காணாமல்போன உறவுகளை மீட்டுத்தருமாறு முல்லை.மக்கள் மன்றாட்டம்

இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு நல்லிணக்க ஆணைக்குழுவிடம் முல்லைத்தீவில் பொதுமக்கள் மன்றாட்டமாகக் கேட்டுள்ளனர். ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை முல்லைத்தீவு செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன் போதே குழுமுன் தோன்றி சாட்சியமளித்தவர்களும் செயலகத்திற்கு வெளியே குழுமியிருந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

புதுமாத்தளனிலிருந்து பாதுகாப்புத் தேடி யாழ்ப்பாணம் நோக்கி படகில் வந்துகொண்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சகோதரியின் கணவனை கண்டுப்பிடித்துத் தருமாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த கள்ளிப்பள்ளியைச் சேர்ந்த இரட்ணசிங்கம் ஈஸ்வரி கோரிக்கை விடுத்தார். ஆணைக்குழு முன்னிலையில் நேற்று இவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்; இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்புத் தேடி முள்ளிவாய்க்கால் வரை வந்து பின்னர் யாழ்ப்பாணம் செல்வதற்காக 20 பேருடன் படகொன்றில் நாம் சென்றுகொண்டிருந்தோம்.

அப்போது இடம் பெற்றஷெல் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். அதில் எனது சகோதரியும் பலியானார். எஞ்சிய 12 பேருடன் நாம் சென்றுகொண்டிருந்த போது கடற்படையினரால் நாம் கைது செய்யப்பட்டு புல்மோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

இதன் போது 40 முதல் 50 வரையான படகுகளை கடற்படையினர் கட்டியிழுத்துச் சென்றதை நாம் கண்டோம். அவ்வாறு படகில் கொண்டு செல்லப்பட்ட எனது சகோதரியின் கணவர் காணாமல் போயுள்ளார். இதுவரையில் அவரை நாம் காணவில்லை. அவரை எமக்கு மீட்டுத் தரவேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த துணுக்காயைச் சேர்ந்த சின்னத்துரை சத்தியசீலன் தெரிவிக்கையில்; எனது மகள் சத்தியேஸ்வரி விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக 25.02.2009 ஆம் ஆண்டு அழைத்துச் செல்லப்பட்டு முன்னரங்கப்பகுதியில் விடப்பட்டிருந்த போது காயமடைந்து புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாத காலமாக நானே அவரை பராமரித்து வந்தேன். பின்னர் இராணுவத்தினரால் புதுமாத்தளன் பகுதி கைப்பற்றப்பட்டபோது அவர் காணாமல் போயிருந்தார். அவரை கண்டு பிடித்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை வன்னியிலிருந்து விடுதலைப்புலிகளினால் 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் பெண் ஒருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். தமது மீள்குடியேற்றம் தொடர்பாக அவர் கேள்வி எழுப்ப முற்பட்ட போது இதனை இரகசியமாக பதிவு செய்ய வேண்டுமென கூறிய ஆணைக்குழுவினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அவரின் வாக்குமூலத்தினை மட்டும் பதிவு செய்து கொண்டனர்.

ஆணைக்குழு விசாரணையினை ஆரம்பித்த போது 300க்கும் மேற்பட்டவர்கள் செயலக வளவில் கூடி நின்று தமது காணாமல் போன உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை கண்ட ஆணைக்குழுவினர் அவர்களிடம் விண்ணப்பப்படிவங்களை விநியோகம் செய்து காணாமல்போனோரது விபரங்களையும் பதிவு செய்து கொண்டனர்.

Please Click here to login / register to post your comments.