறுபட்டவையாகவுள்ளன.

2005 இல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றின் படி 12.6 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு நிலக்கண்ணி வெடிகளால் நிரம்பியுள்ளது. மேலும் 136 சதுர கிலோமீற்றர் அளவில் ஆபத்தான பொருட்கள் காணப்படுகின்றன. (10 பிராந்தியங்களில்)

எனினும், இது இராணுவம் அளித்த நிலக்கண்ணி வரை படத்தை ஆதாரமாகக் கொண்டது.

கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கை செயற்குழு 2006 இல் இது தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

2005 இல் 19.5 சதுர கீலோமீற்றர் பரப்பளவில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இது 2004 இல் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டதை விட 3.8 சதுர கிலோமீற்றர் அதிகமாகும்.

எனினும், இந்தப் புள்ளி விபரங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவே காணப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்புகளும் இலங்கை இராணுவமும் அளிக்கும் புள்ளி விபரங்கள் மாறுபடுகின்றன. சில சந்தர்ப்பங்களில் அதிகளவில் மாறுபடுகின்றன என்கிறது கண்ணி வெடி கண்காணிப்பு அறிக்கை - 2006.

இராணுவத்தினர் புள்ளி விபரங்களை அளிப்பதை தாமதமாக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Please Click here to login / register to post your comments.