சிகரங்களை நோக்கி புலம் பெயர் தமிழர் - கவிஞர். இணுவையூர். க. சக்திதாசன்

கவிஞர் இணுவையூர் சக்திதாசன் டென்மார்க் தலைநகர் பகுதியில் உள்ள விப்பறுள் என்ற சிறிய நகரில் வாழ்பவர். வாடகைக்கார் சாரதியாக இருந்து வாழ்வின் பக்கங்களை தரிசித்துக் கொண்டிருப்பவர். கவிதை, நாடகம், வில்லுப்பாட்டு என்று படைப்பின் சகல துறைகளிலும் கடந்த கால் நூற்றாண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். நாளை இவருடைய கவிதைத் தொகுதியும், கவியோசை என்ற இறுவட்டும் வெளியாக இருக்கின்றன. தன் கடின உழைப்பால் சிகரங்களை நோக்கி நடக்கும் இவரை இன்று திரும்பிப் பார்க்கிறோம்.

ஒரு அகதியின் கைரேகை என்ற அவருடைய கவிதைத் தொகுதியின் அட்டைப்படமே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அடையாளம் காட்டிவிடுகிறது. அகதியாகி, குழந்தையைக் கையில் ஏந்தி, மண்டையோட்டுக் குவியலுக்குள் சாக்குப் பையுடன் ஒருத்தி. அவளுடைய பின்னணியில் ஒரு கையின் ரேகைககள். தெளிவற்ற அந்தக் கைரேகையின் ஆயுள் முடிவடைய இவளும் மண்டையோடாக வேண்டியதுதான். தாயகத்திற்கும் புலம் பெயர் வாழ்விற்கும் உள்ள தொடர்பை இப்படி அர்த்தப்படுத்துக்கிறது இவருடைய கவிதா முயற்சி. யார் இந்த சக்திதாசன் என்று கேட்டால் பிறந்த இணுவையை மறக்காது பெயரோடு தாங்கி, புத்தகம் வெளியிடுமளவிற்கு முன்னேறிய புலம் பெயர் தமிழர் என்று எளிமையாகக் கூறிவிடலாம்..

புலம் பெயர் தமிழர் வாழ்வென்பது இரு பெரும் கிளை நதிகளாக ஓடுகிறது. ஒன்று பணத்தையும், நகைகளையும் சேர்த்து, வீடு வளவை வாங்கி, பிள்ளைககளை என்ஜினியராகவோ, டாக்டராகவோ உருவாக்கி, பிள்ளைகளுக்கு சீதனப் பணத்தைச் சேமித்து, சாதி சனத்திற்குள்ளேயே மணமுடித்துக் கொடுத்து மண்டையைப் போட ஓடிக்கொண்டிருக்கிறது. அன்று உயிரைக்காக்க டென்மார்க் புலம் பெயர்ந்து இன்று சாதியைக் காக்க இங்கிலாந்திற்கு புலம் பெயரவும் தயாராக நிற்கிறது..

இன்னொரு பிரிவு கலை, நடனம், நாடகம், கவிதை என்று காசைக் கரியாக்கி, புத்தகம் வெளியிட்டு தனது பெயரைப் பதிந்துவிட்டு கட்டையில் போகத் தயாராகிறது. இந்த இரண்டுமே நம்பிக்கை வரட்சியான பாதைகள்தான். ஆனால் இந்த இரண்டையும் இணைத்து ஒரு மூன்றாவது பாதையைக் காண முடியுமா என்ற போராட்டம் புதுமாத்தளன் போர் முடிவுக்குப் பின் புலம் பெயர் நாடுகளில் தொடங்கியிருக்கிறது. அதன் ஆரம்பக் குரலை தரும் கவிஞர்களில் ஒருவராக மிளிர்கிறார் சக்திதாசன்..

கவிதை என் தொழிலல்ல பொழுது போக்கு என்கிறார். தான் எழுதிப் போக்கிய பொழுதுகள் கூட மற்றவருக்குப் பயன்பட வேண்டுமென எண்ணி அவற்றை தொகுப்பாக்கித் தருகிறேன் என்கிறார். அப்பொழுது பறவைக்கிருக்கும் சுதந்திரம் கூட மனிதனுக்கு இல்லை என்று ஓரிடத்தில் கூறிவிட்டே கவி தருகிறார். இது அவருடைய கவித்துவ நேர்மையாகும். ஆகவே அவருடைய கவிதைகளைப் படித்துவிட்டு, கண்களை மூடிச் சிந்தித்தால் அவர் சொல்லாத மௌன மொழிகளை நாம் எளிதாகப் பிடித்துவிடலாம்..

புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் அவ்வப்போது பல கலைஞர்கள் தோன்றுவதும், கலைத்தாகம் தீர்த்து காளான்கள் போல மறைவதும் வழமை. சக்திதாசனும் அப்படியொரு குறுங்கால கலைத்தாகமுடையவரா இல்லையா என்பதைக் காலமே தீர்மானிக்கும் என்று காத்திருந்தேன். ஆனால் அவருடைய ஒவ்வொரு கலை முயற்சியையும் தொடர்ந்து அவதானித்துக் கொண்டே இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் கேர்னிங்கில் நடந்த ஒரு நிகழ்வில் இவர் கவிபாட வந்திருந்தார். ஐந்து நிமிடக் கவிதைக்காக தலைநகரில் இருந்து கேர்னிங் வந்து, எல்லா அசௌகரியங்களையும் தாங்கி கவிபடிக்க தவமிருந்தார். அன்று அவர் படித்த கவிதையை எல்லோரும் கேட்டனர். ஆனால் இந்த ஐந்து நிமிடங்களுக்காக அவர் காத்திருந்த தவம் எத்தகையது என்பதை பின் வரிசையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று அவருடைய கவிதைப் பிரசவத்திற்க்கான காத்திருப்பு என்னைக் கவர்ந்தது.

அவருடைய முதலாவது கவிதைத் தொகுப்பான நெஞ்சத்து நெருடல் வெளிவந்தபோது அவரை நான் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். அதை அவர் இலங்கையில் வெளியீடு செய்ததாக தெரிவித்து என்னிடம் கொடுத்தபோது அதைப் படித்தேன். ஆனால் என்னால் ஆழமாக உள்ளே போக முடியவில்லை. படித்துவிட்டு அதைப்பற்றி அலைகளில் ஒரு குறிப்புரை எழுதிவிட்டு அமைதியாகிவிட்டேன். இருக்கும் கவிஞர்களின் தொல்லை போதாதென்று என்னையும் கவிஞனாக்காதே என்ற பாடல் வரிகளின் தாக்கம் மனதில் இருந்தது. ஆனால் அவர் சலிப்படையாது காற்றைக் கானமாக்கிய புல்லாங்குழல் என்ற கவிதை நூலை வெளியிட்டபோது அவரைத் திரும்பிப் பார்த்தேன். அதில் ஒரு கவிதைக்கிருந்த சக்தி என்னை அவரை நோக்கி இழுத்தது.

அவர் தொல்லை தராத கவிஞன் என்ற முடிவுக்கு வர அதுவே ஆதாரமாகவும் இருந்தது. அக்கவிதையில் ஒருவன் பூச்செண்டை வாங்கிக் கொண்டு அதைக் கொடுக்க மனைவியை நோக்கி ஆவலாக ஓடி வருகிறான். அதைப் பார்த்ததும் மனைவியின் முகம் மலரும் என்ற துடிதுடிப்பு அவனுடைய உள்ளத்தில். ஆனால் அவளோ சட்டென முகம் சுழிக்கிறாள். இதை வேண்டிவந்த நேரம், ஒரு முருங்கை இலைக்கட்டை வேண்டி வந்திருந்தால் வறுத்துச் சாப்பிட்டிருக்கலாம் என்று அவள் கூறுவாள். மனைவி புலம் பெயர் தமிழ் சமுதாயம், பூச்செண்டு புலம் பெயர் வாழ்வில் கலை இலக்கியம் படுகின்ற பாடு என்பது கவிதையின் குறியீடு. இந்த ஒரு கவிதை போதும் சக்திதாசன் கவிதையின் உரிப் பொருளையும், அதன் படிமங்களையும் அடையாளம் கண்டுவிட்டார் என்பதைப் புரிந்து கொள்ள. நான் படித்த இரண்டாவது கவிதைத் தொகுதிக்குப் பின்னர் அவருடைய மூன்றாவது கவிதைத் தொகுதி எனது வேலைப்பழு, காலத்தின் செலவு எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவரைத் தேடி ஓடிப்போக வைத்தது. அன்று கேர்னிங் நகருக்கு போகவர 500 கி.மீ பயணித்து ஐந்து மணி நேரம் காத்திருந்து ஐந்து நிமிடக் கவி படித்து ஆனந்தமடைந்த சக்திதாசனைப் போல, இன்று 500 கி.மீ தாண்டிச் சென்று ஐந்து நிமிடங்கள் அவருடைய நூலைப் போற்றுவது எனக்கு ஆனந்தம் தந்தது.

இதுவே இணுவையூர் சக்திதாசனிடம் நான் கண்ட படிமுறையான வளர்ச்சியாகும். சக்திதாசன் என்ற படைப்பாளியின் சிறப்பம்சம் அவர் எதையும் பொய்யாக எழுதாதிருப்பதுதான். அவர் அனுபவத்திற்கு வெளியில் சென்று கவி புனைந்திருந்தால் அங்கு பொய்மை தெரிந்திருக்கும், ஆனால் ஓர் இடத்தில்கூட பொய்ம்மை இல்லை. கவிதை எழுதும்போது நம் கவிதையை யாரெல்லாம் படிப்பார்கள் என்று தெரிந்து எழுத வேண்டும். எனவே படிப்போர் புரியும்படியான வளமான எளிய சொற்கள் கவிதைக்கு அவசியம். அந்தவகையில் அவர் கவிதைகள் வாசகன் தடக்குப்பட்டு விழாமல் ஓடக்கூடிய தெளிவான சொற்களால் கட்டப்பட்டுள்ளன.

சிங்கள இனவாதத்தின் மீதான தார்மீகக் கோபம், போராட்டத்தின் தூய பக்கங்கள் மீதான நேசம், புலம் பெயர் வாழ்வின் மீதான யாழ்ப்பாணத்து எள்ளல் இவைகளே அவர் கவிதைகளின் அடி நாதமாக உள்ளன. உள்ளத்துள்ளது கவிதை, இன்ப உருவெடுப்பது கவிதை, தௌ;ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்துரைப்பது கவிதை என்ற கவிமணியின் கவிதைக்கான வரையறைகளை அவர் புரிந்து எழுதுகிறாரா என்பதை அவரிடம் கேட்டறிய வேண்டியதில்லை, அவர் கவிதைகளில் அது இருக்கிறது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் மூன்று பக்கங்கள் உள்ளன. ஒன்று அரிசி உலையில் கொதித்துக் குமுறிய முதற் காலம், இரண்டு அது முள்ளிவாய்காலுக்குள் கருகி, அடிப்பிடிக்க வெளிநாடுகளில் பொங்கிச் சரித்த காலம், மூன்றாவது சாதம் முழுவதும் அடுப்பில் பொசுங்கிவிட பானைக்குள் ஏதாவது மீதமிருக்கிறதா என்று அகப்பையால் துளாவும் காலம். சக்திதாசனின் கவிதைகள் பொங்கிச் சரித்த காலத்து கவிதைகளாக உள்ளன..

பொழுது விடியவில்லை.

கூவிய சேவல்.

குழம்பில் கொதிக்கிறது..

என்று பார்க்குமளவிற்கு அவருடைய பார்வையில் கூர்மையும் ஒப்புமையும் தெரிகிறது. ஒரு அகதியின் கைரேகை என்பது அவருடைய மூன்றாவது தொகுப்பு. பொதுவாக கைரேகை என்றால் அதில் கண்டத்துச் சனி, சுக்கிரமேடு, ஆயுள் ரேகையில் வெட்டுக்களும், தத்துக்களும் என்று ஏகப்பட்ட விடயங்கள் உண்டு. அத்தனையையும் பார்த்து நடந்தால்தான் கவிஞன் கவிஞனாக இருக்கலாம், இல்லையேல் அவனுக்காக படிக்காமலே ஆளுக்காள் சூட்டும் வேறொரு பட்டம் காத்திருக்கும்..

தொகுப்பின் ஆரம்பத்தில் இருந்தே சமமான நேர்த்தியும், அவதானமான நடையுமாக அவருடைய படைப்புக்கள் செல்லுகின்றன. ஆனால் நாம் என்னதான் ஊருக்காக உணர்ச்சிக் கவி எழுதிக் கூத்தாடினாலும் ஒவ்வொரு கவிஞனுக்கும் மனச்சாட்சி ஒன்று இருக்கும். அதை நாம் ஏமாற்ற முடியாது, கவிஞன் வாழும் தாய் வீடும் அதுதான்..

தனது தொகுப்பின் நிறைவாக வரும் ஓரிடத்தில் தன்னால் முடியாமல் போய்விடவே இதுவரை பொத்திப் பொத்தி வைத்திருந்த கைகளை விலத்திவிடுகிறார். அவருடைய மனக் கூட்டில் சிறையிருந்த புறா மனச்சாட்சி என்ற கவிதையாக சிறகடித்துப் பறக்கிறது..

உண்மைகள் - சில ஊமையாகிக் கொண்டிருக்க பொய்கள் காலத்தின் நடுவே ஊர்வலம் நடத்துகிறது. மனச்சாட்சி - அது வெளிச்சமாகத்தான் படம் போட்டுக் காட்டுது உள்ளத்தின் உள்ளேயும்..

என்று அக்கவிதை முடிவடைகிறது. இந்த ஒரு கவிதை போதும் சக்திதாசன் சக்தி மிக்க புலம் பெயர் படைப்பாளிக்குரிய அடையாளங்களைப் பிரதிபலிக்கிறார் என்பதற்கு. ஏனென்றால் கவிதை கவிஞனின் உள்ளத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். இல்லையேல் அது கவிதையாக முடியாது என்பது கவிமணி கருத்து..

ஒரு மனிதன் தன்னை ஒரே தடவையில் சிறந்த படைப்பாளியாகக் காட்டிவிட முடியாது. நீண்ட நெடிய படைப்பியல் உழைப்பே அவனை உலகின் முன் அடையாளம் காட்டுகிறது. கவிதைப் படிப்பால் கவிப்பட்டம் பெற்றவர்கள் பலர், கடின உழைப்பால் கவிஞர்களானவர் சிலர். அந்தச் சிலரில் டென்மார்க் விப்பறுள் நகரில் வாழும் இணுவையூர் சக்திதாசன் சிறப்பிடம் பெறுகிறார்.

Please Click here to login / register to post your comments.