சிறையில் சீமான் எழுதிய புத்தகம்

அறுபது நாட்களுக்கு மேலாகிவிட்டது, ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சீமான் சிறைக்குச் சென்று. வேலூர் ஜெயிலில் தனிமை அறையில் என்ன செய்கிறார் என்று விசாரித்தோம்.

‘‘ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் அடைபட்டிருக்கும் அறைக்கு அருகிலேயே சீமானின் தனிமைச் சிறையும் அமைந்திருக்கிறது.காலையில் எழுந்ததும் படிக்க ஆரம்பிக்கிறார். எப்போதாவது பார்வையாளர்கள் வந்தால், அவர்களை சந்திக்கச் செல்கிறார். மற்ற நேரங்களில் எல்லாம் படிப்பு... படிப்பு... படிப்புத்தான். படிக்கும் போதே குறிப்புகளும் எடுத்துக் கொள்கிறார்’’ என்கிறார்கள் சிறைக் காவலர்கள்.

‘‘காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழம் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்த புத்தகங்கள், அரசாணைகள், இந்தப் பிரச்னைகளில் மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் உள்பட பல்வேறு அம்சங்களை எங்களிடம் கேட்பார்.அது தொடர்பான புத்தகங்களைத் தேடி கொண்டுவந்து கொடுப்போம். அனைத்துதகவல்களையும் குறிப்பெடுத்துக் கொள்கிறார்.

சிறையில் இருந்த காலகட்டத்தில் ‘வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் அவர் எழுதிவிட்டார். அவர் சிறையில் இருந்து வெளி வந்ததும் புத்தக வெளியீட்டு விழா நடக்கும்’’ என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.

தன்னைச் சந்திக்க வருபவர்களிடம்,‘சிறையில் இருக்கும் தன்னை இயக்குநர் பாலா உள்பட வெகு சிலரே வந்து பார்த்தார்கள். பெரும்பாலானவர்கள் வரவில்லை என்ற தனது வருத்தத்தைச் சொல்கிறாராம். அதோடு, திரைத்துறையினர் பலரது நிஜ முகத்தைப் பார்க்க இந்தக் கைது உதவியிருப்பதாகவும் சிரித்துக்கொண்டே சொல்கிறாராம்.

ஓர் அரசியல் கைதிக்கு உண்டான அனைத்து மரியாதைகளும்,நல்ல உணவும் சீமானுக்குச் சிறையில் கிடைத்தாலும்,ராஜிவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் அவ்வப்போது நடக்கும் பேச்சுக்கள்தான் அவருக்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருக்கிறதாம்.

சிறையில் இருந்தாலும் கட்சிப் பணி குறித்தும் தன்னைச் சந்திக்க வரும் ‘நாம் தமிழர்’ இயக்க பிரமுகர்களிடம் பேசாமல் இருப்பதில்லை. ‘‘வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடாவிட்டாலும்,காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து தீவிரமாக பிரசாரம் செய்யவேண்டும்.அதற்கு இயக்கத்தினரை தயார் செய்ய புதிய திட்டத்தை சிறை நாட்களிலேயே தயாரித்து வருகிறேன். வெளியில் வந்ததும் அதைச் செயல்படுத்துவோம்’’ என்று சொல்லி கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தி அனுப்புகிறாராம்.

“விஷய் படம் ட்ராப் இல்லை..’’

சீமான் கைதால் விஜய்யை வைத்து அவர் இயக்கவிருந்த ‘பகலவன்’ படம் நிறுத்தப்படுவதாக செய்திகள் வெளியானது. ‘காவலன்’ படத்திற்கான அறிமுக விழாவில் இதுபற்றி விஜய்யிடம் கேட்டபோது,

“சீமான் கூறிய கதை எனக்குப் பிடித்திருந்தது. அவர் வெளியே வந்ததும் படத்திற்கான வேலைகள் நடக்கும்’’ என்றார். தயாரிப்பாளர் தாணுவும்,

‘‘விஜய்யை வைத்து சீமான் இயக்கும் படம் ட்ராப் ஆகவில்லை’’ என்றார்.

- ஏ.வி.ஆனந்த்

Please Click here to login / register to post your comments.