வேலணையில் டாக்டாரின் பேயாட்டம் - ஓர் ஆய்வு

ஆக்கம்: விதுரன்
எங்களுக்கு நிம்மதியே கிடையாது. துப்பாக்கிச் சூடு, வெட்டுக்கொத்து, கொலை பாலியல் பலாத்காரம் இவைதான் எங்கள் துன்பப்பட்டியல். இந்தத் துன்பத் திற்கு முடிவும் இல்லை, விடிவும் இல்லை. யுத்தம் வாட்டி வதைத்தது. உயிரிழப்புக்கள்,சொத்து அழிவுகள் இதனிடையே மீளக்குடியமர்வில் படும் இடர்பாடுகள். இவற்றின் மத்தியில் பேரினவாத சிந்தனையில் மூழ்கிப் போயுள்ள சிங்கள அதிகாரிகள் சிலரிடம் சீறிப்பாயும் இனவெறியும் எங்கள் இனத்திற்கு ஈனமாகிப் போயுள்ளமை வேதனையிலும் வேதனை. இந்தத் துன்பத்தின் ஓர் அத்தியாயமே வேலணை அரசினர் வைத்தியசாலையில் நடந்தேறியது.

தர்சிகா 27வயது நிறைந்த இளம் குடும்ப நல உத்தியோகத்தர். வேலணைத் துறையூரில் வெளிக்களப்பணியில் கடமையாற்றி வந்தார்.வேலணை வைத்தியசாலையில் பிரசவ விடுதியில் கடமையாற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் லீவில் செல்லும் போது தர்சிகா பதில் கடமையைச் செய்ய வேண்டியதாயிற்று. கடந்த 9 ஆம் திகதி இரவுக் கடமையில் தர்சிகா ஈடுபட்டிருந்தார்.

அந்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக சிங்களவரான டாக்டர் பிரியந்த செனவிரத்ன கடமையாற்றினார்.கடந்த 9 ஆம் திகதி பதில் கடமையில் இருந்தபோது டாக்டர் செனவிரத்ன தர்சிகாவை திட்டத்தொடங்கினார். கையடக்கத் தொலைபேசியில் தர்சிகா உரையாடியதை சாட்டாக வைத்து, டாக்டர் செனவிரத்ன தர்சிகாவை அதட்டினார், மிரட்டினார். அடிப்பதற்கு கை ஓங்கினார், கையடக்கத் தொலைபேசியைப் பறித்தெடுத்தார்.

டாக்டரின் இனம்புரியாத வெறித்தனத்தால் விடுதியில் இருந்த நோயாளிகள் பயத்தில் உறைந்து போயினர். இப்படி ஒரு டாக்டரா? இரவு 7 மணிக்கு தர்சிகாவை திட்டத்தொடங்கிய டாக்டர் சென விரத்ன, நடுச்சாமம் 12 மணியாகியும் தனது திட்டலை விட்டபாடில்லை.

கைதடியைச் சொந்த இடமாகக் கொண்ட தர்சிகா தனது பொறுப்பதிகாரியின் பொறுப்பற்ற செயலால் விம்மி விம்மி அழுதார். சக பணியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறமுடியாமல் தவித்தனர்.கூடவே இரவு வேளையிலும் வைத்தியசாலைக் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் டாக்டரின் சத்தத்தில் மிரண்டு போயினர்.என்ன செய்வது ஏன் டாக்டர் இப்படி…. என்று கேட்டால் அது வினை யாகிவிடும் என்ற பயம் ஒரு புறம். அதேநேரம் ஒரு இளம் தமிழ்ப் பெண்ணை சிங்கள டாக்டர் ஒருவர் இப்படித் திட்டுகிறாரே என்ற வேதனை மறுபுறமாக அவர்கள் குழம்பிப் போயினர்.

நான்கு மாதங்களுக்கு முன்னர் கட்டடப் பணியாளர் ஒருவருக்கு பிரஸ்தாப டாக்டர் அடித்த சம்பவம், அத னைத் தொடர்ந்து பணியில் புறக்கணிப்பு, பின்னர் உயர் அதிகாரிகளின் சமரசம் என்ற நினைப்புகள் டாக்டரை நெருங்குவதற்குத் தடை விதித்தன. இதனால் கட்டடப் பணியாளர்கள் சம்பவத்தை அவதானித்துக்கொண்டே இருந்தனரே தவிர வேறு எதனையும் அவர்களால் செய்ய முடியாமல் போக, டாக்டரின் அதட்டலில் அதிர்ந்து போன தர்சிகா அழுது களைத்து மயங்கி விழுந்தார்.

சக பணியாளர்கள் அவ ருக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்தனர். சாமத்தோடு டாக்டரின் பேயாட்டம் தணிந்து உறங்கிக் கொண்டார். அந்த உறக்கம் கூட,அதிகாலையில் நடக்கப்போகும் அவரின் உருத்திர தாண்டவத்திற்கான ஓய்வாகவே இருந்தது.

பத்தாம் திகதி மீண்டும்….

மயங்கிக் களைத்து விழித்த தர்சிகா மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கெல் லாம் எழுந்து தனது கடமையை ஆரம்பித்தார். அவரின் முகத்தில் சோக ரேகை களின் ஆக்கிரமிப்பு- அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் உறங்குவது போல தர்சிகாவைப் பார்த்தனர். அந்த பிள்ளைக்கு எங்களால் உதவ முடியவில்லை என்ற வேதனை அவர்க ளின் நெஞ்சங்களை அடைத்துக் கொண்டது. 10 ஆம் திகதி காலை 7மணிக்கு சீருடையுடன் வரவுப் புத்தகத்தில் கையயாப்பமிட்ட தர்சிகா,

தனது கையடக்கத் தொலைபேசியைத் திருப்பித்தருமாறு டாக்டரிடம் வினயமாகக் கேட்க, அவர் மீண்டும் தாண்டவம் ஆடினார். காலை வேளையில் கூட தனது இரத்தக் கொதிப்பை டாக்டரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில மணி நேரங்கள் அமைதியாக கடந்தன. அந்த அமைதிக்குள் நோயாளர்களை சோதிக்கும் பணி ஒருபுறத்தில் ஆரம்பமான போது தர்சிகா எங்கே? சக பணியாளர்கள் தேடிக்கொள்ள அவர் களோடு சேர்ந்து டாக்டர் செனவிரத்னவும் தர்சிகாவை தேடுமாறு கூறியுள்ளார்.

விடுதியை நோக்கிச் சென்ற இரண்டு பெண் பரிசாரகர்கள் கதவைத் தட்டினர். கதவு பூட்டப்பட்டிருந்தது. விடுதியின் பின்புறமாக உள்ளே ஜன்னலைத் திறந்து பார்த்த போது அதிர்ந்து போனார். மின்விசிறியில் பிணைக்கப்பட்ட கயிற்றில் தர்சிகா தொங்கிக்கொண்டிருந்தார்.

பெண் பரிசாரர்கள் இருவரும் அலறி அடித்துக்கொண்டு ஓடிச் சென்று தர்சி காவின் நிலையைக் கூற, பணியாளர் கள் எல்லோரும் ஓடிச் சென்று கதவை உடைத்து தர்சிகாவைப் பார்க்க, அவரின் உடல் மட்டுமே எஞ்சியிருந்தது. இரவு முழுவதும் அழுது கொண் டிருந்த தர்சிகா காலையில் நம்பிக்கையோடு கையயாப்பமிட்டவர் ஏன் அப்படி செய்ய வேண்டும்?

கயிற்றில் தொங்கிய நிலையில் குடும்பநல உத்தியோகத்தர்

இந்த இனம்புரியாத கேள்விகளுக்கு மருத்துவத்துறையும் நீதித்துறையுமே பதில் காண வேண்டும். ஓ!உயிரைக்காப்பாற்றவேண்டிய புனிதமான வைத்தியப்பணி பேயாட்டம் ஆடி, ஆடுதா,கோழிதா, மனித உடலைத் தா என்று கதறியதில் அருமந்த தமிழ் இளம் மருத்துவ மாதுவை பலி கொடுக்க வேண்டியதாயிற்று. இந்த சோகம் தமிழர் வாழும் இடங்கள் எல்லாம் புயலாய் வீசுகின்றது. உண்மைகள் கண்டறியப்படவேண்டும். சிறுபான் மைத் தமிழர் என்றால் எங்களுக்கு அடிமை. நாங்கள் கேட்டால் அவர்கள் வந்தாகவேண்டும் என்ற பேரின வாத சிந்தனையை வெட்டிவிழுத்த மருத்து சமூகம் முன்வரவேண்டும். வேலணை வைத்தியசாலைப் பணி யாளர்கள்,அங்கு அனுமதிக்கப்பட் டிருந்த நோயாளர்கள் ,கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இணைந்து உண்மையைச் சொல்லவேண்டும். அதுவே இது போன்ற அவலம் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான உத்தரவாதமாக அமையும்.

அதேநேரம் யாழ்ப்பாணத்தில் கடமையின் நிமித்தம் வரும் தென்பகுதி பணியாளர்கள் பற்றி நாம் விழிப்பாக இருப்பது கட்டாயமானதாகும். குற்றம் புரியும் தென்பகுதி அரச பணியாளர்களின் இடமாற்றத்திற்குரிய பிரதேசமாக யாழ்ப்பாணத்தை எவரும் கருதி விடாமல் இருப்பதற்கு அவதானிப்புக்கள் அவசியம். ஓ! இந்த மண்ணை விட்டு வெளி யேறிய யாழ்ப்பாணத்தின் மருத்துவர் களே! எங்கள் உடலை வெட்டி பரிசோ தனை செய்து படித்த மருத்துவ கலாநிதிகளே!

உங்கள் வருமானத் தேடலின் ஆசைக்கு தமிழினத்தின் சோதரியை ஆகுதியாக்கியுள்ளோம்.ஏற்றிடுக. சிலவேளை யாழ்ப்பாண மண்ணை பார்ப்பதற்காக நீங்கள் கறுத்தக்கண்ணாடியும் அரைக்காற்சட்டையும் அணிந்து கொண்டு வேற்று நாட்டவர் போல வந்து போகலாம். அவ்வாறு வரும் சந்தர்ப் பம் கிடைத்தால் நீங்கள் பயிற்சி எடுத்த யாழ்.போதனா வைத்தியசாலையை ஒரு தடவை பாருங்கள். அது நன்றிக் கடனாக இருக்கும். அந்நேரத்திலாவது உங்கள் கறுத்தக் கண்ணாடிகளைக் கழற்றி விடுங்கள் ப்ளீஸ்.

Please Click here to login / register to post your comments.