இந்திய யானையைச் சுற்றி வளைக்கும் சீன "டிராகன்'

ஆக்கம்: பழ. நெடுமாறன்

இந்தியாவைவிட சுமார் 70 மடங்கு சிறிய நாடு இலங்கை. ஆனால், சின்னஞ்சிறிய சிங்கள ராஜதந்திரம் மிகப்பெரிய இந்தியாவின் ராஜதந்திரத்தை மிக எளிதாகத் தோற்கடித்துள்ளது.

சிங்களக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும், சிறிலங்கா சுதந்திரா கட்சியாக இருந்தாலும், இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைத்தான் உலக அரங்கில் மேற்கொண்டன. மற்றொரு சிங்களத் தீவிரவாதக் கட்சியான ஜே.வி.பி. கட்சி மேற்கண்ட இருகட்சிகளையும்விட அதிதீவிரமான இந்திய எதிர்ப்புவாதம் கொண்ட கட்சியாகும். இந்த மூன்று முக்கிய சிங்களக் கட்சிகளும் இந்திய எதிர்ப்புவாதத்தையும் அதன்வழி, ஈழத்தமிழர் எதிர்ப்பு வாதத்தையும் தமது அடிப்படைக் கொள்கைகளாகப் பின்பற்றி வருகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய வல்லரசுகளின் அணிகளிலோ அல்லது சோவியத் நாட்டின் அணியிலோ சேராமல் நடுநிலைக் கொள்கையை கையாண்டு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை இந்தியா அணிதிரட்டியபோது, இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு மேற்கத்திய வல்லரசுகளுடன் கூட்டுச்சேர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலையை எடுத்தது. மற்றொரு கட்சியான சுதந்திரா கட்சி ஆட்சியில் இருந்தபோதெல்லாம், சீனா-பாகிஸ்தான் போன்ற இந்தியாவுக்கு எதிரான ஆசிய நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து இந்திய எதிர்ப்பு நிலை எடுத்தது.

இந்தியாவின் விசுவாசிகளாக ஈழத் தமிழர்களை சிங்களக்கட்சிகள் கருதுகின்றன. இந்தியா மீதான அச்சத்தின் விளைவாகவே ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொலைவெறி நடவடிக்கைகளை சிங்கள அரசு தொடர்ந்து கையாண்டு வருகிறது. இந்த உண்மையை இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தெளிவாக உணர்ந்திருந்தார். இலங்கையில் அந்நிய நாடுகள் காலூன்றுவது இந்தியாவுக்கு அபாயத்தைத் தேடித்தரும் என்பதால், எந்த அந்நிய வல்லரசையும் இந்துமாக்கடல் பகுதியில் அனுமதிக்க முடியாது என உறுதியாக அறிவித்தார். அவரை மீறிச் செயல்பட சிங்கள அரசு அஞ்சியது. 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மிகப்பெரிய இனக்கலவரத்தை இனப்படுகொலை என அவர் கண்டிக்க முன்வந்தார். இந்தியாவின் மூத்த ராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதியை அனுப்பி ஜெயவர்த்தனாவுக்கு எச்சரிக்கை செய்தார். அதுமட்டுமல்ல, தமிழர்களின் பிரதிநிதிகளோடு உட்கார்ந்து பேசி, இனப்பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வுகாண வற்புறுத்தினார்.

ஆனால், பிரதமர் இந்திராவின் மறைவுக்குப் பிறகு பிரதமரான ராஜீவ் காந்தியை மிகச் சுலபமாக ஜெயவர்த்தனா ஏமாற்றினார். இந்தியாவின் சார்பில் ஜி. பார்த்தசாரதி வந்தால் பேசமாட்டோம் எனக்கூறும் துணிவு அவருக்கு வந்தது. இந்தியா போன்ற பெரிய நாடு, தனது பிரதிநிதியாக யாரை அனுப்ப வேண்டும் என்பதை சின்னஞ்சிறிய நாடு முடிவுசெய்யும் அவலம் ஏற்பட்டது. இதன் விளைவாக, ஜி. பார்த்தசாரதி பதவி விலக நேர்ந்தது. மேலும், இந்திய வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த ஏ.பி. வெங்கடேசுவரனும் பதவிவிலக வேண்டிய சூழ்நிலையை ராஜீவ் காந்தி ஏற்படுத்தினார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வகுக்கும் முக்கிய பொறுப்பிலிருந்த இரு தமிழர்கள் அகற்றப்பட்ட பிறகு, நிலைமை முற்றிலுமாக சிங்கள அரசுக்குச் சாதகமாக மாறியது.

ராஜீவ் காந்தி காலத்திலிருந்து இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் சிங்கள ஆட்சியாளரை தாஜா செய்யும் கொள்கையைக் கையாளத் தொடங்கினார்கள். மிகப்பெரிய நாடான இந்தியா, மிகச்சிறிய நாடான இலங்கையின் ராஜதந்திரப் பிடிக்குள் தானாகவே கட்டுண்டது.

ஈழத்தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவின் நலனுக்குப் பெரும் பாதிப்பாக மாறும் என்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இன்னமும் உணரவேயில்லை. ஈழத் தமிழர்களை முற்றிலுமாக அடக்கி ஒடுக்கி இலங்கைத் தீவு முழுவதையும் சிங்கள மயமாக்கிவிட்டால் கடைசியில் இந்தியாவுக்கு எதிரான அந்நிய நாடுகளுடன் சுலபமாகக் கை கோக்கலாம் என்பதே சிங்கள ராஜதந்திரத்தின் அடிப்படை நோக்கமாகும்.

ஈழத்தமிழர்கள் வலிமையாக இருக்கும்வரை, இலங்கையின் மூலம் இந்தியாவுக்கு ஆபத்து வரமுடியாது என்ற உண்மையை, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கொஞ்சமும் உணராமல், ஈழத்தமிழர்களின் பாதுகாவலர்களாக விளங்கிய விடுதலைப் புலிகளை வீழ்த்துவதற்கு சிங்கள இனவாத அரசுக்கு ராணுவ ரீதியான எல்லா வகையான உதவிகளையும் செய்தார்கள். இன்னமும் செய்வதற்காக நிருபமாக்களும், கிருஷ்ணாக்களும் தூது செல்கிறார்கள்.

இலங்கை கேட்கும் உதவிகளை நாம் செய்யாவிட்டால் அவர்கள் சீனாவை நாடிச் சென்றுவிடுவார்கள் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி பகிரங்கமாகவே கூறினார். ஆனால் நடந்தது என்ன? இந்தியாவிடம் வேண்டிய உதவிகளைத் தேவையான அளவுக்கும் அதிகமாகப் பெற்றுக்கொண்ட பிறகும், சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் ராணுவ ரீதியான உதவிகளைப்பெற இலங்கை ஒருபோதும் தயங்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் இலங்கை கைகோக்கக் கொஞ்சமும் தயங்கவில்லை.

இலங்கை - சீன உறவு என்பது எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு மிக வலுவாக உருவாகிவிட்டது. 2004-ம் ஆண்டில் 0.7 பில்லியனாக இருந்த இலங்கைக்கான சீனாவின் ஏற்றுமதி வணிகம் தற்போது 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

சிறப்புப் பொருளாதார வளையம், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரபியோகா பண்ணை, அம்பாந்தோட்டையில் ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகம், நுரைச்சோலை என்னுமிடத்தில் 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையம், கொழும்பு கட்டுநாயகா விரைவுப்பாதை, வடக்கு - கிழக்கு மாநிலத்தில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவ வீரர்களின் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான 10 மில்லியன் டாலர் வீடமைப்புத் திட்டம் போன்றவற்றைச் செய்துகொடுக்க சீனா முன்வந்துள்ளது. கட்டுமான வேலைகளுக்காக 25,000 சீனர்கள் இலங்கையில் வந்து இறங்கியுள்ளனர்.

இவைதவிர, வடக்கில் உள்ள சிங்கள ராணுவ நிலைகளைப் பலப்படுத்த மேலும் 20 மில்லியன் டாலர்களைக் கடன் அடிப்படையில் வழங்க சீனா முன்வந்துள்ளது. மீரிகன சிறப்புப் பொருளாதார வளையத்தில் 29 சீன நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

சீனாவின் இந்த நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு, இலங்கை அதிபர் ராஜபட்சவை, இந்தியாவுக்கு வரவழைத்து அவருக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றது. இலங்கையில், பொருளாதார ரீதியான முதலீடு செய்வதற்கான சீபா உடன்படிக்கையை இந்தியா செய்துள்ளது. இந்தியாவுக்கு சீனன்குடாவில் எண்ணெய் சேமிப்பு தொட்டிகளும், காங்கேசன்துறை துறைமுகத்தை வளர்ச்சி செய்யும் திட்டமும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை ஒருபோதும் அம்பாந்தோட்டையில் சீனா அமைக்கும் மிகப்பெரிய துறைமுகத்துக்கு ஈடாகப்போவதில்லை. இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தனது நிலையைப் பலப்படுத்துவதன் மூலம் சீனாவின் தென்னிலங்கை ஆக்கிரமிப்பை சமநிலைப்படுத்தலாம் என்று இந்தியா கனவு காண்கிறது.

இந்தியாவைச் சுற்றிலும்... பாகிஸ்தானில் குவாடா துறைமுக வளர்ச்சித் திட்டம், வங்காள தேசத்தில் சிட்டகாங் ஆழ்கடல் துறைமுக வளர்ச்சித் திட்டம், மியான்மரில் மிகப்பெரிய கடற்தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை, சீனா ஏறத்தாழ அமைத்து முடித்துவிட்டது. இப்போது இவற்றையெல்லாம்விட மிகப்பெரிய அம்பாந்தோட்டை துறைமுகத்தை வேகமாக அமைத்து வருகிறது.

இந்தியாவைச் சுற்றிலும் இந்துமாக்கடல் பகுதியில், சீனா உருவாக்கிவரும் இந்தத் துறைமுகங்களால் இந்தியாவுக்குப் பேராபத்து உருவாகி வருகிறது. குறிப்பாக தென்னிந்தியா அபாயத்தின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது. சீனப் படையெடுப்புக்குப் பிறகு இந்திய அரசு, வடமாநிலங்களில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் எதையும் அமைப்பதில்லை என முடிவுசெய்து முக்கியமான தொழிற்சாலைகள் ராணுவத்தளங்கள் ஆகியவற்றை தெற்கே அமைத்தது. இந்துமாக்கடல் பகுதியில் இலங்கையைத் தவிர வேறு எந்த நாடும் இல்லை. இலங்கையும் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உள்பட்ட ஒரு நாடு. எனவே, அபாயமற்ற பகுதியாக தென்னிந்தியா திகழும் என்ற நம்பிக்கையில் இத்தனையும் அமைக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் சென்னை ஆவடியில் டாங்கித் தொழிற்சாலை, திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை, தஞ்சையில் இந்திய விமானப் படைத்தளம், நீலகிரியில் ராணுவ அதிகாரிகளுக்கான உயர் கல்லூரி, ராமநாதபுரம் மண்டபத்தில் மன்னார் கடலைக் கண்காணிக்க கடற்படைத் தளம், திருநெல்வேலியில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்களுடன் தொடர்பு கொள்ள உதவும் செய்தித் தொடர்பு நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய விமானப்படையின் தெற்குத் தலைமை நிலையம், பிரமோஸ் ஏவுகணைத் தளம் ஆகியவையும் கொச்சியில் இந்தியக் கடற்படையின் தெற்குத் தலைமை நிலையமும், கண்ணனூரில் ஆசியாவில் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சிக் கல்லூரியும் அமைக்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூரில், இந்துஸ்தான் விமான உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்பட்டு 12 விதமான விமானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கார்வார் என்னுமிடத்தில் இந்தியக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு மேற்குக்கரை தலைமை நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இந்தியக் கடற்படையின் கிழக்குத் தலைமை நிலையம் இயங்கி வருகிறது. செகந்திராபாதில், இந்தியப் பாதுகாப்பு நிர்வாகக் கல்லூரி உருவாக்கப்பட்டு, ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விமானப் போருக்கு பயிற்சியளிக்கும் கல்லூரியும் இங்கு செயல்படுகிறது. ஹைதராபாதில் பாதுகாப்புத் துறை தொடர்பான ஆய்வுநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தமிழ்நாட்டில் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இடங்களிலும் கர்நாடகத்திலும் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலேகண்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகள் அனைத்தும் எளிதில் தாக்கப்படும் பேரபாயம் உருவாகியுள்ளது. இலங்கையில், சீனா ஆழமாகக் காலூன்றி நிற்பது எதிர்காலத்தில் எத்தகைய வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதை தில்லியில் உள்ள மேதாவிகள் சிறிதளவுகூட சிந்தித்துப் பார்க்கவில்லை. தொலைநோக்குப் பார்வையோ, தெளிவான கொள்கை வகுக்கும் திறமையோ சிறிதளவும் இல்லாத குறுமதியாளர்கள் தில்லியின் அதிகார பீடங்களில் அமர்ந்திருக்கிறார்கள்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் பலமாக இருந்தவரையில் எந்த அந்நிய வல்லரசும் அங்கு நுழையத் தயங்கியது. இந்திய யானையை எளிதில் வீழ்த்தும் வியூகம் வகுக்க சீனாவின் டிராகனுக்கு, தனது நாட்டின் கதவுகளைத் திறந்துவிட்டார் ராஜபட்ச. அவருக்குத் துணை நின்று தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் நடவடிக்கையை இந்திய யானை மேற்கொண்டு வருகிறது.

Please Click here to login / register to post your comments.