நம்பிக் கெடுவதே நம் பழக்கம்

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பின்னர் இந்தியாவுக்கு முதல்முறையாக வரும் மகிந்த ராஜபட்ச, நிச்சயமாக இலங்கைத் தமிழர்கள் நலன் தொடர்பாகப் பேசுவார்; உறுதியளிப்பார்; ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்பதை எல்லோராலும் எப்படி ஊகிக்க முடிந்ததோ அதைப் போலவே, இந்திய அரசும்- இலங்கையும் இலங்கைத் தமிழர் தொடர்பாகச் செய்துகொண்டுள்ள ஒப்பந்தமும் வெறும் கண்துடைப்பு என்பதை ஊகிப்பதும் மிக எளிது.

மூன்று மாதங்களுக்குள் தமிழர்கள் அவர்தம் வாழ்விடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள், அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று தமிழக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடம் ராஜபட்ச கூறியதாகக் கூறப்படும் செய்திகளும்கூட, இந்திய மண்ணில் நின்றுகொண்டிருப்பதால் சொல்லப்படும் வெறும் வார்த்தைகள் என்பதைத் தவிர, அதில் நம்பிக்கையின் ஒளிக்கீற்று தென்படவில்லை.

மொத்தம் ஏழு ஒப்பந்தங்களில் இந்தியாவும் - இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. இதில் ஓர் ஒப்பந்தம், இலங்கையில் உள்நாட்டுப்போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும், அவர்களை மீண்டும் அவர்களது மண்ணில் குடியேறச் செய்வதும் குறித்தானது. இந்த ஒப்பந்தம் செய்யாவிட்டால், இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும், கடும் விமர்சனங்கள் எழும் என்கிற ஒரே காரணத்தால்தான், சர்க்கரை நோயாளியின் சாப்பாட்டு இலையில் வைத்த லட்டு போல இந்த ஒப்பந்தமும் இடம் பெற்றதே தவிர, இதை இலங்கை நிறைவேற்றப் போகிறது என்ற நம்பிக்கை இந்திய அரசுக்கு இருப்பதாகவோ அல்லது இதை நிறைவேற்ற வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதாக இலங்கை அரசு நம்புவதாகவோ சொல்வதற்கில்லை.

ராஜபட்ச வருகை இரு நாடுகளுக்கான வர்த்தக உறவை மேம்படுத்துவதும், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் உதவியைப் பெறுவதும், இலங்கையில் சில சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துவதும்தான். இலங்கையில் இந்தியா உதவியுடன் 500 மெகாவாட் அனல் மின்நிலையம் அமைவதும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையம் அமைவதும்கூட இருக்கிறது. இவையெல்லாம் அமல்படுத்தப்படும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இல்லை.

இத்தகைய நாடகங்களுக்கு இந்தியாவும் ஏன் ஒரு பாத்திரமாக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சனம் செய்யும் முன்பாக, தமிழர்களும் தமிழக அரசும் இதில் எத்தகைய அக்கறையைக் காட்டினர் என்பதையும் பார்க்கவேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் ராஜபட்ச வருகையைக் கண்டித்து பழ. நெடுமாறன் (இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்), வைகோ (மதிமுக), திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்) சீமான் (நாம் தமிழர் இயக்கம்) ஆகியோர் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்குத் தமிழ்நாட்டில் பெருந்திரளான வரவேற்பு இல்லை; அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன என்பதைக் கண்ணுறும் தமிழக அரசும், மத்திய அரசும் இதில் எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ளும்?

பல மாதங்களுக்கு முன்பு, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை சென்று ராஜபட்சவையும், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களையும் நேரில் பார்த்துவிட்டுத் திரும்பியது. இக்குழுவிடமும் ராஜபட்ச இப்போது சொல்லும் இதே உறுதிமொழிகளைக் கூறினார். ஆனால், இலங்கையில் எந்தவித நன்மையும் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை. முகாம்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வாழ வழியில்லை. இன்னமும் 70,000 பேர் முகாம்களில் உள்ளனர். இதுபற்றி யாரும் மீண்டும் ராஜபட்சவைக் கேட்கவில்லை. ஒரு கடிதம் போட்டதாகவும் செய்தி இல்லை.

இப்போது, இந்தியாவுக்கு ராஜபட்ச வந்த நாளன்று, தமிழக முதல்வர் கருணாநிதி ஓர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "ராஜபட்ச சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை, தமிழர்களுக்கு மறுவாழ்வு தரும் பணிகளை விரைந்து முடிப்பேன் என்றார். ஆனால் அதைச் சொன்னபடி செய்யவில்லை' என்று கூறியுள்ளார். ஊடகங்களுக்கும்கூட, ராஜபட்ச இந்தியா வரும்போதுதான் இலங்கைத் தமிழர் பிரச்னை நினைவுக்கு வருகிறது. தமிழக முதல்வரும்கூட, ராஜபட்ச இந்தியா வரும் நேரத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகளின் அதே அக்கறை தனக்கும் இருப்பதாக வெளிப்படுத்துகிறார்.

ராஜபட்ச இலங்கையில் விமானம் ஏறிய அதே நாளில், இலங்கைப் பிரதமர் ஜெயரத்னே சொல்கிறார்: "இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலையெடுக்கப் பார்க்கிறார்கள். இதுவரை 77 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று புள்ளிவிவரம் தருகிறார். கடந்த மே மாதம் விடுதலைப் புலிகள் வீழ்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, இலங்கையில் இதுநாள்வரை ஒரு குண்டுவெடிப்புகூட நடக்காத நிலையில், இத்தகைய வாதத்தை முன்வைப்பது எதற்காக? இன்னமும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மக்களோடு மக்களாக இருக்கிறார்கள் என்கிற வாதத்தை நிலைநிறுத்தி, தமிழர்களை அவர்தம் வாழ்விடங்களில் குடியமர்த்துவதை மேலும் காலதாமதப்படுத்தவும், தங்கள் செய்கையை நியாயப்படுத்தவுமான முயற்சிகளேயன்றி வேறென்ன?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக இடம்பெற்றிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு மற்றும் குடியேற்றம் தொடர்பான ஒப்பந்தம் எந்தெந்த நிபந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும், அதைச் செயல்படுத்துவதில் தமிழர்களின் பங்கு மற்றும் மேற்பார்வை எத்தகையதாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடும் நிலையில் திமுக இருக்கிறது. இதுநாள்வரை அளித்த நிதி மற்றும் மருத்துவ உதவிகளை ஏன் தமிழர்களிடம் வழங்கவில்லை என்று ராஜபட்சவிடம் இந்திய அரசு கேள்வி கேட்கச் செய்யும் வலிமை திமுகவிடம் இருக்கிறது. ஆனாலும் திமுக தலைவர் கருணாநிதியே, "ராஜபட்ச சொன்ன சொல் தவறிவிட்டார் என்றும், இந்திய அரசும் தமிழக அரசும் அளித்த நிதியுதவிகூட மக்களைச் சென்று சேரவில்லை' என்றும் பேட்டி அளித்துக்கொண்டிருந்தால்... ராஜபட்சவுக்கு தமிழர்கள் மீது என்ன மதிப்பு உண்டாகும், எப்படி இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த முற்படுவார்?

Please Click here to login / register to post your comments.