சிறிலங்க அதிபர் தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் - ஏன்?

ஆக்கம்: எம்.ஜி. தேவசகாயம்
இத்தாலி நாட்டின் மிலன் நகரில் இருந்து செயல்பட்டுவரும் சுதந்திர அமைப்பான நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal - PPT), இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்ற‌ங்கள் குறித்து அயர்லாந்து தலைநகர் டப்ளினில் பொங்கல் தினத்தன்றும், அதற்கு மறுநாளும் விசாரணை நடத்தியது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் அளித்த சாட்சியங்கள், இதர ஆதாரங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த அத்தீர்ப்பாயம், சிறிலங்க அரசு போர் குற்றவாளியே என்றும், அது மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளது என்றும் தனது முதற்கட்டத் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, சிறிலங்க அரசிற்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாற்று குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் மக்கள் தீர்ப்பாயம் கூறியுள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்க அரச படைகள் கனரக ஆயுதங்களைக் கொண்டு நடத்திய தாக்குதலில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் முல்லைத் தீவுப் பகுதியில் அமைந்திருந்த மக்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிவந்தவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் பலர் இத்தீர்ப்பாயத்தில் சாட்சிமளித்துள்ளனர்.

சிறிலங்க அரசிற்கு எதிராக இந்தக் குற்றச்சாற்றைத்தான் கடந்த பல மாதங்களாக பன்னாட்டு சமூகமும், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும் கூறிவந்தனர். தங்கள் நாட்டு மக்கள் மீதே இப்படிப்பட்ட கொடூர குற்றங்களை இழைத்ததாக குற்றம்சாற்றப்பட்டவர்கள் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோராவர். இவர்களில் மகிந்த ராஜபக்சவும், சரத் பொன்சேகாவும்தான் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள சிறிலங்க அதிபர் தேர்த‌லில் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரையும்தான் போர்க் குற்றவாளிகள் என்றும், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்தவர்கள் என்றும் அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயம் உறுதிபடுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட பின்னணியில், ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளாக தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு அளிப்பது என்கின்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு மாற்றாக, சிறிலங்க அதிபர் தேர்தலை முற்றிலுமாக புறக்கணிப்பது என்று முடிவெடுக்க வேண்டும்.

சரியான நேரத்தில் அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயம் இவர்களின் குற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது என்பது மட்டுமின்றி, தேர்தலை புறக்கணிப்பது என்பதற்கான ஆழமான வேறு பல காரணங்களும் உள்ளன:

1) சிறிலங்க அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பேய்க்கும் பெருங்கடலிற்கும் இடையிலான தெரிவு என்று கூறப்படுகிறது. இரண்டுமே பேய்தான், இதில் தமிழர்களுக்கு எந்த இடமும் இல்லை.

2) இந்த இருவரில் யாருக்குத் தமிழர்கள் வாக்களித்தாலும், தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றமிழைத்த, மானுடத்திற்கு எதிரான குற்றமிழைத்த இவர்களுக்குச் சாதகமான தீர்ப்பாகவே ஆகும்.

3) இன்றுள்ள நிலையில், ஈழத் தமிழர்கள் தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில், அதற்கு ஒரே வழி அதிபர் தேர்தலை புறக்கணிப்பதே என்பதே தமிழ்நாட்டு மக்களின் பெரும்பான்மை கருத்தாக உள்ளது.

4) கடைசியாக, ஆனால் மிக முக்கியமானது இலங்கையில் ஜனநாயகம் நடைமுறையில் இல்லை என்பதே. மக்கள் தீர்ப்பைப் பெற்று சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு நாடகமே அங்கு நடைபெறவுள்ளத் தேர்தல். இதில் தமிழர்களை பங்கேற்கச் சொல்வது ஏமாற்றுச் செயலாகும்.

தேர்தலில் பங்கேற்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறும் ஒரே காரணம், தங்களுக்கு அரசியல் செய்ய இடமில்லாதவாறு, ராஜபக்ச ஆதரவாளர்களான டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும், பிள்ளையானும், ஆனந்தசங்கரியும் அபகரித்துவிட்டார்கள். எனவே, தேர்தலில் பங்கேற்று ராஜபக்சாவை தோற்கடிப்பதன் மூலம் அவர்களை முறியடித்து தங்கள் அரசியல் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதே.

இந்த வாதம் எந்த அளவிற்கு அடிப்படையற்றது என்பதற்கு ஒரு சிங்கள வல்லுனர் கூறிய கருத்தே போதுமானது: “டக்ளஸும், கருணாவும், பிள்ளையானும் தமிழர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும், அதனால் தமிழர் இனப் பிரச்சனைக்கு ஜனநாயக ரீதியிலான ஒரு அரசியல் தீர்வு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால், எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகாவும், இன்று அவரை ஆதரிக்கும் அரசியல் சக்திகளும், அவர்களின் சிந்தனையும், பின்னணியும் வைத்துப் பார்க்கும்போது தமிழர் பிரச்சனைக்கு நியாயமான, பன்முகத்தன்மை கொண்ட ஒரு தீர்வை அவர்கள் அளிப்பார்கள் என்பது சந்தேகமே” என்று கூறினார்.

அதுமட்டுமல்ல, “சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் தமிழர் அரசியலிற்கு இடம் கிடைக்காது, மாறாக, இராணுவ முகாம்களுக்கும், அதி உயர் பாதுகாப்பு மண்டலங்களுக்கும்தான் அதிக இடம் கிடைக்கும்” என்று அந்த நிபுணர் கூறினார்!

எனவே சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை எல்லாவிதத்திலும் இழப்பை நோக்கியதாகவே உள்ளது. இந்த நிலைப்பாட்டினால் அவர்கள் அரசியல் செய்வதற்கு எந்த இடமும் கிடைக்காது, மாறாக, தமிழர்கள் தங்கள் மரியாதையை முழுமையாக இழப்பார்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு புகழ் பெற்ற திருக்குறள் ஒன்றை நினைவூட்டுகிறேன்:

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் எ‌ன்பது இழுக்கு”

(இந்தியா முழுவதும் கால் நூற்றாண்டிற்கு மேலாக பணியாற்றி இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான திரு. எம்.ஜி. தேவசகாயம் அவர்கள், 1964ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் இணைந்து நாட்டுப் பணியைத் துவக்கியவர். 1965ஆம் ஆண்டுப் போரில் ஈடுபட்டு சிறப்பான பணியாற்றியமைக்காக சேவா பதக்கம் பெற்றவர். இராணுவத்தில் போர் அனுபவம், பிரிவினைவாத அமைப்புகளை ஒடுக்கும் பணி, உள்நாட்டுக் கலவரத்தை ஒடுக்குதல் ஆகிய மூன்று பணிகளிலும் பொறுப்பேற்று அனுபவம் பெற்றவர் தேவசகாயம்.)

இந்திய இராணுவத்தில் மேஜராக இருந்த நிலையில் 1968ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்தார். அதன்பிறகு இந்தியா முழுவதும் - குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். இந்திய விடுதலைப் போராட்டத் தலைவரும், பிறகு சோசலிஸ்ட் இயக்கத்தை வழிநடத்தியவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன் உடன் நெருக்கமாகப் பழகியவர் (அவருடன் எனக்கு தகப்பன் - மகன் உறவு இருந்தது என்று பெருமையுடன் கூறுகிறார்). இதேபோல், மானுட சேவைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட மதர் தெரசாவுடனும் இணைந்துப் பணியாற்றிய நல்வாய்ப்பைப் பெற்றவர் (அம்மா என்னை மகனாகவே பாவித்தார் என்று கூறும் தேவசகாயம், இவர்கள் இருவருடனும் பழகியதையே நான் பெரும் பேராகவும், அனுபவமாகவும் கருதுகிறேன் என்று கூறுகிறார்).

Please Click here to login / register to post your comments.