தமிழனின் கலைக் கோயிலுக்கு ஆயிரமாண்டு

ஆக்கம்: பழ. நெடுமாறன்
கி.பி. 985ஆம் ஆண்டில் அரியணை ஏறிய இராசஇராசன் தனது ஆட்சியின் 19ஆம் ஆண்டில் இக்கோயிலைக் கட்டத் தொடங்கினான். இவன் ஆட்சியின் 25ஆம் ஆண்டில் அதா வது 1010ஆம் ஆண்டில் இக்கோயில் திருப்பணி நிறைவடைந்தது. 7 ஆண்டு காலத்தில் மிகப்பெரிய இந்தக் கோயிலை அவன் எழுப்பியது இன்றளவும் எண்ணி எண்ணி வியக்கத்தக்கதாகும்.

பிற்காலச் சோழ மன்னர்கள் ஆட்சியில் செங்கல்லாலும், சுண்ணாம் பாலும் கட்டப்பட்ட பல கோயில்கள் கற்றளிகளாக மாற்றி எழுப்பப்பட்டன. தஞ்சையில் இருந்த தளிக்குலத்தார் என்னும் கோயிலைத்தான் பெரிய கற்றளியாக எழுப்பி அதற்கு இராச இராசேச்சுவரம் என்னும் பெயரை இம்மாமன்னன் சூட்டினான்.

தஞ்சை மாவட்டம் மலைகளே இல்லாத சமவெளியாகும். முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்ட இந்த ஆலயத் திற்குத் தேவையான கற்கள் அருகே உள்ள திருச்சி, புதுக்கோட்டை மாவட் டங்களிலிருந்துதான் கொண்டுவரப்பட்டி ருக்க வேண்டும். பிரம்மாண்டமான கற் களை தொலை தூரத்தில் இருந்து எப்ப டிக் கொண்டுவந்தார்கள் என்பது வியப் புக்குரிய செய்தியாகும். அடித்தளத்திலிருந்து ஸ்தூபி வரை 216அடி உயர முடைய இக்கோபுரத்தை அமைக்க எவ்வளவு ஆழத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஆனால் உண்மையில் நீண்ட ஆழத்தில் அடித்தளம் அமைக்கப்பட வில்லை. இயற்கையான கற்பாறை மீது குறைந்த ஆழத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் இவ்வளவு பெரிய பாரத்தைத் தாங்கும் சக்தியைப் பெற்றிருக்கிறது.

இக்கோயிலின் விமானம் தட்சிணமேரு என வழங்கப்பட்டது. அது ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. கோயிலின் வெளிச்சுற்றில் 12 அடி உயரமும் 19 ணீ அரை அடி நீளமும் 8 டீ அடி அகலமும் உடைய நந்தி ஒரே கல்லில் வடிக்கப்பட்டதாகும்.

இக்கோயிலின் முதற்கோபுர வாயிலாகிய திருத்தோரண வாயில் கேரளாந்தகன் வாயில் என்றும், இரண் டாம் வாயிலாக திருமாளிகை வாயில் இராசஇராசன் வாயில் என்றும் அந்நாளில் வழங்கப்பட்டன.

இக்கோயிலில் உள்ள லிங்கம் இந்தியாவிலேயே மிகப்பெரியதாகும். எனவேதான் அதற்கு பெருவுடையார் என்ற பெயர் சூட்டப்பட்டது.

இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவருபவை.

இராசஇராசன் காலத்தில் வாழ்ந்த கருவூர்த் தேவர் பெருவுடையார் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். இராச இராசனும் அவனது தமக்கை குந்தவை மற்றும் சுற்றத்தினரும் வழித்தோன்றல் களும் இக்கோயிலுக்கு ஏராளமான மானியங்களை வழங்கியுள்ளனர்.

இராசஇராச சோழன் காலத்தில் வாழ்ந்தவர் பெரும்புலவர் நம்பியாண்டார் நம்பி ஆவார். இவரின் மூலம் தேவாரப் பாடல்களை தொகுக்கச் செய்தான் இராச இராசன். நம்பியாண்டார் நம்பி முதல் ஏழு திருமுறைகளைத் தொகுத்தார் என்றும் பிற்பட்ட திருமுறைகளை பின்னர் வந்த அறிஞர்கள் தொகுத்தனர் எனவும் தமிழ் வரலாற்று அறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் கூறியுள்ளார்.

தொகுக்கப்பட்ட பதிகங்களுக்கு எல்லாம் பண்முறை தெரியவில்லையே என இராசஇராசனும் நம்பியாண்டார் நம்பியும் வருந்தியபோது திருநீலகண்டர் பாணர் மரபில் உதித்த ஒரு பெண்ணின் மூலம் இதற்கான பண்முறைகளை அறிந்து அவற்றை நம்பி வகுத்தார் என்றும் கூறப்படுகிறது.

இராசஇராசன் காலத்தில் கோயில் களில் தேவாரம் பாடும் முறை பரவலாக் கப்பட்டது. இதன் விளைவாக தமிழகம் முழுவதும் திருமுறைகள் பரவின.

மாமன்னன் இராசஇராசன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் 1000மாவது ஆண்டு விழா தமிழக அரசால் சிறப்பாகக் கொண்டாடப்படுவது பாராட்டுக்குரியது. தஞ்சைக் கோயில் தமிழர்களின் பெருமைமிக்க சிற்பக் கலையின் சிகரமாகும். பழந்தமிழர்கள் எழுப்பிய கலை வடிவங்களை அழியாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் கடமை யும் இன்றைய தலைமுறைக்கும் வருங் காலத் தலைமுறைகளுக்கும் உண்டு. அந்த வகையில் இவ்விழா வெறும் அரசு விழாவாக அமைந்துவிடாமல் மக்கள் விழாவாக விளங்க வேண்டும். தமிழகமெங்கும் உள்ள கலை வடிவங் களைப் பத்திரமாகப் பாதுகாக்கும் உணர்வை தமிழ் மக்களுக்கு ஊட்டு வதற்கு இந்த விழா பயன்பட வேண்டும்.

திருமுறைகளும், ஆழ்வார் பாசு ரங்களும் வெறும் பக்தி இலக்கியங்கள் மட்டுமல்ல. தமிழர்களின் பண்டைய இசையின் வடிவங்கள் ஆகும். இவற்றைப் பாடுவதற்கு குறிக்கப்பட்டுள்ள பண்கள் தமிழர்களுக்கு மட்டுமே உரிய பண்களாகும். எனவே இவற்றை அழியாமல் போற்றிப் பேணவேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு.

இந்த கட்டத்தில் ஒன்றினை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1984ஆம் ஆண்டில் நான் சோவியத் ஒன்றியத் திற்கு அந்நாட்டின் அரசு அழைப்பின் பேரில் சென்றிருந்தபோது பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

கடவுள் நம்பிக்கையோ, மத நம்பிக்கையோ அற்ற கம்யூனிஸ்டு களால் ஆளப்பட்ட அந்நாட்டில் பழமை பத்திரமாகப் போற்றிப் பாதுகாக்கப்படுவதைக் கண்டு நான் வியந்தேன். பழமையான கலைப் படைப்புகள், நாட்டுப் பாடல்கள், செவிவழிக் கதைகள் முதலியவை ஆர்வமுடன் சேகரிக்கப்பட்டு பேணிக் காக்கப்படுகின்றன.

சாமர்க்கண்ட், தாஷ்கண்ட் போன்ற இடங்களில் தைமூர் மன்னனும் அவனது வழிவந்தவர்களும் கட்டிய பழமையான மதரசாக்கள் பழமைக்கு எவ்வித பங்கமும் நேராமல் ஏராளமான பொருட்செலவில் புதுப்பிக்கப்படுவதை நேரில் கண்டேன். மாஸ்கோவில் மிகப் பழமையான கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று அதன் கலைச்சிறப்புக்கு கொஞ் சமும் ஊறு நேராதவாறு பத்திரமாகப் பாதுகாக்கப்படுவதையும் பார்த்தேன். சோவியத் மக்களுக்கு தங்களின் பழமை யான கலைகளிலும் பண்பாடுகளிலும் பெருமிதம் இருப்பதைக் கண்டேன். வரலாற்று உணர்வோடு கூடிய இந்தப் பெருமிதம் பாராட்டத்தக்கதாக அமைந்திருந்தது.

தைமூரின் பேரனான உல்பெக் என்ற மன்னனின் சமாதியின்மீது மிகப்பெரிய அழகிய முசோலியம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இவன் வழிவந்தவர்தான் இந்தியாவை ஆண்ட முகலாயப் பரம்பரையின் முதல்வர் பாபர்.

உல்பெக் மன்னனின் நினைவு மாளிகையை நான் பார்த்தபோது ஏராளமான பொருட்செலவில் அதன் பழமை பேணப்படுவதைக் கண்டேன். அங்கிருந்த விமானத்தின் உட்பகுதியில் அரேபிய எழுத்தில் குரான் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவை பொன்னாலும் மணியாலும் பதிக்கப் பட்டிருந்தன. பிற்காலத்தில் படையெடுப் பாளர்களால் அவைகள் சுரண்டிக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. அதை மீண்டும் பொன்னாலும், மணியாலும் அழகுபடுத்தும் வேலை அங்கு நடந்துகொண்டிருந்தது.

என்னை அழைத்துச் சென்ற அரசு மொழிபெயர்ப்பாளரிடம் நான் பின்வரும் கேள்வியைக் கேட்டேன்.

'நீங்கள் கம்யூனிஸ்டுகள், மத நம்பிக்கையற்ற நாத்திகர்கள். ஏன் இவ்வளவு பொருட்செலவில் இந்த மன்னனின் நினைவு மாளிகையைப் புதுப்பிக்கிறீர்கள்?' என்று கேட்டபோது அவர் புன்முறுவலுடன் பின்வரும் பதிலை அளித்தார்.

''ஆம். கம்யூனிஸ்டுகளான எங்க ளுக்கு மத நம்பிக்கை கிடையாது. இந்த மாளிகை மதம் தொடர்பானது என்ற வகையில் நாங்கள் பார்க்கவில்லை. மாறாக எங்கள் முன்னோர்கள் இதை கலைச் சிறப்பு மிளிரக்கட்டி, எங்களிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நாங்கள் இதைப் பத்திரமாகப் பாதுகாத்து எங்களது பின்சந்ததியினருக்கு விட்டுச் செல்லவேண்டும். அது எங்கள் கடமை'' என்றார்.

கடவுளையோ அல்லது கோயி லையோ நம்பாதவர்கள்கூட இராச இராசன் எழுப்பிய இந்தக் கலை மாளிகையை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய தேவையை உணர்வார்கள். இதை மட்டுமல்ல. தமிழகம் முழுவதிலும் இருக்கக் கூடிய கலைக் கருவூலங் களைப் பேணிப் பாதுகாத்து நமது பின்தலைமுறையினரிடம் ஒப்படைத்துச் செல்லவேண்டிய மாபெரும் கடமை நமக்கு உண்டு. அதைப் போல உலக இசைக்கெல்லாம் தமிழிசையே அடிப் படையானது. அந்த இசையின் செம்மை யான வடிவங்களாகத் திகழும் திருமுறை களையும் ஆழ்வார் பாசுரங்களையும் வெறும் பக்தி இலக்கியங்கள் என்று ஒதுக்கிவிடாமல் நமது பண்பாட்டை, நமது இசையை வெளிப்படுத்தும் அற்புதக் கருவூலங்களாகக் கருதி அவற்றை அழியாமல் பாதுகாக்கவேண் டிய கடமையும் நமக்கு உண்டு. தமிழர்கள் அனைவரும் எம்மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது மதத்தில் நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும் இந்தக் கடமையை செய்தாக வேண்டும்.

Please Click here to login / register to post your comments.