தாய்ப்பாலில் நஞ்சு!

ஆக்கம்: ஜெகத் கஸ்பர்
இரண்டாவதாக அவர்கள் அறிய விரும்பியது: ""இந்தியாவில் -தமிழ்நாட்டில் ஆறு கோடி தமிழர்கள் இருப்பதாகச் சொல்கிறார் களே, அப்படியென்றால் இப்படியோர் இன அழித்தல் நடந்தபின்னரும் ஏன் இங்கு எழுச்சியோ ஒருங்கிணைந்த செயற்பாடுகளோ நிகழவில்லை? காரணம் என்ன? குறிப்பாக ஏன் இந்தியப் பாராளுமன்றத்தில் இவற்றை முக்கிய பிரச்சனையாக விவாதிக்கவில்லை? போர்க் குற்றங்களும், தொடரும் மனித உரிமை மீறல்களும், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் வதை முகாம்களில் தொடர்வதும் எங்கள் நாடுகளது பாராளுமன்றங்களில் முக்கிய பிரச்சனைகளாய் விவாதிக்கப்படுகையில் உங்கள் நாட்டு பாராளுமன்றத்தில் இவை குறித்த வெற்றிடம் மிகவும் வியப்பாக இருக்கிறது'' என்றார்கள். நாண்டு கொண்டு சாகலாம் போலிருந்தது.

இதில் மிக முக்கியமானதோர் உண்மை என்னவென்றால் இந்த அதிகாரிகளில் இருவர் மட்டும் முதலில் சென்னைக்கு வந்து சந்தித்தது ஒரு குறிப்பிட்ட அமைப்பினரை. மொத்தமே ஆறேழு பேர்தான் இந்த அமைப்பில் இருப்பார் கள். ஆனால் ஆறு கோடித் தமிழர்களின் கருத்து இதுதான் என உலகின் அதிகார மையங்களுக்கு கருத்து உள்ளீடு வழங்கும் வலைப்பின்னல்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். இவர்கள்தான் நஞ்சூறிய தமிழின எதிரிகள். இவர்களை அம்பலப்படுத்தி அகற்றும் பணியை ""மே-17'' என்ற இயக்கம் நடத்தி வரும் திருமுருகன் போன்ற கூர்த்த மதியும், ஒருமித்த கவனமும், தளரா உழைப்பும் கொண்ட புதிய தமிழ் இளைஞர் கூட்டத்தால் மட்டுமே முடியும். ஆங்காங்கு அக்னிக் குஞ்சுகளாய் பலர் இருக்கிறார்கள். அறப்போராளி களாய் அனைவரும் களமிறங்கியே ஆக வேண்டிய காலக்கட்டம் இது. அந்த "நஞ்சூறிய' கருத்துக்களத் தினர் ஐரோப்பிய அதிகாரிகளுக்கு என்ன சொல்லியிருந்தார்கள் தெரியுமா?

அவர்கள் ஐரோப்பிய நாடுகளது மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற அதிகாரிகளுக்குக் கூறி யிருந்தது: ""தமிழகத்தில் பெருவாரியானவர்களிடத்தே ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவு இல்லை. விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தி படுகொலையை செய்தது மட்டுமல்லாமல் தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல், ஆயுத விற்பனை, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டிருந்ததால் பொதுவாகவே இங்கு ஈழத்தமிழ் மக்கள் மீது வெறுப்பு நிலவுகிறது. விடுதலைப்புலிகளின் அழிவு இங்குள்ள மக்களுக்கு மனநிறைவையே தந்துள்ளது'' என்பதாக கதையளந்துள்ளார்கள். நான் அவர்களுக்கு தந்தை பெரியார், சமூக நீதி அரசிய லின் வரலாறு, சமகால தமிழக அரசியலின் களைப் பூட்டும் முரண்பாடுகளால் ஈழப்பிரச்சனை குறித்து வலுவான பொதுக்கருத்து எழ முடியாத துயர நிலை- இவை குறித்தெல்லாம் விரிவாக எடுத்துரைத்தேன். வியந்து கேட்டார்கள். ""காலையில் நாங்கள் சந்தித்த வர்கள் முற்றிலும் மாறுபட்ட காட்சியையல்லவா எங்களுக்கு விரித்தார்கள்?'' என ஓர் அதிகாரி கூறினார். நான் சொன்னேன், ""தயவு செய்து தமிழகத்தின் இந்தியாவின் சமூக வரலாற்றைத் தெரிந்துகொள்ளா மல் சமகால அரசியலை அறிய முற்படாதீர்கள். அப் படிச் செய்தால் பெரும்பான்மை மக்களுக்கு அநீதி செய்தே நீங்கள் முடிவுகள் எடுப்பீர்கள்'' என்றேன்.

உணர்வும், இணையளவு அறிவுத் தெளிவும் ஒருங்கே பெற்ற இளையர்கள் சேர்ந்து செயற்படும் ""நாம்'' என்ற அமைப்புக் களத்தினை அந்த அதி காரிகளுக்கு அறிமுகம் செய்தேன். வரும் டிசம்பர் மாதம் முக்கிய மனித உரிமை நிபுணர்களோடு உள் அரங்க விவாதமொன்று புதுடில்லியில் நடை பெறப்போவதாகவும் அதில் "நாம்' அமைப்பு பங்கேற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.

உரையாடல் நிறைவில் அவர்களைக் கேட் டேன். ""இத்துணை அழிவுகள், கொடுமைகள் நடக்குமென்பது உங்களுக்குத் தெரியாதிருந்தது என்பதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக் கிறது. தமிழினத்தை ஒட்டுமொத்தமாக எல்லோ ரும் கைவிட்டு விட்டீர்களே...'' என்று. அதற்கு ஒரு அதிகாரி சொன்னார்: ""இலங்கைத் தமிழர்களை உலகம் கைவிட்டு விட்டதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நிச்சயம் உலகம்அவர்களைக் கை விடாது. எங்களது நாடுகளில் வாழும் படித்த தமிழர்கள் அமைதியாக நல்ல பணி செய்து வருகிறார்கள். எங்களது தேசிய அரசுகளை பாராளுமன்றத்திற்குள் உறுப்பினர்கள் இப் பிரச்சனை பற்றி தொடர் கேள்விகள் எழுப்புகின்ற னர். ஆதலால் எமது அரசுகள் இப்பிரச்சனையிலிருந்து விலகி நிற்க முடியாது, இயங்கித்தான் ஆக வேண்டும். ராஜபக்சே அரசின் செயற்பாடுகள் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. அடுத்த ஓராண்டு காலத்தில் ராஜபக்சே தமிழ் மக்கள் தொடர்பான செயற்பாடுகள் உண்மையில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இலங்கையின் முழு தலை விதியையே தீர்மானிப்பதாக இருக்கும்'' என்றார்.

""ஆறு கோடி தமிழ் மக்கள் இங்கு இருப்பதாகக் கூறுகிறீர்கள். அரசியற் கட்சிகளுக் கிடையான முரண்பாடுகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஏன் கல்வியாளர்கள், அறிவுஜீவி கள், கலைத் துறையினர் மற்றும் பொதுவெளிகள் (Civil Society) ஈழ மக்களின் இன்றைய அவலங்களை பொது மானுடத்தின் மாண்பு மற்றும் உரிமைகள் தொடாபான பிரச்சனையாக அணுகவில்லை?'' என்ற கேள்வி மற்றும் விவாதத்தோடு பயனுள்ள அச்சந்திப்பு நிறைவுற்றது.

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தமிழ் உணர்வாளர் ஒருவர் இரு நாட்களுக்கு முன் தொலைபேசி உரையாடலூடே கேட்டார், ""ஈழப் பிரச்சனை தொடர்பான குறைந்தபட்ச கொள்கைத் திட்டம் மற்றும் கோரிக்கைகளாக தமிழகத்தில் பொதுக்கருத்தொன்று உருவாக்கி கலைஞர், ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ உள்ளிட்ட எல்லா கட்சிகளது தலைவர்களும் இணைந்து புதுடில்லி சென்று முக்கியமானவர்களை சந்திக்கக் கூடாதா? தமிழகத் தின் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கோரிக்கைகளை- குளிர்கால பாராளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கக்கூடாதா...?'' இப்படி பல கேள்விகள் கேட்டார். இயேசு பெருமான் பல அதிசயங்கள் செய்ததாக பைபிளில் சொல்லப்பட்டுள் ளது. அவ்வாறே எல்லா மதங்களது அவதார புருஷர்களும் அற்புதங்கள் நிகழ்த்தியதாக அந்தந்த மத புத்தகங்கள் பதிவு செய்துள்ளன. அதிசயங்கள், அற்புதங்கள், அருங்குறிகளில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஈழமக்களின் பிரச் சனையில் தமிழக அரசியற் கட்சிகள் இணைந்து வந்தால் அதை விடப் பெரிய அதிசயம் இப்போதைக்கு வேறெதுவும் இருக்க முடியாது. பக்தர்கள் பரம்பொருளை இறைஞ்சுவோம்.

தமிழகத்தின் தகுதியுடைத்த பத்திரிகை யாளர்கள் ""போருக்கெதிரான பத்திரிகையாளர் கள் என்ற அமைப்பாக இணைந்து புத்தக மொன்றை ஆக்கியுள்ளார்கள். ""ஈழம் நமது மௌனம். தாய்ப்பாலில் நஞ்சு'' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்புத்தகத்தை "நல்லேர்' பதிப்பகம் வெளி யிடுகிறது. வெளியீட்டு விழா நவம்பர் 14 குழந்தைகள் தினமாகிய சனிக் கிழமை சென்னையில் நடை பெறுகிறது. சென்னை மாநகரின் உணர்வுடைய வாசகர்கள் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வது சிறப்பு. மிக முக்கியமாக ஒவ்வொருவரும் ஈழப் பிரச்சனை பற்றின அக்கறையோ, பிரக்ஞையோ இல்லாத இருரையேனும் உடன் அழைத்து வந்தால் அது பொது வெளி (Civil Society) நோக்கி அம்மக்களின் துயர்களை நகர்த் தும் முயற்சிக்கும், எதிர்காலத்தில் பொதுவெளியின் ஜனநாயக அழுத்தத்தால் அரசியற் கருத் தொற்றுமை உருவாகிற வாய்ப்புக்கும் நாம் செய்கிற காத்திரமான பங்களிப்பாக இருக்கும். என்னளவில் ஈழப்பிரச்சனையில் தினையளவு தானும் இதுவரை அக்கறை காட்டாத 500 பேரை வரவைத்திட புத்தகம் ஆக்கியவர்களுக்கு வாக்குறுதி தந்திருக்கிறேன்.

""ஈழம். நமது மௌனம். தாய்ப்பாலில் நஞ்சு.'' இப்புத்தகத்தை ஆக்கிய பத்திரிகை யாளர்கள் உண்மையில் தங்கள் எண்ணங்கள் எதையும் எழுதவில்லை. மாறாக முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் அவலங்கள், வலிகளின் நூறு புகைப்படங்களை தெரிவு செய்து நூறு பிரபலங் களிடம் கொடுத்து அக்காட்சியைப் பார்க்கையில் தங்கள் நெஞ்சில் எழுகிற உணர்வுகளை பத்து வரிகளுக்குள் பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார்கள். சத்குரு ஜக்கி வாசுதேவ், திரைக்கலைஞர்கள் கமல்ஹாசன், சூர்யா, சத்யராஜ், பிரகாஷ்ராஜ், நந்திதாதாஸ், கவிஞர்கள் வைரமுத்து, அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, அறிவுமதி, கனிமொழி, கபிலன், முத்துக்குமார், பா.விஜய், தபூசங்கர், யுகபாரதி, இன்குலாப், தமிழச்சி, தாமரை, சல்மா, பத்திரிகையாளர்கள் நக்கீரன்கோபால், அனிதா பிரதாப், அருந்ததிராய், இயக்குநர்கள் ஏ.ஆர். முருகதாஸ், சேரன், பாலா, சீமான், அமீர், மிஷ்கின், பாலாஜி சக்திவேல் இவர்களோடு இன்னும் பல முக்கியமானவர்கள் தம் நெஞ்சில் துன்புறும் மானுடத் தின் வலிகளை உள்வாங்கி குளிர்நெருப்பாய் பதிவு செய்துள்ளார்கள்.

தனித்துவமான இப் பணியினை காலத்தின் பதிவாக வும் வரலாற்றுக் கடமையாகவும் நிறைவு செய்துள்ள ""போருக் கெதிரான பத்திரிகையாளர்'' அணியினர் போற்றுதற் குரியவர்கள்.

இப்புத்தகத்தினை ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஆக்கும் கடமையினை ""நாம்'' அமைப்பு ஏற்றுக்கொள்கிறது.

மனித குலத்தின் இன்று வரையிலான அரசியல் வரலாற்றின் மொத்தத்தையும் கணக்கீடு செய்தோ மென்றால் பத்துசத வரலாறுதான் தெருக்களில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சிய 90 சத வரலாறென்பது மூடிய அறைகளுக்குள்ளும், முக்கிய மனிதர் களுக்கிடையான உரையாடல்களிலும், அரசு- பாராளுமன்ற-பிரபுக்கள்-சட்டமன்ற அவைகளிலும் நீதி மன்றங்களிலும், அறிஞர் பேரவைகள்- பல்கலைக்கழகங்களிலும் இடை விடாதியங்குகின்ற விழிப்படைந்த "பொது வெளி'யினாலுமே (Enlightened Civil Society நிகழ்த்தப்பட்டிருக்கிறது- நிகழ்ந் திருக்கிறது.

ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனை முக்கியமான இக்காலங்களில் மிகவும் பலவீனமாக இருக்கிறது. ""போருக்கெதிரான பத்திரிகையாளர்''களின் இந்த ஆக்கம் அத்தகு களங்களை காத்திரப்படுத்தும். குறிப்பாக, பொது வெளியை ""நாம்'' அமைப்பும் அத்திசையிலேயே இயங்க விழைகிறது.

Please Click here to login / register to post your comments.