சமூகத்தை புதிய நல்வழிக்கு இட்டுச்செல்ல எழுத்தாற்றலைப் பயன்படுத்த வேண்டும்

ஆக்கம்: சொ. அமிர்தலிங்கம்
மக்கள் மனதில் ஊடுருவிப் பதிவதற்காகக் கருத்தை எடுத்து இயம்ப, அதற்குக் கருவியாக எழுத்தை ஆள்கிற எழுத்தாளனுக்குப் பொறுப்பும், குறிக்கோளும் இன்றியமையாதவை ஆகும். எழுத்தாளன் என்னும் சொல் பெயர்ச் சொல்லாகும். எழுத்தை ஆள்கின்றவனைக் குறிக்கும் சொல்லாகும். தனது கருத்துகளை எழுத்தாற்றல் மூலம் உலகுக்குக் கொண்டுவரும் எழுத்தாளன் எழுத்துக்களைச் சரிவர ஆள வேண்டும். இல் வாழ்விற்கு இல்லாண்மை அவசியமோ, நிலத்தை ஆள்வதற்கு, உயிர் வாழ்வதற்கு பயிர்ச்செய்கை எவ்வளவு அவசியமோ, எழுத்தை ஆள்பவனுக்கு எழுத்தாற்றல் அவசியமாகும். செய்யக் கூடிய நிகழக்கூடிய நிகழ்வுகளைச் சரிவர எடுத்தாண்டு நுகர்வோர், வாசகர்கள் பயன்பெற வழிவகுக்க வேண்டும். செய்யமுடியாத காரியத்தைச் செய்ய முயலக்கூடாது. ஊசித் துவாரத்தில் நூலைப் புகுத்த முடியுமேயொழிய கயிற்றை நுழைக்க முடியாது. எடுத்தியம்ப வேண்டிய கருத்தைச் சரிவர எழுத்தாற்றல் மூலம் வாசகர் மட்டத்தில் அவர்கள் பயனடைய வழியேற்படுத்த வேண்டும்.

ஒரு கணக்காளனைக் கூட எழுத்தாளான் எனக் கூறலாம். ஏனெனில், அவன் கணக்கு எழுதுகிறான். எழுத்துகள், சொற்கள் என்பனவற்றைப் பயன்படுத்தி எழுதுகின்றான். எழுதப் பயன்படுத்தும் எழுதுகோல்கள், எழுதப்பட்ட சாதனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இப்படியாக இவற்றை ஆளும் எல்லோரும் எழுத்தாற்றல் உடையவர்கள் என்று கூறமுடியாது. பிறர் கவனத்தை ஈர்க்கக்கூடிய கருத்துகளைச் சரிவரப் பயன்படுத்துபவர்களே எழுத்தாளர்கள். எழுத்தாளர்கள் இன்னொரு விதத்தில் படைப்பாளர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். எழுத்தின் மூலம் தங்கள் கருத்தைப் படைக்கின்றார்கள்.

ஆளத் தெரிந்தால்தான் எண்ணத்தை ஆளலாம். எண்ணத்தை ஆளத் தெரிந்திருந்தால் சொல்லை, எழுத்தை ஆளலாம். ஏன்? அறிவுலகத்துடன் தொடர்புடைய அத்தனையையும் ஆளலாம். எண்ணத்தை ஆளத் தெரியாவிட்டால் எழுத்தை ஆள முடியாது. புதிய பல உண்மைகளை உயர்ந்தவற்றை மனித சமூகத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டும். மனித வாழ்வு வளர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் எண்ணங்கள், செயல்கள் யாவும் வளர்கின்றன. தான் பெற்ற உணர்வை வையகத்திற்கு உணர்த்தும் எழுத்தாளன் வரவேற்கப்பட வேண்டியவன்.

எனவே, எப்பொழுதும் எழுத்தாளனின் குறிக்கோள் உண்மையைத் தழுவியதாக, அறத்தை, தர்மத்தை நிலை நாட்டி உயர்வை அடைய உதவ வேண்டும். இதற்கு எமக்கு உண்மையைப் பெறுவது, உண்மையைச் சொல்வது முக்கியம். மேலும், உண்மையைப் பேணிப்பாதுகாக்கவும் வேண்டும். துன்பம் கண்டு துடிக்கும் இதயம் எழுத்தாளனுக்கு அவசியம் வேண்டும். துயர் துடைக்கும் மனப்போக்கு இருக்க வேண்டும். வால்மீகி முனிவர் இராமாயணத்தை எழுதும்போது அன்றில் பறவைகள் இரண்டில் ஒன்று மாண்டபோது மற்றதன் துன்பத்தைக் கண்டு உள்ளம் உருகியே எழுதினார். எனவே, துன்பம் கண்டு துடித்த வால்மீகி துயர் துடைக்க இராமாயணத்தைப் படைத்தார். துன்பம், துயரம் ஏற்படும்போது எழுத்தாளனும் உணர்ச்சிவசப்பட்டு மக்கள் மத்தியிலே ஈடுபாட்டை ஏற்படுத்துகின்றான்.

இன்று உலகிலே கற்பனை இலக்கியங்களைப் படைப்பவர்கள் எழுத்தாளர்கள் என்று பெயருடன் சிறப்படையக் காணலாம். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் ஆகியவற்றில் கற்பனை இலக்கியம் மிகுந்து காணப்பட்டு சிறந்த இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இதற்குக் காரணம் அவர்களின் எழுத்தாற்றலாகும். கற்பனையைக் கூட தத்ரூபமாக, உயிரோவியமாக எழுத்தாற்றல்மூலம் எடுத்தாள்கின்றான் எழுத்தாளன். இதனால் இவனது எழுத்துகள் நுகர்வோர் மத்தியில் பெரு மதிப்புக்கு உள்ளாகின்றன. எழுத்தாளன் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்துகின்றான். இதன் மூலம் பலர் போற்றும் பாத்திரதாரியாகின்றான்.

எழுத்தாற்றலுக்குத் தேவையான தகுதிகள் அவனிடம் உண்டு. உலகத்தைக் கூர்ந்து கவனித்துப் பார்க்கக்கூடிய கண்கள், வாழ்க்கையில் சிறிய உண்மையை ஊடுருவிக் காணும் நோக்கு, எண்ணங்களைத் தேவையாக்கி மனதில் வளர்க்கும் தன்மை என்பன அவனுக்கு ஏற்பட வேண்டும். முன்னர் அகத்திணை, புறத்திணை செய்யுள்கள், சிறு காப்பியங்கள், பெருங்காப்பியங்கள் என்பன தோன்றி வளர்ந்தனபோல இன்று சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள் என்று தோன்றி வளர்ந்துள்ளன. முன்னைய சமூகத்திலும் பார்க்க இன்றைய சமூகத்திற்கு மிக்க பயன்தரத்தக்க வகையில் இன்றைய எழுத்தாற்றல் காணப்படுகிறது. இது எமக்கு கிடைத்த உரைநடை இலக்கியத்தின் வெற்றியாகும். மேலும், இலக்கயத் தன்மையில் எளிமையைக் காணக்கூடியதாகவுள்ளது. இலக்கியப்படைப்பானது உண்மையையும் அறத்தையும் உயர்ந்த குறிக்கோளையும் கொண்டு திகழ வேண்டும். ஆனால், இன்றைய பல கதைகள், நாவல்கள், நாடகங்கள் என்பன பொய்யான கற்பனையைக் கொண்டனவாக அமைகின்றன. எனினும், புனைந்துரை இலக்கியத்தைக் கொண்டும் உண்மையையும் அறத்தையும் குறிக்கோளையும் அடைய முடியும். எழுத்தாற்றலுள்ளவன் எதையும் சாதிக்கலாம். ஊக்கத்தை அடையலாம். கூர்மையற்ற கத்தியை, தட்டையாக இருக்கும் சாணக்கல்லில் தீட்டினால்தான் கூர்மை ஏற்படும். எனவே, புனைந்துரைகளால் நாவல், கதை, நாடகம் ஆகியவற்றைக் கொண்டுதான் எழுத்தாளன் உண்மையை அறத்தை ஒளிபெறச் செய்கின்றான்.

எமது எழுத்தாற்றலுக்கு தடைகள் உள்ளன. நாம் எல்லோரும் எதையாவது எழுதிவிட வேண்டுமென ஆசைப்படுவது, பத்திரிகை ஆசிரியர்கள் எல்லோரையும் எல்லாவற்றையும் எழுதிவிடச் செய்யவேண்டும் என ஆசைப்படுவது என்பன எழுத்தாற்றலை தடைசெய்கின்றன. நல்லவற்றை எழுதும்போது பாராட்டி மதிக்கும் வாசகர்களின் இலக்கிய தரம் வளர வேண்டும். இன்று தமிழ் பத்திரிகைகள் பலவற்றில் வியாபார நோக்கிற்காகப் பிரசுரிக்கும் பழக்கமுள்ளது. ஆனால், தமிழ் பத்திரிகை உலகில் எழுத்தாற்றல், தரம் உண்மை, குறிக்கோள் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து பிரசுரிக்க வேண்டும். உயர் தமிழ் பண்பாட்டினை வளர்க்க வேண்டும். சமூகத்தினை புதிய நல்வழிக்கு மாற்றிச் செல்லும் தன்மையானது வளர வேண்டும்.

எல்லா இலக்கிய வடிவங்களைப் போலவே கவிதையும் ஒரு எழுத்துப் படைப்பு. ஆனால், மொழியின் அடிப்படையில் பார்க்கும்போது, மற்றவடிவங்களை விட அபூர்வமானது. மேலானது. கவிதை, மொழியின் உச்சமான வெளிப்பாடு. மொழியின் அத்தனை சாரங்களையும் தன்னுள் வாங்கிக் கொண்டு வெளிப்படுத்துகிற ஒரு வடிவமாகும். அநாவசிய வார்த்தைகளுக்கோ, அலங்காரங்களுக்கோ கவிதையில் இடமில்லை. சிறுகதை எழுத்தாளர் ஆசிரியரின் இடத்திலிருந்து வாசகர்களுக்குச் சொல்லித்தர முடியும். மற்ற இலக்கிய வடிவங்களிலும் இது சாத்தியமானது. ஆனால், கவிதையில் இது சாத்தியமில்லை. இங்கே கவிஞனும் வாசகனும் ஒரே தளத்தில் இயங்குகின்றனர்.

மகாகவி பாரதியார் "எழுதுகோல் தெய்வம் - இந்த எழுத்துத் தெய்வம்" என்று எழுத்தாற்றலுக்கும் எழுத்துக்கும் கடவுளுக்குள்ள அவ்வளவு பெருமையை எடுத்தியம்பியுள்ளார். இலக்கியம் இலக்கியத்திற்காக படைக்கப்பட வேண்டுமேயொழிய வியாபாரத்திற்காக ஆசாபாசங்களுடன் படைக்கப்படக்கூடாது. கதை, நாவல், நாடகம், சிறுகதை, கட்டுரை, கவிதை என்பன நேர்முகமாகவோ, புனைந்துரை மூலமாகவோ சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும்.

இன்பத்தை பயக்க வேண்டும். சாதாரண மக்களை வழி நடத்தும் பொறுப்பு எழுத்தாளர்களுக்குண்டு.

எனவே, எழுத்தாற்றலில் தமிழ்ப் பண்பையும் குறிக்கோளையும் மறந்து விடாமல் எழுத வேண்டும். எம்மிடம் எழுத்தாற்றலின்றி, எழுத்தை ஆளத் தெரியாதுவிடின் எழுத்தாளன் எனக் கூறிப் பயன் இல்லை. எனவே, எழுத்தையும் கருத்தையும் ஆளத் தெரிந்தவர்கள் வாசகர்கள் நுகர்வோரை ஆள முடியும் என்பது உண்மை.

எழுத்தாளனானவன் வாழ்ந்து பார்த்த வாழ்க்கையினையும், செவி வழிச் செய்திகளையும் பதிவாக மட்டுமன்றி அதன் உள்ளார்ந்த தரிசனங்களை மக்களுக்கு உணர்த்த வேண்டும். சாதாரண மக்களை வழிநடத்தும் பொறுப்பு எழுத்தாளர்களைச் சார்ந்தது. எதிலும் அறத்தோடுவரும் இன்பத்தை நாம் ஏற்றாக வேண்டும்.

"அறத்தான் வருவதே இன்பம். மற்றெல்லாம் புறத்தே புகழும் இல"

என்பது வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. எனவே, எழுத்தாளராகிய நாம் எழுத்தாற்றலைப் பொறுப்புக் கெட்டுவிடாமல் எழுத வேண்டும். எமது கலைப்பண்புகளால் வாசகர்கள், நுகர்வோர் பயன்பெறும் முறையில் எழுத வேண்டும். எமது தமிழ் வளர தமிழ் மணம் பரப்ப எழுத்தாற்றல் படைத்த எழுத்தாளர்களே தேவை. எழுத்தாற்றலுள்ள எழுத்தாளர்களே எதிர்கால தமிழினத்தை பாதுகாக்க வேண்டியவர்களாவர். "வளர்க எழுத்தாற்றல்! வாழ்க தமிழ்!"

Please Click here to login / register to post your comments.