புலிகள் மீதான தடை உடைவது நிச்சயம் - வைகோ நம்பிக்கை

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பது குறித்து விசாரிக்க, மத்திய அரசு நீதிபதி விக்ரம்ஜித் தலைமையில் தீர்ப்பாயம் ஒன்றை அமைத்துள்ளது. ஏற்கெனவே டெல்லி, சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற்ற தீர்ப்பாயக் குழுவின் கருத்துக்கேட்புக் கூட்டம் மூன்றாவது அமர்வாக கடந்த 20-ம் தேதி ஊட்டியில் நடைபெற்றது.

முந்தைய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் ஆஜரான வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வாதாட தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். கோரிக்கையை நிராகரித்த தீர்ப்பாயம், ‘விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள்தான் வாதாட வேண்டும்’ என்று கூறியது. ஆனால் ‘வைகோ, நெடுமாறன் ஆகியோர் தீர்ப்பாயம் முன் ஆஜராகி அரசுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து சொல்லலாம்’ என்றும் கூறியிருந்தது. இதையடுத்து ஊட்டியில் நடைபெற்ற தீர்ப்பாயத்தின் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் வைகோ, நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசுத் தரப்பில் மத்திய உள்துறை செயலக அதிகாரி மிஸ்ரா கலந்து கொண்டார். அவரை குறுக்கு விசாரணை செய்ய வைகோவுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட வைகோ, ‘‘தீர்ப்பாயத்தின் நீதிபதி இந்த விசாரணையை சிறப்பாக நடத்தி வருகிறார். அரசு தரப்பிற்கு மாறுபட்ட தரப்பின் வாதத்திற்கும் வாய்ப்பு வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில், அரசுத்தரப்பு தன் சாட்சியத்தை பதிவு செய்கையில், ‘நாடு கடந்த தமிழீழ அரசு புலம்பெயர்ந்த தமிழர்களால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தை வைத்தே விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீட்டிக்கலாம்’ என்று வாதாடியது.

குறுக்கு விசாரணைக்கு எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டபோது, ‘நாடு கடந்த தமிழீழ அமைப்பில் அங்கம் வகிக்கிற தமிழர்கள் வசிக்கிற நாடுகளிலும் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருப்பது தெரியுமா?’ என்று கேட்டேன். அரசுத்தரப்பில் ரொம்பவும் திணறிப்போனார்கள். ‘அமெரிக்கா உட்பட இரண்டு நாடுகள் குறித்து இனிதான் விசாரிக்க வேண்டும்’ என்று பதில் சொல்லப்பட்டது.

‘விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ள அமெரிக்காவிலும் நாடு கடந்த தமிழீழ அரசு விழா நடத்த அங்குள்ள அரசும், காவல்துறையும் இடையூறு அளிக்காத விஷயமாவது தெரியுமா?’ என்று கேட்டேன். உலகம் முழுக்க தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வந்த அந்தச் செய்திக்கு ஆதாரம் இருக்கிறதா? என அரசு வழக்கறிஞர் கேள்வி கேட்கிறார்.

அடுத்த வாதமாக, நாடு கடந்த தமிழீழத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியையும் இணைந்திருப்பதாக அவர்கள் சொன்னார்கள். அதையும் மறுத்து இலங்கைத்தீவின் வடக்கு மாகாணங்கள் மட்டும் தான் தமிழீழத்தில் அமையும் என்றும், இந்தியப் பகுதிகள் இணைக்கப்படவில்லை என்பதையும் கூறினேன். ஏற்கெனவே நான் தாக்கல் செய்துள்ள அஃபிடவிட்டின் 67-ம் பக்கத்தில் தமிழீழ வரைபடத்தை இணைத்திருப்பதையும் சுட்டிக்காட்டினேன்.

மொத்தத்தில் அரசுத்தரப்பின் சாட்சியங்கள் நொறுங்கிப்போய் விட்டன. இதுவரையில் நடைபெற்ற விசாரணைகள் எங்களுக்குச் சாதகமாகவே நடந்துள்ளது. எனவே விடு தலைப் புலிகள் மீதான தடை நிச்சயம் நீங்கப் போகிறது’’ என்று நம்பிக்கையோடு முடித்தார்.

முன்னதாக, கருத்துக்கேட்புக் கூட்டத்திற்கு லண்டனில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரில் ஆஜராக வருகிறார்கள் என்றும், அவர்கள் பல நாட்களாக ஊட்டியில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் செய்தி பரவியது. இதனால் அந்த ஏரியாவே பரபரப்பாக காணப்பட்டது. உள்ளூர் போலீஸாரும், உளவுத்துறையினரும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்ற ஊட்டி விருந்தினர் மாளிகை முன்பு அதிகாலையிலேயே குவிந்து விட்டனர்.

காலை பத்து மணிக்கு வைகோ மற்றும் நெடுமாறனுடன் சுமார் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கருத்துக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் திரண்டனர். வக்கீல்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் விசாரணை அரங்கிற்குள் அவர்களை அனுமதித்த போலீஸார், பத்திரிகையாளர்களுக்கு ஏக கெடுபிடி விதித்தனர்.

உளவுத்துறை போலீஸாரிடம் பத்திரிகையாளர்கள் ஒருவர், ‘விடுதலைப்புலிகள் யாராவது ரகசியமாக வந்திருக்கிறார்களா?’ என்று கேள்வி எழுப்ப, ‘எத்தனையோ பேர் கறுப்புகோட்டு போட்டுக்கிட்டு வக்கீல்னு உள்ள போயிருக்காங்க, அதில யார் புலி, யார் வக்கீல்னு யாருக்குத் தெரியும்’’ என்று திருப்பிக் கேட்டனர் போலீஸார்.

Please Click here to login / register to post your comments.