யாழ்ப்பாண பொதுநூலகத்தில் இடம்பெற்ற அநாகரிகச் செயலை பூசிமெழுக முயற்சிக்கக்கூடாது

ஒரு நூல் நிலையம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது. இது மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் கூற்று. ஒரு நூலகம் என்பது ஒரு நாட்டினதோ சமூகத்தினதோ அறிவு வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கை வகிப்பதுடன் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு போன்ற வாழ்வியல் கூறுகளை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைகளுக்கு கையளிக்கும் பாரிய பொறுப்பையும் மேற்கொள்கிறது. எனவேதான் நூலகம் ஒரு அறிவாலயமாகவே மக்களால் மதிக்கப்படுகிறது.

ஆனால் எமது மண்ணிலோ பண்டித நேருவின் கூற்று எதிர்மறை யதார்த்தமாக இடம்பெற்றுள்ளது என்பது மறக்கமுடியாத ஓர் உண்மையாகும். இங்கு ஒரு நூல் நிலையம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பதற்கு நேர்மாறாக ஒரு நூல் நிலையம் அழிக்கப்படும் போது பல சிறைச்சாலைகள் நிரம்புகின்றன என்பதே நாம் கண்ட அனுபவமாகும்.1981ஆம் ஆண்டு இரு முக்கிய அமைச்சர்கள் யாழ்ப்பாணத்தில் மாவட்ட சபைத் தேர்தல் பரப்புரைகளுக்காகத் தங்கியிருந்த போது யாழ்.நூலகம் தென்னிலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காடையர்களாலும் துரையப்பா விளையாட்டரங்கில் பாதுகாப்புக் கடமைகளுக்காகத் தங்கவைக்கப்பட்டிருந்த ஆயுதப் படையினராலும் எரியூட்டப்பட்டது. தொண்ணூறாயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள், ஓலைச்சுவடிகள், ஆவணச்சான்றுகள் என்பன எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.

யாழ்.நூல்நிலையம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு அருட்திரு. தாவீது அடிகளார் அதிர்ச்சியில் உயிரிழந்தார். இன்னொருவர் மனநிலை பிசகி நூல்நிலையச் சுற்றாடலில் அலைந்து திரிந்தார். வடபகுதி மக்கள் வீதி வீதியாகக் கண்ணீர் சிந்தியும் ஒப்பாரி வைத்தும் கதறி அழுதனர். ஆனால் இக்கொடுஞ்செயல் இளைஞர் சந்ததியிடம் ஏற்படுத்திய கோபமும் வெறுப்புணர்வும் பெரும் ஆவேசமாக மாற ஆயுதப்போராட்டம் புதிய வீறு பெற்றது. இதனால் பல இளைஞர்கள் சிறை சென்றதும் தலைமறைவானதும் யதார்த்தமாகியது.

அதாவது ஒரு நூல் நிலையம் எரிக்கப்பட்டபோது பல சிறைச்சாலைகள் நிரப்பப்பட்டன என்பது அனுபவமாகியது. இப்போது மீண்டும் இப்படியான ஒரு நிலைமை தோன்றி விடுமோ என அச்சப்படுமளவுக்கு சில சம்வங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளமை ஒரு கவலைதரும் விடயமாகும். சந்திரிகா அம்மையார் ஆட்சியிலிருந்த போது இது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட் டது. எரியூட்டல் கொடூரத்தின் வடுக்கள் வெள்ளை அடித்து மறைக்கப்பட்டன. இப்போது அது மெல்ல மெல்ல பழைய நிலைமையை நோக்கி வளர்ச்சியடைந்துவருகிறது.இப்படி ஒரு நிலைமையில் கடந்த மாதம்23 ஆம் நாள் மீண்டும் இந்நூலகம் இலக்கு வைக்கப்பட்டிருப்பது தமிழ்மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதேவேளையில் ஆத்திரத்தையும் கிளப்பியுள்ளது. அன்று இலங்கை மருத்துவர் சங்கமும் யாழ்.மருத்துவ சங்கமும் இணைந்து யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் மாநாட்டை நடத்தின. அதன் காரணமாக அன்று பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுடன் வாசல்களில் அது பற்றிய பதாகைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.

அந்நிலையில் 30 பஸ்களில் அங்கு வந்து இறங்கிய நூற்றுக்கணக்கான தென்னிலங்கை சுற்றுப்பயணிகள் உடனடியாக யாழ்.நூல் நிலையத்திற்குள் சென்று பார்வையிடவேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தனர். காவலாளி தடுக்கவே முறுகல் நிலை ஏற்பட்டது.பொலிஸாரும் ஆயுதப் படையினரும் பார்த்திருக்கவே இந்த அடாவடித்தனம் இடம்பெற்றது. இறுதியில் மாநகர முதல்வரின் கட்டளையின் பேரில் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்திலேயே அவர்கள் உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் மருத்துவர்களின் மாநாட்டைக் குழப்ப திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா அல்லது போரில் தோற்கடிக்கப்பட்ட மக்களையும் அவர்களின் நிறுவனங்களையும் வெற்றிபெற்றவர்கள் எப்போதும் எப்படியும் கையாளலாம் என்ற அநாகரிக மேலõதிக்க சிந்தனையில் பிறப்பெடுத்ததா என்ற கேள்வி இங்கேஎழுகிறது.

யாழ்ப்பாணத்தில் தங்களைக் குடியேற்றியேயாக வேண்டும் என்ற பிடிவாதத்துடன் யாழ்.புகையிரத நிலையத்தில் ஒரு தொகை சிங்கள மக்கள் வந்து தங்கியிருப்பதும் அத்துமீறி நூல் நிலைய நடவடிக்கைகளைக் குழப்பும் வகையில் உள்நுழைவதும் அடிப்படையில் ஏதோவொரு இன மேலாதிக்கப் பின்னணியைக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன என்ற சந்தேகம் எமது மக்களிடம் ஏற்படுவது தவிர்க்கமுடியாததே.ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு நிர்வாகம் உண்டு. அந்த நிர்வாகம் சில சட்டதிட்ட ஒழுங்குகளை மீறி விடுத்து இதற்கேற்பவே நடைபெறுகின்றன. அந்த ஒழுங்குகளை மீறி பெரும் கும்பலாக வருபவர்கள் செயற்பாட்டால் அதுவும் ஒரு வன்முறை சார் ஒழுக்க மீறல்தான். ஒரு நூல்நிலையம் என்பது அறிவுப் பசி தீர்க்கும் ஆலயம். அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் உலக விடயங்களை அறிவதில் ஆர்வம் கொண்டவர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் என மனித சமூகத்தின் பெரும் பகுதியினருக்கு அறிவுப் பசி தணித்து ஆதரிக்கும் மையம்.

இங்கு எப்போதும் ஆழ்ந்த அமைதியும், புனிதமும் நிலவவேண்டும். இங்கு எழும் ஒரு சிறு சலனம் கூட கற்பவர் கவனத்தைக் குழப்பியடித்துவிட முடியும். இப்படியான ஓர் இடத்தில் ஒரே நேரத்தில் 30 பஸ்களில் வந்த ஏறக்குறைய 1800 பேர் பார்வையாளர்களாக உள்ளே புகுந்தால் அமைதி பாதுகாக்கப்படுமா? ஒரு நூல்நிலையத்தின் இயல்பு நிலைமை பேணப்பட முடியுமா?நூல்நிலையம் என்பது ஒரு கண்காட்சிக் கூடமோ மிருகக்காட்சிச் சாலையோ அல்லது ஒரு களியாட்ட மண்டபமோ அல்ல. அது ஒரு அறிவுப் புனல் சுரக்கும் அமைதிப் பூங்கா. அப்படி ஒரு உயர் புனிதம் கொண்ட யாழ்.நூலகத்துக்குள்தான் காடைத்தனம் கட்டவிழ்த்துவிடப் பட்டது. அனுமதி இல்லை என்ற வாசகம் எழுதிய அறிவு தென்னிலங்கையிலிருந்து வந்தவர்களால் கிழித்து எறியப்பட்டது. அத்துமீறி உட்புகுந்த அவர்கள் புத்தகங்களை அள்ளி வீசினர். இத்தனை சம்பவங்களும் பொலிஸார், இராணுவத்தினர் முன்னிலையிலேயே இடம்பெற்றன.

அவர்கள் இச்சம்பவங்களைத் தடுத்துநிறுத்த முயலவுமில்லை எவரையும் கைது செய்யவுமில்லை. உயர் கல்வி அமைச்சுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்படமுடியுமானால் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து உபவேந்தரைத் தாக்க முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் மாணவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட முடியுமானால் ஓர் அறிவியல்பீடமான நூல்நிலையத்தில் அத்துமீறி நுழைந்து சேதங்களை விளைவித்தவர்கள் ஏன் தடுக்கப்படவில்லை? ஏன் கைது செய்யப்படவில்லை? அப்படியானால் வடக்குக்கு ஒரு நீதி தெற்குக்கு ஒரு நீதி என்பது தான் இலங்கை நாட்டின் ஜனநாயகமா? 1958, 1977, 1983 ஆகிய காலப் பகுதிகளில் பொலிஸார், ஆயுதப்படையினர் முன்னிலையில் எமது மக்கள் வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டும், கொள்ளையிடப்பட்டும் அகதிகளாக விரட்டப்பட்டு ஏற்படுத்தப்படும் என்பதன் முன்னறிவித்தலா? அல்லது மீண்டும் 1981 ஆம் ஆண்டு நிகழ்ந்தது போல நூலகம் எரிக்கப்படும் என்பதற்கான மிரட்டலா?

அது மட்டுமா ஈழத்துக் காந்தி என தமிழ்மக்களால் மதிக்கப்படும் தந்தை செல்வா நினைவாலய வளாகத்துக்குள் புகுந்துகொண்ட காடையர்கள் வாழைகளை வெட்டி அழித்தனர். தென்னைகளைச் சேதப்படுத்தினர். அருகில் இராணுவ நிலையம் இருந்த போதும் அது தடுக்கப்படவுமில்லை எவரும் கைதுசெய்யப்படவுமில்லை.அதேவேளையில் கௌரவ டக்களஸ் தேவானந்தா அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சர். யாழ்.மாநகர முதல்வர் அவரது கட்சியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவருமே தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளாக அதிகாரத்தில் வீற்றிருப்பவர்கள். யாழ்.மாநகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள நூலகத்திலும் யாழ்.மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபி அமைந்த வளாகத்திலும் இத்தகைய அத்துமீறல்கள் இடம்பெற்றபோது தடுத்து நிறுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அப்படி நடந்துகொண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இணக்க அரசியல் என்றால் எம்மீது இழைக்கப்படும் எல்லா துன்பங்களையும் அவமதிப்புகளையும் வாய்மூடி ஏற்றுக்கொள்வதா? ஜனாதிபதி ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்புவது பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். இத்தகைய சம்பவங்கள் எத்தகைய ஒழுக்கம் சார்ந்தது என்பதை நாம் அறிய விரும்புகிறோம். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸாரும் ஆயுதப்படையினரினதும் முன்னிலையிலேயே இப்படிச் சம்பவங்கள் இடம்பெறும் போது நாம் எங்குபோய் முறையிடமுடியும்? எமது இடம்பெயர் வாழ்வும் கூடார மீள்குடியேற்றமும் வறுமையும் பசியும் துன்பமும் உறவுகளை இழந்த துயரங்களும் தென்னிலங்கை மக்களின் பார்வைப் பொருள்களாகி விட்டன என்பது உண்மைதான். அதே அடிப்படையில் எம்மால் புனிதமான ஆலயமாகப் போற்றப்படும் எங்கள் நூல் நிலையமும் அவமதிக்கப்படுவதை எம்மால் எப்படிப் பொறுக்கமுடியும்? எப்படியிருந்தபோதிலும் இனங்களுக்கிடையேயான நல்லுறவைச் சிதைத்து கசப்புணர்வை வளர்க்கும் இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் நிற்பவர்களை நாம் வன்மைகயாகக் கண்டிப்பதுடன் அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் மருத்துவர்களின் மாநாடு இடம்பெறும் போதே பார்வையாளர்களை உள்ளே அனுமதித்து எமது நூல்நிலையத்தின் தனித்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் நிர்வாகத்தின் ஒழுங்கு முறைகளுக்குள் தலையிடும் வகையிலும் நடந்துகொண்ட யாழ்.மாநகர முதல்வரையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அசம்பாவிதம் தொடர்பாக யாழ்.நூல் நிலையக் கோட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு நடந்தது ஒரு சிறு குழப்பமேயெனவும் பத்திரிகைகள் அதை ஊதிப் பெருப்பிக்கின்றன எனவும் அங்கு நடந்தது உண்மையாக உணரப்படுமானால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் என்ற வகையில் தான் அதற்காக மன்னிப்புக் கேட்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அவர் பத்திரிகைகளைக் குற்றம் சாட்டுவதன் மூலமும் உண்மையாக உணரப்படுமானால் என்ற வார்த்தைகளைப் பாவிப்பாதன் மூலமும் இச்சம்பவத்தைப் பூசி மெழுக முயற்சிக்கின்றார் என்றே தோன்றுகிறது. அதேவேளையில் அரசாங்கத்தின் சார்பில் அவர் மன்னிப்புக் கேட்பதன் மூலமும் இந்த அத்துமீறலுக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொள்கிறாரா எனவும் கேட்கத் தோன்றுகிறது. மேலும் அவர் தான் மனிப்புக் கேட்பதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை சட்ட நடவடிக்கையிலிருந்து தப்புவிக்க எடுக்கும் முயற்சியாகவே நாம் கருதுகிறோம்.தமிழ் மக்கள் தங்கள் அறிவாலயத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு பெரும் அவமதிப்பாகவும் பெரும்பான்மை இனத்தவர் தமிழ் மக்கள் மீது எவ்வித அநீதியையும் இழைக்க முடியும் எனப் பிரகடனம் செய்யும் ஒரு நடவடிக்கையாகவுமே பார்கின்றனர். இதை மன்னிப்புக் கேட்பதன் மூலம் பூசி மெழுக முயற்சிக்கக் கூடாது. அதை தமிழ் மக்கள் ஏற்கவும் போவதில்லை.

Please Click here to login / register to post your comments.