இலங்கை தேசிய காங்கிரஸ்

தொடக்கத்தில் ஆங்கிலேய அரச அலுவலர்களே நாட்டின் சட்டவாக்க மன்றத்தை வழி நடத்தினர். ஆனால், காலஞ்செல்லச் செல்ல அரச அலுவலர்கள் அல்லாத உள்நாட்டுப் பிரதிநிதிகளின் தொகை அதிகரித்து வந்து அரச அலுவலர்களின் தொகையிலும் பார்க்கக்கூடிய தொகையை சட்டவாக்க மன்றம் கொண்டிருந்தது. ஆங்கிலேய அரச அலுவலர்களின் சர்வாதிகாரப் போக்கு நாளடைவில் குறைந்து வந்தது. உள்ளூர் பிரதிநிதிகளின் குரல் மேலோங்கத் தொடங்கிற்று. அங்கத்தவர்கள் ஆளுநரால் தான்தோன்றித்தனமாய் நியமிக்கப்பட்டு வந்த காலம் போய் மக்கள் தேர்வின் அடிப்படையில் அங்கத்தவர்கள் சட்டவாக்க மன்றத்தினுள் உள்நுழையத் தொடங்கினர்.

முதலில் இன அடிப்படையில்(communal Representation) நடைபெற்று வந்த நியமனங்கள் 20 ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இருந்து பிரதேச அடிப்படைக்கு (Territorial Representation) மாறியது. அதாவது இலங்கையின் நிலப்பரப்பு பிரிக்கப்பட்டு இன்ன இடத்திற்கு இன்னார் என்ற தோரணையில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கோல்புறூக் இலங்கைக்கு வந்த காலத்தில் (1832) 9 அரச அலுவலர்களையும் 6 அலுவலர் அல்லாதோரையும் கொண்டிருந்த சட்டவாக்க மன்றம், ஆளுநர் மக்கெல்லம் (McCallum) (1912) காலத்தில் 11 அலுவலர் 10 மற்றையோர் என்றாகி, ஆளுநர் மன்னிங் (Manning) (1921) காலத்தில் அலுவலர் 14, மற்றையோர் 23 என்றாகி அதே ஆளுநர் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் அரச அலுவலர் 12, அலுவலர் அல்லாதோர் 37 என்றாகியிருந்தது. இந்த 37 பேரில் 23 பேர் பிரதேசத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 6 பேர் இன ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதாவது 3 ஐரோப்பியர், 2 பறங்கியர், 1 மேல் மாகாண தமிழர் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நியமிக்கப்பட்ட அங்கத்தவர் 8. அவர்களுள் 3 முஸ்லிம்கள், 2 இந்தியர் மேலும் விசேட அக்கறைகளைப் பாதுகாக்க 3 பேர் என்ற விதத்தில் நியமனங்கள் நடைபெற்றன. ஆளுநரின் சர்வாதிகார ஆட்சியாய் இருந்து அலுவலர்கள் ஆட்சியாக மாறிக் கடைசியில் உள்நாட்டு மக்கட் பிரதிநிதிகளின் ஆட்சியாக உருவெடுத்தது. பொதுவாக நியமிக்கப்பட்ட அங்கத்தவர்களும் (8) இன ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பியரும் (3), பறங்கியரும் (2) அரசாங்க அலுவலர்களுடன் (12) சேர்ந்து வாக்களித்தனர் (25). மற்றையவர்களின் தொகை 24 ஆக இருந்தது. ஆகவே அரசாங்கத்திற்கு ஒரு வாக்கே மேலதிகமாக இருந்தது. ஆனால் சில அலுவலர் வருகை தராத நாட்களில் நாட்டுக்கேற்ற உள்ளூர் மசோதாக்களை உள்நாட்டுப் பிரதிநிதிகள் மன்றத்தில் ஏற்றுக்கொள்ளச் செய்யத் தவறவில்லை. உத்தேச சட்ட முதல் வரைவு ஆங்கில அக்கறைகளுக்கு முரணானது என்று கண்டால் ஆளுநர் தமது தடையுரிமையைப் (Power of veto) பாவித்து அவற்றை வலு இழக்கச் செய்து வந்தார்.

சிறுபான்மை இனத்தவர்களின் பாதுகாப்பை உத்தேசித்தே இன வாரியான அங்கத்துவம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்தமை நாட்டின் ஒருமைத்துவத்திற்குப் பங்கம் விளைவிக்கின்றது என்று பல பெரும்பான்மையினத் தலைவர்கள் கருதினார்கள். நாடு ஒரே பாதையில், ஒருமித்து எல்லோரும் ஒரே நாட்டுப் பிரஜைகள் என்ற அடிப்படையில் முன்னேற வேண்டுமானால் எந்த இன அடிப்படை அங்கத்துவமும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது என்று அவர்கள் வாதாடினார்கள். அதாவது மக்கள் எல்லோரையும் ஆங்கிலம் என்ற பொதுமொழி ஐக்கியப்படுத்தியிருந்த அந்த வேளையில் அவ்வாறு கூறினார்கள். கேட்பதற்குஞ் சரியாகத்தான் பட்டது. சூழ்நிலை மாறினால் என்ன நடக்கும் என்று பலர் சிந்திக்கவில்லை. ஆனால், சில சிறுபான்மையினத் தலைவர்களுக்கு அந்தக் கேள்வி பெருந் தலையிடியைக் கொடுத்தது.

ஆளுநர் தமது விரிந்த ஆட்சியுரிமை அதிகாரங்களைப் புதிய யாப்பின் கீழ் இழந்தார். மக்களிடம் அரசியல் அதிகாரம் கைமாற்றப்பட்டது. மக்களின் முக்கிய பிரதிநிதிகளாக உள்நாட்டவர்களைச் சேர்த்து ஆங்கிலேயருக்குப் போட்டியான அரசியல் சக்தியாக வளர்ச்சி அடைந்த நிறுவனந்தான் இலங்கை தேசிய காங்கிரஸ். இலங்கை சீர்திருத்தச் சங்கம் 1917 இல் நிறுவப்பட்டு அதே சங்கம் வேறு சங்கங்களுடன் சேர்ந்த 1919 ஆம் ஆண்டில் இலங்கை தேசியக் காங்கிரஸாக மாறியது.

எப்போதுமே எங்கள் சூழல்கள் தான் எங்கள் தீர்மானங்களுக்கும், கருத்துகளுக்கும் வேராக அமைகின்றன. கொலையாளிகள் வாழும் சூழலில் வளர்பவர்கள் கொலையைக் கண்டு அஞ்சமாட்டார்கள். சூதாடிகள் மத்தியில் வாழ்பவர்கள் சூதாடுதலை ஒரு பிழையாக நினைக்கமாட்டார்கள். ஆன்மீக சூழலில் வாழ்பவர்கள் பொதுவாக எல்லோருமே நல்லவர்கள் என்ற எண்ணத்தில்தான் வளருகின்றார்கள். மற்றவர்களின் சூதும் வாதும் அவர்களுக்குப் புரிவதில்லை. இதேபோல் நாட்டின் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களின் சிந்தனை அரசாங்க நோக்குடையதாகவே இருக்கும். அரசாங்கத்திற்குச் சார்பானதாகவே இருக்கும். அதாவது ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற எண்ணத்தில் அரசாங்கம் நடந்து கொண்டால் அரச அலுவலர்களின் சிந்தனையும் ஒரே நாடு, ஒரே நாட்டு மக்கள் என்றே நாட்டின் பல்வேறு இனங்களையும் அடையாளம் காணும். ஆங்கிலேய அரசினைக் காரசாரமாக விமர்சித்த சேர் பொன். அருணாசலம் கூட நாட்டு மக்களை இன ரீதியாகவன்றி ஒரு நாட்டு மக்களாகவே கண்டு கொண்டார்.

1975 இல் பிரித்தானிய குடியியல் சேவை (British Civil Service)க்குள் பதவி பெற்ற முதல் இலங்கையர் என்ற பெயர் பெற்ற அருணாசலம் அப்பொழுதிருந்து 1913 வரை சுமார் 38 வருட காலம் அரசாங்கப் பொறுப்புகளை வகித்த காரணத்தினால் மக்களை இன ரீதியாகப் பிரித்துப் பார்க்க முன்வரவில்லை. அவ்வாறு பிரிப்பது தவறு என்றே கருதினார். அண்ணன் இராமநாதன் இன ரீதியான அங்கத்துவம் அவசியம் என்று கூறியபோது அது ஒரு ஆரம்ப கால நிகழ்வே அன்றி, வருங்காலத்து மக்கள் ஒருமித்து இலங்கையர்களாகச் சிந்திக்க வேண்டும் என்றால் இன ரீதியான அங்கத்துவம் பிரதேச அடிப்படையிலான அங்கத்துவத்திற்கே இடமளிக்க வேண்டும் என்று கூறி வந்தார். பெருவாரி சிங்கள மக்களின் தொகுதி கூட ஒரு தமிழ் மகனைத் தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கக் கூடும் என்றே அவர் நினைத்தார். சுயமொழிகளில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நாட்டுப் பற்றையும் நாட்டு மொழிகளின் மதிப்பையும் முதன் முதலில் நிலைநாட்டத் தலைப்பட்டவரும் அருணாசலமே. "இது ஒரே நாடு, நாம் ஒரே நாட்டு மக்கள், பொதுவான ஒரு கலாசாரத்தின் வாரிசுகள் நாங்கள், எம்மொழிகள் இரண்டும் எங்கள் கண்கள் போன்றன, இந்து மதமும் பௌத்தமும் எம்மை வளர்த்து வந்துள்ளன" என்று அருணாசலம் கூறி வந்தபோது சிங்களவர் மனதினில் வேறு எண்ணங்கள் எழுந்திருந்தன, அதை அவர் அறிந்திருக்கவில்லை. "நாம் பெரும்பான்மையின மக்கள். ஒருவருக்கு ஒரு வாக்கு என்று தரப்பட்டால் எந்தத் தேர்தலிலும் நாங்களே வெற்றி பெறலாம். சிங்கள ஏகாதிபத்தியம் நாட்டை ஆளலாம். வேண்டுமெனில் சிறுபான்மையினர் முரண்டு பிடித்தால் சற்று அவர்களுக்கும் ஈயப்படலாம்" என்ற கருத்து அவர்கள் மனதில் நுழைந்து கொண்டது. சிங்கள மக்கட் தலைவர்களான ஜேம்ஸ் பீரிஸ் (தலைவர், இலங்கை தேசிய சங்கம்), ஈ.ஜே. சமரவிக்கிரம (தலைவர், இலங்கை சீர்திருத்த சங்கம்) ஆகியோர் சேர் பொன். அருணாசலத்தை அணுகி யாழ்ப்பாணச் சங்கத் தலைவரை (அ. சபாபதி) தம்முடன் சேர்ந்து இலங்கை தேசிய காங்கிரஸை ஏற்படுத்த உதவும்படி கேட்குமாறு வற்புறுத்தினர். நாடு ஒருமித்து நின்றால் அந்நியனிடம் கூடிய சலுகைகள் பெறலாம் என்ற எண்ணத்தில் அவர் சபாபதியுடன் பேசி அதன் காரணத்தினால் மூன்று சங்கங்களும் இணைந்தே இலங்கை தேசிய காங்கிரஸ் உதயமாகியது. யாழ்ப்பாண சங்கத்தவருக்கும் சிங்கள மக்களின் ஆதிபத்தியம் பெற்ற மற்றைய இரு சங்கங்களுக்குமிடையில் இருந்த கருத்து வேற்றுமை பிரதேச அடிப்படையிலான தேர்தல் முறையே. இது தமிழர்களுக்கு உதவியளிக்காது என்று யாழ்ப்பாண சங்கம் கருதியது. ஆனாலும், சகலரினதும் மரியாதைக்கும் ஆளாகியிருந்த அருணாசலத்தின் உந்துதலால் இலங்கை தேசிய காங்கிரஸ் உதயமாகியது. சிங்களத் தலைவர்களை நம்பியே அவர் யாழ்ப்பாண சங்கத் தலைவரை அவ்வாறு அன்புக் கட்டளையிட்டுச் சேர்த்துக் கொண்டார்.

தமிழர் உரித்துகளையும் கருத்துகளையும் கவனத்திற்கெடுத்தே தாம் இயங்கப் போவதாக சிங்களத் தலைவர்களிடமிருந்து எழுத்தில் உறுதிமொழி பெற்ற பின்னரே அருணாசலம் சபாபதியைச் சேரச்சொல்லியிருந்தார். இன அடிப்படையை விடுத்து பிரதேச அடிப்படையில் கருமம் ஆற்றும் போது மேல் மாகாணத் தமிழர்களுக்கென ஒரு ஆசனம் கட்டாயமாக ஒதுக்கி வைக்கப்படும் என்று கூறியிருந்தார்கள் பீரிஸும் சமரவிக்கிரமவும். இன அடிப்படையான சிந்தனைபோய் நாம் யாவரும் ஒரு நாட்டு மக்கள் என்ற சிந்தனை இலங்கையில் உதிக்கும் என்ற எண்ணப்பாடே அருணாசலத்தை உந்திக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரின் இன, மத வேறுபாடுகளை மதித்து நடந்து அதேநேரத்தில் ஐக்கிய இலங்கையான எம்நாட்டை உருவாக்கலாம் என்று கனவு கண்டிருந்தார் அவர். பின்னர் உதித்த லீ குவான் யூவின் சிங்கப்பூர் போன்ற ஒரு நாடு உதயமாகும் என்று அவர் நினைத்தார் போலும்.

ஆனால், கனவுகளுக்கும் மெய்ம்மை நிலைக்கும் இடையில் நிறைய இடைவெளி இருக்கலாம் என்பதைத் திடீர் என்று உணர்ந்து கொண்டார் அருணாசலம். அது பற்றி அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

Please Click here to login / register to post your comments.