பிரபாகரன் அப்பாவுக்கு ராஜபக்சே வைத்த விஷம்!

ஆக்கம்: இளையசெல்வன், ஜெ.டி.ஆர்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம், உலகத் தமிழர் களிடையே சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சிங்கள அரசின் ராணுவ புலனாய்வுத் துறையின் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேலுப்பிள்ளையின் மரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ராணுவத்துறையின் பேச்சாளர் உதய நாணயக்கார, ""பக்கவாத நோயினால் அவதிப்பட்டு வந்த வேலுப்பிள்ளை, உடல்நலம் சரியில்லாத நிலையில் இயற்கை மரணமடைந்து விட்டார்'' என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சிங்கள அரசின் உயர் பாதுகாப்பு வட்டாரங்களிலிருந்து நமக்கு கிடைக்கிற தகவல்களோ, ""பிரபாகரனின் தந்தையின் மரணம் இயற்கையானது அல்ல; அவர் கொல்லப்பட்டிருக்கிறார்'' என்று கூறி அதிரவைக்கின்றன.

ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்திய இறுதிக்கட்ட போரின் போது, பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையும் தாய் பார்வதியும் மக்களோடு இணைந்து ராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவர்களை கைது செய்து, முள்கம்பிகளால் சூழப்பட்ட வவுனியாவின் வதை முகாமில் அடைத்து வைத்தது ராணுவம். வவுனியா முகாமிலிருந்து புலிகளை பிரிக்கிற நடவடிக்கையில் ராணுவத்தினரை ஈடுபடுத்திய மகிந்தராஜபக்சே, பிரபாகரனின் பெற்றோர்களை கொழும்புக்கு கொண்டுவர உத்தரவிட்டார்.

சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்படுகிற புலிகளை யும் தமிழர்களையும் சித்திரவதை செய்வதற்கென்றே.... கொழும்பில் ராணுவ புலனாய்வுத் துறையினரால் சில முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த சித்தரவதை கூடத்திற்கு "4-வது மாடி' என்று பெயர்.மகிந்தராஜபக்சேவின் உத்தரவின்பேரில் பிரபாகரனின் பெற்றோர்களை கைது செய்து கொழும்புக்கு கடத்திச் சென்ற ராணுவம், இந்த கூடத்தில்தான் அவர்களை அடைத்து வைத்தது. இந்த சம்பவத்தை அறிந்த மனித உரிமை அமைப்புகள், ""பிரபாகரனின் பெற்றோர்களை ராணுவ தடுப்பு முகாமிலிருந்து விடுதலை செய்து, அவர்களின் உறவினர்களிடம் செல்ல அனுமதிக்க வேண்டும்'' என்று உரத்து குரல் எழுப்பின. ஆனால் இதனையெல்லாம் காதிலே வாங்கிக்கொள்ளவில்லை ராஜபக்சே சகோதரர்கள். அதேசமயம், அந்த கூடத்தில் தொடர்ந்து அவர்கள் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் என்று தகவல்கள் வந்துகொண்டே இருந்தன.

இந்த சூழலில் கொழும்பிற்குச் சென்ற தமிழக நாடாளுமன்ற குழுவினரும் "பிரபாகரனின் பெற்றோர்களை சந்திக்க வேண்டும்' என்று கேட்டபோது ‘"அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களை சந்திக்க அனுமதிக்க முடி யாது' என்று மறுத்துவிட்டனர் ராஜபக்சே சகோதரர்கள். கனடாவில் இருக்கும் பிரபா கரனின் அக்காள் வினோதினி, "என் பெற்றோர் களை என்னிடம் அனுப்பி வைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். இதற்கும் செவிசாய்க்கவில்லை ராஜபக்சே. இப்படியே 7 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது வேலுப்பிள்ளை மரணமடைந்து விட்டார் என்று அறிவித்திருக்கிறது சிங்கள அரசு.

பிரபாகரனின் தந்தையின் மரணம் பற்றி, சிங்கள அரசின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வட்டாரங்களில் பேசிய போது, ""கடந்த ஜூலை 2-ந்தேதி கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டு ராணுவ முகாமில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டனர்.போரின் விளைவுகள் வேலுப்பிள்ளையை மனதளவில் பாதித் திருந்தாலும் உடல் ரீதியாக எந்த பிரச்சினை யும் அவருக்கு இருந்திருக்கவில்லை. வயது முதிர்வின் ( 86 வயது ) காரணமாக அவரது உடலில் சுருக்கங்கள் இருந்தன. அவரது உடல் ஆரோக்கியமாக இருந்தது. இதற்கு காரணம் அவருக்கு எந்த நோயும் இல்லை என்பதால் தான். பக்கவாத நோயும் நீரிழிவு பிரச்சினையும் பிரபாகரனின் தாய் பார்வதிக்குத்தான் இருந் தது. இப்போதும் இருக்கிறது. ஆனால் பக்கவாத நோய் பிரபாகரனின் தந்தைக்கு கிடையாது. முறையான சத்தான உணவுகள் வழங்காமல் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டபோதும் வேலுப்பிள்ளை கலங்கியதில்லை. தைரியமாக இருந்தார். ராணுவத்தினரின் கெடுபிடிகளை எதிர்கொண்டார்.அவரது உடல் ஆரோக்கியமாக இருந்ததால்தான் ராணுவத்தினரின் கொடுமைகளை வேலுப்பிள்ளையால் தாங்கிக்கொள்ள முடிந்தது. இந்நிலையில், ‘ 4வது மாடி கூடத்திலிருந்து கடந்த நவம்பர் மாதத்தில் பணகொடா ராணுவ முகாமிற்கு பிரபாகரனின் பெற்றோர்கள் மாற்றப்பட்டார்கள். இங்கும் அதேநிலைதான் தொடர்ந்தது. ஆனால் இந்த ராணுவ முகாமிற்கு வந்த சிறிது நாட்களில் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதற்காக ராணுவ மருத்துவமனைக்கு 4 முறை அழைத்து செல்லப்பட்டவருக்கு நிறைய இன்ஜெக்ஷன்கள் போடப்பட்டன.இந்த இன்ஜெக்ஷன்களில் மெல்ல கொல்லும் விஷம் சேர்க்கப்பட்டதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதனால்தான் அவருக்கு மரணம் நேர்ந்துள்ளது என்பது எங்களது சந்தேகம்' என்கிறார்கள்.

கொழும்பு தேசிய மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்த போது, ‘"புதன்கிழமை 7 மணிக்கு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவரை மருத்துவமணைக்கு ராணுவம் கொண்டு செல்லவில்லை. சுமார் ஒரு மணி நேரம் அவரது சத்தம் ராணுவ முகாமில் எதிரொலித்து பிறகு அடங்கி விட்டது. அதன்பிறகே ராணுவத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர் ராணுவ மருத்துவமனை டாக்டர்கள். அதே சமயம் அவரது உடல் கருமையடைந்திருக்கிறது. விரல் நகங்கள் நீல நிறத்தில் இருப்பதையும் சில டாக்டர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனால் பிரபாகரனின் தந்தை விஷம் வைத்தே கொல்லப்பட்டிருக்கிறார்'' என்கின்றனர் தேசிய மருத்துவமனை டாக்டர்கள்.

ஆக புதன்கிழமை இரவு 8 மணிக்கெல்லாம் நிகழ்ந்து விட்ட இந்த மரணத்தை உடனடியாக அறி விக்காத ராணுவத்தரப்பு, மறுநாள் வியாழக்கிழமை மதியமாக தெரிவித்திருப்பதிலேயே அவரது மரணம் இயற்கையாக நிகழவில்லை என்பது உறுதியாகிறது என்றும் டாக்டர்கள் மத்தியில் எதிரொலிக்கிறது. இவரது மரணம் சந்தேகத்திற் குரியதாக இருப்பதால்..... அதிபர் தேர்தலில் எதிரும் புதிருமாக களத்தில் நிற்கும் ராஜபக்சேவும் சரத் பொன்சேகாவும் இந்த சம்பவத்தை எப்படி அரசியலாக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். ராஜ பக்சே தரப்பினர்,'' ""ஆட்சி யில் நாங்கள் இருந்தாலும் ராணுவத்தின் உயர் அதி காரிகள், இரண்டாம் நிலை அதிகாரிகள் பலரும் சரத் பொன்சேகாவின் விசுவாசிகளாகத்தான் இருக்கிறார்கள்.அவர்கள்தான் இந்த சம்பவத்திற்கு காரணம். அதனால் எங்கள் கஸ்டடியில் இருக்கும் அவர்கள் இறந்து போனால் தமிழர்களின் கோபம் ராஜபக்சே மீது திரும்பும். அதன் மூலம் தேர்தலில் ராஜபக்சேவிற்கு எதிரான வாக்குகளை முழுமையாக பெற்றுவிடலாம் என்று கணக்கிட்டே சரத்பொன்சேகாவின் ராணுவ விசுவாசிகள் இந்த சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்'' என்று பேசத் துவங்கியிருக்கிறார்கள்.

அதேசமயம் சரத்பொன்சேகா வட்டாரமோ, ""போர் வெற்றிக்கு நாங்கள் மட்டுமே உரியவர்கள் என்று சொந்தம் கொண்டாடுகின்றனர் ராஜபக்சே சகோதரர்கள். ஆனாலும் சிங்களவர்களின் ஒரு பகுதி வாக்குகள்தான் அவர்களுக்கு கிடைக்ககூடிய சாத்தியம் இருக்கிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடி வெடுத்துவிட்டதால் தமிழர்களின் வாக்குகள் சரத்திற்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த ஆதரவை தடுக்கும் நோக்கத்திலேயே பிரபாகரனின் தந்தையை சாகடித் துள்ளனர். அதாவது ராணுவத்தின் கஸ் டடியில் உள்ள பிரபாகரனின் தந்தையை சாகடிப்பதன் மூலம் சரத்தின் ராணுவ விசுவாசிகள்தான் கொன்றுவிட்டனர் என்று செய்தியை பரப்பிவிட முடியும். இச்செய்தியால்... சரத்மீது தமிழர்கள் ஆத்திரம் கொள்வார்கள்... அதனடிப் படையில் சரத்திற்கு ஆதரவான தமிழர் களின் வாக்கு சூழலை தடுக்கமுடியும் என்று திட்டமிட்டே ராஜபக்சே சகோ தரர்கள் இந்த சம்பவத்தை அரங்கேற்றி யுள்ளனர்'' என்கின்றனர்.

ஆக பிரபாகரனின் தந்தை கொல்லப் பட்டிருக்கிறார் என்பதே கொழும்பு முழுவதும் எதிரொலிக்கிறது. இந்நிலையில் திருச்சி அருகே உள்ள முசிறியில் வசித்து வரும் பிரபாகரனின் சகோதரர் (சித்தப்பா மகன்) டாக்டர் ராஜேந்திரன் என்கிற ராஜப்பாவை சந்தித்தோம். பிரபாகரனின் பெற்றோர்கள் முசிறியில் 3 வருடம் இருந்த போது அவர்களை பாதுகாத்துக் கொண்டவர் இந்த ராஜேந்திரன்தான். நம்மிடம் பேசிய ராஜேந்திரன், ""கனடாவில் இருக்கும் சகோ தரி வினோதினிதான் அப்பா (வேலுப்பிள்ளை) இறந்து போன செய்தியை கதறலோடு எங்க ளிடம் சொன்னார். துடி துடித்துப் போய்விட்டோம். சிங்கள ராணுவத்தின் சித்திர வதைகளில் சிக்கியிருக்கும் அப்பாவை எப்படியாவது கனடாவிற்கோ அல்லது முசிறிக் கோ அழைத்து வந்துவிடவேண்டுமென்று பல வழிகளில் முயற்சித்தேன்.முடியவில்லை.

இறுதியில் அவர் இறந்துவிட்டார்ங்கிற செய்திதான் கிடைத்திருக்கிறது.பக்கவாதத்தால் அவர் இறந்துள்ளார் என்று சிங்கள ராணுவம் சொல்லுது.அது பொய்.ஏன்னா அப்பாவின் உடம்பை பற்றி எனக்கு முற்றிலும் தெரியும்.அவருக்கு பக்கவாத நோயே கிடையாது.அவர் இலங்கை அரசாங்கத்தில் பணி புரிந்தபோதும் சரி... முசிறியில் என்னோடு இருந்த போதும் சரி... மீண்டும் இலங்கைக்கு சென்று பிரபாகரனோடு சேர்ந்துகொண்ட போதும் சரி...உடல் நலத்தில் மிகுந்த அக்கறை காட்டினார்.

அப்பா முறையான உடல்பயிற்சியை தவறாமல் கடைபிடித்தார். போர் உக்கிரமடைந்த காலக்கட்டம் வரை அவருக்கு எந்த நோயும் இல்லை என்பது எனக்கு தெரியும். ராணுவம் அவர்களை கைது செய்து கொழும்பிற்கு கொண்டு சென்றபோது கூட அவருக்கு இந்த நோய் இருப்பதாக எந்த செய்தியும் வரவில்லை. அம்மா பார்வதிக்குத்தான் பக்கவாதம் இருக்கிறது. அது எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்கும் நிலையில், அப்பாவிற்கு பக்கவாதம் என்று கூறி அவரை அநியாயமாக கொன்றுவிட்டனர்'' என்கிறார் நமக்கு கிடைத்த தகவல்களை நிரூபிப்பது போல. மேலும், ""அவருடைய உறவு முறைப்பிள்ளை என்கிற வகையில் ஒரே ஒரு வேண்டுகோள். எங்களுடைய அம்மாவை யாவது ( பார்வதி ) உயிரோடு எங்களிடம் அனுப்பி வைத்து விடுங்கள் என்பதுதான்'' என்று கண்கலங்கினார் மருத்துவர் ராஜேந்திரன்.

ஜனவரி 8-ந்தேதி மாலையில் பனகுடா ராணுவ முகாமிலிருந்து, நீலம் பாய்ந்த வேலுப்பிள்ளையின் உடல் தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட, சொந்த ஊரான வல்வெட்டித்துரைக்கு கொண்டு செல்லப்பட்டது. 9-ந்தேதி இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் திரளாக கலந்துகொள்ள, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முதல்வரிடம் சிறப்பு அனுமதி பெற்று வல்வெட்டித் துரைக்குப் பயணமானார்.

Please Click here to login / register to post your comments.