சிங்களர்கள் மனதில் ராஜபக்ஷே விதைத்த சிந்தனைகள் - யோகேஸ்வரன் எம்.பி. சிறப்புப் பேட்டி

ஆக்கம்: த.கதிரவன்

எந்த மருந்திட்டும் ஆறாத ரணமாக வலியெடுத்துக் கிடக்கிறது ஈழத்துப் பெருஞ்சோகம்...! செய்த குற்றத்துக்குப் பரிகாரமாக, போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுகளின் மறு குடியமர்வுகளுக்கென்று இந்தியாவும் தொடர்ந்து நிவாரணப் பொருட்களையும் நிதியுதவிகளையும் வழங்கிவருகிறது.

இதற்கிடையில், 'நிவாரணப் பணிகளில் இலங்கை அரசு மெத்தனம் காட்டி வருகிறது. எனவே இந்தியா சிறப்புத் தூதுவரை அனுப்பி உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்' என்ற தமிழக முதல்வரின் 'ஆவேசக் கடிதத்துக்கு இணங்க' சிறப்புத் தூதராக இலங்கை சென்று வந்திருக்கிறார் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ்!

இந்நிலையில், கொழும்புவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்திறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யும், மட்டு. மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரனிடம் 'இலங்கையில், சிறப்புத் தூதர் வருகைக்கு முன், பின் நிலவரம்' குறித்துப் பேசினோம்.

இந்திய சிறப்புத் தூதர் வருகைக்குப் பின்னர் மீள் குடியேற்றப் பகுதிகளில் என்னவிதமான முன்னேற்றங்கள் நடந்திருக்கின்றன?

'போரில் எம்மக்கள் உயிர் இழந்திருக்கிறார்கள், உடமைகளை இழந்து அங்கவீனமாகியிருக்கிறார்கள். அவர்களை வளப்படுத்த நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?' என்ற கேள்வியை தூதரிடம் கல்விமான்கள் சிலர் எழுப்பியிருக்கிறார்கள். 'பழையதையெல்லாம் மறந்துவிட்டு புது நடவடிக்கைக்கு வருவோம்' என்று அவரும் கதைத்திருக்கிறார். அவ்வளவுதான். மற்றபடி எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டித் தருவதாகவும், வீட்டுக்கு இரண்டு லட்சம் தருவதாகவும் இந்தியா தெரிவித்திருந்தாக மட்டும்தான் தெரியும். எல்லா உதவிகளையுமே இலங்கை அரசாங்கத்தின் ஊடாகத்தான் இந்தியா செய்ய இருப்பதால், என்ன உதவிகள் செய்யப் போகிறார்கள் என்றுகூட எங்களுக்குத் தெளிவுப்படுத்தவில்லை. இதுவரையிலும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் வேய்ந்த தற்காலிக கொட்டகைகள் மட்டுமேதான் அமைத்திருக்கிறார்கள். மழைக்காலம் நெருங்கிவிட்ட இந்நேரத்தில் எந்தவித வசதிகளையும் செய்யாமல்தான் எம்மக்களை மீள்குடியேற்றம் செய்திருக்கிறது இலங்கை அரசு. எனவே விரைவில் தொற்று நோய் பரவும் சூழலும் இருப்பதால், கடும் கஷ்டத்திற்குள்ளாகி வருகின்றனர் தமிழ் மக்கள்.

ஈழ விவகாரத்தில், 'மனித சங்கிலியில் ஆரம்பித்து சிறப்புத் தூதர்' வரையிலான தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகள் பலனளித்திருக்கிறதா?

தமிழக அரசு செய்கின்ற எந்த நடவடிக்கையும் வைத்து இலங்கை நாட்டில் தமிழ் மக்களுக்கான எள் அளவு மாற்றங்கள்கூட நடைபெறவில்லை. கடந்த காலத்தில்கூட இங்கே ஈழத் தமிழரை முன்வைத்துதான் தேர்தல் நடத்துகிறார்கள். ஆனால், அவர்களின் கண்ணீர் துடைக்க மட்டும் யாரும் முன்வந்ததாகவேத் தெரியவில்லை. அங்கே யுத்தம் நடக்கும் நேரத்திலே தமிழகத்தில் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பே இருந்தது. ஆனாலும்கூட அதனாலும் இலங்கையில் எந்தவிதமான மாற்றமும் நேரவில்லை. தமிழகத்தை ஆட்சி செய்கின்றவர்கள் உண்மையான அக்கறையுடன் போரை நிறுத்தச் சொல்லி இந்திய அரசை வலியுறுத்தியிருந்தால் போரை நிறுத்தி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்.. ஏனென்றால் இந்தியாதானே போருக்கான உதவிகளைச் செய்தது?

அந்தப் பாரிய யுத்தத்தில் இந்தியா பங்காளராக இருந்தபடியினால்தான், தங்களோட அழிவுக்கு இந்தியாதான் காரணம் என்பதை ஒவ்வொரு தமிழனும் தன்னோட நாவிலே விதைச்சிக் கொண்டுதான் இருக்கிறான். இந்த ஆதங்கம் ஒருபக்கம் இருந்தாலும்கூட அழிந்ததுபோக இருக்கிற தமிழ் மக்களாவது சுதந்திரமாக வாழ ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுத்தர இந்தியா உதவிடுமா? என்று இன்னமும் நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கிடக்கிறான்.

ராஜபக்ஷே தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் அதிபர் பதவி வகிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்திருக்கிறாரே?

இப்போது இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான ஆதரவை ராஜபக்ஷே அரசு பெற்றிருக்கிறது. காரணம் 'தமிழர்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்தை முற்றாக ஒழித்துவிட்டதாகவும், இனி சிங்கள மக்களுக்கு எந்தவித தொல்லையும் இல்லை. இது ஒரு பவுத்த நாடுதான்' என்ற சிந்தனை சிங்கள மக்கள் மனதிலே விதைக்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்றத்திலும் இனத் துவேஷம்தான் கக்கப்படுகிறது. இதுமட்டுமல்ல.... நீதித் துறை, நிர்வாகத் துறை, சட்டத்துறை, நிதித்துறை... எல்லா வகையிலும் அவரது உறவுகள்தான் முதன்மையாக இருக்கிறார்கள். எனவே தொடர்ந்து மூன்றாவது முறையும் அவர் தனது பதவியைத் தக்கவைக்க நிறைய சந்தர்ப்பம் இருக்கிறது.

கே.பி.யின் சமீபத்திய நிலைப்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கே.பி.யை இலங்கை அரசாங்கம்தான் இயக்குகிறது. எனவே அரசாங்கம் சொல்கிற வேலைகளைத்தான் அவர் இப்போது செய்து கொண்டிருக்கிறார். மே 17 போருக்கு முன்னரே கே.பி.க்கு அரசாங்கத்துடன் தொடர்பு இருந்ததாகவும் கதைக்கப்பட்டு வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சமயத் துறையிலிருந்து வந்த எனக்கு அதுபற்றிய தெளிவு இல்லை. ஆனாலும், அரசின் கைகளுக்குள் போய்விட்டவர்கள் அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது என்பது மட்டும் உண்மை.

இலங்கையில் லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதப் பயிற்சி வகுப்புகள் நடந்துவருவதாக செய்திகள் கசிகிறதே?

இனவாதத்தை மறைப்பதற்காக மதவாதத்தை தூண்டிவிடும் வேலைகளை இலங்கை அரசு நீண்டகாலமாக செய்து வருகிறதுதான். இலங்கை சிங்கள நாடு என்பது போய், அது ஒரு பவுத்த நாடு என்றாகிவிட்டது. தமிழர்களின் நீண்டகால வாழ்விடங்களான வடக்கு கிழக்குப் பகுதியிலுள்ள பாரம்பர்யமிக்க கோவில்கள் இடிக்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டப்படுவதோடு, பவுத்த சின்னங்களை பாரம்பர்யங்களைத் திணிக்கும் வேலைகளும் நடைபெற்று வருகிறது. மற்றபடி இந்தத் தீவிரவாதப் பயிற்சி குறித்து எது சரி, பிழையென்று என்னால், சொல்ல இயலவில்லை.

பொன்சேகாவின் இன்றைய நிலைமை என்ன?

தொடர்ச்சியாக பொன்சேகா மீது அரசாங்கம் வழக்கு தொடர்ந்து கொண்டிருந்தாலும் பாராளுமன்றத்திற்கு தினமும் வந்துகொண்டுதான் இருக்கிறார். அவருக்குரிய சிறப்பு உரிமைகளும் அவ்வப்போது மீறப்பட்டுத்தான் வருகிறது. பொன்சேகா விடுதலை என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது. கடந்த யுத்தத்திலே தமிழ் மக்கள் அழிவதற்கு பொன்சேகாவும் ஒரு முக்கியக் காரணியாக இருந்தார். எனவே அவரது இன்றைய பரிதாப நிலைமைக்கு தமிழ் மக்களின் கண்ணீரும் ஒரு காரணமாக இருக்கலாம்.

போரில் சரணடைந்த 13,000 புலிகளின் குறித்த தகவல் எதுவும் உள்ளதா?

முகாமிலுள்ள மக்களைச் சந்திக்கவே எம்.பி.க்களுக்கு அனுமதி இல்லை. சுமார் 5,000 புலிகளை வெளியே அனுப்பிவிட்டோம் என்று சொல்கிறார்கள். அது எந்தளவு உண்மை என்பது யாருக்கும் தெரியாது. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். ஜனாதிபதியின் செயலாளர் அனுமதியோடு, வவுனியா இடைத்தங்கல் முகாம் மக்களைச் சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 14 எம்.பி.க்களும் சென்றிருந்தோம். ஆனாலும்கூட கடைசியில், முகாம் உள்ளே எங்களை அனுமதிக்கவில்லை. பாதுகாப்பு அமைப்புச் செயலாளர் 'உங்களை அனுமதிக்க வேண்டாம்' என்று கதைத்து விட்டார் எனச் சொல்லி மறுத்துவிட்டார்கள். நாடு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

போருக்குப் பிறகு வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் சுமார் 89 ஆயிரம் விதவைகள் உருவாகியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பேர் அங்கவீனமாகியிருக்கிறார்கள். கணக்கிலே இல்லாத அளவிற்கு இளைஞர்களும், இளம் பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய எந்தத் தகவலும் இல்லை. குண்டு வீச்சுக்களில் பாதிக்கப்பட்டு மயக்கத்திலிருந்தவர்களைக் கூட இறந்துவிட்டதாகக் கருதி குழியில் புதைத்துப் போட்ட சம்பவங்களும் நிறைய நடந்திருக்கிறது. பாரிய இந்த மன அழுத்தங்களால், மனபாதிப்புக்கு உள்ளானோர்தான் இப்போது முகாம்களிலே திரிகிறார்கள்."

Please Click here to login / register to post your comments.