குடாநாட்டில் ஏற்பட்டுள்ள அவல நிலையால் 1 இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு

* சர்வதேச மன்னிப்பு சபைக்கு கடிதம்

யாழ். மாவட்டத்தில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 ஆயிரம் மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களை சேர்ந்த 3 ஆயிரம் மாணவர்கள், டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய 10 ஆயிரத்து 500 மாணவர்கள் உட்பட ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் இயல்பு நிலையைத் தோற்றுவித்து சுதந்திரமான கல்வியைக் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை ஊடாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தீவிலே 1972 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வித் தரப்படுத்தல் தொடக்கம்இன்று வரை தமிழ் மாணவர்கள், ஆட்சிக்கு மாறி மாறி வந்த ஷ்ரீலங்கா அரசுகளால் வேற்று நாட்டு மாணவர்கள் போலவே நடாத்தப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் மாணவர்கள் மீதான கல்வி ரீதியான நெருக்கடிக்கு அப்பால் தமிழ் மாணவர்கள் குண்டு வீசியும், சுட்டும் அழிக்கப்பட்ட சம்பவங்கள் நிறையவே உள்ளன. 1995 ஆம் ஆண்டு நாகர் கோவில் பாடசாலை மீதான குண்டு வீச்சில் 15 க்கு மேற்பட்ட அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டனர். 1996 ஆம் ஆண்டு சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாரசாமி மானபங்கப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

யாழ். இந்து மாணவன் சோமசுந்தரம் சஞ்சீவன் 13.07.2000 ஆம் ஆண்டு வீதியில் வைத்து படையினரால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

திருகோணமலையில் எதுவித காரணமின்றி 2005 ஆம் ஆண்டு ஐந்து தமிழ் மாணவர்கள் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இறுதியாக முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் 13.08.2006 அன்று விமானப்படையின் குண்டுவீச்சில் 61 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதுடன், 100 இற்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

இவ்வாறு இன்று வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் படையினரால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொன்றழிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் தமிழ் மாணவர்கள் மறந்துவிடும் நிலையில் இல்லை என்பதுவே யதார்த்தம்.

அது மட்டுமன்றி இன்று வரை இராணுவ நெருக்கடி காரணமாக தமது கல்வியைத் தொடர முடியாமல் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மாணவர்களே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாராபட்சமாக நடாத்தப்பட்டு வருகின்றனர்.

2002 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து ஆகிய பின்னரும் கூட தமிழர் தாயகத்தில் உள்ள 52 க்கு மேற்பட்ட பாடசாலைகள் படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபடவில்லை இதன் காரணமாக 20ஆயிரம் இற்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் ஐந்தாவது ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் என்றுமில்லாதவாறு தமிழ் மாணவர்கள் மிக மோசமாக பாதிப்புக்களைச் சந்தித்து வந்துள்ளனர்.

குறிப்பாக, சமாதான காலப் பகுதியில் திருகோணமலையிலும், முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் 70 க்கு மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக ஷ்ரீலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது மிக மோசமான, அப்பட்டமான மனித உரிமை மீறல் சம்பவங்களாக இருந்த போதும் ஷ்ரீலங்கா அரசுகளினால் உருப்படியான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை.

இது உலக நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் விடப்பட்ட மிகப் பெரிய சவாலாகவே நாம் கருதுகின்றோம். இலங்கை ஜனநாயக நாடா? என்ற கேள்வியே ஒவ்வொரு தமிழ் மாணவர்கள் மனிதிலும் எழும் கேள்வியாகவுள்ளது.

குறிப்பாக, கடந்த 11.08.2006 க்கு பின்னர் யாழ்.குடாநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாகவும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தோன்றியுள்ள அசாதாரண சூழல் காரணமாகவும் கிழக்கு மாகாணத்தில் அண்ணளவாக 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் தமது கல்வியை சரியாக தொடர முடியாத சூழலில் சிக்கியுள்ளனர்.

அவர்களில் 5 ஆயிரத்திக்கு மேற்பட்ட மாணவர்கள் நாடளாவிய ரீதியில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள். அத்துடன் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஒரே உயர்கல்வி நிறுவனமான யாழ். பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 6 ஆயிரத்திற்குமேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களும் கூடவே தொழில்நுட்பக் கல்லூரி, கல்வியியற் கல்லூரிகள் மூடப்பட்டதன் காரணமாக 3 ஆயிரம் உயர் கல்வி மாணவர்களும் அத்துடன், வருகின்ற டிசெம்பர் மாதம் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 10 ஆயிரத்தி 500 மாணவர்கள் உட்பட ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களும் தமது கல்வியை தொடரமுடியாத சூழல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ். குடாநாடு தொடக்கம் கிழக்கு மாகாணத்தில் மூதூர், வாகரை, சம்பூர் பிரதேசத்திற்குட்பட்ட 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் பாரிய உணவு, மருந்து தட்டுப்பாட்டை எதிர்நோக்கத் தொடங்கியுள்ளனர். இவை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சமூகப் பெரியார்கள், யாழ். ஆயர் வண அமைப்புக்கள், கடற்தொழிலாளர் சமாசம், மனித நேய அமைப்புக்களென பலர் சுட்டிக்காட்டியுள்ளபோதும் எதுவித முன்னேற்றமும் காணப்படவில்லை. இந்நிலையில் மக்கள் என்ன செய்வதேன்று அறியாது சிரமப்படுகின்றனர்.

எனவே, இப்படியான சூழலில் மாணவர்களால் சுமுகமாக எப்படி கற்க முடியும்.

பாடசாலைகளுக்கு அண்மையிலிருந்து எறிகணை மற்றும் பல்குழல் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. பல பாடசாலைகள் தற்போது படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஊடரங்குச் சட்டம் மாறி மாறி அமுல் செய்யப்படுகின்றது. மக்களுக்கான பிரதான போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. எனவே, இவ்வாறான சூழலில் கல்வியைத் தொடருவது என்பதும் மக்கள் தமது அன்றாட கடமைகளை சுதந்திரமாக செய்வது என்பதும் சாத்தியப்படாத ஒன்றாகும். மக்களின் சிவில் செயற்பாடுகள் முற்றாக குழம்பியுள்ள இந்த நிலை மாறினால்தான் சரியான சூழல் தோற்றுவிக்கப்பட்டு மக்கள் சற்றேனும் நிம்மதியாக வாழ முடியும். எனவே, இன்று யாழ். குடாநாட்டில் தொடரும் மாணவர் பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு மதிப்பளித்து பல்கலைக்கழக மாணவர் கோரிக்கைகளுக்கு இணங்கி படையினரால் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவன் பகீரதனை விடுதலை செய்து கற்றலுக்கான சரியான புறச்சூழலை உருவாக்கி மாணவர்களின் அடிப்படைக் கல்வி உரிமையை நிலைநாட்ட வேண்டியது இலங்கை அரசினதும், சர்வதேச சமூகத்தினதும் கடமையாகும்.

எனவே, அசாதாரண சூழல் நிலவும் தமிழர் தாயகப் பகுதிகளில் இயல்பு நிலை உருவாக்கி மாணவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து சுதந்திரமாக கல்வி கற்கக்கூடிய சூழல் தோற்றுவிக்குமாறு வேண்டுகிறோம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, இணைத் தலைமை நாடுகள், இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு, அரச அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Please Click here to login / register to post your comments.