நலன்களை நல்கும் விகிர்தி வருடப் பிறப்பு

பருவங்களில் சிறந்தது இளவேனிற் பருவம். இளவேனிற் காலத்தின் முதல் மாதமே சித்திரை தான். தமிழ் மக்கள் புத்தாண்டுப் பிறப்பும் சித்திரை மாதப் பிறப்பும் ஒன்றாகவே இடம்பெறும்.சித்திரை மாதத்தில் மல்லிகையும் முல்லையும் மலர்ந்து மணம் பரப்பி மக்களை மகிழ்விக்கும். தேமாவும் தீம்பலாவும் இனிய பழங்களை மாந்தருக்கு வாரி வழங்கும். சிறப்பான வைதீக காரியங்கள் ஆற்றவும் சிறந்த காலம் இது. முத்தமிழ் போல் முக்கடல் சூழ் குமரி முனை வளரும் உத்தமியே ஸ்ரீ சக்கரன் தன்னில் உதித்தவனே அத்தருணத்திலும் எனைப் பிரியாமல் எனக்கிரங்கி சித்திரைத் திங்களில் வந்தருள் செவ்வாய் சிவக்கொழுந்தே அகத்தியர் விகிர்தி என்றால் நலன்களைத் தருவது என்று பொருள். விகிர்தி வருடம் என்னும் நாமத்தோடு சிரித்து வருகின்றாள் சித்திரை அணங்கு. இஃது பொன்னான பொலிவான காலம். ஆறு வகைப் பருவங்களும் சிறந்து விளங்கும் இவ்விளவேனிற் காலத்திலே பூ மழை பொழிந்து இனிய மணம் பரப்பி, நறுங்கனிகள் தந்து எம்மை மகிழ்விப்பவள் சித்திரையாள்.

இவளே தமிழ்ப் புத்தாண்டின் நுழைவாயிலாக அமைகின்றவள். ருதுக்களுள் வசந்த ருதுவாக இருப்பேன் என்கின்றது கீதை. சைத்ரா என்றும் "சைத்ர விஷû' என்றும் அழைக்கப் பெறும் இக்காலத்திலே, சித்திரை மாதம் முதல் நாளன்று, கல்ப் பத்திலுள்ள யுகத்தின் ஆரம்பத்தில் பிரம்ம தேவன் உலகைப் படைத்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சித்திரை மாதம் பூரணையோடு கூடிய காலமாதலால் சித்திரை மாதம் என்றழைக்கப்பட்டது. இஃது இராசிச் சக்கரத்திலுள்ள பன்னிரண்டு இராசிகளுள் ஆறாவதான கன்னி ராசியிலும் அடுத்த துலா ராசியிலுமுள்ள மண்டலத்தைச் சாரும். நட்சத்திர வரிசை பதினான்காவது இடத்தையும் வகிக்கின்றது.

இச் சித்திரை மாதத்தில் மழை நீங்கி, ஆதவன் வெளிப்பட உலகம் பிணி, பீடை நீங்கி, ஆரோக்கியமாக இயங்க ஆரம்பிக்கின்றது. இத் திங்களில் இரு பெருஞ் சுடர்களும் ஒளி தர இரவும் பகலும் செம்மையாகத் தோன்ற மக்கள்,மாக்கள், கால்நடைகள், பயிர்கள் தழைத்து இன்புறும். இனி புதுவருடப் பிறப்பு பற்றி நோக்குவோம். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி விரோதி வருடம் பங்குனி மாதம் 30ஆம் திகதி வைகறை 5. 21 மணிக்கு அபரபக்க அமாவாசைத் திதியில் ரேவதி நட்சத்திரத்தில் மீன லக்கினத்தில் விகிர்தி வருடம் பிறக்கின்றது. அன்றைய தினம் பின்னிரவு 1.21 முதல் சித்திரை 1ஆம் திகதி புதன்கிழமை காலை 9.21 வரை விஷû புண்ணிய காலமாகும்.

இப்புண்ணிய காலத்தில் யாம் எல்லோரும் முறைப்படி மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்தாக வேண்டும். ஸ்நானம் செய்யும்போது சிரசிலே விளா இலையை வைத்து காலிலே கடப்பமிலையை வைத்து ஸ்நானம் செய்தல் முறையாகும். அன்றைய தினம் மஞ்சள் நிறப் புத்தாடை அணிதல் உத்தமம். அல்லது வெள்ளை, சிவப்பு நிறக் கறையுள்ள பட்டாடையணிதல், பவளம், முத்து, வைரம், புஷ்பராகம் இழைத்த ஆபரணமணிதல் விசேடமாகும். ஸ்நானம் முடித்து சுகந்த சந்தனம் பூசி, நவமலர்களைச் சூடி, கணபதியை வணங்கி, குலதெய்வ வழிபாடு செய்து இல்லத்திலே சூரிய பகவானுக்குப் பொங்கல் செய்தாக வேண்டும்.

அன்றைய தினம் ஆலய தரிசனம் செய்தல் முறையாகும். பொங்கலின் பின் படையல் செய்து பெற்றோர், மூத்தோர், குரு, உற்றார், உறவினர் ஆகியோரை வணங்க, அவர்கள் ஆசி பெற்று அறுசுவை உணவு உண்டு மகிழ்தலும் மரபாகும். அன்றைய உணவில் வேப்பம்பூ சேர்த்து அறுசுவைகளுடன் உணவு தயாரித்தல் வேண்டும். வருடம் பிறந்ததும் மங்கலப் பொருட்களான நிறை குடம், கண்ணாடி தீபம் ஆகியவற்றைத் தரிசித்தல் முக்கியம். தொடர்ந்து பெரியவர்கள் மூலம் இவ்வருடத்துக்குரிய பஞ்சாங்க பலனைக் கேட்டறிதல் வேண்டும். அன்றைய தினம் இயன்ற அளவு தானம் செய்தலும் நற்செயலாகும். அடுத்து வருடப் பிறப்பன்றைய ஸ்நானத்தில் முக்கிய இடம்பெறும் மருத்து நீர் பற்றி நோக்குவோம். சகல தோஷங்களையும் நீக்கவல்ல மருத்து நீரை, சுத்தமான நீரில், தாழம்பூ தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை இட்டு நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லத்திலே இதனைக் காய்ச்சிக் கொள்ள இயலாதவர்கள் இப்புனித மருத்து நீரை, ஆலயங்களிலே அந்தணப் பெரியோர் மூலம் பெற்று ஸ்நானம் செய்தாக வேண்டும். இவ்வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் ஸ்நானம் செய்தாக வேண்டும். இவ்வருடம் தோஷமுள்ளதாகக் கருதப்படும் நட்சத்திரங்கள் பின்வருமாறு:

மகம், பூரம், ஆயிலியம், உத்தரம் 1ஆம் கால், கேட்டை, பூரட்டாதி 4 ஆம் கால், உத்தரட்டாதி, ரேவதி ஆகியவையாம். புதுவருடம் அமாவாசைத் திதியில் பிறப்பதால் புதன்கிழமை காலை 1.009.30 வரை கை விசேஷம் பரிமாறிக் கொள்ளலாம். இவ்வருட பலனின்படி இயற்கையில் நல்ல மாற்றங்கள், நன்மாரி, அதிக விளைச்சல், வளங்கள் சிறத்தல், மாடு, கழுதை போன்ற பிராணிகள் நோய்வாய்ப்படல் ஆகிய பலன்கள் உண்டாம்.

வருடப் பிறப்பன்று ஆலய தரிசனம், சூரிய பொங்கல், விருந்துண்ணல், இயன்ற அளவு தான தருமம் செய்தல், பஞ்சாங்க பலன் கேட்டல், மாலையில் உறவினர் வீடு செல்லல் ஆகிய சம்பவங்கள் இடம்பெறுதல் பண்டு தொட்டு எமது முன்னோர் கடைப்பிடிக்கும் நிகழ்வுகளாம். இதில் பஞ்சாங்க பலன் கேட்டல் என்பது முக்கியம் வாய்ந்ததொன்றாகும். இதன் மூலம் அவ்வருடம் முழுவதும் எமக்கும் எமது நாட்டுக்கும் எத்தகைய பலன்கள் இடம்பெறவுள்ளன என்பதை யாம் மேலோட்டமாகத் தன்னும் அறிந்து கொள்ள முடியும். முதலில் பஞ்சாங்கம் என்றால் என்ன என்பதை யாம் அறிந்து வைத்திருத்தல் அவசியம் ஆகும். வருடம் என்னும் கால தேவதைக்கு 12 மாதங்களும் அவளது அவயவங்களாம். சூரியன் முதலிய 9 கிரகங்கள் இங்கு ராஜ்ய பரிபாலனம் செய்வர். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்பனவே பஞ்ச அங்கங்களாம்.

இவற்றுள் யோகத்தில் அமிர்த சித்த யோகங்கள் சுபகாரியங்களுக்குரியன. மரண யோகம் தவிர்க்கப்பட வேண்டியது. பஞ்ச அங்கங்களுள் திதி நன்மையை விருத்தி செய்யும்; வாரம் ஆயுளை விருத்தி செய்யும். நட்சத்திரம் பாவத்தைப் போக்கும்; யோகம் ரோகத்தை நீக்கம், கரணம் வெற்றியை நல்கும். இவையே பஞ்ச அங்கங்களாம். தமிழ்நாட்டிலே வருடப் பிறப்பன்று நவக்கிரக பூசை, பித்ரு தர்ப்பணம் ஆகியவை இடம்பெறும் வழக்கம் உண்டு.

கேரள மக்கள் அன்றைய தினம் அதிகாலை மங்கலப் பொருட்களில் கண் விழிப்பதை முக்கியமாகக் கொள்வர். உதாரணமாக கனி வர்க்கம், காய்கறிகள், புத்தாடை, பொன்னாபரணம், நவரத்தினம் ஆகியவற்றை ஆயத்தமாக ஓரிடத்தில் வைத்து அதிகாலையில் தீபமேற்றி அவற்றைத் தரிசித்த பின் பெரியோர் ஆசியும் பெறுவர். இவற்றை விட தமிழ் மக்கள் பண்பாட்டை காட்டி நிற்கும் ஆடல், பாடல், கூத்து வகைகள், கிராமிய விளையாட்டுக்கள், தேங்காய் அடித்தல், ஜல்லிக்கட்டு, தயிர் முட்டி உடைத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் பொதுவாக கிராமத்து மக்கள் சளைக்காது விளையாடி சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுதல் கண்கூடு. அத்தோடு பட்டிமன்றம், கவிதை அரங்கம் ஆகியவையும் தமிழ்ப் புத்தாண்டைச் சிறப்பிக்கும் நிகழ்வுகளாம். இந்த வகையில் நாம் இப்புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடுவதோடு நாம் நல்லவற்றை எண்ணி, நல்லவற்றை ஆற்றி, நாமும் நாடும் நலம் பெற இப்புத்தாண்டு தினத்தில் திடசங்கற்பம் பூணுவோம்.

Please Click here to login / register to post your comments.