இலவச இன அழிப்புத் திருமணங்கள்

இலங்கை ராணுவ முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகளில் 53 ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைத்த அதிபர் ராஜபக்ஷே,

''தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளில் நாங்கள் காட்டும் அக்கறையைப் பாரீர்!'' என புது தம்பட்டம் அடிக்கத் துவங்கியிருக்கிறார். அந்தத் திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்களை பன்னாட்டுப் பத்திரிகைகளுக்கும் அனுப்பிய, மறுவாழ்வுப் பணிகளுக்கான ஆணையர் பிரிகேடியர் சுதானந்தா ரணசிங்கே, ''மணமக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை ராணுவம் வழங்கும். இதுபோன்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும்'' என்றும் பெருமையாக முழங்கி இருக்கிறார்!

வெளியில் தெரிந்தவை இந்தத் திருமணங்கள்! யாருக்கும் தெரி யாமல் இலங்கையில் நடத்தப்படும் இனக்கலப்பு திருமணங்கள் குறித்து, சமீபத்தில் இலங்கையில் இருந்து நார்வே நாட்டுக்கு தப்பி வந்த தமிழர்கள் ஈழ உறவுகளிடம் நெஞ்சு நடுங்க விவரித்தனர். இதைத் தொடர்ந்து, ''தமிழ் இனத்தை படிப்படியாக அடையாளம் இழக்கச் செய்வதற்கான அடுத்த மெகா திட்டத்தில் இலங்கை அரசு இறங்கிவிட்டது!'' என்று பதற்றக் குரல்கள் கிளம்பத் துவங்கி யுள்ளன.

நார்வே தமிழ் மக்களவையின் தேசியப் பிரதிநிதியும், ஊடகத் துறைப் பொறுப்பாளருமான விஜய் அசோகன், ''தமிழர்கள் வாழும் பகுதிகளைக் கூறுகளாகப் பிரித்து தனித்தனி விதமாக சிங்கள அரசு இனவெறி காட்டி வருகிறது. யாழ்ப்பாணம் பகுதியில் போதை வஸ்துகளை வாரி இறைத்தும், சினிமா, உல்லாசம், ஆபாச நடனம் என கேளிக்கை கூத்துகளை நடத்தியும் ஈழத்தமிழர்களின் மூளையைமழுங்கடிக்கிறது சிங்கள அரசு. சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் வெளியான ஒரு தமிழ்ப் படத்துக்கு 'கட் அவுட்' வைத்து தமிழர்கள் பால் அபிஷேகம் நடத்தி இருக்கி றார்கள்! தமிழ்நாட்டு ரசிகர்களைப்போல், இந்த அளவுக்கு ஈழத் தமிழர்கள் ஒருபோதும் சினிமா பித்துப் பிடித்து கிடந்ததில்லை. அதேபோல், கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் எப்போதும் புகைச்சல் ஓயாதபடி மத துவேஷத்தைத் தூண்டிவிட்டு தமிழ் மக்களைத் துண்டாடி வருகிறது சிங்கள பேரினவாதம்.

இதில், உச்சபட்ச இன அழிப்புத் தந்திரமாகத்தான் வன்னிப் பகுதியில் கட்டாயக் கலப்புத் திருமணங்களின் மூலம் தன் குள்ளநரித்தனத்தை அரங்கேற்றி வருகிறது சிங்கள அரசு. அங்குள்ள தமிழர்களுக்கு வாழ்வாதாரமே விவசாயமும் மீன் பிடிப்பும்தான். வன்னி நிலப் பரப்பில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லிச் சொல்லியே தமிழர்களின் விவசாயத்தில் மண்ணை அள்ளிப்போட்ட ராணுவத் தரப்பு, அங்குள்ள மீன்பிடித் தளங்களையும் முழுக்க சிங்களவர்களுக்குக் கொடுத்துவிட்டது. ஒரு நாளைக்கு இங்கு பிடிக்கப் பட்ட மீன்கள் 10 லாரிகளில் கொழும்புவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வன்னி யின் வளங்கள் மொத்தமாக சிங்கள ஆட்களால் சுரண்டப் படுவதால் பிழைப்புக்கே வழியற்றுப் பிச்சை எடுக்கிற நிலையில் இருக்கிறார்கள் தமிழர்கள்.

இப்போது, வன்னிப் பகுதிகளில் ஒரு லட்சத்தை எட்டும் அளவுக்கு தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களில் விசாரணை என்கிற பெய ரில் பலரை சாகடித்தும், முகாம்களில் அடைத்தும் வக்கிர தாண்டவமாடியது சிங்கள அரசு. கிழடுதட்டிய ஆண்களும், எட்டு வயதுக்குட் பட்ட சிறுவர்களும் மட்டும் தான் தற்போது அங்கே இருக்கிறார்கள்! அங்குள்ள ஆயிரக்கணக்கான இளம் பெண்களுக்கு ஆண் துணையே இல்லை. ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்துக்கும் சிங்கள காடையர்கள்தான் காவலர்கள். தமிழ்ப் பெண் களிடம் நடத்தும் பாலியல் அத்துமீறல்கள் கொஞ்ச

நஞ்சமல்ல...

இந்த சூழலில்தான், சமீபகாலமாக ராணுவத்திலும், பாதுகாப்புப் பிரிவிலும் உள்ள சிங்கள இளைஞர்களைத் தமிழ்ப் பெண்களுக்கு மணம் முடித்து எங்குமே நிகழாத வக்கிரக் கொடூரத்தை ராஜபக்ஷே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார். அவர்கள் கொஞ்சமும் உடன்படாத நிலையில் இலவச உதவிகளைக் காட்டியும், மிரட்டியும் கட்டாயத் திருமணத்தை சிங்கள ராணுவம் நிறைவேற்றி வருகிறது. சிங்கள இளைஞர்கள் கடைசிக் காலம் வரை இந்தத் தமிழ்ப் பெண்களுடன் வாழ்வார்களா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. தமிழ்ப் பெண்களின் வயிற்றில் கருத்தரிக்கும் காலம் வரையோ, குழந்தை பிறக்கும் வரையோ வாழ்ந்துவிட்டு, பின்னர் நிர்க்கதியாக்கி ஓடிவிடக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இனவெறியின் உச்சகட்டமாக வன்னியில் ஒரு கலப்பினம் உருவாக்கும் திட்டத்தோடுதான் இத்தகைய நடவடிக்கைகளை ராஜபக்ஷே ஊக்கப்படுத்தி வருகிறார். அதேசமயம், இலங்கைக்கு வரும் பன்னாட்டுப் பிரதிநிதிகளிடம், 'கஷ்டப்படும் தமிழ்ப் பெண்களுக்கு சிங்கள இளைஞர்கள் மூலமாகவே மறுவாழ்வு கொடுக்கிறோம்' என தன் சதியையே சாதனை போல காட்டுகிறது சிங்கள அரசு. ஏ-9 பாதையில் கடுமையான கெடுபிடிகள் காட்டப்படுவதால், இத்தகைய சித்ரவதைகளில் இருந்து தப்பித்து வருவதும் தமிழ்ப் பெண்களுக்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது!'' என ஆதங்கத்தோடு சொன்ன விஜய் அசோகன்,

''இதை பன்னாட்டு மனித நேய அமைப்புகள் உடனடியாகத் தடுக்க வேண்டும். தமிழக அரசியல் தலைவர்கள் இதன்மீது தீவிர கவனம் கொள்ளவேண்டும். இந்திய அரசின் பண உதவியில்தான் சிங்கள அரசு, தமிழர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டு வருகிறது. ராஜபக்ஷேயின் கலப்பினத் திருமணங்களுக்கு உடனடியாக முடிவு கட்டாவிட்டால், தமிழினம் என்பதே அங்குள்ள அரசு ஆவணங்களில் ஒருநாள் இல்லாமல்போய், இதுவரை இல்லாத கலப்பினம் உருவாகும். ராஜபக்ஷேயின் கனவின் இறுதிக் காட்சி வெற்றிகரமாக நிஜமாகிவிடும்!'' என ஆவேசமாக முடித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் பேசினோம். ''உலகில் எத்தகைய சர்வாதிகாரிகளும் இத்தகைய கொடூரத்தில் ஈடுபட்ட தில்லை. தமிழ்ப் பெண்களைக் கட்டாயப்படுத்தி, யார் என்றே தெரியாத சிங்கள இளைஞர்களுக்கு கல்யாணம் செய்வது எத்தகைய அநியாயம்! தனக்கென தனி அடையாளங்களோடு சிறப்புடன் வாழ்ந்துவரும் தமிழினத்தை துடைத்து எடுக்க இப்படியும் ஒரு சதியா! வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை தொடர்ந்து நடத்தி வரும் இலங்கை அரசு, நிலையான ராணுவத் தளங்களையும் தமிழர் பகுதிகளில் ஏற்படுத்தி வருகிறது. அடுத்தகட்டமாக கலப்பின உருவாக்கத்தின் மூலமாகவும் தமிழினத்தையே வேரோடு அழித்துவிடத் துடிக்கிறது. இலங்கை அரசுக்கு எல்லாவிதத்திலும் துணையாக இருக்கிறது இந்திய அரசு. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா உள்ளிட்ட உலக அமைப்புகளும் இந்தக் கொடூரத்தை உடனடி யாகக் கண்டிக்க வேண்டும். ராஜபக்ஷேயின் இந்த அரக்கத்தனத்தை அகிலம் முழுக்க வெளிச்சம்போட்டு, தமிழ்ப் பெண்களின் விடிவுக்கு வழிவகுக்க வேண்டும்!'' என்று குமுறினார்.

யுத்தபூமியில் எதிரி நாட்டில் ஊடுருவும் படைகள், அந்நாட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களின் வயிற்றில் தங்கள் இனத்தை விதைத்துவிட்டுப் போகிற கொடுமைகளை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். ''யுத்தம் முடிந்தது. இப்போது அமைதி!'' என்று சொல்லிக் கொண்டே, 'வரலாற்று வக்கிரத்தை' அரங்கேற்றும் சிங்கள அரசை என்னதான் சொல்லுவது?

Please Click here to login / register to post your comments.