வெள்ளையடிக்கப்பட்ட போர்க்குற்றங்கள்

இலங்கையில் பதிலளிக்கும் கடப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் முன்னெடுப்பதற்காக இதயசுத்தியுடனானதும் நம்பகரமானதுமான முயற்சியின் அடிப்படையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்பாக தோன்றுவதற்கான சந்தர்ப்பத்தை நாம் வரவேற்கக்கூடும். ஆனால், அந்த நல்லிணக்க ஆணைக்குழுவானது இந்த மாதிரியான முயற்சி தொடர்பான விடயத்தில் மிகச் சிறியதொன்றாகவே காணப்படுகிறது என்று சர்வதேச நெருக்கடிக்குழுவின் தலைவர் லூயிஸ் ஆர்பர்,மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கென்னத் ரொத்,சர்வதேச மன்னிப்புச்சபையின் பொதுச் செயலாளர் சலீல் ஷெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.வெள்ளையடிக்கப்பட்ட போர்க் குற்றங்கள் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவை மனித உரிமைக் குழுக்கள் ஏன் நிராகரிக்கின்றன என்ற தலைப்பில் லூயிஸ் ஆர்பர்,கென்னத் ரொத், சலீல் ஷெட்டி ஆகியோர் தெரிவித்திருப்பதை தாய்லாந்தின் த நேஷன்பத்திரிகைநேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இந்த ஆணைக்குழுவானது சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் தொடர்பான அடிப்படைத் தன்மையை சர்வதேச தரத்திற்கமைவாக கொண்டிருக்கத் தவறியுள்ளமை மாத்திரமன்றி, சிறப்பு விடுபாடு, தொடர்ந்து இடம்பெறும் மனித உரிமைத் துஷ்பிரயோகங்கள் போன்ற விடயங்களை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தவறிவிட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுக்கின்றது. பச்சாதாபம் அடையாத விதத்தில் இவற்றை முன்னெடுக்கும் அதேசமயம், ஏனைய குழப்பகரமான தன்மைகளும் காணப்படுகின்றன. தற்போது இலங்கை அரசாங்கமும் நீதி முறைமையும் சட்ட ஆட்சி மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்தல் என்பனவற்றை பேணிக் கடைப்பிடிக்காது அல்லது அதனை மேற்கொள்ள முடியாதென்பதை சுட்டிக்காட்டுவதாக இது அமைவதாக எமது மூன்று அமைப்புகளும் நம்புகின்றன.

எமது அக்கறைகளை கணிசமானளவு அறிக்கைகள் மூலம் நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம். நெருக்கடிக் குழுவின் மே 2010 அறிக்கையான “இலங்கையில் போர்க் குற்றங்கள்; 2009 ஜூனில் விடுக்கப்பட்ட அறிக்கையான "இலங்கையின் நீதித்துறை விட்டுக்கொடுக்கப்பட்ட உரிமைகள்' மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2010 பெப்ரவரி அறிக்கையான "சட்டமுடக்கம்:இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிச்சந்தேகநபர்களின் நிச்சயமற்ற விதி', இந்த அமைப்பின் 2009 பெப்ரவரி அறிக்கையான "இடம்பெயர்ந்தவர்கள் மீதான யுத்தம்:வன்னியிலுள்ள பொதுமக்களுக்கு எதிரான இலங்கை இராணுவம், விடுதலைப்புலிகளின் துஷ்பிரயோகங்கள்' மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபையின் 2009 ஜூன் அறிக்கையான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான 20 வருடங்கள்: இலங்கையின் விசாரணை ஆணைக்குழுக்கள், இந்த அமைப்பின் 2009 ஆகஸ்ட் அறிக்கையான இலங்கையில் பூட்டப்படாத முகாம்கள்: இப்போது இடம்பெயர்ந்தவர்களுக்கான பாதுகாப்பும் கௌரவமும் போன்ற அறிக்கைகள் மூலம் எமது கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த அறிக்கைகளில் நாம் விபரமாகத் தெரிவித்திருந்த எமது கவலைகளுக்கு பரிகாரம் காண்பதற்கான இலங்கை முன்னேற்றத்தை இலங்கை உருவாக்கவில்லை.

அரசாங்கத்தின் இந்த பரந்தளவிலான தோல்விகளுக்கு மேலதிகமாக நல்லிணக்க ஆணைக்குழுவானது கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு முறைமைகளில் பாரதூரமான குறைபாடுகளைக் கொண்டதாகக் காணப்படுவதாக நாம் நம்புகிறோம்.

உள்நாட்டு யுத்தத்தின்போது சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தை பாரதூரமாக அரச படைகளும் விடுதலைப்புலிகளும் மீறியதாக இருதரப்பினர் மீதும் தெரிவிக்கப்படும் நம்பகரமான பல குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காகத் தேவைப்படும் ஆணையை இந்த ஆணைக்குழு கொண்டிருக்கவில்லை. விசேடமாக இறுதிமாதங்களின்போது நீதி விசாரணைக்குப் புறம்பான மரணதண்டனைகள்,சித்திரவதை,பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஏனைய போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான அதிகாரம் இந்த ஆணைக்குழுவில் காணப்படவில்லை. இவை தொடர்பாக முழுமையாகவும் பக்கச்சார்பற்ற முறையிலும் விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவையுள்ளது. விசேடமாக பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முறைமைகள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டிய தேவையுள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான எந்தவொரு இதயசுத்தியுடனான ஆர்வத்தையும் நல்லிணக்க ஆணைக்குழு வெளிப்படுத்தவில்லை. பதிலாக அடிப்படை எதுவுமின்றி பொதுமக்கள் இழப்பு எதுவுமில்லையென அரசாங்கம் மிகவும் உறுதியான முறையில் பின்பற்றிய கொள்கைக்கு சவால் விடுக்காமல் திரும்பத் திரும்ப இதனை அரசாங்க அதிகாரிகள் கூறுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. 2009 ஜனவரிக்கும் மே மாதத்திற்குமிடையில் ஐ.சி.ஆர்.சி. வெளியிட்டிருந்த அதிக எண்ணிக்கையான பகிரங்க அறிக்கைகள் தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவரும் அவரின் சக உறுப்பினர்களும் கேட்பதற்கு தவறியுள்ளனர். அதிகளவிலான பொதுமக்கள் இழப்புகள் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள்,மனிதாபிமான உதவிகள் சென்றடைவது போதாமலிருந்தமை என்பன பற்றி கேட்கத் தவறிவிட்டனர். போரின் போது அரசாங்கம் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தவை பற்றி விபரிக்குமாறு அதிகாரிகளை ஆணைக்குழு கேட்டிருக்கவில்லை. 2009 இன் ஆரம்பத்தில் வன்னியிலிருந்து ஒரு இலட்சம் பொதுமக்கள் வெளியேறியதாக அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால், அதிகாரிகள் மூன்று இலட்சம் பேர் வெளியேறியதாகத் தெரிவித்திருந்தனர்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சுயாதீனமாக இருக்க வேண்டுமென்பது அடிப்படையான தேவைப்பாடாகும். ஆனால், நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இதற்கு அமைவாக இல்லை. யுத்தத்தின் இறுதி வருடத்தின்போது ஆணைக்குழுவின் தலைவரும் உறுப்பினர்களில் ஒருவரும் அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். அவர்கள் அரசாங்கத்தின் செயற்பாட்டையும் போர்க் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் பகிரங்கமாக நியாயப்படுத்தியிருந்தனர். ஆணைக்குழுவின் அநேகமான ஏனைய உறுப்பினர்களும் இலங்கை அரசாங்கத்திற்காகப் பணியாற்றிய சில வரலாற்றைக் கொண்டுள்ளனர். எவரும் சுயாதீனமான அரசியல் நிலைப்பாடுகளை எடுத்திருப்பதாக அறியப்படவில்லை. பலர் அரசாங்கத்துடன் தமக்குள்ள பிணைப்புகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, சாட்சியங்களை பாதுகாப்பதற்கான எந்தவொரு ஏற்பாடுகளும் இல்லாததன்மை கவலையளிப்பதாகவுள்ளது. இலங்கையில் ஒருபோதும் இந்த முறைமை இருக்கவில்லை. அரசாங்கத்தரப்பை குற்றஞ்சாட்டுவோர்கள் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படும் சூழ்நிலை காணப்படுகிறது. துணிச்சலான சிலர் மட்டுமே போர்க்குற்றங்கள் தொடர்பாக அச்சுறுத்தலுக்கு மத்தியில் சாட்சியமளித்துள்ளனர்.

யாவற்றுக்கும் மேலாக யுத்தம் முடிவடைந்த போதிலும் நாடு இப்போதும் அவசரகால நிலையின் கீழ் இயங்குகிறது. இது ஆணைக்குழுவானது நம்பகரமான விசாரணையை மேற்கொள்வதற்கான ஆற்றலை தெளிவான முறையில் புறந்தள்ளுகிறது. தோல்வி கண்ட மற்றும் அரசியல்மயப்படுத்தப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்கள் தொடர்பான நீண்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இன்று பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக செயற்பாட்டுத் திறனுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய பொறிமுறைகள் இலங்கையில் இல்லை. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் சுயாதீனத்தன்மை குறைவாகவுள்ளது. பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை கையாள்வதற்கு உரிய ஆற்றல் குறைவாகவிருப்பதை அந்த ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் 5749 வழக்குகளை இலங்கை மீளாய்வு செய்வதற்காக வைத்திருப்பதாக பலவந்தமாக காணாமல்போதல் தொடர்பான ஐ.நா. செயற்குழு மீளாய்வு செய்திருக்கிறது.

உண்மையானதும் நம்பகரமானதுமான நடவடிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும். சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களின் செயற்பாட்டு அதிகாரங்களும் சாட்சிகள் பாதுகாப்பும் சர்வதேச தேசிய சட்டமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கண்டறிவதற்கான ஆணையையும் ஆணைக்குழுவானது கொண்டிருக்க வேண்டும். சிறப்பு விடுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைக்கு அரசாங்கம் ஆதரவு அளிப்பதுடன், பொலிஸாரும் நீதிமன்றங்களும் செயற்பாட்டுத்திறனும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். அத்தகையதொரு நிலையில் ஆணைக்குழு முன் ஆஜராவதில் நாம் மகிழ்ச்சியுடையவர்களாக இருப்போம்.

Please Click here to login / register to post your comments.