ஈழத் தமிழர் மறுவாழ்வும் டெல்லியின் உதவியும்

போரினால் இடம்பெயர்ந்த மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் வேகமாக நடைபெற வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது. தமிழர்களின் மறுவாழ்வு மட்டுமல்ல, அவர்களின் முன்னேற்றத்திற்கும் இந்தியா உதவும்” என்று இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார்.

சென்னைக்கு நேற்று வந்த நிருபமா ராவ், தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசியப் பிறகு, அவருடைய வீட்டின் முன் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசியுள்ளார்.

போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்தியா திட்டமிட்டுள்ளது என்றும், அதன் முன்னோடித் திட்டமாக முதலில் 1,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் கூறியுள்ள நிருபமா ராவ், போர் நடந்த பகுதியில் தமிழர்களின் வாழ்வும், மறுவாழ்வுப் பணிகளும் எப்படி நடைபெறுகிறது என்பதை நேரில் கண்டறிய இந்திய அரசின் மூத்த அதிகாரி அடுத்த மாதம் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வார் என்றும் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் மறுவாழ்விலும், முன்னேற்றத்திலும் இந்தியா காட்டும் அக்கறையின் அடிப்படை ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியத் தமிழர்களுக்கும் யாரும் விளக்கிக் கூறத் தேவையில்லை. பொதுவாகத் தமிழர்கள் மீதும், குறிப்பாக ஈழத் தமிழர்கள் மீதும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தின் மீதும் தனக்குள்ள அக்கறையை இந்திய அமைதிப்படையை அனுப்பிய காலத்திலிருந்தே தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

அதுபோதாதென்று, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி ஈழத் தமிழர்கள் மீது ராஜபக்சயின் இனவெறி சிறிலங்க அரசு தொடுத்த இனப் படுகொலைப் போருக்கு எல்லா வழிகளிலும் உதவி, ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்கள் தடையின்றி கொன்றொழிக்க ராஜபக்ச அரசிற்கு துணை நின்றது மட்டுமின்றி, போர்க் குற்றம் புரிந்ததாக சிறிலங்க அரசிற்கு எதிராக உலக நாடுகளும், ஐ.நா.வும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவது வரை இந்திய அரசு செய்துவரும் உதவியை ராஜபக்ச மறந்தாலும் தமிழர்களால் மறக்க முடியுமா?

மறக்க வேண்டும், குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் மறக்க வேண்டும் என்பதற்காகவே தமிழக முதல்வர் - நிருபமா சந்திப்பு மிகவும் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. தமிழர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி சிங்கள அதிபர் ராஜபக்சவிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்ததோடு மட்டுமின்றி, அவருக்கு குடியரசுத் தலைவர் விருந்தும் அளித்துக் கெளரவித்து அனுப்பி வைத்தனர். இந்த விருந்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது மனைவியுடன் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சென்னையில் துப்பாக்கியால் ஒரு தலித் இளைஞனை சுட்டுக் கொன்ற குற்றவழக்கின் முக்கியக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

டெல்லிக்கு வருகை தந்த மகிந்த ராஜபக்சவின் அந்த வருகையைத்தான் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று நிருபமா ராவ் வர்ணிக்கிறார். யாருக்கு, எப்படிப் பயனுள்ளதாக இருந்தது என்று நிருபமா விளக்கவில்லை!

போரைத் தொடுத்து தமிழர்களை அழித்து, மி‌ச்சம் மீதமிருந்தவர்களை முள்வேலி முகாம்களில் அடைத்துவைத்து சித்தரவை செய்து, இப்போது மறுகுடியமர்த்தம் என்ற பெயரில் 5 துத்தநாகத் தகடுகளையும், சில கழிகளையும், கையில் சில நாட்களுக்கு ரேஷனையும் கொடுத்தனுப்பிக் கொண்டிருக்கிற ராஜபக்ச அரசுடன் நல்லுறவு கொண்டுள்ள டெல்லி ஆட்சியாளர்கள், மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டுள்ள தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடு கட்டித் தரப்போவதாக தொடர்ந்து தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழரை வாழவைக்க அத்தனை அக்கரை டெல்லி அரசிற்கு!

எங்கே கட்டித் தரப்போகிறார்கள்? ஈழத் தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களிலா மீண்டும் குடியமர்த்துகிறார் ராஜபக்ச? இல்லையே? வடக்கில் வாழ்ந்தவர்களை கிழக்கிலும், மன்னாரில் வாழ்ந்தவர்களை யாழ்ப்பாணத்திலும், முல்லைத் தீவுகளில் வாழ்ந்தோரை கிளிநொச்சியிலும் குடியேற்றுகிறார்கள். அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றுகிறார்கள். கோயில் உட்பட தமிழர்களின் சமயச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன. இங்கே வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதையெல்லாம் பேசினார்கள். ஆனால் இதுபற்றியெல்லாம் ராஜபக்ச‌விடம் ஒரு வார்த்தை பேசாத டெல்லி, தமிழர்களுக்கு வீடு கட்டித் தரப்போவதாகவும், அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுவது என்பதில் உறுதிபூண்டுள்ளதாகவும் கூறுகிறது!

தமிழர்களின் காணிகளை சிங்களர்களுக்கு பிரித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ராஜபக்ச. இதனை அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே, போர் முடிந்த சில மாதங்களிலேயே பேசினாரே இரா.சம்பந்தன், அது குறித்து டெல்லி ஆட்சியாளர்கள் பேசினார்களா?

மன்மோகன் சிங்கும், ராஜபக்சவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இதுபற்றி எங்காவது கூறப்பட்டுள்ளதா? ஏன் இல்லை?

இப்படி அடிப்படை பிரச்சனைகளுக்கு பதில் பெறாமல், தமிழர்களுக்கு எங்கே வீடு கட்டித் தரப்போகிறீர்கள்? நிருபமா சந்தித்துவிட்டு பேட்டி கொடுத்ததைப்போல, சில வாரங்களுக்கு முன்னர் சென்னை வந்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தமிழக முதல்வரைச் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் வீடு கட்டும் திட்டம் குறித்துப் பேசுகையில் என்ன கூறினார் தெரியுமா?

“எங்கே வீடு கட்டித் தரவேண்டும் என்று (சிறிலங்க அரசு) இடம் ஒதுக்கித் தருகிறார்களோ அந்த இடத்தில் இந்தியா வீடு கட்டித்தரும்” என்று கூறியுள்ளார். இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது!

இதுதான் டெல்லியின் மனிதாபிமான உதவி! தமிழர்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அகற்றிவிட்டு, அங்கு சிங்களக் குடியேற்றங்களை செய்துக் கொண்டிருக்கும் சிறிலங்க அரசிற்கு உதவுவதற்கான அற்புதமான திட்டமல்லவா இந்தியாவின் வீடு கட்டித்தரும் திட்டம்? தமிழர்களுக்கு உதவும் இந்தியாவின் மறுவாழ்வுத் திட்டம் இதுதான்!

இதனை அகமகிழந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் மு.கருணாநிதி. தமிழினத் தலைவர் அல்லவா? இனப் படுகொலைப் போர் நடந்து கொண்டிருக்கும் போதே போர் முடிந்தது என்று கூறியவரல்லவா? அதுமட்டுமா? இன்னமும் தாக்குதல் நடைபெறுவதாக செய்திகள் வருகின்றனவே என்று கேட்டதற்கு “மழை நின்றுவிட்டது தூவான‌ம் நிற்கவில்லை, அவ்வளவுதான்” என்று கூறி சமாளித்த சாணக்கியர் அல்லவா? அவர் டெல்லியின் இந்த மறுவாழ்வுத் திட்டத்தை அகமகிழ்வுடன் ஏற்கிறார்!

ஈழத் தமிழரின் வாழ்வு சிங்கள பெளத்த இனவெறி அரசின் போரினால் அழிக்கப்பட்டது, இப்போது மீள்குடியமர்த்தல் என்ற பெயரில் சிதறிக்கப்படுகிறது. தமிழினப் படுகொலைக்கு உதவியது போல், இப்போது அவர்களின் தமிழினத்தை சிதறடிக்கும் திட்டத்திற்கு டெல்லி உதவப்போகிறது. அதற்கான முன்னோடியாகத்தான் டெல்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இலங்கை சென்று தமிழர் வாழும் பகுதிகளுக்குச் சென்று மறுவாழ்வுப் பணிகள் (!) எப்படி நடைபெறுகின்றன என்பதை நேரில் கண்டுவரச் செல்கிறார்.

மறுகுடியமர்த்தம் என்ற பெயரில் தாங்கள் நினைத்த இடத்தில் தமிழர்களைக் குடியேற்றிவரும் சிறிலங்க அரசு, இன்னமும் மாணிக் ஃபார்ம் என்றழைக்கப்படும் வன்னி மாணிக்கம் பண்ணையில் வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இது கடந்த மாதம் எடுக்கப்பட்ட படங்களாகும்.

சொந்த மண்ணில் அகதிகளாகப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு உதவிவந்த ஐ.நா.வையும், அதோடு சேவை புரிந்துவந்த பன்னாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் நாட்டை விட்டுத் துரத்திவிட்டு, தானும் அந்த மக்களுக்கு எதையும் செய்யாத சிங்கள அரசு, தமிழருக்கு எதிரான போரில் உயரிழந்த தனது நாட்டு இராணுவ அதிகாரிகளின் குடும்பத்திற்கு கட்டிக் கொடுத்துள்ள வீடுகளைப் பாருங்கள். இ‌ப்படி‌ப்ப‌ட்ட 25 ‌வீடுகளை அதிபர் ராஜபக்ச மறை‌ந்த தனது இராணுவ ‌‌வீர‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌த்‌தினரு‌க்கு அ‌ளி‌த்து‌ள்ளா‌ர். முத‌ற்க‌ட்டமாக 700 ‌வீடுக‌ள் க‌ட்டி‌த்தர‌ப்பட உ‌ள்ளது. சிங்கள இராணுவ அதிகாரிகளுக்கு உதவ சிறிலங்க அரசிடம் நிதியுள்ளது. ஆனால் தமிழர்களும் எந்நாட்டு மக்களே என்று உலகிடம் பேசும் ராஜபக்சவிடம் அகதிகளாக நிற்கும் தமிழருக்கு உதவவும் பணமில்லை, அவர்களுக்கு உதவ முன்வரும் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கவும் மனமில்லை!

இதையெல்லாம் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத டெல்லி அரசு தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்போகிறது! முன்பு ரூ.500 கோடி கொடுத்து மனிதாபமானத்தைக் காட்டியது. இப்போது ரூ.1,000 கோ‌டி கொடுத்து மறுவாழ்வு தரப்போகிறது!

Please Click here to login / register to post your comments.