இலங்கையின் தேசிய செல்வத்தை பங்கிட மறுக்கும் சிங்கள தேசம்

ஆக்கம்: டி.சிவராம் (தராக்கி)
உலகின் வரையறுக்கப்பட்ட வளங்களுக்காக மனிதர்கள் போட்டியிடுகின்றார்கள். இந்தப் போட்டி அரசியல் முரண்பாடுகளுக்கும் பெரும் போர்களுக்கும் காரணமாகிறது. மனித குலத்தின் அனைத்து முரண்பாடுகளும் சண்டைகளும் வரையறுக்கப்பட்ட வளங்களுக்கான இந்த போட்டாபோட்டியிலிருந்தே தோன்றுகின்றன என சிலர் கூறுவர். இலங்கை இனப்பிரச்சினையையும் நாம் இந்த அடிப்படையில் நோக்கலாம்.

கடந்த வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினுடைய முதலாவது வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் தமிழருக்கு எந்த நன்மையுமில்லையென சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியுள்ளனர். வரவு செலவுத்திட்டம் என்பது உண்மையில் என்ன? ஒரு நாட்டின் திரட்டிய தேசிய செல்வத்தை எதற்கு எவ்வாறு செலவிடுவது எனத் தீர்மானிப்பதே வரவு செலவுத்திட்டம் எனப்படுகிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால் இலங்கைத் தீவின் அனைத்து மக்களிடமிருந்தும் வரியாகவும் தீர்வைகளாகவும் இன்ன பிற வழிகளிலும் திரட்டப்படும் தேசிய செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது எதற்கு ஒதுக்கீடு செய்வது என்ற ஏகபோக உரிமை சிறிலங்கா அரசியல் யாப்பின் 148ஆவது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. யார்தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கப்போவது சிங்கள அரசியலாளரே.

இதன் அர்த்தம் என்ன? சிங்கள மக்களுடைய மேம்பாட்டை நோக்கியே இலங்கையின் திரட்டிய தேசிய செல்வத்தை அவர்கள் செலவிட முனைவர் என்பதே யதார்த்தம். இலங்கையின் தேசிய செல்வம் என்பது தமிழராலும் உருவாக்கப்படுவதாகும். ஆனால் அதை எவ்வாறு தமது சமூக நன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் செலவிடுவதென்ற உரிமை அவர்களுக்கில்லை. இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானியர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டுவரும் பல சிக்கல்களுக்கு இதுவே காரணமாகும்.

தமிழ் சிங்கள மேட்டுக்குடிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பார்கள். அவர்கள் இனபேதமின்றி இலங்கையின் தேசிய செல்வத்தை கையாள்வர் என இலங்கைக்கு ஒற்றையாட்சியை வழங்கிச் சென்றபோது பிரித்தானியர் எதிர்பார்த்தனர். அந்நேரத்தில் சில தமிழ்த் தலைவர்களும் இதே கருத்தைக் கொண்டிருந்தமையால் தேசியசெல்வத்தின் மீது நாடாளுமன்றத்திற்கிருந்த ஏகபோகத்தை, தனியுரிமையை எதிர்க்கத் தவறிவிட்டார்கள். சிங்களப் பெரும்பான்மை நாட்டில் அதன் நாடாளுமன்றத்தை சிங்கள அரசியலாளரே கட்டுப்படுத்துவார்கள் எனவும் அதனால் இலங்கையின் தேசிய செல்வமும் அவர்களின் தனியுரிமையாகிவிடும் எனவும் சில தமிழ் அரசியலாளரும் அறிஞர்களும் அன்று எழுப்பிய குரல் எடுபடாமல் போயிற்று.

அது மட்டுமன்றி ஒரு நாட்டின் தேசிய செல்வத்தின் மீதான ஏகபோக உரிமையை அனுபவிப்பவர்கள் தமது ஏனைய அரசியல் ஏகபோகங்களையும் இலகுவில் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்பது உலக அரசியல் வரலாறு தரும் பாடமாகும். அதாவது இலங்கையின் திரட்டிய தேசிய செல்வத்தை விகிதாசாரப்படி தமிழருக்குப் பங்கிட்டுக் கொடுப்பதற்கும் அதையவர்கள் எவ்வாறு செலவிடுவது என்பதற்கான அரசியல் நிருவாக ஒழுங்கை ஏற்படுத்துவதற்கும் பிரித்தானியர் ஆவனசெய்திருந்தால் இன முரண்பாடு இந்தளவிற்கு வளர்ந்திருக்காது எனச் சிலர் கூறுவர். பழையதைப் பேசிப் பயனில்லை.

இந்தவகையில் தமிழருக்கேற்பட்ட பெரும்பாலான இன்னல்களையும் அவர்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் இலங்கையின் வளங்கள் மீது சிங்கள தேசம் கொண்டுள்ள ஏகபோக உரிமையின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள முடியும். இலங்கையின் தேசிய செல்வத்தின் பெரும்பகுதி சிங்கள தேசத்தை விருத்திசெய்யச் செலவிடப்பட்டதாலும் தமிழ், முஸ்லிம் மக்களினுடைய பல வாழ்வாதாரப் பிரதேசங்கள் சிங்கள மக்களின் ஏற்றம் கருதி உருவாக்கப்பட்ட பெருநீர்ப்பாசனத் திட்டங்களால் கையகப்படுத்தப்பட்டதாலும் தமிழர் தாயகத்திற்குள்ளேயே போட்டிகளும் பிரதேச முரண்பாடுகளும் ஏற்படலாயின.

அதாவது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இலங்கையின் திரட்டிய தேசிய செல்வம் ஆயிரம் ரூபா என வைத்துக்கொள்வோம். அதில் தமிழருக்குச் சேரவேண்டியது குறைந்தபட்சம் நூற்றியிருபது ரூபாயாகும். ஆனால் இந்த நூற்றியிருபது ரூபாயில் பெரும் பகுதி நாடாளுமன்றத்திற்கூடாக சிங்கள மக்களின் நன்மைக்கு செலவிடப்படுமாயின் தமிழ் மக்களிடையே எஞ்சுகின்ற ஒருசில ரூபாய்களுக்கான போட்டியும் முரண்பாடும் அதிகரிக்கும். இவ்வாறு வரையறுக்கப்படும் வளங்கள் காரணமாக தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் முரண்பாடேற்படுவதும் தவிர்க்க முடியாததாகின்றது.

வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களில் கணிசமான சிங்களவர்கள் இருக்கின்ற அம்பாறை, திருமலை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு சிறிலங்கா அரசு கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. இதைத்தான் யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு சிறிலங்கா அரசு ஒரு சதமேனும் தரவில்லையென யாழ் அரச அதிபர் ஒருமுறை குறிப்பிட்டார். வட கிழக்கின் பெரும்பான்மையான மாவட்டங்களிலுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை போன்றவையும் சிறிலங்கா அரசின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளில் எதுவும் பெறாமல் அலுவலகங்களை மட்டும் பெயருக்கு நீண்டகாலம் பேணிவந்தன.

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் தொடங்குவதற்கான நிதியொதுக்கீடுகளோ கடன்களோ வட கிழக்கில் மூன்று வருட அமைதிக்குப் பின்னர்கூட கொடுக்கப்படுவதில்லை. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பெருங்கைத்தொழில்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றின் ஒட்டுமொத்த விளைவாக தமிழர் தாயகத்தில் இன்று வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகிச் செல்கின்றன. இவற்றை தமிழ் அரசியலாளர் கேள்வி கேட்காமலிருப்பதற்கு பரவலாக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடு என்ற பெயரில் ஆளுக்கு ஐம்பது லட்சம் என்று சிறு எலும்புத் துண்டுகள் போடப்படுகின்றன.

அதையெப்படி கோயில்களுக்கும் விளையாட்டுக் கழகங்களுக்கும் வழங்கி தமது அரசியல் ஆதரவுகளைத் தக்கவைத்துக் கொள்வது என்பதிலேயே நமது தமிழ் அரசியலாளர் கவனங்கொண்டு திரிவர். ஆனால் உண்மை என்ன?. இலங்கையிலேயே வங்கிகளில் அதிக பணத்தைச் சேமிப்பவர்கள் தமிழர்கள். மிகவும் நெருக்கடியான போர்க்காலத்திலேயே இவர்களுடைய சேமிப்பு எப்படி கணிசமாக இருந்தது என தேசிய சேமிப்பு வங்கிப் பணிப்பாளரே ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.

வங்கிச் சேமிப்புகளே தென்னிலங்கையில் பெருங் கைத்தொழில்கள் தொடங்குவதற்கும் அபிவிருத்திகள் செய்வதற்கும் பல்வேறு வகைக் கடன்களாக வழங்கப்படுகின்றன. வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை ஈடுசெய்வதற்கும் சிறிலங்கா அரசு இந்தச் சேமிப்புக்களை நம்பியே வங்கிகளிடம் கடன்வாங்குகின்றது. இந்தவகையில் தமிழரின் சேமிப்புகளும் அவர்களிடமிருந்து அறவிடப்பட்ட பல்வேறு வரிகளும் அவர்கள் மீதே போர்தொடுக்க பயன்படுத்தப்பட்டன என்ற உண்மையை நாங்கள் கவனிக்க வேண்டும். சிங்கள மேலாண்மையாளரால் நாம் எந்தளவிற்கு முட்டாளாக்கப்பட்டோம், இன்னும் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்க இன்று பலருக்கு நேரமில்லை.

56 ஆண்டுகளாக இலங்கையின் தேசிய செல்வத்தின் மீது சிங்கள தேசம் கொண்டிருந்த ஏகபோக உரிமையின் காரணமாக ஏற்பட்ட அழிவுகளையும் தீமைகளையும் கருத்தில் கொண்டுதான் தமிழர் தாயகத்தின் புனரமைப்பு, மீள் கட்டுமானம் என்பவற்றைச் செய்வதற்கு ஒரு தனிக் கட்டமைப்பினையும் அதற்கான நிதியையும் புலிகள் கோரினர். அதாவது இலங்கையின் தேசிய செல்வத்தில் தமிழருக்கு நியாயமாக உரிய பங்கில் ஒரு பகுதியைத் தானும் எவ்வாறு செலவிடுவதென தமிழரே தீர்மானிப்பதற்கான ஒரு கட்டமைப்பைப் பற்றியே புலிகள் பேசினர்.

ஆனால் இது சிறிலங்கா அரசியல் யாப்பின் 148ஆவது பிரிவின் கீழ் இலங்கையின் தேசிய செல்வத்தின் மீது நாடாளுமன்றத்திற்குள்ள ஏகபோக உரிமைக்கு முரணானதால் சட்டவிரோதமானதென சிங்கள அரசியலாளர் தட்டிக்கழித்து விட்டனர். அதாவது தமிழ் மக்கள் உருவாக்கும் செல்வத்தை எவ்வாறு, எதற்கு பயன்படுத்துவதென்ற தனியுரிமையை சிறு துளிகூட விட்டுக்கொடுக்க சிங்கள மேலாண்மையாளர் தயாரில்லை என்பதையே இது மீண்டும் நிறுவியது.

வரதராஜபெருமாள் மாகாணசபை மூலமாக செயற்பட முற்பட்டபோது அதற்கும் இது போன்றதொரு தடையைப் போட்டனர் சிங்கள மேலாண்மையாளர். மாகாண சபைகளுக்கு திரட்டிய தேசிய செல்வத்தின் ஒரு பங்கைக் கொடுப்பதற்கு நிதி ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென 13ஆவது திருத்தச்சட்டத்தில் கூறப்பட்டது. இந்த ஆணைக் குழுவை நடைமுறைப்படுத்தி அதன் மூலம் தேசிய செல்வத்தில் தமிழருக்குரிய ஒரு பங்கையாவது சிங்கள தேசத்திடமிருந்து பெற்றுவிடலாமென எதிர்பார்த்தார் பெருமாள். கடைசிவரை முடியவில்லை. எனவே தமிழீழந்தான் ஒரே வழியெனப் பிரகடனப்படுத்தி அவர் இந்தியாவிற்கு ஓடிவிட்டார்.

மாகாணசபைகள் இயங்கத் தொடங்கி பதினாறு வருடங்களாகியும் இன்று வரை இந்த நிதி ஆணைக்குழு பற்றிய பேச்சையே எடுக்காமலிருக்கிறார்கள் சிங்கள மேலாண்மையாளர். ஒழுங்கான மாநில சுயாட்சியென்பது ஒரு நாட்டின் தேசிய செல்வத்தை நீதியான முறையில் பங்கிடுவதற்கான அரசியல் நிருவாகக் கட்டமைப்பைக் கொண்டதாகும்.

உள்நாட்டுப் போர் நடைபெற்ற, பெற்றுவரும் பலநாடுகளில் தேசிய செல்வத்தையும் வளங்களையும் எவ்வாறு பங்கிடுவதென்பது ஒரு மிக முக்கியமான அம்சமாகக் காணப்படுகின்றது. சூடானில் 1983ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு கடந்த பல ஆண்டுகளாக நடந்துவந்த பேச்சுக்களில் அந்நாட்டின் எண்ணெய் மற்றும் அரபிப் பசை என்பவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயை எவ்வாறு சமனாகப் பங்கிடுவது என்ற விடயம் மிக அடிப்படையாயிருந்தது.

எண்ணெய் வளம் நிரம்பிய நைஜீரியா நாட்டில் பல இனங்கள் காணப்படுகின்றன. 1960, 1963 இல் இந்த இனங்கள் இணைந்து உருவாக்கிய சமஷ்டி அரசியல் யாப்பில் நைஜீரியாவின் தேசிய செல்வத்தை எவ்வாறு நீதியாகப் பங்கிடுவதென்பது மிக முக்கியமான அம்சமாக வரையப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தின் ஒரு மிக முக்கிய இயற்கை வளமான இல்மனைட் மண்ணை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்தது சிங்கள தேசம். அதிலொரு சிறுபங்கைக் கேட்டாலும் சட்டப் புத்தகத்தைக் காட்டுகிறார்கள்.

இந்தியாவின் தேசிய செல்வத்தை அதன் மாநிலங்களுக்கு உரிய முறையில் பங்கிட்டுக்கொடுப்பதற்கென அந்நாட்டின் அரசியல் யாப்பின் கீழ் நிதி ஆணைக்குழு ஒன்று இயங்குகிறது. நீண்ட காலமாக இந்தியாவின் தேசிய செல்வத்தை இந்தி மொழி பேசும் வட மாநிலங்களே ஆண்டனுபவிக்கின்றன என தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் குறைபட்டு வந்தன. இந்தியாவில் முழுமையான சமஷ்டியாட்சி முறை இல்லாமையே இதற்குக் காரணமாகும். எனினும் தேசிய செல்வத்தை நீதியான முறையில் பிரித்திட வேண்டுமென்பது கொள்கையளவிலாவது அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் இது பற்றிய பேச்சையெடுக்கவே மறுக்கிறது சிங்கள தேசம். இத் தீவின் அனைத்து பாகங்களிலுமுள்ள வளங்கள் மீதும் அங்கு உருவாக்கப்படும் செல்வத்தின் மீதும் தனக்கே ஏகபோக உரிமையுண்டு என்பதில் சிங்கள தேசம் மிகமிக உறுதியாகவுள்ளது. இதை மாற்றலாமென்று யாரும் கனவு காண வேண்டாம். நன்றி: வீரகேசரி வார வெளியீடு (Nov 21, 2004)

Please Click here to login / register to post your comments.