'இலங்கைத் தமிழர்களை சோழர் காலத்தில் வந்த பரதேசிகள் என்று கூறுவதற்கு வழிவகுக்கும் சில சக்திகள்'

ஆக்கம்: எம்.ஏ.எம்.நிலாம்
இன்று இலங்கைத் தமிழர் வசம் இருக்கும் அவர்களுக்குச் சார்பான சான்றுகள், சான்றாவணங்கள் யாவற்றையும் இல்லாதொழித்துவிட்டு பத்தாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் இங்கு வந்த பரதேசிகள்தான் இந்த இலங்கைத் தமிழர்கள் என்று கூறுவதற்கு சில சக்திகள் வழிவகுத்துக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த மாதிரியான தமிழர் பற்றிய தவறான முடிவுக்குப் பல படித்த தமிழ் மக்கள் கூட மாறி வருகிறார்கள் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டிருக்கிறார்.

இதை அறிவுக் குறைவால் ஏற்படும் குளறுபடி என்று வர்ணித்த நீதியரசர் "எல்லாம் முடிந்துவிட்டது என்ற மனோநிலையை நாமெல்லோரும் களைய வேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.

தினக்குரல் பிரதம ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய ஆசிரிய தலையங்கங்களின் ஒரு தொகுப்பான "ஊருக்கு நல்லது சொல்வேன்' என்ற நூல் தமிழ்த் தொண்டாளர் ஹாசிம் உமரின் பதிப்பு நிறுவனமான புரவலர் புத்தகப் பூங்காவின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிறன்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்துப் பேசுகையிலேயே நீதியரசர் மேற்கண்டவாறு கூறினார்.

பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், சமூக, சமயப் பிரமுகர்கள், வர்த்தக சமூகத்தவர்கள், ஊடகத்துறை மற்றும் இலக்கியத்துறை ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நீதியரசர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது;

தனபாலசிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா எனக்கு வேண்டியதைக் கூறக் களம் போட்டுத் தந்துள்ளது. இப்பேர்ப்பட்ட ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைப்பது அரிது. அவரின் இந்தத் தொகுப்பு, அரசியலில் இருந்து அடல் (போர்) வரை, அரசியல் யாப்பில் இருந்து அமைச்சர்கள் வரை, லீகுவான்யூவில் இருந்து சனத்ஜயசூரிய வரை பலவற்றைப் பற்றிப் பேசுகின்றது. அவர் எழுதிய ஆசிரிய தலையங்கங்கள் அவ்வாறாகப் பலவிதப்பட்டவை. எனவே அவர் எழுதிய எந்தத் தலையங்கக் கருப்பொருளையாவது அடிப்படையாக வைத்து என் ஆழ்மன ஆதங்கங்களை வெளிப்படுத்தலாம் என்று நம்புகின்றேன்.

இன்றைய இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை முறை கேள்விக் குறியாகி வருகின்றது. 1981 ஆம் ஆண்டில் யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது. எரிந்த இடிபாடுகளுக்குள் இருந்து, சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்திருக்கும் அதே வாசிகசாலையினுள் இன்றும் காடையரா? எங்கள் அறிவைக் குறிவைக்கும் ஒரு சதி சிலருக்குப் புரிகின்றது. சிலருக்கு இவை வெறும் மரங்களா வனமா என்று புரியமாட்டேன் என்கின்றது. இப்பேர்ப்பட்ட சூழலில் எமது அறிவுப் பொக்கிஷங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். மதிப்புக்குரிய கருத்துகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். கிடைத்தற்கரிய பல நூல்கள் அன்று எரிந்த 95,000 நூல்களுடன் அக்னி பகவானுக்கு ஆகுதி ஆகிவிட்டன. அதனால்தான் போலும் புதிய சரித்திரத்தை புத்தர் அடியார்கள் இன்று புரளியாய்ப் புரள விட்டுள்ளனர். "எங்கே உங்கள் மேற்கோள்களைக் காட்டுங்கள் பார்க்கலாம்?' என்று கேட்க தளம் அமைத்துவிட்டோம் என்ற இறுமாப்போ நாம் அறியோம்!

இன்று கிடைக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களின் அறிவுப் பொக்கிஷங்கள் அனைத்தும் பிறநாடொன்றில் அல்லது இரண்டில் ஆவணப்படுத்தப்பட்டு கோப்பிடப்பட்டு, பாதுகாப்பது முக்கியமென எனக்குப்படுகின்றது. இந்தத் தருணத்தில் நண்பர் ஹாசீம் உமர் பற்றி ஒரு வார்த்தை சொல்லல் அவசியம். பல தமிழ் நூல் வெளியீடுகளில் அவரின் பங்கை அவதானித்திருக்கின்றேன். மேமன் இனத்தைச் சேர்ந்த அவர் இந்த அளவுக்குத் தமிழ் நூல் வெளியீட்டுக்குத் தாராளமாக அள்ளி வழங்குகின்றார் என்றால் அதைப் பாராட்டாமல் இருக்கவும் முடியாது. நாங்கள் வெட்கப்படாமல் இருக்கவும் முடியாது. புரவலர் புத்தகப் பூங்கா என்ற அவரின் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 27 ஆவது தமிழ் நூல் இது. எங்கள் இனத்தவர் செய்யாத கொடையை அவர் செய்து வருகின்றார். நாங்கள் வெட்கப்பட்டு வேலையில்லை. அவரைப் பின்பற்றி எங்கள் வள்ளல்களும் கொடை செய்ய முன்வரவேண்டும். தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிடல் இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமாகி வருகின்றது. இன்றைய நூலின் அட்டையில் ஒருவன் மலைமீது பிரமாண்டமான பாறை ஒன்றைத் தள்ளிச் செல்வதைச் சித்திரித்திருக்கின்றார்கள். தமிழர் தம் அறிவாவணங்களைப் பதிப்பித்துப் பாதுகாப்பதும் அந்தளவுக்குக் கடினமாக இருக்கின்றது என்பதை நாங்கள் உணர வேண்டும்.

இன்று இலங்கைத் தமிழர் வசம் இருக்கும் அவர்களுக்குச் சார்பான சான்றுகள், சான்றாவணங்கள் யாவற்றையும் இல்லாதொழித்து விட்டு பத்தாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் இங்கு வந்த பரதேசிகள் தான் இந்த இலங்கைத் தமிழர்கள் என்று கூற சில சக்திகள் வழிவகுத்துக்கொண்டிருப்பதைக் காணலாம். இந்த மாதிரியான தமிழர் பற்றி தவறான முடிவுக்குப் பல படித்த தமிழ் மக்கள் கூட மாறி வருவதையும் காண்கின்றேன். இது அறிவுக்குறைவால் ஏற்படும் குளறுபடியாகும். ஆகவே எமது தொன்மை, கலைகள், கலாசாரம், இலக்கியம், சரித்திரம் போன்றவை சம்பந்தமான சான்றுகள், சான்றாவணங்கள், கல்வெட்டுகள் போன்றவை பிரதியோ, படமோ எடுக்கப்பட்டு பிறநாட்டுத் தமிழ் நூலகம் ஒன்றில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது என்ற மனோநிலையை நாங்கள் களைய வேண்டும். யானைக்கொரு காலம் என்றால் பூனைக்கொரு காலம் வரும் என்பதை மறந்து விடக்கூடாது. அரசியல் யாப்பில் அன்று யானைக்குச் சார்பாகச் செய்யப்பட்டது. இன்று கைமாறியிருக்கின்றது! ஆனாலும் நாங்கள் எங்கள் கடமைகளில் கண்ணாய் இருத்தல் அவசியம். நடப்பது எதுவாயினும் எங்கள் நடவடிக்கைகள் எப்படி அமைந்தாலும் எங்கள் குறிக்கோள்கள் ஆணித்தரமாக மனதில் நாங்கள் பதித்திருக்க வேண்டும்.

இன்று ஒரு வித்தியாசமான சூழல் இந்த நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கின்றது. வட, கிழக்கில் இருக்கும் ஒவ்வொரு அரசமரமும் அரச மதத்தின் சான்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றது. எங்கள் பாட்டனார், பூட்டனார் காலத்தில் தானாக முளைத்த அரசமரங்கள் எல்லாம் சங்கமித்தை காலம் வரையில் உயிர் நீடிக்கப்பட்டு அவளால் நாட்டப்பட்ட மரங்களாக மாறி வருகின்றன. "பத்தாம் நூற்றாண்டில் வந்த பரதேசியே பறந்து போ! எங்கள் அரச மரங்களை அழிக்காது விட்டுச் செல்!' என்று கூறக்கூடிய காலம் உதயமாகி வருகின்றது. ஆகவே தான் கூறுகின்றேன் எங்கள் அறிவு நூல்களை, அறிஞர் ஆக்கங்களை, ஆன்றோர் ஆய்வுகளை, ஆராய்ச்சி முடிவுகளை எல்லாம் ஆவணப்படுத்தி அடுத்து வருஞ் சந்ததியினருக்குக் கிடைக்கும் வகையில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்று. இதற்காக செம்மொழியாந் தமிழுக்கு மட்டுமல்ல செம்மாந்த இலங்கைத் தமிழர் பற்றியதாகவும் அவர்கள் தொன்மையை, பெருமையை, மாண்புகளை, படைப்புகளை, பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வண்ணம் நூலகங்கள், பொருட்காட்சிச்சாலைகள் பிறநாடுகளில் உருவாக்கப்பட வேண்டும்.

உருவெடுக்கும் புதிய போராளி

இன்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை மக்களிடையே புதியதொரு போராளி உருவெடுத்து வருகின்றான். அவன்தான் பத்திரிகைப் போராளி. சுற்றிலும் நடக்கும் அட்டூழியங்களை ஆபத்தின்றி அறிவிக்க முடியாத நிலையிலுங்கூடத் தன் உயிரைப் பணயம் வைத்து உண்மையை வெளியிடப் போராடுபவனே இந்தப் பத்திரிகைப் போராளி. நாங்கள் யாவரும் வெள்ளி முளைக்கும் நேரம் ஆழ்தூக்கத்தில் இருக்கும்போது அன்றைய செய்திகளை, தாம் தூங்க மறந்து எமக்குத் தூக்கி வந்து தருபவர்கள் தான் இந்தப் பத்திரிகைப் போராளிகள். அவர்கள் வாழ்க்கையே ஒருவிதப் போராட்டந்தான்.

பத்திரிகைப் போராளிகள் உண்மையை வெளிக்கொண்டுவர, அவற்றைஉலகம் அறியச்செய்ய எதிர்த்து வரும் தடங்கல்கள் யாவற்றையும் தாண்டிச் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும். பணத்திற்கு பதவிக்கு எறியும் எலும்புத் துண்டுகளுக்கு நாம் விழுந்து விட்டோமானால் போராட முடியாது போய்விடும். உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதாய் எங்கள் குறிக்கோள்கள் அமைய வேண்டும். பொய்மைக்கு விலை போவதாய் அமையக் கூடாது. அதை எவ்வாறு செய்வதென்பதில் கருத்து வேறுபாடுகள் அவர்களிடையே இருக்கலாம். ஆனால், திரு தனபாலசிங்கம் அவர்கள் எழுதும் ஆசிரிய தலையங்கங்களில் இருந்து எப்படி வாழைப்பழத்துடன் சேர்த்து கசக்கும் மருந்தையும் புகட்டி விடலாம் என்பதைப் பத்திரிகையாளர்கள் அறிந்து கொள்ளலாம்.

"சம்திங் ஃபொர் சம்திங்; நத்திங் ஃபொர் நத்திங்' என்பது தான் இன்றைய நிலை. ஆகவே எந்த அளவுக்கு சர்வதேச நிறுவனங்களுக்கு நாங்கள் உதவிகள், ஆதரவுகள் வழங்குகின்றோமோ அந்த அளவுக்கு அவர்களும் பதில் உதவி பதில் ஆதரவு தருவார்கள். இதை மனதில் வைத்துப் பத்திரிகையாளர்கள் குறிப்பாக சிறுபான்மையினத்துப் பத்திரிகையாளர்கள் நடந்துகொள்ள வேண்டும். இன்றைய உலகமயப்படுத்தலால் ஒருவர்க்கொருவர் ஒத்தாசையாக வாழ்வது நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் மறத்தலாகாது. நாட்டாண்மைக்காரனுக்குத் தன் நாட்டில்தான் மதிப்பு. எல்லை கடந்து விட்டால் ஏமாற்றந்தான் மிஞ்சும். உலகமயமாக்கலானது எல்லைகளைக் கடந்து நின்று நாட்டாண்மைக்கார எதேச்சதிகார நடவடிக்கைகளைப் பிறநாடுகள் நாள்தோறும் விமர்சிக்க நடை அமைத்துக்கொடுத்துள்ளது.

இன்று போர் முடிவுக்கு வந்துள்ளதால் நாட்டின் பாதுகாப்பிலும் பார்க்க தனி மனித பாதுகாப்பு, குறிப்பிட்ட இடங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மக்களின் பாதுகாப்பு போன்றவையே முக்கியம் என்பதை நாங்கள் உலகறியச் செய்ய வேண்டும். எங்கள் தமிழ்பேசும் பாராளுமன்றத்தினரில் பலருக்கு யுத்த காலம் மலையேறிவிட்டது என்பது தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றது. இதுவரை காலமும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்விடங்களாக இருந்தன. இன்று கிழக்கு கேள்விக்குறியாகி வருகின்றது. வடக்கிற்கும் அதேகதி விரைவில் வந்துகொண்டிருக்கின்றது. இன்று வடமாகாண நீதிமன்றங்களுக்குப் பெரும்பான்மை இனத்து அலுவலர்கள் சிறிது சிறிதாக அனுப்பப்படுகின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில் சிறுபான்மை பாராளுமன்ற அங்கத்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. மற்றைய நாடுகளில் இதே சூழலில் சிறுபான்மையினத்தவர்கள் முன்னேற என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள் என்பது பற்றி எல்லாம் எங்கள் அங்கத்தினர்கள் தெரிந்து வைத்திருத்தல் முக்கியம். இதுவரை காலம் நாங்கள் நடத்திய அரசியல் வேறு இனி நடத்த வேண்டிய அரசியல் வேறு; புதிய அரசியல் நடத்த எங்கள் பழைய பாணிகள் துணை நிற்கா. புதிய சூழலுக்கேற்ப நடந்துகொள்ள எங்கள் அறிவை மேம்படுத்த வேண்டும். நடைமுறைகளையும் மாற்றி அமைக்க வேண்டும். இதில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியம். இங்குதான் திரு தனபாலசிங்கம் அவர்களின் கருத்துகள், அணுகுமுறை யாவும் இளைஞர்களால் உள்வாங்கப்பட வேண்டும். அதாவது எங்களைப் போல் சிந்திக்கும் பிற இனமக்களையும் எங்கள் சகாக்களாக உதவிக்கு அழைக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் எதிர்காலம் மனித உரிமைகளின் அடிப்படையில்தான் இனி நிர்மாணிக்கப்படும் என்று பலர் எண்ணுகின்றார்கள். உலகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட பல இனங்கள் இருந்து வந்துள்ளன. விடுதலைக்காக அவர்கள் ஆயுதம் தாங்காது போராடிய அணுகுமுறைகளும் எங்களால் இதன்பொருட்டு கிரகிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சாசனங்கள், உடன்பாடுகள் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கு முரணான விதத்தில் அரசாங்கங்கள் நடந்து கொண்டால் அது மக்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை உரிமையாவணங்கள் இரண்டும் உலக மகாயுத்தத்தில் ஈடுபட்ட களைப்பில் பல்வேறு நாடுகளால் நடைமுறைச் சாத்தியமான விடயங்களை உள்ளடக்கியே தயாரிக்கப்பட்டது. அந்த ஏற்பாடுகளின் அடிப்படையில் ஒரு நாட்டின் சிறுபான்மையினர் நடத்தப்பட்டாலே அவர்களுக்கு நல் வாழ்க்கை அமையலாம். அவ்வாறு அந்த ஏற்பாடுகளுக்கு அமைவாக எங்கள் நாட்டில் நடக்கின்றதா என்பதை எங்கள் பாராளுமன்றப் பிரதிநிதிகள் தொடக்கம் படித்த இளைஞர்கள் வரையில் சகலரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் மனித உரிமை ஆவணங்களின் ஏற்பாடுகளுக்குப் பங்கம் ஏற்பட்டிருப்பதை உலகுக்குத் தெரிவிக்க வேண்டும். இங்கு தான் பத்திரிகைகளின் பங்கு மிகவும் அவசியமாகின்றது.

Please Click here to login / register to post your comments.