மூதூர் கிழக்கில் சூறையாடப்படும் அப்பாவி மக்களின் உடைமைகள்

ஆக்கம்: கொத்தியார்
மூதூர் கிழக்குப் பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியுள்ளமை பற்றிப் பெரிதாக விளங்கிக் கொண்டதாகவோ அல்லது அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டதாகவோ யாரும் இல்லை. காரணம், இதை இராணுவம் ஈட்டிய பெரு வெற்றியாக சித்திரித்துக்காட்டி பத்திரிகைகளில் பத்தி பத்தியாக எழுதியும் இலத்திரனியல் ஊடகங்களில் படம் பிடித்துக் காட்டியும் மக்களைப் பிரமிக்க வைத்ததுதான். அத்துடன், நில மீட்பு வெற்றியென்று வேறு சிலர் இதை நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகள் பத்து வருடமாக தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு கண்ணிவெடி கூட வைக்காமல் கெரில்லா தாக்குதல்களைக் கூட செய்யாமல் வெளியேறியதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும். இதுவே, இப்பகுதி மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் கேள்வியாகும்.

இராணுவம் செய்தது என்ன? கடந்த 25 ஏப்ரல் மாலை 5.20 மணியளவில் சம்பூர் பகுதியில் இரு கிபீர் விமானங்கள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தின. இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்கள், இராணுவத்தினரின் ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் என மூதூர் கிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இது பாரிய யுத்த நிறுத்த மீறல் என்று கூறப்பட்டாலும், நோர்வே தரப்பால் எதுவும் சொல்ல முடியவில்லை.

புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் என்று கூறிக் கொண்டு மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள இருபத்தைந்து கிராமங்கள் மீது அன்று முதல் செப்டெம்பர் 02 ஆம் திகதி வரை வான், தரை, கடல் என மும்முனைகளாலும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையால் அங்கு வாழ்ந்த அனைத்து மக்களும் இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கைக்குள் அகப்பட்டுக் கொண்டு தங்கள் சொந்த இடத்தில் அனைத்து உடைமைகளையும் கைவிட்ட நிலையில் ஒருவேளை உணவிற்காக வாகரைப் பகுதிகளில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களின் மீன்பிடிப் படகுகள், அதற்கான உபகரணங்கள், வாகனங்கள், கால்நடைகள், விவசாய உபகரணங்கள், நெல் மூடைகள், வர்த்தக நிலையங்கள் இப்படிக் குறுகிய காலத்திற்குள் தேடிய அனைத்து சொத்துகளையும் அப்படியே விட்டு விட்டு வெளியேறினார்கள்.

விடுதலைப் புலிகளின் எல்லைப் படையினரும் அவர்களுக்கான வழங்கல் நடவடிக்கைப் பிரிவுமே இப்பிரதேசத்தில் 30.08.2006 ஆம் திகதி வரை நின்றிருந்தன. இப்பகுதிகளை நோக்கி திருகோணமலை கடற்படைத்தளம், குரங்குப்பாலம் பீரங்கி படைத்தளம் போன்றவற்றில் இருந்தும் அல்லை- கந்தளாய் வீதி மகாவலிபுர இராணுவ முகாமில் இருந்தும் 130 மி.மீ. எறிகணைத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வந்தன.

15.08.2006 ஆம் திகதிக்குப் பின் தோப்பூர் சந்தி, கல்லாறு, அலிஒழுவ பொலிஸ் நிலையம், பச்சனூர், பட்டியடி, சேருவில, அல்லைநகர் பாடசாலை, மூதூர் அல் ஹிதாயா பாடசாலை ஆகிய முகாம்களில் இருந்து சரமாரியாக மூதூர்கிழக்கு ஈச்சிலம்பற்றுப் பகுதிகளை நோக்கியும் எறிகணைத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் 30.08. 2006 ஆம் திகதி மூதூர் கிழக்கில் இருந்து வெளியேறிய பின்பும் இராணுவத் தரப்பு 02.09.2006 ஆம் திகதி வரை அங்கு கடுமையான தாக்குதல்களை தொடுத்துக் கொண்டிருந்தது. அவர்கள் வெளியேறிய விடயத்தை இராணுவம் மூன்று நாட்களின் பின்பே அறிந்து கொண்டது.

கட்டைபறிச்சான் பிரதான வீதி- ஆலிம் சேனை, சகாயபுரம் 64 ஆம் கட்டை, கிராந்திமுனை, தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு வீதி, பம்மாண்டகுளம்- பட்டியடி போன்ற இடங்களில் இருந்து இராணுவமும் சம்பூர்- சூடக்குடா, இளக்கந்தை- கடற்கரைச்சேனை போன்ற கடற்கரையை அண்டிய பகுதிகளிலிருந்து கடற்படையினரும், 04.08.2006 ஆம் திகதி முதல் 02.09.2006 ஆம் திகதி வரை மூதூர் கிழக்குப் பகுதிகளில் உட்புகுவதற்கு முனைப்புகளை தினமும் எடுத்துக் கொண்டுதான் இருந்தனர். ஆகஸ்ட் 30 இல் விடுதலைப் புலிகள் தாமாக விலகிக் கொள்ளும் வரை இராணுவத்தினரின் எந்த முயற்சியும் வெற்றி தரவில்லை.

கிராந்தி முனையூடாகவும் பட்டியடி ஊடாகவும் பம்மாண்டகுளத்தில் இருந்து நல்லூர் வரை முன்னேறுவது படையினரின் குறியாக இருந்தது. இதற்கான முயற்சியில் ஆகஸ்ட் 04 ஆம் திகதி இராணுவம் செயற்படத் தொடங்கியது. மூதூரில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறி வந்து கொண்டிருந்த வேளையில் தோப்பூர் சந்தியில் இருந்த இராணுவம்

தனக்குச் சாதகமாக மக்களின் இடப்பெயர்வைப் பயன்படுத்தி பச்சனூர் வரை முன்னேறியது. பச்சனூரில் இருந்து பதுங்கு குழிகளை இரவோடிரவாக வெட்டிக் கொண்டு பகலில் பாதுகாப்பு எடுத்துக் கொண்டும் கிராந்திமுனை பாலம்வரை தமது முயற்சியை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

20 ஆம் திகதிக்குப் பின்பு 300 மீற்றர் தூர பதுங்கு குழிகள் மூன்றின் மூலம் விடுதலைப் புலிகளின் காவல் அரண்களுக்கு அண்மையாக அதாவது சாதாரண துப்பாக்கியால் சுடும் தூரம் வந்த பின்பு தாங்கிகள் சகிதம் சண்டையை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இப்பகுதியிலிருந்து தமது கனரக வாகனங்களை உள்ளெடுத்த பின்பு விடுதலைப் புலிகள் இந்தப் பாலத்தைத் தகர்த்து விட்டனர். இம்மோதலில் இராணுவத்தின் ஒரு ஆறு சில்லு தாங்கி (50 கலிபர் பூட்டியது) அழிக்கப்பட்டு விட்டது. விடுதலைப் புலிகள் தரப்பில் உணவு கொண்டு சென்ற கப் ரக வாகனம் இராணுவத்தினரால் கண்டெடுக்கப்பட்டு செப்டெம்பர் 6 ஆம் திகதி மூதூருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

தற்போது நல்லூருக்குத் தெற்காக வில்வாய்க்கால் பகுதியில் இரு தரப்பும் பாதுகாப்பு நிலையை எடுத்து நிற்கின்றன. ஒருவர் பகுதிக்குள் ஒருவர் இரகசியமாக ஊடுருவுவது தற்போதும் நடந்து கொண்டே இருக்கின்றது. மூதூர் பிரதேசம் கொட்டியார்புரமாக இருந்த எல்லைகளின்படி மேற்கு, தெற்கு மகாவலி கங்கையாலும், கிழக்கும், வடக்கும் வங்கக் கடலாலும் சூழப்பட்ட தீவு என்றே கூற வேண்டும். மூதூர் கிழக்கு அவ்வாறானதொரு தீவாகவே அமைந்து அல்லைக்குளத்தில் இருந்து மூதூர் வட்டம் வரை கடலாலும் சூழப்பட்டிருக்கின்றது. மூதூர் பிரச்சினைக்குப் பின்பு இங்கு இராணுவம் அதிகம் குவிக்கப்பட்டு பரவலாக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் சம்பூர்- கடற்கரைச்சேனை, கட்டைபறிச்சான் போன்ற இடங்களில் விடுதலைப் புலிகளின் நிருவாக அலுவலகங்கள் பல இங்கு காணப்பட்டன. இராணுவ முகாம் என்று மக்கள் மத்தியில் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உயிர்களை இழந்து உடைமைகளை இழந்து ஊரையும் இழந்துள்ள மூதூர் கிழக்கு மக்களின் மன உணர்வுகள் எந்த அளவு கொதித்துப் போயிருக்கும். சொந்த மண்ணில் மீண்டும் குடியமர்வதாயின் ஏப்ரல் 25 இற்கு முன்பிருந்த நிலை வர வேண்டும் என்று மக்கள் ஆணித்தரமாக கூறி வருகின்றார்கள். இவர்களது விருப்பம்போல் அங்கிருந்து இராணுவம் வெளியேறுமா? கொள்ளையிடப்பட்ட பொருட்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமா? இந்தக் கோரிக்கைகள் அரசை எட்டாது என்பதுடன் இராணுவத் தரப்பையும், அரச தரப்பையும் தற்போதைய நிலையில் மீள் நிலைக்குக் கொண்டு வருவது கடினம். காரணம் மூதூர் கிழக்கில் எந்த விதமான எதிர்ப்பும் இன்றி அவர்கள் உள் நுழைந்தமைக்கு ஐந்து மாதங்களாக புலிகள் மீது நடத்திய இராணுவத் தாக்குதலும் பொருளாதாரத் தடையுமே புலிகள் பின்வாங்கக் ககாரணம் என்று நினைக்கின்றனர்.

இராணுவத்தை ஏவி அரசு நிலம் பிடிக்கும் ஆவலில் ஈச்சிலம்பற்று, வெருகல், அதையும் தாண்டி கதிரவெளி, வாகரை என்று திட்டம் தீட்டி இராணுவ நடவடிக்கைக்கு தயாரானால் இராணுவத்தின் வழியிலேயே புலிகளும் இறங்க வேண்டி வரலாம். புலிகளின் இலக்குகள் மீது இனங்காணப்பட்டு தாக்குவதாக அறிவித்துக் கொண்டு 24 கிராமங்களை மூதூர் கிழக்குப் பகுதிகளில் அழித்து நிர்மூலமாக்கி வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 19 கிராமங்களை வெற்றுப் பூமியாக்கியது போல் இராணுவ இலக்குகள் மீது தாக்குவதாகக் கூறி பதில் தாக்குதல்களைப் புலிகள் தொடுத்தால் நிலைமை இன்னும் மோசமாகும். ஆனால், இதை ஒரு யுத்த நிறுத்த மீறல் என்று கூற முடியாதபடி இந்தியா உட்பட இணைத்தலைமை நாடுகள் வாய்மூடி மௌனியாகவே இருக்க வேண்டி வரும்.

Please Click here to login / register to post your comments.