ஐ.நா. போர்க் குற்ற ஆலோசனைக் குழு முடக்கப்பட்டுள்ளதா?

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ச அரசு நடத்திய இனப் படுகொலைப் போரில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா.வின் பன்னாட்டுச் சட்டங்களின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த போர்க் குற்ற ஆலோசனைக் குழு இதுவரை தனது பணியைத் துவக்காதத்து ஆச்சரியத்தையும் ஐயத்தையும் எழுப்புகிறது.

தமிழர்களுக்கு எதிரான நடத்தப்பட்ட அந்தப் போரில் நிகழ்ந்த கொடுமைகள் பற்றி, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களிடம் கடந்த ஜனவரி 14,15ஆம் தேதிகளில் விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal), தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசப் படைகள் போர்க் குற்றம் புரிந்துள்ளன என்றும், போருக்குப் பின் வன்னி முள் வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதிகளை ‘நடத்திய’ முறை மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் பிரகடனத்தின் கீழ் சிறிலங்க அரசும், அதன் படைகளும் குற்றமிழைத்துள்ளன என்றும் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு உருவான அழுத்தத்தின் காரணமாக தனது ‘நியாயக் கண்”ணைத் திறந்த ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், இலங்கை போரில் நடந்த போர்க குற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்து, அதன் மீது ஐ.நா.வின் பல்வேறு பிரகடனங்களின் கீழ் எப்படிப்பட்ட நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தனக்கு ஆலோசனை வழங்க கடந்த மார்ச் மாதம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தார். அந்தக் குழுவில் சர்வதேச சட்டங்களில் புலமை பெற்றவர்களாவும், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளில் விசாரணை நடத்திய அனுபவம் கொண்டவர்களாகவும் திகழ்ந்த மூவரை கொண்டக் குழுவை நியமித்தார். இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் மார்சுகி தாருஸ்மான், தென் ஆப்ரிக்காவின் உண்மைகள் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள யாஸ்மின் சூக்கா, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலையின் சட்டப் பேராசிரியர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் அந்த மூவராவர்.

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்து, அடுத்த 4 மாத காலத்தில் முதல் அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று பான் கி மூன் அறிவித்தார். ஆனால் போர்க் குற்றம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கை வர விசா வழங்க மாட்டோம் என்று ராஜபக்ச அரசு அறிவித்தது.

ஆயினும் தமிழர்களாலும், மனித உரிமை ஆர்வலர்களாலும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அந்தக் குழு, மூன்று மாதங்கள் கழித்தே முதல் முறையாக சந்தித்தது. ஜூலை 20ஆம் தேதி சந்தித்த அந்தக் குழுவின் உறுப்பினர்கள் மூவரும், எப்போது தங்களுடைய பணி துவங்கும் என்பதை அறிவிக்காமலேயே கலைந்தனர்! செப்படம்பர் இறுதியுடன் 5 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் அந்தக் குழு இதுவரை கூடவில்லை.

ஐயத்தை கிளப்பியுள்ள தனித்த சந்திப்பு

இந்த நிலையில்தான், ஐ.நா.வின் பொது அவையில் உரையாற்ற வந்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, கடந்த 24ஆம் தேதி நியூ யார்க்கிலுள்ள ஐ.நா.அலுவலகத்திற்கு வந்த பொதுச் செயலர் பான் கி மூனை சந்தித்தித்துப் பேசினார். முதலில் தங்களுடைய அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் சந்தித்துப் பேசிய பான் கி மூனும், ராஜபக்சாவும், பிறகு அரை மணி நேரத்திற்கும் மேலாக ‘நேருக்கு நேர்’ சந்தித்தனர்.

இந்த சந்திப்பில், இரு தலைவர்களும் பேசியது என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை பான் கி மூன் அலுவலகம் வெளியிடாமல். மிகச் சாதாரண ஒரு அறிக்கையையே வெளியிட்டது. அதில் போர்க் கு்ற்றம் தொடர்பாக தான் அமைத்த நிபுணர் குழு இலங்கை வர அனுமதி மறுத்தது தொடர்பாக பான் கி மூன் ஏதும் பேசினாரா என்பது பற்றி எந்த குறிப்பும் இல்லை!

“2009ஆம் ஆண்டு மே மாதத்தில் (பான் கி மூனும், ராஜபக்சாவும்) இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்ட பிரச்சனைகளின் மீது, குறிப்பாக (தமிழர் பிரச்சனையில்) அரசியல் தீர்வு காண்பது, பல்வேறு இனங்களுக்கு இடையே இணக்கப்பாடு, (போர்க் குற்றம் தொடர்பான) பொறுப்பேற்பு ஆகியவற்றில் வேகமாக செயல்பட வேண்டிய அவசியம் குறித்து அதிபர் ராஜபக்சாவுடன் பொதுச் செயலர் விவாதித்தார். அதிபர் ராஜபக்ச தேர்தலில் பெற்ற பெரு வெற்றி, அவர் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற சிறந்ததொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று பான் கி மூன் வலியுறுத்தினார். வடக்கில் மேம்பாடும், கல்வியும் தேச அளவிலான இணக்கப்பாட்டின் ஒரு பகுதியே என்று அதிபர் ராஜபக்ச கூறினார். மறுவாழ்வுப் பணிகளிலும், மறுசீரமைப்பிலும் நடந்துள்ள முன்னேற்றங்களை அவர் உதாரணமாகக் காட்டினார்” என்று மட்டுமே மிகச் சுருக்கமாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கை கூறியிருந்தது.

போர்க் குற்றம் தொடர்பாக தான் நியமித்த நிபுணர் குழுவி்ற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்த சந்திப்பில் ராஜபக்சவிடம் பான் கி மூன் வற்புறுத்தியதாக எந்த குறிப்பும் இல்லை.

ஆனால், இந்தச் சந்திப்பு குறித்து சிறிலங்க அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் (செப்டம்பர் 25), “தான் அமைத்துள்ள நிபுணர் குழு, சிறிலங்க அரசிற்கு எதிரான குற்றச்சாற்றுகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்டதல்ல, அது இலங்கைத் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது என்று அதிபரிடம் (ராஜபக்ச), பான் கி மூன் தெளிவுபடுத்தியுள்ளார்” என்று கூறப்பட்டிருந்தது.

தமிழர்களுக்கு எதிரான போரில் நடந்த குற்றங்களுக்கு காரணமானவர்களை பொறுப்பாக்க வேண்டும் என்று 2009ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டது சரியே என்றாலும், அதன்படி ராஜபக்ச நடந்துகொள்ளாத நிலையில்தானே (ராஜபக்ச அரசு விசாரணை ஆணையம் அமைத்த பிறகும்) இந்த நிபுணர் குழுவை பான் கி மூன் அமைத்தார்? அப்படியானால், அந்தக் குழுவிற்கு போர்க் குற்றம் குறித்து ஆய்வு செய்யும் அதிகாரமளிக்கப்படவில்லை என்று ராஜ்பக்ச அலுவலகம் அறிக்கை வெளியிடுகிறது என்றால், அந்தக் குழு பிறகு சிறிலங்கா தொடர்பான எந்தப் பிரச்சனை குறித்து பான் கி மூனிற்கு ஆலோசனை வழங்கப்போகிறது?

இந்தக் கேள்விக்கு இதுவரை பான் கி மூன் அலுவலகம் பதில் சொல்லவிலை. அது மட்டுமல்ல, ராஜபக்சவுடனான தனித்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து சொல்லுவதற்கில்லை என்று அவரது ஆலோசகர் நிக்கோலஸ் ஹேசன் கூறியுள்ளார். இப்படிப்பட்ட ‘தனித்த’ சந்திப்புகள் அடிக்கடி நடக்குமா என்று இன்னர் சிட்டி பிரஸ் அமைப்பின் செய்தியாளர் மாத்யூ லீ கேட்டதற்கு, பத்தில் ஒன்று அல்லது இருபதில் ஒரு சந்திப்பில் மட்டுமே நிகழக்கூடியது என்றும் பதிலளித்துள்ளார்.

பான் கி மூன் ஒரு பக்க ஆளா?

சிறிலங்க அதிபர் ராஜபக்ச அலுவலகம் வெளியிட்ட அறிக்கை குறித்து பான் கி மூன் அலுவலக பேச்சாளர் மார்ட்டின் நெசிற்கியிடம் கேட்டபோது, அவரும் முறையான பதில் தறாமல் தவிர்த்துள்ளார்1 இவையாவும் பான் கி மூன் மீதும், அவருடைய நேர்மையின் மீதும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த மாதம் 14ஆம் தேதி, போர்க் குற்றம் தொடர்பான நிபுணர் குழு எப்போது கூடும் என்று அப்போது மாத்யூ லீ கேட்டபோது, அடுத்த வியாழக் கிழமை கூடுமென்று நெசிற்கி பதிலளித்துள்ளார். அப்படியானால், பான் கி மூன் நிகழ்ச்சி நிரலில் அதுபற்றிய குறிப்பில்லையே என்று கேட்டதற்கு, எல்லா நிகழ்வும் அதில் இடம்பெறுவதில்லை என்று மழுப்புயுள்ளார்.

இதற்குப் பிறகுதான் பான் கி மூன், ராஜபக்ச இடையிலான சந்திப்புகள் குறித்து மாத்யூ லீ கேள்வி எழுப்புயுள்ளார். ஐ.நா. பொதுச் செயலர் ஆகும் முன்பு, தென் கொரிய அயலுறவு அமைச்சராக இருந்தபோது ராஜபக்சவுடன் பான் கி மூன் எத்தனை சந்திப்புக்களை நடத்தியுள்ளார் என்பது குறித்த விவரங்களைத் தர முடியுமா என்று கேட்டுள்ளார். அதனைத் தர ஒப்புக்கொண்ட நெசிற்கி, இன்றுவரை தராமல் தாமதப்படுத்தி வருகிறார்.

இதுமட்டுமல்ல, பான் கி மூனின் மகள் பான் ஹீயூவை மணந்தவர் இந்திய இராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றிய சித்தார்த் சாட்டர்ஜி. இவர் இந்திய இராணுவம் ‘அமைதிப் படை’ என்ற பெயரில் ஈழத்திற்குச் சென்று தமிழர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டபோது, இந்திய இராணுவ அதிகாரியாக பணியாற்றியவர். அந்தப் போரில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க் குற்றங்களில் சித்தார்த் சாட்டர்ஜிக்கும் பங்குண்டு என்று அவருடைய முதல் மனைவி சிப்ஃரா சென் கூறியுள்ளார். யாரிடம் தெரியுமா? இன்னர் சிட்டி பிரஸ்ஸின் மாத்யூ லீயுடம்! இதற்காக சிப்ஃரா சென்னை மிரட்டியுள்ளார் சித்தார்த் சாட்டர்ஜி.

ஆக, இந்திய இராணுவத்தில் பணியாற்றிய ஒரு முன்னாள் அதிகாரியின் மாமனாரான பான் கி மூன், இந்திய அரசின் ஆதரவுடன் ராஜபக்ச நடத்திய இனப் படுகொலைப் போரில் நிகழ்ந்த குற்றங்களுக்கு நீதி தேடுவதில் மனத்தூய்மையுடன் செயல்படுவார் என்பதிலும் ஐயம் எழுந்துள்ளது. சித்தார்த் சாட்டர்ஜியின் ‘செல்வாக்கு’ பான் கி மூனை ராஜபக்சாவுக்கு ஆதரவாக செயல்பட வைக்கிறது என்ற ஐயம் வலிமையடைந்து வருகிறது.

இவை எதிலும் உண்மையில்லை என்று கருதுவோமானால், மிகச் சிறந்த சட்ட நிபுணர்களையும், மனித உரிமையாளர்களையும் கொண்ட நிபுணர் குழுவை பான் கி மூன் கூட்டாதது ஏன்? என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டியதுள்ளது.

ஆக, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைக்க ஐ.நா.வின் பொதுச் செயலர் ஒரு தடையாக, முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்று வலிமையாக ஐயப்பட இடமுள்ளது. இந்த ஐயத்தை பொய்யாக்க வேண்டிய பொறுப்பு பான் கி மூனிற்கும், ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் அனைத்திற்கு உள்ளது.

லீக் ஆஃப் நேஷன்‌ஸ் போல் ஐ.நா.வும் ஆகும்!

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சில நூறு குழந்தைகள், பெண்கள் உட்பட்ட ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் கொல்லப்பட்டபோது, இஸ்ரேல் மீது கடும் அழுத்தம் தரும் வகையில் நீதிபதி கோல்ட்ஸ்டோன் தலைமையில் மனித உரிமை மீறல் குறித்து ஆராய குழு அனுப்பிய பான் கி மூன், இலங்கைக்கான ஐ.நா.வின் தூதர் கார்டன் வீஸ் கூறியது போல், இறுதி கட்டப் போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியதற்குப் பிறகும் அசைய மறுக்கிறார் என்றால், தமிழருக்கு எதிரான அந்த இனப் படுகொலைப் போரில் ஐ.நா.வும் உடந்தையோ என்று எண்ணத் தோன்றும் என்று சர்வதேச சிக்கல் தீர்ப்புக் குழுவின் (International Crisis Group) தலைவராகவுள்ள லூயிஸ் ஆர்பெளர் கூறியது நினைவில் கொள்ளத் தக்கது.

எனவே ஐ.நா. நிபுணர் குழு செயல்படத் துவங்க வேண்டும். அது முழுமையான அதிகாரத்துடன் செயல்பட்டு, சிறிலங்க அரசும், அதன் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சிங்கள பெளத்த இனவெறி அரசும் நிகழ்த்திய தமிழினப் படுகொலையின் கோர முகத்தை உலகின் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும். இதைச் செய்யத் தவறினால், இரண்டாவது உலகப் போருக்கு முன் உலக நாடுகளின் கூட்டமைபு (தி லீக் ஆஃப் நேஷன்ஸ்) எவ்வாறு மதிப்பற்றுப் போய் தடமின்றி அழிந்து போனதோ அதே நிலை இன்றைய ஐ.நா.விற்கும் ஏற்படும்.

Please Click here to login / register to post your comments.