தமிழர்களைக் கொன்ற கொலைகாரனை எதிர்த்து வழக்கு! - செல்வி நிதிலா தெய்வேந்திரனின் சட்டக் குரல்!

ஆக்கம்: இளையசெல்வன்
இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக, ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றன தமிழர் அமைப்புகள். சுவிஸ் ஈழத் தமிழர் அமைப்பு, நோர்வே ஈழத் தமிழர் அமைப்பு, அமெரிக்காவில் உள்ள இன அழிப்புக்கெதிரான தமிழர் அமைப்புகள் ஆகிய மூன்றும் இணைந்து இந்த முதலாவது சட்ட நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவி என சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலை யிலும், இலங்கைக்கு எதிராக போர்க்குற்றங்களுக்கான விசாரணைக்குழுவை ஐ.நா. சபை அமைத்துள்ள நிலையிலும், ஐரோப்பிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு ராஜபக்சேவிற்கு நெருக்கடி கொடுத்திருப்பதுடன், சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் உற்று கவனிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சுவிஸ் ஈழத்தமிழர் அமைப்பின் சட்ட விவகாரக்குழுவின் இணைப்பாளர் செல்வி நிதிலா தெய்வேந்திரனிடம் பேசினோம்.

போர்க் குற்றங்களுக்கு எதிராக சர்வதேச அளவில் முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பது குறித்து?

முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் அனைத்தும் உலகம் அறிந்ததுதான். இறுதிக்கட்ட போரின்போது ஒரே நாளில் 40ஆயிரம் மக்களை படு கொலை செய்தது சிங்கள ராணுவம். ஜெனிவா உடன் படிக்கையின்படி, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், ரசாயன குண்டுகள், விஷ வாயு குண்டுகள் எதுவும் யுத்தத்தில் பயன்படுத்தக்கூடாது. ஆனால், இவைகள் அனைத்தையும் பயன்படுத்த உத்தரவிட்டார் ராஜபக்சே. அதற்கேற்ப சிங்கள ராணுவமும் இதனைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களைக் கொத்துக் கொத்தாக கொன்றழித்தது. இதனைக் கண்டித்து, மனித உரிமை அமைப்புகளும் இன அழிப்பு போருக்கு எதிரான அமைப்புகளும் உரத்து குரல் கொடுத்தன. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கோரத்தாண்டவம் ஆடின சிங்கள அரசும் ராணுவமும். 2008 மே 16 துவங்கி இறுதிக்கட்ட நாள்வரை வன்னிப் பிரதேசம் முழுவதும் ராணுவத் தாக்குதல்களுக்கு தலைமையேற்று வழி நடத்தியவர் சிங்கள ராணுவ மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ். போர்க்குற்றங்களின் நேரடி சாட்சியாகவும் போர்க் குற்றவாளியுமான இவர், போருக்குப் பிறகு ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும், இவரது போர்க்குற்றங்களை கௌரவப்படுத்தும் விதமாக, ஜெகத் டயஸை ஜெர்மனி நாட்டின் இலங்கைத் தூதர் என்கிற உயர்ந்த பதவியில் அமர வைத்திருக்கிறார் ராஜபக்சே. ஜெகத் டயஸின் போர்க் குற்றங்களை நிரூபிக்கிற வகையிலும், ஒரு போர்க்குற்றவாளி தூதராக நியமிக்கப்பட்டதை ஜெர்மனி அரசு எப்படி ஏற்றுக்கொண்டது என்பதை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளோம்.

ஜெர்மனி நாட்டின் இலங்கைக்கான தூதரை இலங்கை அரசு நியமித்ததை மையப்படுத்தி ஜெர்மனி நாட்டின் மீது எப்படி வழக்குத் தொடர முடியும்?

மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுக்கான பாதுகாப்பு சாசனம் என்று உருவாக்கப்பட்ட ஐரோப்பிய மனித உரிமை சாசனத்தை 1952-ல் நோர்வேயும் 1974-ல் சுவிட்சர்லாந்தும் கையொப்பமிட்டு அங்கீகரித் திருக்கின்றன. ஜெர்மனியும் அப்படியே. மனித உரிமை களுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளின் செயல்கள் இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நாட்டிற்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யும் உரிமையை இந்த சாசனத்தின் 34-வது பிரிவு அனுமதிக்கிறது. மேலும் இந்த சாசனத்தின் பிரிவுகளான 3, 8, 11 (2), 12 ஆகியவை மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மக்களின் அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசுகின்றன. ஜெகத் டயஸின் நியமனத்தை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம், மேற்கண்ட பிரிவுகளின் சாசன விதிகளுக்கு முரணாக ஜெர்மனி அரசு நடந்துகொண்டிருக்கிறது. தூதராக நியமிக்கப்படுபவர்கள் மனித உரிமைகளை மதிப்பவராகவும் பாதுகாப்பவராகவும் இருக்க வேண்டுமென்பது அடிப்படை விதி. அப்படி இல்லாதவர்களை ஒரு நாடு நிராகரிக்க வேண்டும். அந்த வகையில், மனித உரிமைகளுக்கு எதிராக, போரியல் நியதிகளுக்கு எதிராக, போர்க்குற்றங்களைச் செய்திருக்கும் சிங்கள ராணுவத் தளபதியான ஜெகத் டயஸ் நியமனத்தை எதிர்த்திருக்க வேண்டும் ஜெர்மனி. அப்படி எதிர்த்திருந்தால், இலங்கை அரசு போர்க்குற்றங்களில் சம்பந்தப்படாத ஒருவரைத்தான் தூதராக நியமித்திருக்கும். ஆனால், அதனை ஜெர்மனி அரசு செய்யாததால் ஒரு போர்க்குற்றவாளிக்கு உயர்ந்த அந்தஸ்து கொடுத்திருக்கிறது இலங்கை. இதன்மூலம் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை ஜெர்மனி அரசும் அங்கீகரிக்கிறதோ என்பதால்தான் ஐரோப்பிய மனித உரிமை சாசன விதிகளின்படி சட்ட நடவடிக்கையை மேற்கொண்டோம்.

இதற்கான ஆதாரங்கள் ஏதும் வழக்கில் தாக்கல் செய்யப் பட்டிருக்கிறதா?

ஜனவரி 2009-லிருந்து மே 2009 வரையில் நிகழ்ந்த கொடூரங்களின் தொடர்பான 182 வீடியோ பதிவுகளை சேகரித்திருக்கிறோம். இவற்றோடு ஜெகத் டயஸின் வன்னி மீதான படை நகர்வுகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து 6 வீடியோ ஆதாரங்களை தயாரித்திருக்கிறோம். 10,740 அப்பாவி பொது மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கும் 12,442 பேர் படுகாய மடைந்ததற்குமான ஆவணங்கள் சேகரிக்கப் பட்டன. இவைகள் அனைத்தும் ஆதாரங்களாக வழக்கின் மனுவோடு இணைத்து கொடுக்கப்பட்டி ருக்கிறது.

நாட்டு எல்லைகள் தாண்டிய நிலையில், குடும்ப ரீதியான உறவுகளைப் பேணி வாழுகின்ற ஒரு சமூகமான ஈழத்தமிழர்கள், ஒருநாட்டில் நடத்தப்படுகின்ற ஓர் அரசியல் நியமனத்தின் ஊடாக -அதுவும் போர்க்குற்றம் புரிந்தவராக கருதப்படும் ஒருவரால் அச்சுறுத்தல்களுக்கு ஆளா கிறோம். இது தொடர்பான சட்டவியல் அடிப்படைகளைக் கொண்டதாகவும் எங்களின் குற்றப் பத்திரிகை தயாரிக்கப் பட்டிருக்கிறது.

உங்கள் சட்ட நடவடிக்கையின் மூலம் என்ன மாதிரியான தீர்வு கிடைக்குமென கருதுகிறீர்கள்?

ஜெகத் டயஸ் ஒரு போர்க் குற்றவாளி என நிரூபிக்கப்பட விருப்பதால், அவரது நியமனத்தை ஏற்க மறுத்து அவரை திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டுமென இலங்கை அரசை ஜெர்மனி நிர்பந்திக்க வழி பிறக்கும்.

மேலும், போர்க்குற்றங்கள் தொடர்பான சட்டரீதியிலான விசா ரணைகளை எதிர்கொள்ள மறுத்து, இன ஒடுக்குமுறையைத் தொடர்ந்து ராஜ பக்சே அரசு கையாளும் நிலையில் விசாரணைக்கான தார்மீக அடிப்படைகள் மேலும் வலுப்படுத்தப்படுவதாக அமையும். சுவிஸில் உள்ள ஜெர்மனி நாட்டு தூதர், தற்போது எங்களை அழைத்து நீண்ட நேரம் ஆலோசித்திருக்கிறார்.

இந்த ஆலோசனையில் நிறைய தகவல்களை ஆதாரபூர்வமாக அளித்திருக்கிறோம். ஜெர்மன் தூதர் எங்களை அழைத்து கதைத்திருப்பதே வழக்கின் வெற்றியைக் காட்டுகிறது.

Please Click here to login / register to post your comments.