தீர்ப்பாய விசாரணை அரசின் கண்துடைப்பு - திருமாமளவன்

ஆக்கம்: வேலு.வெற்றிவேல்
மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது,விடுதலைச் சிறுத்தைகள்-காங்கிரஸ் மோதல்! காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை அழைத்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

‘‘காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமாவளவன் காங்கிரஸை விமர்சிப்பதால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்’’என்று பதிலுக்கு ஆவேசப்பட்டார் கார்த்தி சிதம்பரம்.

இந்தச் சூழ்நிலையில் திருமாவளவனைச் சந்தித்தோம்.

‘‘ராஜிவ் சிலையை உடைத்ததாக எங்கள் மீது காங்கிரஸார் பழி சுமத்துகிறார்கள். இது அபாண்டமான பழி. கீழ்த்தரமான செயல்களில் சிறுத்தைகள் ஈடுபட மாட்டார்கள். இதைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

காங்கிரஸுடன் ஏன் இந்த மோதல்?

‘‘உலகத் தமிழர்கள் ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ் மக்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் ராஜபக்ஷேவை அழைத்து விருந்து கொடுப்பதை மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இந்திய அரசின் இத்தகைய தமிழின விரோதப் போக்குகளால் தி.மு.க.தலைவர் கலைஞர்தான் பழி சுமக்க வேண்டியிருக்கிறது.‘கலைஞரின் ஒப்புதலுடன்தான் இந்திய அரசு ராஜபக்ஷேவை அழைத்திருக்குமோ’என்று உலகத் தமிழர்கள் சந்தேகிக்கிறார்கள். எனவேதான், தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் உள்நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுவதாகக் கருதுகிறேன். எனவே, இதைச் சொல்ல வேண்டியது எனது கடமை.’’

ராஜபக்ஷேவை அழைத்ததில் காங்கிரஸ் அரசுக்கு என்ன உள்நோக்கம் இருக்கிறது?

‘‘தி.மு.க.வோடு சோனியாகாந்தி மட்டும்தான் நல்ல இணக்கமாக இருக்கிறார்.தமிழ்நாட்டில் சோனியா காந்தி தலைமையை மதிக்கும் தலைவர்கள் யாருமில்லை. ஆளாளுக்கு மனதில் தோன்றியதைப் பேசி வருகிறார்கள்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தி விருப்பப்படியே காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அமைந்தது. கடைசிவரை ஜி.கே.வாசன் தவிர மற்ற காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு எதிரான கருத்துக்களையே சொல்லி வந்தனர்.

அது போலவே ராஜபக்ஷேவை அழைத்த விவகாரத்தில் தி.மு.க.வுக்கு நெருக்கடி தர வேண்டும் என்று தமிழகத்திலுள்ள சில தலைவர்கள் நினைக்கிறார்கள்.இந்த எதிர்வினை பற்றி கருத்தில் கொள்ளாமல் சோனியாவும் ராஜபக்ஷேவை அழைக்க ஒப்புதல் அளித்திருக்கிறார்’’

தி.மு.க.வுக்கு நெருக்கடி தரவேண்டிய அவசியம் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏன் வந்தது?

‘‘வரும் தேர்தலில் ஒரு எம்.பி. தொகுதிக்கு இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகள் என்ற அடிப்படையில் 39 எம்.பி. தொகுதிகளில் 78 சட்டப்பேரவைத் தொகுதிகள் தரும் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது, இல்லையென்றால் தனித்துப் போட்டி என்று ராகுல் நினைப்பதாகத் தெரிகிறது.இதைத்தான் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்களும் விரும்புகிறார்கள்.இதற்காகவே தி.மு.க.வுக்கு நெருக்கடி உருவாக்குவதாக கருதுகிறேன்.அதில் ஒருபகுதியே ராஜபக்ஷேவின் அழைப்பு!’’

நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள். ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி தன்னைச் சந்திக்க வராத சோனியா காந்தியை விமான நிலையம் சென்று காத்திருந்து சந்திக்கிறார்.காங்கிரஸ் கூட்டணியை எப்பாடுபட்டாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றுதானே தி.மு.க.வும் நினைக்கிறது?

‘‘முதல்வர் என்ற முறையில் கூட்டணிக் கட்சித் தலைவரை வரவேற்பது மரபு. இந்த சந்திப்பு நிகழவில்லை என்றால் கூட்டணிக்குள் விரிசல் இருப்பதாக பத்திரிகைகளில் எழுதுவார்கள்.சோனியா காந்தியை வரவேற்றதில் தி.மு.க.வுக்குப் பின்னடைவு இருப்பதாக நான் கருதவில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டுக்கு வருகின்ற ராகுல் காந்தி தன்னை விட இரண்டரை மடங்கு வயது மூத்தவரான கலைஞரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவில்லை என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதுபோலவே திருச்சி கூட்டத்தில், ‘காங்கிரஸின் தனித் தன்மையைப் பாதுகாப்போம்’ என்று பேசிய சோனியா, கூட்டணி பற்றி எதுவும் பேசாமல் இருந்ததும் கவனிக்க வேண்டிய ஒன்று.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை சுமந்ததால் தி.மு.க.வுக்கு தீராப்பழி ஏற்பட்டிருக்கிறது.ஆகவேதான் தோழமை அடிப்படையில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியே வாருங்கள் என்று தி.மு.க.வுக்கு வெளிப்படையாகச் சொல்கிறேன்.இது வேண்டுகோள், நிபந்தனை அல்ல’’

அப்படியென்றால் காங்கிரஸுடன் தி.மு.க.கூட்டணி தொடர்ந்தால் கூட்டணியிலிருந்து வெளியேறுவீர்களா?

‘‘இந்தத் தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். இதில் எந்த ஊசலாட்டமும் இல்லை. முரண்பாடுகளும், விமர்சனங்களும் இருக்கிற அதே வேளையில் கூட்டணி தர்மத்தை மதிக்கும் வகையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு எங்கள் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறோம்.ஜி.கே.வாசன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் எங்கள் வெற்றிக்கு தீவிரமாக பணியாற்றியதையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம். ஆனால், காங்கிரஸ் போட்டியிட்ட 15 தொகுதிகளில் பூத் ஏஜெண்டுக்குக் கூட அந்தக் கட்சியில் ஆளில்லை.சிறுத்தைகள்தான் வாக்குச்சாவடி முகவர்களாக இருந்தார்கள். எங்களுடைய உழைப்பில் 9 இடங்களில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.காங்கிரஸ் வெற்றியில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பில்லை என்று கார்த்தி சிதம்பரம் சொல்லட்டும் நாளையே எம்.பி. பதவியை ராஜிநாமா செய்கிறேன்.

காங்கிரஸ் கட்சி உயிருடன் இருக்க தலித் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவுதான் காரணம்.கக்கன் போன்ற எங்கள் முன்னோர்களின் உழைப்பில் வளர்ந்த கட்சி காங்கிரஸ். எனவே காங்கிரஸை விமர்சிக்க எனக்கு உரிமை இருக்கிறது.’’

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பான தீர்ப்பாய விசாரணையில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே?

‘‘தீர்ப்பாய விசாரணை நடந்த நாள்களில் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் அதில் கலந்து கொண்டனர்.

சென்னையில் வன்னி அரசு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். உதகையில் நடந்த நடுவர் மன்ற விசாரணைக்கு நாகை வேலு குணவேந்தன், மதுரை மனோகரன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் நடுவர் மன்றத்தின் விசாரணை என்பது இந்திய அரசின் கண் துடைப்பு நாடகமே. சீனாவுக்குப் பயந்து கொண்டு அமெரிக்காவின் வாலைப்பிடிக்கும் இந்திய அரசு அதற்காக ராஜபக்ஷேவின் காலைப் பிடிக்கவும் தயங்காது! எனவே அமெரிக்காவின் விருப்பத்தின் பேரிலேயே, புலிகள் மீதான தடை தொடர்கிறது’’ என்று முடித்துக் கொண்டார்.

Please Click here to login / register to post your comments.