இராமநாதனின் சகோதரர்கள்

ஆக்கம்: நம்முள் கவீரன்
நண்பரொருவர் சேர் பொன். இராமநாதன் பற்றிக் கவீரன் "நம்முள்"ளில் எழுதிய ஐந்து கட்டுரைகளையும் வாசித்து விட்டு எங்கள் தமிழ் இளஞ் சமுதாயத்தினருக்கு இப்பேர்ப்பட்ட தமிழ்ப் பெரியார் சம்பந்தமாக அவர்களின் கல்லூரிகளில் வெளியிடப்படும் விபரங்கள் மிகக் குறைவென்றும், அப்படித் தரப்படுபவை கூட சிங்கள ஆசிரிய எழுத்தாளர்கள் மூலமாகக் கூறப்படும் செய்திகளே என்றும் அதன் காரணமாக சேர் பொன். இராமநாதன் ஒரு மேல் வர்க்கக் கொழும்பினராகிய "வெள்ளையர்- சிங்களவரின் அடிவருடி" என்பது போன்ற ஒரு நோக்கே இதுவரை தமிழர்களிடையே இருந்து வந்திருப்பதாகவும் கூறினார். அத்துடன், சேர் பொன். இராமநாதனின் குடும்ப, வம்ச விபரங்கள் என் கட்டுரைகளில் தரப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டிக் குறை கூறினார். இராமநாதனின் சகோதரர்கள் பற்றிக் கூறும் போது, வம்ச விபரங்களைத் தருகிறேன் என்றேன். நாட்டின் சரித்திரத்தையே திரிபு படுத்தி அறிவியலுக்கும் கல்விக்கும் அப்பழுக்கு ஏற்படுத்தும் விதத்தில் உள்ளூர் கல்விமான்கள் நடந்து கொள்ளும் போது, சரித்திர நாயகர்களையும் தமது திரிபின் வட்டத்தினுள் உட்புகுத்த இப்பேர்ப்பட்டவர்கள் பின்னிற்க மாட்டார்கள் என்றேன் நண்பரிடம்.

ஆனால், மேலும் ஒரு காரணத்தையும் கூறிவைத்தேன். நாவலர் தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றினார். அதுபற்றி தமிழர்களுக்குத் தெரியும். இராமநாதனோ வேற்றுமை பாராட்டாது தமிழர், சிங்களர் சம்பந்தமாகவும் சைவம், பௌத்தம் சம்பந்தமாகவும் சட்டம், நிர்வாகம், இலக்கியம், ஆன்மீகம் என்று எத்தனையோ துறைகளிலுந் தன் தொண்டின் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். முழுமையாக அவர் பற்றிக் கண்ணோட்டம் செலுத்த வசதியற்றவர்கள், தகுதி கூட அற்றவர்கள் வெறும் அரசியல்- நிர்வாக சாளரத்தை மட்டும் திறந்து பார்த்து விட்டு அவர் வாழ்க்கைச் சரிதையை மூடி விட்டுள்ளார்கள் என்றேன். அதன் காரணமாக அவரின் மற்றைய பல்துறைக் குணவியல்புகள் வெளிவராமல் இருந்திருக்கலாம் என்றேன். ஆனாலும், தமிழர்களுக்கோ, தமிழ்த் தலைவர்களுக்கோ சாதகமான விபரங்களை மூடி மறைத்தல் இன்றைய பெரும்பான்மையினப் படித்தவர்களிடையே புதுமையானதொன்றல்ல என்பதை நான் ஏற்பதாகக் கூறினேன். இந்து மதத் தொல்பொருள் சின்னங்கள் பற்றிப் பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் "இலங்கையில் இந்து மதம்" என்ற தமது நூலில் பக்கம் துடிதுஇல் கூறியிருப்பதையும் இது சம்பந்தமாகக் குறிப்பிட நான் தவறவில்லை. "அநுராதபுரம், பொலநறுவை முதலிய புராதன நகரங்களிலே நடைபெறுகின்ற அகழ்வுகளைப் பற்றி இந்நாட்களிலே ஆண்டறிக்கைகள் எழுதப்படுவதில்லை.

புதிதாகக் கிடைக்கின்ற சின்னங்களும் பெரும்பாலும் அருங்காட்சியகங்களிலே பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. அவற்றின் படிவங்களையும் விபரங்களையும் பெற்றுக் கொள்வதென்றால் அது இமாலயப் பிரயத்தனமாகும்" என்றார் பேராசிரியர். உண்மை நிலை வெளிவரச் சிலர் தடையாக இருந்து கடமையாற்றுகிறார்களோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

இந்நாடு ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கே சொந்தம், மற்றைய இனத்தவர்கள் யாவரும் பின்னர் வந்த வந்தேறு குடிகளே. பின்னையவர்கள் முன்னையவர்களின் (பெரும்பான்மை இனத்தவர்களின்) முன்னுரிமை அடிப்படையை அடையாளங் கண்டு நன்கு அனுசரித்துச் செல்ல வேண்டும் அல்லது வன்முறைகள் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் என்ற ரீதியில்தான் இன்று நடைமுறை வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது. தமிழர்களுக்குச் சார்பான அகழ்வாராய்ச்சி முடிவுகளைக் கூட, மூடி மறைக்க எத்தனிக்கிறார்கள். அந்தக் கண்ணோட்டத்தில் ஒரு சிங்கள பௌத்த மதகுருவின் பார்வையில் இராமநாதன், அருணாசலம் போன்றவர்களே இந்நாட்டின் இனப் பிரச்சினையை முதலில் உருவாக்கியவர்கள் என்றும் பெரும்பான்மையின மக்கள் எக்காலத்திலும் இனரீதியில் நடந்து கொள்ளவில்லை என்றும் கூறி வருவது வியப்பன்று.

"ஒருவருக்கு ஒரு வாக்கு" என்ற அடிப்படையில் வாக்குரிமை சகலருக்கும் வழங்கப்பட்டால் பெரும்பான்மையின மக்களை மற்றைய இன மக்கள் அடிமைப்படுத்தக் கூடும் என்பதைச் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் (அதாவது பொது வாக்குரிமை அளிக்கப்பட்ட 1931 ஆம் ஆண்டுக்கு முன்) வாழ்ந்த சிறுபான்மையினத் தலைவர்கள் தமது புத்திசாதுர்யத்தினால் ஊகித்து உணர்ந்து கொண்டனர். அதுமட்டுமல்ல, சிங்கள இனத் தலைவர்களின் அன்றைய கால நடவடிக்கைகளும் அவர்களின் உட்கிடக்கையை வெளிப்படுத்தி நின்றன. இதனால்தான் நடைபெறப் போவதை ஊகித்து எச்சரிக்கை செய்த தமிழர்கள் இனவாதிகள் என்று அடையாளம் காட்டப்பட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் எமக்குப் பிடிக்காதவர்களை ஓரம் கட்ட வேண்டும் என்றால், எமது குற்றங்களை மூடி மறைக்க வேண்டும் என்றால், எமக்கு எதிரானவர்களைப் பயங்கரவாதிகள், நக்ஸலைட்டுகள், அடிப்படைவாதிகள் என்று அவர்களை முத்திரை குத்துவது தான் இன்றைய நாகரிகக் காலப் போக்கு! இவை பற்றி இனி வருங் கட்டுரைகளில் விரிவாக விளங்கப்படுத்துவேன்.

முதலில் சகோதரர் இருவரினதும் வம்ச வரலாற்றை நோக்குவோம்:

முன்னர் யாழ்ப்பாண அரசன் பரராஜசேகரன் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவரின் பிரதம மந்திரியாக விளங்கிய மானா முதலியாரே இவர்களின் முன்னோராவார். பாய் என்றால் பரப்பு, பரவு என்று பொருள்படும். பரந்திருக்கும் நிலப்பரப்பைப் பாய் என்பார்கள். மானா முதலியாரும் அவரின் வம்சத்தவர்களும் வாழ்ந்த பூமி காலக்கிரமத்தில் மானிப்பாய் என்று அழைக்கப்பட்டது. மானாப்பாய், மானிப்பாய் என்று வழங்கப்பட்டதோ நான் அறியேன். ஆனால், மானா முதலியாரின் வம்சத்தவர்கள் மானிப்பாயிற் தான் காலாதி காலமாகக் குடியிருந்து வந்துள்ளார்கள். இக்குடும்பத்தவர்கள் இறைபக்தி, கொடைத்தன்மை, அஞ்சாமை ஆகிய குணங்களுக்குப் பெயர் போனவர்கள்.

மானா முதலியாரின் மகன் கதிர்காம முதலியார் கணக்கராகப் (Accountant) பதவி வகிக்கும் போது, சங்கிலி என்பான் அரசன் பரராஜசேகரனை நாட்டை விட்டு விரட்டி விட்டுத் தானே அரசனாகப் பதவியேறி இருந்தான். நாடு போர்த்துக்கேயர் வசம் சென்றடைந்தது. சங்கிலி 1617 இல் சிரச்சேதம் செய்யப்பட்டான். கதிர்காம முதலியாரின் பின் அவர் மகன் உலோகநாத முதலியார் கணக்கராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அடுத்து பதவிக்கு வந்தது அவர் மகன் மாதவ முதலியார். கணக்கர் என்ற பதவி முக்கியமானதாக இருந்தது அக்காலத்தில். நடைபெறும் கொடுக்கல், வாங்கல்கள் கணக்கரால் எழுத்தில் பதியப்பட்டன. ஆகவே, அவர்கள் எண்ணும் எழுத்தும் படித்தவர்களாக இருந்தார்கள். காணிகள் பற்றிய சகல விபரங்களையும் கணக்கர் தம் வசம் வைத்திருந்தார். அவருக்கு உதவியாகப் பல அலுவலர்கள் கடமை புரிந்தார்கள். மத ரீதியாகப் போர்த்துக்கேயர் தங்கள் சமயத்தைத் திணிக்கப் பார்த்தார்களே ஒளிய, உள்ளூர் நிர்வாக முறைகளில் அவர்கள் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை. அவற்றைத் தம் பாட்டில் நடக்க விட்டனர். ஆகவே, கணக்காளர்களும் தொடர்ந்து பதவியில் இருந்து வந்தனர். ஆனால், போர்த்துக்கேயர் ஒரு அளவுக்கும் டச்சுக்காரர் கூடுதலாகவும் வெள்ளிப் பணத்துக்காகப் பதவிகளை விற்றுப் பணமாக்கத் தலைப்பட்டனர். பணம் கை மாறியதும் கணக்கர் போன்ற பதவிகளைப் பரம்பரை சமூகத் தலைவர்களிடம் இருந்து பறித்து பணம் கொடுத்தவர்களிடம் கையளித்தனர். மாதவ கணக்கர் காலத்தில் அவர் பதவியின் தரம் இதன் காரணத்தால் குறையத் தொடங்கியது. அத்துடன், காணி டாப்புகள் டச்சுக்கார காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

மானிப்பாயின் கணக்கர் என்ற பதவி இருந்தும் பவிசு பறிபோயிற்று. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அவரின் கடமைகளை ஆற்றினார்கள். மாதவ முதலியார் 1735 இல் இறக்க அவர் மகன் கதிர்காமர் அரசாங்க ஊழியம் தேடாது தமது சொத்துகளைப் பரிபாலித்து வந்தார். அவர் மகன் தில்லையம்பலமே சேர் பொன். இராமநாதனின் பாட்டனாரின் தந்தையார். பாட்டனாரின் பெயர் அருணாசல முதலியார். தந்தையார் பெயர் பொன்னம்பல முதலியார். ஆகவே, சேர் பொன். இராமநாதனும் அவர் சகோதரர்களும் தந்தை வழியில் மானா முதலியாரின் வழித் தோன்றல்கள். தாய் வழியில் அவர்கள் மானா முதலியாரின் சமகாலரான காராளபிள்ளை ஆராய்ச்சியின் வழித்தோன்றல்கள். ஆராய்ச்சிகளும் சமூகத்தில் மிக மதிப்புடன் வாழ்ந்து காலக்கிரமத்தில் தான் பதவி இறங்கினர். தமிழ் அரசன் காலத்தில் அவர்கள் முக்கிய பதவி வகித்தார்கள். சேர் பொன். இராமநாதனின் முன்னோர்கள் பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறார் எம்.வைத்தியலிங்கம் அவர்கள் தமது நூலில். வாசகர்களுக்கு மேலும் விபரங்கள் தேவையெனில் அவர் நூலை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். பொன்னம்பல முதலியாருக்கு குமாரசுவாமி, இராமநாதன், அருணாசலம் என மூன்று மகன்மார்கள். மூன்று பேருமே இலங்கையின் சமூக, அரசியல், நிர்வாகத் துறைகளில் பிரசித்தி பெற்று விளங்கினர்.

குமாரசுவாமி 1893 இல் சேர் பொன். இராமநாதனின் விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சட்ட மன்றத்திற்கு தமிழர் சார்பாக நியமிக்கப்பட்டார். இராமநாதன் போலவே, துணிவுடன் மக்கள் உரிமைகளுக்காகப் போராடியவர் அவர். அவரும் ஒரு சட்ட உரைஞர். தொடர்ந்து 20 ஆண்டுகள் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருந்தவர். அவருந் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் சிறந்த அறிவு படைத்திருந்தார். தமது சமகாலத்தில் இலங்கையின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார். யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அரசினர் நிதியுதவியோடு இயங்குவதற்கு அவரே காரண கர்த்தா. அவர் நிதியளித்துத் தொடங்கிய இரு புலமைப் பரிசில்கள் அக்கல்லூரியில் இற்றைவரை நடைமுறையில் உள்ளன என நம்புகிறேன்.

1906 ஆம் ஆண்டு டிசெம்பர் 7 ஆம் திகதி அவர் காலமானபோது, "இலங்கை ஒப்சேவர்" பத்திரிகை பின்வருமாறு அவர் பற்றிக் குறிப்பிட்டது- "தமிழ் மக்கள் இற்றைவரை அவரிலும் (முதலியார் பொன்னம்பலம் குமாரசுவாமியிலும்) பார்க்க சிறந்தவரையுங் சுதந்திர மனப்போக்குடையவரையும் தம் பிரதிநிதியாகச் சட்ட மன்றத்திலே பெற்றதில்லை." உண்மையில் அவர் சேர் பொன். இராமநாதனிலும் பார்க்க, விவேகமுடையவராய்த் திகழ்ந்தார் என்று வரலாறறிந்தோர் அவர் பற்றிக் கூறுவர். விவேகிகள் யாவரும் மக்கள் நன்மதிப்பைப் பெறமாட்டார்கள். நன்மதிப்புப் பெறுபவர்கள் யாவரும் விவேகிகள் என்று கூறவும் முடியாது!

சேர் பொன். இராமநாதனின் மூத்தவர் குமாரசுவாமி என்றால் இளையவர் அருணாசலம் (1853- 1924). இவர் றோயல் கல்லூரியில் கல்வி கற்று, முதல்வராய்த் தன் பரீட்சையில் சித்தி பெற்று, புலமைப்பரிசில் பெற்று, கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் சென்று, எம்.ஏ. பட்டமும் நாட்டாட்சிப் பரீட்சைத் தேர்வும் பெற்றார். அவர் அரசாங்கப் பதவிகள் பல வகித்தார். அவற்றுள் முக்கியமானது, ரொஜிஸ்ட்ரார் ஜெனரல் (கீஞுஞ்டிண்?ணூச்ணூ எஞுணஞுணூச்டூ) பதவி. 1901 ஆம் ஆண்டிலே குடிசன மதிப்பெடுப்பிற்கென அருணாசலம் வகுத்த திட்டம் ஈடிணையற்ற மிகச்சிறந்த திட்டம் என்று பாராட்டப்பட்டது. அவரின் திட்டம் இன்று வரை நடைமுறையில் இருந்து வருவதாகத் தெரிகிறது.

முப்பத்தெட்டாண்டுகள் அப்பழுக்கற்ற அரசியல் சேவையாற்றி இளைப்பாறினார் அருணாசலம் அவர்கள். மற்றைய சகோதரர்கள் போல் அவரும் சட்ட மன்றத்திற்கு நியமிக்கப்பட்டு அளப்பரிய சேவைகள் ஆற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தினை முதலில் வெளியிட்டு, அதன் பொருட்டு, அயராது உழைத்தவரும் அவரே. இலங்கைச் சமூக சேவைச் சங்கம் அவராலேயே முதன் முதலில் நிறுவப்பட்டது.

தமிழ்ச் சகோதரர் மூவரும், எல்லாவகை ஆற்றல்களுடனும் விளங்கி, நாட்டின் நன்மைக்குத் தம்மை அர்ப்பணித்து, நற்பணிகள் பல செவ்வனே ஆற்றி, இலங்கை மக்கள் அனைவரதும் பாராட்டைப் பெற்றமை வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுதப்பட வேண்டிய விடயம். ஆனால், தமது கடைசிக் காலத்தில் இளைய சகோதரர்கள் இருவரும் மனிதர்களின் மாக்குணத்தைக் கண்டு மனமுடைந்து போனார்கள். இன்று ஆயுதம் எடுக்க வேண்டியதற்கான காரணங்கள் அன்றே தென்பட ஆரம்பித்தன. அவை பற்றி அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

Please Click here to login / register to post your comments.