சென்று வந்தேன்...​ நொந்து வந்தேன்...

ஆக்கம்: அர்ஜுன் சம்பத்

இலங்கையில் உள்ள திருக்கோயில்களை தரிசனம் செய்வதற்காகவும்,​​ யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை நேரடியாகச் சந்தித்து உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும்,​​ கடந்த 11.5.10 ஆன்மிக இயக்கங்களைச் சேர்ந்த 6 பேருடன் சென்னையில் இருந்து கொழும்பு சென்றேன்.​ ​

​ யாழ்ப்பாணம்,​​ கிளிநொச்சி,​​ முல்லைத் தீவு,​​ வன்னி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்கிற நிபந்தனை நாளதுவரை இருக்கிற காரணத்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தோம்.​ 2 நாள்களாக நாங்கள் செய்த முயற்சி​ பலன் அளிக்கவில்லை.​ எனவே,​​ கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஏ 9 நெடுஞ்சாலை வழியாக ஒமந்தை ராணுவச் சோதனைச் சாவடியில் அனுமதி பெற முயற்சிக்கலாம் என்கிற செய்தி தெரிந்து,​​ யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமானோம்.

​ யுத்தம் முடிந்து,​​ ஓராண்டு நிறைவுபெற்றபிறகும்,​​ ராணுவத்தின் கட்டுப்பாட்டில் முழுமையாக இலங்கை உள்ளதை நேரடியாகக் காணமுடிந்தது.​ ஆங்காங்கே ராணுவ முகாம்களும்,​​ ராணுவக் காவல் மையங்களும்,​​ ராணுவச் சோதனைச் சாவடிகளும் ஏராளமாக இருந்தன.

​ ஒமந்தையிலும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.​ சர்வதேச சமூகத்தினருக்கும் சமீபத்தில் இலங்கைத் தேர்தலில் வென்ற இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட இப் பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

​ பொதுவாக,​​ இலங்கை முழுவதும் ராஜபட்சவின் புகழ்பாடும் விளம்பரங்களே காணப்படுகின்றன.​ இலங்கை ராணுவ மற்றும் அரசு அதிகாரிகளும் தமிழ் மக்களைச் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றனர்.​ சிங்கள பெரும்பான்மைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் ராணுவம் மற்றும் காவல் துறையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

​ யுத்தப் பாதிப்பு மனோ நிலையில் இருந்து தமிழர்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.​ தனிப்பட்ட முறையிலும்,​​ பொதுவாகவும் தமிழர்களுக்கு எந்தவொரு பாதிப்பு ஏற்பட்டாலும்,​​ அதுகுறித்து அரசு நிர்வாகத்திடம் புகார் செய்வதற்குக் கூட பயந்து வாழும் பரிதாபகரமான சூழ்நிலையே உள்ளது.​ தங்கள் தொழில் மற்றும் வியாபார நிறுவனங்களோ,​​ விவசாய நிலங்களோ ​(காணிகள்)​ சிங்களவர்களால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை வேடிக்கை பார்க்கும் துன்பகரமான சூழ்நிலையில்தான் தமிழர்கள் இன்று உள்ளனர்.​ ​

​ ​ இலங்கை முழுவதும் பல்லாயிரக்கணக்கான இந்துக் கோயில்கள் உள்ளன.​ இதில்,​​ ராமாயணம் மற்றும் மகாபாரதத்தோடு தொடர்புடைய கோயில்கள் ஏராளமாக உள்ளன.​ சோழ மன்னர்களால் கட்டப்பட்ட சிவாலயங்களும் உள்ளன.​ ​ யுத்தத்தின்போது தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் சிங்கள ராணுவத்தினரால் தாக்கப்பட்டன.​ சில கோயில் வளாகங்களை ராணுவத்தினர் தங்களது முகாம்களாகக் கூட பயன்படுத்தினர்.​ சிதிலமடைந்த பல கோயில்களை வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்கள் உதவியுடன் இயன்ற அளவு சீரமைத்து வழிபாடுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.​ ​

​ ​ யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் யுனிசெஃப் வாகனங்களும்,​​ கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களின் வாகனங்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன.​ ஐ.நா.​ சபை சார்பில் மனிதாபிமான உதவிநிதியத்தில் சுமார் ரூ.1600 கோடி இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டது.​ அதில்,​​ வெறும் ரூ.40 கோடி மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்குச் செலவிடப்பட்டுள்ளதாக அங்குள்ள தமிழர்கள் கூறுகின்றனர்.​ ​

​ யாழ்ப்பாணம்,​​ கிளிநொச்சி,​​ முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களின் கல்வி முழுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.​ சுமார் ஒரு லட்சம் மாணவர்களில் 26 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே யுத்தத்துக்குப் பிறகு பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.​ ​

​ மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களுடன் உரையாடுகையில்,​​ கடந்த ஆண்டு உக்கிரமாக நடந்து வந்த இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கூட இந்தியா இது விஷயத்தில் தலையிட்டு,​​ ஏதேனும் ஒரு வகையில் யுத்த நிறுத்தத்தை அமல்படுத்தும்,​​ இந்தியா தங்களைக் காப்பாற்றும் என எதிர்பார்த்துக் காத்திருந்து,​​ தமிழ் மக்கள் ஏமாந்து இருக்கின்றனர்.​ இந்தியா நம் தாய்நாடு.​ இந்திய மக்கள்,​​ குறிப்பாக தமிழ் மக்கள் ஒருபோதும் நம்மைக் கைவிட மாட்டார்கள் என்றும்,​​ இந்தியக் கப்பல்கள் இன்று வரும்,​​ நாளை வரும் என்றும்,​​ அப்பாவிகளான தங்களைக் காப்பாற்றும் என்றும் கடைசி நொடி வரை எதிர்பார்த்து ஏமாந்துள்ளனர்.

​ புலம்பெயர்ந்து வருகின்ற வழியில் இலங்கை ராணுவத்தினரின் மத்தியில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் இந்திய ராணுவத் தடவாளங்களைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.​ இதன் காரணமாக,​​ இந்தியாவின் மீதும்,​​ தமிழக அரசியல்வாதிகள் மீதும் கடும் வெறுப்புணர்வு அவர்கள் மத்தியில் உருவாகி இருப்பதை எங்களால் காண முடிந்தது.

​ உறவினர்களோடு சென்று சேர முடியாதவர்கள்,​​ காயம்பட்டவர்கள்,​​ உடல் ஊனமுற்றவர்கள் ஏராளமானோர் இங்கு உள்ளனர்.​ யுத்தத்துக்குப் பிறகு காவல்துறை மற்றும் ராணுவத்தினரால் விசாரணை என்கிற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் ஏராளம்.​ மகனைத் தேடி அலையும் பெற்றோர்களும்,​​ கணவரைத் தேடி அலையும் தாய்மார்களும் ஏராளமாக உள்ளனர்.​ சுமார் 15 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.​ அவர்களது கதி என்னவென்று தெரியவில்லை.

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான கருப்புச் சட்டங்கள் இன்றும் நடைமுறையில் இருப்பதால்,​​ தமிழர்கள் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளனர்.​ இலங்கை அரசின் நீதித் துறை முழுமையாக இயங்குவதில்லை.

தமிழர்களுக்கு நீதி கிடைப்பது இல்லை.​ இலங்கை அரசுப் பணிகள்,​​ ராணுவப் பணிகள்,​​ காவல்துறைப் பணிகள்,​​ நிர்வாகப் பணிகள் ஆகியவற்றில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்கே தமிழர்கள் உள்ளனர்.​ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.​ அதில்,​​ ரூ.5 ஆயிரம் மட்டுமே குடும்பங்களுக்குக் கிடைத்துள்ளது.

​ இன்னும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்,​​ சிங்கள அரசால் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.​ அவர்களுக்கு 30 நாள்களுக்கு என வழங்கப்படும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் 15 நாள்களுக்குள் தீர்ந்துவிடுவதாகக் கூறுகிறார்கள்.​ முகாம்களில் உள்ளே சென்று,​​ யாரையும் சந்திக்க வெளியாள்கள் அனுமதிக்கப்படுவதில்லை.​ கடந்த மாதத்தில் இருந்து முகாம்களில் வசிப்பவர்கள்,​​ குறிப்பிட்ட நேரத்துக்குள் திரும்பிவிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் வெளியே சென்றுவர அனுமதிக்கப்படுகிறார்கள்.​ அத்தகைய ஒருசிலரிடம் எங்களால் பேசி விவரங்களைச் சேகரிக்க முடிந்தது.

​ முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பலரை மீள்குடியேற்றம் என்கிற பெயரில் அவர்களின் உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும்படி நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியுள்ளனர்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை.​ புதிய தாற்காலிக வீடுகளை அமைப்பதற்கு ஐ.நா.​ சபையின் சார்பில் தகரங்களும்,​​ தார்பாலின்களும் வழங்கப்பட்டுள்ளன.​ இலங்கை அரசின் சார்பில் ஒரு குடும்பத்துக்கு ரூ.20 ஆயிரம் வைப்பு நிதியாகக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது.​ ஆனால்,​​ இதுவரை அந்த நிதி எந்தக் குடும்பத்துக்கும் சென்று சேரவில்லை.

​ இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் வழங்கியுள்ள கட்டுமானப் பொருள்களும்,​​ நிவாரணப் பொருள்களும் தமிழர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக பெரும்பான்மை சிங்களப் பகுதியில் பயன்படுத்தப்படுகிறது.​ சாலை,​​ குடிநீர்,​​ மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில் சிங்களப் பகுதிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.​ தமிழர் பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன.​ தமிழக அரசால் செய்யப்பட்ட உதவிகள் கூட தமிழர்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதே உண்மை நிலை.​ ​

​ இந்துக் கோயில்களை புத்த விகாரங்களாக மாற்றும் முயற்சிகள் காணப்படுகின்றன.​ ​ திருகேதிச்சுவரம்,​​ திருக்கோணச்சுவரம் உள்ளிட்ட பாடல் பெற்ற திருக்கோயில்களைச் சுற்றி திட்டமிட்ட ரீதியில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர்.​ அரச மரத்தடியில் உள்ள விநாயகர் சிலைகளை அகற்றி விட்டு,​​ அதே இடத்தில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.​ எங்கு பார்த்தாலும்,​​ பெüத்த அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டு,​​ தமிழர்களின் தொன்மைச் சின்னங்களையும்,​​ சமய அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியில் சிங்கள அரசாங்கம் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது.​ தமிழ்ப் பெயர் தாங்கி நிற்கும் ஊர்களின் பெயர்கள் கூட சிங்கள பௌத்த பெயர்களாக மாற்றப்படுகின்றன.​ ​

÷வவுனியா,​​ திருகோணமலை,​​ மன்னார்,​​ மட்டக்களப்பு,​​ அம்பாறை,​​ கண்டி ஆகிய பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்தபோது சீனா,​​ ஜப்பான் போன்ற பெüத்த நாடுகள் புதிதாக உருவாக்கிய சில தொழிற்சாலைகளைக் காண முடிந்தது.​ திருகோணமலையில் சீன கடற்படை தளங்களையும் காண முடிந்தது.

÷போரால் பாதிக்கப்பட்ட ஈரான்,​​ ஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் இந்திய அரசு நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளைச் செய்து வருகிறது.​ ஆனால்,​​ இதுவரை எந்தவிதமான நிவாரணப் பணிகளையும் நேரடியாக இலங்கையில் இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

​ மத்திய,​​ தமிழக அரசுகள் சார்பில் வழங்கப்படும் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சென்று சேர்கிறதா என்பது குறித்தும் சரிவர கண்காணிக்கப்படவில்லை.​ மேலும்,​​ இந்திய அரசின் சார்பிலோ,​​ தமிழக அரசின் சார்பிலோ அதிகாரபூர்வமாக எந்தவொரு குழுவும் போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று,​​ உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதும் வேதனைக்குரியது.

​ இலங்கையை வளப்படுத்தியதிலும்,​​ வலுப்படுத்தியதிலும் இலங்கை பூர்வகுடி தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது.​ ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இலங்கைக்கு விடுதலை வாங்கித் தருவதிலும் தமிழர்களின் பங்கே முதன்மையானது.​ ஆனால்,​​ தமிழர்களின் பூர்வீக பூமியான இலங்கையில் அனைத்து உரிமைகளையும் இழந்து,​​ மிருகங்களுக்கும் கீழான நிலையில் தற்போது தமிழர்கள் வாழ்ந்து வருவது வேதனைக்குரியது.​ இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியபோது,​ விதியே விதியே என் செய்ய நினைத்தாய்;​ எம் தமிழ்ச் சாதியை!​ என்கிற பாரதியின் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வந்தது.

Please Click here to login / register to post your comments.