ஆயிரக்கணக்கில் அப்பாவி பொது மக்கள் படுகொலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும்

இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் இடம்பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் படுகொலைகள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது.

உலகின் முன்னணி மனித உரிமைகள் அமைப்புகளில் ஒன்றான மனித உரிமைகள் இல்லமே (Homefor Human Rights-HHR) இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இந்தப் படுகொலைகளில், பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், மதகுருமார், மாணவர்கள், தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் அடங்குவர்.

முல்லைத்தீவில் தற்காலிக பாடசாலையொன்றில் விமானப் படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் 51 மாணவிகள் கொல்லப்பட்டதும் இதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரையான படுகொலைகள் குறித்து பூரண விபரங்களை மனித உரிமைகள் இல்லம், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் தொடர்பான ஐ.நா.வின் விஷேட அறிக்கையாளரான பிலிப் அல்ஸ்ரன், ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயக்குநர் லூயிஸ் ஆர்பர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளதுடன் இந்தப் படுகொலைகள் தொடர்பாக ஐ.நா.விரிவான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதியாக கடந்த டிசம்பரில் மகிந்த ராஜபக்ஷ தெரிவான பின்னரும் போர் நிறுத்த உடன்பாடு மிக மோசமாக மீறப்பட்ட பின்னருமே இந்தப் படுகொலைகள் ஆரம்பமானதாக மனித உரிமைகள் இல்லம் கூறுகின்றது.

யாழ்.குடாநாட்டில் அண்மைக்கால வன்முறைகளையடுத்து இரண்டு இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததுடன், உணவுப் பொருட்களுக்கான விநியோகப் பாதை தடை செய்யப்பட்டதால் அங்கு பட்டினி நிலை தோன்றியுள்ளதாகவும் மனித உரிமைகள் இல்லம் தெரிவித்துள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோரது படுகொலைகள் தொடர்பாக இந்த மனித உரிமைகள் இல்லம் தனது இணையத் தளத்தில் அனைத்து விபரங்களையும் விரிவாக வெளியிட்டுள்ளது.

இதில் படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியதாக நான்கு மாதக் குழந்தை மற்றும் ஐந்து தமிழ் மாணவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமை, நால்வரைக் கொண்ட குடும்பமொன்று சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டமை, தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலையை நேரில் பார்த்த மதகுரு ஒருவர் பற்றிய விபரங்களுமுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஆர்பருக்கு மனித உரிமைகள் இல்லம் அனுப்பிய கடிதத்தில், போராளிகள், பொது மக்கள் மற்றும் சிறுவர்களை அழிப்பதற்கு அரசு துணைப்படைகளைப் பயன்படுத்தியுள்ளதாகவும் இந்தத் துணைப்படைகளுக்கு கப்பம் வழங்க மறுத்த பொது மக்களே பெருமளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புலிகளும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொது மக்கள், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளை அவர்கள் கொன்றுள்ளதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் படுகொலைகள் குறித்தெல்லாம், தற்போது ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் பிரஸ்தாபிக்குமாறும், இந்த மாநாட்டில் இலங்கையும் கலந்து கொண்டுள்ளதாகவும் மனித உரிமைகள் இல்லம் தெரிவித்துள்ளது.

Please Click here to login / register to post your comments.